Loading

அத்தியாயம் 31

     “ஹே என்னாச்சு” என்று பதறிக்கொண்டு ஓடி வந்த நாகா ஊர்மியின் மேல் டீ கொட்டியதை உணர்ந்து, “ஹே லூசு, உன்னை நான் இப்ப டீ கேட்டேனா. நான் கேட்காம பத்தினி தெய்வம் மாதிரி, நீ உண்டாக்கி விட்ட தலைவலிக்கு நீயே டீ கொண்டு வந்தியாக்கும். சரி வந்தது தான் வந்த எதுக்காக நான் விளையாடிக்கிட்டு இருக்கும் போது குறுக்க வந்த.” சிறுமியை அதட்டுவது போல் அதட்டினான்.

     “சின்னக் குழந்தை மாதிரி ரூமுக்குள்ள பந்து வைச்சு விளையாடிக்கிட்டு இருந்தது நீங்க. நான் உள்ள வரும் போது பந்து பட்டு டீ கொட்டிக்கிச்சு.

     இந்த ரூமுக்குள்ள எனக்கும் உரிமை இருக்கு. நான் எப்ப வேண்ணாலும் வருவேன். இதை மறந்து பழக்க தோஷத்தில் நீங்க விளையாடினீங்க, நானும் கொஞ்சம் அஜாக்கிரதையா ரூமுக்குள்ள வந்துட்டேன். சோ இரண்டு பேர் மேலும் தான் தப்பு. அதனால் இதை இப்படியே விட்டுடுடலாம். ஒரு டீயால நமக்குள்ள சண்டை வந்தா அது நம்ம வயசுக்கு அழகு இல்ல.” என்றாள் ஊர்மி.

     “ஆமா இதை மட்டும் நல்லாப் பேசு. சரி டீ சேரியைத் தாண்டி உடம்பில் எங்கேயாவது பட்டுச்சா?” அக்கறையாகத் தான் கேட்டான்.

     “தெரியல இனி தான் பார்க்கணும்.”

     “முதல்ல அதை செய்.” என்றவன் ஊர்மி நகரும் போது தான் தரையில் மிகச்சிறிதளவே சிந்தி இருந்த தேநீரைக் கவனித்தான்.

     “ஏய் இரு தரையில் ரொம்பக் கம்மியா தான் இருக்கு. அப்ப அவ்வளவும் உடம்பில் தான் கொட்டி இருக்கா?” என்றவன் அவள் என்ன நினைப்பாள் என்பதை முற்றும் மறந்தவனாக அவளுடைய வயிறு மறைத்த துணியை ஒதுக்கிப் பார்த்தான். தோல் கொஞ்சமாக சிவந்து போய் இருந்தது. மார்பில் இருந்தே காயம் இருக்கும் என்பது புரிந்தது.

     “கொதிக்க கொதிக்க கொண்டு வந்தியா?” என்றவன், சிவந்த இடத்தில் ஊதி விட்டு, “ரொம்ப எரியுதா?” அக்கறையாய் கேட்டான்.

     “இவ்வளவு நேரம் இல்ல, இப்ப தான் லைட்டா பீல் ஆகுது. ஒன்னும் பிரச்சனை இல்லை. நைட் தூங்கும் போது ஆயின்மெண்ட் போட்டா சரியாகிடும்.” நெளிந்தாள் கணவனின் மூச்சுக்காற்றில்.

     “என்ன இவ்வளவு அசால்ட்டா சொல்ற?”

     “இதெல்லாம் சின்ன விஷயம். சின்ன எரிச்சல் அவ்வளவு தான். இந்த வலியையே பொறுத்துக்க முடியலன்னா, அப்புறம் பொண்ணா பிறந்து என்ன பிரயோஜனம்.” என்றாள் அவள்.

     “பைத்தியம் மாதிரி பேசாத. இதையெல்லாம் சரியாக் கவனிக்கலன்னா தோல் பிரச்சனை ஆகி மொத்தத் தோலும் கெட்டுப் போற அளவுக்கு பிரச்சனை வரலாம் தெரியுமா?” என்றவனை விழி எடுக்காமல் பார்த்தாள் அவள்.

