Loading

அத்தியாயம் 55

     சொன்னது போல் ஒரு மணி நேரத்தில் திரும்ப வந்து நின்றான் நாகா. அவன் இப்படி வந்து நிற்பான் என ஊர்மி சற்றும் எதிர்பார்க்கவில்லை. வெறுப்பேற்றுவதற்காகச் சொல்கிறான் போல என்று தான் நினைத்தாள். என்றுமே எதுவுமே அவன் விளையாட்டுவதற்காகச் சொல்வதில்லை என்பதை மறந்து போய் இருந்தாள்.

     “ஊர்மி நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல கிளம்பலாமா?” பரபரப்பாகக் கேட்டான்.

     ஊர்மிக்கும் இப்போதே அவனுடன் செல்ல வேண்டும் என்று தோன்றியது தான். ஆனாலும் அக்கா, தங்கைகளைச் சமாளிக்க வேண்டுமே என ஊர்மி யோசித்து நின்ற வேளையில், “வயித்தில் குழந்தையுடன் முதன் முதலில் வீட்டுக்கு வரும் போது, நல்ல நாள் பார்த்து வர வேண்டாமா?” ருக்கு தான் கேட்டாள்.

     “நீங்க நாலு பேரும் அங்க இருந்து வரும் போது, நல்ல நாள் பார்த்தா வந்தீங்க. அப்புறம் எதுக்காக இப்ப மட்டும் நல்ல நேரம், அது இதுன்னு சொல்லிக்கிட்டு நேரம் கடத்துறீங்க.

     சரி நீங்க வேண்ணா நல்ல நாள் பார்த்து வாங்க. நான் என் பொண்டாட்டியை இப்பவே என் கூட கூட்டிட்டு போகப் போறேன்.” என்க, என்னடா இவன் என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் மற்ற மூவரும்.

     “நல்லநாள் பார்க்க நினைச்சதே ஊர்மிக்காகத் தான். நீங்க என்னடான்னா எங்களை நல்ல நாள் பார்த்து வரச் சொல்றீங்க.” குழப்பத்துடன் கேட்டாள் ருக்கு.

     லீலாவோ, “குழந்தையைப் பத்தி அவர்கிட்ட எதுவும் சொல்லலன்னு சொன்னாளே. இவர் என்ன எல்லாம் தெரிஞ்ச மாதிரி நிக்கிறாரு.” என்பதாய் யோசித்துக் கொண்டிருந்தாள். இதற்கெல்லாம் காரண கர்த்தாவான ஊர்மியோ மனதிற்குள் சிரித்தபடி,

     “நான் தான் நம்ம வீட்டுக்கு வரேன்னு ஒத்துக்கிட்டேன் இல்ல. எனக்காகக் கொஞ்சம் பொறுமையா தான் இருங்களேன். அக்காங்க சொல்ற மாதிரி ஒரு நல்ல நாள் பார்த்து நாங்க நாலு பேரும் ஒன்னா வீட்டுக்கு வரோம்.” என்றாள்.

     நாகா ஏதோ எதிர்த்து பேசவந்தவன் ஊர்மியின் ப்ளீஸ் என்ற வார்த்தையில் உருகி அமைதியாய், “சரி அடுத்து வரும் முதல் நல்ல நாளிலே வீட்டுக்கு வந்திடுங்க. நான் அப்பா மத்த எல்லார்கிட்டேயும் சொல்லிடுறேன், இப்ப கிளம்புறேன்.” என்றவன் மனதே இல்லாமல் மனைவியைத் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே கிளம்பினான்.

     அவன் சென்ற சிறிது நேரத்தில் ஊர்மியை அருகில் அழைத்த லீலா, “குழந்தையைப் பற்றி அவர்கிட்ட எதுவும் சொல்லலன்னு சொன்ன.” தங்கையின் முகத்தில் தெரியும் குறும்பைக் கவனித்துக்கொண்டே கேட்டாள்.

     “நான் நம்ம வீட்ல உள்ள எல்லாருக்கும் ஒரு சின்ன ஷாக் கொடுத்திருக்கேன். அதிலும் செல்வா மாமாவுக்கு ரொம்ப பெரிய ஷாக்.” என்கவும், லீலாவுக்குத் தங்கை செய்த காரியம் புரிந்தது. அதைவிட முன்பாக அவள் செய்த காரியத்திற்கு காரணமும் புரிந்தது.

