
அத்தியாயம் 29
“ஓகே டார்லிங், நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன். நீ அத்தானுக்குப் பிடிச்ச பூரிக்கிழங்கு பண்ணி வை. அப்புறம் சோம்பேறித்தனப்பட்டு உன் அக்காமாருங்களைச் செய்யச் சொல்லிடாதே. எனக்கு உன்கையால் சாப்பிடணும் போல இருக்கு.” என்று ஊர்மியின் கன்னம் தட்டி சொன்ன நாகா விசில் அடித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.
“நான் செஞ்சா பூரியை எண்ணைக்குப் பதில் பால்டாயிலில் தான் பொரிப்பேன் பரவாயில்லையா? கருநாகம்.” மனதோடு பேசிக்கொண்டே திரும்பிவளுக்கு, அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை தான்.
கணவன் காட்டிச் சென்ற மாயாஜால உலகத்தை தாண்டி தன் நிஜமான நிலையை சகோதரிகளிடம் சொல்ல விருப்பம் இல்லை ஊர்மிக்கு. அவர்களின் வாழ்க்கை ஆரம்பித்ததோ இல்லையோ, தன்னைப் பற்றி சொல்லி அதனால் அவர்களுக்கும் அவர்கள் கணவன்மார்களுக்கும் பிரச்சனை வந்துவிட்டால் என்கிற பயம் சற்று அதிகமாகவே இருந்தது. ராஜ் சகோதரர்களைப் பற்றி நால்வரில் நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தவள் அவள் ஒருவளே என்பதால் வந்த நியாயமான பயம் அது.
கர்பத்தை மறைப்பது போல் கணவன், மனைவி சண்டையைக் கூட நெடுநாள் மறைக்க முடியாது என்பதை அவளும் அறிந்தே இருந்தாள். இருந்தாலும் முடிந்தவரை தங்களது சண்டையை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள முடிவெடுத்தாள்.
சகோதரிகளைப் பற்றி யோசித்து முடித்த பின்னர், ஊர்மியின் மனம் தன்னால் கணவனைப் பற்றி யோசித்தது. அவன் செய்யும் அனைத்தும் நடிப்பா என்றால் அவளால் அதில் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவன் விசித்திரமானவன் என்பதால் ஆரம்பத்தில் இருந்து அவனை நன்றாக ஊன்றிக் கவனித்து அவள் கண்டுபிடித்திருந்த விஷயம் அது.
கோபம், எரிச்சல், வெகு அரிதாக வந்து போகும் கருணை, வடிவேலுவிடம் காட்டும் பாசம் என எந்த உணர்வாக இருந்தாலும் அதில் நூறு சதவிகிதம் நேர்மையைக் காட்டுவான் நாகா. நிஜமாக வெறுப்பானே தவிர்த்து, போலியாக சிரிக்க அவனால் முடியாது.
தன்னைக் குறித்து அவனிடம் தெரியும் மாற்றத்தில் போலி இல்லை தான். அதற்காக ஒரே இரவில் திருந்தும் அளவு பாம்பு ஒன்றும் நல்ல பிராணி இல்லை என்பதையும் அவள் அறிவாளே. அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என பெண்டுலம் போல யோசித்து தலை வலி வந்தது தான் மிச்சம்.
என்னவோ, தங்கள் சண்டை தங்களுக்குள் இருக்கட்டும் என்று அவன் நினைக்கும் வரை கொஞ்சம் நல்லது தான். ஆனா இந்தக் கொஞ்சல் எல்லாம் வேண்டாம் னு சொல்லிடணும் என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள் தன் சகோதரிகளிடம் சென்றாள்.
முந்தைய நாள் கணவனின் உறவே வேண்டாம் என்று தாலியைக் கழட்டிக் கொடுத்தவள் அவள் தான் என்று யாராவது அவளுக்கு நினைவூட்டினால் அப்படியா என்று கேட்பாள் போலும்.
