Loading

அத்தியாயம் 44

      எதேச்சையாகத் திரும்பியவள் கணவனின் கோப முகத்தைக் கண்டு, “இது ஒரு சின்ன விஷயம். இதுக்குப் போய் எதுக்காக இத்தனை கோபம்.” கொஞ்சல் போல் கேட்டாள்.

     அதற்கு மயங்காமல், “உங்களுக்கு என்னோட எல்லா உணர்வுகளும் சாதாரணமாத் தானே போச்சு. புதுசாக் கல்யாணம் ஆன பொண்ணு செய்யக்கூடிய காரியமாங்க இது. முதலில் எந்தப் பொண்ணாச்சும் இப்படிச் செய்வாங்களா?” காட்டுக் கத்துக் கத்தினான் தெய்வா.

     “என்ன பேசுறீங்க நீங்க. இது வெறும் தலைமுடி. என் மனசை விட, என் உணர்வுகளை விட, என் அக்காவை விட இந்த முடியா பெருசு. இன்னும் நாலு மாசம் விட்டா முடி தன்னால் வளர்ந்திடப் போகுது.” ருக்குவின் வார்த்தைகளுக்கு சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை அவனால்.

     என்னென்னவோ வார்த்தைகள் வாய் வரை வந்தது தான். ஆனால் எதிரில் இருக்கும் மென்மையான மனம் கொண்ட மனைவி தாங்கிக்கொள்ள மாட்டாள் என்பதால் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தான்.

     “சரி இந்த ஒருமுறை விட்டுடுங்க. இனிமேல் மொட்டையடிக்கிறதா வேண்டுதல் வைக்க மாட்டேன். இந்த ஒருமுறை என்கூட கோவிலுக்கு வாங்க.” கணவனுக்காக இறங்கி வந்தது போல் பேசினாள் ருக்கு.

     “நான் ஒன்னும் தியாகி கிடையாது ருக்கு. என் பொண்டாட்டி நீங்க, எனக்குப் பிடிக்காத செயல்களைச் செய்யும் போது, அதில் குறுக்கே வராம விலகி நிற்கும் அளவு தான் என்கிட்ட பொறுமை இருக்கு. பல்லைக் கடிச்சுக்கிட்டு உங்ககூட நிற்க என்னால் முடியாது.

     நீங்க கண்டிப்பா மொட்டை அடிச்சு தான் ஆகனும் னா உங்க தங்கச்சியைக் கூட்டிட்டுப் போயிட்டு வாங்க. நான் வரமாட்டேன் வரமாட்டேன்.” என்றுவிட்டு இத்தோடு பேச்சு முடிந்ததாய் படுத்துக்கொண்டான் தெய்வா.

     “இவர் என்ன இப்படிப் பண்றார்.” தவிப்போடு அவனையே பார்த்துக்கொண்டிருந்த ருக்கு எப்படி உறங்கினாள் என்பதை அவளே அறியாள்.

     அடுத்த நாள் காலையில் ருக்கு எழுந்திரிக்கும் முன்னமே தெய்வா கிளம்பிச் சென்றிருந்தான். நாய்க்குட்டி போல் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அவள் கேட்கும் போது தன்னால் மறுக்க முடியாது. அதே சமயம் தான் இப்படி அவளைத் தலையில் வைத்து தாங்குவதால் தான், தன் மனதைப் புரிந்துகொள்ள மறுக்கிறாள். அதனால் இந்த முறை அவள் வழிக்குச் செல்லக்கூடாது.” என்று மனதோடு முடிவு செய்தவன் திட்டமிட்டே விரைவாக கிளம்பி இருந்தான்.

     சென்றுவிட்டானே தவிர, காலையில் இருந்து அவனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. மாலை வேலை முடிந்து வீடு வந்தவனுக்கு அறையை நோக்கிச் செல்ல கால்கள் வலுவிழந்தது.

     என்ன தான் அவள் தலைமுடி, அவள் உரிமை என்று மனம் கூப்பாடு போட்டாலும், மனைவியிடம் கணவனுக்கு என்று சில ஆசைகள் இருக்கத்தான் செய்யும். இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது.

