
அத்தியாயம் 38
“ருக்கு என்னாச்சு உங்களுக்கு.” கேள்வியோடு தெய்வா அருகே வர, தன் ஆசை மனைவியின் உடல் வெளிப்படையாகவே நடுங்குவதைக் கண்டான். சாதாரண ஒரு கேள்வி தானே அதற்கு ஏன் இத்தனை நடுக்கம் எனப் பதறினான்.
சில நாள்கள் முன்பாக குடும்ப வன்முறை குறித்து புகார் கொடுக்க வந்த பெண் இதே போல் நடுங்கியது நினைவு வர, மனைவிக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்கிற அளவு உணர்ந்தான் தெய்வா.
அவளைத் தன்னோடு நெருக்கமாக அணைத்துக்கொண்டவன், “ஒன்னும் இல்ல ருக்கு, என்னைத் தாண்டி எதுவும், யாரும் உங்ககிட்ட வர முடியாது.” என்க, தானும் கணவனை அணைத்துக்கொண்டாள் அவள்.
சற்று நேரம் கழித்து அவள் பயம் குறைந்து, உடல் உதறல் நின்று சின்ன விசும்பல் மட்டும் நீடித்திருந்தது. தெய்வா தன் மனைவியைத் தன்னை விட்டுப் பிரிக்க முற்பட, அவள் அதற்கு அனுமதிக்கவில்லை.
லீலா அனுப்பிய குறுஞ்செய்தி பற்றி நினைவு வர, அதில் இதைப் பற்றி ஏதாவது இருக்கலாம் என்கிற நினைப்பில் வேகமாக அதைத் திறந்து பார்த்தான். அவன் நினைத்தது போலவே, “ருக்குவோட குணமே பயப்படுறது தான் என்றாலும் அவ வேலைக்குப் போன காலத்தில் நடந்த சம்பவம் தான் அவளை ரொம்ப பயந்தவளா மாத்திடுச்சு.
ஊர்மி அளவுக்கு இல்லாமப் போனாலும் கொஞ்சமாச்சும் அவ தைரியமாகணும். அதுக்காகத் தான் அவளுக்குப் போலீஸ் னா எவ்வளவு பயம் னு நல்லாத் தெரிந்திருந்தும் உங்களை அவளுக்கு மாப்பிள்ளையாத் தேர்ந்தெடுத்தேன்.
நடந்ததை நான் சொல்றதை விட அவ மூலமாக் கேளுங்க. அப்ப தான் அவளோட மனசு, அதில் இருக்கிற பயம் உங்களுக்குப் புரியும்.” என்றதோடு வேறு பேச்சு பேசி இருக்க அதைப் புறந்தள்ளி விட்டு மனைவியை வலுக்கட்டாயமாகப் பிரித்து தன் முகம் காண வைத்தான்.
அதிலே அவள் அரண்டு விட, “என்னாச்சு ருக்கு, எந்தப் போலீஸ்காரனால் என்னாச்சு உங்களுக்கு.” என்று கோபமாக வினவினான். அது அவள் மீது வந்த கோபம் அன்று. அவளை இந்தளவு பயம் கொள்ள வைத்த போலீஸ்காரன் மேல் வந்த கோபம்.
“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் அது. அப்ப தான் படிப்பை முடிச்சிருந்தேன். அக்கா மட்டும் வேலைக்குப் போய் கஷ்டப்படுறாங்கன்னு நானும், ஊர்மியும் வேலை தேடி அலைஞ்சுக்கிட்டு இருந்தோம். எனக்கு ஒரு ஆரம்பப்பள்ளியில் வேலை கிடைச்சது.
அந்தப் பள்ளிக்கூடத்துக்குக் கொஞ்ச தொலைவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் உண்டு. அதில் வேலை செய்யுற இன்ஸ்பெக்டர் ஒருத்தரோட பையன் என் க்ளாஸில் தான் படிச்சான். அவனோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம இருக்கிறதா மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்.” என நிறுத்தினாள்.
“அந்தப் பையனோட அப்பா தான் பிரச்சனைக்குரிய போலீஸா?” என்க, ஆம் எனத் தலையாட்டிய ருக்கு தொடர்ந்தாள்.