     அவளைப் போல் தானும் நிச்சயம் வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருப்பேன் என்ற நம்பிக்கையில் தன் கணவன் செல்வாவின் மனதில் குழந்தை ஆசையை விதைப்பதற்காக இப்படி ஒரு காரியத்தை தங்கை செய்திருக்கிறாள் என்பது புரிய, கணவன் என்ன செய்வானோ என்கிற ஆர்வமும் அவன் முகம் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும் போது சிரிப்பாகவும் இருந்தது லீலாவிற்கு.

     “ஊர்மி உனக்கு நிஜமாவே அங்க போக சம்மதமா?” ருக்கு இதோடு பத்தாவது முறையாக கேட்டுவிட்டாள்.

     “என் செல்ல ருக்குக்கா, நான் என் முழு மனசோட தான் அங்க போக முடிவு எடுத்திருக்கேன். செஞ்ச தப்புக்கு மனசாற மன்னிப்புக் கேட்டதுக்கு அப்புறம் அந்த தப்புக்கான மன்னிப்பைக் கொடுக்கிறது தானே மனுஷ குணம்.” பெரிய மனிதியைப் போல் பேசினாள்.

     “அவரு மன்னிப்பு கேட்டாரு, கேட்டாருன்னு நீ தான் சொல்லிக்கிட்டு இருக்கியே தவிர அதை நாங்க யாருமே பார்க்கலையே. எங்க கண்ணு முன்னாடி இருந்த வரைக்கும் உன்னைத் திட்டிக்கிட்டு இருந்தவரு தனியா ரூமுக்குள்ள போனதும், நீ இல்லாம சரியா சாப்பிடமுடியல, தூங்க முடியல, நீ இல்லாம என்னால ஒன்னுமே முடியல அதனால என்னை மன்னிச்சு என்கூட வீட்டுக்கு வந்திடுன்னு கெஞ்சினாராக்கும். இதையெல்லாம் நான் நம்பணுமா.

     எனக்கென்னவோ அவர் வீட்டுக்கு வந்துட்டுப் போனதைச் சாதகமாக்கி, அவர் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாருன்னு பொய் சொல்லி, எங்க எல்லாரையும் அங்க கூட்டிட்டு போக ப்ளான் போடுறியோன்னு தோணுது.” ஆணி வேரைப் பிடித்தாள் ருக்கு.

     “அடடே ருக்குக்கா எப்ப இவ்வளவு பத்திசாலியா ஆனாங்க.” கிண்டலாய் கேட்டாள் ஊர்மி.

     “உன் புருஷனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்ட யாரும் அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மலையிறங்கி வந்திருப்பான்னு நம்ப மாட்டாங்க தான்.” வெடுக்கென்று பதில் சொன்னாள் ருக்கு.

     “அவரு ரொம்பத் தங்கமானவரு.” ஊர்மி சொல்ல, “அப்ப அடகு கடையில் வைச்சு பொறி உருண்டை வாங்கிச் சாப்பிடு.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ருக்கு. அத்தனை கோபம் இருந்தது ருக்குவிற்கு.

     “உன் அக்கா சொல்றது தான் சரி. அந்த நாகப்பாம்பு சரியே இல்லை. எப்ப எப்படி டிசைன் டிசைன்னா தோலை உரிப்பான்னு நம்பவே முடியாது.” சம்பந்தமே இல்லாமல் தலையைக் கொடுத்தது ஊர்மியின் மனசாட்சி.

     “ஏய் இப்ப இங்க யாரும் உன்னை வெத்தலை, பாக்கு வைச்சு அழைக்கல. மரியாதையா உள்ள போ. கருநாகம் நல்லநாகமா மாறி வந்ததை என்னை நம்ப விடாமப் பண்ணது நீதான்.” தன்னுள்ளே இருப்பது தன் உண்மை வடிவம் என்பதை உணராமல் கோபத்துடன் சொன்னாள் ஊர்மி.

     “இந்தக் காலத்துல நல்லதை மனசாட்சி சொன்னாக் கூட கோபப்படுறாங்க பா. இப்ப என்னை நல்லாத் திட்டி அனுப்பு. அப்புறம் உன் புருஷன் உன்னை எதுவும் சொல்லுவான். அவரு இப்படிப் பண்ணலாமா நீயே சொல்லுன்னு கண்ணைக் கசக்கிக்கிட்டு என்கிட்ட தானே வந்து நிப்ப, அப்ப பார்த்துக்கிறேன். அப்ப இருக்கு உனக்குக் கச்சேரி.” சவால் விட்டுக்கொண்டே அங்கிருந்து மறைந்தது ஊர்மியின் மனசாட்சி.

