Loading

அத்தியாயம் 5

     “அடேய் தேங்கா மண்டையா யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற. என் அக்கா மட்டும் வடிவேல் சாரோட பையனுக்கு கழுத்தை நீட்ட சம்மதிச்சுட்டாங்கன்னு வைச்சிக்க, இப்ப நீ பேசின இந்த வார்த்தைக்காக ரொம்ப அனுபவிப்ப. அனுபவிக்க வைப்பா இந்த ஊர்மிளா.” உள்ளுக்குள் கருவினாள் ஊர்மிளை.

     “இங்க பாருங்க சார், என்ன ஏதுன்னு விசாரிக்காம நீங்களே ஒருத்தரை ஜட்ஜ் பண்றது ரொம்பத் தப்பு. நாங்க ஒன்னும் பணஉதவி கேட்டு வரல. எங்களுக்கு அது தேவையும் இல்லை. இரண்டு நாள் முன்னாடி மிஸ்டர் வடிவேல் எங்களைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்திருந்தார். கொஞ்சம் தவறான புரிதலால என்னென்னமோ நடந்திடுச்சு. அதனால அவரைப் பார்த்து பேசிட்டுப் போக வந்தோம். இனிமேலாவது கொஞ்சம் பார்த்து சுதாரிப்போட நடந்துக்கோங்க.” வீராப்பாய் பேசினாள் தேவகி.

     தான் கேட்ட கேள்வியால் ஏற்பட்ட கோபத்தையும் காட்டி, இனிமேல் இதைப் போன்ற தவறையும் செய்யாது இருங்கள் என்று இலவச அறிவுரை வேறு வழங்குகிறாளே யார் இந்தப் பெண் என்பதாய் வியந்து பார்த்தார் அவர்.

     “தேவகி, எல்லாத்தையும் எல்லா நேரத்திலும், எல்லோருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். அமைதியா இரு.” லேசாகத் தங்கையை அடக்கிய லீலா வாட்ச்மேனை நோக்கி,

     “இங்க பாருங்க சார், உங்க முதலாளிகிட்ட லீலாவதியும் அவளோட மூணு தங்கச்சிங்களும் வந்திருக்காங்க. வர சொல்லவான்னு கேளுங்க. நீங்க போய் கேட்டுட்டு வர வரைக்கும், நாங்க இங்கேயே வெயிட் பண்றோம்.” பொறுமையாகவே சொன்னாள்.

     வாட்ச்மேன் கேட்ட கேள்வியில் உண்மையில் அவள் அதிர்ந்து போனாள் என்று தான் சொல்ல வேண்டும். அவசியம் ஏற்படாத வரை பிறந்த ஊரைக் கூடத் தாண்டாமல் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய வளர்ந்த குழந்தைகள் அவர்கள் நால்வரும்.

     ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் இவ்வளவு தூரம் வந்து விட்டனர். முதன் முதலாகக் கிடைத்த வரவேற்பு முகம் சுழிப்பது போல் அமைந்தாலும், உடையை வைத்து மனிதரை எடை போடுவது காவலாளியின் குணமாக இருக்கலாம். அதற்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும், கோபப்பட வேண்டும் என்று தன்னைத் தானே சமாளித்துக்கொண்டாள்.

     அவளுடைய தன்மையான பேச்சில் தன் தவறை உணர்ந்த காவலாளி அமைதியாய் நிற்க, “பெரிய முதலாளி இன்னைக்கு வர மாட்டாராம் மா. அவருக்கு உடம்பு சரியில்லைன்னு இப்ப தான் அவரோட மூத்த பையன் டாக்டர் தம்பி வந்து சொன்னாரு.

     அந்தத் தம்பி உள்ள தான் இருக்காரு. அவரைப் போய் வேண்ணா பார்க்கிறீங்களா.” என்றவண்ணம் வந்தார் இன்னொரு வாட்ச்மேன்.

