Loading

அத்தியாயம் 52

     “எல்லாம் சரி அரசு, நாகாவை எப்படி அவன் பொண்டாட்டிகிட்ட மன்னிப்புக் கேட்க வைக்கிறது. அது தானே இப்பப் பெரிய விஷயம்.” எப்படியாவது மனைவி தன் இல்லம் வந்து சேர்ந்தால் போதும் என்னும் நினைப்பில் இறங்கி வந்து கேட்டான் தர்மா.

     “அது தான் எனக்கும் யோசனையா இருக்கு. அவன் சரியான முரடன். நாம ஒன்னு செய்யுன்னு சொன்னா கட்டாயம் அதைச் செய்ய மாட்டான். அதுவும் நாங்க மூணு பேரும் சொன்னா சுத்தம்.” சலிப்புடன் வந்தது தெய்வாவின் வார்த்தைகள்.

     “அவன் முரடன் மட்டும் இல்ல, முட்டாளும் கூட. அவனுக்கு அவன் வைச்சது தான் சட்டம். அவன் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு நிக்கிறவன். எப்படி அவனை நம்ம பேச்சை கேட்க வைக்கிறது.” மனக்குழப்பத்தை அப்படியே வார்த்தைகளாக்கிச் சொன்னான் செல்வா.

     “அவனுக்கு அவனைப் பெத்தவர் மேல ரொம்ப மரியாதை உண்டு. முதல் முயற்சியா அவரை விட்டு அவன்கிட்ட பேச சொல்லுவோம்.” என்றான் அரசு.

     “ஒருவேளை கேட்கலன்னா?” தெய்வா கேட்க, ஆரம்பிக்கும் முன்னாடி கேட்டைப் போடாதடா விளக்கெண்ணைய் என்று வாய்விட்டுத் திட்டிய அரசுவை முறைத்தபடி அமைதியானான் அவன்.

     அரசு விஷயத்தைச் சொல்ல, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் என்ன செய்தால் என் மருமகள்கள் இல்லம் திரும்புவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்த வடிவேல் உடனடியாக மகன் என்னும் மீனுக்குத் தூண்டில் போடுவதற்காக, “நாகா என்னப்பா பண்ற.” கேட்டவண்ணம் அவன் அறைக்குள் வந்தார்.

     “வாங்கப்பா நான் சும்மா தான் இருக்கேன். என்ன திடீர்னு என் ரூம் பக்கம் எல்லாம் வந்து இருக்கீங்க.” கேட்டவன் கடுப்பில் இருப்பது வடிவேலுவுக்குப் புரியத்தான் செய்தது.

     “இப்ப மாதிரி அன்னைக்கும் நீ சும்மா இருந்திருந்தா இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது இல்ல.” பெருமூச்சுடன் சொல்ல, இருக்கும் கடுப்பு இன்னமும் அதிகம் ஆனது அவனுக்கு.

     ஊர்மியிடம் போனில் பேசி அவளைத் தன்னுடன் பேச வைத்துவிட்டு பிறகு, நேரில் சென்று மன்னிப்புக் கேட்கலாம். தன் குணத்திற்கு நேரில் சென்று நிற்கும் போது முகத்தில் அடிப்பது போல் அவள் முகத்தைத் திருப்பினாலோ இல்லை அவள் அக்கா, தங்கைகள் ஏதாவது பேசி வைத்தாலோ பிறகு தான் முருங்கை மரம் ஏறுவது உறுதி. அது இருவருக்குமே நல்லது இல்லை என்று தெளிவாக யோசித்து மனைவிக்குப் போன் செய்ய அவள் எடுக்கவில்லை.

     ரொம்பத் தான் கோபம் போல என மனதோடு சொல்லிக்கொண்டு திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்தான். ஐந்து அழைப்பில் ஒன்றைக் கூட அவள் எடுக்கவில்லை என்கிற கடுப்பில் அமர்ந்திருப்பவனிடம் தான் அவளைப் பற்றி பேச வந்திருந்தார் வடிவேல்.