     ருக்குவின் நீண்ட தலைமுடி மேல் தெய்வாவிற்கு எப்போதும் ஒரு கண் தான். அது இல்லாமல் மனைவியின் அழகு போய்விடாது தான். ஆனால் கண்டிப்பாக குறைந்து தானே போகும். புதிதாகத் திருமணம் முடித்த ஆணாக அவனுக்கும் சில ஆசைகள், கனவுகள், ஏக்கங்கள் இருந்தது. அது நிராசையாகிப் போன ஏக்கத்துடன் தடுமாறி அறைக்கு வந்து பார்க்க அங்கே ருக்கு இல்லை.

     “என்கிட்ட சொன்ன நேரப்படி இந்நேரம் வீட்டுக்கு வந்து இருக்கணுமே. ஆனா ஏன் ரூமில் இல்ல. ஒருவேளை என்னைப் பார்க்கத் தயக்கப்பட்டு மேலே எங்கேயும்  இருக்காங்களோ.” என்னும் நினைப்பில் திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கி இருந்த அறைக்குள் சென்று பார்த்தான். அங்கே தொடங்கி கிச்சன் வரை ஒருவரும் இருப்பது போல் தெரியவில்லை.

     நாகாவின் மனைவியோடு தானே செல்வதாய் ஏற்பாடு. அவள் வந்துவிட்டாளா பார்க்கலாம் என நினைத்து, தம்பியின் அறை வரை வந்துவிட்டவன் கதவைத் தட்டத் தயங்கினான். ஆனாலும் மனைவி மீதான அக்கறை அவனைத் தூண்டி விட்டது.

     “ஊர்மி வந்துட்டியா உனக்காக நான் எவ்வளவு நேரமா காத்திருக்கிறது.” என்ற வண்ணம் கதவைத் திறந்தான் நாகா.

    அண்ணன், தம்பி இருவரின் முகத்திலும் ஒரே சமயத்தில்  ஏமாற்றம் தலைதூக்க, “இப்போ எதுக்கு இங்க வந்த?” மனைவியிடம் காட்ட முடியாத சீற்றத்தை தமையனிடம் காட்டினான் நாகா.

     “காலையில் கோவிலுக்குப் போன ருக்கு இன்னும் வரல. அதான் உன்னோட வொய்ப்கிட்ட கேட்கலாம் னு வந்தேன்.” தன்மையாகத் தான் சொன்னான் தெய்வா.

     “உன் பொண்டாட்டியை என் ரூமில் மறைச்சு வைச்சுக்கிட்டு உன்கிட்ட விளையாட்டுக் காட்ட நான் ஆள் இல்ல. இங்கே இருந்து கிளம்பு. உன் முகத்தை பார்க்கவே கடுப்பா இருக்கு.” என்றான்.

     செல்லும் இடத்தைச் சொன்ன ஊர்மி, திரும்பி வரும் நேரத்தைச் சொல்லாமல் விட்டது கடுப்பைக் கிளப்பி இருந்தது அவனுக்கு. தான் அவளை இந்தளவு தேடுகிறோம், ஆனால் அவள் தன்னை ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை என்னும் ஆத்திரம், அவளை விடுத்து தமையனிடம் இப்படிப் பேச வைத்தது.

     “எத்தனை தடவை தோலை உரிச்சாலும் பாம்பு பாம்பு தான். அதை ஒரு நிமிஷத்துக்கு மறந்து இங்கே வந்தான் பாரு என்னைச் சொல்லணும்.” தலையில் அடித்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தான் தெய்வா.

     “ஆமா நான் நல்லபாம்பு, இவர் மட்டும் நல்ல மனுஷன். வந்துட்டான் பெரிய இவனாட்டம்.” புலம்பத்தான் முடிந்தது நாகாவால்.

     மனைவியைக் காணாமல் மனம் எல்லாம் என்னவோ போல் இருக்க, அப்போது தான் எழுந்து வந்த தந்தையிடம் விசாரித்தான் தெய்வா.

     “லீலாப் பொண்ணுக்கு இப்படி ஆனதில் இருந்து தூக்கமே இல்லடா. கூடவே நம்ம வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருத்தன் ஏறி குதிச்சு வந்து போய் இருப்பதை அப்படிச் சாதாரணமா விட்டுட முடியாது இல்லையா? சிசிடிவி வைக்க ஏற்பாடு நடந்தது. கூடுதல் வாட்ச்மேனுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தேன். இந்த வேலைகளில் நல்ல அலைச்சல்.

