
அத்தியாயம் 4
“என் மூத்த பையன் பேரு செல்வராஜ், வயசு இருபத்தியேழு. டாக்டரா இருக்கான், அவனுக்கு கல்யாணம் பண்ணலாம் னு யோசனை அதனால தான்.” என்று லேசாக இழுத்தார் வடிவேலு.
இவர்கள் தான் தன்னுடைய மருமகள்கள் என்று ஆணித்தரமாக முடிவு செய்து விட்டாலும் ஏதோ ஒரு சின்ன தயக்கம். நினைத்த அனைத்தையும் நினைத்த நேரத்தில் செய்து முடிக்க இவருக்கு கீழே ஆயிரம் பேர் இருக்க, தன்னுடைய மகன்களுக்காக இறங்கி வந்தவருக்கு, பெண்களிடம் அவர்களுக்கு ஏற்ற வகையில் பேசத் தெரியவில்லை. அதனாலேயே தயங்கித் தயங்கி தான் வந்தது வார்த்தைகள்.
“ஏன் சார் தயங்குறீங்க, எங்களில் யாரோ ஒருத்தரை உங்க பையனுக்காக பார்க்க வந்து இருக்கீங்க, அப்படித் தானே.” தந்தையின் நண்பர் என்று வடிவேலு சொல்லும் போதே ஓரளவு காரணத்தை யூகித்திருந்த லீலா, இப்பொழுது கிட்டத்தட்ட தான் நினைத்ததை உறுதிப்படுத்திக்கொண்டாலும் எதுவும் தெரியாதவள் போல் கேள்வி கேட்டாள்.
தன் அலுவலகத்தில் வேலைக்காக பலரை நேர்முகத் தேர்வில் கேள்விகள் கேட்கும் போது, ஏதாவது ஒரு சூழ்நிலையில் தனக்கு எதிரே இருப்பவர்கள், பயத்தில் பதில் சொல்லத் தயங்கும் பொழுது வடிவேலுவுக்கு அத்தனை எரிச்சல் வரும். கேள்விகளுக்குப் பதில் சொல்லும் தைரியம் கூட இல்லாதவர்கள் எதற்காக வேலை தேடி வர வேண்டும் என்று உள்ளுக்குள் பொங்குவார்.
இப்பொழுது அந்த நிலையில் அவரே இருக்க, பயத்தில் தொண்டை காய்ந்தது. இன்னும் சற்று நேரத்தில் கை கால் நடுக்கம் கொண்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அமைதியான பெண் லீலாவிடமிருந்து வந்த வார்த்தைகளில் இருந்த ஆளுமை அவரைக் கட்டிப்போட்டது என்றே சொல்ல வேண்டும்.
பெருமூச்சுவிட்டு நிதானித்தவர், “உங்களில் யாரையோ இல்லம்மா, உன்னைத் தான் என் மூத்த பையனுக்கு கேட்க வந்திருக்கேன். வீட்டில் அப்பா, அம்மா இருந்திருந்தா அவங்ககிட்ட பேசலாம். ஆனா அதுக்குத் தான் கொடுத்து வைக்கலையே. அதான் நேரடியா உங்கிட்டையே பேசுற நிலைமை.” வார்த்தைகளை தேடிக் கண்டுபிடித்து ஒருவழியாகச் சொல்லி முடித்தார் வடிவேலு.
“ஊர்மி, அக்காவுக்கு கல்யாணம்.” சந்தோஷத்தில் சற்றே உரத்த குரலில் சொன்னாள் ருக்மணி.
“அமைதியா இரு, ருக்கு.” தங்கையை அடக்கிய லீலா, “மன்னிக்கணும் சார், எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்லை. சொல்லப் போனா கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவே இல்லன்னு சொல்லலாம்.” அமைதியாக அழுத்தமாக வெளிவந்தது அவள் வார்த்தைகள்.
“ஏன் மா அப்படிச் சொல்ற ஒருவேளை வேற யாரையும் விரும்புறியா?” கேட்டுவிட்ட பின்னர் தான், எதற்காக டா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டோம் என்று தோன்றியது வடிவேலுவுக்கு.
