Loading

அத்தியாயம் 57

     பட்டுப் புடவையில் ஏழு மாத வயிற்றோடு நாற்காலியில்  அமர்ந்திருந்தாள் லீலா. “அண்ணி என்ன உங்க தங்கச்சிங்களை இப்படி வளர்த்து வைச்சிருக்கீங்க. ஒருத்தங்க கூட சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்கிறாங்க.” நாகா, தர்மா, தெய்வா மூவரும் வரிசையாக வந்து குற்றம் சுமத்தினர்.

     “என் தங்கச்சிங்களா இருந்த வரைக்கும் எல்லாரும் ரொம்ப நல்லவங்களா தான் இருந்தாங்க. எப்போ உங்களுக்குப் பொண்டாட்டி ஆனாங்களோ, அப்ப இருந்து தான் இப்படி அறுந்தவாலுங்களா மாறிட்டாங்க. எல்லாத்துக்கும் காரணம் நீங்க தானே, எப்படியாவது சமாளிங்க போங்க.” என்றாள் பதிலாக.

     “என்னங்க எங்க போனீங்க. எத்தனை தடவை சொல்றது பசங்களை ரெடி பண்ணும் போது கூட இருங்கன்னு. இரண்டு பேரும் உங்களை மாதிரியே அறுந்த வாலுங்களா இருக்காங்க. ஒருத்தனைக் கிளப்பும் முன்னாடியே படாத பாடு படவேண்டியது இருக்கு. இன்னொருத்தன் வேற இருக்கான். வாங்க வந்த சின்னவனைப் பிடிங்க.” என்றாள் ஊர்மி.

     “அடடே ராஜா வாங்க, என் செல்லம் வாங்க. அப்பாகிட்ட வாங்க, ரொம்ப சேட்டை பண்ணீங்களா? அம்மா சொல்றாங்க.” நாகா குழந்தையைக் கையில் எடுக்க, “குழந்தை பாத்ரூம் போயிட்டான். அப்படியே போய் டயப்பர் மாத்திட்டு வந்திடுங்க.” என்றுவிட்டு இன்னொரு குழந்தையுடன் அறைக்குள் சென்றாள் ஊர்மி.

     “குழந்தையைத் தூக்குங்கன்னு எப்பவும் காளி மாதிரி தானே கத்துவா, இன்னைக்கு இப்படி அமைதியாச் சொல்றாளே பின்னாடி ஏதும் உள்குத்து இருக்குமோன்னு யூகிச்சேன். இருந்திருக்கு பின்னாடி நிறையவே இருந்திருக்கு.” என்றான் நாகா குழந்தையை தன்னை விட்டுத் தூக்கி பிடித்தபடி.

     “இருங்க மாமா, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்.” என்றபடி வந்த தேவகி குழந்தையின் டயப்பரைக் கழட்ட, குழந்தை நாகாவின் முகத்தை நனைத்து விட்டிருந்தான்.

     “டேய் உனக்கே இது நல்லா இருக்காடா. உங்க அப்பன் எப்பேர்ப்பட்ட ஆளு தெரியுமா? இப்படிப் பொசுக்குன்னு அசிங்கப்படுத்திட்டியேடா. ஐயோ ஸ்மெல் தாங்க முடியலையே. இது வயிறா இல்ல வேற எதுவுமாடா.” குழந்தையைப் பார்த்து நாகா கேட்ட தோரணையில் அங்கிருந்த அனைவருமே சிரித்தனர்.

     “ஊர்மி பெட் கட்டின மாதிரியே பண்ணிட்ட போல. அப்ப இன்னைக்கு செல்வா அண்ணனுக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம்.” என்றபடி வந்தான் தெய்வா.

     “நாகா நான் ஒன்னும் பண்ணல டா. இவன் நம்ம இரண்டு பேருக்கும் சண்டை இழுத்து விட ப்ளான் பண்றான்.” என்றான் செல்வா.

     “விடுவிடு அவனுக்கும் கூடிய சீக்கிரம் குழந்தை பிறக்கத் தான் போகுது. கண்டிப்பா இதே மாதிரி ஒரு நிலைமை அவனுக்கும் வரும். அப்ப அவனை நான் பார்த்து சிரியோ சிரின்னு சிரிக்கப் போறேன்.” தன்னை நோக்கி வைக்கப்பட்ட கிண்டலை கிண்டலாகவே கடந்து சிரித்தான் நாகா.