     இப்ப தான் நல்ல ஓய்வு கிடைச்சது. அதனால் படுத்ததும்  நல்லா அசந்து தூங்கிட்டேன். என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு எனக்கு ஒன்னும் தெரியாது. தேவகியும், தர்மாவும் வேற காலையிலே எங்கேயோ கிளம்பிப் போனாங்க. இன்னும் வரலன்னு நினைக்கிறேன். பேசாம நீ ஊர்மி கிட்ட கேட்டு பாரேன்.” சோர்வாகச் சொன்னார் வடிவேல்.

     “எதுக்காக இத்தனை வேலைகளை நீங்களே இழுத்துப் போட்டுப் பார்க்கிறீங்க. உங்க அருமை மகன் வீட்டில் நாள் முழுக்க வெட்டியா தானே இருக்கான். வேலையா வெட்டியா? இதைப் பார்க்கச் சொல்லலாம் இல்ல.” கடுப்பைக் காட்டினான் தெய்வா.

     “அவனைச் சொல்லலன்னா உனக்கு உறக்கம் வராதே. முதலில் என் மருகப் பொண்ணுங்க எங்கன்னு பாரு.” என மகனைத் திசை திருப்பி விட்டார் வடிவேல்.

     “நல்ல மருமக, செல்ல மருமக. அவங்களைச் சொல்வதற்கு முன்னால் உங்களைச் சொல்லணும். நல்ல பொண்ணு, குடும்பப் பொண்ணு, புருஷன் சொல்ல பேச்சு கேட்டு நடந்துப்பான்னு சொல்லி எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்க.

     ஆனா ருக்கு என் பேச்சைக் கேட்கவே மாட்றாங்க. கல்யாணம் ஆன இந்த கொஞ்ச நாளில் நானும், அவங்களும் சண்டை போட்டது தான் அதிகம். கல்யாண வாழ்க்கையை வெறுத்துடுவேனோன்னு பயமா இருக்கு.

     நான் சொல்ல சொல்லக் கேட்காம வேண்டுதலை நிறைவேத்துறேன்னு கோவிலுக்குப் போனாங்க சரி. போகும் போது போனையாவது எடுத்துட்டு போய் இருக்கணுமா இல்லையா. நான் ஒருத்தன் இங்க அவங்களை நினைச்சு வருத்தப்படுவேன்னு கொஞ்சம் கூட அக்கறையே இல்லை.” பள்ளியில் தோழர்களுடன் நடந்த சண்டையைப் பற்றி அப்பாவிடம் புகார் வாசிக்கும் குழந்தையைப் போலவே நடந்துகொண்டான் தெய்வா.

     மகனுக்கு மருமகள் மேல் இவ்வளவு பாசம், அவன் அவளை அதிகம் தேடுகிறான் என்று நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை குழந்தை போல் புகார் வாசிக்கும் தன் மகனைக் கண்டு சிரிப்பதா என்று தெரியவில்லை வடிவேலுவிற்கு.

     “மகனே தெய்வராசு, காணும் காணும் னு புலம்பிக்கிட்டு இருந்தியே, அந்தப்  பொண்டாட்டி இந்தப் பொண்ணாப் பாரு.” என்று வாசற்படியை நோக்கி கை நீட்டினார் வடிவேலு.

     மொட்டை அடித்த தலையில் சந்தனம் தடவி, நெற்றியில் திருநீறு, குங்குமம் சகிதம் பக்திப் பழமாக ருக்கு வந்து நின்றதைப் பார்த்ததும் சிரிப்பதா வேதனைப்படுவதா என்று தெரியவில்லை தெய்வாவிற்கு.

     “மாமா பிரசாதம் எடுத்துக்கோங்க.” என்றபடி வடிவேலுவின் அருகே வந்தாள் ருக்கு.

     “ஏம்மா போனது போன உன் போனை எடுத்துட்டு போய் இருக்கலாம் இல்ல. உன்னைக் காணாம ஆறடிக் குழந்தை ஒன்னு அல்லாடிக்கிட்டு இருக்கு.” கிண்டலில் இறங்கினார் தகப்பன். அவருக்கு ருக்குவிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. பெற்றவர்களுக்கு பிள்ளைகள் எப்படி இருந்தாலும் அழகு தானே.