“ஹலோ எங்க வந்து யாரைப் பத்தி என்ன பேசுறீங்க, கொஞ்சம் பார்த்துப் பேசுங்க.” பற்களைக் கடித்தபடி சொன்னாள் ஊர்மிளா.
“சிவகாசிப் பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாளே. சும்மாவே பழக்கம் இல்லாத வேலையில் கை, கால் எல்லாம் நடுங்கிது. இதில் இவ இப்படிக் கத்தினா கன்பார்ஃம் மயக்கம் தான்.”அவர் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்,
“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை சார், எனக்கு முன்னாடி ரொம்பப் பெரிய கடமை இருக்கு. என் மூணு தங்கச்சிங்களுக்கும் நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.
அவங்களோட நல்லது கெட்டதில் கலந்துக்கணும். அம்மா அப்பா இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமாங்கிற வருத்தம் எப்பவும் அவங்க வாழ்க்கையில் வந்திடக் கூடாது. இது எல்லாம் நடக்க, நான் கல்யாண பந்தத்தில் இருந்து ஒதுங்கி இருக்கணும்.” சொன்ன பிறகு தான், இத்தனை விளக்கம் இவருக்கு தேவை தானா என்ற யோசனையே வந்தது அவளுக்கு.
“நீ சொல்றது எல்லாம் சரிதான் மா. தங்கச்சிங்களுக்கு அக்கா அடுத்த அம்மா மாதிரி தான், ஒத்துக்கிறேன். அதுக்காக நீ ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும். நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரலன்னு சொன்னாக் கூட பரவாயில்லை. ஆனா, நீ நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கனும்.” தந்தையின் இடத்தில் இருந்து கட்டளை போல் குரல் உயர்த்தினார் வடிவேலு.
“சார், அப்படி ஒரு எண்ணம் இதுவரைக்கும் எனக்குள்ள வந்தது இல்ல. இனிமேல் வருமான்னும் தெரியாது. அதோட நீங்க வந்த காரியம் தான் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சே அப்புறம் என்ன.” வேகவேகமாக பேசியவள் சற்றே தடுமாறி நின்றாள்.
“வெளில போன்னு நேரடியா மட்டும் தான் சொல்லல.” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவர், “உங்க எல்லாரையும் பத்தி நல்லா விசாரிச்சேன் மா. எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிப் போச்சு. இந்த சம்பந்தத்தை விட எனக்கு மனசு இல்லை.
வேணும் னா ஒன்னு பண்ணுவோம். உன் கல்யாணத்துக்கு அப்புறம் உன் தங்கச்சிங்களையும் எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடலாம். அவங்களுக்கு நாம இரண்டு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கலாம். என்ன சொல்ற.” எப்படியாவது அவள் சம்மதம் சொல்லிவிட வேண்டுமே என்ற தவிப்பு தான் அவரிடத்தில் அதிகம் இருந்தது.
இப்பொழுதாவது தன் மற்ற மகன்களைப் பற்றி வாயைத் திறந்து இருக்கலாம். ஆனால் வடிவேலு அன்று காலை விழித்த முகம் சரியில்லை. எழுந்ததும் கண்ணாடியைக் கண்டாரோ என்னவோ, அவருக்கே வெளிச்சம்.
“சார், என் தங்கச்சிங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என்னோட கடமை. அதை எப்படி நான் உங்க தலையில் இறக்க முடியும். அதோட நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷன், மாமனார், மாமியார் அவங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு என் சொந்தக் குடும்பத்தைப் பத்தி மட்டும் தான் என்னோட யோசனைகள் சுத்தும்.
அப்படியான சூழ்நிலையில் நான் மாட்டிக்கிட்டா என் குடும்பத்தையும், என்னோட தங்கச்சிங்களையும் ஒரே மாதிரி பார்த்துக்க முடியும் னு எனக்குத் தோணல. என்னோட வாழ்க்கை தான் முக்கியம் னு நான் சுயநலமா போயிட்டா என் தங்கச்சிங்களோட நிலைமை என்ன ஆகுறது. அதனால ப்ளீஸ் இதை இப்படியே விட்டுடுங்க. உங்க பையனுக்கு கண்டிப்பா வேற பொண்ணு கிடைப்பா.” தன்னளவில் தெளிவாகவே இருந்தாள் லீலா.