தங்கையின் செயலில் லீலாவிற்கு இன்னும் கோபம் அடங்கவில்லை. ஊர்மி இருமுறை அழைத்தும் அவள் கேட்டும் கேட்காதது போல் இருக்க, “அக்கா என்கிட்ட பேச மாட்டியா. என்னை உனக்கு பிடிக்காம போயிடுச்சா?” பாவமாகக் கேட்டாள்.
அந்த வார்த்தையில் முற்றிலும் கரைந்தவளாக, “லூசு எதுக்குப் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுற. உன்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேசப்போறேன். நீ பண்ண காரியம் பிடிக்கலங்கிறதுக்காக உன்னையே எனக்குப் பிடிக்கலன்னு ஆகிடுமா? நீ என் தங்கச்சி டி.” என்று வாஞ்சையாய் அவள் தலையை வருடிக்கொடுத்தாள்.
“ஸ்சாரி அக்கா” என்க, “தாலியை வெரும் நகையா பார்க்காம, எதுக்காக அதை ஒரு உணர்வா பார்க்கணும் னு காலம்காலமா பழக்கி இருக்காங்கன்னு தெரியுமா?
என்ன தான் அன்பான கணவன், மனைவியா இருந்தாலும் காலப்போக்கில் அவங்களுக்குள்ள பல சண்டை சச்சரவுகள் வரும். அப்ப எல்லாம் அவங்களைப் பிரியாம பிடிச்சு வைக்க உணர்வு ரீதியான ஒரு விஷயம் தேவைப்படும். அது தான் தாலி.
புருஷன் கட்டின தாலியைக் கூட நம்மால் கழட்ட முடியலையே. அந்தப் புருஷனை விட்டு எப்படி இருப்போம் னு பெண்களை நினைக்க வைக்கும்.
ஆண்களுக்கு அப்படி என்ன என்ன உணர்வுப்பூர்வ அடையாளம் இருக்குன்னு கேட்கக்கூடாது. பெத்த பிள்ளைங்களை விட ஆண்களை குடும்பத்தோட கட்டிப்போட வேற எந்த ஆயுதமும் தேவை இல்லை. அதனால் இன்னொரு முறை இப்படிச் செய்யக்கூடாது சரியா?” சின்னப் பிள்ளைக்குச் சொல்வது போல் புத்தி சொன்னாள் லீலா.
“நடந்ததில் நானும் ஒன்னும் பெருசா சந்தோஷப்படலக்கா. குற்றவுணர்ச்சியால நான் இராத்திரி முழுக்க தூங்கல தெரியுமா?” ஊர்மி சொல்லி முடிக்கும் முன்பாக, “அப்ப குற்றவுணர்ச்சியால் மட்டும் தான் நீ தூங்காம இருந்தியா டார்லிங். நான் கூட என்னால தான்.” என்றுவிட்டு லேசாக இறுமினான் நாகா.
அவனைப் பார்த்தவுடன் பட்டென்று திரும்பிக்கொண்டாள் லீலா. “ஏங்க இவ்வளவு பெரிய வீட்டில் போறதுக்கு வேற எங்கேயுமே இடம் இல்லாத மாதிரி எதுக்காக கிச்சன் பக்கத்திலே சுத்துறீங்க. அதுவும் நாங்க பேசிக்கிட்டு இருக்கிறதை ஒட்டுக் கேட்டுட்டு நடுவில் வந்து மூக்கை நுழைக்கிறீங்க. இதெல்லாம் உங்களை மாதிரி மெத்தப் படிச்ச மேதாவிங்களுக்கு அழகா. குளிச்சிட்டீங்களா போய் டைனிங் ஹாலில் இருங்க. நான் நீங்க கேட்ட பூரி ரெடி ஆனதும் கூப்பிடுறேன்.” கடுகடுப்பாய் சொன்னாள் ஊர்மி.
“என்ன டார்லிங் நீ, இதுக்கு போய் இவ்வளவு டென்சன் ஆகுற. ஏதோ மறுபடி மறுபடி உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல தோணுச்சேன்னு வந்தேன். நீ என்னடான்னா இப்படி எடுத்தெறிஞ்சு பேசுற.” குழையும் குரலில் நாகா சொல்ல இவளுக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது.