     “என்னப்பா சமாதானத் தூது வந்தீங்களா? உங்க மருமக அனுப்பி வைச்சாளா? என்னால என் அக்காங்களும் இங்க வந்து இருக்காங்க. எனக்குப் பிடிக்கல, உங்க பையன் கிட்டப் பேசி எங்க எல்லோரையும் அங்க கூட்டிட்டுப் போங்கன்னு சொன்னாளா?

     அவளுக்காகத் தான் வந்து இருக்கீங்கன்னா தயவுசெஞ்சு இங்க இருந்து போயிடுங்க. அவளை மன்னிக்கிறதா எனக்கு உத்தேசம் இல்ல. உங்க வார்த்தையை மீறி என்னை நடக்க வைச்சிடாதீங்க.” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டான் நாகா.

     அவன் பேசியது வெளியே நின்றிருந்தவர்களுக்கும் கேட்க, வழியில் அவனை மடக்கி, “நாகா உன் மனசில் என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க. உன்னால இப்ப எங்க வாழ்க்கையும் ஊஞ்சலாடிக்கிட்டு இருக்கு.” பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்தான் செல்வா.

     “அதுக்கு நான் என்ன பண்ண முடியும். உங்க பொண்டாட்டியை உங்க சொல்லுக்குள்ள வைச்சிக்காதது உங்க மூணு பேரோட தப்பு.” அலட்சியமாய் பதில் வந்தது அவனிடம் இருந்து.

     “இங்க பாரு நாகா, நீ பண்ணது தப்பு. என்ன இருந்தாலும் அன்னைக்கு அந்தப் பொண்ணை நீ அப்படியெல்லாம் நடத்தி இருக்க கூடாது. நாம பண்ணது தப்புன்னு தெரிஞ்சா மன்னிப்பு கேட்கிறதில் எந்தவிதக் கௌரவக் குறைச்சலும் இல்ல.” அன்று பேசவேண்டியதை இன்று பேசினான் தர்மன்.

     ஒரு நிமிடம் உடன்பிறந்தவன் முகத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்தவன், “எலி எதுக்குத் துணியில்லாமா சுத்துதுன்னு புரிஞ்சுபோச்சு. என்ன, நான் வந்து மன்னிப்புக் கேட்டு என் பொண்டாட்டியை ஏத்துக்கிட்டா தான், மத்தவங்க இங்க வருவாங்கன்னு சொல்லிட்டாங்களா?

     இப்ப தான் எனக்குச் சந்தோஷமா இருக்கு. என்னை மாதிரியே எல்லாரும் கஷ்டப்படுங்க டா.” கல்நெஞ்சத்தோடு சொன்னவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தனர் அவன் சகோதரர்கள்.

     “நீ இவ்வளவு கல்நெஞ்சக்காரனா?” ஆச்சர்யத்தோடு கேட்டான் தெய்வா. “உன் தம்பி உன்னை மாதிரி தானே இருப்பேன்.” நக்கலாகப் பதில் கொடுத்தான் நாகா.

     “நாகா இது விளையாட்டு விஷயம் இல்ல. நீ உன் வாழ்க்கையைப் பத்தி என்ன தான் முடிவு பண்ணி வைச்சிருக்க. உன் வாழ்க்கையிலும், வார்த்தையிலும் தான் மத்த மூன்று பேரோட வாழ்க்கையும் இருக்கு.” பஞ்சாயத்துப் பேசுவதற்காக அரசு நடுவில் வந்தான்.

     “இங்க பாரு அரசு, நான் செஞ்சது தான் எல்லோருக்கும் தெரியுது. நான் செஞ்சது தப்பு தான் இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா அவ பண்ண தப்பு தான் என்னை அப்படி நடந்துக்க வைச்சது. அவ செஞ்சதை எப்பவும் என்னால் மன்னிக்க முடியாது.

     ஒருவேளை அவளா வந்து, நான் பண்ணது தப்பு, அப்படிப் பண்ணி இருக்க கூடாது, மன்னிச்சிடுங்கன்னு எங்கிட்ட கேட்டா அவளை ஏத்துக்க நான் தயார்.” பெருந்தன்மையுடன் சொல்வது போல் வெளியே கெத்தாகப் பேச, உண்மையில் ஊர்மிக்காக அவன் ஏங்குவதை அறிந்த அவன் மனசாட்சியோ அவனைக் காறித் துப்பாத குறை தான்.

