Loading

அத்தியாயம் 43

     “என்னங்க நீங்க எப்ப வந்தீங்க. வந்ததும் என்னை எழுப்பி இருக்கலாமே.” கண்ணைத் திறந்ததும் கண்ணுக்கு முன் நின்றுகொண்டிருந்த கண்ணாளனைப் பார்த்து கேட்டாள் லீலா.

     “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன். இப்போ எப்படி இருக்கு லீலா, உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?” அவள் விழிகளை விரித்துப் பார்த்தபடிக் கேட்டான் செல்வா.

     “உடம்பு கொஞ்சம் டயர்டா இருக்கு, அதைத் தவிர வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்க, “டயாலிசிஸ் பண்ணி இருக்காங்க இல்ல அப்படித்தான் இருக்கும். இந்த ஜூஸ் குடிங்க கொஞ்சம் தெம்பா இருக்கும்.” என்றவாறு ஆரஞ்சு ஜூஸை கொடுத்தான்.

     அதைக் குடித்து முடித்ததும், என்ன நடந்தது என்று அவன் இன்னமும் கேட்காமல் இருப்பதால் தானே சொல்லிவிடுவது சிறந்தது என்கிற முடிவெடுத்து, “என்னங்க நேத்து நைட்டு.” என்று ஆரம்பிக்க, அவள் இதழ்களில் விரல் வைத்து பேசவிடாமல் செய்தான் செல்வா.

     அவன் அருகாமையில் அவள் தன்னால் அமைதியடைய, “நடந்தது என்னன்னு எனக்குத் தெரியும். ஆனா அதைப் பத்தி எதுவும் இப்போ யோசிக்க வேண்டாம். நான் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கேன். அவங்க பாத்துப்பாங்க நீங்க ரெஸ்ட் எடுங்க.” இவ்வளவு தான் விஷயம் என்பதோடு முடித்துக்கொண்டான்.

     அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியான லீலா, அதன் பின்னே ஞாபகம் வந்தவளாய், “ருக்கு, ஊர்மி, தேவகி மூணு பேரும் வீட்டுக்கு போய்ட்டாங்களா?” என்றாள்.

     “அவங்களை நான் தான் வீட்டுக்குப் போகச் சொன்னேன். இன்னைக்கு நைட் நானே உங்க கூட இருக்கலாம் னு நினைச்சேன். நீங்க என்ன சொல்றீங்க நான் இருக்கலாமா, இல்ல உங்க தங்கச்சிங்க தான் வேணுமா. எதுவா இருந்தாலும் தயங்காமச் சொல்லிடுங்க, நான் அவங்களை வர சொல்லிடுறேன்.” என்றான்.

     அவன் முகத்தில் இருந்த புரியாத உணர்வுகளைப் பார்த்ததும் என்னவோ சரியில்லை என்பதை உணர்ந்தவளாக, “அவங்க காலையில் இருந்து ரொம்ப டென்ஷனா இருந்திருப்பாங்க. வீட்டுக்குப் போனதே நல்லது தான். நீங்களே என் கூட இருங்க.” என்க, அதைக் கேட்ட செல்வாவின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

     இதற்குத் தான் இவ்வளவா என்று கணவனைப் புரிந்துகொண்ட லீலாவுக்குச் சின்னதாய் புன்னகை. மருந்தின் வீரியத்தில் சற்று நேரத்தில் லீலா மீண்டும் உறங்கிவிட செல்வா மட்டும் கொட்ட கொட்ட விழித்து இருந்தான். அவன் வந்த போது, பார்த்த காட்சியை இன்னமும் அவனால் மறக்க முடியவில்லை.

     தன் மற்ற மருமகள்களை உணவருந்த கட்டாயப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றிருந்தார் வடிவேல். அரசு காவலுக்கு லீலாவின் அறைக்கு வெளியே காத்திருந்தான். அந்த நேரம் ஒரு பெரியவர் நடக்க முடியாமல் நடந்து வருவது போல் தெரிய, அவரை அவர் அறையில் விட்டு வருவதற்காக அவன் நகர்ந்த குறுகிய வேளையில் நடந்திருந்தது அந்தச் சம்பவம்.

     லீலாவைக் கொல்வதற்கு கத்தியுடன் தயாராக நின்றிருந்தவன் எதிர்பாராமல் அங்கு வந்த செல்வாவைப் பார்த்ததும் பதறியவனாய் அவனைத் தள்ளி விட்டு வெளியே ஓடிவிட்டான்.