“பையனைக் கொண்டு வந்து விட, திரும்பக் கூப்பிடன்னு வரப்போக இருந்த அந்த போலீஸ் என்னை நிறுத்தி இரண்டு வார்த்தையாவது பேசாமப் போக மாட்டார். ஆரம்பத்தில் எனக்கு அது தப்பாத் தெரியல. நாள் போகப் போக அவர் என்னோட தனிப்பட்ட தகவல்களை அதிகம் கேட்பது போல தெரிந்தது. அதுக்கு அப்புறம் நான் அவரை அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன்.
பள்ளிக்கூடம் முழுக்க நான் தான் அவன் அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு அந்தப் பையனை விட்டுச் சொல்ல சொல்லி இருக்காருன்னு, தெரிய வந்தப்ப தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி சண்டை போட்டேன்.” என்றவளை ஆச்சர்யமாகப் பார்த்தான் தெய்வா.
அவர் ரொம்பச் சாதாரணமா, “என் பொண்டாட்டி எப்ப வேண்ணாலும் செத்திடுவா. அதுக்கு அப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். உங்க வீட்டில் தான் ஆண்துணை இல்லையே. போலீஸ்காரன் வீடுன்னா உங்களுக்கும், உங்க அக்கா தங்கச்சிங்களுக்கும் பாதுகாப்பு தானேன்னு ரொம்ப ஒருமாதிரிப் பேசினான்.
நான் லீலா அக்காகிட்ட சொன்னேன். ஹச்.எம் விட்டு அவர்கிட்ட பேச வைச்சோம். அக்காவும் தனிப்பட்ட முறையில் பேசிப்பார்த்தாங்க. அவர் யார் சொல்வதையும் கேட்கல. போக வரும் போதெல்லாம் கையைப் பிடிச்சு இழுக்கிறது, கோடு தாண்டிப் பேசுறதுன்னு தப்பா நடந்துக்கிட்டு இருந்தார். தட்டிக்கேட்க வந்த ஆண் ஆசிரியர்களைக் கூட பொய் கேஸ் போடுவேன்னு சொல்லிப் பயமுறுத்திட்டார்.
லீலாக்காக வேலையை விடச் சொல்லி சொன்னாங்க. எனக்கும் அது தான் சரின்னு தோணுச்சு. வேலை வேண்டாம் னு எழுதிக் கொடுத்துட்டு வந்தப்ப.” என்றவள் அந்த இடத்தில் நிறுத்தி சத்தமாக விசும்ப ஆரம்பித்தாள்.
“என்ன ஆச்சு ருக்கு” தெய்வாவும் பதறினான். மனைவியின் குணத்திற்கு அவன் எதுவும் இவளிடம் தவறாக நடந்து கொண்டிருந்தால் உயிரையே விட்டிருப்பாள் என்பது புரிய, யார் என்றே தெரியாத அவனைக் கொன்று போடும் அளவு வெறி வந்தது. தன் சொந்த உணர்வுகளைத் தாண்டி, இப்போது மனைவியைப் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதால் மனதைத் தேற்றிக்கொண்டு, அவளை மேலே சொல்லச் சொல்லி ஊக்குவித்தான்.
“என்னை இரண்டு லேடி போலீஸ் வைச்சு இழுத்துட்டுப் போய், போலீஸ் ஸ்டேஷனில் வைச்சு, என் கண்ணு முன்னாடி ஒருத்தனைப் போட்டு அந்த அடி அடிச்சார்.
நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்காமப் போனா எனக்கோ இல்லை என் அக்கா, தங்கச்சிங்களுக்கோ இந்த அடி தான் விழும் னு என்னைக் கூட்டிட்டுப் போன லேடி போலீஸ் என்னை ரொம்ப பயமுறுத்தினாங்க.
பிராத்தல் கேஸ் போட்டா என்ன செய்யுவ. போலீஸ்காரங்களைப் பகைச்சுக்க முடியாது. பேசாம அவர் சொல்வதைக் கேளுன்னு என்னை ரொம்பவே மிரட்டினாங்க” என்க, கை முஷ்டி எல்லாம் இறுகியது தெய்வாவிற்கு.
“அப்புறம் எப்படி இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிச்சீங்க.” கோபத்தை எல்லாம் அடக்கிக்கொண்டு முடிந்தவரை மென்மையான குரலில் கேட்டான்.
அதுவந்து எனத் தயங்கினாள் ருக்கு. இதுவரை அவள் சொன்னது அனைத்தும் அவள் சம்பந்தப்பட்ட விஷயம் அதனால் இலகுவாகச் சொல்ல முடிந்தது. இது அவள் அக்கா லீலா சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தயங்கினாள்.
