Loading

அத்தியாயம் 36

     விடியற்காலையில், “என்னங்க” என ருக்கு அழைக்க, மறுபடியும் முதலில் இருந்தா எனக் கடுப்பானவன், “இப்ப என்ன வேணும் ருக்கு உங்களுக்கு.” சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த எரிச்சலை வார்த்தைகளில் காட்டிவிட்டான்.

     “ஏன் இப்படி கோபப்படுறீங்க. இதுக்குத் தான் நான் அக்கா கூடவே படுத்துக்கிறேன்னு சொன்னேன். எனக்கு உடம்பு சரியில்லாதப்ப இப்படித்தான் அவங்களை ரொம்பத் தொந்தரவு பண்ணுவேன். ஆனா அவங்க உங்களை மாதிரி இப்படி முகம் சுளிக்கவே மாட்டாங்க தெரியுமா?” என்றாள் பாவமாய்.

     “இன்னொரு தடவை என்னை உங்க அக்கா கூட கம்பேர் பண்ணீங்க, அவ்வளவு தான் சொல்லிட்டேன். உடம்பு சரியில்லாத உங்கனை இராத்திரி முழுக்க கண்ணு முழிச்சுப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கிட்டேன். அதுக்கு நீங்க என்னைப் பாராட்டக் கூட வேண்டாம். இப்படி இன்னொருத்தர் கூட கம்பேர் பண்ணி கஷ்டப்படுத்தாதீங்க.” சொன்ன தெய்வாவின் குரலில் உண்மையான கோபம் இருந்தது.

     “ரொம்பக் கஷ்டமா இருந்துச்சா. ஆனா நான் உங்களை அவ்வளவா தொந்தரவு பண்ணலையே. என்னால முடிஞ்ச அளவுக்கு ரொம்பக் கண்ட்ரோலா தானே இருந்தேன். நாலே நாலு விஷயத்துக்கு தானே உங்களைத் தொந்தரவு பண்ணேன்.” பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் ருக்கு.

     “நீங்க என்னை உங்க அக்கா கூட கம்பேர் பண்ணது கூட  இவ்வளவு வலிக்கல ருக்கு. ஆனாத் தொந்தரவு பண்ணலையேன்னு சொன்னீங்க பார்த்தீங்களா, அங்க நிக்கிறீங்க நீங்க.” என்றான் கடுப்பாய்.

     அவனுக்கு முந்தைய நாளில் ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. விளையாட்டுக்குணம் கொண்ட பெண்ணைத் திருமணம் செய்வது சுலபம். ஆனால் அவள் குணத்தோடு அவளைக் காலம் முழுக்க அப்படியே பார்த்துக்கொள்வது என்பது மிக மிக கடினமான காரியம் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டான்.

     ஆணோ, பெண்ணோ மகனாக, மகளாக இருக்கும் வரை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் திருமணம் முடித்து கணவன், மனைவியாகி புது இல்லத்தின் தலைவன், தலைவியாக மாறிவிட்ட பின்னர் அதற்குரிய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

     ருக்குவிற்கு இன்னும் அந்தப் பக்குவம் வரவில்லை தான். அதற்காக அவளை வெறுக்க முடியாது என்பது எந்தளவு உண்மையோ அந்தளவு உண்மை அவளை அப்படியே விட முடியாது என்பதும். அவளுக்கு எடுத்துச் சொல்லி மாற்ற முயற்சிக்க வேண்டும் எனத் தன்னோடு நினைத்துக்கொண்டான்.

     இங்கு புத்தர்கள் மிக மிகக் குறைவு. நாள்தோறும் சந்திக்கும் பல மனிதர்களால் சந்தோஷம், கஷ்டம், கோபம், எரிச்சல் எனப் பலவிதமான உணர்வுகளை உணர்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ உடன் இருப்பவர்களிடம் அந்த உணர்வுகள் கடத்தப்பட்டு விடுகிறது. ஆண், பெண் இரண்டு பாலினத்திலும் இது நடப்பது தான். இது சரியென்று சொல்வதற்கு இல்லை என்றாலும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடப்பது நல்ல இல்லறத்திற்கு நல்லது. அதைத் தெய்வா புரிந்துகொண்டான், ருக்குவும் விரைவிலேயே புரிந்துகொள்வாள்.

