Loading

அத்தியாயம் 35

     “என்னங்க என்ன பண்றீங்க, என்னைக் கீழே போட்டு வைச்சிடாதீங்க. நானே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சம் உடம்பு தேறிக்கிட்டு வரேன்.” தெய்வாவின் கைகளில் இருந்தவாறே கெஞ்சினாள் ருக்மணி.

     “ஹலோ உங்களை ஹாஸ்பிடலுக்கு தூக்கிக்கிட்டு ஓடினவன் நான். போலீஸ் ட்ரெயினிங்கில் கூட அப்படி ஓடல. அப்பவே உங்களைக் கீழே போடல, இப்ப போட்டுடுவேனா என்ன.” எனக் கைக்குழந்தையைப் போல் கையில் இருந்த மனைவியைக் காற்றில் வீசி அவள் அலறும் போது சரியாகப் பிடித்தான் தெய்வா.

     “எனக்கு இன்னும் உடம்பு முழுசா சரியாகல. என்னை என் அக்கா கூட இருக்க விடுங்க ப்ளீஸ். எனக்கு உடம்பு சரியானதும் நானே வந்திடுறேன்.” ருக்கு தயக்கத்துடன் சொல்லவும், அவன் தங்களுடைய அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.

     அவள் சொல்லில் கோவம் ஏறியவன், அவள் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டாள் என்கிற கோபத்தில் கையில் இருந்தவளை மெத்தையில் தூக்கிப் போட்டான். அவள் விழுந்த வேகத்திற்கு அந்த பஞ்சு மெத்தை அவளை உள்ளே இழுத்து பின் வேகவிசையால் சிறிது தொலைவு பறக்க வைத்து மீண்டும் தன் மேல் வாங்கிக் கொண்டது.

     “இங்க பாருங்க நீங்க பண்ற ஒன்னுமே எனக்குப் பிடிக்கல.”  குற்றம் சாட்டும் பார்வையுடன் சொன்னாள் ருக்கு.

     “நீங்க பண்றது கூடத்தான் எனக்குப் பிடிக்கல. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் புருஷன் தான் எல்லாமே. ஏன் உங்களுக்கு இது புரியவே மாட்டேங்கிது. எப்ப பார்த்தாலும் அக்கா அக்கான்னு ஏன் அவங்க முந்தானையைப் புடிச்சிக்கிட்டே திரியுறீங்க.” என்க, கணவன் சொன்ன கற்பனைக் காட்சியில் தன்னிடத்தில் செல்வாவை நினைத்துப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள் ருக்மணி.

     “புருஷன், பொண்டாட்டி இரண்டு பேரில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போனா, இன்னொருத்தங்க கூட இருந்து அவங்களை எப்படிப் பார்த்துக்கிறாங்க என்பதில் தான் அவங்களுக்குள் இருக்கும் நெருக்கும் அதிகரிக்கும்.

     நமக்குள்ள இருக்கும் நெருக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போகக்கூடிய வாய்ப்பை என்கிட்ட இருந்து தட்டிப் பறிச்சுட்டாங்க உங்க அக்கா.” பொறாமையில் பொங்கினான் தெய்வா.

     “இவருக்கு என்ன பைத்தியமா, எதில் எதில் பொறாமைப்படுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லாம இருக்காரு.” என்று நினைத்தவள் வாய்விட்டு கேட்கவும் செய்தாள்.

     “பொறாமையா எனக்கா, உண்மையைச் சொல்லப் போனா நான் பயங்கரக் கோபத்தில் இருக்கேன். அதான் உங்க அக்கா ஆசைப்பட்ட மாதிரி அவங்க தங்கச்சிங்க மூணு பேருக்கும் நல்லபடியா கல்யாணம் நடந்திடுச்சே. அதுக்கு அப்புறமாவது தங்கச்சிங்க அவங்க புருஷன்மார் கூட நேரம் செலவு பண்ணட்டும் னு ஒதுங்கி இருக்க நினைக்கிறாங்களா? இப்பவும் உங்களை அவங்க முந்தானையில் கட்டி வைக்க நினைக்கிறது நல்லாவா இருக்கு.