     டாக்டர் தம்பி என்று சொன்னதும் லீலாவைத் மற்ற மூவருக்குள்ளும் ஒருவித உற்றாகம் பிறந்தது. எல்லாம் சரியாக நடந்துவிட்டால் அவன் தானே அக்காவைத் திருமணம் செய்து கொள்வான். தங்களின் மாமன் எப்படிப்பட்ட ஆண்மகனாக இருப்பான் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாய் இருந்தது அவர்களிடம்.

     மூன்று தங்கைகளுக்கும் இந்த இடம் பொருந்தி வருமா வராதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக லீலா வந்திருக்க, இவர்களோ வடிவேல் சொன்ன செல்வராஜ் என்ற ஒருவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இவ்வளவு தூரம் வந்திருந்தனர். ஏனோ அவன் தான் தங்கள் மாமன் என சொல்லி வைத்தது போல மூவருக்கும் ஒரே நேரத்தில் அழுத்தமாய் தோன்றியது.

     தொலைக்காட்சியில் வரும் பல மொழி சீரியல்கள் தவிர, பெரிதாக வேறு ஒன்றும் அறியாத பெண்கள் மூவரும் தங்கள் மாமன் எந்த ஹீரோவைப் போல் இருப்பான் என பலவகை கற்பனையில் மூழ்கினர்.

     கற்பனை உலகத்தில் லீலாவுக்கு மணக்கோலம் பூட்டி. மணமேடையில் வைத்து முகம் இல்லாத ஒருவன் கையால் தாலி கட்டிக்கொண்டு, அனைவரும் ஒரே வீட்டில் இருப்பதில் துவங்கி லீலாவின் குழந்தை வரை யோசித்து விட்டனர். லீலா அறியாத அவள் சகோதரிகள் மூவரின் பலநாள் ஏக்கம் இவை.

     லீலா வேலைக்கு என்று வெளியில் சென்ற உடன் ஆரம்பிக்கும் இந்த வகைப் பேச்சுச்கள். அக்காவை கட்டிக்கொள்ளப் போகிறவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், தங்களுடன் எப்படிப் பழக வேண்டும், தாங்கள் தங்களுடைய மாமனை எப்படியெல்லாம் கிண்டல் செய்ய வேண்டும், இதுதான் நாள் முழுக்க வீட்டில் இருக்கும் அவர்கள் நேரம் போவதற்காக பேசும் பேச்சுகளாக இருக்கும்.

     என்னவோ தினமும் பேசினாலும் சலிக்காது அவர்களுக்கு. அக்கா லீலா அத்தனை முக்கியமானவள் அவர்களுக்கு. தங்களின் நெடுநாள் கனவு நிஜமாகப் போகும் தருணம் என ஆனந்தத்தில் அவர்கள் இருக்க, லீலாவோ அதிகமாகத் தயங்கினாள்.

     உங்கள் குணம் பிடித்திருந்தது அதனால் பெண் கேட்டு வந்தேன் என வடிவேலு சொல்லி இருந்தால் கூட பணக்கார சம்பந்தம் வேண்டவே வேண்டாம் என முடிவுக்கு வந்திருப்பாள். ஆனால் வடிவேல் நாடி வந்தது இவர்களின் ஒற்றுமையைக் கண்டு அல்லவா. அது ஒன்று தான் அவளை மதில்மேல் பூனையாக நிற்க வைத்தது.

     அவளுடைய ஓனர் கூட, “நல்ல இடம் மாதிரி தான் தெரியுது லீலா. பணக்காரங்கன்னு பார்க்காத, அவங்களும் நம்மைப் போல மனுஷங்க தான். உனக்கு இந்தத் தகவல்கள் முடிவு எடுக்க போதுமானதா இல்லன்னா ஒருமுறை நேரில் போய் பார்த்துட்டு முடிவு எடு.