“ஏன் மூஞ்செல்லாம் இப்படி சிவக்கிது ஒருவேளை.” அவன் ஏதோ சொல்ல வர நிச்சயமாக ஏதோ தன் மானத்தை வாங்கும் படியாக தான் ஏதோ சொல்லப் போகிறான் என்று உணர்ந்துகொண்டவள், “ஐயா சாமி நீங்க ஒன்னும் பேச வேண்டாம், தயவுசெஞ்சு போங்க.” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
“போங்கன்னா எப்படி, நீயும் வா வந்து எனக்கு ட்ரஸ் செலக்ட் பண்ணி கொடு.” வந்த வேலைக்கு வந்தான்.
“படுத்துறானே, இவனை என்னதான் பண்றது.” என்ற அவஸ்தையில் ஊர்மி நெளிய, நடக்கும் அனைத்தையும் கண்டும் காணாதது போல் சிரித்துக் கொண்டிருந்தனர் மற்ற மூவரும்.
“டார்லிங்” என நாகா மேற்க்கொண்டு எதுவோ சொல்ல வர, இதுக்கு மேலும் இங்கே இருந்தால் இன்னும் இன்னும் ஏதாவது பேசிக்கொண்டே தான் இருப்பான். ரூமுக்குள்ள போய் இவனுக்கு கொஞ்சம் மந்திரிச்சிட்டா எல்லாம் சரியா வந்திடும் என நினைத்தவளாய், “சரி வாங்க” என்றுவிட்டு முன் நடந்தாள்.
“முதன் முதலா உன்னைப் பார்த்தேன், நான் அசந்து போனேன் டி.” பாடலுக்கு விசில் அடித்துக்கொண்டே அவள் பின் நடந்தான் நாகா.
“அக்கா ஊர்மிக்கும், மாமாவுக்கும் நல்லா செட் ஆகிடுச்சு போல.” சிரித்தபடி கேட்டாள் ருக்கு.
“அப்படித்தான் நானும் நினைக்கிறேன். எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. உங்க இரண்டு பேரையும் விட அவளை நினைச்சு தான் நான் ரொம்பக் கவலையா இருந்தேன். இனி அது தேவையில்லை. சூழ்நிலையைப் புரிஞ்சிக்கிட்டு ஊர்மி அவளோட வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டா. இது இப்படியே நிலைக்கணும். என் ஊர்மியும், அவ புருஷனும் காலத்துக்கும் சந்தோஷமா இருக்கணும்.” என்றாள் லீலா.
“சும்மாவா சொன்னாங்க சண்டைக்கோழிங்களுக்கு சம்சார சாகரம் சாண் அளவு வாய்க்கால் மாதிரின்னு.” சொல்லி சிரித்தாள் தேவகி.
“ஏய் உன் மனசில் என்ன நினைச்சிக்கிட்டு இருக்க. நேத்து அந்தப் பேச்சு பேசின. இன்னைக்கு இப்படி நடந்துக்கிற. உன்னோட உண்மையான குணம் தான் என்ன. இச்சாதாரிப் பாம்புங்க வடிவத்தை மாத்திக்கிட்டே இருக்கிற மாதிரி, நீ ஏன் உன்னோட செயல்களை மாத்திக்கிட்டே இருக்க.” அறைக்குள் வந்ததும் சத்தமாக கத்த ஆரம்பித்தவள் நாகாவின் ஒற்றை முத்தத்தில் செயலற்றுப் போனாள்.
“ஆங் இப்படித்தான் அமைதியா இருக்கணும்.” என்றவனை முறைத்துக்கொண்டே தன் கன்னத்தை அழுந்தத் துடைத்தாள் ஊர்மி.
“ஓஹோ, என் முத்தம் அவ்வளவு கசக்குதோ உங்களுக்கு. இப்பப் பாரு.” என்று அவளை எட்டிப் பிடித்தவன் நெற்றி கன்னம், மூக்கு, கண்கள் அனைத்திலும் ஒரு நிமிடத்திற்கு அவனால் எத்தனை கொடுக்க முடியுமோ அத்தனையும் கொடுத்து முடித்தான்.
