
அத்தியாயம் 37
“பரவாயில்லை தேவகி நான் கூப்பிட்டதும் இவ்வளவு தூரம் என்கூட வெளியில் வந்துட்டீங்க.” கேலியில் இறங்கினான் தர்மா.
“ஏன், இதில் ஆச்சர்யப்படுறதுக்கு அப்படி என்ன இருக்கு.” விவரம் புரியாமல் கேட்டாள் அவன் மனைவி.
“இல்ல உங்க அக்காங்களை விட்டுட்டு வர மாட்டேன்னு சொல்லிடுவீங்களோன்னு நினைச்சேன்.”
“தனியா வெளியே போகலாமான்னு தானே கேட்டீங்க. தனிக்குடித்தனம் போகலாம் னு கேட்டு இருந்தா கண்டிப்பா என் பதில் வேற மாதிரி தான் இருந்திருக்கும். புருஷனோட அநியாய ஆசைகளுக்குத் தான் துணை போக முடியாதே தவிர, உங்களை மாதிரி நியாயமான புருஷனோட நியாயமான ஆசைகளை நிறைவேத்த என்ன வேண்ணா செய்யலாம்.” உண்மையான அன்புடன் சொன்னாள்.
“நானே கூப்பிட்டாலும் தனிக்குடித்தனம் வரமுடியாதுன்னு தைரியமா சொல்றீங்களே. நான் கோபப்பட்டு திட்டுவேன்னு கொஞ்சம் கூட பயம் இல்லையா?”
“நான் ஊர்மி அக்கா அளவுக்குத் தைரியமானவ இல்ல தான். ஆனா ருக்கு அக்கா அளவுக்கு பயந்தவளும் கிடையாது. உங்க மனசில் தோன்றும் எல்லா கேள்விகளையும் என்கிட்ட கேட்கிறதுக்கு நீங்க தயங்கல. காரணம் நான் உங்க பொண்டாட்டி, என்கிட்ட எல்லா வித உரிமையும் உங்களுக்கு இருக்கு என்கிற புரிதல். அதே புரிதலால் தான் நானும் தயங்காம உங்க கேள்விக்கு என் மனசில் இருந்து பதில் சொல்றேன்.” சொன்ன மனைவியை மெச்சுதலாகப் பார்த்தான் தர்மா. மற்றவர்களைப் போல் அல்லாமல் தன் வாழ்க்கை சற்றே சுமூகமாகச் செல்லும் என்றே தோன்றியது அவனுக்கு.
அப்படி ஒரு நினைப்பு வரவும் தன்னால் புன்னகைத்தான் தர்மா. “என்ன சிரிக்கிறீங்க” தேவகி கேட்க, “நீங்க என்னை மாப்பிள்ளை பார்க்க வந்த மொமொண்ட் ஞாபகம் வந்திடுச்சு. அப்ப என்னவோ, வாயைத் திறந்தா உள்ள இருக்கிற முத்து கொட்டிடிடுமேன்னு வாயை கம் வைச்சு ஒட்டின மாதிரி அமைதியா இருந்தீங்க. இப்ப இப்படி பேசுறீங்க.” சிரிப்புடனே சொன்னான்.
“இப்ப உங்களுக்கு நான் பேசணுமா, பேச வேண்டாமா?”
“நான் சும்மா சொன்னேன் தேவகி. நீங்க இப்படி கலகலன்னு பேசுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு.” முழு மனதோடு சொன்னான் தர்மா.
“நான் உங்களை ஒன்னு கேட்கவா?” தேவகி கேட்க, “ஒன்னு என்ன பத்தே கேளுங்க. உங்களுக்குப் பதில் சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் வாயில் உள்ள பல்லு கொட்டிடிடுமோன்னு நீங்க பயப்படத் தேவையில்லை.” என்றான்.
“கடவுளே மொக்கையாக் கடிக்கிறாரே. சரி நான் விஷயத்துக்கு வரேன். கலகலன்னு இருக்கிறது தான் உங்களுக்குப் பிடிக்கும் னா ஏன் தனியாப் போக நினைக்கிறீங்க.
தனியாப் போனா நாம ஒருத்தருக்கொருத்தர் மட்டுந்தான் பேசிக்க முடியும். அதுவே எல்லோரும் ஒன்னா இருந்தா இன்னும் கலகலப்பா இருக்கும் தானே.” நேரம் பார்த்துக் கேட்டாள்.