     “ஹலோ என் முகத்துல அப்படி என்ன ஓடிக்கிட்டு இருக்குன்னு கண் இமைக்காம பார்த்துக்கிட்டு இருக்க.”

     “இல்ல கோபக்காரனா ஒரு பர்சனாலிட்டி, ரொமேன்டிக் ஹுரோவா ஒரு பர்சனாலிட்டி, ஆணாதிக்கம் பிடிச்சவனா ஒரு பர்சனாலிட்டி, இப்ப அக்கறையான நல்ல மனுஷனா ஒரு பர்சனாலிட்டி இன்னும் எத்தனை பர்சனாலிட்டியா நீங்க மாறுவீங்களோன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

     அந்நியன் விக்ரமுக்குள்ள கூட மொத்தம் மூணு பேர் தான். ஆனா உங்களுக்குள்ள இப்ப வரைக்கும் நாலு பேரை உணர்ந்துட்டேன். இன்னும் எத்தனை பேர் இருக்காங்களோ நினைச்சாலே பகீர்னு இருக்கு.

     அவ அவ ஒருத்தன் கூட காலம் தள்ளுரதுக்கே போராடிக்கிட்டு இருக்கா. நான் உங்க ஒருத்தருக்குள்ள குடி இருக்கிற இத்தனை பேரை எப்படிச் சமாளிக்கப் போறேனோ தெரியலையே.” சிரித்துக்கொண்டே ஊர்மி சொன்னதில் கடுப்பானான் நாகா.

     “என்ன நடந்தாலும் உன் வாய் மட்டும் குறையுதா பார். உனக்குப் போய் பாவம் பார்த்தேன் பாரு, என்னைச் சொல்லணும். உனக்கு இந்த டீயெல்லாம் பத்தவே பத்தாது. எரிமலைக்குழம்பு கேள்விப்பட்டு இருக்கியா? அதைத் தான் அள்ளி கொஞ்சம் உன் மேல ஊத்திவிடணும். அப்ப கூட அதுக்கு தான் எதாவது ஆகுமே தவிர, உனக்கு ஒன்னும் ஆகாது. மகராசி நீ தப்பிச்சி வந்திடுவ.” என்றான் அவன். ஊர்மிக்கு கணவனின் புலம்பலில் சிரிப்பு வர சிரிக்கவும் செய்தாள்.

     புத்தகம் படித்துக் கொண்டிருந்த செல்வா அப்படியே தூங்கிவிட அறையின் விட்டத்தைப் பார்த்துப் பார்த்து போர் அடித்த லீலா அறையை நன்றாக சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்.

     அப்போது தான் காலியாக இருந்த அவளுடைய பேக் கண்ணில் பட்டது. கடவுளே இதில் இருந்த என்னோட துணி என யோசித்துக்கொண்டே திரும்பியவளுக்குப் பதிலாக கபோர்ட் தென்பட, அதைத் திறந்து பார்த்தாள். அதில் செல்வாவின் துணிகள் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் லீலாவின் துணிகளும் என நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

     “இது எல்லாத்தையும் இவரே எடுத்து வைச்சாரா. என்கிட்ட சொல்லி இருக்கலாமே. அடக்கடவுளே என்னோட இன்னர்வியர் கூட இவர் தான் எடுத்து வைச்சாரா. அச்சோ நான் என்ன பண்ணுவேன், செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு எப்படித் தூங்குறாரு பாரு.” உள்ளுக்குள் ஊற்றெடுத்த வெட்கத்தால் இதுவரை தன்னுள்ளே புதைந்து கிடந்த தன்னுடைய குழந்தைத்தனம் வெளியே வருவதை உணர்ந்தாள் லீலா.

     “ருக்கு பொதுவா எனக்கு இந்த ஆக்டரைப் பிடிக்கவே பிடிக்காது. இருந்தாலும் நீங்க ஆசைப்பட்டீங்களேங்கிற ஒரே காரணத்துக்காக நான் உங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்.” தெய்வா இத்தோடு நான்காம் முறையாகச் சொன்னான்.

