
அத்தியாயம் 45
“என்ன விளையாடுறீங்களா?” மனைவியின் புது அவதாரத்தில் அதிர்ந்து போய்க் கேட்டான் தெய்வா.
“போங்க, நான் என்ன சொன்னாலும் அதைத் தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க. அன்னைக்கு ஆசையாக் கேட்டீங்க, அப்ப நான் தயாரா இல்லாததால் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதுக்குப் பழிவாங்க தானே இப்ப நான் ஆசையா கேட்கிறப்ப, முகத்தில் அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொல்றீங்க. போங்க நான் போறேன்.” கோபித்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டவளின் கரத்தைப் பற்றிய தெய்வா,
“என்ன சொன்னீங்க ருக்கு, ஆசையா ஹனிமூன் போகலாம் னு நினைச்சீங்களா. நான் எழுந்திட்டேன் தானே, இது கனவு ஒன்னும் இல்லையே.” என்க, “கனவும் இல்லை ஒரு மண்ணும் இல்ல. நீங்க இப்படியே கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா ஹனிமூனுக்குத் தனியாத்தான் போகணும் சொல்லிட்டேன்.” செல்லமாய் சிணுங்கினாள் அவள்.
“என்னது தனியா ஹனிமூனா அது சரி.” சிரித்தான் தெய்வா. “இப்படிச் சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? அதைவிட்டுட்டு இஞ்சி தின்ன மங்கி மாதிரி எப்பப் பார்த்தாலும் உர்ருன்னு முகத்தை வைச்சிட்டு நல்லாவாங்க இருக்கு.” பேச்சுவாக்கில் மனதில் இருந்த அனைத்தையும் சொல்லிவிட்ட மனைவியை இரசனையாய் பார்த்தவன், “ருக்கு இங்க வாங்க.” என்று அருகில் அழைத்து, அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு,
“நான் கோபமா இருக்கேன்னு என்னைச் சமாதானப்படுத்த சொன்னீங்களா? இல்ல நிஜமாவே ஆசையாக் கேட்டீங்களா?” என்றான். கட்டாயத்தின் பேரில் வாழ்க்கையை ஆரம்பிக்க மனது இல்லை அவனுக்கு.
“இன்னும் உங்களுக்கு நான் சொன்னது மேல நம்பிக்கை வரல இல்ல. நான் முதல் நாள் சொன்னது தான், எனக்கு நீங்களும் முக்கியம், என் கூடப்பிறந்தவங்களும் முக்கியம். ஒருத்தருக்காக இன்னொருத்தரை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது.
அன்னைக்கு நீங்க கேட்டு நான் மறுத்தது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. எனக்கு இப்ப கொஞ்சம் ஓகே மாதிரி தோணுச்சா, அதனால தான் நம்ம புருஷன் தானேன்னு வெட்கத்தை விட்டு நானா பேசினேன். ஆனா நீங்க” மேற்கொண்டு அவள் ஏதும் பேசும் முன்னர் அவள் வாயைப் பொத்தியவன்,
“நீங்க இவ்வளவு தூரம் பேசினதே ரொம்ப சந்தோஷம். நீங்க ஆசைப்பட்ட படி நாம நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஆனா ஹனிமூன் கொஞ்ச நாள் அப்புறம் போகலாம்.” என்றான்.
“ஏங்க என்னை மொட்டைத் தலையோடு கூட்டிக்கிட்டு போக சங்கடப்படுறீங்களா. இதுல அசிங்கப்பட எதுவுமே இல்லங்க.” சாதாரணமாகச் சொன்னாள்.
மதியம் தெய்வாவின் உடன் வேலை செய்பவர்கள் என்கிற பெயர் கொண்டு வந்த இருவர், அவன் மனைவி என்று ருக்குவை அறிமுகப்படுத்தியதும் பார்த்த பார்வையில் சற்றே சுருங்கிப் போன கணவனின் முகத்தை நினைவு படுத்திச் சொன்னாள்.