     “கோவிலுக்குப் போகும் போது போன் எதுக்குன்னு நினைச்சு தான் மாமா எடுத்துட்டு போகல. அதோட இவ்வளவு நேரம் ஆகும் னு நாங்களே நினைக்கல. மொட்டையடிச்ச முடியை கேன்சர் நோயாளிகளுக்குத் தானம் பண்ணலாம் னு சொன்னாங்க. அதையும் கூடவே செய்து முடிச்சுட்டு வர இவ்வளவு நேரம் ஆகிடுச்சு.” தாமததிற்குக் காரணம் சொன்னவள் அதோடு சும்மா இருந்திருக்கலாம்.

     “அக்காவுக்காக வேண்டிக்கிட்டதை நிறைவேத்தினதுக்கு அப்புறம் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு.” என்க, “ருக்கு உங்களுக்குப் புருஷன்னு நான் ஒருத்தன் இருக்கேன், அது உங்க நினைவில் இருக்கா இல்லையா?” கோபமாகக் கேட்டான் தெய்வா.

     “ஏங்க தெரியாது, நீங்க நல்லா இருக்கணும், உங்க வேலையால உங்களோட உயிருக்கும், உடமைக்கும் எந்த  பாதிப்பும் வரக்கூடாது, நீங்களும் நானும் ரொம்ப வருஷம் சந்தோசமா வாழனும் னு நிறைய வேண்டுதல் வைச்சுட்டு வந்திருக்கேன்.

     எப்படி என்னோட வேண்டுதலை ஏத்துக்கிட்டு அக்காவைக் கடவுள் காப்பாத்தி கொடுத்தாரோ அதே மாதிரி இந்த வேண்டுதலும் பலிக்கும் னு நான் நம்புறேன்.” பெருமையாய் சொன்னவளைப் பாவமாகப் பார்த்தான் தெய்வா.

     கணவன், மனைவியின் நல்வாழ்வு என்பது கணவன் மனைவி கையில் தான் இருக்கிறது, கடவுள் கையில் இல்லை என்பதை இவளுக்கு எப்படிப் புரியவைப்பது என்கிற தவிப்பு தான் வந்தது. கூடுதலாக ருக்குவின் அந்தத் தோற்றத்தை அதற்கு மேலும் பார்க்க முடியவில்லை அவனால். அதனால் தங்கள் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான்.

     அவனை விநோதமாகப் பார்த்துக்கொண்டே தன்னால் அவன் பின்னால் வந்தாள் ருக்கு. “என்னங்க“ நான் என்று ஏதோ சொல்ல வந்த ருக்குவின் புஜங்களை இரண்டு கரத்தாலும் பற்றிக்கொண்டவன், “நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும் னா அதுக்கு நீங்க கோவில் குளத்தை சுத்துறதில் பிரயோஜனம் இல்லை. என்னைப் பாருங்க, என்கூட உட்கார்ந்து பேசுங்க. என் கூட கொஞ்ச நேரத்தை செலவு பண்ணுங்க. என்னைப் பத்தி கொஞ்சம் யோசிங்க. எப்ப பார்த்தாலும் அக்கா தங்கச்சின்னு.” கடுகடுப்பாய் சொன்னான்.

     “உங்க மனசு எனக்குப் புரியாம இல்ல. ஆனா இத்தனை நாள் அவங்க தான் எனக்கு எல்லாவுமா இருந்தாங்க. இப்ப திடீர்னு எப்படி மாறுறது. இத்தனை நாளா உங்களுக்கும் உங்க அண்ணன் தம்பிங்களுக்கும் ஆகல. எனக்காக நீங்க அவங்ககிட்ட அன்பா இருந்து தான் ஆகனும் னு சொன்னா அதை ஏத்துப்பீங்களா? என் மனசையும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும் இல்லையா.” லாஜிக்காக கேள்வி கேட்டாள் ருக்கு.

     “உங்களுக்குத் தான் புரியல ருக்கு. என்ன தான் தாயாப் பிள்ளையா பழகி இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் வாயும், வயிறும் வேற வேற தான். நீங்க இன்னும் குழந்தையாகவே இருக்கீங்க. அதனால் தான் கண்ணு முன்னாடி நடக்கிறது கூட உங்களுக்குப் புரிய மாட்டேங்கிது. நீங்க தான் அக்கா தங்கச்சிங்க முதலில் னு சொல்றீங்க.

