
அத்தியாயம் 40
மொபைல் சத்தத்தில் மெதுவாகக் கண்களைப் பிரித்து, சோம்பல் முறித்தான் நாகா. சற்று தொலைவில் அவனுக்கு முதுகுகாட்டிப் படுத்திருந்த மனைவி ஊர்மிளையைப் பார்த்ததும் வெட்கப்புன்னகை வந்து முகம் சிவந்தான் ஆடவன்.
அவனுக்கு முற்றிலும் எதிர்பதமாக பல வித யோசனைகளுடன் உறக்கமற்றுக் கிடந்தாள் ஊர்மி. “நான் இத்தனை பலவீனமானவளா? இவன் வந்து கேட்டதும், பெயரளவில் கூட முடியாதுன்னு சொல்லாம உடனே ஒத்துக்கிட்டேனே. அவன் சொன்ன அத்தனைக்கும் ஒத்துப் போனேனே. அவனுக்காகத் தான் ஒத்துக்கிட்டேனா இல்லை எனக்குள்ளும் ஆசை இருந்து அதுக்காக ஒத்துக்கிட்டேனா?” என யோசிக்க,
“அவன் எங்க உன்னை யோசிக்க விட்டான். பார்வை, பேச்சுன்னு எல்லாத்திலும் வசிய மருந்து வைச்சிருந்தவன் மாதிரி உன்னை மொத்தமாக கவுத்திட்டான். வக்கீல் படிப்பில் எதைக் கத்து வைச்சிருக்கானோ இல்லை பேசிப் பேசி ஒருத்தரைக் கவுக்கிறது எப்படின்னு நல்லாப் படிச்சு வைச்சிருக்கான்.” என்று இடித்துரைத்தது மனசாட்சி.
“ஒரு மணி நேரத்துக்கு ஒரு நிறத்தை மாத்துற பச்சோந்தியை விட மோசமான இவனுக்கு என்ன நம்பிக்கையில் ஓகே சொன்னேன். எங்களுக்குள்ள எதுவும் சரியாகலையே. சரியாகுமான்னு ஐடியாவும் இல்ல. இவன் கூட கடைசி வரைக்கும் நல்லபடியா வாழ்ந்திடலாம் னு நம்புற அளவு இவன் எதுவுமே செய்யலையே.” என்று யோசிக்க, “அப்ப அவன் உன்னை நம்பும் அளவு நீ என்ன செய்தாயாம்.” எதிர்கேள்வி கேட்டது மனசாட்சி.
பல கேள்விகள் எழுந்தாலும் அவள் மனம் வந்து நின்றது என்னவோ தான் எப்படி அவனுக்குச் சம்மதித்தோம் என்பதில் தான்.
“அவன் உன் கணவன், உன் மீது மொத்த உரிமையும் கொண்டவன். உன்னிடம் எதிர்பார்க்கும் எதையும் வெளியே இன்னொருவரிடம் அவன் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது.
கணவனுக்கு மனைவியிடத்திலும் மனைவிக்கு கணவனிடத்திலும் நிறையவே உரிமைகள் இருக்கிறது.” என்று தன் தமக்கை தனக்குள் ஊன்றி விதைத்திருந்த விதை தான் நேற்று இவன் காட்டிய பாசத் தண்ணீரில் விளைந்து வளர்ந்துவிட்டது என்பது கொஞ்சம் தாமதமாகப் புரிந்தது.
பொதுவாகவே இந்தியப் பெண்களுக்கு அவர்கள் கணவனுக்கு நோ சொல்ல வருவது இல்லை என்னும் போது ஊர்மி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன.
“டார்லிங் இது உனக்கான நேரம். நிறைய ஷாக்கான விஷயங்களை கேட்கிறதுக்குத் தயாரா இரு.” என்று நினைத்தவண்ணம் மனைவியைத் தன் பக்கம் பிரட்டினான் நாகா. அவள் தாமரைக் கண்கள் மூடி இருக்கும் என இவன் நினைத்தால், மாறாக அது மொட்டு விரித்த மலராய் திறந்திருந்தது.
“ஊர்மி எழுந்திட்டியா?” உற்றாகம் ஊற்றாய் பொங்க கேட்டான்.