     நேர்மையான காவலன் அவன் மனைவியிடம் மட்டும் இலஞ்சம் எதிர்பார்க்க, அது புரியாத அவன் மக்கு மனைவியோ, “இதையே எத்தனை தடவை சொல்லுவீங்க. அமைதியா இருங்க படம் ஆரம்பிச்சிடுச்சு.” என்றுவிட்டு முன்னிருந்த திரையில் கவனமானாள்.

     “ஏங்க இந்தப்படம் சன் டீவியிலே பல தடவை போட்டுட்டான். போட வேற படம் இல்லைன்னு இந்த தியேட்டர் காரன் இந்தப் படத்தை போட்டா அதையும் முதல் முறையா பார்க்கிற மாதிரி எழுத்தில் இருந்து பார்க்க நினைக்கிறீங்களே இதெல்லாம் ரொம்ப அநியாயம் தெரியும் இல்ல.”

     “ப்ச் அமைதியா இருங்க, ஹீரோ வரார்.”

     “ருக்கு” என அழைத்த தெய்வா மீண்டும் ஏதோ சொல்ல வர, “என்னங்க வேணும் உங்களுக்கு என்னை நிம்மதியா படம் பார்க்க விட மாட்டீங்களா?” சற்றே கோபமானாள்.

     “சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டுமான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன், இதுக்கு எதுக்கு இப்படிக் கத்துறீங்க.” சாதுவான பொண்டாட்டி சேதுவாக மாறியதால் தெய்வா சாதுவாக வேண்டிய நிலைமை.

     “போங்க மாஸ் டைலாக் மிஸ் ஆகிடுச்சு. எல்லாம் உங்களால் தான். இதுவே நான் என் அக்கா தங்கச்சிங்க கூட வந்திருந்தா அவங்க அமைதியா இருந்திருப்பாங்க. நான் சந்தோஷமா படம் பார்த்திருப்பேன் உங்களால என் சந்தோஷமே போச்சு.” மனதில் தோன்றுவதை எல்லாம் பேச யோசிக்க வேண்டாம் என்று தெய்வா சொன்னதற்காக அவள் இத்தனை பேசி இருக்க வேண்டாம் தான்.

     “என்னது என்னால உங்க சந்தோஷம் போச்சா” தெய்வாவிற்கு கோபம் வந்தது.

     “ஆமா உங்களால தான் நான் படம் பார்க்கிற சந்தோஷம் போச்சு. எனக்கு இந்த ஆக்டர் எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?” சின்னக் குழந்தையை விட மோசமாக அடம்பிடித்தாள் அவள்.

     “ருக்கு வாங்க போகலாம்” முகத்தைக் கடுவன் பூனை போல்  வைத்துக்கொண்டு தெய்வா அழைக்க, “இல்லை நான் படம் பார்க்கணும்.” என்றாள்.

     “ருக்கு கிளம்புங்கன்னு சொன்னா கிளம்புங்க, சும்மா குழந்தை மாதிரி அடம்பிடிச்சிக்கிட்டு.” இவன் கத்த, இதுவரை அவனுடன் செல்ல சண்டையிட்டுக் கொண்டிருந்தவள் அவன் கத்திய கத்தில் அரண்டு போய் தானாக அவன் பின்னால் வெளியே வந்தாள்.

     அன்றைய மாலை நேரம், “அடடே வாங்க தர்மா” தம்பதி சமேதாராய் வந்த இருவரில் தர்மாவை மட்டும் வரவேற்றார் அவனுடைய பிரின்சிபல்.

     “இவங்க என்னோட மனைவி பேரு தேவகி.” தர்மாவே மனைவியை அறிமுகப்படுத்த, “ம்ம்… உள்ள வாங்க தர்மா” என்றார் அவர்.

     தேவகிக்கு அறிமுகத்திலே அவரைப் பிடிக்கவில்லை இருந்தாலும் முகத்தில் இருந்த புன்னகை சிறிதும் மறையாமல் கணவனைப் பின்தொடர்ந்து வந்தாள். அவள் நினைத்திருந்தால் மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டேன் எனப் போராட்டம் செய்திருக்கலாம்.

     ஆனால் இந்த சந்திப்பிற்குப் பிறகு இவரைத் தன் ஆயுளில் பார்ப்போமோ மாட்டோமோ. ஒற்றைச் சந்திப்பிற்காகத் தானும் கோபப்பட்டு கணவனையும் சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்து மனதை வெகுவாகக் கட்டுப்படுத்தி இருந்தாள்.

