Loading

அத்தியாயம் 53

     “நம்ம ஊர்மி அம்மாவாகப் போறாளா. நாம இரண்டு பேரும் பெரியம்மாவா. சந்தோஷத்தில் எனக்குத் தலை கால் புரியல.” குதித்தாள் ருக்கு.

     “ஊர்மி எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றவண்ணம் தங்கையைத் தன்னோடு அணைத்துக்கொண்டவள் தன் கண்களில் இருந்து மை எடுத்து அவள் காதின் பின்னால் வைத்துவிட்டாள்.

     “உன்னோட நல்ல மனசுக்குத் தான் அந்த ஆண்டவன் இவ்வளவு சீக்கிரத்தில் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து இருக்கான். நீ வேண்ணா பாரு, உன் குழந்தை உனக்கு மட்டும் இல்ல நம்ம எல்லாருக்கும் சந்தோஷத்தை அள்ளி அள்ளித் தரப் போறான்.

     லீலாக்கா இனி நான் வீட்டு வேலை ஒன்னு கூட பார்க்க மாட்டேன். எல்லாத்தையும் நீங்களும், தேவகியும் மட்டுமே பார்த்துக்கோங்க. இனி என்னோட மொத்த வேலையும் ஊர்மியையும், அவ குழந்தையையும் பார்த்துகிறது தான்.” மனம் நிறைந்த புன்னகையுடன் சொன்னாள் ருக்கு.

     “வாழ்த்துக்கள் ஊர்மிக்கா நல்ல ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெத்து, என் கையில் கொடுங்க. நான் அவனை நல்லா பார்த்துக்கிறேன்.” சித்தியாகப் போகும் பூரிப்போடு சொன்னாள் தேவகி. மூவரின் முகத்திலும் சந்தோஷ அலைகள் பொங்கி வழிந்து கொண்டிருக்க ஊர்மி மட்டும் அமைதியாகவே இருந்தாள்.

     அவளுடைய மனப்போராட்டம் புரிந்தவளாக, “ஊர்மி இந்த நேரத்தில் எதுக்காகவும் மனசைப் போட்டுக் குழப்பிக்காத. இது  தற்காலிகப் பிரிவு தானே தவிர நிரந்தரமில்லை. ஒரு பொண்ணுக்கு அவ புருஷன் கிட்ட இருந்து கிடைக்க வேண்டிய மரியாதை ரொம்ப முக்கியம். அன்னைக்கு நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் இனி என்னைக்கும் நம்மில் யாருக்கும் நிகழக்கூடாதுன்னு தான் நாம இங்க இருக்கோம்.

     எல்லாத்துக்கும் மேல இது முழுக்க முழுக்க நான் எடுத்த முடிவு. அதனால உன்னால் தான் எல்லாமேன்னு நினைச்சு வருத்தப்படாத. அது உனக்கும் நல்லது இல்ல, உன் வயித்தில் வளரும் குழந்தைக்கும் நல்லது இல்லை.” லீலா சொல்ல ஊர்மி அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

     “ஊர்மிக்கா கூடிய சீக்கிரம் நாம எல்லோரும் அந்த வீட்டுக்குள்ள முழு மரியாதையோட திரும்பப் போகத் தான் போறோம். நீ தேவையில்லாம வருத்தப்படாத, குழந்தையைப் பத்தி தெரிஞ்சா நாகா மாமா கண்டிப்பா மனசு மாறிடுவாரு. உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு போய் உள்ளங்கையில் வைச்சு தாங்குவாரு.” தேவகி சொல்ல அதை நினைத்துப் பார்த்தவளுக்கோ உள்ளம் நெகிழ்ந்து போனது.

     அன்று அவன் அத்தனை உயரமாய் படமெடுத்ததற்கு மூலகாரணம் தானாக இருக்கும் பட்சத்தில், அவனை மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம் என்று தனக்குத்தானே சப்பைக் கட்டு கட்டிக்கொண்டாள்.

    தான் செய்ததற்கு அவன் செய்தது அதிகப்படி என்று புரிந்தாலும், கணவன் வேண்டும் என்று அடம்பிடிக்கும் மனதிற்கும், அவன் தன்னை அப்படிப் பேசிவிட்டானே எனத் துடிக்கும் மனதிற்குமாக சேர்த்து இப்படி ஒரு சமாதானம் செய்து வைத்திருந்தாள்.

