
அத்தியாயம் 34
கலைந்த தலைமுடி, சிவந்த கண்கள், தளர்ந்த உடல் சகிதம் வந்து நின்ற ருக்குவைப் பார்த்ததும் அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சி தான்.
“அக்கா எனக்கு ரொம்ப டயர்டா இருக்குக்கா.” என்றவண்ணம் லீலாவை நோக்கி நடந்து வந்த ருக்கு கால்களின் பலம் போதாமல் கீழே விழப் பார்க்க, தான் சென்று பிடித்தாள் லீலா.
“ருக்கு உனக்கு உடம்பு நெருப்பா காயுது. எப்ப இருந்து காய்ச்சல் அடிக்கிது.” அதட்டலாகக் கேட்டாள்.
“நைட் படுக்கும் போதே ஒருமாதிரி இருந்துச்சு அக்கா. காலையில் எழுந்தா சரியாகிடும் னு நினைச்சு தூங்கிட்டேன். காலை நாலு மணி இருக்கும் உடம்பு முழுக்க எரிய ஆரம்பிச்சிடுச்சு.” பாவமாய் சொல்லியவள் அமர நாற்காலி கிடைக்குமா என்பது போல் சுற்றும் முற்றும் பார்க்க, தேவகி நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு, அதில் தமக்கையை அமர வைத்தாள்.
“நாலு மணிக்கே அதிக காய்ச்சல் இருந்துச்சுன்னா மாமாவை எழுப்பி இருக்க வேண்டியது தானே. அட்லீஸ்ட் எங்க யாருக்காவது போன் பண்ணி இருக்கலாம்.” உரிமையாய் கோபித்தாள் ஊர்மி.
“நான் அவரை எழுப்ப ட்ரை பண்ணேன் ஊர்மி, அவர் எழுந்திரிக்கல. போன் என்கிட்ட இருந்து ரொம்ப தூரத்தில் இருந்தது. என்னால எழுந்து போய் எடுக்கவும் முடியல.” ருக்கு சொன்னாவுடன் தெய்வாவின் மீது கோபம் கோபமாக வந்தது ஊர்மிக்கு.
“என்ன மாமா நீங்க, அக்கா உடம்புக்கு முடியலன்னு உங்களை எழுப்பி இருக்காங்க. அது கூடத் தெரியாம அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு உங்களுக்கு. அட்லீஸ்ட் காலையில் எழுந்ததுக்கு அப்புறமாவது கவனிச்சு இருக்கலாமே.” ஆதங்கத்துடன் கேட்டாள்.
“ஊர்மி மத்த கதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இவளுக்கு உடம்பு ரொம்ப சுடுது. இப்படியே இருக்கிறது நல்லது இல்ல. உன் மாமா வேற வேலை இருக்குன்னு சீக்கிரமே கிளம்பிப் போயிட்டாரு.
தெய்வா நீங்க ஒன்னு பண்ணுங்க. பக்கத்தில் யாராவது டாக்டர் இருந்தா உடனே வரச் சொல்லுங்க. நான் இவளோட உடம்பு சூடு குறைய ஏதாவது பண்றேன்.” என்றுவிட்டு கைத்தாங்கலாக தாங்கள் ஒன்றாக இருந்த அறைக்கு தங்கையை அழைத்துச் சென்றாள் லீலா. ஈரத்துணியை நெற்றியில் வைக்க, அது சில நிமிடங்களில் உலர்ந்து ருக்குவின் உடல் தன் வெப்பத்தை உடன் இருந்தவர்களுக்கு உணர்த்தியது.
ஏற்கனவே மனைவி எழுப்பியது கூடத் தெரியாத அளவு அப்படி என்ன உறக்கம் என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டிருந்த தெய்வாவிற்கு அதீத பதற்றத்தைக் கொடுத்தது இந்தக் காட்சி. ஓடோடிச் சென்று அருகே இருந்த மருத்துவரை அழைத்து வந்தான்.