     “ஹலோ தர்மா, வாங்க உங்களுக்காக தான் நான் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இவங்க தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அதிர்ஷ்டசாலியா” கேட்டபடி வந்தாள் இளம் யுவதி ஒருத்தி.

     “ஆமா கயல் இவங்க என்னோட வொய்ப், பேரு தேவகி.” தர்மா சொன்னதும், தேவகி மரியாதைக்காக வணக்கம் வைக்க, “ஸ்டைலா ஒரு ஹாய் கூட சொல்ல மாட்றாங்க. சரியான பழைய பஞ்சாங்கமா இருப்பாங்க போல. உங்க கல்யாண விஷயத்தில் உங்க அப்பா கொஞ்சம் அவசரப்பட்டுட்டாருன்னு தோணுது.

     எனிவே இதைப் பத்தி பேசி இனி எந்தப் பிரயோஜனமும் இல்லை. அம்மா சாப்பாடு ரெடி பண்ணிட்டு இருக்காங்க. அதுவரைக்கும் நாம சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம் ஜுஸ் எடுத்துக்கோங்க தர்மா.” என கயல் நீட்டிய ட்ரேயில் இருந்து ஒன்றை எடுத்து தேவகியின் கையில் கொடுத்துவிட்டு அடுத்ததாக தனக்கென்று ஒன்றை எடுத்துக்கொண்டான் தர்மா.

     “என்ன மிஸஸ் தர்மா நேத்து நைட் பேஸ்மெண்ட்டை ரொம்ப ஸ்ட்ராங்கா போட்டுட்டீங்க போல. இப்பவே இப்படித் தாங்குறாரு. இன்னும் நாள் போக போக உங்களை நடக்கக் கூட விடாம அவரே தூக்கிக்கிட்டு நடப்பாரு போல.” நக்கல் போல காட்டிக்கொண்டாலும் அதில் இருந்த வன்மத்தை தேவகியால் நன்றாகவே உணர முடிந்தது.

     “என் புருஷன் என்னை குழந்தை மாதிரி கையில் தூக்குறாரு, வேதாளம் மாதிரி தோளில் தூக்கிக்கிறாரு, இல்லன்னா உப்பு மூட்டை கூட தூக்கிக்கிட்டு நடக்கிறாரு. அதில் எந்தத் தப்பும் இல்லையே.” தேவகியும் கிண்டல் போலவே சொல்லி முடித்தாள்.

     “ஆமா தப்பு இல்லை தான். போகுது, நீங்க என்ன படிச்சிருக்கீங்க தேவகி.” அடுத்த விஷயத்திற்கு வந்தாள் கயல்.

     “பிஏ தமிழ்” இதுவரை தன் படிப்பை நினைத்து தேவகி பெருமைப்பட்டது உண்டே தவிர தாழ்வாக நினைத்தது கிடையாது. அதனால் சந்தோஷமாகவே சொன்னாள். ஆனால் கேட்டுக்கொண்டிருந்தவள் முகம் சுருங்கிவிட்டது.

     “வாட், சிங்கிள் டிகிரி தானா. உங்களுக்குத் தர்மா என்ன படிச்சிருக்காருன்னு தெரியுமா? அவரோட பேரை விட பெருசு அவரு படிச்ச படிப்பு. அப்படிப்பட்டவருக்கு நாம சரியான ஜோடிதானான்னு ஒரு முறையாவது யோசிச்சுப் பார்த்தீங்களா?

     அவங்க அப்பா வந்து கேட்டதும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்க மாட்டாருன்னு ஒத்துக்கிட்டீங்க இல்ல.” என்று தேவகியைப் பார்த்து சொன்னவள் இப்போது தர்மாவிடம் தாவினாள்.

     “தர்மா என்ன நீங்க, இவங்ககிட்ட சரியான படிப்பு இல்ல. நாகரிகம் பத்தல, ட்ரஸிங் சென்ஸ் சுத்தமா இல்ல. அழகும் உங்களுக்கு இணை இல்ல. இப்படி ஒருத்தங்களை எப்படி உங்க அப்பா உங்களுக்கு ஜோடியா செலக்ட் பண்ணாரு.