     “அக்கா நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். அதே சந்தோஷத்தோட போய் ஊர்மிக்குப் பிடிச்ச பால் பாயாசம் பண்ணப் போறேன். நம்ம வீட்டில எத்தனையோ வருஷத்துக்கு அப்புறம் ஒரு புது வரவு வரப் போகுது. நினைக்க நினைக்க தித்திப்பு அதிகமாகிட்டே போகுது.

     இனி ஊர்மிக்குக் குழந்தை பிறக்கிற வரைக்கும் அவளோட விருப்பத்துக்கும், உடம்புக்கும் ஏத்த சாப்பாடு தான் நம்ம எல்லாத்துக்கும்.” ருக்கு சொல்ல, அதை எதிர்க்காமல் அன்புடன் ஏற்றுக்கொண்டனர் லீலா, தேவகி இருவரும்.

     ருக்கு சமயலறை செல்ல தேவகி அவளுக்கு உதவ என்று பின் சென்றாள் தேவகி. லீலா மடியில் தலை வைத்து படுத்த ஊர்மி, “அக்கா நான் எதுக்கு அவரோட அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்பிக்கிட்டு இருந்தேன்னு இப்ப வரைக்கும் நீ ஒரு வார்த்தை கூட கேட்கலையே. அந்தப் பணம் ஏதுன்னு கூட கேட்கலையே.” தவிப்பாய் கேட்டாள் ஊர்மி.

     “நீயா சொல்ற வரைக்கும் அதைப் பத்தி நான் கேட்க மாட்டேன். எனக்கு என் தங்கச்சியைப் பத்தி நல்லா தெரியும். அவ ஒன்னு பண்ணா கண்டிப்பா அதுக்கு பின்னாடி ஏதாவது ஒரு நியாயம் இருக்கும்.” லீலா சொல்ல,

     “ப்ச்… கல்யாணத்துக்கு முன்னாடியே அவரு ரொம்ப பேசிட்டாருக்கா. என்னைப் பத்தி பேசுறதுக்கு அவருக்கு ஏதோ கொஞ்சம் உரிமை இருக்கு தான். ஆனா உங்க மூணு பேரைப் பத்தி பேசுறதுக்கு அவருக்கு என்ன உரிமை இருக்கு.

     எப்படியோ நாம அவங்க கிட்ட இருக்கிற பணத்துக்காகத் தான் அவங்களைக் கல்யாணம் பண்ண நினைச்சோம் என்கிற எண்ணம் அவரோட மனசில் ஆழமாப் பதிஞ்சு போச்சு. அந்த எண்ணம் முழுசா மறையுறதுக்குள்ள நாங்க எங்க வாழ்க்கையை வேற ஆரம்பிச்சிட்டோம்.

     அதுக்கு அப்புறம் முன்னாடி மாதிரி அவரு என்கிட்ட அவரோட பணத்தைப் பத்தி பேசலன்னாலும், என்னால அவர் மேல முழுசா நம்பிக்கை வைக்க முடியல. எப்ப அவர் பழையபடி மாறுவாரோ எப்ப எங்களுக்குள் இருக்கும் உறவைத் தப்பாப் பேசுவாரோன்னு பயம் இருந்துக்கிட்டே தான் இருந்தது. கடைசியில் நான் நினைச்ச மாதிரி தானே நடந்தது.” என்ற தங்கையைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்ட லீலா,

     “நீ சரியா இருக்கும் வரை அவர் தப்பா நடந்துக்கலையே. நீ தப்புப் பண்ணப் போய் தானே அவர் தப்பா பேசிட்டார்.” என்க, நீயா பேசியது என்பது போல் தமக்கையைத் திகைப்பாய் பார்த்தாள் ஊர்மி.

     தங்கையின் திகைப்பைப் புரிந்துகொண்ட லீலா, மேலே சொல் என்பது போல் கண் அசைக்க, “எப்பவும் என்னைச் சந்தேகமாப் பார்த்துக்கிட்டு இருந்த அவரோட கண்கள் என்னைக் கர்வமாப் பார்க்கணும், என்னை மாதிரி ஒருத்தி அவருக்குப் பொண்டாட்டியா கிடைச்சதை நினைச்சு கௌரவப்படணும். அன்னைக்குத் தான் பணம் அனுப்புறதை நிறுத்தணும் னு முடிவு பண்ணி அனுப்பிக்கிட்டு இருந்தேன்.