“இல்லை மா, என் பையனுக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணைத் தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன். உன்னைக் கண்ணு முன்னாடி வைச்சிக்கிட்டு இன்னொரு பொண்ணைத் தேட எனக்கு மனசு வரல.
நீ தப்பா எடுத்துக்கலன்னா நான் ஒரு யோசனை சொல்றேன். எனக்குத் தெரிஞ்ச மூணு தங்கமான பசங்க இருக்காங்க. நான் என்ன சொன்னாலும் தட்டாம கேட்பாங்க. அவங்களோட விவரத்தைக் கொடுக்கிறேன் நீயும் நல்லா விசாரிச்சு பாரு.
உனக்கு சம்மதமுன்னா நான் உன்னோட தங்கச்சிங்க மூணு பேருக்கும் என் தலைமையில் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். உன் தங்கச்சிங்க கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட உன் கல்யாணத்தை வைச்சுக்கலாம். என்ன சொல்ற, நான் இவ்வளவு தூரம் சொல்றேன் உன் நிலையில் இருந்து நீயும் கொஞ்சம் இறங்கி வரலாமே மா.” சற்று கவலையுடனே கேட்டார் அவர்.
“அக்கா அவர் தான் இவ்வளவு தூரம் சொல்றாரே. அப்பாவோட ப்ரண்டுன்னு வேற சொல்றார். மாப்பிள்ளை டாக்டரா இருக்காராம். உங்களை நல்லா பார்த்துப்பாரு. எங்க மூன்று பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நீங்க ஆசைப்படுவது மாதிரி, உங்களுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா.
உங்க அளவுக்கு எங்களுக்கு வெளியுலகம் தெரியாது. உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிற அளவு திறமையும் கிடையாது. எப்படியாவது எங்க அக்காவுக்கு நல்ல வரன் அமையணும் னு கடவுள் கிட்ட வேண்டிக்குவோம். அதுக்குப் பலனா தானா தேடி வந்திருக்கு இந்த இடம். கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க அக்கா.” கடைக்குட்டி தேவகி கெஞ்ச, லீலாவிற்கு கோபம் வந்தது.
“உங்க மூணு பேருக்கும் அறிவுங்கிறது கொஞ்சமாவது இருக்கா இல்லையா? இல்ல இருந்தும் வேலை செய்யாம போச்சா. தினம் தினம் பொண்ணுங்களுக்கு நடக்கிற கூத்தை பார்த்துக்கிட்டும், கேட்டுக்கிட்டும் தானே இருக்கீங்க. அவ்வளவு ஏன் நீங்க வேலைக்கு போன இடத்தில் நடந்த கூத்தை மறந்துட்டீங்களா என்ன?”
“யாரோ ஒருத்தர் வந்து நான் உங்க அப்பாவோட ப்ரண்டுன்னு சொல்றாரு. அதுவும் எப்ப, சரியா நம்மளைப் பத்தி டீவியில் வந்த நாலு நாளில். உன் தங்கச்சிங்களை கட்டிக்கொடுக்கிறேன், உன்னை என் டாக்டர் பையனுக்கு கட்டி வைக்கிறேன் எங்கூட வந்திடுன்னு சொல்றார்.
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. இவர் சொல்றது எல்லாம் உண்மைன்னு எப்படி கண்ணை மூடிக்கிட்டு நம்புறீங்க. கொஞ்சம் கூட சுயமா யோசிக்க மாட்டீங்களா? இவர் இவ்வளவு பெரிய உதவியை நமக்குப் பண்ணனும் னு என்ன அவசியம் வந்திருக்கு சொல்லுங்க.”
“நம்மகிட்ட பணம், நகை நட்டுன்னு ஒன்னுமே கிடையாது. இந்தப் பழைய வீடு ஒன்னு தான் இருக்கு. அப்படி இருக்க எப்படி இவர் சொல்ற அந்த ஆளுங்க உங்களைக் கல்யாணம் பண்ணி நல்லபடியா பார்த்துப்பாங்க.”
