
அத்தியாயம் 30
மதியவேளையில் வேலைகள் அனைத்தையும் முடித்து சகோதரிகள் நால்வரும் கதையளந்து கொண்டிருந்தனர். முந்தைய நாள் இரவு பற்றி கேட்க ஆவல் இருந்தாலும் அடக்கிக்கொண்டனர்.
திருமணம் முடிந்த முதல் நாள் என்பதால் ஆண்கள் யாரும் வேலைக்குச் செல்லவில்லை. அவரவர் அறையில் ஓய்வாக அமர்ந்திருக்க, கிடைத்த சொற்ப நேரத்தை தங்களுக்காக எடுத்துக்கொண்டனர் பெண்கள்.
“ஊர்மி கிளம்பலாமா” வெளியே செல்லும் தோரணையுடன் கிளம்பி வந்து நின்று கேட்டான் நாகா.
“எங்க” கேட்ட ஊர்மிக்கு நிஜமாகவே தெரியவில்லை.
“என்ன இப்படிக் கேட்கிற. ஷாப்பிங் போகலாம் ரெடியாகி இருன்னு சொன்னேனே. இந்தச் சின்ன வயதில் இத்தனை ஞாபக மறதி ஆகாதும்மா. அதுசரி உனக்கு அக்கா தங்கச்சி கூட இருந்தா வெளியே உலகமே அழிஞ்சாலும் தெரியாதே.” என்றான். நிஜத்தில் அவன் அவளிடம் அப்படி ஏதும் சொல்லவில்லை என்பதால் திருதிருவென விழித்தாள் ஊர்மி.
“ஊர்மி இதையெல்லாமா மறக்கிறது, சீக்கிரம் வேற சேலை கட்டிட்டு போயிட்டு வா.” என்றாள் லீலா.
மறுத்துப் பேசினால் கணவன் வேறு ஏதேனும் நாடகம் போடுவான் என்பதால், “சரிக்கா” என்றவண்ணம் தன்னறை வந்து சேர்ந்த ஊர்மி, “இவரோட எண்ணம் தான் என்ன. எதுக்காக இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கார். நல்லபெயர் எடுக்க மாமா கூட இங்க இல்லையே.” சத்தமாகப் புலம்பிக்கொண்டே கைக்குத் தோதாக ஏதோ ஒரு சேலையை எடுத்தவள், கட்டியிருந்த சேலையை அவிழ்க்கத் துவங்கிய வேளையில் ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தால், மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு ஸ்டைலாக அறை வாசலருகே நின்றிருந்தான் நாகா.
அவன் நின்ற தோரணையில் ஒருநிமிடம் மூச்சடைத்துப் போனவள், “ஹலோ உங்களுக்கு மேனர்ஸ் தெரியாது. ஒரு பொண்ணு ட்ரஸ் சேன்ஜ் பண்ணும் போது ரூமுக்குள்ள வந்ததும் இல்லாம, சத்தம் கொடுக்காம இப்படி பேன்னு பார்த்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்.” சீறினாள்.
“என்ன அர்த்தம் இன்னும் இன்னும் எதிர்பார்த்தேன்னு அர்த்தம். எதிர்பார்த்தது கிடைக்காமப் போன ஏக்கத்தில் ஏங்கிப் போய் இருக்கேன்னு அர்த்தம்.” என்றான் பெருமூச்சுடன்.
“இப்படியெல்லாம் பேசுறதுக்கு உங்களுக்கு அசிங்கமாவே இல்லையா?”
“இல்லவே இல்ல, நான் என்ன ரோட்டில் போற பொண்ணு கிட்டையா பேசுறேன். என்னோட பொண்டாட்டி, நான் தொட்டுத் தாலி கட்டின என்னோட பொண்டாட்டிகிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன். இதுவும் பேசுவேன் இன்னமும் பேசுவேன் என்னைக் கேட்கிறதுக்கு யாரு இருக்கா”
“நான் இருக்கேன், நான் கேட்பேன். நீங்க போன்னு சொன்னா போறதுக்கும், வான்னு சொன்ன பல்லைக் காட்டுறதுக்கும் நான் ஆள் இல்லை. உங்களோட சௌகர்யத்துக்கும் ஏத்த மாதிரி நீங்க வேண்ணா நிமிஷத்துக்கு நிமிஷம் உருமாறலாம், என்னால் முடியாது, வெளிய போங்க.” சற்று சத்தமாகவே சொன்னாள்.
“முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ.” என்க, “அப்ப சரி, நீங்க எங்கேயும் போக வேண்டாம். நான் பாத்ரூமிற்குள்ள போய் சேலையை மாத்திக்கிறேன்.” என நகர்ந்தவளின் வழியை மறைத்து நின்றவன்,
“எனக்கு ஒரு சந்தேகம். நான் உன் புருஷன் என் முன்னாடி துணி மாத்துறதுல அப்படி என்ன உனக்கு சங்கோஜம்.” என்க, “எப்படி டா ஒன்னுமே நடக்காத மாதிரி உன்னால் பேச முடியுது.” தவித்தவளுக்கு காலையில் இருந்து அவன் கொடுக்கும் இடைவிடாத தொல்லைகளால் எரிச்சல் மேலிட்டது.
“நான் உங்க பொண்டாட்டி, என் முன்னாடி ட்ரஸை கழட்டிட்டு நில்லுங்கன்னு நான் சொன்னா நீங்க கேட்பீங்களா?” கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஊர்மி வார்த்தையை விட, “இவ்வளவு தானா இப்பப் பாரு.” என்று வேக வேகமாக அவன் அணிந்திருந்த சட்டைப் பட்டன்களைக் கழட்ட ஆரம்பித்தான் நாகா.
உள்ளங்கையால் தன் முகத்தை மறைத்துக்கொண்டவள், “இப்படியெல்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ். எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.” சோர்வுடன் சொன்னாள் ஊர்மி.
“ஆஹா, ப்ளீஸ்… இதை உன் வாயில் இருந்து கேட்கிறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீ மட்டும் ஆரம்பத்திலேயே இப்படி எனக்குத் தணிந்து போய் இருந்தா நமக்குள்ள பிரச்சனையே வந்திருக்காது.” என்றவனை விசித்திரமாகப் பார்த்தாள் ஊர்மி.
“உனக்குள்ள இருக்கா இல்லையான்னு தெரியாத பேராசை குணத்தைத் தாண்டி, உன்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம் என்ன தெரியுமா? உன்னோட அசட்டுப் பேச்சும், அதீத தைரியமும் தான். பொண்ணுங்கிறவ எப்பவும் அவளோட புருஷனுக்கு அடங்கி இருக்கிறது தான் நல்லதுன்னு நினைக்கிறவன் நான்.
ஒரு காலகட்டம் வரை ஊருக்குள்ள எல்லாப் பெண்களும் அப்படித்தான் இருந்தாங்க. அப்படி இருந்த வரை பெண்களும் பாதுகாப்பா இருந்தாங்க, வெளியே போயிட்டு வரும் ஆண்கள் வீட்டுக்கு வந்ததும் நிம்மதியா இருந்தாங்க. மொத்தத்தில் குடும்பம் குடும்பமா இருந்தது.
எப்ப ஆண்களை மாதிரி பொண்ணுங்களும், நானும் சம்பாதிக்கிறேன், நானும் ஊர் சுத்துவேன், நானும் பார்டி பண்ணுவேன், நானும் ப்ரண்ட்ஸோட ஸ்டே பண்ணுவேன், நானும் டூர் போவேன்னு ஆரம்பிச்சீங்களோ அப்ப இருந்து எல்லாமே மாறிடுச்சு. புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிடுச்சு.” நாகா தன் மன எண்ணத்தை சொல்ல, மனதிற்குள் பலத்த அடிவாங்கினாள் ஊர்மிளா.
பெண்ணியம் பேசிக்கொண்டு எனக்குப் பிடித்ததை மட்டும் தான் நான் செய்வேன் என்று சொல்லும் ரகம் அவள் கிடையாது. குடும்பத்தின் நலனுக்காக வளைந்து கொடுத்து நிலைத்து நிற்கத் தெரிந்தவள் தான்.
ஆனால் இவன் பேச்சு படுத்த இடத்தில் இருந்து அவன் சொல்லாமல் எழுந்துகொள்ளக் கூடாது என்பதாக அல்லவா இருக்கிறது. வடிவேல் பெற்ற பிள்ளைகளில் இவன் ஒருவன் தான் இப்படியா? இல்லை மற்றவர்களும் இவனைப் போல் தானா? என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்.