     அன்னைக்கு அவர் கொஞ்சம் பொறுமையா கேட்டு இருந்தா நானே சொல்லி இருப்பேன். ஆனா பொறுமைக்கும் அவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கே, நான் என்ன பண்றது.” என்க, தங்கையின் கரத்தை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக்கொண்ட லீலா,

     “உன் புருஷன் மேல உன்னால் நம்பிக்கை வைக்க முடியாததும் தப்பில்லை. உங்க வாழ்க்கைக்காக நீ எடுத்த ரிஸ்க்கும் தப்பில்லை. நீ பண்ண ஒரே தப்பு நிவர்த்தியாகாத உன்னோட அந்தச் சந்தேகத்தைப் பத்தி அவர்கிட்ட நேரடியாச் சொல்லாதது தான்.

     ஒருவேளை உன்னால் அவர் முகத்தைப் பார்த்துச் சொல்ல முடியாமல் போய் இருந்தால் கூட உங்களோட அந்தரங்க வாழ்க்கையைத் தவிர்த்து இருக்கலாம்.” நேரடியாகப் பேச ஊர்மி அதிர்ந்தாள்.

     “உன்னைச் சங்கடப்பட நினைத்து நான் இப்படிப் பேசல ஊர்மி. உன் நிலையை விட்டு அவர் இடத்தில் இருந்து யோசித்துப் பார். அவர் மேல் நம்பிக்கை இல்லை, எங்களோட சந்தோஷத்துக்காக, எங்களோட இருக்கணும் என்கிற உன்னோட ஆசைக்காக அவரோட இருந்திருக்க. அதுவரை கூட அவர் செய்த தப்புக்கு தேவைதான்னு நினைச்சுக்கலாம்.

     ஆனால் உன்னைக் கட்டிக்கிட்டதுக்காக அவர் வருத்தப்படக்கூடாதுன்னு அவர் இழுப்புக்குப் போய் இருக்கியே. உனக்கு இது தானமாத் தெரிந்தாலும், அவருக்குப் பிச்சையாத் தானே தெரியும். உடல் ஆசைக்காக பொண்டாட்டி வேணும் னு நினைச்சிருந்தா அவர் உன்கிட்ட வந்து மனசார மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கு.

     உன்னை எதிர்காலமா நினைச்சு திருந்தி வந்த மனுஷனுக்கு உன்னோட நடவடிக்கை பலத்த அடியாப் போச்சு போல. அதனால் தான் அத்தனை சீற்றம்.” லீலா சொல்ல பலமாக அதிர்ந்தாள் ஊர்மி. இந்தக் கண்ணோட்த்தில் அவள் இதுவரை யோசித்ததே இல்லை.

     தங்கையின் அமைதியே அவள் புரிந்துகொண்டாள் என்பதை உணர்த்த, “விடு ஊர்மி இப்பவும் உன்னோட தப்பு அவர் தப்பை விடப் பெருசு இல்ல. நடந்த கெட்டதில் இருந்து அவங்களும், நாமளும் நல்ல பாடம் படிச்சிட்டோம். இனியாச்சும் இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கலாம்.” என்றாள் லீலா சமாதானமாக.

     அடுத்த ஏழு நாள்கள் கடந்து போய் இருந்தது. “நாகா உனக்கு ஏதோ கொரியர் வந்து இருந்து வந்து கையெழுத்து போட்டு வாங்கிக்கோ.” புன்னகையோடு சொன்னான் அரசு.

     அவனிடம் எந்தவிதத்திலும் மாற்றம் வரவில்லை அவன் பிடிவாதம் அவனை மாறவிடப் போவதும் இல்லை என்பதை உணர்ந்து, வேறு வழி இல்லாமல் தாங்கள் யோசித்து வைத்திருக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஊர்மியைத் தொடர்பு கொண்டு பேசியிருந்தான் அரசு.