     இவங்களை மாதிரி ஒருத்தங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு தான் காலேஜில் உங்களுக்கு வந்த அத்தனை ப்ரப்போஸலையும் ரிஜெக்ட் பண்ணீங்களா?

     உங்க அப்பா உங்களுக்கு நல்லது பண்றதா நினைச்சிக்கிட்டு உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுத்தமே இல்லாத ஒருத்தங்களை உங்களுக்கு மனைவியா செலக்ட் பண்ணிட்டாங்க.” படபடவென்று வெடித்தாள் கயல். வெறுப்புடன் தலையை இடவலமாக அசைத்த தேவகிக்கு கையில் இருந்த மாம்பழச்சாறு குடிக்காமலேயே கசக்க அதைக் கீழே வைத்துவிட்டாள்.

     “போதும் கயல், இதுக்கு மேல ஒருவார்த்தை நீங்க பேச வேண்டாம். என் பொண்டாட்டி தேவகியைப் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. நானும் பிரின்சிபாலோட பொண்ணு, கூட வேலை பார்க்கிறவங்கன்னு பொறுத்துப் பொறுத்து போனா ரொம்பத் தான் பேசுறீங்க.

     தேவகி எப்படிப்பட்டவங்கன்னு எனக்குத் தெரியும். இவங்களை மாதிரி ஒருத்தங்களை எனக்கு மனைவியா தேர்ந்தெடுத்ததுக்காக நான் எங்க அப்பாவுக்கு என்னோட வாழ்நாள் முழுக்க கடமைப் பட்டிருக்கேன்.

     இவங்களோட உண்மையான அழகு, கள்ளம் கபடம் இல்லாத மனசு. அதுதான் எனக்கு அவங்ககிட்ட ரொம்பப் பிடிச்சது. இவங்களுக்கு நாகரிகம் பத்தலன்னு சொன்னீங்க.

     இதுவே இவங்க இடத்தில் வேற யாராவது இருந்திருந்தா நீங்க பேசின பேச்சுக்கு உங்களை நாலு கேள்வியாவது நறுக்குன்னு கேட்டு இருப்பாங்க. ஆனா இத்தனைக்குப் பிறகும் எனக்காகவும், சபை நாகரிகம் பார்த்தும் அமைதியா இருக்காங்க என் மனைவி.

     ஹாய் சொல்லி ஹேண்ட்ஷேக் பண்ற அளவுக்கு இவங்களுக்கு நாகரிகம் பத்தாம இருக்கலாம். ஆனா வீட்டுக்கு வந்த விருந்தாளியை மனசு நோக பேசுற அளவுக்கு இவங்க தரம் தாழ்ந்து போகல, இனி எப்பவும் போகவும் மாட்டாங்க.” என்றான்.

     “அப்ப நான் தரம்தாழ்ந்து போயிட்டேன்னு சொல்ல வரீங்களா தர்மா. உங்களை உண்மையா நேசிச்சதைத் தவிர நான் என்ன தப்பு பண்ணேன்னு இப்படி ஒரு பேரை எனக்குக் கொடுத்தீங்க.” கயல் கண்களில் கண்ணீருடன் கேட்டாள் கயல்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அதான நாகா அப்பப்ப மாறிக்கிட்டே இருந்தா எப்படி … எங்க ஊர்மி கன்பியூஸ் ஆகுது …

    டாக்டர் அமைதியா இருந்தாலும் கச்சிதமா எல்லா வேலையும் பார்க்கிறார் …

    தெய்வா நீ தான் முழு நேர வில்லனா மாறிடுவ போல … பாதி படத்துல இருந்து கூப்பிட்டு வந்துட்டானே …

    தர்மா சூப்பர் பா … இனிமே நீதான் ஹீரோ … கேட்ட பாரு கேள்வி … நல்ல பையன் நீ … இந்தாம்மா கயல் நீ லவ் பண்ணா போதுமா எங்க தர்மா உன்னை லவ் பண்ண வேணாமா … சும்மா எங்க தேவகியை வம்புக்கு இழுக்கிற