104 டிகிரி இருந்தது காய்ச்சல். “காய்ச்சல் கொஞ்சம் அதிகமாத் தான் இருக்கு. நான் ஊசி போடுறேன், கொஞ்ச நேரத்துக்கு அப்புறமும் காய்ச்சல் குறையலன்னா ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டுப் போங்க, வைரல் பீவரா இருக்க வாய்ப்பு இருக்கு.” என்றவர் ஊசி போட்டு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார். கஞ்சி கொடுத்து மாத்திரைகளைக் கொடுத்த பின்பும் காய்ச்சல் குறைவேனா என்று அடம் பிடித்தது.
“அக்கா ஏதாவது பண்ணுக்கா, எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” ருக்கு உளற லீலாவின் கண்கள் கலங்கியது.
“அக்கா இதுக்கு மேல வெயிட் பண்ண வேண்டாம் ஹாஸ்பிடல் போயிடலாம்.” ஊர்மி சொல்ல, லீலாவும் கண்ணீருடன் தலையசைத்தாள்.
லீலாவும், ஊர்மியும் ருக்குவைத் தோள்களில் தாங்க முற்பட அவர்கள் எதிர்பாரா வண்ணம் தெய்வா மனைவியைத் தன் கைகளில் தாங்கி காரை நோக்கி நடக்கத் துவங்கி இருந்தான்.
ருக்குவை செல்வா வேலை செய்யும் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.
“அக்கா, ருக்கு அக்காவுக்கு எப்படி திடீர்னு காய்ச்சல் வந்துச்சு.” தேவகி கேட்க, “இதோ இவரால தான்.” தெய்வாவைக் காட்டி சொன்னாள் லீலா. எப்போதும் நிதானமாக இருக்கும் லீலா ருக்குவின் நிலையைக் கண்டு நிதானம் இழந்து போனாள்.
“என்ன, என்னைச் சொல்றீங்க. நான் என்ன பண்ணேன்.” எகிற ஆரம்பித்தான் தெய்வா.
“சும்மா மழுப்பாதீங்க, நேத்து வெளில போன இடத்தில் உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ சண்டை. இல்லைன்னு பொய் சொல்ல வேண்டாம். அவ முகத்தை வைச்சு அவ சொல்லாததைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியும்.
நீங்க அவளை ஏதோ சொல்லித் திட்டி இருக்கீங்க, அதை நினைச்சு பயந்துட்டாளோ என்னவோ. நேத்து நைட் நீங்க வரும் போதே இதைக் கவனிச்சேன். ஆனாலும் புருஷன், பொண்டாட்டி சண்டையில் நாம தலையிடுறது நல்லா இருக்காதுன்னு அமைதியா இருந்துட்டேன். இப்பத் தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது.
சின்ன வயசில் இருந்தே, ரொம்ப பயந்தா இப்படி ஏதாவது பிரச்சனை வந்து படுத்திடுவா. ஒரு போலீஸ்காரன் பண்ண டார்ச்சரில் கிட்டத்தட்ட பத்துநாள் படுத்துட்டா. காய்ச்சல் வருவதும் போவதுமா இருந்தது. உயிரைக் கையில் பிடிச்சுக் காத்துக்கிடந்து எப்படியோ காப்பாத்தினோம்.” என்க, தெய்வாவிற்கு இது புதுத் தகவல் என்பதால் அமைதியாக அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“நீங்க போலீஸ் னு தெரிய வந்தப்ப, கல்யாணம் வேண்டாம் னு அவ எவ்வளவோ சொன்னா. நான் தான் பெரிய இவளாட்டம், இல்ல நீ அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும் னு அதட்டி சம்மதிக்க வைச்சேன்.
அவளோட குணங்கள் பத்தி எல்லாத்தையும் நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருந்தேன். அப்படி இருந்தும் நீங்க அவ மனசு நோகுற மாதிரி ஏதோ பேசி இருக்கீங்க. அதை நினைச்சு நினைச்சு மருகி இப்ப இப்படி வந்து கிடக்குறா.” லீலா வருத்தத்தின் பிடியில் மனதில் தோன்றிய அனைத்தையும் தெய்வாவிடம் சொல்ல, இவனுக்கு மிகவும் குழப்பமாகிப் போனது.