     ஆரம்பத்திலேயே கண்டதையும் யோசிச்சு முட்டுக்கட்டை போடுவதை விட சரியா, தவறான்னு தெரிஞ்சுக்கும் வரை போராடிப் பார்த்துட்டா பின்னாடி எந்தக் குற்றவுணர்ச்சியும் தேவை இருக்காது பாரு.” என்றிருந்தார். அவருடைய வார்த்தைகள் சரியெனத் தோன்றவும் தான் தங்கைகளை அழைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வந்திருந்தாள்.

     இப்போது வடிவேலை பார்க்க முடியாதா? என மனம் சஞ்சலம் அடைந்த வேளையில், அந்த கேட்டை நோக்கி ஒரு கார் வந்தது.

     “இதோ சார் வந்துட்டாரு மா.” சந்தோஷத்துடன் சொன்னான் இரண்டாம் வாட்ச்மேன். அவனுக்கு ஜோசியம் தெரிந்து, இவர்கள் தான் வருங்கால முதலாளிகள் என்று புரிந்து கொண்டானோ என்னவோ அவ்வளவு பணிவுடன் நடந்து கொண்டான் பெண்களிடம்.

     சற்று சோர்ந்து போன கண்களுடன் இவர்கள் நால்வரையும் கார் கண்ணாடி வழியே பார்த்த வடிவேலுவிற்கு கண்டிருந்த காய்ச்சல் போன இடம் தெரியவில்லை. ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனின் சந்தோஷத்தை ஒத்திருந்தது பெண்களை தானாக இங்கே வரவழைத்திருந்த வடிவேலின் சந்தோஷம்.

     வேகமாகக் காரில் இருந்து இறங்கியவர், “அம்மாடி லீலா, நீங்களா நீங்க எப்படி இங்க. ஆமா ஏன் இங்க நிக்கிறீங்க நேரா உள்ள வர வேண்டியது தானே.” வாய்பேச பழகும் சிறு குழந்தையின் ஆர்வம் இருந்தது அவரின் வேகமான வார்த்தைகளில்.

     “பார்த்தியா எங்க அக்காவுக்கு கிடைக்கிற மரியாதையை.” என்கிற லுக்கில் வாட்ச்மேனை பார்த்தாள் ஊர்மிளா.

     “அவன் ஏதாவது சொன்னானா மா. உள்ள விட மாட்டேன்னு பிரச்சனை பண்ணானா?” உயர்ந்து விட்ட குரலில் கேட்டார் வடிவேல். ருக்கு அவன் சொன்னதை சொல்லப் போக ஊர்மிளா அவள் கரம் பற்றித் தடுத்தாள்.

     “அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். உங்களைப் பத்தி கேட்டதுக்கு உடம்பு சரியில்லை ஆபீஸ்க்கு லீவுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு அவ்வளவு தான்.” பெருந்தன்மையுடன் பேசினாள் லீலா.

     “ஓ… சரி உள்ள வாங்க, அட வாங்கம்மா. ஏன் தயங்குறீங்க, கூச்சப்படாம வாங்க.” என்று நொடிக்கொரு வாங்க போட்டு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார் வடிவேல். அவருடைய இந்த ராஜ வரவேற்பு பெண்களுக்கு ஒருமாதிரி அசௌகர்யத்தைக் கொடுத்தது.

     மெயின் கதவைத் திறந்ததும் சில்லென்ற ஏசி காற்று முகத்தில் அடித்தது. ஏசியை டீவியில் மட்டுமே பார்த்திருந்த நால்வரும் அந்த பெரிய பில்டிங்கையும் அதில் வேலை செய்பவர்களின் மார்டன் உடையையும் பார்த்து தாங்கள் மட்டும் அந்த சூழ்நிலையில் தனித்து நிற்பது போல் உணர்ந்தனர்.

     அவர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மையா என்று கேட்டால் நிச்சயம் இல்லை தான். உடையிலும் பேசும் மொழியிலும் தான் நாகரிகம் இருப்பதாக நினைக்கும் நபர்கள் அல்ல அவர்கள்.