“நாட்டுப் பிரச்சனை நமக்குத் தேவையில்ல. நான் கெட்டு குட்டிச்சுவராத் தான் போவேன்னு சொல்லும் பொண்ணுங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது. ஆனா என் பொண்டாட்டியை நான் எனக்கேத்த மாதிரி டியூன் பண்ணிக்க முடியும் தானே.
உன்னோட திமிர் எனக்குக் கொஞ்சம் பிடிச்சிருக்கு. கொஞ்சம் தான். உன்னோட வாழ்ந்தா வாழ்க்கை சுவாரசியமாப் போகும் னு தோணுச்சு. அப்பா காலத்துக்கு அப்புறம் உன்னை விவாகரத்துப் பண்ணிட்டு எப்படியும் யாரையோ கல்யாணம் பண்ணிக்கத் தான் போறேன். அப்பவும் என் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு கிடைக்குமாங்கிறது சந்தேகம் தான்.
எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தேன். என்னோட சில குணங்களை பொறுத்துப் போக வேண்டிய கட்டாயம் உனக்கு இருக்கும் போது, உன்கிட்ட இருக்கிற சில குணங்களைப் பொறுத்துக்கிட்டு உன் கூடவே வாழ்ந்துட்டா என்னன்னு தோணுச்சு.”
“என்னோட நீ வாழப்போகும் வாழ்க்கையில் உன் முகத்தைப் பார்த்து நீ ஆசைப்படுற எல்லாத்தையும் உன் காலடியில் கொண்டு வந்து கொட்டத் தெரியாது.
ஆனா நீ வாய் திறந்து கேட்கும் எல்லாம் உனக்கு கட்டாயம் கிடைக்கும். ஒரே ஒரு கண்டிஷன் எனக்கு ஏத்த மாதிரி நீ நடந்துக்கணும். என்னைத் தேவையில்லாமல் கேள்வி கேட்பதோ, அதிக உரிமை எடுப்பதோ இருக்கக்கூடாது.
இதையெல்லாம் நீ மதித்து நடக்கும் வரை வீட்டிற்கு உள்ளே, வெளியே உன் மரியாதைக்கு நான் பொறுப்பு.” என்றவன் தன்னை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து,
“என்னடா காலையில் அப்படி உருக உருகப் பேசினானே இப்ப இப்படிப் பேசுறானேன்னு அதிர்ச்சியா இருக்கா. அதுவும் உண்மை தான், இதுவும் உண்மை தான். எனக்கு ஏத்த மாதிரி நீ நடந்துக்கிட்டா எப்போதும் உருகிக்கிட்டே இருக்க நான் தயார் தான்.” என்க, கேட்டுக்கொண்டிருந்தவளின் இதழ்களில் நக்கல் புன்னகை மிச்சம் இருந்தது.
“நீ ஐ மீன் நீங்க இப்படி நடந்துக்கிறது எனக்கு ஆச்சர்யமாவே இல்ல. ஏன் தெரியுமா, ஒரு பாம்பு எத்தனை முறை தன்னோட தோலை உரிச்சாலும், எத்தனை உருவம் மாத்தினாலும் அது பாம்பு தான்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி தான் நீங்களும், எத்தனை வேஷம் போட்டாலும் உள்ளுக்குள்ள இருக்கிற விஷம் அமிர்தமா மாறப் போறது இல்லை.
கெட்டதிலும் நல்லதுங்கிற மாதிரி உங்களுக்கே தெரியாம நீங்க ஒரு காரியம் பண்ணி இருக்கீங்க. உங்களுக்கும் எனக்கும் நடுவில் எந்தப் பிரச்சனையும் இல்ல நாம சந்தோஷமா நம்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டோம் என்கிற மாதிரி சீனை கிரியேட் பண்ணி இருக்கீங்க.
அதுவரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோஷம். நேத்து நீங்க கேட்டதும் கோபத்தில் தாலியைக் கழட்டி கொடுத்திட்டேனே தவிர உள்ளுக்குள் ரொம்ப வருத்தமா இருந்தது.