     அண்ணன், தம்பிகளுடன் சேர்ந்து அவன் யோசித்தவற்றையும் சொல்ல அதில் ஊர்மிளைக்குச் சிறிதும் விருப்பமில்லை. பொய்யில் ஆரம்பித்த உறவு என்று தான் இப்போது வரை அவர்கள் மேல் பழி இருக்கிறது, அதையும் தாண்டி இப்போதும் பொய் சொல்ல வேண்டுமா என்று நினைத்தாள். கூடுதலாக கணவனின் கோபம் அதிகமாகுமே என்கிற பயமும் வந்தது.

     இருந்தாலும் அவரவர் கணவரைத் தொடர்பு கொள்ள முடியாமல், ஒவ்வொரு நாளும் தன் சகோதரிகள் படும் வேதனையைப் பார்த்து மனம் கேளாமல், போகும் பாதை தவறாக இருந்தாலும் இலக்கை அடைந்துவிட்டால் போதுமே என்று சரியென்று தலையாட்டிவைத்தாள்.

     சகோதரிகளின் கவனத்தைக் கூட கவராமல் ஊர்மியால் ஏற்பாடு செய்யப்பட்ட விவாகரத்துப் பத்திரம் நாகாவைத் தேடி வந்திருந்தது. அதைப் பார்த்ததும் ஊர்மி எதிர்பார்த்ததைப் போலவே பயங்கரமாகச் சீறினான் நாகா.

     “என்ன தைரியம் அவளுக்கு. என்னை விட்டு மொத்தமாப் பிரிஞ்சு போற முடிவு எடுத்துட்டாளா? நான் ஒத்து வர மாட்டேன்னு, என்னைக் கட் பண்ணிட்டு ஊருக்குள்ள வேற எவனையாவது அவளுக்குக் கட்டி வைச்சுட்டு, அப்புறமா இங்க வந்து இந்தத் தடியனுங்க வாழ்க்கையைக் காப்பாத்துற யோசனையா அந்த லீலா அம்மையாருக்கு. அதுக்கு நான் விடணுமே.

     நான் உயிரோடு இருக்கிற வரைக்கும், இது நடக்காது. ஒன்னா வாழ்ந்தாலும் சரி, தனித்தனியா இருந்தாலும் சரி உனக்கு நான் மட்டும் தான், எனக்கு நீ மட்டும் தான். இன்னைக்குப் போய் அவளைக் கேட்கிற கேள்வியில் அவளே இந்த விவாகரத்து பத்திரத்தை திரும்ப வாங்கிக்கணும்.” என்றுவிட்டு கிளம்பினான் நாகா.

     அவன் அவசர அவசரமாகச் செல்வதைக் கண்டு தன்னுடைய திட்டம் மெதுமெதுவாக நிறைவேறுவதை நினைத்து மனதில் சிரித்துக்கொண்டான் அரசு

     “சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பொறந்திருச்சி நேரம் வந்துருச்சு.” பாடிக்கொண்டே சிரிப்புடன் இன்னும் இரண்டு பூரி வைத்துச் சாப்பிட்டான் அரசு.

     “என்ன அரசு ரொம்பச் சந்தோஷமா இருக்க.” செல்வா கேட்க, “கருநாகத்தைப் பத்தி நான் யோசிச்சது எல்லாம் அப்பட்டமான உண்மைன்னு நிரூபிச்சிட்டு, பொண்டாட்டியைத் தேடி ரொம்பக் கோபமா போறான். அதனால் சந்தோஷமுன்னா சந்தோஷம் அதிகளவு சந்தோஷம்.” என்றான் அரசு.

     “இவன் மன்னிப்புக் கேட்காம அவங்க யாரும் சரிவர மாட்டாங்களே. இப்படிக் கோபமாப் போறவனா மன்னிப்புக் கேட்கப் போறான்.” சலிப்பாகத் தலையாட்டினான் செல்வா.

     “உனக்கு உன் தம்பியைப் பத்தி தெரியல செல்வா. அவன்கிட்ட நிறைய தப்பான குணங்கள் இருந்தாலும், நிறைய நல்ல குணங்களும் இருக்கு. அதில் முக்கியமான ஒன்னு அவன் வாழ்க்கையில் ஒரு பொண்ணுக்குத் தான் இடம். அந்தப் பொண்ணு ஊர்மி தான்.

     அதனால ஒன்னு நிஜமாவே திருந்தி அவகிட்ட மன்னிப்பு கேட்டு அவளைக் கூட்டிக்கிட்டு வருவான். இல்ல திமிர் எடுத்து அவளைத் தன்னோட கட்டுப்பாட்டுக்குள் வைச்சுக்க, பொய்யா நடிச்சு மறுபடி வீட்டுக்குக் கூட்டிட்டு வருவான்.