    வடிவேல் முதற்கொண்டு அனைவரும் நடந்த கொலை முயற்சி செல்வாவிற்கானது என்று நினைத்துக் கொண்டிருக்க, உண்மை வேறு என்று செல்வாவிற்கு மட்டுமே தெரிந்திருந்தது.

     லீலாவைக் கொலை செய்யும் அளவு பகை கொண்டவர் யாராக இருக்க முடியும். இதை யாரிடமாவது சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று தனக்குள் தானே யோசித்துக் கொண்டிருந்தான் செல்வா.

     ராதா இல்லத்தில், “ஊர்மி உங்க அக்கா என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க. எல்லோரும் இருக்கும் போது, கொஞ்சம் கூட யோசிக்காம உன்னைப் பட்டுனு பேசுறாங்க. கேட்டுக்கிட்டு நீயும் சும்மா இருக்க. எனக்கு வந்த கோவத்துக்கு அப்பவே அவங்களை நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டு இருப்பேன். நீ வருத்தப்படுவியோன்னு நினைச்சு தான் அமைதியா இருந்திட்டேன்.” என்றான் நாகா.

     அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள், “என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நீங்க அமைதியா இருந்து இருக்கீங்க. உண்மையில் இது ரொம்பப் பெரிய விஷயம். அதுக்காக உங்களுக்கு ரொம்பப் பெரிய நன்றி.

     எனக்காக இப்பவும், எப்பவும் இதே மாதிரி கொஞ்சம் அமைதியாவே இருங்க. மலைபோல பிரச்சனை வந்தாலும் பனி போல ஊதித் தள்ளிடுவா இந்த ஊர்மிளா.” இல்லாத காலரைத் தூக்கிவிட்டுச் சொன்ன மனைவியை முறைத்தான் நாகா.

     “அக்கா, தங்கச்சிங்கன்னு இருந்தா சண்டை சச்சரவுகள் வருவதெல்லாம் சகஜம் தான். அவங்ககிட்ட விட்டுக்கொடுத்துப் போய் பழக்கம் இருந்ததால் தான், இத்தனைக்குப் பிறகும் நான் உங்களோட இருக்கேன். இல்லன்னா கல்யாணம் ஆன அன்னைக்கு நைட் இறங்கின தாலி மறுபடி என் கழுத்தில் ஏறி இருக்காது. உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்துப் போவது தப்பில்லை.” பாடம் எடுத்த மனைவியை முறைத்தபடி,

     “அப்ப ஒன்னு பண்ணு, நாளையில் இருந்து உனக்கும் எனக்கும் சாப்பாட்டில் உப்பு, காரம் எதுவும் போடாத.” கடுப்பாய் சொன்னான்.

     “அப்படியா சொல்றீங்க. நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். இன்னிக்கு ராத்திரி மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கோங்க. நாளைக்கு காலையில் இருந்து பத்தியச் சாப்பாடு செஞ்சிடுறேன்.” என்றாள்.

     “என்ன கிண்டலா” நாகா முறைக்க, “நீங்க தான அடிக்கடிச் சொல்லுவீங்க நான் பத்தினி தெய்வம் னு. ஒரு பத்தினி தெய்வம் என்ன செய்யணுமோ அதைத்தான் நானும் செய்யுறேன்.

     புருஷன் சொல்பேச்சு கேட்டு நடக்கிறது தான் நல்ல பொண்டாட்டிக்கு அழகு. நான் உங்க பேச்சைக் கேட்டே நடந்துக்கிறேன். வாங்க சாப்பிட போகலாம்.” என்றவள் அவன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காத வண்ணம், அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு டைனிங்ஹால் வந்து சேர்ந்தாள்.

     இன்னொரு அறையில், “என்னால் தான் இன்னைக்கு நீங்க உங்க இன்டர்வியூவை அட்டென்ட் பண்ண முடியல. நீங்க மட்டும் நேரத்துக்குப் போய் இருந்தா அந்த வேலை உங்களுக்குக் கட்டாயம் கிடைச்சிருக்கும். நீங்க பார்த்துக்கிடட்டு இருந்த நல்ல வேலை போனதும் என்னால தான், இப்ப கிடைக்க இருந்த நல்ல வேலை போனதும் என்னால தான்.

     எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஒரு பொண்டாட்டியானவ புருஷனோட வாழ்க்கைக்குள்ள வரும் போது அதிர்ஷ்டத்தையும் சேர்த்து கொண்டு வரனும். ஆனா எனக்கு அப்படி ஒரு பாக்கியம் கிடைக்கல.