நமக்குள்ள இருக்கிற உறவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நினைச்சுப் பண்ணிக்கிட்ட கல்யாணத்தை இத்தனை சீக்கிரம் முறிக்கணுமான்னு வருத்தம் இருந்துக்கிட்டே தான் இருந்தது.
இப்ப நீங்களும் நம்ம கல்யாண வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முன்வந்ததில் எனக்குச் சந்தோஷம், நிஜமாவே ரொம்பச் சந்தோஷம் தான். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி உங்களோட அடிமையா இருந்து அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கிறதில் எனக்கு விருப்பம் இல்லை.
அப்படி செஞ்சா அது என்னைப் பெத்த அம்மா, நல்லது சொல்லி வளர்த்த அத்தை, என் மேல் கொள்ளைப் பாசத்தைக் கொட்டிக்கொடுத்து பாதுகாத்த அக்கா, தன் மகனோட வாழ்க்கையை சரிசமமாப் பங்குபோட்டு அவனோட சந்தோஷமா வாழ்வான்னு நம்பி கூட்டிட்டு வந்த வடிவேல் மாமா, கடைசியா நான், விருப்பு வெறுப்பு கொண்ட ஊர்மிங்கிற தனிமனுதிக்கும் சேர்த்து செய்யும் அநியாயம். அதை நான் செய்ய மாட்டேன்.” என்றவளை வியப்பாகப் பார்த்தான் நாகா. வார்த்தைகளில் சாட்டை இருக்கும் என்று இப்போது தான் அவனுக்குப் புரிந்தது.
“நம்ம கல்யாண வாழ்க்கையைக் காப்பாத்திக்க, என்கிட்ட இருக்கும் நல்ல குணங்களோட என்னை ஏத்துக்க, நான் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்புக்கான கால அவகாசம் ஒரு வருஷம்.
இந்த ஒரு வருஷத்தில் நீங்க என்ன தான் அலப்பறையைக் கூட்டினாலும், நம்ம கல்யாண வாழ்க்கையைக் காப்பாத்துறதுக்காக நான் கொஞ்சம் பொறுத்துப் போவேன். கொஞ்சம் தான்.
எனக்கு ஏத்த மாதிரி நீங்க மாறி வந்தா உங்களோட காலம் முழுக்க வாழ்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றாள்.
“இது என்னடி அநியாயமா இருக்கு. எனக்காக நீ மாறனும் னு நான் நினைச்சா அது தப்பு. அதுவே உனக்காக நான் என்னை மாத்திக்கிறது சரியா. எந்த ஊர் நியாயம் இது“ வக்கனையாக கேட்டான் நாகா.
“உங்களுக்காக நான் என்னை மாத்திக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே. நான் நானா இருப்பேன், நீ நீயா இரு நாம இரண்டு பேரும் சேர்ந்து இருப்போமுன்னு சொல்வதற்குப் பெயர் குடும்பம் கிடையாது. அது ஒரு குழு அவ்வளவு தான்.
பிடித்தம், பிடித்தமின்மையைத் தாண்டி ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போவது தான் குடும்பம். உங்களுக்காக விட்டுக்கொடுக்க நான் தயார். ஆனா விட்டுக்கொடுப்பது நானாக மட்டுமே இருக்கணும் னு நினைச்சா உங்க ஆட்டத்துக்கு நான் ஆள் இல்லை.
ஒரு வருஷம் போகட்டும், அதுக்கு அப்புறமும் உங்களோட என்னால சந்தோஷமா வாழ முடியாதுன்னு தோணுச்சுன்னா அப்ப நான் பாட்டுக்கு என் வழியைப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்.” என்றவளைப் பார்த்தவன், “அப்ப என் வாழ்க்கை, என் ஆசை, என் கனவு.” என்றான்.
“நிஜமாவே இந்த வாழ்க்கையைக் காப்பாத்திக்கிற ஐடியா இருந்தா அதுக்கான பாதையில் நேர்மையா நடங்க. ஒரு பொண்ணை அன்புக்கு அடிமையாக்குவது சுலபம். ஆனா உங்க ஈகோவைத் திருப்திப்படுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவளை அடக்கலாம் னு நினைக்காதீங்க.