“என் தங்கச்சிங்க ரொம்ப புத்திசாலிங்க, எல்லாத்தையும் புரிஞ்சிப்பாங்கன்னு நம்பி உங்களைத் தனியா விட்டுட்டு நான் தினமும் வேலைக்குப் போறேன். ஆனா நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கிறீங்களே டி.” தங்கைகளைப் பார்த்து கத்தி முடித்த லீலா,
“சார் இங்க பாருங்க, நீங்க சொன்னது எல்லாம் உண்மையோ, பொய்யோ அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. ஆனா நீங்க சொல்ற எந்த விஷயத்திலும் எங்க யாருக்கும் உடன்பாடு கிடையாது. அதனால தப்பா எடுத்துக்காம வந்த வழியே திரும்பிப் போயிடுங்க.” கையெடுத்துக் கும்பிட்டு செல்லும் திசையைக் காட்டினாள்.
“ஏன் மா ஊர்மிளா நீயாவது உன்னோட அக்காவுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா? என்னைப் பார்த்தா ப்ராடு பண்றவன் மாதிரியா தெரியுது.” சற்றே சோகமாகக் கேட்டார் வடிவேலு.
“இந்த எடுத்துச் சொல்ற பிஸ்னஸே இங்க கிடையாது. எங்க அக்கா என்ன சொல்றாங்களோ அது தான் முடிவு. தப்பா எடுத்துக்காம தயவுசெஞ்சி கிளம்புங்க.” தன் பங்கிற்கு ஊர்மியும் விரட்டாத குறையாகப் பேச மனம் நொந்தது பெரிய மனிதருக்கு.
“ச்சே பொண்ணு பார்த்து பேசி முடிக்க வந்து இப்படி ஆகிடுச்சே. அதுசரி முன்ன பின்ன இதெல்லாம் பழக்கம் இருந்தா தானே, என்ன பண்ணனும் என்ன பண்ணக் கூடாதுன்னு தெரியும். நான் பாட்டுக்கு கண்டபடி பேச அது இப்படி ஏடாகூடமா முடிஞ்சிடுச்சு.
பொண்ணுங்க பணத்து மேலும், பகட்டு வாழ்க்கை மேலும் ஆசைப்பட்டு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க கூடாதுன்னு இப்படி சிம்பிளா வந்தேன். ஒருவேளை இதுவே அவங்க பார்வையில் என்னை ரொம்ப கீழ காட்டிடுச்சோ.” மனதில் நினைத்தவண்ணம் குனிந்து தன் உடையைப் பார்த்தவருக்கு, அங்கிருந்து தோல்வியுடன் திரும்ப மனம் ஒப்பவே இல்லை.
இருந்தாலும் இதற்கு மேலும் தான் இங்கே நின்று கொண்டிருந்தால் பெண்கள் கோபத்தில் ஏதாவது பேசி வைத்து, முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறி தங்களுக்கு இடையேயான உறவை நேராக்க வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் இப்போதைக்கு இந்த திட்டத்தை ஒத்தி வைத்து வந்த வழியே கிளம்பினார் வடிவேலு.
“அக்கா, நீங்க உள்ள வாங்க.” ஊர்மி லீலாவின் கரம் பற்றி உள்ளே அழைத்து வர, ருக்கு சூடான தேநீரோடு வந்து அதை லீலாவிடம் கொடுத்தாள்.
“ஏன்டிம்மா, வீடு தேடி வந்த அந்தப் பெரிய மனுஷனை நல்லா அவமானப்படுத்தி அனுப்பிட்டீங்க போல.” என்றவாரு வந்தார் எதிர்வீட்டுப் பெண்மணி.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லக்கா. அவங்க எங்க அக்காவை பொண்ணு கேட்டு வந்தாரு. அதில் இஷ்டம் இல்லைன்னு அமைதியா சொல்லி அனுப்பிட்டோம், அவ்வளவு தான்.” ஊர்மிளா அக்காவுக்காக பஞ்சாயத்திற்கு வந்தாள்.
“போடி போடி இவளே, அவரு இங்க வந்தது உங்க அக்காவை மட்டும் பொண்ணு பார்க்க இல்ல. உங்க நாலு பேரையும் அவரோட நாலு பசங்களுக்கு பார்க்க தான்.” என்றவர் தன் முன் நிற்கும் பெண்களின் குழம்பிய முகங்களைப் பார்த்து மேலும் தொடர்ந்தார்.