“தூங்கவே இல்ல” என்றபடி அவன் முகத்தை ஆழ்ந்து நோக்கினாள். நேற்றைக்குப் போலவே இன்றும் அது இளக்கமாகவே இருக்க சொல்ல முடியாத நிம்மதி வந்தது அவளுக்கு.
அவன் தன்னை வஞ்சம் தீர்க்க நினைக்கவில்லை என்பதை உணர்ந்ததும் வறண்ட பூமியின் மேல் ஆற்றுத் தண்ணீர் பாய்ந்து வந்து தாகம் தீர்த்த உணர்வு.
“ஐயோ என் செல்லமே, அத்தான் மேல அவ்வளவு பயமா. நீ நினைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் டெரர் பீஸ் கிடையாதும்மா, முரட்டு காமெடி பீஸ்.
தெய்வா அடிக்கடி ஒன்னு சொல்லுவான். உன்னை நீயே பெரிய வக்கீலுன்னு நினைச்சிக்கிட்டு இருக்க. நிஜத்தில் நீ ஒரு சிரிப்பு வக்கீல். குறிப்பாச் சொல்லப்போனா வண்டுமுருகன் வக்கீல் மாதிரின்னு சொல்லுவான்.
அவன் வேற எது சொன்னாலும் பொத்துக்கிட்டு கோவம் வர எனக்கு, இப்படிச் சொல்லும் போது மட்டும் கோவம் வராது. ஏன் தெரியுமா அது உண்மைன்னு எனக்கும் தெரியும்.” சொல்லிவிட்டு அவன் சிரிக்க, அவள் இன்னமும் அவன் முகத்தைப் பார்த்தவண்ணம் அமைதியாகவே இருந்தாள்.
“என்ன நல்லா தான காமெடி பண்ணோம். அப்புறம் எதுக்கு இவ இன்னமும் இப்படி இருக்கா. பேய் காத்து ஏதும் அடிச்சிடுச்சோ. சரி கொஞ்சம் வேப்பிலை அடிச்சா எல்லாம் சரியாப் போயிடும்.” தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் தன் எதிரே தன்னைப் பார்த்தவண்ணமே இருந்த தன் மனைவியைப் பார்த்து சொடுக்கிட்டு அவள் கவனம் கலைத்தான்.
“ஊர்மிம்மா உன் மனசில் இப்ப என்னென்ன ஓடுதுன்னு எனக்குக் கொஞ்சம் புரியுது. ஆனா மொத்தத்தையும் கண்டுபிடிக்கிற அளவுக்கு உன் மாமனுக்கு அறிவு பத்தாது. அதனால நீயே சொல்லிடு என் செல்லம் இல்ல.” நாடியைப் பிடித்துக் கொஞ்சினான்.
அவள் மெதுவாய் அவன் கரத்தை பிரித்துவிட்டாள், “இங்க பாருடா நேத்து நான் உன்னைத் தொட்டது.” என்று ஆரம்பித்தவன், “ச்சே நான் ஒரு முட்டாள். நேத்து தான் உன்கிட்ட இனி எடக்கு மடக்கா பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். இப்ப பாரு பழைய குருடி கதவைத் திறடின்னு ஆகிடுச்சு. இனி உன்னைக் நக்கல் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டேன்.” கொஞ்சலாய் சொன்னான்.
அவன் பேசுவது எல்லாம் காதில் விழுந்தாலும், மனதிற்கு இதமாக இருந்தாலும், எப்படி மிகமிக குறுகிய இடைவெளியில் இத்தனை மாற்றம் என்பதில் தான் அவள் சிந்தனை எல்லாம் இருந்தது.
“ஊர்மி செல்லம் இங்க வாயேன். அத்தான் கிட்ட வா. நான் உனக்கு எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்.” என்பதாய் அவளை நோக்கி கைகள் விரிக்க, தன்னையும் மீறி அவன் கைகளுக்குள் விருப்பச் சிறைபட்டாள் ஊர்மி.
“என் செல்லம், அத்தான் சொல்றது எல்லாத்தையும் நல்லாக் கேட்டுக்கிறியே வெரிகுட்.” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டவன் எப்படி ஆரம்பிப்பது என்று யோசனையுடன் இருந்தான்.