     இன்னைக்கு உங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதும் அந்தப் பதறு பதறுறாங்க. ஏன் அவங்களுக்கு மட்டும் தான் உங்க மேல அக்கறை இருக்குமா எனக்கு இருக்காதா. ஹாஸ்பிடலில் வைச்சு உங்க நிலைமைக்கு நான் தான் காரணம் னு என்னைத் திட்ட வேற செய்யுறாங்க.

     எனக்கு வந்த கோவத்துக்கு நாலு வார்த்தை நல்லா கேட்டு இருப்பேன். ஆனா அப்படி பண்ணா உங்க மனசு கஷ்டப்படுமேன்னு தான் விட்டுட்டேன்.” இவ்வளவு நேரம் அவன் சொன்னதை எல்லாம் சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த ருக்கு கடைசி வார்த்தையில் கோபம் கொண்டாள்.

     “என்னைக் குழந்தை மாதிரின்னு சொல்லிட்டு இப்ப நீங்க தான் குழந்தை மாதிரி பிகேவ் பண்றீங்க. நீங்க என் புருஷன், அவங்க என் அக்கா இரண்டு உறவுக்கும் ரொம்பப் பெரிய வித்தியாசம் இருக்குங்க.

     என் அக்கா நான் பிறந்ததில் இருந்து என் கூட இருக்கிறவங்க. இப்ப வந்த உங்களுக்காக அவங்க என்னை முழுசா விட்டு விலகணும் னு நீங்க எப்படி நினைக்கலாம்.” நியாயம் கேட்டாள்.

     “ருக்கு என்ன பேச்சு பேசுறீங்க. நீங்க எனக்கு மட்டுமே சொந்தமானவங்க. உங்க மேல எனக்கு தான் முழு உரிமையும் இருக்குன்னு நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன். நீங்க பேசுறதைப் பார்த்தா உங்களுக்கு நான் இரண்டாம்பட்சமா தான் தெரியுறேன் போல.” கோபமாய் கேட்டான்.

     “இங்க பாருங்க உங்ககிட்ட பதிலுக்குப் பதில் பேச எனக்கு உடம்பில் தெம்பு இல்லை. எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம் நான் தூங்குறேன்.” எடுத்துக்கொண்ட மருந்துகளின் பலனால் நிஜமாகவே அவளுக்கு உறக்கம் வந்தது தான்.

     மனைவியின் வார்த்தைகளில் வைபரேட் மோடில் இருந்து நார்மல் மோடிற்கு வந்தவன், “ருக்கு சாப்பிடாம தூங்கப் போறீங்களா, வேண்டாம். நீங்க உட்காருங்க நான் போய் ப்ரட் வாங்கிட்டு வரேன். அதையும், பாலையும் சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு படுங்க.” என்றான்.

     “என்னது ப்ரட்டும், பாலுமா அதெல்லாம் எனக்கு வேண்டாம். சீரகம், மிளகு எல்லாம் தூக்கலாப் போட்டு ஊர்மி கஞ்சி செய்வா. நல்ல மணமா காய்ச்சல் கண்ட வாய்க்கு இதமா இருக்கும். எனக்கு இப்ப அதைத் தான் சாப்பிடணும் போல இருக்கு.” என்றாள் ஆசையாய்.

     கோபம் வந்தது தான். ஆனால் ருக்குவின் முகத்தில் இருந்த ஆர்வம் அவனை அமைதியாக்கியது. “அவ்வளவு தானே நான் போய் அவங்களைச் செய்யச் சொல்லி வாங்கிட்டு வரேன். ஆனா அதுவரைக்கும் நீங்க தூங்கிடக் கூடாது.” என்றுவிட்டு கீழே சென்றான் தெய்வா.

