
அத்தியாயம் 46
கணவன் கத்திக்கொண்டிருக்கும் போது அவனைக் கண்டுகொள்ளாமல் அறையில் இருந்து வெளியே வந்த ஊர்மி, லீலாவின் தலை தெரியவும், “அக்கா எப்படி இருக்கீங்க உடம்புக்கு இப்ப பரவாயில்லையா?” வேகமாக தமக்கையின் அருகே வந்து கேட்டாள்.
“நான் நல்லா தான் இருக்கேன். நீ தான் நல்லா இல்ல. உனக்கும், உன் புருஷனுக்கும் ஏதோ பிரச்சனை போல. சண்டை போடுற சத்தம் இங்க வரைக்கும் கேட்குது.” என்ன சத்தம் என்றாலும் அது அறையைத் தாண்டி வெளியே வரக்கூடாது எனத் தமக்கையாய் அதட்டினாள்.
“அவரைப் பத்தி தெரியாதா அக்கா. அவர் சத்தம் போடாம இருந்தா தான் அதிசயமே.” சலிப்புடன் சொன்னாள் ஊர்மி.
“புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் நடுவில் சண்டை வருவது சகஜம் தான். ஆனா அந்தச் சண்டை அவங்களுக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டிய ஒன்னு. இப்படி வீட்ல உள்ள எல்லாருக்கும் கேக்குற மாதிரி இனிமே சண்டை போடாத.” லீலா சொல்ல நல்லபிள்ளையாகத் தலையை ஆட்டிக்கொண்டாள் ஊர்மி.
“சபாஷ், நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு. இந்த வீட்ல புருஷன், பொண்டாட்டி சண்டை போடக் கூட உங்ககிட்ட உத்தரவு கேட்டுட்டுத் தான் போடணுமா என்ன?” கோபத்தோடு லீலா அருகே வந்தான் நாகா.
“ப்ச், என்ன வேணும் உங்களுக்கு. இன்னைக்கு இந்தப் பிரச்சினையை பெருசாக்காம விடமாட்டீங்க போல. நான் சொல்றதைக் கேளுங்க, நம்ம ரூம்ல போய் இருங்க. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன். எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசிக்கலாம்.” சண்டையை ஆறப்போட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்கிற நோக்கத்தில் சொன்னாள் ஊர்மி. அதற்கு எதிரில் இருப்பவன் விடவேண்டுமே.
“ஏன் இவங்க எல்லோருக்கும் முன்னாடி உன் சாயம் வெளுத்துடுமோன்னு பயமா இருக்கா. தெரியட்டுமே எல்லாருக்கும் தெரியட்டுமே. நீ எப்படிப்பட்ட காரியக்காரின்னு.” பற்களைக் கடித்துக்கொண்டு பேசினான்.
“நாகா இது என்ன பழக்கம், பொண்டாட்டியை மத்தவங்க முன்னாடி குறைவாப் பேசுறது. பிரச்சனை எதுவா இருந்தாலும் உங்க ரூமில் நீங்க இரண்டு பேரும் பேசித் தீர்த்துக்கோங்க. இப்போ அமைதியா இங்கே இருந்து போ.” என்றார் வடிவேலு.
“நீங்களும் இங்கதான் இருக்கீங்களா? ரொம்ப நல்லதாப் போச்சு. ஆமா என்ன பொண்ணு பார்த்து வைச்சிருக்கீங்க நீங்க. சரியான ராங்கிக்காரி, திமிரு பிடிச்சவ, உடம்பு முழுக்க கொழுப்பு மட்டும் தான் இருக்கு இவளுக்கு.
கல்யாணத்துக்கு முன்னாடி உங்க காலில் விழாத குறையாக் கெஞ்சினேன். எனக்கு இவ வேண்டாம் எனக்கும் இவளுக்கும் செட்டாகாதுன்னு. கொஞ்சமாச்சும் என் பேச்சைக் காது கொடுத்து கேட்டீங்களா?
ஊர்மி நல்லவ வல்லவ. அவ தான் உனக்குச் சரியான ஆளு, கொஞ்சநாள் போனதுக்கு அப்புறம் நீயே புரிஞ்சுக்குவன்னு சர்டிபிகேட் கொடுத்தீங்க. உங்களைச் சொல்லி என்ன, நானும் இல்ல இவளை நம்பித் தொலைச்சிட்டேன். ஆனா இப்ப இவ எப்படிப்பட்ட காரியத்தை பண்ணி இருக்கா தெரியுமா?” படமெடுக்கும் நாகமாய் சீறினான் நாகா.
