
அத்தியாயம் 56
“செல்வா, வாழ்த்துக்கள் டா. அப்பாவாகப் போற. கேரளா ட்ரிப் நல்லா வேலை செய்திருக்கு போல. எனிவேஸ் அங்கிளோட கனவு ஒவ்வொன்னா நினவாகிட்டே வருது. ரொம்ப சந்தோஷமா இருக்குடா. கண்டிப்பா பர்ஸ்ட் ட்ரீட் எனக்குத் தான் கொடுக்கணும் நீ.” புன்னகையோடு சொன்னான் அரசு.
“உன்னை என்னமோன்னு நினைச்சேன் பரவாயில்லை வாழ்த்துக்கள்.” பாதியை முழுங்கிவிட்டு வாழ்த்து சொல்லிச் சென்றான் தெய்வா.
“வாழ்த்துக்கள் செல்வா.” சித்தப்பாவாகப் போகும் பூரிப்பு இல்லை என்றால் கூட தங்கள் நிழலில் ஒரு சிறு குழந்தை என்னும் நினைப்பில் சந்தோஷமாகவே வாழ்த்து சொன்னான் தர்மா.
“செல்வா இங்க வாடா.” அருகே அழைத்த வடிவேலு, பூஜை அறையில் இருந்து கொண்டு வந்திருந்த திருநீற்றை நடுங்கும் கரங்களால் அவனுக்கு வைத்து விட்டார். அவரின் கண்களில் சந்தோஷக்கண்ணீர் குளம் கட்டி நின்றது.
“நான் என் நாலு பசங்களையும் ஒன்னா தான் பார்க்கிறேன். ஆனா என் மருமகளுங்க அப்படி இல்ல. எனக்கு லீலா கொஞ்சம் அதிகப்படியான ஸ்பெஷல். இவ்வளவு சின்ன வயசுல அவ கையில் எடுத்திருக்கிற மிகப்பெரிய பொறுப்பை வைச்சு இதைச் சொல்லல. அவளோட குணம், அவகிட்ட இருக்கிற பொறுமையும், நிதானமும் இதுவரைக்கும் நான் வேற யார்கிட்டேயும் பார்த்தது கிடையாது.
நாலு கல்யாணத்துக்கு அவ சம்மதிக்கலன்னாலும், எப்படியாவது அவளை மட்டுமாவது உனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சிடணும் னு வைராக்கியத்தோட இருந்தவன் நான். அவகிட்ட உங்க யாருகிட்டேயும் இல்லாத ஒரு மிகப்பெரிய குணம் இருக்கு, விட்டுக்கொடுத்துப் போறது.
லீலா தன்னோட தங்கச்சிங்களுக்காக என்ன வேண்ணா செய்வா. அவ நினைச்சிருந்தா அவ மேல உண்மையான அன்பு வைச்சு, அவ வேணும் னு இரண்டு வருஷத்துக்கும் மேல கண்ணியமான முறையில் அவளைச் சுத்தியே வந்த அந்தப் பணக்காரப் பையனைக் கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனா அவ அவனைத் தொடர்ந்து, மறுத்ததோட இல்லாம அவன்பக்கம் மனசு தடுமாறாமலும் திடமாக நின்னு இருக்கா. எல்லாத்துக்கும் காரணம் அவ தங்கச்சிங்க தான்.
அவ தங்கச்சிங்க மேல வைச்சிருக்கிற பாசத்தை உன் மேலும் காட்டினாப் போதும், என் பையன் தான் இந்த உலகத்தோட மிகப்பெரிய அதிர்ஷ்டசாலின்னு நினைச்சு தான் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணேன்.” பூரிப்பாய் நிறுத்தினார் வடிவேல். என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாய் இருந்தான் செல்வா.
“அன்னைக்கு நடந்த பிரச்சனையில் உங்களை அடக்க முடியாம அவளைத் தப்பாப் பேசிட்டேன். எனக்குத் தெரியும் நிச்சயம் அவ என்னைத் தப்பா எடுத்துக்க மாட்டா. அவ ரொம்ப பாசக்காரி டா.
இங்க நடந்த பிரச்சனையால உன்னை, என்னை, நாகாவை ஊர்மியை விட அவளுக்கு தான் வலியும், வேதனையும் அதிகம். தன்னோட தங்கச்சிங்களுக்குத் தான் அமைச்சுக் கொடுத்த வாழ்க்கை உண்மையில் நல்ல வாழ்க்கை தானான்னு யோசிச்சு யோசிச்சு தூக்கம் இல்லாம தவிச்சிக்கிட்டு இருந்திருப்பா.