     “பெரியப்பா, சித்தப்பான்னு நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்க. நான் எல்லாம் குழந்தை பிறந்த உடனே உங்ககிட்ட கொடுத்துட்டு அடுத்த குழந்தைக்கு பிஸியாகிடுவேன்.” தெய்வா சொல்ல,

     “வர வர உங்களுக்கு விவஸ்தையே இல்லாமப் போச்சுங்க. யாரு முன்னாடி என்ன பேசிட்டு இருக்கீங்க. நாகா மாமா நீங்களும் அவர்கூட போட்டி போட்டு பேசுறீங்களா? ஊர்மி கொஞ்சம் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போனாலும் உங்களுக்கு குளிர்விட்டுப் போயிடுது.

     குழந்தையைக் கொடுங்க, நான் க்ளீன் பண்ணி கொண்டு வரேன்.” என்றபடி மெலிதாக மேடிட்ட வயிற்றோடு நடந்து போனாள் ருக்கு.

     “ருக்கு அண்ணி, பையன் வயித்தில் மிதிச்சிடப் போறான். பார்த்து.” நாகா சொல்லி முடிக்க, “அத்தான் இப்ப மூத்தவன் பாத்ரூம் போய்ட்டாங்க. வந்து ஹெல்ப் பண்ணுங்க.” பாவமாய் குரல் கொடுத்தாள் ஊர்மி.

     “ஐயோ சாமி ஆளை விடுங்கடா. தெரியாத்தனமா ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு, இரண்டு குழந்தைகளைப் பெத்துக்கிட்டேன். அதுங்க போற பாத்ரூமை க்ளீன் பண்ணியே என் ஆயுள் முடிஞ்சிடும் போல.” சலித்துக்கொண்டாலும் மனைவியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் நாகா.

     “அவ்வளவு தூரம் ஆகிடுச்சா, இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவீங்க தானே. ராஜா வாங்க, செல்லம் வாங்க, பட்டுக்குட்டி அப்பாகிட்ட வாங்கன்னு. அப்ப இருக்கு உங்களுக்கு. டேய் கண்ணா நீயும் நானும் இனி எப்பவும் அப்பாகிட்ட பேசவே கூடாது டா.” மகனுடன் கூட்டணி சேர்ந்தாள் ஊர்மி.

     “அடியே, நான் ஏதோ சும்மா விளையாட்டுக்குச் சொன்னா, அதுக்காக என் புள்ளையை என்கிட்ட இருந்து பிரிக்கப் பாக்கிறியா நீ?” நாகா குரல் உயர்த்த, என்ன மாறினாலும் இந்தக் கோபம் மட்டும் நாகத்துக்கிட்ட மாறவே இல்லை என மனதோடு நினைத்தவள்,

     “ச்சே ச்சே… உங்களை உங்க பசங்க கிட்ட இருந்து பிரிக்க நான் யாரு. இந்தாங்க உங்க பையனை நீங்களே பிடிங்க. ஆனா மறக்காம அவனைக் க்ளீன் பண்ணிடுங்க.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஊர்மி.

     “சரி தகப்பனும், பிள்ளையும் னு ஆகிடுச்சு. இதுக்கு மேல அசிங்கம் எல்லாம் பாத்துட்டு இருக்க முடியுமா என்ன. நீ வாடா செல்லாம், நம்ம போவோம். அப்பா உன்னைக் குளிக்க வைக்கிறேன்.” என்றவண்ணம் நாகா மூத்தவனைத் தூக்கிக் கொண்டு சென்றான்.

     ருக்கு திரும்பி வர அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்சிக் கொண்டிருந்த லீலா அருகே வந்த செல்வா, “லீலா இவனை என்கிட்ட கொடுங்க. ஒருத்தர் மாத்தி ஒருத்தி இத்தனை பேர் இருந்தும், எப்பவும் உங்ககூடவே தான் இருக்கான் இந்தப் பொடியன். நீங்களும் இவன் பின்னாடியே தான் சுத்திட்டு இருக்கீங்க. உங்க வயித்தில் இருக்கிற என் புள்ளைங்களுக்குப் பசிக்கும் னு அக்கறை இருக்கா, உட்கார்ந்து சாப்பிடுங்க.” உரிமையுடன் அதட்டினான்.