     எப்படியோ ஊர்மியும் அவளோட அக்கா, தங்கைகளும் இந்த வீட்டுக்குள்ள வரணும் என்பது தானே நமக்கான அவசரத் தேவை.” செல்வா என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இப்படிச் சொல்லிப் பார்த்தான் அரசு.

     “நீ சொல்றதெல்லாம் நடக்குமா? ஒரு வேளை நாகா திருந்தாம மனசுக்குள்ள வேறு ஏதோ ஒரு திட்டத்தோடு தான் ஊர்மியை இங்க கூட்டிட்டு வந்து இருக்கான்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுன்னா இது இப்ப நடந்ததை விட பெரிய பிரச்சினையா இல்ல ஆகும்.” செல்வா இப்படிக் கேட்கவும் அரசுவின் முகம் கூம்பிப் போனது.

     இப்படி நடந்தால் ஊர்மிக்கு அது நல்லதல்ல என்று சொல்வான் என்று எதிர்பார்த்து இருக்க, இது மற்றவர்களுக்குத் தெரியவந்தால் பிரச்சனையாகிவிடும் என்று தானே நினைக்கிறான் என நினைத்து சற்றே கடுப்பாக வந்தது அரசுவிற்கு. வீட்டிற்குத் தலைமகனாக அவன் இன்னும் கொஞ்சம் அல்ல நிறையவே தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது இந்த நேரத்தில் புரிந்தது அவனுக்கு.

     “ஊர்மிக்கும், நாகாவுக்கும் நடுவில் இனி என்ன நடந்தாலும் அது மத்தவங்களுக்குத் தெரிய ஊர்மி விட மாட்டா. ஒருமுறை பட்ட காயம் போதுமான புத்தியையும், பாடத்தையும் அவளுக்குக் கொடுத்து இருக்கும்.

     இனிமே தன்னோட நல்லதோ கெட்டதோ, சந்தோஷமோ, கஷ்டமோ தனக்குள்ளே வைச்சுக்கிட்டு, வெளியில் இருந்து பார்க்கிறவங்களைப் பொறுத்த வரைக்கும் ரொம்ப சந்தோஷமா வாழ்வதா தான் காட்டுவா.” இப்பொழுதாவது மனதில் குத்தட்டும் என்று அழுத்திச் சொன்னான்.

     “இது தப்பில்லையா அரசு. எங்க சந்தோஷத்துக்காக அந்தப் பொண்ணை வேணும் னே நாகாகிட்ட மாட்டி விடுற மாதிரி இருக்கு. அவன் மறுபடியும் அந்தப் பொண்ணைக் கஷ்டப்படுத்த மாட்டான்னு என்ன நிச்சயம். அந்தப் பொண்ணு எதையும் வெளியில் சொல்லாம இருந்துச்சுன்னா அவன் இதுதான் சாக்குன்னு இன்னும் ஆடுவானே.” செல்வா உண்மையான அக்கறையுடன் சொல்ல, அவ்வளவு நேரம் இருந்த கடுகடுப்பு சற்றே மறைந்தது அரசுவிற்கு.

     “அட நல்லவனே உன்னால அடுத்தவங்களுக்காக கூட யோசிக்க முடியுமா என்ன?” நக்கலடிக்க, “ப்ச்… நான் என்னவோ ரொம்ப கெட்டவன் ரேஞ்சுக்கு என்னை ப்ரேம் பண்ணாத அரசு.” கண்டித்தான் செல்வா.

     “ஊர்மி பத்தி உங்க யாருக்கும் சரியாத் தெரியாது. ஆனா எனக்கு நல்லா தெரியும். இதுக்கு அப்புறம் நாகாவும், ஊர்மியும் ஒன்னா இருந்தாங்கன்னா கஷ்டப்படப் போவது ஊர்மி இல்லை நாகா தான். அதே மாதிரி உங்க நாலு பேர்ல சந்தோஷமா வாழப் போறதும் நாகா தான்.”  பொடிவைத்துப் பேசினான் அரசு.