“சொல்லுங்க ருக்கு” எனத் தெய்வா ஊக்கம் கொடுக்க, “லீலா அக்காவுக்குத் தெரிஞ்ச ஒருத்தர், கைலாஷ் என்று பெயர்.” என்று தடுமாறினாள்.
“ஆண், பெண் நட்பைத் தவறாக நினைக்கிறதும், அதைப் பத்தி தப்பா போட்டுக்கொடுத்து இன்னொரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க நினைக்கிறதும் எனக்கு வராது ருக்கு.” மனைவியின் பயத்தை உணர்ந்து தெய்வா சொல்ல, நிம்மதியானவள் தொடர்ந்தாள்.
“கைலாஷ் சென்ட்ரல் மினிஸ்டர் பையன். அவரே நேரடியா அக்கா கூட போலீஸ் ஸ்டேஷன் வந்து, என்னை மீட்டெடுத்தார். பிரச்சனை பண்ண போலீஸ்காரனை அவர் பயங்கரமா மிரட்டினதோட நிறுத்தாம, உயர் அதிகாரிகளை விட்டு பேசவும் வைச்சார்.
இனிமேல் அவரால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதுன்னு எழுதி வாங்கி எங்ககிட்ட கொடுத்தார். இத்தனைக்குப் பிறகும் அவருக்குக் கட்டாயப் பணிமாறுதல் கொடுத்து வேறு ஊருக்குப்போக வைச்சு பிரச்சனையை நல்லபடியா முடிச்சுக்கொடுத்தார்.” என்று நன்றியுடன் முடித்தாள் ருக்கு. கைலாஷ் என்பவன் மீது, மனைவிக்கு மலையென நன்றியுணர்வு குவிந்து கிடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான் தெய்வா.
“பெரிய இடத்து ஆள்கள் கூட எல்லாம் பழக்கம் இருக்கும் போலவே. உங்ககூட சண்டை போடுவதற்கு முன்னாடி இனி நானும் ஒருமுறைக்கு நாலு முறை யோசிக்கணும்.” என்று சிரித்தான் தெய்வா.
ருக்குவின் முகம் இன்னமும் தெளியாமல் இருப்பதைக் கண்டு, “அதுதான் நீங்க, உங்க அக்கா எல்லோரும் சேர்ந்து ரொம்ப அழகா திட்டம் போட்டு பிரச்சனையை முடிச்சாச்சே. அப்புறம் என்ன.” நம்பிக்கையூட்டப் பார்த்தான்.
“எனக்குப் பிரச்சனை முடிந்தது. ஆனா அதே பிரச்சனை லீலா அக்காவுக்கு வந்தது.” என்க, அந்தக் கைலாஷா என்றான் தெய்வா.
ருக்கு அவனை ஆச்சர்யமாகப் பார்க்க, “தன் அப்பா பவரை வைச்சு, அந்த போலீஸ்காரனை மிரட்டி எழுதி வாங்கின வரை ஓகே. ஆனால் அந்தப் போலீஸ்காரனை பணியிட மாற்றம் செய்தது எல்லாம் அதிகப்படி அக்கறை தானே. அப்பவே இப்படி ஒரு திருப்பத்தை யூகிச்சேன். உங்க அக்கா அதை எப்படிச் சமாளிச்சாங்க.” என்றான் கேள்வியாய்.
“கைலாஷ் அதுக்கு முன்னாடியே அக்காவை விரும்புறதா சொன்னவர் தான். அப்பப்ப அக்காவைப் பார்க்கிறதுக்காக அவங்க வேலை செய்யும் இடத்துக்கு வருவார். அப்படி அன்னைக்கும் வந்திருக்கார்.
நான் போலீஸ் ஸ்டேஷன் போன விஷயம் தெரிந்ததும், அவசரத்துக்கு யார்கிட்ட உதவி கேட்கிறதுன்னு தெரியாம, அக்கா அவர்கிட்ட கேட்டிருக்காங்க.
கேட்ட அடுத்த நிமிஷமே இத்தனை பெரிய உதவியைச் செய்து கொடுத்தவருக்கு, முகத்துக்கு நேரா மறுப்பு சொல்ல முடியல அக்காவால். அதுக்காக கைலாஷ் காதலை ஏத்துக்கவும் அவங்களுக்கு மனசு இல்லை.” ருக்கு நிறுத்த, யோசனையுடன் நாடியைத் தேய்த்தான் தெய்வா.