பொண்ணுங்க எரிமலை மாதிரி. அவங்க அமைதியா இருக்கிறது அவங்களோட இயலாமை இல்ல. தான், தன்னோட குடும்பம் என்று தன்னைச் சுத்தி இருக்கிறவங்க அத்தனை பேருடைய சந்தோஷமும் தன்னைச் சார்ந்து இருக்கு என்கிற காரணம் தான், ஒவ்வொரு பொண்ணோட அமைதிக்கு பின்னாலும் இருக்கிற தங்கமலைஇரகசியம்.
அமைதியா இருக்கிற எரிமலையைத் தொடர்ந்து கொடைச்சல் கொடுத்து வெடிக்க வைச்சா அதோட விளைவுகள் ரொம்பவும் பயங்கரமா இருக்கும். அது மாதிரி தான் நானும்.
இனி எல்லாம் உங்க கையில் தான் இருக்கு. என்னைக் கொஞ்சம் நல்லாக் கவனிச்சுப் பாருங்க. தப்பே பண்ணாமல் இருக்க நான் ஒன்னும் தெய்வப்பிறவி கிடையாது தான். ஆனா சின்னச்சின்னத் தப்புகளையும் தாண்டி என்கிட்டேயும் பல நல்ல குணங்கள் இருக்கு.
உங்ககிட்ட பத்தில் இருக்கும் இரண்டு நல்ல குணத்திற்காக நான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலையா அந்த மாதிரி என்னோட நல்ல குணங்களுக்காக என்னை ஏத்துக்க முயற்சி பண்ணுங்க.” என்றுவிட்டு தான் அணிந்திருந்த சேலையை சரிசெய்துவிட்டு கீழே சென்றாள்.
“ஊர்மி என்னாச்சு கிளம்பலையா?” லீலா கேட்க, “இல்லக்கா அவருக்கு திடீர்னு தலைவலி வந்திடுச்சாம் அதனால இன்னொரு நாள் போகலாம் னு சொல்லிட்டாரு” எனச் சமாளித்தாள்.
“சூடா டீ குடிச்சா தலைவலிக்கு ரொம்ப நல்லா இருக்கும். நீ போய் போட்டு கொடு.” ருக்கு சொல்ல, உண்மையைச் சொல்லி இருந்தால் அத்தோடு முடிந்து இருக்கும், பொய் சொன்னதன் பலன் அவனை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று தோன்ற சின்ன சலிப்புடன் நகர்ந்தாள் ஊர்மி.
“புருஷங்காரன் தனியா ரூமில் இருக்கானே. அவன் கூட இருப்போம், அவன் கூடப் பேசுவோம் னு இல்லாம அக்கா கிட்ட போறாங்களாம். இத்தனை வருஷமா ஒன்னா தானே இருந்தாங்க. இனியாவது புருஷன் கூட கொஞ்சம் நேரம் செலவு பண்ணலாம் னு தோணுதா பாரு. காலையில் இருந்து பேசிக்கிட்டே இருக்காங்க. அப்படி என்னத்தை தான் பேசுறாங்களோ தெரியல.” புலம்பிக்கொண்டே கூண்டுப்புலியாய் அங்கும் இங்கும் அறைக்குள் அலைந்து கொண்டிருந்தான் தெய்வா.
சிறிது நேரம் நடந்தவன் இது சரி வராது என முடிவெடுத்தவனாக, “ருக்கு கொஞ்சம் ஸ்னேக்ஸ் எடுத்துட்டு வரீங்களா?” அறையில் இருந்தே குரல் கொடுத்தான்.
“அக்கா போயிட்டு வந்திடுறேன்.” என்றுவிட்டு ருக்கு அறைக்குள் செல்ல, “தேவகி இன்னைக்கு நைட் எங்களோட பிரின்சிபல் வீட்டுக்கு நம்மளை டின்னருக்கு வரச் சொல்லி கூப்பிடுறாங்க, என்ன சொல்லட்டும்.” தன் அறை வாசலில் நின்று கேட்டான் தர்மன்.
“போலாங்க” பதில் சொல்லி முடித்தவள் தமக்கையிடம் திரும்ப, “லீலா கொஞ்சம் உள்ள வாங்களேன்.” செல்வா அழைத்திருந்தான்.