“வந்தவர் எதுக்காக உங்க அக்கா, நொக்கா கல்யாணத்தைப் பத்தி மட்டும் பேசினாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா அவரோட நோக்கம் உங்களை மாதிரி ஒற்றுமையான அக்கா தங்கச்சியை அவரோட பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சு, அது மூலமா அவங்களை என்னைக்கும் ஒற்றுமையா பார்க்கணும் என்பது தான்.” கையில் கிடைத்த அமிர்தத்தை தண்ணீர் என நினைத்து தட்டி விட்டுவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் பேசினார் அவர்.
“ஆனா இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்.” சரியாகக் கேட்டாள் லீலா.
“ஆங், இதையெல்லாம் நல்லா வக்கனையாக் கேளு. ஆனா வீடு தேடி வந்த பெரிய மனுஷனை வீட்டுக்குள்ள கூட வரவிடாம துரத்திடு அனுப்பிடு, என்ன பொண்ணோ போ.” என அங்கலாய்த்தவர்,
“அவரோட கம்பெனியில் தான் என் தம்பி பொண்ணு வேலை பார்க்கிறா. அவ சொல்லித் தான் அவருக்கு உங்களைப் பத்தி தெரியும்.” லீலாவின் கேள்விக்கு பதிலைச் சொன்னவருக்கு ஆதங்கம் மட்டும் மட்டுப்படவே இல்லை. அவர்கள் இழந்தது எத்தனை பெரிய பொக்கிஷத்தை என்பதை அவர்களுக்கு உணர்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில்,
“அவர் எவ்வளவு பெரிய பணக்காரருன்னு தெரியுமா? அப்படிப்பட்டவரு உங்ககிட்ட இருக்கிற நல்ல குணத்தை மட்டுமே பார்த்து, வரதட்சணைன்னு ஒரு பைசா கூட வேண்டாங்கிற உறுதியோட உங்களை அவரோட வீட்டு மருமகளாக்க நினைச்சாரு.
பதிலுக்கு நல்ல மரியாதை பண்ணி அனுப்பி வைச்சிருக்கீங்க. இங்க பாரு லீலா, யானையாவது தன் தலையில் மட்டும் தான் மண்ணை வாரிப் போடும். ஆனா நீ உன் அவசரப் புத்தியால உன் தங்கச்சிங்களுக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கையில் மண் அள்ளிப் போட்டுட்ட.
இதுக்கு மேல அவரு உங்களை மருமகளா ஏத்துப்பாரான்னு எனக்குத் தெரியாது. இனி மேலும் உங்க வாழ்க்கை தொட்டுக்கோ, துடைச்சிக்கோன்னு தான் போகணும் னு இருந்தா அதுக்கு யார் என்ன பண்ண முடியும்.
உன்னை ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா இந்த விஷயத்தில் ரொம்ப முட்டாளாகிப் போயிட்ட லீலா.” மனத்தாங்கலைக் கொட்டி முடித்து, வந்த வேலை முடிந்த தோரணையில் அவர் சென்றுவிட லீலாவிற்கு என்னவோ போல் இருந்தது.
“நான் அப்பவே நினைச்சேன் அக்கா. என்னடா ஆளு பார்க்கிறதுக்கு ரொம்ப சிம்பிளா இருக்காரு. ஆனா உடம்பு பாதாம், பிஸ்தான்னு நல்லா சாப்பிட்டு வளர்ந்த மாதிரி பளபளன்னு இருக்கேன்னு. இப்ப தான புரியுது வேஷம் போட்டு வந்து இருக்காரு.” ஊர்மிளா சொல்லவும்,
“ஆமாக்கா, இதுதான் விஷயமுன்னா நேரடியாச் சொல்லி இருக்கலாமே. அதை விட்டுட்டு எதுக்காக அதையும், இதையும் பேசணும். ஏதோ தப்பு இருக்கு கா. அவரு போனது கூட நல்லது தான். விட்டுத்தள்ளு.” ருக்மணியும், ஊர்மிளாவுடன் சேர்ந்து தமக்கையைச் சமாதானப்படுத்தினாள்.