     வீரப்பாய் வந்துவிட்டான் தான். ஆனால் மனைவியின் சகோதரிகளிடம் தானே சென்று பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் தயக்கமாக இருந்தது. இருந்தாலும் தான் செல்வதற்குத் தாமதமாகி அதற்குள் ருக்கு உறங்கிவிடக்கூடாது என்பதால் தைரியத்தை எல்லாம் ஒன்று கூட்டி, “ஊர்மிளா” என அழைத்தே விட்டான்.

     “சொல்லுங்க தெய்வா” என்றாள் ஊர்மி. நாகாவையே தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் அவளுக்கு இவன் எம்மாத்திரம்.

     பெயர் உச்சரிப்பில் ஒரு நிமிடம் அதிர்ந்தவன், “ருக்குக்கு கஞ்சி வேணுமாம்.” என்றான் மெதுவாக.

     “என் பொண்டாட்டியைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீங்க போய் உங்க வேலையைப் பாருங்கன்னு வீராப்பா பேசினீங்களே, இப்ப என்னதுக்கு கஞ்சி வேணும் னு என்கிட்ட கேட்கிறீங்க. நீங்களே செஞ்சு உங்க அருமைப் பொண்டாட்டிக்கு கொடுக்க வேண்டியது தானே.” மாமனுக்கு வேப்பில்லை அடித்தாள் மச்சினி.

     “ஊர்மி என்ன பேச்சு இது. அவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும். அதிகமாப் பேசாம ருக்குவுக்கு கஞ்சி ரெடி பண்ணு.” லீலா தங்கையை அதட்டினாள்.

     “வேண்டாம், என் பொண்டாட்டிக்கு யாரும் எதையும் பண்ண வேண்டாம். அவங்களை எப்படிப் பார்த்துக்கிறதுன்னு எனக்குத் தெரியும். ஏன் ஆம்பிளைங்களுக்கு சமைக்கத் தெரியாதா, இல்லை சமைக்கக் கூடாதா. என் பொண்டாட்டிக்கு நானே சமைச்சுக்கிறேன். நீங்க எல்லாரும் கிச்சனை விட்டு வெளியே போங்க.” கத்தாத குறையாக தெய்வா சொல்ல, லீலா சமாதானமாக ஏதோ சொல்ல வந்தாள். ஆனால் இவன் பட்டுத் திருந்தும் ஆள், படட்டும் என நினைத்த ஊர்மி தமக்கையை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

     “என்ன ஊர்மி நீ, அவரு தான் அடாவடியா நடந்துக்கிறாருன்னா நீயுமா?” உடம்பு சரியில்லாத தங்கையை நினைத்துச் சங்கடமாக இருந்தது லீலாவுக்கு.

     “சில பேருக்கு அவங்களுக்குப் புரியுற பாஷையில் சொன்னா தான் புரியும். இவருக்கு ருக்கு அக்காவுக்கு யாருமே இருக்கக் கூடாது, அவங்களுக்கு எல்லாமுமா இவரே இருக்கணும் னு எண்ணம். எனக்குத் தெரிஞ்ச வரை இவரோட இந்த எண்ணம் தான் ருக்கு அக்காவோட பயத்துக்கே காரணமா இருக்கணும்.

     நம்ம எல்லோரையும் விட்டுப் பிரிச்சு கூட்டிட்டுப் போயிடுவாரோன்னு பயந்து தான் அக்கா காய்ச்சலை இழுத்து வைச்சிருக்கு.” ஊர்மி சொல்ல, அப்படியும் இருக்குமோ என நினைத்தாள் லீலா.

     “இன்னைக்கு ஒருநாள் ருக்குக்கா அவரைப் போட்டு படுத்தி எடுக்கிறதில் இவருக்குத் தனிக்குடித்தனம் போகவே கூடாதுங்கிற எண்ணம் வரனும். அக்காவைப் பத்தி நமக்குத் தெரியாதா? இன்னைக்கு இந்த மாமா ஒரு வழி ஆகிடுவாரு.” சிரிப்புடன் சொன்னாள் ஊர்மி.