“ஊர்மி இப்ப என்னோட மனநிலையை என்னால சரியா விளக்கிச் சொல்ல முடியல, சொல்லத் தெரியலன்னு சொல்லலாம். ஆனா ஒன்னு மட்டும் உண்மை, நான் என்னோட ஆயுளுக்கும் உன்னைத் தகுந்த மரியாதையோட என் மனைவியா என்கூடவே வைச்சிக்க ஆசைப்படுறேன்” என்றான். தன் காதுகளில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அவனை விழி விரிய பார்த்தாள் ஊர்மி.
“அப்படியெல்லாம் பார்க்காத டா செல்லம். அத்தானுக்கு ஒரு மாதிரியா இருக்கா இல்லையா? என்னடா நேத்து வரைக்கும் பைத்தியம் மாதிரி என்னென்னவோ பேசிக்கிட்டு இருந்தவன் இப்ப இப்படி சொல்றானேன்னு ஆச்சர்யமா இருக்கு இல்ல.” தான் மனதில் நினைக்கும் அனைத்தையும் தண்ணீரில் பார்ப்பது போல் தெளிவாகச் சொல்கிறானே என்ற யோசனையுடன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஊர்மி.
“நேத்து ஒரு கிளைண்ட்டை பார்க்கிறதுக்கு நான் போய் இருந்தேன். அங்க போய் பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவன் இன்னொரு நாகராஜ் னு. என்ன பார்க்கிற அவனும் அவன் பொண்டாட்டி எனக்கு வேண்டவே வேண்டாம், எனக்கு எப்படியாவது டிவோர்ஸ் வாங்கிக் கொடுங்கன்னு கெஞ்சினான்.
பொண்டாட்டி கூட உனக்கு என்னடா பிரச்சனைன்னு கேட்டா எடுத்துவிட்டான் பார் ஒரு லிஸ்ட். அதைக் கேட்டு முடிக்கிறதுக்குள்ள எனக்குப் போதும் போதும் னு ஆகிடுச்சு.” என்று நிறுத்த, பெரிதாக என்ன சொல்லிவிடப் போகிறான். ஆணாதிக்க கொள்கையில் எதையாவது உளறுவான் என்று தான் எதிர்பார்த்தாள் ஊர்மி.
ஆனால் அவன் கட்சிக்காரனின் வார்த்தைகளையும், அதன் உடன் சேர்த்து நாகாவின் வார்த்தைகளையும் கேட்ட பிறகு நிஜமாகவே நாகா அதுவரை அவள் நினைத்துக்கொண்டிருந்த அளவு நச்சானவன் இல்லை என்பது அவளுக்கு ஊர்ஜிதமானது.
“நிறைய பாய் ப்ரண்டுங்க இருக்காங்க. சோஷியல் மீடியாக்களில் ரொம்ப நேரம் சேட் பண்றா. நான் ரூமுக்குள்ள வந்தது கூடத் தெரியாத அளவுக்கு ஸ்கைப்பில் எவன் கூடவோ மொக்கை போடுறா. சரியா சமைக்க மாட்டேங்கிறா. என் அப்பா, அம்மாவை மதிக்க மாட்டேங்கிறா. நிறைய பார்டிக்கு போறா, பாருக்குப் போறா. தண்ணி அடிக்கிறா, ட்ரஸ் ரொம்பக் கண்ட்ராவியா போடுறா, மாத்துன்னு சொன்னா நான் அப்படித்தான் பண்ணுவேன்னு பெண்ணுரிமை பேசுறா. எல்லாத்துக்கும் மேல என் காசை தண்ணியா கரைக்குறா. ஏன்டின்னு கேட்டா, ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்ட இல்ல அனுபவின்னு சொல்றா.
போதும் சார் இவளால தினமும் எனக்கும், அப்பா அம்மாவுக்கும் பிரச்சனை. இவளைக் கண்டிக்கலாம் னு பார்த்தா பல நேரம் நிதானத்துலே இருக்க மாட்றா. ஆம்பிளையா பொறந்ததே வேஸ்ட் அப்படி இப்படின்னு நிறையப் பேசினான்.” தன் கட்சிக்காரன் சொன்னதை எல்லாம் சொல்லிவிட்டு மூச்சுவாங்கினான் நாகா.