“அக்கா நீ அவரை எந்த விதத்திலும் மரியாதைக் குறைவா நடத்தல. அதனால நீ எதைப் பத்தியும் யோசிக்காத. ப்ரீயா விடு.” சொன்னவள் தேவகி.
“நீங்க எல்லாம் எதுக்காக இப்படி மல்லுக்கட்டிப் பேசுறீங்கன்னு எனக்குப் புரியுது. உங்களுக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கை என்னால போயிடுச்சேன்னு, நான் வருத்தப்படுவேன்னு தானே யோசிக்கிறீங்க.
எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லவே இல்ல. அவர் பெரிய பணக்கார இடம் னு பொன்னி அத்தை சொன்னாங்களே. அந்த ஒரு விஷயம் போதும் அவரோட சங்காத்தமே வேண்டாம் னு நாம ஒதுங்குவதற்கு. அதனால இதை இத்தோட மறந்துட்டு போய் வேலையைப் பாருங்க.” இவ்வளவு தான் பேச்சு என்பதாய் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
தங்கைகளிடம் என்னவோ பெரிதாய் பேசிவிட்டாள். ஆனால் உள்மனம் அவளைப் போட்டு படுத்தி எடுத்தது. எதிர்வீட்டுப் பெண்மணி சொன்ன உன் தங்கச்சிங்களுக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துட்ட என்ற ஒற்றை வசனம் அவள் நிம்மதியைப் பறிக்கப் போதுமானதாக இருந்தது.
தாய் இறப்பதற்குச் சில காலங்கள் முன்பு, “எங்களைப் போல் ஒரே பிரசவத்தில் அதிகக் குழந்தைகள் பிறந்த வீட்டை எங்கேயாவது பார்த்து இருக்கீங்களா அம்மா.” எனக் கேட்ட தன்னிடம், “உங்க அப்பாவோட ப்ரண்டு ஒருத்தர் வடிவேலுன்னு பேரு. நாங்க தங்கி இருந்த காலனியில் அவரோட தங்கை இருந்தாங்க. அவங்களைப் பார்க்க வரும் போது உங்க அப்பாவுக்குப் பழக்கம்.
அவருக்கும் உங்களை மாதிரி நான்கு பிள்ளைகள். என்ன ஒன்னு அடுத்தடுத்த வருடத்தில் பிறந்த இரண்டு இரட்டைப் பிள்ளைகள். முதல் இணை இரண்டு ஆண். அடுத்த பிள்ளைகள் பிறக்கிறதுக்கு முன்னாடி, உங்க அப்பா இறந்து போய் நான் இங்கே வந்துட்டேன். அவங்க ஆணா பெண்ணா தெரியாது.” என பரமேஸ்வரி சொன்னது இன்றும் நினைவில் நின்றது லீலாவுக்கு.
ஆக இன்று வந்தவர் சொன்னது அத்தனையும் உண்மை, அவர் வந்த நோக்கம் தவறானது இல்லை. முட்டாள் தனமாக நடந்துகொண்டது தானே என்பது புரிந்தது லீலாவிற்கு. அவர் சொன்னதைப் போல் தன் மூன்று தங்கைகளும், ஒரே வீட்டில் வாழ்ந்தால் அதை விடப் பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும், என யோசித்தவளுக்கு அப்போது கூட தன்னுடைய திருமணத்தைப் பற்றி நினைக்கத் தோன்றவில்லை.
அவரிடம் நான் ஒருமுறை பேசிப் பார்த்தால் என்ன. பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்களாகத் தான் இருக்க வேண்டுமா என்ன. அதோடு, அவர் கேட்டதும் உடனடியாக என் தங்கைகளை கொடுக்கப் போவதில்லையே.
இந்த யோசனை சரிவருமா, சரிவராதா என்ற சின்ன சிந்தனை. அதற்கு ஒரு பேச்சுவார்த்தை அவ்வளவு தானே என தனக்குள் சொல்லிக் கொள்ளும் போது தான், ஒருவேளை வடிவேலுவும் இப்படி யோசித்து சோதனை செய்து பார்த்திருப்பாரோ என்ற எண்ணம் வந்தது.