“கைலாஷ் ரொம்ப நல்லவர். இந்த விஷயத்துக்கு அப்புறம் கூட இதைச் சொல்லிக்காட்டி அவர் அக்காவை கார்னர் பண்ணல. தன்னோட விருப்பம் ஒன்றை வைச்சு தான் அக்காவை சம்மதிக்க வைக்க முயற்சி செய்தார். அவருக்காக அவங்க வீட்டு ஆள்கள் கூட ஒத்துக்கிட்டாங்க.
எங்களை நினைச்சு அக்கா கடைசி வரை பிடிகொடுக்கவே இல்லை. எங்களையும் கூடவே வைச்சுக்கலாம் னு கைலாஷ் வீட்டில் சொல்லியும், அது எங்களுக்கு மரியாதையா இருக்காதுன்னு சொல்லி மறுத்துட்டாங்க.” ருக்கு சொல்ல, லீலாவின் செயல் பைத்தியக்காரத்தனம் என்றே தோன்றியது தெய்வாவிற்கு.
கைமேல் பலனாகக் கிடைத்த நல்ல வாழ்வை உடன்பிறந்தவர்களுக்காக உதறியவள் அவன் கண்ணுக்குப் பைத்தியம் போல் தெரிந்தாள்.
என்னவோ லீலா அந்தப் பைத்தியக்காரத்தனம் செய்திருக்காவிட்டால் ருக்கு தனக்குக் கிடைத்திருக்க மாட்டாள் என்பது வரை சமாதானமானான்.
என்ன தான் ருக்குவிடம் அவனுக்குப் பிடிக்காத குணங்கள் இருந்தாலும், அவள் நிறைய மாற்றமடைய வேண்டும் என்று நினைத்தாலும் அவனுக்கு அவள் மீது இருந்த பிரியம் மட்டும் குறையவே இல்லை.
“உங்களுக்கும், உங்க அக்காவுக்கும் ஒரே மாதிரியான பிரச்சனை தான் நடந்தது. அவங்க உங்களை மாதிரி வீட்டுக்குள்ள முடங்கிடலையே. தனியாப் போராடிக்கிட்டு தானே இருந்தாங்க.” தெய்வா மனைவிக்குப் புரியவைக்க நினைக்க, “அக்காவுக்கும் எக்கச்சக்க பயம் இருக்கத்தான் செய்தது. ஆனா எங்களை நினைச்சு பயத்தை மறைச்சு தினம் தினம் கைலாஷை எதிர்கொள்வாங்க. கூடவே கைலாஷ் அந்த போலீஸ்காரர் மாதிரி தப்பானவர் கிடையாதே.” என்று பெருமையாக முடித்தாள் ருக்கு.
“சரி விடுங்க, இப்ப அந்தப் போலீஸ்காரனை நான் ஏதாவது செய்யட்டுமா?” என்க, “வேண்டாம் இப்ப அந்த ஆள் எங்க இருக்காரோ என்னவோ. முடிந்து போன ஒன்றைத் துவங்கி வைக்க வேண்டாம்.” என்றாள் வேகமாய்.
“இருந்தாலும் லீலா உங்களைக் கொஞ்சம் தைரியமா வளர்த்திருக்கலாம்.” என்க, ருக்குவிற்குக் கோபம் வந்தது.
“இங்க பாருங்க இன்னொரு தடவை என் அக்காவை பேர் சொல்லிக் கூப்பிடாதீங்க. அண்ணன் பொண்டாட்டிங்கிற முறையிலும் சரி, பொண்டாட்டியோட அக்காங்கிற ஸ்தானத்திலும் சரி எப்படி பார்த்தாலும் அவங்க உங்களுக்கு அண்ணி. அந்த உறவு முறைக்கு மரியாதை கொடுத்து உங்க மரியாதையை காப்பாத்திக்கோங்க.” என்றுவிட்டு கோவமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள் ருக்கு.
“ஆத்தாடி, தென்றல் மாதிரி இருந்த ருக்கு அக்காவைச் சொன்னதும் புயலா மாறிட்டாங்களே. நான் நினைச்சதை விட ஆபத்தான பாசமே இருக்கே.” மனதோடு நினைத்தான் தெய்வா.
நாகா அறையில், “அடடே வாம்மா என் பத்தினி தெய்வமே. இன்னைக்கு புருஷங்காங்காரன் சாப்பிட என்ன பண்ணி இருக்க.” அலப்பறையை ஆரம்பித்தான்.