“இதெல்லாம் இந்தக் காலத்தில் நார்மலைஸ் ஆன விஷயங்கள் தான். பல ஆண்கள் இதைச் சாதாரணமா எடுத்துக்கிறாங்க தான். சிலர் இப்படியான பொண்ணுங்க தான் வேணும் னு சொல்லிக் கட்டிக்கிறாங்க கூட.
ஆனா விதிவிலக்கா இன்னும் சிலர் தனக்கு வரப்போற பொண்ணு இப்படித்தான் இருக்கணும் னு சில குணநலன்களைச் சொல்லி ஆசையோடவும், எதிர்பார்ப்போடவும் காத்திருக்காங்க. அந்த எதிர்பார்ப்புகள் ஒத்து வந்தாக் கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லையா விட்டுட்டுப் போகலாம். அது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது.
ஆனால் உண்மை குணத்தை மறைச்சு அவனை ஏமாத்தி கல்யாணம் முடிந்த அப்புறம், தன் சுயரூபத்தைக் காட்டுறது எந்த வகையில் நியாயம். இப்படி ஒரு வாழ்க்கை முறையில் வாழனும் னு அந்தப் பொண்ணு ஆசைப்படுவது தப்பில்லைன்னா, தனக்குப் பிடித்த மாதிரி பொண்ணு அமையணும் னு பையன் நினைப்பதும் தப்பில்லை தானே.” நாகா சொல்ல தன்னையும் அறியாமல் ஆம் என்று தலையாட்டி இருந்தாள் ஊர்மி.
“நான் கண்டிப்பா டிவோர்ஸ் வாங்கித் தரேன். இனியாச்சும் நல்ல பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்கன்னு சொன்னதுக்கு, அவன் சொன்னான் பாரு ஒரு வார்த்தை எனக்கு என்னமோ மாதிரி ஆகிடுச்சு ஊர்மி.” என்றவனை ஆழ்ந்து நோக்கினாள் அவள்.
“நல்ல பொண்ணுங்களுக்குன்னு முன்னாடி இருந்த இலக்கணம் எல்லாத்தையும் இப்பச் சொன்னா கல்யாணத்துக்கு பொண்ணு எதிர்பார்க்கிறியா இல்ல உன் வீட்டுக்கு அடிமை எதிர்பார்க்கிறியான்னு கேட்கிறாங்க.
நம்மளையும், நம்ம அப்பா அம்மாவையும் சந்தோஷமா பார்த்துக்கிட்டு, சம்பத்தியத்துக்கு அதிகமா செலவு இழுக்காம பக்குவமா குடும்பம் நடத்தி, பிரச்சனை வந்தா விட்டுக் கொடுத்து போற பொண்ணுங்க எல்லாம் இனி எப்பவும் கிடைக்க மாட்டாங்க சார்.
முன்னாடியெல்லாம் ஆண்கள் பெண்களை அடிமையாக்கி வைச்சிருந்தாங்க. அம்மாக்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்து பார்த்து வளர்ந்து நிறைய பசங்க மாறிட்டாங்க சார். ஆனா பொண்ணுங்க அதை விட வேகமா மாறிட்டாங்க என்பது தான் இங்க வேதனை.
போதும் சார் குடும்பஸ்தனா இருந்து நான் பட்ட கஷ்டங்கள். பேச்சுலராவே இருந்துட்டு போயிடுறேன். தயவுசெஞ்சு இந்தப் புண்ணியவதியை என்னை விட்டு பிரிச்சிடுங்க, அது போதும் னு சொல்லிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான்.” என்று தன் கட்சிக்காரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் அவன் இடத்தில் தானே இருப்பது போல் அனுபவித்துச் சொன்ன கணவனை உற்றுப் பார்த்தாள் ஊர்மி.
“தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசு மேல் னு நினைக்கிற மாதிரி, என்னை விட்டுட்டு அடுத்ததா கல்யாணம் பண்ணிக்கிட்டு வரவ இப்படி ஒருத்தியா இருந்தா என்ன பண்றதுன்னு யோசிச்சீங்களாக்கும்.” சற்றே எரிச்சலாக கேட்டாள் ஊர்மி.