     ஆனா ஒருத்தங்க என்ன ஆனாலும் பரவாயில்ல. நான் தான் பர்ஸ்ட் ஹனிமூன் போகனும், வீட்டுக்கு முதல் வாரிசு கொடுக்கணும் னு ஹாஸ்பிடலில் இருந்து சொல்லாமக் கொள்ளாம கிளம்பிப் போய்ட்டாங்க.

     இன்னொருத்தங்க அட்டை மாதிரி எப்ப பார்த்தாலும் புருஷன்காரன் பின்னாடியே சுத்திகிட்டு அவனை கைக்குள்ளே போட்டுக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

     இன்னொருத்தங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம் கல்யாணத்துக்கு முன்னாடியே கட்டிக்கப் போறவனை கைக்குள்ள போட்டுக்கிட்டாங்க. அப்படி என்ன இருக்குன்னு அந்த நல்லபாம்பு எல்லா உண்மையும் தெரிஞ்சதுக்கு அப்புறமும் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சானோ எனக்கு இப்பவரைக்கும் புரியல.” என்க, அடப்பாவி மனுஷா என் அக்கா தங்கச்சிங்களைப் பத்தி இப்படியான நினைப்பைத் தான் உனக்குள்ள வைச்சிருக்கியா? என்பது போல் பார்த்து வைத்தாள் ருக்கு.

     “மத்த மூணு பேரும் ரொம்பத் தெளிவா இருக்காங்க ருக்கு. புருஷன்காரனை கைக்குள்ள போட்டுக்கிட்டு அவன் கூடவும் நேரம் செலவு பண்ணி, கூடப்பிறந்தவங்க கூடவும் நேரம் செலவு பண்ணி, சாமர்த்தியமா வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா நீங்க மட்டும் தான் இப்பவும் அக்கா தங்கச்சிங்க தான் எல்லாமேன்னு நம்பி என்னை விட்டு ரொம்ப தூரம் போறீங்க.

     நான் உங்களை ரொம்பவே நேசிக்கிறேன். அதனால் தானோ என்னவோ நீங்க இத்தனை செய்த பின்னாலும் என்னால் உங்களை வெறுக்க முடியல. ஆனா எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு ருக்கு.” என்க, இப்போது நிஜமாகவே தெய்வாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது ருக்குவிற்கு.

     “உங்களுக்கு நான் இரண்டாம் பட்சம் என்பதை என்னால ஏத்துக்கவே முடியல. கொஞ்சம் கொஞ்சமா நமக்கு நடுவில் இடைவெளி உருவாகிக்கிட்டே இருக்கிற மாதிரி தோணுது. நீங்க உங்களைக் கொஞ்சம் மாத்திக்கணும் ருக்கு. நான் எழுபத்தைந்து சதவிகிதம் நம்ம உறவை இழுத்துப்பிடிச்சா மீதம் இருபத்தைந்து சதவிகிதத்தை நீங்க தான் இழுத்துப் பிடிச்சாகணும்.

     இப்படியே இருந்தீங்கன்னா அவங்க மூணு பேரும் நல்லா தான் இருப்பாங்க. ஆனா நீங்க உங்க வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்பீங்க. அதுல கஷ்டப்பட போறது நீங்க மட்டும் இல்ல, நானும் தான். கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்க முயற்சி பண்ணுங்க.” என்று விட்டு வேகமாக சென்றுவிட்டான் தெய்வா.

     தெய்வா கோபமாகத் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பியதைப் பார்த்ததும் கதவைத் தட்டிவிட்டு அந்த அறைக்குள் வந்தாள் ஊர்மி. ருக்கு கணவன் சொன்னதையே யோசித்துக்கொண்டிருக்க, “அக்கா நீ எதுவும் கவலைப் படாதே மாமா கொஞ்சம் கோவமா இருக்காரு. ஆனா அவரு கேட்கிறதில் எந்தத் தப்பும் இல்லை. அவரு மேல வீணா கோபப்படாதே.” என்றாள்.

     “உனக்கு எப்படித் தெரியும்” என்க, “கொஞ்சம் வெளியே சத்தம் கேட்டது.” தடுமாற்றத்துடன் சொன்னாள் ஊர்மி.