அவளுக்கு மன தைரியத்தை கொடுன்னு தினமும் நான் ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டு இருந்தேன். நான் கும்பிடுற அந்த ஆண்டவன் என் பொண்ணு லீலாவுக்கு எவ்வளவு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கான். நீ அப்பா ஆனதை விட அவ அம்மா ஆனது எனக்கு அதிகச் சந்தோஷத்தைக் கொடுக்கிது டா.
செல்வா அப்பா ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். இந்தச் சந்தோஷத்தைக் கொண்டாடுறதுக்கு நான் கண்டிப்பா உனக்கு ஏதாவது பண்ணனும், உனக்கு என்ன வேணும் சொல்லு.” மூச்சுவாங்க நீளமாகப் பேசி முடித்தார் வடிவேலு.
“எனக்கு ஒன்னும் வேண்டாம் பா.” தயக்கம் பாதியும் தந்தையின் ஏக்கம் கண்ட வேதனை மீதியுமாய் சொன்னான். நாகா சொன்ன தகவல் கண்டிப்பாக உண்மையாக இருக்காது. விஷயம் தெரிய வரும் போது தந்தையின் இந்தக் கனவுகள் யாவும் கலைந்து போகுமே எனத் தனயனாக வருந்தினான்.
“கரும்பு தின்னதுக்கு கூலி தரும் போது, எந்த மடையனாவது வேண்டாம் னு சொல்லுவானா. என்கிட்ட மட்டும் உன் அப்பா இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லி இருந்திருந்தா, இந்நேரத்துக்கு இந்தக் கோயம்புத்தூரில் பாதி என் பேரில் தான் இருந்திருக்கும்.” சிரித்தான் அரசு.
“அவன் கிடக்கிறான் செல்வா. நீ எனக்குக் கொடுத்திருக்கிறது ரொம்பப் பெரிய சந்தோஷம். அதுக்கு நான் என்ன கொடுத்தாலும் ஈடாகாது. நீங்க நாலு பேர், என் மருமகப் பொண்ணுங்க, என் பேரப்பிள்ளைங்களோட இந்த வீட்ல வாழனும். உங்க எல்லாரோட சிரிப்புச் சத்தமும் இந்த வீடு முழுக்க கேட்கணும் என்பது என்னோட எத்தனை நாள் கனவு தெரியுமா? அந்தக் கனவு நிறைவேற பிள்ளையார் சுழி போட்டது நீ. உனக்கு நான் எதையாவது செய்தே ஆகனும்.” பூரிப்பாய் சொன்னார்.
“செல்வா உனக்கு என்ன வேணுமோ எதுவாயிருந்தாலும் அவர்கிட்ட கேளு. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதைவிட முக்கியம், நீ ஏதாவது அவர்கிட்ட கேட்டா தான் அவரோட சந்தோஷம் மட்டுப்படும். இல்லன்னா ஓவர் சந்தோஷத்துல மனுஷன் பைத்தியம் ஆகிடுவாரு.
கேட்கிறது கேட்கிற கொஞ்சம் பெருசாக் கேளு. அதை அவர் உனக்கு வாங்கிக் கொடுத்து, அதைப் பார்த்து உன் தம்பிங்க மூணு பேரும் வயிறு எரியட்டும்.” செல்வாவிற்கு மட்டும் கேட்குமாறு சொன்னான் அரசு.
“அறிவு இல்லாதவனே உடனடியாப் பக்கத்தில் இருக்கும் எல்லாக் கோவிலிலும் என் மருமக பேருக்கு அர்ச்சனை பண்ணச் சொல்லு. என் பேரப்பிள்ளை பிறக்குற நேரம் என்னோட எல்லா ஆசையும், கனவும் நிறைவேறட்டும்.” தாங்க முடியாத சந்தோஷத்தில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல் போனால் கூட அங்கும் இங்கும் பம்பரமமாய் சுற்றி வந்த வடிவேலுவைப் பார்க்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“இதெல்லாம் என்ன போங்காட்டமா இருக்கு. குழந்தை பெத்துக்கப்போறது லீலா மட்டுமா? அதில் பாதிக்குப் பாதி செல்வாவோட உழைப்பு இருக்குல்ல. அதுக்கு அவன் பேருக்கு அர்ச்சனை பண்ண வேண்டாமா?” அரசு செல்வாவைப் பார்த்தபடியே சொல்ல, பேய் முழி முழித்தான் செல்வா.
“முதல்ல லீலாகிட்ட பேசணும். இந்த நாகா அவனும் குழம்பி, இங்கேயும் இப்படி ஒரு குழப்பத்தை உண்டாக்கிட்டான்.” கடுகடுப்புடன் உள்ளே சென்றுவிட்டான் செல்வா.