     “எனக்கு இப்ப ரொம்பப் பரவாயில்லை. நான் சீக்கிரமா குளிச்சிட்டு வரேன். எனக்குப் பயங்கர பசி. சூடான இட்லியும் காரச்சட்னியும் சாப்பிடணும் போல இருக்கு. கண்டிப்பா அக்கா அதைத் தான் பண்ணி இருப்பாங்க, நான் போய் அதை நல்லாச் சாப்பிடுவேன்.” சந்தோஷமாகச் சொல்லிவிட்டு குளியல் அறைக்குள் சென்றாள் அவள்.

     “இவங்க கீழ போகவே இல்லை. நேத்து இராத்திரியில் இருந்து அவங்களும் இவங்களைப் பார்க்கல. அப்புறம் எப்படி இவங்க சாப்பிட ஆசைப்படுறது அவங்களுக்குத் தெரியும், அவங்க அதையே செஞ்சு வைச்சிருப்பாங்க. இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே, ஒருவேளை இருந்தா எதுக்கும் ருக்கு கூட போய் பார்த்திடலாம்.” என்று தானும் தயாரானான் தெய்வா.

     ஊர்மியின் வார்த்தைகள் இரவு முழுவதும் நாகாவைத் தூங்கவிடவில்லை. “அவ சொன்னது எல்லாமே சரிதானே. ஒரு பொண்ணு, அவ நல்லவளா இல்ல கெட்டவளான்னு எப்படி பார்த்த உடனே சொல்ல முடியும். அவகூட பழகினா தானே அவ எப்படிப்பட்டவன்னு தெரியும்.

     அப்படி இருக்க அவளைப் பார்த்த உடனே அவ உள்நோக்கத்தோட தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறான்னு நான் எப்படி நினைச்சேன். அவளை மட்டுமா நினைச்சேன் அவ அக்கா தங்கச்சி எல்லாரையுமே அப்படித்தானே நினைச்சேன். ச்சே… அந்த நேரத்தில் ஏன் என் புத்தி வேலை செய்யல.

     ஒருவேளை இவங்களுக்கு உண்மையில் இங்க இருக்கிற பணத்து மேல ஆசை இல்லையா?”அவன் இவ்வாறு நினைக்கும் போதே ஒருவேளை இருந்தால் என்னும் எண்ணம் வேறு தோன்றியது.

     புத்தன் போல தூய்மையாக இருந்த ஒரு மனம், “அவள் நல்லவள் இல்லையென்றால் உன் அப்பா அவளை உனக்காக, அவருடைய செல்லமான நாகாவிற்காக தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்” என்று சொல்ல, சாத்தானைப் போன்ற கொடிய மனமொன்று, “அவளைப் பத்தி தெரிஞ்சுக்காம அவ கெட்டவன்னு முடிவு பண்ணது தப்புன்னா. அவ நல்லவ தான்னு உறுதிப்படுத்திக்காம நல்லவன்னு முடிவு பண்றதும் தப்பு தானே. கொஞ்ச நாள் அவளோட பழகிப்பாரு, அதுக்கு அப்புறம் அவ நல்லவளா இல்லையான்னு முடிவு பண்ணிக்கலாம்.” என்றது.

     சாத்தான் வேதம் ஓதும் போது அதைக் கேட்காமல் புத்தன் பின்னால் செல்லும் அளவு நாகா புத்திசாலி இல்லை என்பதால் சாத்தான் பாதையைத் தான் தேர்ந்தெடுத்தான்.

     “அக்கா, மாமா வர நிலமையைப் பாரு. அவரோட கண்ணு சிவந்திருக்கிறதைப் பார்த்தாலே தெரியுது. நேத்து அக்கா அவரைப் போட்டு படுத்தி எடுத்திட்டாங்கன்னு. இனி ருக்கு அக்காவுக்கு உடம்பு சரி இல்லாமப் போனா, அவங்களை நம்ம பொறுப்பில் விட்டுட்டு மாமா ஸ்டேஷனில் ஓவர் டைம் பார்க்க ஆரம்பிச்சிடுவாரு.” கிண்டல் செய்தாள் ஊர்மி.