     இப்படிப்பட்ட சிந்தனைகள் வரும் அளவிற்கான சூழ்நிலையை இதுவரை அவர்கள் கடந்து வந்ததில்லை என்றும் சொல்லாம்.

     மிகவும் எளிமையாக, தங்களின் அம்மாக்களைப் போல உடையணிந்து, காலம் காலமாக பல ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்காக வகுத்து வைத்திருக்கும் அனைத்து குணங்களையும் கச்சிதமாக உள்வாங்கி வைத்திருக்கும், பரிட்சையம் இல்லாத நான்கு பெண்களையும் அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்ததோடு, அவர்களுடைய முதலாளி அந்தப் பெண்களிடம் இந்த அளவு பவ்யத்தோடு நடந்து கொள்வதைப் பார்த்து அவர்களுக்குள் என்ன உறவாக இருக்கும் என்று யோசிக்கவும் ஆரம்பித்தனர்.

     தனது கேபின் அருகே சென்றவர் உள்ளிருந்து ஆசை மகனின் கோபக்கனல் நிரம்பிய சத்தம் கேட்கவும் நேக்காக மருமகள்களை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்.
ஏசியும், தாங்கள் இப்போது இருக்கும் தங்களுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத சூழ்நிலையும் பெண்களுக்கு நடுக்கத்தைத் தர, முந்தானையால் பிறர் கவனம் அதிகம் கவராமல் கைகளை மூடிக்கொண்டனர்.

     “அடடே குளிருதா இரும்மா நான் ஏசியை ஆப் பண்ணிடுறேன்.” எனத் தானே அதைச் செய்தவர் முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவர்களை அமரச் செய்தார்.

     நல்லதாக நான்கு ஜூஸ் போட்டுக் கொண்டு வரச் சொல்லி உத்தரவு பிறப்பிக்க, இந்த சூழ்நிலையை நிறைய தமிழ் சினிமாக்களில் தவறாகக் காட்டி இருப்பதால் பயம் கொண்ட ருக்மணி லீலாவின் கரத்தைப் பிடித்துக்கொண்டாள். லீலாவின் மீதான அவள் பிடியையும் மருண்ட பார்வையையும் வைத்தே அவளுடைய உள்ளத்தைக் கனித்தார் வடிவேலு.

     தன் குணத்தை தவறாக நினைக்கிறார்களே என்ற சங்கடம் எல்லாம் அவரிடம் இல்லை. நாள்தோரும் இதைப் போன்ற பல சம்பவங்கள் நடக்கிறது தானே. அதைக் குறித்து கவனமாக இருக்கிறார்களே என அந்த நிலையிலும் அவர்களின் பொறுப்பைத் தான் உள்ளுக்குள் மெச்சினார்.

     வடிவேல் இப்படித்தான், எதையும் நல்ல வகையில் மட்டுமே யோசிப்பார். ஆனால் அவர் பெற்று வைத்திருக்கும் இரத்தினங்கள் அவரைப் போல இருக்குமா எனக் கேட்டால் நிச்சயம் கிடையாது தான்.

     ட்ரேயில் ஆபீஸ் அசிஸ்டண்ட் வைத்து விட்டுப் போன ஜூஸ் கிளாஸ் ஒவ்வொன்றில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வெற்று கண்ணாடி குவளையில் ஊற்றி அதைத் தானே குடித்தார்.

     “தப்பா எடுத்துக்காதீங்க மா, நேத்து நைட்டில் இருந்து காய்ச்சல், வாயெல்லாம் ஒரே கசப்பு. நான் எனக்கும் சேர்த்து ஜூஸ் கொண்டு வரச்சொன்னேன்னு என்னோட மூத்த பையனுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான். என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவான். அதான் இப்படிப் பண்ணேன்.நீங்க குடிங்க மா.” உங்களின் பயம் எனக்கு புரிந்தது, அதை போக்க வேண்டியது என்னுடைய கடமை. அதே நேரம் என் மீதான உங்கள் பயத்தை நான் புரிந்து கொண்டேன் என சொல்லி உங்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தவும் விருப்பம் இல்லை என்பதை சொல்லால் அல்லாமல் செயலால் காட்டினார்.