     “நான் இப்ப தான் இவனைத் தூக்கினேன், அதுக்குள்ள மூக்கு வேர்த்துப் போய் வந்துட்டாரு. முதலில் இவர் பிள்ளைங்களைப் பெத்துப் போடணும். எப்பப் பார்த்தாலும் என்னையே சுத்தி சுத்தி வராரு.” கடுப்படித்தாள் லீலா.

     “ஏன் மாமா இரண்டு குழந்தை பெத்துக்கிட்ட என்னாலே ஒரு நிலையில் இருக்க முடியலையே, மூணு குழந்தையைப் பெத்துக்க போற உங்களால சமாளிக்க முடியும் னு நினைக்கிறீங்களா?” செல்வாவைப் பார்த்து சிரித்தபடிக் கேட்டாள் ஊர்மி.

     “இந்த மூணு இல்ல மொத்தமா முப்பது குழந்தைங்க பிறந்தாலும் நானும், லீலாவும் எங்களோட கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துக்குவோம். அப்படித்தானே லீலா.” மனைவியைத் துணைக்கு அழைத்தான் மருத்துவன்.

     “என்னது நீங்க முப்பது குழந்தை பெத்துக்கப் போறீங்களா? அப்ப நாகாவோட குழந்தைங்களோட சேர்த்து நானும் ருக்குவும் பெத்துக்கப் போற பத்து குழந்தைங்கயும் சேர்த்து, இந்த வீட்டில் மொத்தம் நாற்பத்தியிரண்டு குழந்தைங்களா?” சிரிப்புடன் கேட்டபடி வந்தான் தெய்வா.

     “நாற்பத்தி இரண்டா, எதுக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு ரவுண்டா நாற்பத்திஐந்து ஆக்கிடுவோம். என்ன தேவகி நமக்கு மூணு போதும் தானே.” தர்மா கேட்க, அங்கே பெரிய சிரிப்பலை பொங்கி வடிந்தது.

     “லீலா என்ன இது, இரண்டு தோசை தான் சாப்பிட்டு இருக்கீங்க. நீங்க மொத்தமா நாலு பேரு. நாலு தோசையாவது சாப்பிடனுமா இல்லையா?” செல்வா அதட்ட, “என்னால முடியாத, என்னை விட்டுடுங்க.” வாய் திறந்து கெஞ்சினாள் அவள்.

     “உங்களுக்கு என் பசங்க மேல அக்கறையே இல்ல லீலா. நான் சாப்பிடுற சாப்பாடு என் பசங்களுக்குப் போகுமும் னா நான் எவ்வளவு வேண்ணாலும் சாப்பிடுவேன். ஆனா விதி, நீங்க சாப்பிட்டா தானே என் பசங்களுக்கு சாப்பாடு கிடைக்கும்.

     நீங்க பட்டினியா இருந்துப்பீங்க. பாவம் அந்தக் குழந்தைங்களுக்குப் பசி தாங்காது இல்லையா? என் செல்லம் இல்ல, இன்னும் இரண்டே இரண்டு தோசை சாப்பிடு.” என்றான் செல்வா.

     “அண்ணா என்ன இப்படிக் கெஞ்சிக்கிட்டு இருக்க. இங்க கொடு தோசையை. இப்ப பாரு அண்ணி எப்படி சாப்பிடுறாங்கன்னு.” எனத் தமையனின் கையில் இருந்து உணவுத் தட்டை வாங்கிய தெய்வா,

     “அண்ணி நல்ல பிள்ளையா சமத்தா இந்த தோசை சாப்பிடுங்க. இல்லன்னா நான் உங்க தங்கச்சிகிட்ட பேச மாட்டேன். அப்புறம் அவங்க அழுவாங்க, அவங்ளைப் பார்த்து நீங்க கஷ்டப்படுவீங்க.

     உங்களைப் பார்த்து செல்வா கஷ்டப்படுவான். செல்வாவை பார்த்து நான் கஷ்டப்படுவேன். என்னைப் பார்த்து நாகா கஷ்டப்படுவான். நாகா கஷ்டப்பட்டா இந்த வீட்ல எல்லாருமே கஷ்டப்படுவாங்க.