“நீங்க ருக்குவைப் பத்தி என்கிட்ட சொன்னீங்களா, எப்ப” குழப்பமாகவே கேட்டான்.
“நான் அனுப்பின மெசேஜை நீங்க பார்க்கவே இல்லையா?” என்றாள் லீலா.
திருமணம் முடிந்த உடன் தன் தங்கைகள் அனைவரைப் பற்றியும், அவர்களுடைய குணநலன்களைப் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டு அவர்களுடைய கணவன்மார்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள் லீலா.
ஆனால் தெய்வாவோ அது லீலாவின் எண் என்று தெரிந்த உடன் அதில் இருந்த செய்தியைப் படிக்கக் கூட இல்லை. ஆண்கள் அனைவரும் தான் அனுப்பிய செய்தியைப் பார்த்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு நிம்மதியாய் இருந்தாள் லீலா.
“இங்க பாருங்க நீங்க அனுப்பின அந்த மெசேஜை நான் பார்க்கவே இல்லை. அதோட நேத்து நான் ஒன்னும் ருக்குவை திட்டவெல்லாம் இல்லை. ஒரு சின்ன வருத்தம் எங்களுக்குள்ள, அதுவும் உங்களால தான். அக்கா, தங்கச்சி மூணு பேரால தான் எங்களுக்குள்ள பிரச்சனை வருது.” தானும் கத்த ஆரம்பித்தான்.
ருக்குவை, லீலாவும் தங்கைகளும் கவனித்துக்கொண்டதை வைத்து வீட்டில் தங்களைத் தவிர சிலர் இருப்பதும் நல்லது தானோ என யோசித்த தெய்வா, இப்போது அப்படி யோசித்ததற்காகத் தன்னைத் தானே நன்றாகத் திட்டிக்கொண்டான்.
“லீலா யாருக்கு என்னாச்சு, எதுக்காக எல்லோரும் இங்க வந்திருக்கீங்க. அதோட ஏன் இப்படி சத்தமாப் பேசிக்கிட்டு இருக்கீங்க. இது ஹாஸ்பிடல் இங்க இப்படி நடந்துக்கக் கூடாது.” கண்டிப்போடு சொன்னான் இவர்களைக் கவனித்து அருகே வந்த செல்வா.
“ருக்குவுக்கு உடம்பு ரொம்ப அனலடிக்கிது. பக்கத்து தெருவில் இருக்கிற டார்டர்கிட்ட காமிச்சோம். அவங்க ஊசி போட்டும் கேட்கல. அதனால தான் இங்க கொண்டு வந்து சேர்த்தோம். ப்ளட் டெஸ்டுக்கு ப்ளட் எடுத்துட்டுப் போய் இருக்காங்க. பாவங்க அவ ரொம்பக் கஷ்டப்படுறா.” விட்டால் அழுதுவிடுவேன் என்னும் தோரணையில் சொன்னாள் லீலா.
“லீலா காம்டௌவுன், ஐஸ்ட் பீவர் அவ்வளவு தானே. இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.” வைத்தியன் சாதாரணமாகவே சொன்னான்.
“இல்லைங்க வைரல் பீவரா இருக்குமோன்னு.” தெய்வாவிடம் எகிறிப் பேசியவளால் செல்வாவிடம் பேச முடியவில்லை.
“இருந்தா என்ன, வைரல் பீவரா இருந்தாக் கூட அதை நினைச்சு நாம கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. இப்ப மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கு. எதுவா இருந்தாலும் சரி பண்ணிடலாம்.” என்றான்.
“பிரச்சனை இல்லையா, நீ அவங்களைப் பார்த்தியா. அவங்க முகமும், உடம்பும் அவ்வளவு சோர்வா இருக்கு. அது போதாதுன்னு உன் ஹாஸ்பிட்டல் ஆளுங்க ஒரு ஊசி நிறைய இரத்தம் எடுத்துட்டுப் போறாங்க. நான் இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். இந்த ஹாஸ்பிடல் வேண்டாம், என் பொண்டாட்டியை வேற ஏதாவது ஒரு நல்ல ஹாஸ்பிடலுக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாம் னு இவங்க தான் கேட்கல.