அவர் யார் எங்களைச் சோதனை செய்ய என்ற கோவம் எல்லாம் அவளுக்கு வரவில்லை. காலத்துக்கும் மகன்களோடு வாழப்போகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கே வந்தாள்.
நெடுநேரம் யோசித்தவள், என் தங்கைகளுக்கு நல்லது நடந்தால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற தீர்க்கமான முடிவுக்கு வந்தவள், வெளித்திண்ணையில் வடிவேலு எதற்கும் இருக்கட்டும் என நினைத்து வைத்துவிட்டுச் சென்ற அவரோட விசிட்டிங் கார்டை எடுத்தாள்.
அடுத்த நாள் தான் வேலை செய்யும் முதலாளியிடம் தயங்கித் தயங்கி வடிவேலு இங்கு வந்து சென்றதைப் பற்றியும், அவரையும் அவர் பிள்ளைகளைப் பற்றியும் விசாரித்துச் சொல்ல முடியுமா எனக் கேட்டாள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது தயங்காத மனது, தனக்கென்று உதவி கேட்கும் போது தடுமாறியது.
“அதுக்கென்ன மா, நான் விசாரிச்சு சொல்றேன்.“ என்றவர் சொன்னது போல் இரண்டு நாளில் லீலா மனம் குளிரும் வகையில் நல்ல பதிலாகச் சொன்னார்.
அடுத்ததாக வடிவேலுவை நேரில் ஒருமுறை சென்று பார்க்கலாம் என்கிற நினைப்போடு கோயம்புத்தூர் செல்லத் தயாரானாள்.
“அக்கா எங்க போறீங்க.” ஊர்மி தான் தைரியமாகக் கேள்வி கேட்டது.
“இதில் இருக்கிற விலாசத்துக்குப் போய், அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தாரே அவர்கிட்ட பேசப் போறேன். எல்லாம் சரியா அமைஞ்சா சீக்கிரமே என்னோட தங்கச்சிங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுப்பேன்.” புன்னகையுடன் சொன்னாள் லீலா.
“என்னது தனியாப் போறீயா? அதுவும் அவ்வளவு தூரம். அவ்வளவு தூரம் தனியா எல்லாம் அனுப்ப முடியாது. நீ போக முடிவு பண்ணிட்டா எல்லோரும் சேர்ந்து போகலாம்.” என்றாள் ருக்கு. மற்றவர்களும் அதையே சொல்ல, இறுதியாக ஒப்புக்கொண்டாள் லீலா.
இரண்டு நாட்கள் கழித்து ஒருநாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்து, இருப்பதிலே நல்ல உடையாகத் தேர்ந்தெடுத்து உடுத்திக்கொண்டு பஸ் ஏறி கோயம்புத்தூர் வந்து சேர, மதியம் ஆகி விட்டிருந்தது அவர்கள் நால்வருக்கும்.
ஹோட்டலில் சாப்பிட்டால் பணம் அதிகம் செலவாகிவிடும் என்று பயந்து தண்ணீரைக் குடித்துவிட்டு பட்டினியாகவே அலைந்தனர் நால்வரும். ஒருவழியாக தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாள அட்டையில் இருந்த விலாசத்தைத் தேடிக் கண்டுபிடித்து ராதா கன்ஸ்ட்ரக்ஷன் என்று இருந்த அந்த போர்டைப் படித்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர் நால்வரும்.
என்ன தான் நால்வரும் அவர்களிடம் இருப்பதிலே சிறந்த உடை அணிந்திருந்தாலும் அதுவும் பழையதாகத் தான் இருந்தது. அவர்களின் தோற்றம் அவர்களின் நடுத்தர வர்க்கத்தின் நிலையை படம் போட்டுக் காட்ட வாட்ச்மேன் ஒருவன் ஓடி வந்து, “யாரும்மா நீங்க, ஏதாவது டொனேஷன் கேட்டு வந்தீங்களா? அதுக்கெல்லாம் இங்க வரக்கூடாது போங்கம்மா.” என்றான் எடுத்த எடுப்பில். வருங்கால மருமகள்களுக்கு வாசனையாய் கிடைத்தது வரவேற்பு.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
+1