     நான் உங்க வாழ்க்கையில் வந்த நேரம் சரியில்லையோ என்னவோ. அதனால் தான் உங்களுக்கு இப்படி அடுத்தடுத்து அடி விழுது.” காலையில் இருந்து அக்காவைத் தவிர எதுவும் நினைவில் இல்லாத தேவகிக்கு, வீடு வந்ததும் கணவன் தவறவிட்ட வாய்ப்பு கண்முன் வர, தன் மனவருத்தத்தைக் கணவனிடம் கொட்டினாள்.

     “தேவகி நிமிர்ந்து என்னைப் பாருங்க. நடந்த எதுக்கும் நீங்க பொறுப்பு ஆக முடியாது. கண் முன்னாடி ஒருத்தங்க கஷ்டத்தில் இருக்கும் போது, எப்படியும் போகட்டும் னு என் வேலையைப் பார்த்துட்டுப் போக, என்னால் முடியாது.

     அதோட இந்த அதிர்ஷ்டம் அது இது எதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம நினைச்சது நமக்குக் கிடைக்கலன்னா அதைவிட நல்லதா ஏதோ ஒன்னு கிடைக்கப் போகுதுன்னு அர்த்தம். இந்த வேலை இல்லன்னா, இன்னொரு வேலை. நான் நல்லா வருவேன் தேவகி. என்னோட சேர்த்து நீங்களும் நல்லா வருவீங்க.

     நாம ஒன்னா சேர்ந்து போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். அதனால இனி இப்படியெல்லாம் பேசாதீங்க.” தர்மா சொல்ல அவளும் ஒப்புக்கொண்டாள்.

     அதே நேரம் கணவன் மனைவி இருவரும் தவறவிட்ட நேர்முகத்தேர்வை மறுநாள் வந்து பார்க்கும் படி குறுஞ்செய்தி வர நிம்மதியோடு அதைத் தேவகியிடம் காட்டினான் தர்மா. அவன் ஒருவனுக்கு வேலை என்றால், எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் தான். ஆனால் தான் வேலை செய்யும் இடத்திலேயே மனைவி படித்தால் நன்றாக இருக்கும் என்பதால் தான் இந்த நேர்முகத்தேர்வு ரத்தானதை நினைத்து சற்றே வருத்தப்பட்டான். அதற்கும் இப்போது அவசியமில்லை என்றானதும் தன்னால் நிம்மதி வந்தது அவனிடத்தில்.

     அடுத்த அறையில் எண்ணெயில் காயும் மிளகாய் போல காந்தல் அறை முழுவதும் பரவிக் கிடந்தது. “என்ன ருக்கு பேசுறீங்க, மொட்டை அடிக்கப் போறீங்களா? இது என்ன சின்னப்பிள்ளைத் தனமா. எத்தனையோ வேண்டுதல் இருக்கும் போது எதுக்காக இப்படி ஒரு வேண்டுதல் வைச்சீங்க. நமக்குக் கல்யாணம் ஆகி இன்னும் பத்து நாள் கூட ஆகல அது நினைவில் இருக்கா இல்லையா?” கடும் கோபத்தில் கேட்டான் தெய்வா.

     “இப்படியெல்லாம் பேசாதீங்க தெய்வக்குத்தம் ஆகிடப் போகுது. நான் இப்படி ஒரு வேண்டுதல் வைச்சதால தான் அக்கா நல்லபடியா பிழைச்சு வந்தாங்க.” ருக்குவின் பிதற்றலைக் கேட்க கட்டுப்படுத்த முடியாத அளவு கோபம் தலைக்கேறியது அவனுக்கு.

     “அத்தனை டாக்டரால முடியாததை உங்க தலைமுடி தான் செஞ்சதா, என்னவோ பண்ணுங்க. நீங்க பண்ற எதுவும் எனக்குப் பிடிக்கல.” என்றுவிட்டு கோவமாகப் படுத்துக்கொண்டான்.

     அடுத்த நாள் காலையில் அக்காவைப் பார்க்கவென்று கிளம்பிய தங்கைகளை, “என் மனைவியை நான் பார்த்துக்கிறேன்.” என்கிற செல்வாவின் வார்த்தைகள் கட்டுப்படுத்தி வைத்தது.

     வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லாமல் கண்ணின் இமையாக மனைவியைக் கவனித்துக்கொண்டான் செல்வா. லீலாவுக்கு அன்பைக் கொடுத்து தான் பழக்கம். அன்பைப் பெறுவதிலும் தனிசுகம் இருக்கிறது என்பதை அன்றைய நாளில் புரிந்துகொண்டாள்.