     செல்வா புரியாமல் முழிக்க, “இதெல்லாம் இப்போ உனக்கு காமெடியாத் தான் தெரியும். ஆனா சில வருஷங்கள் போனதுக்கப்புறம் நான் சொன்னதோட பொருள் என்னன்னு உனக்கு நல்லாப் புரியும்.

     இப்ப நீ பண்ண வேண்டிய ஒரே காரியம். உன்னோட பொண்டாட்டிய மறுபடியும் வரவேற்கிறதுக்கு தயாராய் இருக்கிறது தான். அந்தப் பொண்ணு வந்ததும் அவளோட மனசுல நீயும் நிறைய இடம் பிடிக்கணும். அப்பதான் அடுத்தவ வாட்டி ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா பொசுக்குன்னு உன்ன விட்டுப் போகணும் னு முடிவெடுக்க மாட்டாங்க.” கொட்டு வைப்பது போல் சொன்னான் அரசு.

     “இப்ப தான நாகாவால இனி எந்த பிரச்சினையும் வராது ஊர்மி பார்த்துப்பாங்கன்னு சொன்ன. இப்ப மறுபடி பிரச்சினை அது இதுன்னு சொல்லிப் பயமுறுத்துற.” பெரிய பெரிய நோயுடன் தினமும் போராடும் மருத்துவனுக்கு, குடும்பப் பிரச்சனையை நினைக்கவே பயமாக இருந்தது.

     “இந்த வீட்டில் நாகாவாலும், ஊர்மியாலும் தான் பிரச்சனை வராதுன்னு சொன்னேன். ஆனா உனக்கு நாகாவைத் தவிர்த்து இன்னும் இரண்டு தம்பிங்க இருக்காங்க. அவங்களுக்கு இரண்டு பொண்டாட்டி இருக்காங்க. அவங்களால பிரச்சினை வரலாம் இல்லையா?” அரசு புருவம் உயர்த்த,

     “போடா லூசு, எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுது. கல்யாணம் பண்ணாம பிரம்மச்சாரியாவே இருந்திருக்கலாம் போல.” சலிப்பாய் சொன்னான் செல்வா.

     “ஏன்டா, ஏன் இப்படி? நீங்க நாலு பேரும் ஒத்துமையா சந்தோஷமா வாழ்ந்து, உங்க கவலை ஒழிந்தால் தான் இந்த வடிவேலு அங்கிள் எனக்கு ஒரு பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பாரு.

     உங்க நடவடிக்கையில் பாதிக்கப்படப் போறது உங்களோட கல்யாணம் மட்டும் இல்ல, என்னோட கல்யாணமும் சேர்த்து தான்.” என்க, “என்ன வயசாகுதுன்னு உனக்குக் கல்யாணம்.” சிரிப்போடு கேட்டான் செல்வா.

     அரசு சின்ன வயதில் இருந்து கிட்டத்தட்ட தங்களைப் போலவே இங்கே வளர்ந்தவன் தான் என்றாலும் அவன் சின்னப்பையனைப் போலவே தெரிவான் ராஜ் சகோதரர்களுக்கு. அந்த நினைப்பில் கேட்டே விட்டான் செல்வா.

     “ஆசிய கண்டத்திலே இப்படி ஒரு கொடுமை யாருக்கும் வந்திருக்காது. நாகாவும், தர்மாவும் பிறந்த அன்னைக்குத் தான் நானும் பிறந்தேன். நான் மட்டும் எப்படிடா சின்னப்பையனா இருக்க முடியும்.” அரசு கேட்க, செல்வா சிரித்தானே ஒளிய பதில் சொல்லவில்லை.

     அன்றைய மாலை நேரம் நாகா வந்து பெண்களின் இல்லத்தின் வாயிலில் நிற்க, தற்செயலாக அவனைக் கவனித்த தேவகி வாங்க என்று சம்பிரதாயத்துக்கு கூட அழைக்காமல் மூஞ்சியைத் திருப்பி கொண்டு, “அக்கா நம்ம வீட்டுக்கு விருந்தாளி வந்திருக்காங்க. போய் வாங்கன்னு கூப்பிடுங்க.” ருக்குவிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

     “அப்படி யாரு வந்திருக்காங்க இவ முகமே சரியில்லை.” தனக்குள் நினைத்தவாறு வாசல் நோக்கி ருக்கு வர, அங்கு நின்றிருந்த நாகாவைக் கண்டதும் கோபம் கோபமாக வந்தது தான். இருப்பினும் ஊர்மியின் முகத்தையும், அவளுடைய நிலைமையையும் கவனத்தில் கொண்டு அவனை அமைதியாக வீட்டுக்குள் வர அனுமதித்தாள்.