“இதை நீங்க சொல்லி நான் புரிஞ்சுக்கணும் னு இல்ல ருக்கு, எனக்கே அது நல்லாத் தெரியும். அதோட நான் சங்கோஜப்பட்ட அளவுக்கு உங்களை இப்படி பார்க்கிறதுக்கு எனக்குப் பெருசா எந்த வித்தியாசமும் தெரியல.
இப்பவும் நீங்க, நான் விரும்பின அதே ருக்கு தானே. முடி போனா என்ன அடுத்த ஆறு மாசத்தில் வளர்ந்திடப் போகுது.” என்ற கணவனை நேசமாய் பார்த்தவள், “அப்ப நாம கிளம்பலமா?” என்றாள் அத்தனை ஆசையாய்.
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம் ருக்கு. என் கண்ணுக்கு நீங்க வித்தியாசமாத் தெரியல தான். ஆனா மத்தவங்களுக்கும் அப்படித் தான் தெரியும் னு இல்லையே.
உங்களை யாராவது வித்தியாசமாப் பார்த்தாலோ, இல்லை கிண்டல் பண்ணாலோ என்னால் தாங்க முடியாது. அதையே யோசிச்சு நம்ம நாளை என்னால் சந்தோஷமா கழிக்கவும் முடியாது. அதனால் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, நீங்க எங்க ஆசைப்படுறீங்களோ அங்க போகலாம். இப்போதைக்கு நம்ம ரூமையே ஹனிமூன் ஸ்பாட்டா யூஸ் பண்ணிக்கலாம். என்ன சொல்றீங்க.” கண்ணடித்தபடிக் கேட்டான்.
அவன் நினைத்திருந்தால் வேலை என்று சொல்லித் தவிர்த்திருக்கலாம். இல்லையா வேறு ஏதாவது காரணம் சொல்லி இருக்கலாம். ஆனால் இது தான் விஷயம் என்று ஒளிவு மறைவின்றிச் சொன்ன விதம் ருக்குவிற்குப் பிடித்திருந்தது.
“உங்களை மாதிரி ஒருத்தர் புருஷனாக் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும்.” சொன்னபடி ருக்கு தெய்வாவின் கன்னம் கிள்ள, “நானும் தான் கொடுத்து வைச்சிருக்கணும், இந்த மாதிரி ஒரு தங்கமான பொண்டாட்டி கிடைச்சதுக்காக.” என்றவண்ணம் அவளை அணைத்துக்கொண்டான் தெய்வா. ருக்கு தெய்வாவை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் தெய்வா ருக்குவை நோக்கி நான்கடி எடுத்து வைக்கத் தயாராக இருப்பான். அது தான் தன் மனைவி மீது அவன் கொண்ட காதலின் அடையாளம்.
தங்களின் அறையில், “தேவகி என்னமோ நீங்க வந்த நேரம் சரியில்ல அது இதுன்னு பேசுனீங்களே. இப்பப் பார்த்தீங்களா, நான் முன்னாடி வேலை செஞ்ச காலேஜில் வாங்கின சாம்பளத்தை விட இங்க டபுள் மடங்கு சம்பளம். நான் அங்க வேலை செய்யப் போறதால என்னோட வொய்ப் உங்களுக்கு ப்ரீ சீட்டு வேற.
எனக்கு வேலை போனது உங்க ராசியால தான்னா இப்போ நிறைய சம்பளத்தில் வேலை கிடைச்சதுக்கும் உங்க ராசி தானே காரணமா இருக்கும்.
நம்ம கல்யாணம் நடந்த இந்தக் கொஞ்ச நாளுக்கே இப்படின்னா, உங்க ராசியை நம்பி அரசியலில் இறங்கினா இன்னும் சில வருஷத்தில் நான் முதலமைச்சரே ஆகலாம் போலவே.” சீண்டலாய் கேட்டான் தர்மா.
“கிண்டல் பண்ணாதீங்க, இனிமேல் காலண்டரில் ராசிபலன் கூட நான் பார்க்க மாட்டேன் போதுமா?” தேவகி சிணுங்க, “அறிவாளிப் பொண்டாட்டிக்குத் தற்காலிகமாப் பிடிச்ச பைத்தியம் தெளிஞ்சிடுச்சு போலவே.” என்றபடி தர்மா சிரிக்க, தேவகியும் உடன் சேர்ந்து கொண்டாள்.