“லூசுப்பயலே நீ கிண்டல் பண்ணதும் அவன் வெட்கப்பட்டு உள்ள போயிட்டான்.” வடிவேலு சிரிக்க, “கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தான் ஆகுது. கல்யாணம் பண்ணிக்கிறதே இதுக்காகத் தாங்கிற மாதிரி, அவன் பண்ண காரியம் சிறப்பா வெற்றியடைஞ்சு இவ்வளவு சீக்கிரம் குழந்தையும் வந்திடுச்சு. கணக்குப் போட்டுப் பார்த்தா, அடுத்த வருஷம் கல்யாண நாளுக்குள்ள கையில் குழந்தை இருக்கும். ஸ்சாரி குழந்தைங்க இருப்பாங்க. அப்படி இருக்கும் போது யாரா இருந்தாலும் கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க.” நிலைமை புரியாமல் தமையனைக் கிண்டலடித்தான் நாகா.
“வேண்டாம் டா மகனே வாயைக் குறை இல்லன்னா பின்னாடி ரொம்ப பாதிக்கப்படுவ.” விதி கை கொட்டி சிரித்ததை அவன் அறியவில்லை பாவம்.
அறைக்குள் வந்ததும் அடுத்த நொடியே மனைவிக்கு அழைத்திருந்தான் செல்வா. அவ்வப்போது பேசுவான் தான். ஆனாலும் ஒருமுறை கூட இங்கே வந்துவிடு என்று இவனும், அழைத்துச் செல்லுங்கள் என்று அவளும் கேட்காமல் இருந்தனர். அவரவருக்கு அவரவர் நியாயம் பெரிதாகத் தெரிந்தது.
“லீலா” என்று அழைக்க, “சொல்லுங்க எப்படி இருக்கீங்க.” என்றாள் லீலா.
“நான் எப்படி நல்லா இருக்க முடியும். இந்த நாகா அங்க வந்தப்ப, யாரு அவன்கிட்ட என்ன சொன்னீங்க. இங்க வந்து நீங்க ப்ரக்னென்ட்டா இருக்கீங்கன்னு சொல்றான். அப்பாவும் அதைக் கேட்டுக்கிட்டு வானத்துக்கும், பூமிக்கும் குதிச்சிக்கிட்டு இருக்காரு. நீங்க எப்படி கர்ப்பமாக முடியும்.” வேகவேகமாகச் சொன்னவன் கடைசி வரியைச் சொல்லும் போது மட்டும் வார்த்தைகளின் சத்தத்தைக் குறைத்தான்.
“அவர் தப்பாப் புரிஞ்சிக்கிட்டாருங்க. கர்ப்பமா இருக்கிறது நான் இல்ல, என் தங்கச்சி தான்.” லீலா அடுத்து ஏதோ சொல்ல வர, “அப்பாடி, ப்ரக்னென்சி நியூஸ் டோட்டலா பொய் இல்லல்ல. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு. இப்படி ஒரு விஷயத்தைக் கேட்டதில் இருந்து அப்பா ரொம்ப எதிர்பார்ப்போட இருக்காரு.
எங்க அவரோட சந்தோஷம் எல்லாம் இல்லாமப் போயிடுமோன்னு நினைச்சு பயந்துட்டேன். விஷயம் தெரிஞ்சா ரொம்ப நிராசை அடைய மாட்டார் தான். ஆனாலும் அவரோட மூத்த மருமக நீங்க கர்ப்பமா இல்லன்னு தெரிய வரும் போது கஷ்டப்படுவார் தான்.” நிம்மதி கலந்த வருத்தத்துடன் சொன்னான் செல்வா.
“எனக்குக் குழந்தை பிறந்தா என்ன, என் தங்கைகளுக்குப் பிறந்தா என்ன. எல்லாமே நம்ம வீட்டு வாரிசு தான். அவரோட பேரப்பசங்க தான். மாமா புரிஞ்சுப்பார். அதோட நமக்குக் குழந்தையே பிறக்காதா என்ன?” ஒருவேகத்தில் தன்னையும் அறியாமல் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள் லீலா.
ஆனால் அதைக் கவனிக்காமல், “அது என்னவோ உண்மை தான். ஆமா நீங்க எப்ப இங்க வரீங்க.” உள்மனம் காட்டிய அவசரத்தில் கேட்கவே கூடாது என்று நினைத்திருந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டான் செல்வா.
“இன்னும் இரண்டு நாளில் வரோம். எங்களைக் கூட்டிட்டு வரேன்னு மாமா கிளம்பிடப் போறாரு. மாமாவை அங்கேயும் இங்கேயும் அலைய வேண்டாம் னு சொல்லுங்க. நாங்களே வந்திடுறோம்.” அக்கறையாகச் சொன்னாள் லீலா.
இவள் மேல் தன் தந்தை இத்தனை பாசம் வைப்பது தவறு இல்லை என்று தோன்றியது செல்வாவிற்கு. அதே நேரத்தில் கடைக்குட்டி ஜோடிகளும் பேச்சுவார்த்தையில் தான் இருந்தனர்.