எதுவும் செய்ய முடியாமல் மெத்தையில் பொத்தென்று அமர்ந்த ஊர்மி தலையைக் குனிந்து கொள்ள, வேண்டுமென்றே அவளை நெருங்கி அமர்ந்தவன் சமாளித்து அவள் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு அவள் கைகளைத் தூக்கி தன் மார்பின் மேல் போட்டுக் கொண்டான்.
இது என்னடா புதுக் குழப்பம் என்பது போல் கண்கள் விரியப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஊர்மி. “என்ன டார்லிங் என்னோட நடவடிக்கை எல்லாம் பார்த்து உனக்கு ரொம்ப குழப்பமா இருக்கா. இருக்கணுமே, ஆனா என்னை நம்பு என்கிட்ட எந்தத் தப்பான எண்ணமும் இல்ல.
உன்னை மாதிரியே நானும் நம்மளோட இந்தக் கல்யாண வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் னு இருக்கேன்.” என்றுவிட்டு தன் மீது கிடந்த அவளுடைய விரல்களுடன் விளையாடினான்.
சித்த பிரம்மை பிடித்தவள் போல் அவள் அமைதியாகவே இருக்க, “என்னாச்சு டார்லிங் ஏன் அமைதியா இருக்க. அத்தான் மேல உனக்கு இன்னும் நம்பிக்கை வரலையா?” என்றபடி அவளுடைய விரல் ஒன்றில் இவன் சொடுக்கெடுக்க, சுயநினைவுக்கு திரும்பியவள் தன் மடியில் கிடந்தவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றாள்.
“இதைக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே எதிர்பார்த்தேன் இப்ப தான் நடந்திருக்கு.” என்றுவிட்டு அவள் அருகே நெருங்கினான் நாகா.
“எதுவா இருந்தாலும் அங்கேயே நின்னு பேசுங்க.” என்றவளிடத்தில் தடுமாற்றம் அதிகமாகவே தெரிந்தது.
“ஏன் இங்கேயே நின்னு பேசணும். நீ என் பொண்டாட்டி, நான் உன் புருஷன் தானே. பக்கத்து பக்கத்தில் நின்னு பேசினாத் தான் என்னவாம்.” என்றபடி அவளை நெருங்கினான்.
“இதைப் பாருங்க நீங்க நடந்துக்கிறது எதுவுமே சரி இல்ல நான் கீழ போறேன்.”
“பாருடா, பதற்றத்தில் என் பொண்டாட்டி எனக்கு மரியாதை எல்லாம் கொடுக்கிறா.” என்றான் நக்கலாக.
“என்னாச்சு உங்களுக்கு ஏன் வித்தியாசமா நடந்துக்கிறீங்க.”
“ம்ம்ம்… வந்து எப்படிச் சொல்றது. நேத்து நீ தாலியைக் கழட்டிக் கொடுத்தது என்னைச் செருப்பால் அடிச்ச மாதிரி இருந்துச்சு. அதனால தான் இத்தனை மாற்றமும்”
“என்னால நம்ப முடியல”
“நீ நம்பினா தான் மா அது ஆச்சர்யம். நீ என்னை நம்பு இல்ல நம்பாம போ. ஆனா இப்ப நான் சொல்றதை எழுதி வைச்சிக்க. இந்த ஜென்மத்துக்கும் நீ மட்டும் தான் எனக்குப் பொண்டாட்டி. உன்னை என்னை விட்டு விலக்கி வைக்கிற எண்ணம் இனி எனக்குக் கனவில் கூட வராது.
வாழ்க்கை அப்படி என்ன தான் வைச்சிருக்குன்னு நீயும் நானுமா சேர்ந்து முட்டி மோதிப் பார்த்திடலாம், சரியா டார்லிங்.” அவள் கன்னத்தை வலிக்கக் கிள்ளி தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்தவன் புன்னகையோடு தயாராக ஆரம்பித்தான்.