“எல்லோரும் ஒன்னா இருந்தா கலகலப்பா இருக்காது, கைகலப்பா தான் இருக்கும். எங்க நாலு பேருக்குள்ள எப்பவுமே செட் ஆகாது தேவகி. நாலு பேரும் நாலு திசையில் இருந்தா தான் எல்லாருக்கும் நல்லது.” அடித்துச் சொன்னான் தர்மன்.
“இல்லங்க அதுவந்து” அவள் ஏதோ சொல்ல வர, “ப்ச் இதைப் பத்தி இனி பேச வேண்டாமே தேவகி. நானா உங்களை உங்க அக்காங்களை விட்டு என்கூட தனியா வாங்கன்னு சொல்ல மாட்டேன். ஆனா மத்த மூணு பேரும் அவங்கவங்க பொண்டாட்டியைக் கட்டாயப்படுத்தியாவது தனியாக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அப்ப நீங்க என்கூட தனியா வந்து தான் ஆகனும். அதுக்காக என்னை நீங்க தப்பா நினைக்கக் கூடாது.” என்க, அதுவரை இருந்ததற்கு எதிராய் தேவகியின் முகம் சுருங்கியது.
“நான் திரும்பவும் சொல்றேன், நீங்க நாலு பேர் சிஸ்டர்ஸ்ஸா இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நாம எல்லாரும் ஒரே வீட்டில் இருந்தாலும் சரி, தனித்தனி வீட்டில் இருந்தாலும் சரி, எப்பவும் நான் உங்களுக்கும் உங்க அக்காங்களுக்கும் நடுவில் நான் வர மாட்டேன். இதுக்கு மேல இந்த விஷயத்தில் மட்டும் என்கிட்ட இருந்து வேற எதுவும் எதிர்பார்க்காதீங்க ப்ளீஸ்.” இது தான் முடிவு என்பது போல் தர்மா சொல்லிவிட, தேவகியால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.
“என்னடா சொல்ற உன் வொய்ப் இப்படியா பண்ணாங்க?” என்றான் நாகாவின் உருப்படாத நண்பன் ஒருவன்.
“ஆமாடா, அவளைப் பத்தி என்னால ஒரு முடிவுக்கே வர முடியல. அவ தப்பானவதான்னு நான் முடிவு பண்ற நேரத்தில் எல்லாம் செவிட்டில் அடிச்ச மாதிரி, நீ நினைக்கிறது தப்புன்னு புரியவைச்சுட்டுப் போயிடுறா.
அவ தப்பானவளே இருந்தாலும் சமாளிக்கலாம், எனக்கேத்த மாதிரி மாத்திக்கலாம் னு நினைச்சா, என் மேல் நம்பிக்கை இல்லாதவன் கூட எல்லாம் வாழ முடியாதுன்னு சொல்றா. அவளைப் புரிஞ்சுக்கவே முடியல.” சலித்துக்கொண்டான் நாகா. ஊர்மி மீதான நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் கிடந்து அல்லாடிக்கொண்டிருந்தான் அவன்.
“ஏன் மச்சான் இவ்வளவு டென்ஷன் ஆகுற. கல்யாணம் ஆகி சில நாள் தானே ஆகுது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். எத்தனை நாள் அந்தப் பொண்ணு உன்னோட தயவை எதிர்பார்க்காம இருக்க முடியும். இதெல்லாம் சும்மா, இப்படியெல்லாம் சீன் காட்டி உன்னை அட்ராக்ட் பண்ண ட்ரை பண்றா அவ்வளவு தான்.
ஒரு மாசம் போகட்டும் அப்பவும் அந்தப் பொண்ணு அவளோட ஒவ்வொரு தேவைக்கும், உன்னை எதிர்பார்க்காம அவளாவே நிறைவேத்திக்கிட்டு இருந்துச்சுன்னு வைச்சிக்க அந்தப் பொண்ணு உண்மையயிலே நல்லவ தான்னு ஒரு முடிவுக்கு வந்திடுவோம் என்ன சொல்ற.” ஐடியா கொடுத்தான் எதிராளி.
“சூப்பர் ஐடியா மச்சான். இதனால் தான் நீ எடுக்கிற எல்லா கேஸிலும் ஜெயிக்கிற.” முழு மனதோடு பாராட்டினான் நாகா.