     லீலா யோசனையும் தவிப்புமாக அமர்ந்துகொள்ள ஊர்மிக்குக் கணவன் நினைவு வந்தது. “என்ன இந்தப் பாம்பு வீட்டில் இருக்கிறதுக்கான அறிகுறியே இல்ல. ஒருவேளை இன்னமும் தூங்குதா. எதுக்கும் ஒரு எட்டு போய் பார்த்திட்டு வந்திடுவோம்.” நினைத்தபடி தன் அறைக்குள் வந்தாள்.

     மொபைலில் சீரியஸாக பப்ஜி ஆடிக் கொண்டிருந்தவன் ஊர்மியின் அரவம் கேட்டு, “என்ன மேடம் அக்காவுக்கு சேவைகள் எல்லாம் பண்ணி முடிச்சாச்சா?” குத்தலாகக் கேட்டான்.

     “என் அக்கா நான் சேவை பண்றேன். உங்களுக்கு ஏன் குத்துது.” தானும் அதே குத்தலுடன் கேட்டாள் ஊர்மி.

     “பெருசா புருஷன், கல்யாணம் அது இதுன்னு பேசின இல்ல. எனக்குச் சாப்பிட ஏதாவது பண்ணி வைச்சுட்டுப் போனியா? அது கூட வேண்டாம், நான் இப்படி வெளியில் போறேன் என்னைத் தேடாதீங்கன்னு ஒரு வார்த்தை சொன்னியா. எல்லாம் போகட்டும் காலையில் போன இப்ப மணி என்ன. இடைப்பட்ட நேரத்தில் ஒருமுறை என்னங்க என்ன பண்றீங்க, எழுந்துட்டீங்களா சாப்பிட்டீங்களான்னு ஒரு வார்த்தை போன் பண்ணியாச்சும் கேட்டியா.

     சும்மா எதுக்கெடுத்தாலும் நான் கத்துறேன் அப்படி இப்படின்னு என்னைக் குற்றம் சொல்றவ, நான் குற்றம் சொல்லாத மாதிரி இல்ல நடந்துக்கணும்.” இடக்காக நாகா சொல்ல தன்னுடைய தவறு ஊர்மிக்கும் புரிந்தது.

     போன் பண்ணிப் பேச நீ போன் வாங்கிக் கொடுத்திருக்கணும் டா மடையா என மனதோடு நினைத்தாலும், அது சரியான பதில் இல்லை. பேசவேண்டும் என்று நினைத்திருந்தால் எப்படியும் பேசி இருக்கலாம் என்பது புரிய, “என்னை மன்னிச்சிடுங்க நீங்க சொன்னதில் ஏதாவது ஒன்னாவது நான் கண்டிப்பா பண்ணி இருக்கணும் தான். என் அக்காவை அப்படி ஒரு நிலைமையில் பார்த்ததும் எனக்கு வேற எதைப் பத்தியும், யாரைப் பத்தியும் சிந்தனையே வரல. இனிமேல் இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்.” அமைதியாகச் சொன்னாள்.

     “இப்ப புரியுதா உனக்குக் கல்யாணம், புருஷன், குடும்ப வாழ்க்கை எதுவுமே தேவை இல்லை. உன்னோட அக்கா தங்கச்சி மட்டும் போதும். அதனால ஒழுங்கா மரியாதையா என் வாழ்க்கையை விட்டு போயிடு.” என்றான். எழுந்ததில் இருந்து ஊர்மியை அங்கே, இங்கே தேடி, தர்மா விஷயத்தைச் சொல்லி உன் பொண்டாட்டி உன்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லலையா எனச் சாதாரணமாகக் கேட்டது, இவனுக்குப் படம் எடுக்கப் போதுமானதாக இருக்க, உள்ளுக்குள் உதித்த கோபத்தை இப்படி வார்த்தைகளாகக் கொட்டினான்.