இதுக்குத் தான் அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சின்னு யாரும் இல்லாத பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணனும் னு சொல்றது. என் இஷ்டப்படி ஒன்னும் பண்ண முடியல.” கோபத்தோடு தன் நிறைவேறா ஆசைகளைப் பற்றியும் சொன்னான் தெய்வா.
“ஏங்க இதில் கூட உங்க ஈகோவைக் காட்டித்தான் ஆகனுமா. உள்ள படுத்திருக்கிறது எங்க அக்கா, உங்களை விட துடிப்பும் வலியும் எங்களுக்குத் தான் அதிகம்.” வார்த்தையை விட்டாள் தேவகி.
“அப்படியா, அப்ப உங்க அக்காவை நீங்களே நல்ல படியா பார்த்து சரியானதும் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வாங்க. நான் கிளம்புறேன்.” என்றுவிட்டுக் கோபமாய் கிளம்பினான் தெய்வா.
செல்லும் அவனைப் பயத்தோடு பார்த்தனர் பெண்கள் அனைவரும். எதற்காக பெண்ணைப் பெற்றவர்கள் ஒவ்வொருவரும் அவர்களைக் கட்டிக்கொடுத்த வீட்டில் எப்போதும் அமைதி காக்கிறார்கள் என்று இப்போது தான் புரிந்தது. கோபம் இந்தச் சூழ்நிலைக்கு மட்டும் தானா? இல்லை ருக்குவை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துவிடுவானா என்னும் அளவுக்கு யோசிக்க ஆரம்பித்துவிட்டனர் மற்ற மூவரும்.
“அவன் கிடக்குறான் லீலா. அவன் எப்பவுமே இப்படித்தான் சூழ்நிலைக்குச் சம்பந்தம் இல்லாம பேசுவான். இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க தங்கச்சி நல்லாகிடுவாங்க. நீங்க டென்ஷன் ஆகாம இருங்க. இல்லைன்னா உங்களுக்கும் ஒரு பெட் ரெடி பண்ற மாதிரி ஆகிடும்.” சிரித்துக்கொண்டே சொன்னான் செல்வா.
“மாமா உள்ள படுத்திருக்கிறது எங்க அக்கா. நாங்க எப்படி நிம்மதியா இருக்கிறது. நீங்க இங்க நின்னு வெட்டியா பேசுறதுக்குப் பதில் உள்ள போய் அக்காவுக்கு என்னன்னு பாருங்களேன்.” கெஞ்சலாகச் சொன்னாள் ஊர்மி.
“சாதாரணக் காய்ச்சலுக்கு இவ்வளவு பதற்றம் அவசியமில்லை. சரி இருந்தாலும் உங்க மனதைரியத்துக்காக நான் போய் பார்க்கிறேன்.” சொன்ன செல்வா சொன்னபடிச் செய்யவும் செய்தான். அடுத்த அரை மணி நேரத்தில் ருக்குவின் உடல் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
“ருக்கு, இப்ப எப்படி இருக்கு.” தங்கையின் தலை தடவிக் கொடுத்துக் கேட்டாள் லீலா.
“பரவாயில்லக்கா வாய் தான் ரொம்பக் கசப்பா இருக்கு.” ருக்குவின் முகம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மலரத் துவங்கி இருந்தது. அது அவள் உடன் பிறந்தவர்களுக்கும் புரிந்தது.
“சரி நீ வீட்டுக்கு வந்ததும் நான் பண்ண பாயாசம் தரேன், வாயெல்லாம் இனிக்கும். ஆளைப்பாரு ஆளை. ஏழு கழுதை வயசாகுது. இன்னும் பயந்து போய் காய்ச்சல் வந்து கிடக்கிற. நாங்க எல்லாம் எப்படி பதறிப் போயிட்டோம் தெரியுமா?” தேவகி தமக்கையை வம்புக்கு இழுத்தாள்.
“பயமா, தேவையில்லாம நான் எதுக்கு பயப்படப் போறேன். நேத்து ஹோட்டல் சாப்பாடு ஏதோ சேரல. அதனால் தான் காய்ச்சல் வந்திடுச்சு.” சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே சொன்னாள் ருக்கு.