     அவர்களும் பயம் நீங்கியவர்களாக ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட தாங்கள் ஒருவர் எடுத்ததை, மற்றவருக்கு கொடுத்து நால்வரும் ஆளுக்கு ஒன்றாக பெற்றுக் கொண்டதைப் பார்த்த வடிவேலுவுக்கு மனமெல்லாம் நிறைந்தது. தான் எதிர்பார்த்தை ஒற்றுமையை விட இவர்களிடம் அதிக ஒற்றுமை இருக்கிறது. இது போதுமே எனக்கு என்பதாகத் தான் இருந்தது அவரின் எண்ணங்கள்.

     அவர் என்னவோ இது அனைத்தையும் சாதாரணமாகத் தான் செய்தார். ஆனால் இவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் லீலாவின் மனதில் அவர் மீதான மரியாதையை அதிகரித்தது என்றே சொல்ல வேண்டும்.

     சற்று நேரம் பொறுமையாய் இருந்த வடிவேலு மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார். “நீங்க இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்கன்னா நான் எதுக்காக உங்க வீட்டுக்கு வந்தேன்னு உங்களுக்குத் தெரிய வந்திருக்கணும்.” அவர் லேசாக இழுக்க தானாக தலையசைத்தனர் பெண்கள் நால்வரும்.

     “என்னடா இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரன் நம்ம வீட்டு பொண்ணுங்களை மருமகளாக்க நினைக்கிறானேன்னு சந்தேகம் வருதா மா.” என்க மீண்டும் ஒரு தலையசைப்பு பெண்களிடம்.

     அதைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தவர், “நாங்க பரம்பரை பரம்பரையா பணக்காரங்களா வாழ்ந்த குடும்பம் மா. என்னோட கொள்ளுக்கு கொள்ளுத்தாத்தா ஒரு ராஜா கிட்ட அமைச்சரா வேலை பார்த்தவர். ரொம்ப விசுவாசி. அவரோட விசுவாசத்துக்கு பரிசா ராஜா அவருக்கு நிறைய பரிசு கொடுத்து இருக்கார்.

     ஒரு முறை ராணியோட பிரசவத்தில் ரொம்ப சிக்கல் ஏற்பட்டு ராணி பிழைக்கிறதே கஷ்டம் னு சொன்னப்ப, எங்க கொள்ளுப்பாட்டி தான் ராணியையும் அடுத்த வாரிசையும் காப்பாத்தி கொடுத்தாங்களாம். ராஜாவுக்கு பல ராணிகள் இருந்தாலும் அந்த ராணின்னா அவ்வளவு இஷ்டமாம். அதனால தாத்தா பேரில் ஏகப்பட்ட சொத்துக்கள் ராஜா, ராணி இரண்டு பேரும் போட்டி போட்டு வாங்கிக் கொடுத்திருக்காங்க.

     ராஜா ஆட்சிக்காலம் முடிஞ்சு வெள்ளையர்கள் காலம் வந்தப்ப குறிப்பிட்ட இடத்தை தவிர ராஜ வம்சத்தோட சொத்துக்கள் அத்தனையையும் பறிமுதல் பண்ணாங்க.

     எங்களோட சொத்துக்களையும் அபகரிக்க நினைச்சு இருக்காங்க. ஆனா எங்க தாத்தா கொஞ்சம் கவனமா வாய் வழியா சொன்ன வார்த்தைகள் எல்லாத்தையும் ராஜா ஆட்சியிலே பட்டயமா மாத்திட்டார்.