     அந்நியன் வந்துட்டான் டா, என மனதோடு நினைத்துச் சலித்தவள், “அதென்ன எப்பப் பார்த்தாலும் என்னை உங்க வாழ்க்கையை விட்டு அனுப்புறதிலே குறியா இருக்கீங்க. உங்களுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை. ஒருவேளை ஒருவேளை உடம்பில் ஏதாவது.” வேண்டுமென்றே வம்பிழுத்தாள் ஊர்மி.

     “ஏய் யாரைப் பார்த்து என்ன சொல்ற. நான் நினைச்சா இப்பவே நீ நினைச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்கு உணர வைக்க முடியும். என்னை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.” என்றான்.

     “அப்படியா, ஆனா நான் கேட்பேன். கோபத்தில் கண்டபடி பேசுறதுக்காக, என்னை உங்க வாழ்க்கையை விட்டு அனுப்ப முயற்சி பண்றதுக்காக, இது மட்டும் இல்ல இன்னும் நல்லாக் கேட்பேன். அதுவும் இங்க இல்ல குடும்ப நல நீதிமன்றத்தில்.” என்றவளை முறைத்தான் நாகா.

     “நான் அங்க போறதும் போகாததும் முழுக்க முழுக்க உங்க முடிவில் தான் இருக்கு. ஏன்னா உங்களோட வாழுற இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எப்பப் பார்த்தாலும் வழுக்கி விழுற அளவுக்கு பாசத்தோடவே வாழ்ந்து பழகின எனக்கு, எப்பவும் முறைச்சிக்கிட்டே இருக்கிற உங்களோட பழகுறது பிடிச்சிருக்கு.

     நீங்க பேசுறது, பண்றது எல்லாத்துக்கும் பதிலுக்குப் பதில் கவுண்டர் கொடுக்கிறது ரொம்ப எக்சைட்டிங்கா வேற இருக்கு. என்னைக் கண்டாலே கடுப்பாகுற உங்களை என்னைச் சுத்தி சுத்தி வர வைக்கப் போறதை நினைச்சா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா. உச்சந்தலையில் சந்தனம் வைச்ச மாதிரி ஜில்லுன்னு இருக்கு.” சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டே சொன்னாள்.

     “இதோ பாருடா நான் இவ பின்னாடி அலைவேணாம் இல்ல. நல்ல கற்பனைத்திறன் இருக்கு உனக்கு. என்கிட்ட இருக்கும் பணத்துக்காக, என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கிறதுக்கு எத்தனையோ பொண்ணுங்க முயற்சி பண்ணி இருக்காங்க. அதுவே என்கிட்ட நடக்காதப்ப, என்னை உன்னைச் சுத்தி சுத்தி வர வைக்க உன்னால முடியுமா? ஓவர் காண்பிடண்ட் உடம்புக்கு ஆகாது பாப்பா.” என்றான்.

     “அப்படி இல்ல சினேக் பாபு. ஒரு பொண்ணு நினைச்சா மாளிகையும் மண்ணாகும் வெறும் மண்ணும் மாளிகையாகுமாம். வடிவேல் மாமா தான் எனக்கு இதைச் சொன்னாரு. அப்பேற்பட்ட விஸ்வாமித்திரனும் மேனகைகிட்ட அடங்கித்தான் போனாரு. அப்படி இருக்கும் போது நீ எம்மாத்திரம்.

     ஊர்மி நான் பேசினது எல்லாமே தப்பு. நீ எனக்கு ரொம்ப முக்கியம் என்னை விட்டு எப்பவும் நீ போயிடாதன்னு உன்னைக் கேட்க வைக்கல, வைக்கிறேன்.” வாய்விட்டே சொன்னாள்.