     “ஊர்மி அவரு உன் அக்கா புருஷன். சும்மா சும்மா அவரைக் கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காத.” லீலா கண்டிக்க, “அக்கா நான் அவரோட கொழுந்தியா. அவரை நான் கிண்டல் பண்ணாம தெருவில் போற வரவங்களா கிண்டல் பண்ணுவாங்க.” உரிமை எடுத்துப் பேசினாள் ஊர்மி.

     “அவர் மட்டும் தான் உனக்கு மாமாவா? இன்னும் இரண்டு மாமாங்க இருக்காங்களே.” லீலா செல்வாவை நினைக்க, “செல்வா மாமாவை நினைச்சா எனக்கு என்னவோ மரியாதை தான் வருது. அப்புறம் தேவகியோட புருஷன், அவரைப் பார்த்தா எனக்குக் கிண்டல் பண்ணவே தோணல. நமக்கெல்லாம் ஒரு தம்பி இருந்தா எப்படி இருக்குமோ அப்படித்தான் தோணுது.” சிலாகித்துச் சொன்னாள் ஊர்மி. தர்மா அந்தளவு பெண்களின் மனதில் இடம் பிடித்திருந்தான்.

     அதற்குள் ருக்கு, தெய்வா இருவரும் வந்துவிட, “மாமா ஸ்டாராங்கான டீ, தலைவலிக்கு நல்லா இருக்கும். குடிக்கிறீங்களா இல்ல உங்க பொண்டாட்டி வந்து போட்டுத் தர வரைக்கும் தலைவலியோடவே இருக்கப் போறீங்களா?” ஊர்மி கிண்டலை ஆரம்பித்தாள்.

     “ஊர்மி” என்று அதட்டிய லீலா தெய்வாவிடம் திரும்பி, “யார் போட்டா என்னங்க. இந்தப் பால், தேயிலை எல்லாமே இந்த வீட்டுக்குச் சொந்தமானது தானே. குடிங்க தலைவலி சரியாகிடும்.” என்றாள் லீலா.

     அவள் சொன்னது சரியெனப் பட டீயை எடுத்து வாய் வரை கொண்டு சென்றவனுக்கு திடீரென சந்தேகம் வர, “ஆமா எனக்குத் தலைவலின்னு உங்களுக்கு எப்படித் தெரியும்.” அதிமுக்கியச் சந்தேகத்தைக் கேட்டான்.

     “என்ன மாமா பேசுறீங்க, இராத்திரி முழுக்கத் தூங்கலன்னா தலைவலிக்கும் னு குழந்தைக்கு கூடத் தெரியும்.” என்ற ஊர்மி ஏதோ கேட்க வந்த தெய்வாவிடம், “வெயிட் வெயிட் உங்களோட அடுத்த கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லிடுறேன்.

     நான் இராத்திரி முழுக்கத் தூங்கலன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் னு தானே கேட்க வரீங்க. எங்க அக்காவைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? இதைப்பத்தி தான் லீலா அக்கா நேத்துச் சொல்ல வந்தாங்க. அதைப் புரிஞ்சிக்காம நீங்க தான் என் பொண்டாட்டி என் உரிமைன்னு ருக்குக்காவை தூக்கிக்கிட்டு வேற போனீங்க.” சிரித்தாள் ஊர்மி.

     “இவ இப்படித்தான் ஏதாவது லொட லொடன்னு பேசிக்கிட்டே இருப்பா. இவளை ஆட்ர்ஸ் காலேஜில் படிக்க வைச்சதுக்குப் பதிலா, லா காலேஜில் சேர்த்துவிட்டு இருக்கணும். தப்புப் பண்ணிட்டாங்க எங்க அத்தை. நீங்க எதையும் பெருசு பண்ணாம சூடு ஆறுவதற்குள்ள டீயைக் குடிங்க.” லீலா சொல்லவும், வேறு எதையும் தெரிந்து கொள்ள ஆசைப்படாமல் அமைதியாய் டீ குடிக்க ஆரம்பித்தான் தெய்வா. நிஜமாகவே மசாலா டீ அவன் தலைவலிக்கு இதமாகத் தான் இருந்தது.