தன் மனதை மறைக்க விரும்பாமல், “சொல்றதை முழுசாக் கேட்டுட்டு பேசு டி என் ஆசைப் பொண்டாட்டி.” என்றவன் மேற்க்கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.
“எனக்கு அவனைப் பார்க்கும் போது ஏதோ என்னைப் பார்க்கிற மாதிரியே இருந்துச்சு. அவன் பொண்டாட்டியைப் பத்தி சொல்லும் போது உனக்குக் கோவில் கட்டி கொண்டாடலாம் போல தோணுச்சு.
நீ பணத்து மேல ஆசைப்படுறியோங்கிற அந்த ஒரு சந்தேகத்தைத் தவிர உங்கிட்ட என்னால எந்தக் குறையும் என்னால் சொல்ல முடியல. அப்படியே நீ பணத்து மேல் பிரியப்பட்டாலும் தான் என்ன. என் அப்பா பணம் னு நான் உரிமையா செலவு பண்ற மாதிரி, என் புருஷன் பணம் தானேன்னு பொண்டாட்டி உரிமையா செலவு பண்றதில் தப்பில்லையேன்னு தோணுச்சு.” என்க, எந்த போதி மரத்து அடியில் டா உட்கார்ந்த என்று ஆச்சர்யமாகப் பார்த்தாள் ஊர்மி.
“இதே நினைப்போட நான் வீட்டுக்கு வந்தா நீ அரசுகிட்ட போனில் பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டுத் தொலைச்சிட்டேன்.” நாகா இதைச் சொல்ல ஊர்மி அதை நினைத்துப் பார்த்தாள்.
“ஹலோ அரசு அண்ணா” சகோதரிகள் அனைவரும் அவரவர் அறைக்கச் சென்ற பின்னர் தன் அறை வந்த ஊர்மி வடிவேலுவுடன் சென்றிருந்த அரசுவிற்கு அழைத்தாள்.
“ஊர்மி எப்படி மா இருக்க?” என்க, “பரவாயில்லையே என்னோட குரலை முதல் தடவையிலே கண்டுபிடிச்சிட்டீங்க.” ஆச்சர்யமாகக் கேட்டாள் ஊர்மி.
“உன் குரல் தான் குழந்தையோட குரல் மாதிரி அவ்வளவு கியூட்டா இருக்கே.” அரசுவின் பேச்சில் அன்பு பொங்கியது.
“போன் கிடைச்சிடுச்சு அண்ணா, சிம்மும் வாங்கிட்டேன்.” அழைத்த தகவலைச் சொன்னாள்.
“உன் மாமாகிட்ட நீ ஒரு வார்த்தை கேட்டிருந்தா, அவர் உனக்கு ஒரு செல்போன் கடையே வாங்கிக் கொடுத்திருப்பாரு நீ தான் பிடிவாதமா மறுத்துட்ட.” சொன்னவன் வார்த்தையில் இருந்தது என்னவென்று அவளால் உணர முடிந்தது.
“நீங்க சொல்றது உண்மை தான். ஆனா அதை நான் ஏத்துக்கிட்டா என் புருஷனுக்கு என் மேல இருக்கிற சந்தேகம் உண்மைன்னு ஆகிடுமே.”
“அவன் கிடக்கிறான் மா சந்தேகப்பிராணி. உன்னை அவனுக்குத் தெரியாது சரி. ஆனா அவனோட அப்பாவையுமா தெரியாது. பணத்து மேல ஆசைப்படுற பொண்ணையா அவனுக்குக் கட்டி வைப்பாரு. அப்படிக் கட்டி வைச்சா அவனோட வாழ்க்கை வீணாப் போயடும் னு தெரியாத அளவுக்கு அவர் என்ன சின்னப்பாப்பாவா. அவர் சைஸ்க்கு தொட்டில் கேட்டா கடைக்காரன் ஓட ஓட அடிக்கமாட்டான்.” என்க, அந்தக் கற்பனைக் காட்சியில் சிரித்தாள் ஊர்மிளா.