நாள்கள் தன்னைப் போல் நகர, நான்கு ஜோடிகளும் நன்றாகவே ஒத்துப்போய் வாழ்ந்தனர். இல்லறம் என்ற வீட்டிற்குள் ஊர்மி, நாகாவைத் தவிர யாரும் இன்னும் பால் காய்ச்சவில்லை என்றாலும் சந்தோஷத்திற்குக் குறைவு இல்லாமல் தான் இருந்தது.
அப்படி இருக்க பெண்கள், ஆண்கள் என அனைவருக்குள்ளும் ஒரு ஓரத்தில் மறைந்து இருக்கும் அகங்காரத்தை வளர்த்துவிடுவதைப் போன்று வந்து நின்றது அந்த நாள்.
லீலா, செல்வா இருவரும் கேரளாவில் இருந்து திரும்பி வந்திருந்தனர். லீலாவைக் கொல்ல வந்தவன் யார் என்று இன்னமும் தெரியவில்லை. இருந்தாலும் மருத்துவமனை வேலை செல்வாவை அதிக நாள்கள் வெளியே தங்கவிடவில்லை. கேரளாவில் இருந்தவரை மனைவியுடன் நன்றாகவே நேரம் செலவு செய்தான் செல்வா.
ரொமான்டிக்காக நடந்துகொள்ள வரவில்லை என்றாலும், அன்பாகப் பேசினான், கருத்தாகப் பார்த்துக்கொண்டான். அவளுக்குத் தேவையான அனைத்தையும் அவள் சொல்லும் முன்னரே வாங்கிக்கொடுத்தான். அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் காலத்திற்கும் நினைத்துப் பார்க்கும் அளவு மிக மிக இனிமையாக நடந்துகொண்டு, ராதா இல்லத்திற்கு திரும்ப அழைத்து வந்திருந்தான்.
தெய்வா ருக்குவைப் பற்றி குறை சொல்வதை விட்டிருந்தான். பல இடங்களில் தன் பிடிவாதத்தைக் குறைத்துக்கொண்டு ருக்குவிற்காக வளைந்துகொடுத்துப் போனான்.
நாகா, ஊர்மி இருவரும் பல நேரம் சண்டையிட்டும், சில சமயத்தில் கொஞ்சிக் கொண்டும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். தர்மா, தேவகி இருவரும் காலையில் ஒன்றாகவே கல்லூரிக்குச் சென்று, மாலை திரும்பி வருவதை பழகிக் கொண்டனர்.
மகன்களுக்கும், மருமகள்களுக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்துவிட்டது கண்ட வடிவேலு இறக்கை இல்லாமல் வானத்தில் பறக்க ஆரம்பித்தார். வடிவேலுவின் நெகழ்ச்சியைப் பார்த்து தானும் மனம் மகிழ்ந்து போனான் அரசு.
அதிகாலையில் யாரும் எழுந்துகொள்வதற்கு முன்னரே வந்திருந்த லீலாவும், செல்வாவும் இப்போது தான் அறையை விட்டு வெளியே வந்தனர். அதற்காகவே காத்திருந்தது போல் அனைவரும் லீலாவைச் சூழ்ந்து கொள்ள, அவள் முகம் பௌர்ணமி நிலவாய் ஜொலித்தது என்றால், செல்வாவின் முகம் அமாவாசை நிலவாய் சுருங்கிப்போனது.
“அக்கா இப்ப உடம்பு நல்லா இருக்கு தானே.” லீலாவைக் கட்டிக்கொண்ட ருக்கு, “மாமா எப்படி இருக்கீங்க?” என செல்வாவையும் அன்பாய் வரவேற்றுக் கேட்டாள்.
“லீலா சாயங்காலம் எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். நீங்க பேசிட்டு கொஞ்சம் சீக்கிரம் சாப்பாடு எடுத்துட்டு வந்திடுங்க.” என்றுவிட்டு, தன்னை நலம் விசாரித்த ருக்குவைக் கண்டுகொள்ளாமல் சென்றான்.