“சும்மா நிறுத்துங்க அதென்ன எப்ப பார்த்தாலும் எங்க ஊர்மியைப் பத்தி குறை சொல்லிக்கிட்டே இருக்கீங்க. அவ ரொம்ப நல்ல பொண்ணு. யாரும் குற்றம் சொல்ற அளவுக்கு அவளோட நடவடிக்கைகள் இருந்ததே கிடையாது.” தங்கைக்கு சப்போர்ட்டாக வந்தாள் ருக்கு.
“ருக்கு அமைதியா இரு.” என்று அவளை அடக்கினாள் லீலா. அவளுக்கு நாகாவின் வார்த்தையில் உள்ளுக்குள் குடைய ஆரம்பித்து இருந்தது.
“மாமா இவர் சொல்றது உண்மையா. கல்யாணத்துக்கு முன்னாடி, இவர் உங்க கிட்ட வந்து ஊர்மியைப் பிடிக்கல, கல்யாணம் வேண்டாம் னு சொன்னாரா? நீங்க தான் கட்டாயப்படுத்தி அவரை இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சீங்களா. இதைப் பத்தி நீங்க என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே.” வடிவேலுவிடம் நேரடியாகவே கேட்டுவிட்டாள் லீலா.
“ஹலோ என்ன ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்க. நீங்க எதுவும் சொல்லாமலா என் அப்பா என்கிட்ட உங்க தங்கச்சிக்காக அப்படி சப்போர்ட் பண்ணி பேசினாரு. இதுக்கு பேரு தான் பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறதா?” லீலாவையும் விடுவதாக இல்லை அவன். அவள் தானே தன் மனைவி என்னும் வீம்புக்காரியை இப்படி வளர்த்து வைத்திருப்பது என்கிற எண்ணம் வந்து அவன் உடல் மொத்தத்தையும் ஆட்டுவித்தது.
“ஏங்க, இப்ப எதுக்கு இப்படிச் சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க. நான் பண்ணது சின்ன விஷயம். அதை ஏன் இவ்வளவு பெருசுபடுத்துறீங்க.” ஊர்மிக்குத் தான் செய்ததில் தவறு இல்லை என்று தான் இப்போது வரை தோன்றியது.
“எதுடி சின்ன விஷயம், எது சின்ன விஷயம். நீயும் நானும் சண்டை போட்டுட்டு இருந்தப்ப தான், இந்த வீட்டில் நீ சாப்பிடுற ஒவ்வொரு அரிசிக்கும் கணக்கு பண்ணி பணத்தைக் கொடுத்திக்கிட்டு இருந்த.
ஆனா இப்ப தான் நீயும், நானும் பேசி ராசி ஆகிட்டோமே. என் தப்பை எல்லாம் உணர்ந்து உன்கிட்ட மன்னிப்புக் கேட்டேனே. நீயும் மனப்பூர்வமா மன்னிச்சு என்கூட நல்லா தானே இருந்த. உனக்காக நான் எத்தனை மாறி வந்தேன். பிடிச்சிருக்குன்னு அப்படிக் கொஞ்சினியே டி. அப்புறம் என்ன பேய் பிடிச்சதுன்னு இன்னமும் இதைக் கண்டின்யூ பண்ணிக்கிட்டு இருக்க.” என்கவும், நெற்றியில் அடித்தாள் ஊர்மி. இத்தனை பேர் முன்னால் இப்படி வாய் கூசாமல் பேசுகிறானே என்று கடுப்பாக வந்தது அவளுக்கு.
“எப்படி, எப்படி. எங்க கம்பெனியில் எங்க அப்பாவுக்குக் கூடத் தெரியாமல் வேலை பார்த்து அந்தச் சம்பளப் பணத்தை இங்க கொடுத்து உன் மரியாதையைக் காப்பாத்திக்கிறியோ.
என்ன, உன் சம்பாத்தியத்தில் நீ சாப்பிடுற, நான் இன்னும் அப்பா சம்பாத்தியத்தில் தான் வெட்டிச் செலவு பண்றேன்னு இன்டேரக்டா சொல்லிக் காட்டுறியா. அதை என் சட்டையை பிடிச்சு எங்கிட்ட நேரடியாவே கேட்கலாமே. அந்தளவு உரிமையை நான் உனக்குக் கொடுக்கலையா என்ன.
பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டுச் சாதாரண விஷயம் னு வேற சொல்லிக்கிட்டு இருக்க. உனக்கு இது சின்ன விஷயமா இருக்கலாம். ஆனா எனக்கு இது எப்படி இருக்கு தெரியுமா?