“சப்பாத்தியும் குருமாவும் அக்கா பண்ணாங்க.” தான் பேசிய பேச்சிற்கான எதிரொலி எனத் தெரிந்ததால் அமைதியாகவே பேச்சை ஆரம்பித்தாள் ஊர்மி.
“ஓ… அப்போ மேடம் சும்மா தான் இருந்தீங்க. ஆமா நாள் முழுக்க சும்மா இருக்கிறதுக்கு உன்னால எப்படி முடியுது.” என்க, “என்ன பண்றது மூணு நாளா அடிக்கிற காத்து அதோட வேலையைக் காட்டுது.” பூடகமாகச் சொன்னாள். அவள் சொல்லின் அர்த்தம் புரியாதவன் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க, இவள் அறைக்குள் வந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிட்டாள்.
“ஆமா நீ” என்ற நாகா திரும்ப அங்கே ஊர்மி இல்லை. “அதுதானே இந்தப் பொண்டாட்டிங்க எல்லாம் புருஷங்காரனுக்கு மரியாதை கொடுத்து பக்கத்தில் நின்னு பொறுமையாப் பேசிட்டா, உலகம் தலைகீழா சுத்த ஆரம்பிச்சிடுமே.
நானெல்லாம் எப்படிப்பட்ட பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, எந்த இடத்தில் எப்படியெல்லாம் ஹனிமூன் கொண்டாட வேண்டியவன் தெரியுமா?
என்னை இப்படிக் கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரியா இருக்க வைச்சிட்டாளே என் அருமைப் பொண்டாட்டி. மயக்கமா கலக்கமா.” பாட்டு பாடிக்கொண்டே படுக்கையில் சாய்ந்தான் நாகா.
செல்வாவின் அறையில், “லீலா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.” செல்வா கேட்க, “அது என்ன எப்பப் பார்த்தாலும் இப்படியே பேச்சை ஆரம்பிக்கிறீங்க. நான் உங்க பொண்டாட்டி எதுவா இருந்தாலும் உரிமையா சொல்லுங்க. கோபமோ, தாபமோ, சண்டையோ, சமாதானமோ எதுவா இருந்தாலும் நமக்குள்ள தானே.” என்றாள்.
“எங்க ஹாஸ்பிடல் சார்பா மலைக்கிராம மக்களுக்கு அவங்க இடத்திலே போய் இலவசமா மருத்துவம் பார்க்கிறதுக்காக ஒரு மெடிக்கல் கேம்ப் அரேன்ஜ் பண்ணி இருக்காங்க. அதுக்கு என்னையும் சேர்த்து இருக்காங்க.” தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னான்.
“இதைச் சொல்லுறதுக்கு ஏங்க இவ்வளவு தயங்குறீங்க. இது உண்மையில் ரொம்ப நல்ல விஷயம். நீங்க சந்தோஷமா போயிட்டு வாங்க.” என்றாள்.
“இல்ல கல்யாணம் ஆகி நாலு நாள் கூட ஆகல. அதுக்குள்ள உங்களை அடிக்கடித் தனியா விட்டுட்டு போறேன்னு உங்களுக்கு வருத்தமா இல்லையா?” என்றான்.
“இதில் வருத்தப்பட என்னங்க இருக்கு. புருஷன் பொண்டாட்டி கூட நேரம் செலவழிக்கணும் தான். அதுக்காக அவங்க பொண்டாட்டியை மட்டுமே பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா. எனக்கு உங்க நிலைமை நல்லாவே புரியுது.
டாக்டர், போலீஸ், ஆர்மிக்காரரை கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க தங்களோட சுகதுக்கங்களை மட்டுமே பார்க்கக்கூடாதுன்னு புரிஞ்சுக்க முடியாதவ இல்ல நான்.
நீங்க போறது நல்ல காரியத்துக்காக. அதனால எந்த வருத்தமும் இல்லாம சந்தோஷமா போயிட்டு வாங்க. நமக்கான காலம் நீண்டு கிடக்கு.” சொன்ன மனைவியைப் பெருமையாகப் பார்த்தான் செல்வா. நாளுக்கு நாள் அவன் மனதில் உயரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருந்தாள் லீலா.
“எத்தனை நாள் கேம்ப், எப்ப கிளம்பணும்.” என்க, “ஐந்து நாள் கேம்ப், இன்னைக்கு நைட்டே கிளம்பணும்.” என்றான்.