     “ஏன்டா பண்றது எல்லாத்தையும் நீ பண்ணிட்டு, அந்தப் பொண்ணு வந்து மன்னிப்பு கேட்கணும் னு நினைக்கிற. இதுதான் உனக்குத் தெரிஞ்ச நியாயமா?” என்றான் தர்மா.

     “ப்ச்… அரசு என்னோட முடிவு என்னன்னு நீ கேட்ட, நான் சொல்லிட்டேன் அவ்வளவு தான். இதுக்கு மேல நான் இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல கிளம்புறேன்.” என்றுவிட்டு அங்கிருந்து நகரப்பார்க்க, “நில்லு நாகா” என்றவண்ணம் வந்தார் வடிவேலு.

     “அப்பா சொன்னா கேட்பியா மாட்டியா?” அவர் ஒருவித அதிகாரத்துடன் கேட்க, “நீங்க வேற எது சொன்னாலும் நான் கேட்கத் தயார். ஆனா இந்த விஷயத்துல என் தன்மானத்தை விட்டு அவகிட்டப் போய் கெஞ்சிக்கிட்டு நிக்க முடியாது. அவளா மனசு மாறி என்கிட்ட வந்தா நல்லது, இல்லன்னா போடின்னு போய்க்கிட்டே இருப்பேன். காலத்துக்கும் தனியா இருக்க என்னால் முடியும்.” அவன் அசால்டாக சொன்னதைக் கேட்டதும் எங்கிருந்து வந்ததோ அவ்வளவு கோவம் வடிவேலுவிற்கு.

     “உன்னால, நீ பண்ண தப்பால இன்னைக்கு உன் வாழ்க்கையோட சேர்த்து உன் அண்ணன், தம்பி வாழ்க்கையும் கேள்விக்குறியா நிக்குது. அதைப் பத்திக் கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லல்ல. உன்னை இவ்வளவு மோசமா வளர்த்துட்டேன்னு நினைக்கும் போது எனக்கு ஒருமாதிரிக் கஷ்டமா இருக்கு.” சோகமாகச் சொன்னார்.

     “சும்மா நிறுத்துங்க, எல்லோரும் நான் பண்ணது பத்தியே பேசுறீங்களே. உங்க யாருக்கும் அவ பண்ணது தப்பாத் தெரியலையா? என்னோட வெறுப்பு, சந்தேகம், தவிப்பு, கோபம், அன்பு, மோகம் னு எல்லாத்திலும் நான் அவகிட்ட வெளிப்படையா தான் இருந்திருக்கேன்.

     ஆனா அவ உள்ளுக்குள்ள ஒருமாதிரியும், வெளியே அவ அக்கா, தங்கச்சிங்களுக்காக ஒரு மாதிரியும் நடிச்சுக்கிட்டு இருந்து என்னை எவ்வளவு கேவலமா நினைச்சிருக்கா. அசிங்கமா இருக்கு எனக்கு. என் மனசை ரொம்பவே காயப்படுத்திட்டா.

     என்னைப் பொறுத்த வரைக்கும் அவ திரும்பி வரும் போது அவளை ஏத்துக்கிறதா நான் எடுத்திருக்கிற இந்த முடிவே ரொம்பப் பெரிய விஷயம். இதுக்கு மேல என்கிட்ட இருந்து எதுவும் எதிர்பார்க்காதீங்க.” என்றுவிட்டு அவன் சென்றே விட்டான்.

     “இப்போ உங்களுக்குப் புரியுதா? நாங்க எதுக்காக ஒரே வீட்டில் இருக்க விரும்பலன்னு. அவன் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் எங்க மூணு பேரோட வாழ்க்கையும் சரியாகிடும்.

     ஆனா அவனுக்கு அதுக்கு மனசு வரல, வரவும் வராது. இப்படிப்பட்ட ஒருத்தனோட நாங்க கடைசிவரைக்கும் ஒற்றுமையா இருக்கணுமா? அவனுக்காக விட்டுக்கொடுத்துப் போகணுமா? எங்களுக்கு என்ன தலைவிதியா.” கோபமாய் தந்தையிடம் கேட்டான் தெய்வா.