நான் எப்பவாச்சும் உன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிடுவேனோங்கிற பயத்தில் என்மேல், என் மாற்றத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் கண்டதையும் பண்ணிக்கிட்டு இருக்கிற மாதிரித் தெரியுது.” என்க, இவன் இப்படி அர்த்தம் கொண்டானா என்கிற மலைப்பில் கணவன் முகம் பார்த்தாள்.
“என்னை உண்மையில் உன் புருஷனா முழு மனசோட ஏத்துக்கிட்டு இருந்திருந்தா, என் பணத்தை சரிம்மா உன் வழிக்கே வரேன். என் அப்பா, அதுதான் உன் அருமை மாமனார் வீட்டுப் பணத்தை உரிமையோட செலவு பண்ணி இருக்கலாமே.
உன் அக்கா, தங்கச்சி எல்லாம் அப்படித் தானே பண்றாங்க. அவங்களும் இந்த வீட்டு மருமகளுங்க தானே. நீ மட்டும் என்ன வானத்தில் இருந்து குதிச்சு வந்தியா? இல்ல நீ இந்த வீட்டுப் பொண்ணு இல்ல, உன்னை யாரும் எதையும் தொடக்கூடாதுன்னு ஒதுக்கி வைச்சிருக்காங்களா?” என்க, பதில் சொல்ல முடியவில்லை ஊர்மியால்.
“அப்ப, எனக்காக இல்லாம, இந்த நாகாவோட பொண்டாட்டியா இருக்கப் பிடிக்காம, உன் அக்கா தங்கைகளுக்குச் சகோதரியா இருக்கத் தான் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போற அப்படித்தான் இல்ல. இதை விட அசிங்கம் எனக்கு வேற என்ன டி இருக்கு.” என்க, பதறித்தான் போனாள் ஊர்மி. இப்படியெல்லாம் நினைப்பு வரும் என்று நினைக்கவே இல்லையே.
“அப்படியெல்லாம் இல்லங்க.” என்று தன்னை நோக்கி வந்தவளை பார்வையால் தள்ளி நிறுத்தியவன், “அப்படி இல்லன்னா வேற எப்படி. ஒருவேளை நான் சம்பாதிக்கத் தெரியாதவன், என் உழைப்பில் உனக்கு சாப்பாடு போட வக்கில்லாதவன், எனக்கும் சேர்த்து நீ தான் சம்பாதிக்கணும் னு நினைச்சுப் பண்ணியா?
நீ மட்டும் இல்ல, உனக்கும் எனக்கும் பிறக்கப் போகுற குழந்தைங்க அத்தனை பேரையும் நான் ஒத்த ஆளாத் தாங்குவேன். என்னால் அது முடியும். உனக்காக நான் எத்தனை மாறுனேன். என்னைச் செருப்பால் அடிச்ச மாதிரிப் பண்ணிட்டியே டி.” என்க, கண்கள் கலங்கிவிடும் போல் இருந்தது ஊர்மிளைக்கு.
“எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு, கஷ்டமா இருக்கு. என் மேல நம்பிக்கை இல்லாதவ, எதுக்குடி தினமும் என் கூட இருக்க. அதுக்கு மட்டும் நான் வேணுமா? ஏன் வேற” நாகா வார்த்தைகளைச் சிதற விடும் முன்னர் அவனைப் பிடித்துத் தள்ளி இருந்தாள் லீலா.
“கொன்னுடுவேன் ராஸ்கல், யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற. அவ என் தங்கச்சி, என் முன்னாடியே அவளைப் பத்தி இவ்வளவு கேவலமா பேசுற.
உனக்குக் கோபம் வந்தா யார வேண்ணா என்ன வேண்ணா சொல்லுவியா? உனக்கு மட்டும் தான் கோவம் வருமா எங்களுக்கெல்லாம் வராதா? நானும் தங்கச்சி புருஷன்னு பொறுமையா இருக்கப் பார்த்தா, எல்லை மீறிப் போற.
உனக்கு ஊர்மியைப் பிடிக்கலன்னு நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த நிமிஷமே நாங்க நாலு பேரும் இந்த வீட்டை விட்டு வெளியே போய் இருந்திருப்போமே.
அதை விட்டுட்டு பணத்தாசை பிடிச்சவ, பேராசை பிடிச்சவ அது இதுன்னு சொல்லாலும், செயலாலும் தினம் தினம் அவளைக் கஷ்டப்படுத்திக்கிட்டே இருந்திருக்க. அந்த முட்டாளும் இது எதையும் என்கிட்டச் சொல்லாம அமைதியா இருந்து இருக்கா பாரு.