“இன்னைக்கு நைட்டே கிளம்பணுமா?” சின்னதாய் பிசிரடித்தது லீலாவின் குரலில். புரிந்து கொள்ளும் மனைவி என்றாலும் தன் பிரிவில் அவளுக்குத் துளிகூட வருத்தம் இல்லையா என்று செல்வாவிற்குள் இருந்த வருத்தம் ஆதவன் கரம் பட்ட பனித்துளியாக மறைந்து போய் விட்டிருந்தது.
“என்ன லீலா” சிரிப்புடன் கேட்டான். “உடனே கிளம்பணும் னு சொல்றீங்களே. எப்படியும் நாளைக்கு தான் கிளம்புவீங்க. இட்லி பொடி, இன்ஸ்டண்ட் மிக்ஸ் எல்லாம் கொஞ்சம் வாங்கி கொடுத்து அனுப்பலாம் னு நினைச்சேன்.” தன்னைப் பிரியும் கவலைக்கு வாயில் வந்த காரணம் சொல்கிறாள் எனப் புரிந்தவன் சத்தமாக நகைத்தான்.
“என்ன லீலா நீங்க, நான் என்ன பிக்னிக்கா போறேன். அங்க போய் வாய்க்கு ருசியா சாப்பிடுறதுக்கு. மெடிக்கல் கேம்ப் அங்க சரியா சாப்பிடுறதுக்கே நேரம் இருக்காது. அதோட என்கூட நிறைய பேர் இருப்பாங்க. வீட்டில் இருந்து கொண்டு போய் சாப்பிட்டா கிண்டல் பண்ணுவாங்க. கேம்ப் முடிஞ்சதுக்கு அப்புறம் மொத்தமா எனக்கு ஒரு வாரம் லீவ். அப்ப நீங்க நல்லா சமைச்சுக் கொடுங்க. நான் சப்புக்கொட்டி சாப்பிடுறேன் சரியா. இப்ப நான் கிளம்பணும். எனக்கு கிளம்புறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?” உரிமையாய் கேட்க, “நீங்க போய் குளிச்சிட்டு வாங்க நான் எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கிறேன்.” என்றவள் சொன்னது போல் செய்தும் வைத்தாள்.
“எல்லாம் வைச்சிட்டீங்களா லீலா?” என்க, “ஏழு செட் ட்ரஸ், மூணு நைட் ட்ரஸ், டவல், மினி சோப்பு, மினி பேஸ்ட், ப்ரஷ், போன், சார்ஜர், பவர்பேங்க், குடை, ஸ்வெட்டர், வாட்டர் பாட்டில், கேண்டில்ஸ், லைட்டர், டார்ச், கொஞ்சம் ஸ்நேக்ஸ் எல்லாம் வைச்சுருக்கேன். வேற எதுவும் வேணுமாங்க.” என்றவளை அமர்த்தலாகப் பார்த்தான் அவள் கணவன்.
“என் பாதி வேலையை குறைச்சிட்டீங்க லீலா நீங்க. இந்த ஒவ்வொன்னையும் ஒவ்வொரு முறை கேம்ப்புக்கு போகும் போதும் கண்டுபிடிக்க நான் படுற பாடு அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும்.” புன்னகைத்தான் அவன்.
“நீங்க சிரிச்சா உங்க முகம் இன்னும் கம்பீரமா இருக்கு.” இரசனையாய் சொன்னாள் லீலா.
“என்ன” என்றான் செல்வா. மனைவி சைட் அடிப்பது உள்ளுக்குள் சந்தோஷ ஊற்றை உற்பத்தி ஆக்கி இருந்தது.
“பொதுவா பசங்க வாய்விட்டு சிரிச்சா குழந்தைத்தனம் தெரியும் னு சொல்லுவாங்க. மிகச்சிலருக்கு தான் சிரிப்பு கூட ஒருவிதமான கம்பீரமா தெரியும். அப்படி ஒரு கம்பீரம் உங்க சிரிப்பிலும் இருக்கு.” என்றாள்.
“நான் சிரிக்கும் போது உங்க கண்ணுக்கு கம்பீரமா மட்டும் இல்ல அழகாவும் தெரியுறேன். உங்களுக்கு சைட் அடிக்க வசதியா இருக்குன்னு சொல்றீங்க அப்படித்தானே.” என்க, “நான் ஹாலில் இருக்கேன் நீங்க சீக்கிரம் வந்திடுங்க.” என்றுவிட்டு வெட்கத்தை மறைத்து வேக எட்டு வைத்தாள் லீலா.