     அந்த வகையில் இப்ப இந்த வீட்டில் இருக்கிறவங்களோட மொத்த சந்தோஷமும் உங்க கையில் தான் இருக்கு. வாயைத் திறங்க பார்க்கலாம். ஆ… காட்டுங்க குட். இப்ப தான் நீங்க நல்ல அண்ணி.” என்றபடி வாய்நிறைய ஊட்டிவிட்டான் தெய்வா.

     “ஏய் தர்மா என்ன பார்த்துட்டு சும்மா நிக்கிற. என் கோட்டா முடிஞ்சிடுச்சு, உன் கோட்டாவை ஆரம்பி. அடுத்து நாகா கோட்டா இருக்கு. அரசு கோட்டா இருக்கு. கடைசியா அப்பாவோட கோட்டா இருக்கு.” தெய்வா சொல்ல, லீலா விழிகள் வெளியே வரும் அளவு கண்களை விரித்தாள்.

     “இந்த முட்டக்கண்ணு முழியைப் பார்த்து பயப்படுறதுக்கு நான் ஒன்னும் செல்வா கிடையாது. அமைதியா இதைச் சாப்பிடுங்க. அடுத்து என் பொண்டாட்டியை நெய் தோசை கொண்டு வரச் சொல்றேன்.” அமைதியான தர்மாவே இப்பொழுது அதட்டினான்.

     “இப்படி எல்லோருமாச் சேர்ந்து என்னைக் கொடுமை பண்றாங்களே. இதைக் கேட்கிறதுக்கு ஆள் இல்லையா?” சத்தமாகக் கத்தினாள் லீலா.

     “ஏன் இல்ல நான் இருக்கேன் தங்கச்சி. இவனுங்க யாருக்கும் அறிவே இல்லை. புள்ளத்தாச்சிப் பொண்ணுக்கு வாய்க்கு ருசியா ஆசைப்பட்டதை சாப்பிடக் கொடுக்காம, தோசையைக் கொடுக்கிறாங்க. ஆனா நான் பாரு உனக்காக ஒன்பது வகையில் சாதம் கொண்டு வந்து இருக்கேன்.” என்றபடி வந்தான் அரசு.

     “எல்லோரும் வரிசையா வாங்க. ஒவ்வொரு சாதத்திலும் ஆளுக்கு ஒரு வாய் லீலாவுக்கு ஊட்டி விடுங்க. அவளோட வயிறு மட்டும் இல்ல, அவளோட குழந்தைங்க வயிறும் நிறைஞ்சிடும்.” என்க, “நிறைஞ்சி வெடிச்சிடும் பரவாயில்லையா?” கோபித்தாள் லீலா.

     “ரொம்ப நல்லது, ஹாஸ்பிட்டல் போக வேண்டாம். பிரசவ வலி அனுபவிக்க வேண்டாம். குழந்தை டேராக்டா பிறந்திடும் இல்ல.” அரசு சிரிக்க, “டேய் உன்னை அறிவில்லாதவன்னு அப்பா சொல்றதில் தப்பே இல்ல. அவங்க தான் ஏதோ புரியாமப் பேசுறாங்கன்னா, நீயும் கூடச் சேர்ந்து அபசகுனமா பேசுற. அவங்க ஒத்த உயிர் இல்ல, நாலு உயிர். சும்மா பேச்சுக்கு கூட அப்படியெல்லாம் சொல்லாத.” அதட்டினான் நாகா.

     “வக்கீல் வண்டு முருகா, இனி உன் அண்ணியை நான் ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன் போதுமா. இந்த சாப்பாட்டையாவது நான் அவளுக்குக் கொடுக்கலாமா இல்லை திரும்ப கொண்டு போயிடட்டுமா?” நாகப்பாம்பைச் சீண்டினான் அரசு.

     “ரொம்பப் பண்ணாத அரசு. உனக்குத் தான் தெரியுமே, அவன் சரியான அண்ணி பைத்தியம். நீ ஆசை ஆசையாய் சமைச்சு கொண்டு வந்திருக்க, அதனால முதல் வாய் நீயே ஊட்டி விடு.” என்றான் செல்வா.