     “நீங்க மட்டும் எங்களுக்கு வேற வேற குடும்பத்திலிருந்து பொண்ணு எடுத்து கல்யாணம் பண்ணி வைச்சிருந்தா, இப்போ இப்படி ஒரு நிலைமையில் நின்னு இருக்க மாட்டோம்.

     சின்ன வயசில் இருந்து எப்போதும் எங்களுக்குப் பிடிச்சதை மட்டும் தானப்பா நீங்க கொடுத்தீங்க. ஆனா இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எங்களுக்கு ஒற்றுமையா இருக்கப் பிடிக்கலன்னு தெரிஞ்சும், ஏன் எங்களைக் கட்டாயப்படுத்திக்கிட்டே இருக்கீங்கன்னு புரியல.” சொன்னவன் செல்வா.

     வடிவேலு கண்கள் கலங்குவதை பார்க்க முடியாமல் அரசு பேச முன்வந்தான். “சரி கூல்… இப்ப என்ன ஆச்சுன்னு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க. அந்தக் கருநாகம் மன்னிப்பு கேட்க முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு, அவ்வளவு தானே.

     முதல் முயற்சி தோல்வியில் முடிஞ்சிடுச்சு. அதுக்காக அப்படியே விட்டுடமுடியாது. அடுத்த முயற்சியை ஆரம்பிப்போம்.” நம்பிக்கையோடு சொன்னான் அரசு.

     “அடுத்த முயற்சியா? எங்களுக்கு என்ன வேற வேலை இல்லையா? அவன் மனசு மாறும் வரைக்கும் இப்படி ஒவ்வொரு திட்டமாப் போட்டுக்கிட்டு இருந்தா, எங்க வேலையை எப்பப் பார்க்க.” கடுப்பாய் வந்தது தெய்வாவின் வார்த்தைகள்.

     “வேலை முக்கியமா இல்ல வாழ்க்கை முக்கியமா ஏகாம்பரம்.” ஒரே கேள்வியில் தெய்வாவை அமைதியாக்கிவிட்டு, “மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது. அதைப் பிடிச்சு காலுக்கு நடுவில் வைச்சு நசுக்கி இறகைப் புடுங்கி எடுத்தா தான், நமக்கு இறகு கிடைக்கும். அதே மாதிரி தான் இந்த நாகமும். இவ்வளவு மென்மையா சொன்னா எல்லாம் அவனுக்குப் புரியாது. இனி அவனுக்கு புரியுற பாஷையில் சொல்லுவோம்.” எதையோ யோசித்தபடிச் சொன்னான்.

     “எப்படி” செல்வா கேட்க, “எனக்குப் புரிஞ்ச வரைக்கும் அவன் ஊர்மியை விட்டுக்கொடுக்க மாட்டான். அந்தப் பொண்ணு இவனை மதிக்காமல் இருந்தது தான் அவனுக்கு அதிக கோபத்தை கொடுத்திருக்கு.

     பண்ணது அராஜகம் னு புரிஞ்சாலும், அவ மேல் இருக்கும் கோபத்தை முன்னிறுத்தி தன்னைத் தானே நியாயப்படுத்திக்கிறான்.

     ஆனா ஒரு விஷயத்தை யோசிச்சுப் பாருங்க. இத்தனைக்குப் பிறகும் அந்தப் பொண்ணு மன்னிப்புக் கேட்டா ஏத்துக்கிறேன்னு தானே சொல்றான். அவன் இறங்கி வந்து நான் பார்த்ததே இல்லை. இதை வைச்சே தெரியலையா அவன் ஊர்மியை விட்டுட மாட்டான்னு.” நம்பிக்கையோடு சொன்னான் அரசு. வடிவேலுவின் கண்களில் இப்போது தான் ஒளி தெரிவதைப் போல் இருந்தது.