தர்மா அறையில், “தேவகி நாளைக்கு நமக்கு இன்டர்வியூ இருக்கு. காலையில் பத்து மணிக்கெல்லாம் அங்க இருக்கணும்.” என்றான் தர்மா.
“பாடம் சொல்லிக்கொடுக்கப் போற உங்களுக்கு இன்டர்வியூ சரி. படிக்கப் போற எனக்கு எதுக்கு இண்டர்வியூ.” சந்தேகம் கேட்டாள் தேவகி.
“அதுதான் எனக்கும் தெரியல. போய் பார்த்தா தான் தெரியும். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்.” என்ற கணவனின் வார்த்தையில் புன்னகைத்தவள், ”எனக்கு ஒரு சந்தேகம் கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே” என்றாள் மொட்டையாக.
“நான் தப்பா எடுத்துக்கிற அளவுக்கு அப்படி என்ன கேட்டுடுவீங்க நீங்க?” புருவம் ஏற்றி இறக்கினான் அவன்.
“இல்லை உங்களுக்கு தர்மான்னு பேரு வைச்சதால நீங்க இப்படி இருக்கீங்களா, இல்ல நீங்க இப்படித்தான் இருப்பீங்கன்னு தெரிஞ்சு அதனால உங்களுக்கு தர்மான்னு பேரு வைச்சாங்களா?” அதி முக்கியக் கேள்வி போல் நினைத்து கேட்டவளைப் பார்த்துப் புன்னகைத்தவன்,
“அதை நீங்க என் அப்பாகிட்ட தான் கேட்கணும். அவர் தான் எனக்கு இவ்வளவு அழகான பேரை வைச்சாரு. ஆனா இதுதான் சாக்குன்னு தர்மா தர்மான்னு என் பேரை சொல்லி கூப்டிட்டீங்க பார்த்தீங்களா?” சீண்டினான்.
“ஏன் பொண்டாட்டி புருஷன் பேரை சொல்லி கூப்பிடக் கூடாதா?” இதழ்களைச் சுழித்து அழகு காட்டினாள் பெண்.
“எவன் சொன்னான், புருஷன் பொண்டாட்டியை பேரு சொல்லிக் கூப்பிடும் போது, பொண்டாட்டி கூப்பிட்டா தப்பே இல்லை. நீங்க தாராளமா என்னைப் பேர் சொல்லியே கூப்பிடலாம். ஆனா காலேஜில் மட்டும் என்னை அப்படிக் கூப்பிடாதீங்க மானம் போயிடும்.” அவன் சொல்ல இவளும் சிரிக்க ஆரம்பித்தாள்.
தெய்வாவின் மேல் கோவம் கொண்டு ஆங்கிரிபேடாக மாறி இருந்த ருக்கு ஆங்கிரிபேட் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
“ருக்மணி” செல்வா அழைக்கவும் பதறிக்கொண்டு நிமிர்ந்தவள் பெட்டியும் கையுமாக வந்திருந்தவனைப் பார்த்ததும், “ஐ மாமா அக்காவை வெளியே கூட்டிட்டு போறீங்களா? சூப்பர் மாமா. அக்காவுக்கு பனிப்பிரதேசம் ரொம்பப் பிடிக்கும். அப்படி ஏதாவது ஒரு ஊருக்கு கூட்டிட்டு போங்க மாமா.” அத்தனை ஆசையாகச் சொன்னாள்.
சங்கடப்பட்டுப் போனவன், “இல்ல ருக்கு நீங்க நினைக்கிற மாதிரி நானும், லீலாவும் வெளில போகல. நான் மட்டும் வேலை விஷயமா கொஞ்சம் வெளில போறேன். வர ஐந்து நாள் ஆகும் அதுவரைக்கும் லீலாவைப் பார்த்துக்கோங்க.” என்க முகம் சுருக்கினாள் ருக்கு.
அதைக் கவனித்தவன், “நான் திரும்ப வந்ததும் கண்டிப்பா உங்க அக்காவை எங்கேயாவது வெளியே கூட்டுட்டு போறேன்.” என்க, முகம் மலர்ந்தவள், “நீங்க பத்திரமா போயிட்டு வாங்க மாமா, நான் அக்காவைப் பார்த்துக்கிறேன்.” என்றாள் புன்னகையுடன்.