செல்வா வேலை செய்யும் மருத்துவமனையில் அவனுக்கு அழைப்பு வந்திருப்பதாக வரவேற்பறைப் பெண் வந்து சொல்லவும், “யார் அது, எனக்குப் போன் பண்ணாம ஹாஸ்பிடல் நம்பருக்குப் போன் பண்ணி இருக்கிறது.” என்ற யோசனையுடனே போனை எடுத்தவன், “ஹலோ“ என்க, நீண்ட நேரத்திற்குப் பின்னால், “செல்வா” என்று எதிர்ப்புறம் ஒரு குரல் கேட்டது.
“லேகா” செல்வா பதற, “என் குரலைக் கூட நீ மறக்கல இல்ல.” சோகமாய் ஒலித்தது வார்த்தைகள்.
“நான் பழகின யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கிறவன் கிடையாது.” பொதுவாகச் சொன்னான்.
“அப்ப உனக்கு இன்னும் என்னை ஞாபகம் இருக்கா செல்வா?”
“உனக்கு நிச்சயதார்த்தம் ஆகிடுச்சுன்னு அழுதுகிட்டே என்கிட்ட போன் பண்ணி சொன்னியே. அன்னைக்கு நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு நல்லா ஞாபகத்தில் இருக்கு.” பொட்டில் அடித்தது போல் சொன்னான் செல்வா.
“உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.” பேச்சை மாற்றினாள் லேகா.
“ஆமா, லீலாவதி அவங்க பேர்.” என்றான்.
“அவ எப்படி இருப்பா செல்வா. என் அளவுக்கு அழகா இருப்பாளா, நல்லாப் படிச்சிருக்காளா, உனக்குப் பிடிச்ச மாதிரி நல்லா மாடர்னா இருப்பாளா. உன் அப்பா பார்த்த பொண்ணாமே. உனக்கு நிஜமாவே அவளைப் பிடிச்சிருக்கா. இல்லை அப்பா சொன்னதுக்காக வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” அடுக்கடுக்காய் வினவினாள்.
“என்னோட மனைவி லீலா ரொம்ப ரொம்ப நல்லவங்க. அப்பா எனக்காக என்ன பண்ணாலும் அது என் நல்லதுக்காக தான் இருக்கும் னு நம்பிக்கையோட தான் நான் லீலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
அந்த நம்பிக்கையை லீலா உண்மையாக்கிட்டாங்க. கல்யாணம் ஆகி இந்த மூணு நாளில் நான் அவங்களை கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிக்கிட்டு வரேன். அவங்க மனசில் கள்ளம், கபடம் எதுவுமே இல்ல.
ஒரு அழகான, அமைதியான வாழ்க்கையை என்னோட வாழ ஆசைப்பட்டு என் கையைப் பிடிச்சிருக்காங்க. நான் அவங்க நம்பிக்கைக்கு உருவம் கொடுக்க ஆசைப்படுறேன்.” கவனமான வார்த்தைகளால் தன் நிலையை வெளிப்படுத்தினான் செல்வா.
“செல்வா உனக்கு நிஜமாவே அவளைப் பிடிச்சிருக்கா டா.” மீண்டும் கேட்டாள் லேகா.
“எனக்கு லீலாவை ரொம்பப் பிடிச்சிருக்கு லேகா. அநாவசியமா என்னைப் பத்தி கவலைப்படாதே. நான் நல்லா இருக்கேன். என் அப்பா எனக்கான ஒரு நல்ல பாதையைக் காட்டி இருக்கார். அந்தப் பாதையில் நானும், லீலாவும் நிம்மதியா பயணிக்கப் போறோம். நீ உன்னோட வாழ்க்கையைப் பாரு. எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. நான் போறேன். அப்புறம் என்கிட்ட பேசணும் னு நினைச்சா தாராளமா என்னோட செல் நம்பருக்கே கூப்பிடு.” என்றான்.
“ஆனா உன் நம்பர் என்கிட்ட இல்லையே செல்வா.” என்க, “எனக்குக் கல்யாணம் ஆன நல்ல விஷயத்தை உனக்கு யார் சொன்னாங்களோ, அவங்ககிட்ட என்னோட நம்பர் கண்டிப்பா இருக்கும். வாங்கிக்கோ நான் வைச்சிடுறேன் பை.” என்றுவிட்டு, மனதில் எந்தவித சலனமும் இல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றான் அவன்.