     இங்கே இராதா இல்லத்திற்கு வந்து சேர்ந்த மகனிடம், “நாகா என்னடா ஆச்சு, நீ ஊர்மியைப் பார்த்தியா? அவகிட்ட பேசினியா, அவ உன்கிட்ட பேசினாளா. நீ அவகிட்ட மன்னிப்பு கேட்டியா. அதுக்கு ஊர்மி என்ன சொன்னா, உன்னை மன்னிச்சிட்டாளா. எப்ப வருவாங்க என் மருமகப் பொண்ணுங்க.” தன் நான்கு பிள்ளைகளின் வாழ்வும் இப்பொழுது நாகா சொல்லப்போகும் பதிலில் தான் இருக்கிறது என்பதால் ஆர்வமாய் மகன் முகம் பார்த்துக் காத்திருந்தார் வடிவேலு.

     ஆனால் அவனோ தன் முன் நின்று கொண்டிருந்த அப்பா, அண்ணன், தம்பி என அனைவரும் இருக்க, இல்லாத அந்த ஒருத்தனையே தேடிக் கொண்டிருந்தான். ஆம் அரசுவைத் தான் தேடிக் கொண்டிருந்தான்.

     “அங்கிள் அந்தக் கருநாகம் அங்க இருந்து கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சாம், ஆனா ஏன் இன்னும் வரல.” என்று கேட்டுக் கொண்டே வந்த அரசு நாகாவைப் பார்த்ததும் கப்சிப்பென்று வாயை மூடினான்.

     “கருநாகம் வந்து ரொம்ப நேரம் ஆச்சு. ஆனா அது படமெடுக்க வேண்டிய ஆள் கண்ணில் படாததால் இவ்வளவு நேரம் அமைதியா நின்னுக்கிட்டு இருந்துச்சு. இப்ப அந்த ஆள் கண்ணில் பட்டுட்டான்.” சட்டையின் கையை முறுக்கியபடி அவனை நோக்கி நடந்தான் நாகா.

     “ஆஹா இவங்க இரண்டு பேரும் கொஞ்சம் ஓவரா சமாதானம் ஆனதால என் பாசமலர் என்னோட திட்டத்தை எல்லாம் போட்டுக் கொடுத்திருப்பாளோ. இவன் முழிக்கிற முழியே சரியில்லையே.

     யாரோட பகையை வேணாலும் சம்பாதிக்கலாம் நாகத்தோட பகையை சம்பாதிக்கக் கூடாதுன்னு பழைய படத்தில் எல்லாம் சொல்லி இருக்காங்களே. நான் என்ன பண்ணுவேன்.” அரசு யோசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் நாகா அவனைத் துரத்த ஆரம்பித்தான்.

     மனைவியைத் தேடி அவள் வீடு சென்ற போது, அவள் தன்னைக் கண்டு கொஞ்சமும் அதிரவில்லை பதிலாக தன் வருகையை அவள் எதிர்பார்த்து காத்திருப்பது போல் தோன்றியது நாகாவிற்கு. எனில் தன்னை அங்கு வரவழைக்கத் தான் இந்த விவாகரத்துப் பத்திரம் எனப் புரிய அப்போதே இதற்குப் பின்னால் வேறு யாரோ இருக்கிறார்கள் என நினைத்தான்.

     காரணம் ஊர்மிக்கு படபவெனப் பேசத் தெரியுமே தவிர இப்படியெல்லாம் வில்லங்கமாக யோசிக்கத் தெரியாது. அதுவும் அவள் அக்கா, தங்கைகளுக்குத் தெரியாமல் இந்த வக்கீல் நோட்டீஸ் எல்லாம் அனுப்பி இருக்க மாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டவனுக்கு யாரோ நிழலில் இருந்து காய் நகர்த்துகிறார்கள் என்பது புரிந்தது.

     மனைவிக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தவன் வெளியே வந்து செய்த காரியம் ஊர்மியின் வக்கீலுக்குப் பின்னால் ஒளிந்திருந்த அரசுவைக் கண்டுபிடித்தது தான். அந்த வேகத்தை, கோபத்தை தான் இப்போது நாகாவிடம் காட்டிக்கொண்டிருக்கிறான்.