     “உச்சாணிக்கொம்பில் ஏறி உட்கார்ந்து இருக்கிற குரங்கு நான் இறங்க மாட்டேன். என்னைத் தெரிந்த மற்ற குரங்குங்க எப்படியாவது எனக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கும், அது வரை எத்தனை நாள் ஆனாலும் காத்திருப்பேன்னு சொல்லுமாம். அதே மாதிரி தான் நாகாவும்.

     ஊர்மி எப்படியும் அவன் கிட்ட திரும்ப வந்துடுவாங்கிற அதீத நம்பிக்கையில் தான், அவ வீட்டை விட்டு போய் இத்தனை நாள் ஆகியும் இப்படிக் கெத்தா சுத்திட்டு இருக்கான். அந்தக் கெத்தை நாம உடைக்கணும்.” சொன்ன அரசுவின் இதழ்களில் வன்மப் புன்னகை.

     “புரியலையே” மற்ற மூவரும் சொல்ல, “உங்களுக்கு என்ன தான் புரியும். கல்யாணம் ஆகிடுச்சு இனிமே புருஷன்காரன் என்ன தான் பண்ணாலும், எப்படியும் பொண்டாட்டி அவன்கிட்ட வந்துடுவா, இல்லையா சுத்தி இருக்கிறவங்க ஏதாவது பண்ணி அவளை அவனோட சேர்த்து வைச்சிடுவாங்க என்கிற ஆணவத்தில் தான் அவன் சுத்திக்கிட்டு இருக்கான். அவன் மட்டும் இல்ல இங்க நிறைய பேர் இப்படித்தான் சுத்திக்கிட்டு இருக்காங்க.” என்கவும், லீலா சொன்ன வார்த்தைகள் நினைவு வந்தது செல்வாவிற்கு.

     “இந்த நேரத்துல ஊர்மி அவனைவிட்டு மொத்தமா பிரிய நினைக்கிறது மாதிரியும், அதுக்கு அப்புறமா வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க இருக்கிற மாதிரியும் நாம ஒரு பொய்யான சீனை கிரியேட் பண்ணனும்.” அரசு சொல்லி முடிக்கவில்லை, “இந்தப் பொய் அவனைப் பாதிக்கும் னு நினைக்கிறியா?” என்றான் தர்மா.

     “நாம சொல்லப் போற அந்த ஒரு பொய் அவனை எப்படியெல்லாம் பாடா படுத்தப் போகுதுன்னு பார்க்கத்தானே போறீங்க. அதில் நொந்து நூடுல்ஸ் ஆகி தானாத் தேடி போய் ஊர்மி காலில் விழுந்து கண்ணீர் விட்டுக் கதறி என்னை விட்டு போயிடாதன்னு கெஞ்சுவான்.” சொல்லிக்கொண்டே அப்படிக் கற்பனை செய்து பார்த்த அரசுவிற்கு அந்தக் காட்சி ஒரு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

     “அவன் இப்படி எல்லாம் பண்ணுவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை.” செல்வா சொல்லும் போது, “ப்ச்… உன் இரட்டைக்குச் சொன்னது தான் உனக்கும். ஆரம்பிக்கும்போதே முட்டுக்கட்டை போடாதடா.

     எனக்கு நாகாவைப் பத்தி தெரியும். அவனுக்குச் சொந்தமான ஒரு பொருள் இன்னொருத்தர் கிட்ட போறதை அவனால ஏத்துக்க முடியாது. அப்படி ஒன்னு நடக்கிற மாதிரி இருந்தா, ஊர்மியைத் திரும்ப அவனோட வாழ்க்கைக்குள்ள கொண்டு வருவதற்காக, அவன் எந்த எல்லைக்கும் போவான்.

     அந்தப் பொண்ணு ஊர்மியும் குறைஞ்சவ கிடையாது. இவன் என்ன தான் அவ பின்னாடிச் சுத்தினாலும் இவன் மனசார மன்னிப்பு கேக்குற வரைக்கும் அந்த பொண்ணு இவனை ஏறெடுத்துக் கூடப் பார்க்காது.