நினைக்கவே அசிங்கமா, அருவருப்பா இருக்கு. இப்படி ஒருத்தனுக்கு என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணி வைச்சிட்டேனேன்னு நினைக்கும் போது என்னை நினைச்சு எனக்கே கோவம் கோவமாக வருது.” தங்கையின் நிலையை நினைத்து கோபத்தில் லீலா சொல்லி முடித்த நொடி அங்கே யாரும் எதிர்பாராத விஷயம் ஒன்று நடந்திருந்தது.
“ஏய் யாரு மேல கைய வைச்ச, இன்னைக்கு உன்னை உண்டு இல்லன்னு பண்ணிடுறேன் பாரு.” இருக்கும் வெறியில் என்ன செய்கிறோம் என்று புரியாமல் நாகா லீலாவின் கழுத்தைப் பிடித்து நெறித்திருந்தான்.
“என்ன பண்றீங்க, அக்காவை விடுங்க. விடுங்கன்னு சொல்றேன் இல்ல.” கணவனின் அருகில் நின்று, அவன் புஜத்தை அடித்தபடி அவன் பிடியில் இருந்து தமக்கையைக் காப்பாற்றப் போராடினாள் ஊர்மி.
“ஏய் நாகா, என்னடா பண்ற. விடுடா அவங்களை” மனைவியையும், தம்பியையும் தனித்தனியாக இழுத்து நிறுத்திய செல்வா, செத்துப் பிழைத்து வந்த தன் மனைவியை கொல்லப் பார்க்கிறானே என்னும் கடுப்பில் தன் பங்கிற்கு தம்பியை ஒரு அறை விட்டான்.
கன்னத்தில் கை வைத்த வண்ணம் கோவத்தில் சிவந்த கண்களுடன் நாகா நின்றிருக்க, “என் அக்கா மேல கை வைக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. லீலா அக்காகிட்ட மன்னிப்பு கேளுங்க முதலில்.” கோபத்துடன் கணவனை நெருங்கினாள் ஊர்மி.
“ஏய் என்னடி கட்டின புருஷனை ஆள் ஆளுக்கு அடிக்கிறாங்க. அதைப் பாத்துட்டு நீ சும்மா இருந்ததும் இல்லாம, இப்ப என்கிட்ட எகிறிக்கிட்டு வர.” ஊர்மியிடம் எகிறினான்.
“புருஷனா, நீயெல்லாம் புருஷனா. அறைக்குள் நடந்ததை சபையில் வைச்சுப் பேசுற. கட்டின பொண்டாட்டியை வேற எவன் கூடவாவது போகத்தானேன்னு கேட்க வர. அக்காவா இருக்கப் போய் ஒரு அடியோட விட்டுட்டாங்க. இதுவே அக்கா இடத்தில் நான் இருந்திருந்தால் கொன்னு போட்டிருப்பேன்.” என்றாள் ஊர்மி.
“சபாஷ் கொல்லுடி, கொல்லு. கமான் கொல்லு என்னைக் கொல்லுன்னு சொல்றேன் இல்ல கொல்லு.” என்று அவள் கையை இழுத்து தன் கழுத்தில் வைத்து தானே அழுத்தினான் நாகா.
“மாமா என்ன இதெல்லாம். ஏன் உங்க பையன் இவ்வளவு வியர்டா நடந்துக்கிறாரு. எனக்குப் பயமா இருக்கு.” ருக்கு வடிவேலுவைப் பார்த்துச் சொன்னாள்.
“அது ஒன்னும் இல்ல ருக்கு. இன்னைக்கு அமாவாசை இல்ல அதான் இப்படி. பௌர்ணமி வந்திட்டா தெளிவாகிடுவான். அதுவரைக்கும் உங்க தங்கச்சியை அவனை விட்டுக் கொஞ்சம் விலகி இருக்கச் சொல்லுங்க.” என்றான் தெய்வா.
“என்ன சொன்ன, கம் அகெய்ன். நான் பைத்தியமா சொல்லுடா நான் பைத்தியமா?” நாகாவின் கோவம் தெய்வாவின் பக்கம் நகர்ந்தது.
“ஆமாம் டா நீ பைத்தியம் தான். இத்தனை பேர் இருக்கும் போது வெறி பிடிச்ச மாதிரி கத்திக்கிட்டு இருந்தா பைத்தியம் பிடிச்சு இருக்குன்னு தானே சொல்ல முடியும்.” நிலைமை புரியாமல் விளையாடினான் தெய்வா.