     “யாரைக் கேட்டு டா இப்படியெல்லாம் பண்ண. உனக்கு அந்தளவு தைரியம் எப்படி வந்தது. எப்படிடா ஊர்மிக்கு நீ இப்படி ஒரு ஐடியா கொடுக்க மனசு வந்தது. அவ பாட்டுக்கு இந்த ஐடியா நல்லா இருக்கேன்னு இதையே பிடிச்சிக்கிட்டு என்கிட்ட இருந்து மொத்தமா பிரிஞ்சு போய் இருந்தா, நான் என்னடா பண்ணி இருப்பேன். என்னையா நாகம் னு சொன்ன. உன்னை இன்னைக்கு அடிக்கிற அடியில் உன் மூஞ்சி குரங்கு மூஞ்சியா மாறப் போகுது பாரு.” என்றவண்ணம் சோபாவைச் சுற்றி துரத்திக் கொண்டிருந்தான்.

     “என்கிட்ட உருப்படியா இருக்கிறது என்னோட முகம் மட்டும் தான். அதை வைச்சு தான் ஒரு சுமாரான பொண்ணையாச்சும் நான் கல்யாணம் பண்ணிக்கனும். என் மூஞ்சியை உடைச்சு என் ஆசையில் மண் அள்ளிப் போட்டுடாத டா. உன்னை மாதிரி என்கிட்ட என் அப்பன் சேர்த்து வைச்ச சொத்தும் இல்லடா.” புலம்பியபடியே சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தான் அரசு.

     “சொத்தைப் பார்த்து தான் என் ஊர்மி என்கிட்ட வந்தான்னு நினைச்சியா? அவ தங்கம் அதுவும் சொக்கத் தங்கம். அவளை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு மட்டும் இல்ல, உலகத்தில் யாருக்குமே கிடைக்க மாட்டா டா.” தன்னைப்  போல் உளறி இருந்தான் நாகா.

     இதுவரை அவனுடன் போக்குகாட்டி விளையாடிக் கொண்டிருந்த அரசு இப்போது நின்றவனாய், “இதை என்னைக்காச்சும் அவகிட்ட சொல்லி இருக்கியா டா. அப்படி நீ சொல்லி இருந்தா, அவ உன்னையே சுத்தி சுத்தி வந்து நீ சொல்லும் எதுவா இருந்தாலும் தலையால் நிறைவேத்தி இருப்பா. எதுக்காக உனக்கு இந்த வீண் வீம்பு.

     அவ இல்லாம உன்னோட நிலைமை என்னாகும் னு காட்டுறதுக்குத் தான் இப்படியெல்லாம் பண்ணேன். இப்ப நீ ஊர்மியோட அருமையைப் புரிஞ்சிக்கிட்ட. இது போதும், இதுக்கு மேல நீ தப்பு பண்ண மாட்டன்னு நினைக்கிறேன். எனக்கென்ன நீ நல்லா இருந்தா அது போதும்.”அரசு சொல்ல நாகாவிற்கு என்னவோ போல் ஆனது.

     “ஸ்சாரி அரசு, நான் உன்னோட செயலுக்குப் பின்னாடி இருந்த காரணம் புரியாம உன் மேல ரொம்பக் கோவப்பட்டுட்டேன்.” உண்மையான வருத்தத்துடன் சொன்னான் நாகா.

     “இதே மாதிரி தான் நாகா ஒவ்வொருத்தரோட செயலுக்குப் பின்னாடியும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அந்தக் காரணத்தை சொல்றதுக்கு அவங்க தயாரா இருந்தாலும், நாம அதுக்கான நேரத்தை அவங்களுக்குக் கொடுக்கணும்.

     எல்லா நேரத்திலும் பொறுமையா இருக்கிறதும் தப்பு தான். எல்லா நேரத்திலும் பொறுமையை இழப்பதும் தப்பு தான். உன்னை என் சொந்த அண்ணனா நினைச்சு உனக்குச் சில விஷயங்களைப் புரிய வைக்க கொஞ்சம் அத்து மீறி உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைஞ்சு ஏடாகூடமா நடந்துக்கிட்டேன் என்னை மன்னிச்சிடு.” என்றான்.

     “என் கூடப் பிறந்தவங்க அவங்களுக்காக என்கிட்ட பேசினாங்க. ஆனா நீ எனக்காக, என்னோட சந்தோஷமான வாழ்க்கைக்காகப் பண்ணி இருக்க. உனக்கு ரொம்பப் பெரிய தேங்க்ஸ்.