வீட்டில், “ருக்கு இந்தாங்க உங்களுக்காக ஆசையா பூ வாங்கிட்டு வந்திருக்கேன்.” என்றபடி ஒரு கவரைக் கொடுத்தான் தெய்வா.
அதில் இருந்து சிறிது மட்டும் எடுத்தவள், “இதை நீங்களே எனக்கு வைச்சிவிடுங்க.” என்று அவன் கையில் கொடுத்தாள்.
“இவ்வளவு இருக்கே ஏன் கொஞ்சமா எடுத்துக்கிறீங்க. ஒருவேளை உங்களுக்கு மல்லிப் பூ பிடிக்காதா.” சந்தேகமாய் அவன் கேட்க, “என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க. வாழைப்பழம் வேண்டாம் னு சொல்ற குரங்கும், மல்லிப் பூ வேண்டாம் னு சொல்ற பொண்ணும் உலகத்திலே கிடையாது.
கீழே எல்லாரும் இருப்பாங்க இத்தனை பூவையும் நான் வைச்சிக்கிட்டுப் போனா அவங்க கிண்டல் பண்ணுவாங்க. அதுக்கெல்லாம் எதுக்கு நாம இடம் கொடுக்கணும். இப்ப கொஞ்சமா வைச்சிக்கிறேன். நாளைக்கு முழுசா வைச்சிக்கிறேன்.” ருக்கு சொன்னதும் அவனுக்கு சற்றே நிம்மதி.
எங்கே மீதப் பூவை அக்கா, தங்கைகளுக்கு கொடுக்கப் போகிறேன் என்று கிளம்பிவிடுவாளோ எனப் பதறினான். மற்றவர்கள் வாங்கித் தரும் பூவைப் பங்கிடுவதற்கும், கணவன் அவனாக வாங்கி வந்ததை பங்கிடுவதற்கும் உள்ள வித்தியாசமாவது புரிந்திருக்கிறதே அது வரை நல்லது எனத் தன்னோடு நினைத்துக்கொண்டான்.
கூடவே லட்டு போன்ற சந்தர்பம் மாட்டி இருக்கிறது, இதை வைத்து மனைவியின் மனதில் நங்கூரத்தை இறக்க வேண்டும் என்று முடிவெடுத்தவனாய், “இப்ப தெரியுதா நான் எதுக்காக தனியா போக நினைக்கிறேன்னு. வீட்டில் நிறைய பேர் இருப்பதால் நம்மளோட நியாயமான ஆசைகளைக் கூட யோசிச்சு, திட்டம் போட்டு நிறைவேற்ற வேண்டியதா இருக்கு.
இதுவே நாம இரண்டு பேர் மட்டும் இருந்தா, நீங்க இவ்வளவு சங்கோஜப்பட வேண்டிய அவசியம் இல்லல்ல.” என ஆரம்பித்தான்.
“எங்க ஆரம்பிச்சாலும் அங்கேயே வந்து முடிக்கிறீங்க. நான் உங்ககிட்ட சொன்னது பாதிக் காரணம் தான். இவ்வளவு பூவையும் நான் தலையில் வைச்சிக்கிட்டு பொம்மை மாதிரி அங்கேயும், இங்கேயும் நடந்தா அவங்க என்னைக் கிண்டல் பண்ணுவாங்க, பண்ணல அது இரண்டாவது விஷயம். தலையில் இவ்வளவு வெயிட்டை வைச்சுக்கிட்டு நான் எப்படி ப்ரீயா இருப்பேன் சொல்லுங்க.
நீங்க ஆசையா வாங்கிட்டு வந்து இருக்கீங்க. வேண்டாம் னு சொன்னா உங்களுக்கு வருத்தமா இருக்கும். என் அக்கா, தங்கச்சிங்களுக்கு கொடுக்கிறேன்னு சொன்னா கோவம் வரும். அதனால தான் இப்படி சொன்னேன்.” என்க, தெய்வா நெஞ்சைப் பிடிக்காத குறை.