     ருக்கு அமைதியாக இருக்க, “நீ மாமா கிட்ட பேசு. உனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும் என்பதைச் சொல்லாலும், செயலாலும் நிரூபிச்சிக் கிட்டே இரு. மாமா கொஞ்சம் கொஞ்சமா உன் பக்கம் சாய ஆரம்பிப்பார். அப்புறம் என்ன ஒரே ரொமான்ஸ் தான்.” கிண்டலாய் சொல்ல, மற்றது மறந்து சிரித்தாள் ருக்கு.

     இரவு உணவு முடித்து சாய்வாக நாற்காலியில் அமர்ந்திருந்தார் வடிவேல். “செல்வா இந்தக் கல்யாணம் பேசின நாளில் இருந்து ஒருமாதிரி ஆர்வமே இல்லாத மாதிரி இருக்கான்னு ஊர்மி பொண்ணு ரொம்ப வருத்தப்பட்டுச்சு. அவன் இந்த அளவு இறங்கி வந்திருக்கான்னா உண்மையிலே இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தான்.

     இப்படியே மலை மேல இருக்கிற உங்களோட மத்த பசங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்துட்டா நல்லா இருக்கும்.” அவரின் கால்களை இதமாகப் பிடித்துவிட்டபடிச் சொன்னான் அரசு.

     “என் பசங்க பொண்டாட்டிங்க விஷயத்துல இறங்கி வருவது நல்ல விஷயம் தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அது அவங்களுக்கு நடுவிலும் நடக்கணும் இல்ல. அவங்க நாலு பேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் இறங்கி வரணும். அது எப்ப நடக்கும் னு தான் நான் ரொம்ப ஆர்வமா காத்துகிட்டு இருக்கேன்.” பெருமூச்சுவிட்டபடிச் சொன்னார்.

     “மிஸ்டர் வடிவேலு, எப்பவும் மாடி ஏறும்போது ஒவ்வொரு படியாத்தான் ஏற முடியும். உங்க அவசரத்துக்கு இரண்டு இரண்டு படியா தாண்ட முயற்சி பண்ணா கால் உடைஞ்சு ஹாஸ்பிடல்ல தான் கிடப்போம்.” சிரித்தான் அரசு.

     “டேய் அறிவு இல்லாதவனே எதைச் சொல்றதா இருந்தாலும் தெளிவா புரியிற மாதிரி சொல்லு.” என்க, “ம்க்கும் நான் சொல்றதே புரியல. இந்த லட்சணத்துல இவரு என்னை அறிவில்லாதவன்னு சொல்றாரு. என்ன கொடுமைடா இது.” உள்ளுக்குள் நினைத்தவனாகத் தொடர்ந்தான் அவன்.

     “அங்கிள் முதல்ல உங்க பசங்க பொண்டாட்டிங்க விஷயத்துல இறங்கி வரட்டும். அதாவது இப்படி ஒருத்தருக்காகத் தான் இறங்கிவருவது தப்பில்லைன்னு உணரட்டும். அது நடந்தாலே தன்னால் கூடப்பிறந்தவங்களுக்காகவும் இறங்கி வருவாங்க. அந்தக் காலமும், நேரமும் ரொம்ப சீக்கிரமே வரும். நம்புவோம் நம்பிக்கை தான் வாழ்க்கை.” வழக்கம் போல் வடிவேல் சோர்வடையாமல் இருக்கப் பேசினான் அரசு.

     “நீ சொல்ற மாதிரி சீக்கிரமே நடந்துச்சுன்னு வைச்சுக்கோயேன், ஜோசியம் சொன்ன உன் வாய் பிளந்து போகுற அளவு தங்கமும், வைரமும் நான் கொட்டிக் கொடுக்கிறேன் உனக்கு.” பெருமையாய் சொன்னார்.

     “அடக்கடவுளே இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா, இதே மாதிரி நாலு நல்ல வார்த்தை சொல்லி இந்நேரம் கோயம்புத்தூரில் பாதி இடத்தை வளைத்துப் போட்டு இருப்பேனே.” நகைத்தான் அரசு.

     “என்ன சொல்லு அறிவில்லாதவனே, அது என்னமோ தெரியல உன் கிட்ட பேசினா மனசுல இருக்கிற எல்லா கஷ்டமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிடுது.” சிலாகித்துச் சொன்னார் வடிவேல்.