     சிறிது நேரத்தில் ருக்கு வர, “ருக்குக்கா இப்ப காய்ச்சல் எப்படி இருக்கு.” கேட்டுக்கொண்டே அவள் கழுத்தில் நெற்றியில் கை வைத்துப் பார்த்து உடல்நிலை நன்றாகவே தேறி இருக்கிறது என்று புரிந்துகொண்டாள் ஊர்மி.

     “ருக்கு உனக்குப் பிடிக்குமேன்னு காரச்சட்னி பண்ணி இருக்கேன். சூடு ஆறுறதுக்குள்ள நீயும், அவரும் சாப்பிடுங்க.” என்றவண்ணம் உணவை உணவு மேஜையில் எடுத்து வைத்தாள் லீலா.

     தெய்வா ஏதும் சொல்வானோ என்று நினைத்து சற்று பயத்துடனே கணவனுக்குத் தட்டை வைத்த ருக்கு அவன் அமைதியாக இருப்பதைக் கண்டு நிம்மதியுடன் சூடான இட்லிகளை எடுத்து வைத்தாள்.

     ஆனால் அவனோ, “இவங்களுக்குள்ள இந்தளவு ஒற்றுமை இருக்கா. இந்த ஒற்றுமை நம்ம எண்ணத்துக்கு எதிரானதாச்சே என்ன பண்றது.” என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

     “சார் அமேசான் ஆர்டர் கொண்டு வந்திருக்கேன்.” என்றபடி வந்தான் ஒருவன்.

     “யாருக்கு ஆர்டர் வந்திருக்கு.” லீலா கேட்க,

     “நாகராஜ்” என்க, “நான் அவரோட மனைவி தான் என்கிட்ட கொடுங்க.” என்று பார்சலை வாங்கி வந்தாள் ஊர்மி.

     “என்ன ஊர்மி, என்ன பார்சல். அவருக்கு வந்ததை நீ ஏன் பிரிக்கிற.” தமக்கையாய் கண்டித்தாள் ருக்கு. இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு, சின்னப்பிள்ளை மாதிரி நீங்களும் அதில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தில் இருப்பீங்கன்னு நினைச்சேன் எனத் தன்னோடு நினைத்துக்கொண்டான் தெய்வா.

     “ஆமா இது பெரிய சிதம்பர இரகசியம் பாரு. இது மொபைல் போன் அக்கா, நேத்து தான் ஆர்டர் பண்ணாரு. இன்னைக்கே டெலிவரி வந்திடுச்சு.” என்றாள் ஊர்மி.

     “ஹே நாங்க எல்லாம் ஷோரூமில் வாங்கினா, உனக்கு ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி வாங்கிக்கொடுக்கிறாரா உன் வீட்டுக்காரர். ரொம்ப காஸ்ட்லி போனா இருக்குமோ, எங்க காட்டு நானும் பார்க்கிறேன்.” என ருக்கு எழுந்து கொள்ள, ‘அதானே பார்த்தேன். இவங்களாவது பொறுப்பா நடந்துக்கிறதாவது’ எனச் சிரிப்போடு கடந்து சென்றான் தெய்வா.

     “அவரும் ஐபோன் வாங்கித்தரேன்னு தான் சொன்னாரு. உனக்கே தெரியும் எனக்குத் தேவையில்லாம காசு செலவு பண்றது பிடிக்காதுன்னு.

     அதோட ஒரு போனோட தேவை என்னன்னே புரியாம இருக்காங்க நிறைய பேர். இவ்வளவு ரூபாய் கொடுத்து ஒரு போனை வாங்கி, இதை நான் வைச்சிருக்கேன்னு சொல்றதில் அப்படி என்ன கெத்து இருக்கோ, கேவலமான கெத்து. எனக்கு அதெல்லாம் சுத்தமாப் பிடிக்காது, எனக்கு அது தேவையும் இல்லை.

     அதனால கம்மியான விலைக்கு ஒரு ஆண்ட்ராய்டு போன் போதும் னு சொன்னேன். அவருக்கு இஷ்டமே இல்லை போராடி அவரை ஒத்துக்க வைக்கிறதுக்குள்ள போதும் போதும் னு ஆகிடுச்சு.” என்பதாய் அண்டப் புழுகு புழுகினாள் ஊர்மி.