“ஆமாடா உன்னை மாதிரி பைத்தியம் கூட பொறந்தேன் பாரு, எனக்குப் பைத்தியம் தான்.” என்று அவன் சட்டையைப் பிடித்து இழுத்தவாறு கத்தினான் நாகா. கண் மண் தெரியாத கோபம். ஹிரண்யகசிபுவைக் கொன்ற பின்பும் ஆத்திரம் அடங்காமல் சுற்றித் திரிந்த நரசிம்மனைப் போல் மனைவியின் மீது நாகா கொண்டிருந்த ஆத்திரம் கண்ணில் படும் அனைவரின் மீதும் படரப் பார்த்தது.
“ஏய் விடுறா, விடுன்னு சொல்றேன் இல்ல.” தெய்வா தன்னை விடுவித்துக்கொள்ளப் போராட, செல்வாவும் தர்மாவும் இருவரையும் விலக்க வந்தனர்.
விலகி நின்ற நாகா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “லீலா இங்க பாரு. உனக்கு உண்மையிலேயே உன் தங்கச்சி மேல பாசம் இருந்தா, அவளை இங்கிருந்து உடனடியாக கூட்டிகிட்டுப் போயிடு. அதுதான் அவளுக்கு நல்லது. இனிமேல் ஒரு தடவை நான் அவளை இங்க பார்த்தேன் அவ்வளவுதான் சொல்லிட்டேன்.” விரல் நீட்டி எச்சரித்தான்.
“மாமா என்ன மாமா இதெல்லாம்.” லீலா வடிவேலுவிடம் வர, “நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் லீலா. என் முன்னால என் பையனைத் தள்ளிவிடுற. என் மனசு எப்படி வலிக்கிது தெரியுமா. நாகாகிட்ட மன்னிப்பு கேளு லீலா.” யாரும் எதிர்பாரா வார்த்தைகளை வடிவேலு சொல்ல, லீலாவைத் தவிர பெண்கள் மூவரும் அதிர்ந்தனர்.
“மாமா உங்க பையன் பேசின பேச்சுக்கு அவரைக் கண்டிக்கிறதை விட்டுட்டு, எங்க அக்காவை மன்னிப்புக் கேட்க சொல்றீங்க. அக்கா நீ ஒன்னும் மன்னிப்பு கேட்க வேண்டாம். நீ மன்னிப்பு கேட்டு தான் அந்த சீமராஜா என் கூட வாழ்வாருன்னா அப்படி ஒரு வாழ்க்கையே எனக்கு வேண்டாம்.” என்றாள் ஊர்மி.
“லீலா, நாகாகிட்ட மன்னிப்பு கேளுமா.” வடிவேலு கண்டிப்பு போல சொல்ல, “அவங்க ஏன் பா இவன்கிட்ட மன்னிப்பு கேட்கணும். அதெல்லாம் கேட்க மாட்டாங்க. லீலா நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். வாங்க நம்ம ரூமுக்கு போகலாம்.” என்றபடி மனைவியை நெருங்கினான் செல்வா.
“லீலா என் பேச்சுக்கு மரியாதை கொடுப்பங்கிறது உண்மையா இருந்தா, நாகாகிட்ட மன்னிப்பு கேளு.” வடிவேலு உறுதியாய் சொல்லிவிட, “என்ன இருந்தாலும் நான் உங்களைத் தள்ளிவிட்டு இருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடுங்க.” நாகாவிடம் மன்னிப்புக் கேட்டே விட்டாள் லீலா.
நாகாவைச் சமாதானப்படுத்த இப்போதைக்கு ஒரே வழி இது மட்டும் தான். அவன் சமாதானம் ஆனால் மட்டுமே அனைவரின் வாழ்க்கையையும் காப்பாற்ற முடியும் என்று நினைத்து மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் இப்படிச் செய்தார் வடிவேலு.
லீலா மன்னிப்பு கேட்கவும் நாகா சற்று அடங்குவதாகத் தெரிய, பிரச்சனை அப்போதைக்கு முடிந்தது என நிம்மதிப் பெருமூச்சுவிட்ட வடிவேலுவிற்குத் தெரியவில்லை. தன்னுடைய செயலால் எவ்வளவு பெரிய விளைவு வரப் போகிறது என்று.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வடிவேலு சார் பண்ணது தப்பு தான் … முதல்ல பிரச்சனையை ஆரம்பிச்சது நாகா … லீலா தள்ளி விட்டா … நாகா கழுத்தை பிடிச்சுட்டான் … ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்டிருக்கலாம் … இப்போ அவனை சமாதானப்படுத்த எல்லாம் பண்ணினா … மத்தவங்க மனசு கஷ்டப்படும்னு தெரிய வேணாமா …
உங்களுக்கு வில்லன் வெளில இருந்து வர வேணாம் … வீட்டுக்குள்ளேயே இருக்கான் …