     “அதுதான் அரசுவோட ஸ்பெஷல்.” காலரைத் தூக்கிவிட்டுச் சொன்ன அரசுவிடம் திடீர் மௌனம். முகத்தில் சின்ன மாறுதல், அதற்கான காரணம் என்பது அவன் மட்டுமே அறிவான்.

     தங்கை சொல்லிச் சென்ற சமாதானங்களையே நினைத்துக்கொண்டிருந்த ருக்குவிற்குத் தான் செய்யும் தவறு என்ன என்பதே புரியவில்லை. எப்படியோசித்தாலும் தன் பக்கம் பெரிதாகத் தவறு இல்லாதது போல் தான் இருந்தது அவளுக்கு.

     அவள் அதையே நினைத்துக்கொண்டிருக்கும் போது, கோபத்தைத் தணிப்பதற்காக வெளியே சென்ற தெய்வா திரும்ப வந்திருந்தான்.

     “என்ன ருக்கு அடுத்து யாருக்கு வேண்டுதல் வைக்கலாம் னு யோசனையா?” நக்கலாகக் கேட்டான்.

     “என்னங்க நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா. நான் எப்பவாச்சும் உங்களைப் பத்தியோ இல்ல உங்க அண்ணன், தம்பி அப்பாவைப் பத்தியோ உங்ககிட்டேயோ இல்லை வெளியிலோ தப்பா சொல்லி இருக்கேனா. நீங்க மட்டும் ஏன் எப்பவுமே என் அக்கா, தங்கச்சிங்களைப் பத்தி குறை சொல்லிகிட்டே இருக்கீங்க.” கொதித்து எழுந்தாள் அவள்.

     “எனக்கு ஒரு விஷயம் தெரியணும், என்னைப் பத்தி நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ருக்கு.” நேரடியாகவே கேட்டுவிட்டான்.

     “ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க. நான் உங்கள ரொம்ப உயர்வா நினைச்சுக்கிட்டு இருக்கேன். உங்களை மாதிரி ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு கொடுத்தற்காக கடவுளுக்கு நன்றி சொல்லாம என் நாள் முடியாது தெரியுமா? நீங்க இப்படி எல்லாம் பேசுறதை தான் என்னால ஏத்துக்க முடியல.” என்றாள்.

     “அடப் போங்க ருக்கு இப்ப மட்டும் என்னவோ என் மேல ரொம்ப பாசம் இருக்குற மாதிரி பேசுவீங்க. உங்க அக்கா தங்கச்சிங்களைப் பார்த்துட்டா உடனே என்ன மறந்துடுறீங்க. நீங்க அவங்களை மறந்துட்டு என்னைப் பத்தி யோசிப்பீங்கன்னு நம்பி எனக்கு வெறுத்து போயிடுச்சு.

     இந்த உலகத்தில் உங்களுக்கு என்னை மட்டும் தான் பிடிக்கணும், நமக்குப் பிறக்கப் போற குழந்தைகங்களுக்கு கூட எனக்கு அடுத்த இடம் தான்னு பேராசையோடு இருந்தவன் நான். ஆனா எல்லாம் கனவா போயிடுச்சு. கனவுகள் கலையும் வலி அதிகம் ருக்கு.

     எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போதைக்கு என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க. நான் போய் தூங்குறேன்.” என்றுவிட்டு தெய்வா சென்றுவிட, என்ன செய்வது என்று புரியாமல் ருக்கு அமைதியாய் நின்று கொண்டிருந்தாள்.

     அடுத்த நாள் காலை கையில் ஆவி பறக்க சூடான காபியோடு வந்து தெய்வாவை எழுப்பினாள் ருக்கு. தெய்வா எழுந்து பெட் காபி குடித்துக் கொண்டிருக்க, “என்னங்க நம்ம ரெண்டு பேரோட லக்கேஜையும் நான் பேக் பண்ணி வைச்சிட்டேன். நீங்க அன்னைக்கு கேட்டீங்களே ஹனிமூன் போகலாமான்னு, இப்ப போகலாமா?” என்க, குடித்துக்கொண்டிருந்த காஃபி தலைக்கு ஏறியது தெய்வாவிற்கு.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
13
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஓஹோ ஒவ்வொருத்தரா ஹனிமூன் போறாங்க போல … இதெல்லாம் உண்மையா கனவா தெய்வா … நல்லா சண்டை போடுறீங்க தெய்வா வும்… நாகா வும்…