     எங்ககிட்ட இருந்த ராஜா சொத்துக்களை திரும்பக் கொடுக்கச் சொல்லி ஆர்டர் போட்டாங்க. நாங்க முடியாதுன்னு கோர்ட்டுக்கு போனோம். இரண்டு தலைமுறையா கேஸ் நடந்தது. இந்த முறை வெள்ளையர்களுக்கு பதில் நம்ம சொந்த அரசாங்கத்தை நாங்க எதிர்க்க வேண்டி இருந்தது.

     முதன் முறையா எங்க அப்பா தலைமுறையில் எங்க குடும்பம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அந்த நேரத்தில் நாங்க எங்களோட தேவைகளை சுருக்கிக்கிட்டு வாழ்ந்தோம். அப்படி என்னோட தங்கச்சி காலனி வாழ்க்கை வாழ்ந்தப்ப தான் உங்க அப்பாவோட பழக்கம்.” என்க, லீலாவின் மிகப்பெரிய குழப்பம் தீர்ந்தது.

     “கொஞ்ச நாளில் கேஸ் எங்க பக்கம் தீர்ப்பாகிடுச்சி. எங்க இடத்தை எப்படியாவது அபகரிக்க நினைச்சவங்களுக்கு நல்ல பாடம் கிடைச்சது. அப்படிக் கிடைச்ச சொத்தில் வந்தது தான் மா இந்தக் கம்பெனி, இதோட சேர்த்து இன்னும் சில கம்பெனிகள் எல்லாம்.

     என் பசங்க நல்லபடியா வாழனும் அதுக்கு இன்னும் இன்னும் பணம் வேணும் னு பம்பரமா நான் சுத்திக்கிட்டு இருந்ததில் என் பசங்களை கவனிக்கத் தவறிட்டேன்.

     ஒழுக்கமான பிள்ளைகள் தான். ஆனா ஒற்றுமையில்லாத பிள்ளைகள். வயசான காலத்தில் நாலு பசங்களும் நாலு திசைக்கும் எனக்குக் காவலா இருப்பாங்கன்னு பார்த்தா, எப்படா வெட்டிக்கிட்டு ஓடலாம் னு பார்க்கிறாங்க.” என்று நிறுத்த லீலா தன் தங்கைகளை அவசரமாக ஒரு பார்வை பார்த்தாள்.

     “தசரதச் சக்கரவர்த்தி மாதிரி என் உசுரே என் பசங்க தான் மா. அவங்க நாலு பேரும் ஒற்றுமையா இருக்கிறதில் தான் என்னோட சந்தோஷம் நிம்மதி எல்லாமே இருக்கு.

     சாகப்போற கடைசிக் காலத்தில் பசங்க, மருமகப்பிள்ளைங்க, பேரப்பிள்ளைங்களோட சிரிப்பு சத்தத்தை காது நிறைய வாங்கி, அதை இதயத்தில் நிறைச்சு சந்தோஷமா சாகணும்.

     சாகும் போது துளி கூட சோகமே இல்லாத மனுசன்னு என்னை எல்லாரும் சொல்லணும். அதுதான் மா என்னோட ஆசை.” தன்போக்கில் சொல்லிக்கொண்டே வந்தவர் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார்.

     “என் ஆசை நிறைவேற உங்களை மாதிரி பொண்ணுங்க தான் எனக்கு மருமகள்களா வரணும். உங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கு. அந்த ஒற்றுமையை நீங்க உங்களைக் கட்டிக்கப் போறவங்களுக்குள்ளும் கொண்டு வந்துட்டீங்கன்னா அதுவே எனக்குப் போதும் மா.

     என்னடா அவர் பக்கத்தில் உள்ள நியாயத்தை மட்டுமே பேசுறாரே தவிர நம்மளுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமா கஷ்டமான்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டேங்கிறாரேன்னு நீங்க நினைக்கிறது எனக்குப் புரியாம இல்ல.

     என்னோட பசங்களை நிச்சயமா உங்களுக்குப் பிடிக்கும். நான் வயசுல பெரிய மனுஷன் எல்லா சூழ்நிலையிலும் நடுநிலையா இருக்கிறது தான் எனக்கு அழகு. என் பசங்களோட எதிர்காலத்துக்காக மட்டும் உங்ககிட்ட வரல.