“ருக்கு அவரைத் தப்பா நினைச்சுக்காதே. அவரு ரொம்ப நேரமா ஏதோ டென்ஷனில் இருக்காரு. ஆமா நீ ஏன் இப்படிப் பண்ண. எனக்காகவே இருந்தாலும் நீ மொட்டை அடிச்சதில் எனக்கு வருத்தம் தான் ருக்கு. புதுசாக் கல்யாணம் ஆன எந்த பொண்ணாவது இப்படி ஒரு காரியத்தைச் செய்வாளா?
நம்ம நாலு பேரில் உனக்குத் தான் தலைமுடி அதிகம். வெயிட் தாங்க முடியாம இத்தனை வயசான பிறகும் அடிக்கடி இரட்டை ஜடை போட்டுக்கிட்டு இருப்ப, இப்ப உன்னை இப்படிப் பார்க்க எனக்குக் கஷ்டமா இருக்கு.” தவிப்பாய் சொன்னாள் லீலா.
“விடுக்கா, உனக்காக நான் இதை மட்டும் இல்ல இன்னும் என்ன வேண்ணாலும் செய்வேன். எனக்கு நீ எவ்வளவு முக்கியம் னு நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணுமா என்ன? உனக்காக மொட்டை அடிக்கிறது என்ன தீக்குழியில் கூட நான் இறங்குவேன்.” என்றாள்.
“அப்படிச் சொல்லு ருக்குக்கா. லீலாக்கா உங்களுக்காக நாங்க என்ன செஞ்சாலும், நீங்க அதுக்கு தகுதியானவங்க தான். இளைச்ச மாதிரித் தெரியுறீங்களே. கேரளாவில் கூடமாட ஒத்தாசைக்கு ஆள் இல்லாமல் ரொம்பக் கஷ்டப்பட்டீங்களா?” கேட்ட கடைக்குட்டிக்கு இல்லை என்று தலையசைப்பில் பதில் சொன்னாள் லீலா.
“நீங்க எப்படியோ எங்க எல்லாரையும் விட்டுட்டு இத்தனை நாள் அங்க இருந்துட்டீங்க. ஆனா எங்களுக்கு தான் நீங்க இல்லாம கையும் ஓடல காலும் ஓடல.” தேவகி சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ஊர்மி, நாகா அறையில் இருந்து பலத்த சத்தம் கேட்டது.
“ஏய் வாயைத் திறந்து பதில் சொல்லேன். எப்பப் பார்த்தாலும் ஏதாவது லொட லொடன்னு பேசிக்கிட்டே இருப்பியே, இப்பப் பேசுடி.” நாகா கத்திக்கொண்டிருக்க, அதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல் இருந்தாள் அவள்.
“எதேச்சையாக் கவனிச்சதால் இவ்வளவு நாளா நீ பண்ணிக்கிட்டு இருந்த காரியம் தெரியவந்தது. இல்லாமப் போனா நீ சொல்லியே இருக்க மாட்ட இல்ல. என்னைப் பார்த்தா உனக்கு எப்படி டி தெரியுது.
நான் அவ்வளவு தூரம் படிச்சுப் படிச்சு சொல்லியும், நீ இன்னும் அதே நினைப்பில் தான் இருக்க இல்ல. கொழுப்பு டி உடம்பு முழுக்க கொழுப்பு மட்டும் தான்.
குட்டி போட்ட பூனை மாதிரி நம்மளையே சுத்தி சுத்தி வரானே, நாம என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டான்னு நினைச்சு தானே இத்தனை நாளா என்னை ஏமாத்திக்கிட்டு இருந்திருக்க.” நாகா தன் போக்கில் கத்திக்கொண்டிருக்க, சலிப்பாய் அவனைப் பார்த்தாள் ஊர்மி.
“நல்ல பொண்ணைத் தப்பா நினைச்சுட்டோமேன்னு வருத்தப்பட்டு, உன்னைக் கும்பாபிஷேகம் பண்ணி என்னோட மனசுங்கிற கோபுரத்துல உட்கார வைச்சேன் பார்த்தியா அதுக்கு நல்ல பலனைக் கொடுத்துட்ட. நம்ப வைச்சு ஏமாத்திட்டியே டி பாவி.