“ஆமா புருஷனை நல்லாக் காப்பாத்து. நீ இங்க இப்படி உன் புருஷனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற. ஆனா அவரைப் பார்த்தியா நீ கண்ணு முழிக்கிறதுக்கு முன்னாடி அவர் பாட்டுக்கு கிளம்பி வீட்டுக்கு போயிட்டாரு.” கோபத்தில் உளறினாள் ஊர்மி.
கணவன் இங்கே இல்லை என்றதும் ருக்குவிற்கு என்னவோ போல் இருந்தது. ஆனாலும், “அவரைக் குறை சொல்லாத ஊர்மி. அவருக்கு என் மேல ரொம்பப் பாசம். ஏதாவது முக்கியமான வேலை வந்திருக்கும். அதனால் தான் போய் இருப்பாரு.” விட்டுக் கொடுக்காமல் பேசினாள்.
“லீலா அதான் உங்க தங்கச்சிக்கு சரியாகிடுச்சு இல்ல. இப்பவாவது வந்து கொஞ்சம் சாப்பிடுங்க. காலையில் வந்தீங்க, இப்ப சாயங்காலம் ஆகிடுச்சு. நீங்க இன்னும் பச்சைத் தண்ணி கூட குடிக்கல. தங்கச்சி மேல பாசம் இருக்க வேண்டியது தான் ஆனா அதுக்காக நாம பட்டினி கிடக்கணும் னு அவசியம் இல்லை.” கண்டிப்போடு வந்தது செல்வாவின் குரல்.
“அதெல்லாம் உங்களுக்குச் சொன்னாப் புரியாதுங்க. நாளைக்கு உங்க தம்பிங்களில் யாராவது ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம போய், நீங்க வைத்தியம் பார்க்க முடியாம திணறும் போது தான், நான் இப்ப இருக்கிற மனநிலையை உங்களால புரிஞ்சிக்க முடியும்.” ஏதோ தைரியத்தில் சொல்லிவிட்டாள் லீலா.
“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல.” என்றுவிட்டு, ஸ்டைலாக ஸ்டெத்தை கழுத்தில் தொங்கவிட்டபடிச் சென்றான் செல்வா.
ருக்குவை அழைத்துக்கொண்டு இரவு எட்டு மணி அளவில் வீட்டுக்கு வந்தனர் சகோதரிகள் மூவரும்.
“அக்கா இன்னைக்கு என் கூடவே படுத்துக்கிறியா?” ருக்கு லீலாவைப் பார்த்துக் கேட்க, “அவ்வளவு தானே, வா நாம எல்லோரும் ஒன்னா இருந்த ரூமுக்கு போகலாம்.” என்றபடி லீலா அவளை அழைத்துக்கொண்டு செல்லப் பார்க்க, “ஒரு நிமிஷம்.” என்றவாறு வந்தான் தெய்வா.
கணவனைக் கண்ணாரக் கண்டதும் ஆனந்தம் பெருக, “என்னங்க” அன்பாய் அழைத்தாள் ருக்கு.
“காலையில் இருந்து என் பொண்டாட்டியைப் பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ். இனி இவங்களை நான் பார்த்துக்கிறேன்.” என்றுவிட்டு பெண்கள் யாரும் எதிர்பாரா வண்ணம் ருக்குவைத் தூக்கிக்கொண்டு தங்கள் அறைநோக்கி நடக்க ஆரம்பித்தான் தெய்வா.
“ஏங்க அவ” லீலா ஏதோ சொல்ல வர, “உங்க ரூம் அந்தப் பக்கம்.” என்றுவிட்டு தங்கள் அறைக்குள் சென்றே விட்டான் அவன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
14
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பயமுறுத்தியே காய்ச்சல் வர வச்சுட்டானே இந்த தெய்வா … 4 பேருக்கும் ஃப்ளாஷ்பேக் கதை ஒண்ணு ஒண்ணு இருக்கும் போல … அதெல்லாம் பூகம்பமா ஆகும் போல …