     எப்படி உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் பசங்களோட வாழ்க்கை சிறப்பா அமையுமோ, அதே மாதிரி என் பசங்களைக் கட்டிக்கிட்டா உங்க வாழ்க்கையும் அற்புதமா அமையும் மா. சிலப் பணக்காரப் பசங்ககிட்ட இருக்கிற எந்தக் கெட்ட பழக்கமும் என் பசங்களுக்குக் கிடையாது. இதை நான் பெருமையா ஏன் கர்வமா கூட சொல்லுவேன்.” என்க, லீலாவிடத்தில் பெருமூச்சு.

     “உங்களோட ஆசைக்காக, எதுக்காக இஷ்டம் இல்லாமல் அவங்க நாலு பேரையும் ஒன்னா ஒரே வீட்டில் வைச்சிருக்க ஆசைப்படுறீங்க அவங்க இஷ்டப்படி இருக்க விடலாமேன்னு நீங்க கேட்கலாம்.

     என் பசங்களுக்கு விவரம் தெரியாது மா. உண்மையான சந்தோஷம் எது, பொய்யான சந்தோஷம் எதுன்னு புரியாம இருக்காங்க. அதை அவங்களுக்கு தெரியப்படுத்துவது ஒரு அப்பாவா என்னோட கடமை தானே.

     எத்தனை நாள் வேண்ணாலும் டைம் எடுத்துக்கோங்க. நாலு பேரும் சேர்ந்து நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.” என்று தன் நீண்ட பிரசங்கத்தை முடித்துக்கொண்டார் வடிவேலு.

     லீலாவிற்கு முடிவெடுப்பதில் சற்று தயக்கம் இருந்தது. ஆனால் தங்கைகள் மூவரின் முகத்திலும் பேரார்வம் இருந்தது. அக்காவானவள் என்ன சொல்வாளோ என்று பயந்து போய் அமைதியாய் இருந்தனர்.

     அவர்களுடைய உண்மையான ஆவல் மூத்தவளான லீலாவிற்கு அமைய இருக்கும் நல்ல வாழ்க்கையைப் பற்றி தான். இந்த இடத்தில் முதல்முறையாக தன் தங்கைகளைத் தவறாகக் கணித்த லீலா, அவர்கள் மூவருக்கும் நால்வரின் திருமணத்தில் சம்மதம் என்று தவறாக நினைத்துக்கொண்டாள்.

     அப்பொழுது கூட நால்வரும் இறுதி வரை ஒன்றாகவே இருப்பதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என்பதற்காகத் தான் திருமணத்திற்கு ஆவல் கொண்டுள்ளார்கள் மற்றபடி என் தங்கைகள் இந்த பணம் பகட்டிற்கு ஆசைப்படுபவர்கள் அல்ல என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது அவளிடம்.

     நான்கு ஆண்களைப் பற்றிய விசாரணையின் முடிவும் நல்லபடியாகவே வந்திருக்க, பணத்தை மதிக்காமல் குணத்தையும், ஒழுக்கத்தையும் மதிக்கும் வடிவேலுவின் குணமும் பிடித்துப் போக, இதற்குச் சம்மதித்தால் தான் என்ன என்றே தோன்றியது லீலாவுக்கு.

     என்ன நடந்தாலும் நால்வரும் ஒன்றாகத் தானே இருக்கப் போகிறோம். அவர்களுக்கு ஒன்று என்றால் எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்னும் நம்பிக்கையுடன், வடிவேலுவின் வேண்டுகோளிற்கு மேற்கொண்டு அவகாசம் கேட்காது சம்தித்தாள் லீலா.

     “ஹேய் அக்கா சம்மதம் சொல்லிட்டாங்க.” தேவகி கத்திய கத்தில் அந்த அறையே அதிர்ந்தது என்று கூட சொல்லலாம்.