     ஆனா இனி இப்படி எனக்கு உதவி பண்ணாத. இல்லன்னா நான் ஒரு தப்பு பண்ணா அதை சரி பண்ண நீ இருக்கன்னு நான் தப்பு மேல தப்பு பண்ணவும் வாய்ப்பு இருக்கு.

     ஒவ்வொரு முறையும் நீ வந்து எனக்கும் ஊர்மிக்கும் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்க முடியாது.” என்ற மகனை ஆச்சர்யமாகப் பார்த்தார் வடிவேல்.

     “இந்த ஒரு விஷயத்தில் கொஞ்சம் கூட மாற்றமே இல்லாம உன்னோட கருத்தை நான் ஏத்துக்கிறேன் நாகா. இதை ஒருத்தன் உணருவதற்கே அவன் பெரிய அறிவாளியா இருக்கணும். அதை நீ பின்பற்ற நினைக்கிற பார்த்தியா. நீ ரொம்பப் பெரிய ஆளு டா.” என்றபடி நாகாவைக் கட்டிக்கொண்டான் அரசு.

     “ரொம்ப நேரமா நீங்க மட்டுமே பேசிக்கிட்டு இருக்கீங்க, போதும் டா. நாகா இப்பவாச்சும் சொல்லு என் மருமகப் பொண்ணுங்க என்னடா சொன்னாங்க.” வடிவேலு கேட்க, “உங்க மருமகப் பொண்ணுங்க நாலு பேரும் அடுத்த நல்ல நாளிலே இங்க திரும்ப வராங்க போதுமா சந்தோஷம் தானே.” என்றான்.

     “எதுக்கு டா நல்ல நாள் பார்க்கணும். நல்ல முடிவு எடுக்கிற எல்லா நாளும் நல்ல நாள் தானே. இன்னைக்கே உன்னோட காரிலே கிளம்பி இருக்கலாமே.” வடிவேலுவுக்கு ஆர்வம் தாங்கவில்லை.

     “அது ஒன்னும் இல்லப்பா உங்க மருமகளில் ஒருத்தங்க குழந்தை உண்டாகி இருக்காங்களாம். அதுவும் இரட்டைப் பிள்ளைகளாம். அதனால அவங்களை நல்ல நேரம் பார்த்து தான் வீட்டுக்கு கூட்டிட்டு வருவோம் னு எல்லாரும் சொல்லிட்டாங்க.” நாகா சொல்ல வடிவேலுவுக்குத் தன்னுடைய காதுகளில் விழுந்த சொற்களை நம்பவே முடியவில்லை.

     “நிஜமாவா நாகா எனக்குப் பேரப்பிள்ளை பிறக்கப் போகுதா. எந்த மருமக டா உண்டாகி இருக்கா. சொல்லுடா யாருடா என்னை முதலில் தாத்தாவாக்கப் போறது.” ஆனந்தமாய் அவசரப்பட்டார் வடிவேலு.

     அவரைத் தவிர அங்கிருந்த ஒருவர் முகத்திலும் அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. பரீட்சை எழுதினால் தானே முடிவை எதிர்பார்க்க முடியும். எனவே இந்த நல்ல விஷயத்தைச் சொன்னது நிச்சயம் தன்னுடைய மனைவியாக இருக்க முடியாது, வேறு யாராக இருந்தாலும் நமக்கென்ன வந்தது என்பது போல் தான் நின்றிருந்தனர்.

     “ஒன்னும் தெரியாதவன் மாதிரி நின்னுக்கிட்டு இருக்கானே உங்க மூத்த பையன் செல்வா, அவன் தான் முதலில் உங்களைத் தாத்தா ஆக்கி இருக்கான்.” நாகா சொல்ல வடிவேலுவைக் கையில் பிடிக்க முடியவில்லை. நின்ற இடத்தில் நின்று குதிக்காத குறை தான். ஆனால் செல்வாவோ இது எப்படி சாத்தியம் என்னும் படியாக குழம்பிப் போய் நின்றிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. பரீட்சை எழுதினால் தானே … அய்யோ செல்வா தலையில இடியை இறக்கிட்டாங்களே … எனக்கென்னமோ இந்த நாகா ஊர்மி ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்துகிட்டு இருக்கிறவன் நிம்மதியை எல்லாம் கெடுக்க போறாங்கன்னு தோணுது … லீலா என்ன லூசா எவனாச்சும் இப்படி சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியாது … என்ன பண்ண போறானோ டாக்டர் …