     அன்றைய இரவில் தன் அறையில் நிம்மதியாய் படுத்திருந்த வடிவேல், மூத்த மகன் அலைபேசியில் அழைத்துச் சொன்ன விஷயத்தைக் கேட்டு, இந்தப் பசங்க என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டானுங்க டா என்று மனதிற்குள் புலம்பியவாறு எழுந்து அமர்ந்தார்.

     “லீலாவுக்கு இன்னமும் உடம்பு சரியாகல டா. இப்ப போய் அவளைக் கேரளாவுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்ற. ஏற்கனவே ஒருநாள் முழுக்க இங்க இருந்து யாரையும் அங்க வரவிடாமப் பண்ணிட்ட. இப்ப இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்க.” அதிருப்தியுடன் கேட்டார் வடிவேல்.

     “இல்லப்பா கொஞ்ச நாள் மாத்து இடத்துல இருக்கிறது நல்லதுன்னு தோணுது. நம்மைச் சுத்தி இருக்கிறவங்களில் யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்கன்னு தெரியாதப்ப நாம தான் கொஞ்சம் பத்திரமா இருக்கணும்.

     லீலாவுக்கு எதுவும் ஆகிடக் கூடாது. அதுக்கு தான் நான் கொஞ்ச நாள் வேற எங்கேயாவது இருக்கலாம் னு சொல்றேன்.” உறுதியாகச் சொன்னான் மூத்தவன்.

     “லீலாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோ டா.” இன்னமும் அவருக்கு இதில் விருப்பம் இல்லை தான்.

     “அவங்களை நான் சமாளிச்சுக்கிறேன். நீங்க அவங்க தங்கச்சிங்களை சமாளிச்சுக்கோங்க. அநேகமா நாங்க இங்க இருந்தே கேரளாவுக்கு கிளம்பிடுவோம்.” என்றான் செல்வா.

     “என்னென்னவோ சொல்ற, என்னென்னவோ பண்ற. நீங்க இரண்டு பேரும் பாதுகாப்பா இருக்கணும். அதுதான் முக்கியமான விஷயம். நான் மத்த பொண்ணுங்களைச் சமாளிக்க முயற்சி பண்றேன்.” என்று அரை மனதாக ஒப்புக்கொண்டார் வடிவேலு.

     பெரிதாக நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் தான். ஆனால் விஷயத்தைச் சொன்ன போதோ, “நீங்க இப்படிப் பண்ணி இருக்க கூடாது மாமா. செல்வா மாமா ஆயிரம் சொல்லலாம், அதுக்காக அவரையும் லீலா அக்காவையும் வெளியூருக்கு அனுப்பி வைச்சிடுவீங்களா. ஒரு முழுநாள் நாங்க அக்காவைப் பார்க்கவே இல்லை. இப்ப இப்படி ஒரு விஷயத்தைச்  சொல்றீங்க.

     போற இடத்தில் அக்கா உயிருக்கோ இல்ல மாமா உயிருக்கோ ஏதாவது பிரச்சனை வந்தா காப்பாத்துறதுக்கு கூட ஆள் இருக்க மாட்டாங்க. நீங்க அவங்களைப் போகவிட்டு இருக்கக்கூடாது மாமா.” விரக்தியாய் சொன்னாள் ஊர்மி. அவள் அருகில் மற்றவர்களும் நின்று இருந்தார்கள் தான். பெண்கள் இருவருக்கும் ஊர்மியின் கருத்து தான், ஆண்களோ யாருக்கு வந்த விருந்தோ என்று இருந்தார்கள்.

     “நான் என்னம்மா பண்றது உங்க செல்வா மாமா ஒத்த காலில் நின்னு நினைச்சதைச் சாதிச்சிக்கிட்டான். சரி பாதுகாப்புக்குப் பாதுகாப்பும் ஆச்சு, புதுசாக் கல்யாணம் ஆனவங்க தனியாய் இருந்த மாதிரியும் ஆச்சுன்னு தான் நான் அதுக்கு ஒத்துக்கிட்டேன்.” வடிவேலு பாவமாய் சொல்ல, புதுமணத்தம்பிகளுக்கான தனிமை என்று சொன்னதைத் தாண்டி ஊர்மியால் எதுவும் பேச முடியவில்லை.

     “ஊர்மி நாமளும் எங்கேயாச்சும் ஹனிமூன் போலாமா?” சாப்பிட்டு அறைக்கு வந்த பின்னர் ஆசையாய் கேட்டான் நாகா.