“என்னங்க எப்படி இருக்கீங்க.” தேவகி கேட்க, “ரூம்மேட் இல்லாத நேரத்தில் இன்னொரு ரூம்மேட் எப்படி இருப்பானோ அப்படி இருக்கேன். புரியுற மாதிரி சொல்லனும் னா ப்ரீயா இருக்கேன்.” மெத்தையில் படுத்திருந்து காலாட்டிக்கொண்டே சொன்னான் தர்மா.
“போங்க நான் மட்டும் தான் உங்களை நினைச்சிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு என் மேல துளி கூட பாசமே இல்ல.” தேவகி சிணுங்க, “பாசம் எல்லாம் கடல் அளவு இருக்கு. அதைக் காட்டத்தான் நீங்க பக்கத்தில் இல்ல.” பெருமூச்சுடன் சொன்னான்.
“ஆமா கூட இருந்தப்ப எல்லாம் சபரிமலைக்கு மாலை போட்ட சாமி மாதிரி இருந்துட்டு இப்ப பேச்சைப் பாரு.” சிரித்தாள் தேவகி.
“இதோ பாருடா என் பொண்டாட்டி நான் ரொமான்ஸ் பண்ணலன்னு வருத்தப்படுறதை.” தர்மா சிரிக்க, தேவகிக்கு என்னவோ போல் இருந்தது.
அவள் அமைதியைத் தத்தெடுத்துக்கொள்ள, “சரி விடுங்க தேவகி. மனசில் இருந்தது வார்த்தையா வந்திடுச்சு.” என்க, “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நான் போனை வைக்கிறேன்.” அநியாயத்திற்கு சிணுங்கினாள்.
“ஹே… வைச்சிடாதீங்க. சித்தி பிரமோஷனுக்கு வாழ்த்துக்கள்.” என்றான் தர்மா.
“அம்மாவாகப் போறவங்களுக்கு வாழ்த்து சொன்னா அது நியாயம். அதைவிட்டுட்டு எனக்கு எதுக்கு வாழ்த்து சொல்றீங்க.” தேவகிக்கு வெட்கம் வந்து தொலைத்தது.
“என்ன அப்படிச் சொல்லிட்டீங்க. அம்மாங்கிற ஸ்தானாத்துக்கு இணையானது சித்தி ஸ்தானம். ஒவ்வொரு பொண்ணும் குழந்தை பெத்ததுக்கு அப்புறம் தான் தாய்மையை அனுபவிக்கிறாங்க. ஆனா சித்திங்க மட்டும் தான் கல்யாணத்துக்கு முன்னாடியே தாய்மையை அனுபவிக்கப் படைக்கப்பட்டு இருக்காங்க.
தன்னோட அக்கா பசங்களைத் தூக்கிக் கொஞ்சும் போது வர உணர்வு, நாளைக்கே அவங்களோட சொந்தப் பசங்களை கொஞ்சும் போது கூட கிடைக்காது. இப்ப உங்களுக்குப் புரியாமல் போகலாம். இன்னும் கொஞ்ச நாளில் இதை நீங்க அனுபவப் பூர்வமா புரிஞ்சிப்பீங்க.” உறுதியாய் சொன்னான் தர்மா. கணவனின் இந்த வார்த்தைகள் தேவகிக்கு அதிகம் பிடித்தது.
வேறு சில கதைகள் பேசிவிட்டு போனை வைத்த பின்னாலும், கணவன் பேசிய வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
சித்திங்கிற உறவுக்கு இவ்வளவு பிணைப்பும், பாசமும் இருக்கும் னா சித்தப்பா என்கிற உறவுக்குள்ளும் அது இருக்கும் தானே, நிச்சயம் இருக்கும்.
ஊர்மி அக்காவுக்குப் பிறக்கப் போற குழந்தைங்களால, அந்த வீட்டில் உள்ளவங்க எல்லோரும் ஒன்னா சேர்ந்தா எப்படி. இருக்கும் என்று யோசித்தவளுக்கு காட்சிகள் கற்பனையாய் விரிந்தது.
கற்பனைக்கு ஏது விதிமுறை. நடக்குமா நடக்காதா என்று தெரியாததை சந்தோஷமாகக் கற்பனை செய்து பார்த்தாள் தேவகி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அப்பாடா டவுட் கிளியர் … கருநாகம் பேச்சை பாரு … உன்னையே நல்லா பேசிக்கோ … கூச்சமே இல்லாம எல்லாத்தையும் முதல்ல பண்ணிட்டு இருக்கவங்களை எல்லாம் எப்படி பேசுறான் … தெரிஞ்ச பிறகு முகத்தை எங்க வைப்பான் …