     “தேவகி, என்ன நீ.” லீலா சற்றே கோபம் கொள்ள கலகலவென நகைத்த வடிவேல், “அட என்னம்மா நீ என்ன சின்ன மருமக அப்படி என்ன பண்ணிட்டான்னு அவளை அதட்டுற. சந்தோஷத்தில் சின்னதா சத்தம் போட்டா அவ்வளவு தானே.

     என் பசங்க நார்மலா பேசினாலே இந்தளவுக்கு சத்தம் வரும். அதிலும் உன் வருங்காலப் புருஷன் இருக்கான் பார். எவ்வளவு சாந்தமானவனோ அவ்வளவு கோவக்காரன். இவன் எல்லாம் எப்படி டா டாக்டரா இருக்கான்னு நானே பல தடவை ஆச்சர்யப்பட்டு இருக்கேன்.” சந்தோஷ மிகுதியில் உண்மையெல்லாம் உளர ஆரம்பித்தார் வடிவேல்.

     “அப்ப உங்க மூத்த பையனுக்கு ரொம்பக் கோவம் வருமா? கோவம் வந்தா அக்காவை அடிப்பாரா?” அடுத்தடுத்து கேள்விகள் வந்தது தேவகி, ருக்கு இருவரிடம் இருந்தும்.

     “ஐயோ அடிப்பாரு அடிப்பாரு. என் அக்கா மேல என்னைக்காவது கையை வைச்சாரு, அந்தக் கையை அடிச்சே உடைச்சிடுவேன். அப்புறம் அவர் இன்னொரு டாக்டர் கிட்ட தான் போய் வைத்தியம் பார்த்துக்கணும்.” சிறுத்தையாய் சீறினாள் ஊர்மிளா.

     அவருடைய இடத்தில், அவர் முன்னால் அமர்ந்து கொண்டு அவருடைய பையனைப் பற்றியே தவறாகப் பேசுகிறாளே இவளை என்ன செய்வது என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் லீலா.

     “பொண்டாட்டி மேல கையை வைக்கும் அளவுக்கு என் பையன் இன்னும் வரல மா. அப்படி ஒருவேளை அவன் உங்க அக்காவை அடிச்சிட்டா நீங்க மூணு பேரும் சேர்ந்து அவனை அடி வெளுத்துக் கட்டுங்க நான் கண்டுக்க மாட்டேன்.” பெருந்தன்மையுடன் வடிவேலு சொல்ல அங்கே சிரிப்பொலி தாண்டவமாடியது.

     மீட்டிங் ஹாலிற்குள் இருந்து சிரிப்பு சத்தம் அதுவும் பெண்களின் சிரிப்பு சத்தம் கேட்கவும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புவதற்கு என்று கேபினை விட்டு வெளியே வந்த வடிவேலுவின் மூத்த சீமந்தப்புத்திரன் சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து வந்தான்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இந்த மாதிரி ஒரு நல்ல மாமனாருக்காக அவர் பசங்களை கல்யாணம் பண்ணிக்கலாம் … லீலாவோட ஜாக்கிரதை சரியான விஷயம் தான் … வடிவேலு வோட புரிதல் நல்லா இருக்கு 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  2. காவலாளி தனது கடமையை செய்கிறார் சந்தேக கண்கொண்டு பார்க்கிறார் என்று இயல்பாக கடக்கிறாள் லீலா. ஊர்மிளா அடாவாடியாக எங்களை எப்படி கீழா பேசலாம் என்று மனதில் இருப்பதை கேட்கிறாள். இரண்டு பேருமே சரி தான்.

    Juice குடிப்பதற்கு சகோதரிகளுக்கு இருக்கும் பயம் அறிந்து பக்குவமாக தனக்கு தெரிந்ததாக அவர்களுக்கு காட்டிக்கொள்ளாமல் அவர்கள் பயத்தை போக்கியது அருமை.