     “நீ மட்டும் தான் சபதம் போடுவியா நானும் போடுவேன். நீ நான்னு மரியாதை இல்லாமப் பேசுற இந்த வாய், நீங்க தான் எனக்கு எல்லாம், இனி நீங்க சொல்றபடி மட்டுமே கேட்டு நடந்துக்கிறேன்னு சொல்லல. சொல்ல வைக்கிறேன்.” என்றான்.

     “எப்படிச் சொல்ல வைப்பீங்க, அடிப்பீங்களா? கொடுமைப்படுத்துவீங்களா? இல்ல” என்றவளின் பார்வை கட்டிலை நோக்கிச் செல்ல, “ஏய் நான் ஒன்னும் வக்கிரம் பிடிச்சவன் இல்ல.” வேகமாகச் சொன்னான்.

     “தெரியும், நீங்க பிறப்பாலோ குணத்தாலோ கெட்டவர் இல்லை. அதிகப்படிபயான பணமும், சரியில்லாத சகவாசமும் தான் பிரச்சனைன்னு தோணுது” என்க, “என்ன என்னைத் திருத்தப் போறியா?” நக்கலாகக் கேட்டான்.

     “நான் ஏன் திருத்தணும், எனக்கு என்ன வேற வேலைக் கழுதை இல்லையா? உங்களுக்கு உங்க தப்பை எடுத்துச் சொல்ற வரை தான் என் வேலை. அதைப் புரிஞ்சுக்கிட்டு திருந்துவதோ இல்லை நான் பிடிச்ச ஓடுற முயலுக்கு காலே இல்லன்னு நிலையா நிக்கிறதோ உங்க விருப்பம். அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. ஒரு வருஷம் முடியும் வரை எந்த முடிவும் எடுக்க மாட்டேன். ஆனா ஒரு வருஷத்துக்கு அப்புறம் கண்டிப்பா முடிவு எடுப்பேன்.” என்றாள்.

     “ஒன்னுமே இல்லன்னாக் கூட வாய்க்கு மட்டும் குறைச்சலே இல்லை” என்க, சலித்தவள், “எனக்கு ஒரு விஷயம் சொல்றீங்களா? நான் என்ன செஞ்சா நான் நல்ல பொண்ணுன்னு நீங்க ஒத்துப்பீங்க. காலத்துக்கும் உங்ககிட்ட இருந்து பணம் வாங்காம, இந்த வீட்டோட பகட்டை அனுபவிக்காம துறவி மாதிரி வாழட்டுமா? அப்ப கூட அதையும் நடிப்புன்னு தான் சொல்லுவீங்க.

     ஒரே அம்மா வயித்தில் பிறக்கிறவங்க கூட ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்படி இருக்க நான் இப்படித்தான்னு நீங்களா ஒரு முடிவுக்கு வந்தா தப்பு உங்ககிட்ட தான் இருக்கே தவிர என்கிட்ட இல்ல.” என்றுவிட்டு வெளியேறினாள் ஊர்மி.

     அடுத்த அறையில், “என்னங்க கஞ்சி இது, அடிப்பிடிச்ச வாடை வருது. இந்த ஊர்மிக்கு என்னாச்சு.” முகத்தைச் சுளித்தாள் ருக்கு.

     “உங்க தங்கச்சி உங்களுக்கு எதுவும் செஞ்சு தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இது நான் ரெடி பண்ணது. யூடியூப்பில் வந்த மாதிரி தான் எல்லாம் பண்ணேன். லைட்டா தீஞ்சு போயிடுச்சு, அட்ஜஸ்ட் பண்ணி குடிங்க.” என்றான். எத்தனையோ படங்களில், கதைகளில் மனைவியின் முதல் சமையல் கண்ட்ராவியாக இருந்தாலும் பிரச்சனை செய்யாமல் சாப்பிடுவதோடு அதைப் பாராட்டும் கணவன்மாரைப் பார்த்த அவனுக்கு தன் முதல் முயற்சியை மனைவி அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நப்பாசை இருந்தது.