நினைக்க நினைக்க மனசு வலிக்கிது டி. எனக்கு இருக்கிற கோவத்துக்கு மனசில் இருக்கிற எல்லாத்தையும் வார்த்தையால சொன்னேன்னு வைச்சிக்க, ரோஷக்காரி நீ தூக்கில் தொங்கினாலும் தொங்கிடுவ.” ஆத்திரமாய் சொன்னான் நாகா.
“இன்னும் என்னென்ன சொல்லணுமோ, எல்லாத்தையும் சீக்கிரம் சொல்லிடுங்க. நல்லாக் காது குளிர அதைக் கேட்டுக்கிறேன். லீலா அக்காவும், மாமாவும் வர நேரமாகிடுச்சு. நான் அவங்களைப் போய் பார்க்கணும்.” என்று சொல்லி எரியும் தீயில் எண்ணையை ஊற்றினாள் அவள்.
“கட்டின புருஷன் எனக்கு இங்க பிரானன் போயிட்டு இருக்கு அதைவிட்டுட்டு உங்க அக்கா முக்கியமாகிட்டாங்களா?” என்க, “ப்ச் இப்ப என்ன, ஆமா எனக்கு எங்க அக்கா தான் முதலில். அதுக்கு அப்புறம் தான் அத்தான் ஆட்டுக்குட்டி எல்லாம்.” என்றாள்.
“புரிஞ்சு போச்சுடி, எனக்கு நல்லாப் புரிஞ்சு போச்சு.” என்றபடி கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து அவள் மேல் எறிந்தான் நாகா.
அதைத் தட்டிவிட்டபடி, “இப்ப என்ன புரிஞ்சது உங்களுக்கு. கண்டிப்பா நல்லதா ஏதும் புரிஞ்சிருக்காது. நல்லது புரிஞ்சிருந்தா ஏன் இப்படி வானத்துக்கும், பூமிக்கும் குதிச்சிக்கிட்டு இருக்கீங்க.
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியலங்க நான் இப்ப என்ன தப்பு பண்ணிட்டேன்னு இந்தக் கத்து கத்திக்கிட்டு இருக்கீங்க.” தானும் அவனுக்கு இணையாகக் கத்துகிறோம் என்பது புரியாமல் செய்து கொண்டிருந்தாள் அவள்.
“என்ன தப்புப் பண்ணியா? நீ பண்ணது துரோகம். அதுவும் சாதாரண துரோகம் இல்ல நம்பிக்கை துரோகம்.” பல்லைக் கடித்துக்கொண்டு பேசினான்.
“என்ன பேசுறோம் னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? புருஷனுக்குப் பொண்டாட்டி பண்ற நம்பிக்கை துரோகத்துக்கு என்ன அர்த்தம் னு உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? நான் பண்ண சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிய விஷயத்தோட கம்ப்பேர் பண்றீங்க.” கணவன் புரிந்துகொள்ள மறுக்கிறானே என்கிற கடுப்பில் பேசினாள் ஊர்மி.
“என்னைப் பொறுத்த வரைக்கும் இரண்டும் ஒன்னு தான்.” கோபத்துடன் நாகா சொல்ல, “உங்களைத் திருத்தவே முடியாது போங்க நான் வெளியே போறேன்.” என்றுவிட்டு தன்னைப் போல் இறங்கி நடக்கத் துவங்கினாள் அவள்.
“ஏய் நில்லுடி, நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ போய்க்கிட்டே இருந்தா என்ன அர்த்தம். நில்லுடின்னு சொல்றேன் இல்ல. எனக்கு இன்னைக்கு இரண்டில் ஒன்னு தெரிஞ்சே ஆகணும்.” என்றவன் தன்னால் நடக்க இருக்கும் ஆபத்தை உணராமல் ஊர்மியைப் பின்தொடர்ந்து சென்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன ஆபத்து … இப்போ எதுக்கு சினேக் பாபு கத்திட்டு இருக்கார் … என்ன பிரச்சனையா இருக்கும் …
இப்பதான் எல்லாம் நல்லா இருந்த மாதிரி இருந்தது… அதுக்குள்ள ஒரு பிரச்சனை…