     “அதெப்படி நான் இருக்கும் போது என் மருமகளுக்கு இந்தத் தாண்டவராயனை ஊட்டிவிடச் சொல்லுறீங்க.” என்றபடி வடிவேலு வர, “வாங்க அங்கிள்,  என்னடா என்னை ஓட்டுறதுக்கு முக்கியமான ஆள் குறையுதேன்னு பார்த்தேன். வந்துட்டீங்க, சந்தோஷம் ரொம்ப சந்தோஷம்.” என்றான் அரசு.

     “நீ என்ன ஆடா மாடா ஓட்டுறதுக்கு. நடுவில் நின்னு பாதையை மறைக்காம வழிவிடு நான் என் மருமகளுக்கு சாப்பாடு ஊட்டி விடப் போறேன்.” வடிவேலு முன் வர சிரிப்புடன் வழிவிட்டான் அரசு.

     வடிவேலுவைத் தொடர்ந்து அரசு, செல்வா, நாகா, ருக்கு, ஊர்மி, தர்மா, தேவகி அனைவரும் ஆளுக்கு ஒரு வாய் சாதம் ஊட்ட வேண்டாம் எனப் பேச்சிற்கு மறுத்தாலும் சந்தோஷமாகவே உண்டாள் லீலா.

     “லீலாவுக்கு இது ஏழாவது மாசம் இல்ல. சாதம் ஊட்டியாச்சு வளையல் போட்டுவிட்டுட்டா மினி வளைகாப்பாகிடும்.” என்றான் அரசு.

     “என் மருமக வளைகாப்பை ஊருக்கே சொல்லி கிராண்டா கொண்டாடனும்.” வடிவேலு சொல்ல, “எதுக்கு? பார் முழுசா பிள்ளையார் வேஷத்தில் இருக்கிற என் பொண்டாட்டி லீலாவைப் பாருன்னு எல்லாருக்கும் சொல்றதுக்கா.” செல்வா கேட்க, லீலா கோபித்துக் கொண்டு அவனை துரத்த ஆரம்பித்தாள்.

     “அண்ணி அப்படித்தான் விடாதீங்க. அவனை நல்லா நாலு சாத்து சாத்துங்க. உங்களுக்கு ட்ரயினிங் வேணும் னா உங்க தங்கச்சி ஊர்மிகிட்ட கேளுங்க. புருஷனை அடிப்பது எப்படின்னு மூணே நிமிஷத்தில் அழகா சொல்லிக் கொடுப்பா.” நாகா சொல்ல சைடாக அவனை முறைத்து வைத்தாள் ஊர்மி.

     “ஏன் தேவகி உங்க அக்காங்க கிட்ட இருந்து நல்ல விஷயங்கள் மட்டும் தானே கத்து வைச்சிருக்கீங்க. புருஷனை அடிக்கிற டெக்னிக் எல்லாம் கத்துக்கலையே. ஏன்னா என் உடம்பு அடி தாங்காது மா.” தர்மா பாவமாய் சொல்ல தேவகி சத்தமாய் சிரித்தாள்.

     “ஏய் தேவகி, என்னடி ஆச்சு. எதுக்காக இப்படித் தனியா நின்னு சிரிச்சிக்கிட்டு இருக்க. யாராவது பார்த்தா பைத்தியமான்னு நினைக்கப் போறாங்க.” என்றபடி தேவகியின் கனவைக் கலைத்தாள் ஊர்மி.

     “கனவா, ஆனா ரொம்ப நல்லா இருந்தது. இது மட்டும் நிஜத்தில் சாத்தியமானா எத்தனை நல்லா இருக்கும்.” தனக்குள் சிலாகித்துக்கொண்டாள் தேவகி.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தெரியும் கனவுன்னு … ஆனா சூப்பரா ஜாலியா இருக்கு … ராதா வீட்டு பிரதர்ஸ் இப்படிலாம் பேசுவாங்களா … இவ்வளவு கனவுகளோட தான் பொண்ணுங்க அவங்க வீட்டுக்குள்ள போனாங்க … ஆனா நாகா கோபத்துல ஏதேதோ பண்ணிட்டான் … சூப்பரா இருந்தது கனவு … இதெல்லாம் நடந்தா சூப்பரா தான் இருக்கும் …

  2. Sema episode sis… Last la dream nu sollitingale sis… But athu natantha supera irukum… Super epi sis..