“வர வர ரொம்ப எதிர்த்துப் பேசுறீங்க ருக்கு. அதோட எப்ப பார்த்தாலும் என்கூட சண்டை போடுறதிலே குறியா இருக்கீங்க. இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்ல.” கணவன் என்கிற மரியாதையைத் தாண்டி அன்பு, என் புருஷனின் யாவும் எனக்குத் தான் என்கிற உரிமை உணர்வு, பொறாமை என எதுவும் இன்னமும் அவளுக்கு வரவில்லையே எனப் பொங்கினான்.
“நான் அப்பவும், இப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கேன். உங்களுக்கு ஏன் என்மேல கோவம் வருதுன்னு எனக்குத் தெரியல. ஒருவேளை உங்களுக்கு என்னைப் பிடிக்காமப் போயிடுச்சா.” தவிப்பாய் கேட்டாள் ருக்கு.
“நீங்க சொன்னது உண்மை தான். நீங்க அப்பவும், இப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க. நான் தான் உங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறேன் போல.” பெருமூச்சுவிட்டுச் சொன்னான் தெய்வா.
ருக்குவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. தன் முகத்தையே பார்த்துக்கொண்டு கலக்கத்துடன் நின்றிருந்த மனைவியைப் பார்த்தவனுக்கு அவளை இப்படி வெள்ளந்தியாக வளர்த்த அவள் தாய் மற்றும் அத்தை மீதும், வேலைக்குச் செல்ல விடாமல் வீட்டோடு பூட்டி வைத்துப் பாதுகாப்பு என்கிற பெயரில் அவள் இறக்கைகளை வெட்டிய லீலா மீதும் கோபம் வந்தது.
போலீஸ் புத்தி இந்த மூன்று நாள்களில் மற்ற பெண்கள் மூவரையும் தொலைவில் இருந்தே நன்றாகக் கவனித்து இருந்தான். அவர்கள் மூவரும் அவன் உடன்பிறந்தவர்களின் மனைவிகளாக மட்டும் இருந்திருந்தால் இதைச் செய்திருப்பானா தெரியாது. ஆனால் அவர்கள் தன்மனைவியின் உடன்பிறந்தவர்கள் என்பதால் செய்தான். தன் மனைவியைத் தனியே தனிக்குடித்தனம் கூட்டிக்கொண்டு செல்ல, அவர்களைச் சமாளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதே என்னும் நினைப்பு தான் அவனை அப்படிச் செய்ய வைத்தது.
அதில் அவன் கண்டு கொண்டது என்னவென்றால் ஊர்மி நால்வரில் அதிக தைரியசாலி. நாகா போன்ற ஒருவனை சமாளிக்கிறாள் என்றால் அது சாதாரணம் அல்ல என்பதைப் புரிந்துகொண்டான்.
லீலா பொறுப்பாக நடந்து கொண்டாள். கிட்டத்தட்ட பெண் செல்வா தான் என்று முடிவு செய்தான். தேவகியும் கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் குரூப்பில் டூப் போல் தன் மனைவி மட்டும் இப்படித் தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறாளே என யோசித்தான். அவளின் அந்தக் குணம் தான் அவனுக்குப் பிடித்தது என்றாலும் இப்போது அவனுக்கு அது போதவில்லை. இது என்னடா பைத்தியக்கார மனது எனத் தன்னையும் சேர்த்து நொந்து கொண்டான்.
“நீங்க ஏன் ருக்கு உங்க அக்கா மாதிரி வேலைக்குப் போகல.” தெய்வா என்னவோ சாதாரணமாகத் தான் கேட்டான். ஆனால் இதுவரை அமைதியாக இருந்த ருக்குவிற்கு நொடியில் பயத்தில் உடல் எங்கும் வெளுத்துப் போக, பார்த்துக்கொண்டிருந்த தெய்வாவிற்குப் பயம் வந்துவிட்டது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தர்மா சொல்வது நியாயம் தான் … அவங்க போயிட்டா அப்புறம் இவங்க தனியா தான இருக்கணும்…
ஸ்னேக் பாபு உன் ஃப்ரெண்ட் எப்படி உன்னை மாதிரியே இருக்கான் … குடுக்கிற ஐடியாவை பாரு …
செல்வா எதார்த்தமா இருக்கான் … பேசுறான் … லேகா லூசு மாதிரி கேள்வி கேட்குது …
தெய்வா வீட்ல இருந்து கேரக்டர் ஸ்டடி பண்ணிட்டு இருக்கியா … ருக்கு கதையை சொல்லிடுமா …