தங்கைகளிடம் சொல்லிவிட்டு லீலா எழுந்து தங்கள் அறைக்குள் வர, “ஏன் இப்படிப் பண்றீங்க லீலா. காலையில் எழுந்ததில் இருந்து நீங்களும், உங்க தங்கச்சிங்களும் கிச்சனே கதின்னு இருக்கீங்க. வேலை எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமாவது ரூம் பக்கம் போவீங்கன்னு பார்த்தா, ஒன்னா உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு இருக்கீங்க.
இதைப் பாருங்க, நீங்க தான் தெய்வாவையும் அவன் பொண்டாட்டியையும் ஒன்னா டைம் ஸ்பெண்ட் பண்ண விட மாட்றீங்களாம். உன் பொண்டாட்டியைக் கண்டிச்சி வைன்னு எனக்கு மெசேஜ் பண்றான்.” செல்வா தன் அலைபேசியைக் காட்ட, லீலா அதிர்ச்சியில் வாயில் கை வைத்தாள். இப்படி ஒரு சிக்கல் வரும் என அவள் எதிர்பார்க்கவே இல்லை.
“லீலா, பொதுவாவே என்னை யாராவது குற்றம் சொன்னா எனக்குப் பிடிக்காது. அதுவும் இந்த வீட்டு இளவரசனுங்க சொன்னா ரொம்பக் கோவம் வரும். ஒன்னு புரிஞ்சிக்கோங்க இனிமேல் நான் வேற, நீங்க வேற இல்ல. அதனால் இன்னொரு முறை உங்களைப் பற்றி யாரும் என்கிட்ட குற்றம் சொல்ற மாதிரி நடந்துக்காதீங்க” சற்று அழுத்தமாகவே சொன்னான்.
“ஸ்சாரிங்க இனிமேல் இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்.” என்றுவிட்டு அவள் வெளியேற நினைக்க, “எங்க போறீங்க இங்கேயே இருங்க. நீங்க இங்க இருந்தா தான் உங்க தங்கச்சிங்க அவங்க ரூமுக்குப் போவாங்க. கல்யாணம் ஆகிடுச்சுன்னு மனதில் ஏத்திக்கிட்டு உங்க தங்கச்சிங்க கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்க.” செல்வா சொன்னது சரி என்று தோன்ற அமைதியாய் மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.
“புக்ஸ் ஏதாவது படிக்கிறீங்களா?” சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட மனைவி மீது இருந்த கோபம் எங்கோ சென்றுவிட மென்மையாகக் கேட்டான் செல்வா.
“இல்ல அந்தப் பழக்கம் இல்லை” மென்மையாக மறுத்தாள் லீலா.
“ஓ… எனக்கு புக்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதுவும் மாயாஜாலங்கள் நிறைந்த கதைகள் ரொம்பப் பிடிக்கும். நான் இல்லாத சமயத்தில் போர் அடிச்சா இங்க இருக்கிற புக்ஸ் ஏதாவது படிச்சிப் பாருங்க.” என்க, தலையை தலையை ஆட்டினாள் அவள்.
அறைக்கு வந்த மனைவியை அப்படியே பிடித்துக்கொண்டான் தெய்வா. “ஏன் ருக்கு உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா. உங்களுக்கு நான் புருஷனா இல்லை உங்க அக்காவா. எப்ப பார்த்தாலும் அவங்க பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கீங்க. நான் தான் உங்களையே நினைச்சிக்கிட்டு பைத்தியமா இருக்கேன். ஆனா உங்களுக்கு என் நினைப்பே இல்லல்ல.” வறுத்தெடுத்தான்.
நாகாவிற்கென்று டீ எடுத்துக்கொண்டு வந்த ஊர்மி தங்களுடைய அறையின் கதவைத் திறக்க, அடுத்த நிமிடமே அவள் கையில் இருந்த அந்தச் சூடான டீ அவள் மேலே கொட்டி இருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நாகா எங்க ஊர்மியை என்னடா பண்ண … இவங்கள வீட்ல வச்சுக்கிட்டு வேலைக்கு துரத்தி விடுவாங்களா 🤣🤣 பாம்பு பாம்பு தான் … யதார்த்தமா பேசுது ஊர்மி … இவர் லவ் பண்வாறாம் ஆனா கண்டிஷன் போடுவாராம் … வக்கீலு நீ கோர்ட்ல வாதாடாம பொண்டாட்டி கிட்ட வாதாடிக்கிட்டு இருக்க …