“இந்தச் சின்ன விஷயம் கூட புரியாத அவன் எல்லாம் ஒரு லாயர்.” என்க, “அண்ணா உங்களுக்கு அவரைப் பத்தி பேச உரிமை இருக்கு தான். நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா இன்னொரு தடவை அவரை என்கிட்ட மட்டம் தட்டிப் பேசாதீங்க. ஆயிரம் இருந்தாலும் அவரு என்னோட புருஷன்.” வீராப்பாய் சொல்லி இருந்தாள்.
“சரிம்மா பத்தினி தெய்வமே, காலங்காலமா சந்தேகப்படுற புருஷனுக்கு தான் படுஉத்தமியான ஒரு பொண்ணு பொண்டாட்டியா வாக்கப்படுறா, நாகாவும் அதில் விதிவிலக்கா என்ன.”
“அதையெல்லாம் விடுங்கண்ணா. நான் கேட்ட விஷயம் என்னாச்சு. வீட்டில் இருந்துக்கிட்டே வேலை செய்யுற மாதிரி ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்கன்னு சொன்னேன் இல்ல.” என்றாள்.
“உனக்கு எதுக்கு மா இந்தக் கஷ்டம் எல்லாம்.” அரசுவுக்கு இதில் ஏக வருத்தம்.
“அவருக்கு என் மேல இருக்கிற சந்தேகம் முழுமையா போற வரைக்கும், அவரோட காசில் ஒரு ரூபாய் கூட நான் செலவு பண்ண மாட்டேன். இந்த வீட்டுக்கு நான் வந்ததில் இருந்து எனக்காக செலவளிக்கப்படுற ஒவ்வொரு ரூபாயையும் கணக்குப் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.
கல்யாணத்துக்கு வாங்கின நகை, புடவை எல்லாம் கணக்கில் சேராது. அதெல்லாம் மாமாவோட காசு. அதோட அதை இனி நான் தொடப் போறது இல்ல. ஆனா நான் தினமும் சாப்பிடுற சாப்பாடுக்கு அவருக்கு நான் பணம் கொடுத்தே ஆகனும். அப்பதான் என்னோட சுயகௌரவத்தை காப்பாத்திக்க முடியும். இந்த நாள் வரைக்குமான பணத்தை நான் அவரோட அக்கவுண்டுக்கு அனுப்பிட்டேன்.
லீலாக்கா என்னோட செலவுக்குக் கொடுத்த காசு, ருக்கு அக்கா கல்யாணத்துக்குன்னு சேர்த்து வைச்ச பணத்தில் இருந்து தான் போன் வாங்கினது, அவருக்குப் பணம் அனுப்பினது எல்லாம். எத்தனை நாளைக்கு இப்படியே பண்ண முடியும். எனக்குன்னு ஒரு வேலை வேணும். என்னோட சம்பாத்தியத்தில் தான் நான் இந்த வீட்டில் சாப்பிடுறேன்னு அவருக்கு சொல்லணும்.” வீராப்பாய் சொன்னாள்.
“ஆனா இதனால என்ன பலன். இதையெல்லாம் பார்த்து அந்த கருநாகம் திருந்தும் ன நினைக்கிறியா என்ன”
“ஒரு நல்ல ஆணுக்கு மனைவி தன்னோட பணத்தை செலவு பண்ண மறுத்துட்டாங்கிறது பெரிய அவமானமா இருக்கும். அதை விடப் பெரிய அவமானம், தான் தன்னோட அப்பா பணத்தை இஷ்டத்துக்கு செலவு பண்ணும் போது, பொண்டாட்டி சுயமா உழைச்சு சம்பாதிக்கிறா என்பது.
நான் சம்பாதிக்கிறது அவரோட ஈகோவைத் தூண்டிவிடும். அது அவருக்கு தான் நல்லது. உருப்படியா ஏதும் சம்பாதிக்கிறதுக்கான வழியைப் பார்ப்பாரு. மத்த மூணு பேரும் சம்பாதிக்கும் போது இவரு மட்டும் இன்னும் அப்பா காசை செலவு பண்ணிக்கிட்டு இருக்கிறது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு அண்ணா.
நாளைக்கு அவங்க நாலு பேருக்குள்ள ஏதும் சண்டைன்னு வந்து, மூணு பேரில் யாரோ ஒருத்தர் என் புருஷனைப் பார்த்து கை நீட்டிப் பேசிட்டா எனக்கு ரொம்பக் கஷ்டமாப் போயிடும். அவரு அவரோட தொழிலில் முன்னேறணும். அதுதான் அவருக்கும் கௌரவம் எனக்கும் பெருமை.” நீளமாகப் பேசினாள்.