“நான் போயிட்டு வரேன் லீலா. வேலை அதிகமா இருக்கும் என்னால அடிக்கடி போன் பண்ண முடியாது. அதைத் தப்பா எடுத்துக்காதீங்க. ஆனா இங்க ஏதும் அவசரம் னா தயங்காம எனக்குப் போன் பண்ணுங்க சரியா, பத்திரமா இருங்க நான் போயிட்டு வந்திடுறேன்.” என்றவன் தான் திரும்பி வரும் போது வீட்டு நிலைமை என்னவாக இருக்கும் என்ற விபரீதத்தை அறியாமல் நிம்மதியாக கிளம்பிச் சென்றான்.
இரவில், “ருக்கு ரூமுக்கு வராம இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அப்புறம் செல்வா கூட உங்களுக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு.” நேரடியாகக் கேட்டான் தெய்வா.
வெளிப்படையாகவே அவனை முறைத்தவள், “அவர் எனக்கு அக்கா புருஷன். என் மாமா, அக்காவில் பாதி. அவர் கூட பேசக்கூடாதுன்னு சொல்ற உரிமை என் அக்காவுக்கே கிடையாதுங்கும் போது நீங்க எப்படிச் சொல்லலாம்.
கடுப்பைக் கிளப்பாம ரூமுக்குப் போங்க, நான் பால் ஆத்தி எடுத்திட்டு வந்திடுறேன்.” என்றவள் பாலை ஆற்றிக் கொண்டே பயங்கர யோசனையில் இருந்தாள்.
“என்ன ருக்குக்கா பயங்கர யோசனை போல. இப்படி யோசனையோட பால் ஆத்தினா பால் அடுத்த டம்ளரில் பாதி தரையில் பாதி தான் போய் சேரும்.” என்றபடி கிச்சனுக்குள் வந்தாள் ஊர்மி.
“ஊர்மி நான் உன்னைத் தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். நீயே வந்திட்ட, செல்வா மாமா ஊருக்குப் போன விஷயம் உனக்குத் தெரியும் தானே.” என்க, “ஆமா அதுக்கு என்ன இப்ப.” சாதாரணமாய் கேட்டாள் ஊர்மிளா.
“இல்ல அக்கா தனியா எப்படித் தூங்குவாங்க. நான் துணைக்கு அக்கா கூட படுத்துக்கலாம் னு பார்த்தா, உன் மாமா என்னைத் திட்டுவாரு. ஏற்கனவே சாயங்காலம் சின்ன வாக்குவாதம். இப்ப நான் போய் இதைச் சொன்னா கண்டிப்பா சண்டையாகிடும். இன்னைக்கு ஒருநாள் நீ அக்கா கூட இரு. நாளைக்கு உன் மாமாவை எப்படியாவது தாஜா பண்ணி நான் அக்கா கூட படுத்துக்கிறேன்.” என்றாள் ருக்கு.
“அக்கா என்ன சின்னப்பிள்ளையா? நாம துணை இருக்க.” சிரித்தபடி கேட்டாள் ஊர்மி.
“என்னன்னு தெரியல ஊர்மி, அக்காவைத் தனியா விடக்கூடாதுன்னு உள்மனசு சொல்லுது.” என்றாள். என்னவென்று தெரியாத போதும் ஏதோ ஒருவித நெருடல் இருந்துகொண்டே இருந்தது ருக்குவிற்கு.
கூடுதலாக அதுநாள் வரை ஒருவார்த்தை கூட பேசாத செல்வா இன்று தன்னை உரிமையாக பெயர் சொல்லி அழைத்ததும், லீலாவைப் பார்த்துக்கொள்ளச் சொன்னதும் இன்னமும் தான் அவள் மனதை உறுத்தியது.
“தமக்கையின் உணர்வுகளை மதித்தவள், சரிக்கா நீ சொன்ன மாதிரியே நான் செய்யுறேன். பால் ஆறுது பாரு, நீ போய் மாமாவுக்கு இதைக் கொடுத்திட்டு நிம்மதியா இரு. அக்காவை நான் பார்த்துக்கிறேன்” என்றாள் ஊர்மி. அதற்கு நாகா என்றொருவன் விடவேண்டும் என்பதை சௌகர்யமாக மறந்துவிட்டாள் அவள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன பிரச்சனை நடக்க போகுது … செல்வா என்னப்பா டயலாக்கை மாத்தி சொல்லிட்டு போற … லீலா கிட்ட போய் அவங்க கூட அளவா பழகணும்னு தான எப்பவும் சொல்லிட்டு போவ …
அதான நாகா விட மாட்டானே…