     அறைவாசலில் நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நாகாவுக்கு என்னவோ போல் இருந்தது. “ஊர்மிளா ஒரு நிமிஷம் உள்ள வா.” என்றுவிட்டு இவன் உள்ளே சென்றுவிட, அவளும் தங்களுடைய அறைக்குள் வந்தாள்.

     “ஏன் இப்படிப் பொய் சொல்ற. உனக்கு போன் வேணும் னு கேட்டிருந்தா நானே வாங்கிக் கொடுத்திருப்பேனே. அதைவிட்டுட்டு யார்கிட்டையோ கேட்டு வாங்கி, புகழை என் தலையில் கட்டி, எதுக்கு இதெல்லாம்.” என்றான். நிஜமாகவே உள்ளம் குறுகுறுத்தது.

     “நான் ஒன்னும் யார்கிட்டேயும் கெஞ்சிக்கேட்டு இந்த போனை வாங்கல. என்னோட செலவுக்குன்னு அக்கா கொடுத்த காசை சேர்த்து வைச்சிருந்தேன். அதில் தான் வாங்கினேன். உங்ககிட்ட கேட்டு இருந்தா நீங்க வாங்கிக் கொடுத்திருப்பீங்க தான். ஆனா உங்க பார்வையில் பணத்தாசை பிடிச்சவளா நான் இன்னும் இன்னும் தெரிய எனக்கு மனசு வரல.

     என்மேல் துளி சந்தேகம் கூட இல்லாமல் உங்க முழு மனசோட நீங்க என்னை உங்க பொண்டாட்டியா ஏத்துக்காத வரைக்கும், என்னால உங்க பணத்தில் ஒரு ரூபாயை கூட ஏத்துக்க முடியாது.

     எது எப்படிப் போனாலும் என் புருஷனை நான் யார்கிட்டையும் விட்டுக்கொடுக்க கூடாது இல்லையா. அதனால் தான் அரசு அண்ணாவோட ஹெல்ப்போட இந்த ஏற்பாட்டைப் பண்ணேன்.” என்றுவிட்டு அவள் சென்றுவிட நாகாவிற்கு இப்பொழுதும் கோவம் தான் வந்தது.

     “புருஷனா நான் வேணுமாம், என்னோட கல்யாண வாழ்க்கைக்கு வாய்ப்பு கொடுப்பாளாம். ஆனா என்கிட்ட இருந்து ஒரு ரூபா வாங்க மாட்டாளாம். அவளா போன் வாங்கிக்கிட்டு நான் ஐபோன் தான் வாங்கித்தருவேன்னு அடம் பிடிச்சதா பச்சையா பொய் வேற சொல்றா.

     அவ எல்லாமுமா நினைக்கிற அவ அக்காகிட்ட என்னோட மரியாதை குறையக்கூடாதுன்னு இந்த ஏற்பாடா. அப்ப அவ அக்கா மாதிரி என்னையும் முக்கியமானவளா நினைக்கிறாளா? இதெல்லாம் நான் நம்பணுமாக்கும்.” என அவன் யோசித்த வேளையில், அவனுக்குள் இருந்த புத்தன் மனது, “இதுதான் உண்மை” என்று இதுவரை நாகாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சாத்தான் மனதின் மேல் சாட்டையைக் கொண்டு அடித்துச் சொல்லியது.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இந்த போலீஸ்காரனும் வக்கீலும் கெட்டவங்களா பார்த்துட்டு எல்லாத்தையும் கெட்டதா தான் யோசிக்கிறாங்க … உங்களுக்கு எல்லாம் ஊர்மி மாதிரி ஒரு ஆள் இல்லைன்னா அவ்ளோதான் … ருக்கு உறவுகளோட துணை நமக்கு அப்பப்போ தேவைன்னு புரிய வைக்கிற … தெய்வா க்கு புரிஞ்சுட்டாலும் … உண்மையிலேயே பொண்டாட்டி மேல அக்கறை இருக்கிறவன் சலிச்சுக்க மாட்டான் … அன்போட பண்ணியிருப்பான் … வீம்புக்கு பண்ணா இப்படிதான் …

    நாகாக்கு பிடிக்காத பொண்டாட்டி என்ன செஞ்சாலும் குத்தம் தானா … போன் கேட்டாலும் குத்தம் … அவளா வாங்கிக்கிட்டாலும் திட்டுறான் … சரியான லூசு போல …