“வார்த்தைக்கு வார்த்தை என் புருஷன், என் புருஷன்னு பெருசா பேசுற. ஆனா அவன் உன்னை பொண்டாட்டியா மட்டும் இல்ல மனுசியா கூட மதிக்க மாட்டேங்கிறானே.” அரசு சொல்ல, கணவன் மனைவிக்கு நடுவே இவன் யார் என்று தோன்றினாலும் உடனே அரசுவைப் போய் தவறாக நினைத்தோமே என்று தன்னைத் தானே திட்டியும் கொண்டாள்.
“எங்க அறைக்குள் நடப்பது எல்லாம் தெரியுறதுக்கு நீங்க என்ன கடவுளா. உங்களுக்குத் தெரியாம எனக்கும், அவருக்கும் நடுவில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்திருக்கு. அதனால் உங்களுக்குத் தெரிஞ்சதை மட்டுமே வைச்சு அவரைக் குற்றம் சொல்லாதீங்க. அவர் ஒன்னும் இயல்பில் கெட்டவர் இல்லை. அவருக்குள்ள சில நல்ல குணங்கள் இருக்கு.
சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் நடுவில் திரிசங்கு சொர்க்கம் னு ஒன்னு இருக்கு உங்களுக்குத் தெரியுமா? அந்த மாதிரி நல்லகுணங்கள், கெட்டகுணங்கள் எல்லாம் கலந்த கலவை தான் அவர். சகவாச தோஷம், அது தீர்ந்தா சரியாகிடும்.“ என்றாள்.
தனக்குச் சொல்வதைப் போல் அவளுக்கு அவளே சொல்லிக்கொள்கிறாள் என்று புரிந்த அரசுவிற்கு ஏனோ ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வந்திடுவான் என்கிற சினிமா வசனம் தான் நினைவு வந்தது.
“வைரம் யாராவது அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் மண்ணுக்குள்ள தான் இருக்கும். வெளிய வந்தாலும் சரியான ஆளுக்கு தான் அதோட மதிப்பு தெரியும். உங்க எல்லாருக்கும் சாதாரண கல்லா தெரியுற என் புருஷன் உண்மையில் ஒரு வைரம். அவரோட வேல்யூ என்னன்னு எனக்குத் தெரியும். ஒருநாள் இல்ல ஒருநாள் நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்குவீங்க” என்றாள்.
“யம்மா தாயே கொஞ்சம் மூச்சுவிடு. உன் கருநாகம் உனக்கு நல்லா படம் காட்டிட்டான்னு புரியுது. என்னை ஆளை விடு. உனக்கு உன் மாமனாருக்குத் தெரியாம, உன் அக்கா தங்கச்சிங்களுக்குத் தெரியாம நம்ம ஆபிஸிலே ஒரு வேலை ஏற்பாடு பண்ணிட்டு நான் திரும்பக் கூப்பிடுறேன்.” என்றுவிட்டு போனை அணைத்திருந்தான் அரசு.
“அப்ப நான் போனில் அரசு அண்ணன் கூட பேசினதை ஒட்டுக்கேட்டுட்டு தான் மனசு மாறி இருக்கீங்க. நான் பணத்தாசை பிடிச்ச பேய் இல்லன்னு புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க. இல்லைன்னா பழைய கருநாகமா தான் இருந்திருப்பீங்க இல்லையா?” இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த ஊர்மி கேட்க,
“அடடா இவ இப்படி பல்டி அடிப்பான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லையே.” என்னும் படி விழிக்க ஆரம்பித்தான் நாகா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நான் கூட பயந்துட்டேன் ஏதாவது ஏடாகூடமான ஷாக்கா இருக்கும்னு … நாகா திருந்திட்டானா … நம்ப முடியலையே … செக் பண்றானோ …
ஊர்மி உன் மைண்ட் வாய்ஸ் தான் எனக்கும் தோணுச்சு … தெளிவான பொண்ணு … கரெக்ட்டா அரசு கிட்ட பேசுது …