     “நம்ம வீடு இருக்கிற நிலைமையில ஹனிமூன் ஒன்றுதான் கேடு.” சலித்தாள் ஊர்மி.

     “பாதிக்கப்பட்ட உங்க அக்காவே நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு ஜாலியா ஹனிமூன் கிளம்பிப் போயிட்டாங்க. ஆனா நீ வீட்டு நிலைமை, நாட்டு நிலைமைன்னு கடுப்பேத்துற.   உனக்கு ஹனிமூன் வருவதற்கு இஷ்டம் இல்லையா, இல்ல என் கூட வருவதற்கு இஷ்டம் இல்லையா?” தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. தன்னைப் போல் சொல்லி இருந்தான்.

     கையில் இருந்த தலையணையைத் தூக்கிப் பிடித்தபடி, “ஏய் ஸ்நேக் பாபு, இன்னொரு தடவை இந்த மாதிரி எதாவது எடக்கு மடக்கா பேசிக்கிட்டு இருந்தன்னு வைச்சிக்கோயேன் விளக்குமாறு பிஞ்சிடும் பிஞ்சு.” கோலி குண்டு கண்களை வைத்து மிரட்டினாள்.

     “அதையெல்லாம் எதுக்குமா பிச்சுகிட்டு, அது பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும். அப்படியே இருந்தா தான் அது நல்லா இருக்கும்.” சிரித்தபடியே மனைவியைத் தன்னை நோக்கி இழுத்தான் நாகா.

     இரவு படுக்க வந்த தெய்வாவை, “என்னங்க கோவிலுக்கு நீங்க, நான் இரண்டு பேர் மட்டும் போயிட்டு வந்துடலாமா? இல்ல எல்லோரையும் கூட்டிட்டுப் போலாமா?” ஏற்கனவே கடுப்பில் இருந்தவனை இன்னும் கடுப்பேற்றும் விதமாய் கேட்டாள் ருக்கு.

     “அப்ப நீங்க உங்க முடிவை மாத்திக்கவே மாட்டீங்க இல்ல.” தனக்கு மனைவியாய் வந்தவள் இப்படியா இருக்க வேண்டும் என்கிற ஆற்றாமை தீரவில்லை தெய்வாவிற்கு. நாளை தனக்கு ஏதாவது என்றாலும் இவள் இப்படித்தான் துடிப்பாள் என்பதை அந்த நொடி நினைத்துப் பார்க்கவில்லை அவன்.

     “நான்தான் நேத்தே சொன்னேனே. இது சாமி விவகாரம். தள்ளிப் போட போட நமக்குத் தான் ஆபத்து. நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.” என்றாள் ருக்கு கெஞ்சுதலாய்.

     “நீங்க எப்போ என் சொல்லக் கேட்டு நடந்து இருக்கீங்க இப்ப கேட்கிறதுக்கு. நான் எல்லாம் எங்கேயும் வரமாட்டேன். என்னால அந்தக் காட்சியை கண் கொண்டு பார்க்க முடியாது. நீங்க உங்க தங்கச்சிங்க இரண்டு பேரையும் கூட்டிட்டு போயிட்டு வாங்க. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன், எனக்குப் பிடிக்காததையா பார்த்து பார்த்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க. என் பொறுமை எத்தனை நாள் தாங்கும் னு தெரியாது.” கடுப்போடு சொல்லிவிட்டு நகர்ந்தான்.

     “தேவகிக்கு நாளைக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. அவளும் அவ வீட்டுக்காரரும் காலையிலேயே கிளம்பிப் போயிடுவாங்க. ஊர்மியும், நானும் மட்டும் எப்படிங்க தனியாப் போயிட்டு வர முடியும். ப்ளீஸ் நீங்களும் கூட வாங்க. எனக்குத் தானே மொட்டை, உங்களுக்கா மொட்டை. எதுக்காக இப்படி பண்றீங்க.” தன்போக்கில் பேசிக்கொண்டே போனவள் கணவனின் கோபமுகத்தைக் கவனிக்கவில்லை.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ருக்குவும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகலாம் … ருக்கு பண்றது கொஞ்சம் ஓவர் தான் … ஸ்னேக் பாபு இப்படி மாறிட்டானே … விளக்குமாறு பிஞ்சிடுமா 😜😜😜😜 பாம்பு பொட்டி பாம்பா மாறிடுச்சே …

    தர்மா தான் குட் பாய் … செல்வா எதுக்கு இப்போ கேரளா போறான் …