     “ஊர்மியும், லீலா அக்காவும் வெளிய போய் இருக்காங்க. நீங்க உட்காருங்க நான் உங்களுக்கு காபி கலந்து எடுத்து வரேன்.” என்றாள்.

     “இல்ல அதெல்லாம் தேவையில்லை. ஊர்மிக்கு போன் பண்ணி வர சொல்றீங்களா? நான் அவகிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றான். கோபத்தை அவளிடம் மட்டும் காட்டலாம் எனக் கொதிக்கும் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.

     திருமணம் முடித்து அழைத்து வந்திருந்த பெண்கள் இல்லாத வீட்டைப் பார்த்து பார்த்து தந்தை விடும் பெருமூச்சு நினைவு வர மற்றவர்களிடம் வம்பு இழுத்துவிடக்கூடாது என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்தான்.

     “பேசணுமா சண்டை போடணுமா?” கேட்டபடி வந்தாள் தேவகி.

     “நான் ஒன்னும் உங்க அக்கா கிட்ட காரணம் இல்லாம சண்டை போடல, அதை முதலில் புரிஞ்சுக்கோங்க. என்னோட நிலைமையில் இருந்து பார்த்தாதான் தெரியும். உங்க அக்காவால நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு.” தன்னை நிரூபிக்கும் வேகம் வந்தது. இருப்பினும் தந்தைக்காக நாவைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

     “நீங்க கஷ்டப்பட்டு இருந்தா, அதுக்குப் பதிலுக்குப் பதிலா உங்களைச் சுத்தி இருக்கிறவங்களைக் கண்டிப்பா கஷ்டப்படுத்தணும் என்று எழுதப்படாத சட்டம் இருக்கா என்ன?

     அன்னைக்கு அது உங்க வீடு. அதனால் எங்களால உங்களை ஒன்னும் பண்ண முடியல. ஆனா இது எங்க வீடு, இன்னைக்கு எங்க முன்னாடி எங்க அக்காவை கஷ்டப்படுத்த நினைச்சீங்கன்னா அதுக்கு நாங்க உங்களை அனுமதிக்க மாட்டோம்.

     எங்க அக்கா கூட சண்டை போட்டு அவங்களை அழ வைக்க தான் இங்க வந்தீங்கன்னா அவங்களைப் பார்க்கவே வேண்டாம். தயவு செஞ்சு இப்பவே கிளம்பிடுங்க.” என்றாள் தேவகி. அத்தனை கோபம் இருந்தது அக்கா கணவன் மீது.

     “ஊர்மிளாவுக்கு போன் பண்ணி வரச் சொல்ல முடியுமா, முடியாதா?” நாகா கோவமாய்க் கேட்க, “இங்க பாருங்க நான் முறையில் உங்க அண்ணி. உங்க கிட்ட கெஞ்சிக் கேட்கிறேன், தயவுசெஞ்சு எங்க கிட்ட பேசுற இதே மாதிரி கோவத்தோட ஊர்மிகிட்ட பேசாதீங்க. அவ முன்ன மாதிரி இல்ல இப்ப அவ” வேகமாய் பேசிக்கொண்டு வந்த ருக்கு இந்த இடத்தில் நிறுத்த, “என்னாச்சு அவளுக்கு” வேகமாய் கேட்டான் நாகா. அவனையும் தாண்டி உள்ளம் பதறியது உண்மை.

     உண்மையைச் சொல்லலாமா வேண்டாமா என்று முழிக்க ஆரம்பித்தாள் ருக்கு. இப்போதே சொல்லி இருந்தால் கர்ப்பம் தரித்திருப்பது லீலா என நினைத்து சில குளறுபடிகள் நாகா செய்யாது தவிர்த்திருப்பான் பாவம்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. போச்சு பிரச்சனை பெருசா ஆக போகுது … லீலா கர்ப்பம்னு தெரிஞ்சா செல்வா ஷாக் ஆகி … அய்யோ இதென்ன குடும்ப பிரச்சனை பெரிய பிரச்சனையா இருக்கும் போல …