     ஆனால் அவன் மனைவி எப்போது என்ன செய்வாள் என்பது அவளுக்கே தெரியாத ஒன்று என்பதால், “உங்களுக்கா காய்ச்சல், எனக்குத்தான் காய்ச்சல். ஏற்கனவே காரம் இல்லாத இந்த கஞ்சியைக் குடிக்கிறது கஷ்டம். அதில் இப்படித் தீய வைச்சுக் கொண்டு வந்து இருக்கீங்க.” வேகமாய் வார்த்தையை விட்டவள் அவன் முகம் சுருங்குவதைக் கண்டு தவறை உணர்ந்து நாக்கைக் கடித்துக்கொண்டு, “இருந்தாலும் நீங்க எனக்காக பண்ணது என்பதால் நான் குடிக்கிறேன்.” என்று குடித்து முடித்தாள். தெய்வாவிற்கு எதிர்பார்த்த அளவு பேரானந்தம் இல்லை என்றாலும் மனம் கொஞ்சம் இதமாகத் தான் இருந்தது.

     ஆனால் அதன் பிறகு அவன் மனைவியின் செயல்களால், கல்யாணம் ஆன ஆண்கள் எல்லோருமே இப்படித்தானா? இல்லை எனக்கு மட்டும் தான் இப்படியா? என்று நொந்து போனான்.

     ”என்னங்க எனக்கு ரொம்பக் குளிருது ஏசியை ஆப் பண்ணுங்க. என்னங்க மாத்திரை போட சுடுதண்ணி வேணும்.   என்னங்க நான் சக்கரை இல்லாம மாத்திரை போட மாட்டேன். என்னங்க எனக்கு வேர்க்கிது ஏசியைப் போட்டு விடுங்க. என்னங்க எனக்கு வாந்தி வர மாதிரி இருக்கு ஒரு எலுமிச்சைப் பழம் கொண்டு வாங்க.

     என்னங்க எனக்குத் தூக்கம் வரல மாடிக்குப் போகலாம் வாங்க. நான் கொஞ்ச நேரம் நடக்குறேன் என்கூட நடங்க. என்னங்க நாய் குலைக்கிதுங்க. என்னங்க நான் தூங்க முடியாம கஷ்டப்படுறேன் நீங்க இப்படி தூங்கி வழியுறீங்க, உங்களுக்கு என் மேல பாசமே இல்லை.

      என்னங்க எனக்கு உடம்பு கை கால் எல்லாம் ரொம்ப வலிக்கிது கீழ போகலாம். என்னங்க குளிருது. என்னங்க வேர்க்கிது, என்னங்க” என்று விடியும் வரை தானும் தூங்காமல், அவனையும் தூங்க விடாமல் படுத்தி எடுத்துவிட்டாள் ருக்கு.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ருக்கு 😜😜😜😜😜😜😜😜 அப்படி போடு போலீஸ்காரனை அரெஸ்ட் பண்ணி டார்ச்சர் பண்ணிட்ட … தெய்வா ஏதோ பேசுன … இப்போ பேசு பா … ஊர்மி செம்ம சிரிப்பு சரவெடி … எங்களுக்கும் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற எல்லாம் தான் பிடிச்சிருக்கு … 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜 என்ன தெய்வா… பாம்பு என்ன பண்ணுது … சினேக் பாபு எல்லாம் அல்டிமேட் … உங்களுக்கு வேற ஏதாவது பிரச்சனை இருக்குமோ … அப்படி கேளு மா ஊர்மி … சும்மா வேணாம் வேணாம்னு சொல்லிட்டு … அப்படியே பாம்பு படமெடுக்காம பொட்டிப் பாம்பா அடங்கிடனும் …

  2. ருக்கு சூப்பர் போங்க… யார எப்படி வழிக்கு கொண்டு வரனும் ஊர்மிக்கு தான் தெரிகிறது… சூப்பர் ஊர்மி…