     பண்ண தப்புக்கு கொஞ்சநாள் அந்தப் பொண்ணு பின்னாடி அலையட்டும். அதுக்கப்புறம் எப்படியும் அந்த பொண்ணு மனசு இறங்கி அவனை மன்னிச்சுடுவா, அப்புறம் என்ன உங்க பொண்டாட்டிங்க உங்களைத் தேடி தானா வந்துடுவாங்க.” எல்லாம் இப்போதே நடப்பது போல் சிலாகித்துச் சொன்னான் அரசு.

     “நீ சொல்றது எல்லாம் கேட்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா நடைமுறையில் சாத்தியப்படுமான்னு தான் தெரியல. ஓருவேளை நடந்தாக் கூட இன்னும் எத்தனை நாள் ஆகுமோ.” என்றான் தெய்வா பொருமிக் கொண்டு.

     “நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சீக்கிரத்தில் நடக்கும், நடக்க வைப்பேன்.” என்றான் அரசு.

     “ஊர்மி இப்ப எப்படிமா இருக்கு.” தங்கையின் தலையை தடவியபடிக் கேட்டாள் லீலா.

     “பரவாயில்லக்கா, உடம்பு தான் ரொம்ப சோர்வா இருக்கு.” என்றவள், அந்த நாகப்பாம்பை மனசு தேடுது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

     “எல்லாம் சரியாகிடும் படுத்துக்கோ. ஒரு பிரச்சினையும் இல்லை. நல்லா சாப்பிடு, எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. அக்கா நான் இருக்கேன். என்ன நடந்தாலும் நான் உன் கூடவே இருப்பேன்.” நம்பிக்கையாய் சொன்னாள் லீலா.

     “ருக்குக்கா, தேவகிகிட்ட இத பத்தி சொல்லிட்டியாக்கா?” ஊர்மி கேட்க, “இன்னும் சொல்ல. சொன்னா அலப்பறையை ஆரம்பிச்சிடுவாங்க இரண்டு பேரும்.” என்ற லீலா எதையோ யோசித்தவளாய், “ஏன் ஊர்மி உன் புருஷன், வடிவேல் மாமா கூடவே மத்தவங்களுக்கும் இதைச் சொல்லணுமே.” சங்கடத்தோடு கேட்டாள்.

     “வேணாக்கா பார்த்துக்கலாம், இந்தக் கல்யாண வாழ்க்கையே நிலைக்குமான்னு தெரியல. அப்புறம் எதுக்கு அவர்கிட்ட போய் இதெல்லாம் சொல்லிக்கிட்டு.” சோகமாகச் சொன்னாள் ஊர்மி.

     அவளைச் சிரிக்க வைப்பதற்காக, “ஏன் ஊர்மி நம்ம அம்மாவுக்கு நாம நாலு பேரும் ஒரே நேரத்துல பிறந்தோம். உன் புருஷனும் டிவின்ஸ். ஒருவேளை உன் வயித்துல இரண்டு கருவோ இல்ல மூணு கருவோ இருந்தா?” ஆசையும் ஆர்வமும் சேர்ந்துகொள்ளக் கேட்டாள் லீலா.

     “ஐயோ அக்கா, உன் கற்பனைக்கு முதலில் கடிவாளத்தைப் போடு. என்னால ஒன்னே தாங்க முடியாது. இதுல இரண்டு மூணு பேராம். ஆசையைப் பாரு அவ்வளவு ஆசை இருந்தா சீக்கிரம் நீ பெத்துக்கோ.” என்றாள் ஊர்மி.

     “அது சரி நான் இங்கேயும், உன் செல்வா மாமா அங்கேயும் இருந்தா நல்லா பெத்துக்கலாம் போ.” சாதாரணமாகச் சொல்லிவிட்டு லீலா சிரித்தாலும் அந்த வார்த்தை ஊர்மியை அதிகம் பாதித்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நினைச்சேன் ஊர்மி ப்ரெக்னன்ட் டா இருப்பாங்க அப்படின்னு … இந்த கருநாகம் திருந்திட்டாலும் … நாகம் படமெடுத்து ஆடிடுச்சு … அரசு நல்ல ஐடியா தான் சொல்லியிருக்கான் … ஆனா நினைச்ச மாதிரி நடக்கணுமே …

    மத்த மூணு பேரும் தான் இன்னும் ஒண்ணு சேரவே இல்லையே …