“லீலா சாப்பாடு ரெடியா” செல்வா கேட்க, “ரெடியாகிடுச்சி சாப்பிட வாங்க” என்றாள் பதிலாக.
அதே நேரம் தெய்வாவும் வர, “வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தாள் ருக்கு.
“சாப்பாடு யார் ரெடி பண்ணது” செல்வாவிற்கு பரிமாறிக்கொண்டிருந்த லீலாவைப் பார்த்துக்கொண்டே கேட்டான் தெய்வா.
“அக்கா தான் ரெடி பண்ணாங்க. நாங்க ஹெல்ப் பண்ணோம்.” சின்னச்சின்ன விஷயங்களுக்கு யோசித்துப் பதில் சொல்லும் பழக்கம் இல்லாததால் தன்னைப் போல் பதில் சொல்லி இருந்தாள் ருக்கு.
“எனக்குப் பூரி வேண்டாம். போய் மூணு தோசை ஊத்தி எடுத்து வாங்க.” தெய்வா அதிகாரமாய் சொல்ல, செல்வாவிற்கு பரிமாறிக் கொண்டிருந்த லீலா ருக்குவின் பின்னே கிச்சன் உள் செல்ல எத்தணித்தாள்.
“லீலா நீங்க எங்க போறீங்க.” செல்வாவின் குரலில் சற்றே எரிச்சல் இருந்ததோ அவன் மட்டுமே அறிவான்.
“இல்லை ருக்கு தோசை சுடும் போது நான் சட்னிக்கு அரைச்சிட்டா தோசை சூடு ஆறும் முன்னாடி சாப்பிடலாம் இல்ல அதான்.” மெத்தப் படித்தவனுக்கு யோசனை சொன்னாள் அந்த இல்லத்தரசி.
“அதெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க, நீங்க என் கூட உட்கார்ந்து சாப்பிடுங்க.” நிதாமாகத் தான் சொன்னான் என்றாலும் அதில் அழுத்தம் அதிகம் இருந்தது. நான் சொன்னதைச் செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது.
“எனக்கு உருளைக்கிழங்கு பெருசா பிடிக்காது. நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறமா ஏதாவது பண்ணி சாப்பிட்டுக்கிறேன்.” என்றாள்.
“ப்ச்… லீலா, நான் நேத்தே என்ன சொன்னேன். இனி நீங்களும், நானும் சேர்ந்து தான் சாப்பிடணும் னு சொன்னேன் தானே. இதுநாள் வரை எப்படி வேண்ணாலும் இருந்திருக்கலாம். இனி கொஞ்சமாச்சும் என்னோட பொண்டாட்டியா நான் சொல்லும் பல விஷயங்களில் சிலவற்றையாவது கேட்கப் பாருங்க. இப்ப என் பக்கத்தில் உட்காருங்க. உருளைக்கிழங்கு தானே பிடிக்காது. கிரேவி மட்டும் ஊத்தி சாப்பாடுங்க.” என்று தன்னருகே அமர வைத்தான் செல்வா.
ருக்கு தோசை சுட்டுக் கொண்டிருக்க அவள் பின்னே கிச்சனுக்குள் வந்தான் தெய்வா. “எனக்கு சட்னி எல்லாம் வேண்டாம். உங்களுக்கு டபுள் வேலை. இட்லிப்பொடி இங்க தான் எங்கேயாவது இருக்கும். அதுவும் தேங்காய் எண்ணையும் சேர்த்துக் கொண்டு வாங்க. அப்புறம் இனி நமக்கான சாப்பாடை நீங்களே தனியா ரெடி பண்ணிடுங்க.” என்று இரகசியம் போல் சொல்லிச் சென்றான்.
“பிடிவாதம் பிடிக்கிறதில் சின்னப்பிள்ளைங்க தோத்தாங்க போங்க. என்னைக்காவது ஒருநாள் என் அக்கா சாப்பாட்டை சாப்பிட்டுப் பாருங்க. அதுக்கு அப்புறம் நானே சமைக்கிறேன்னு சொன்னாக்கூட அதெல்லாம் வேண்டாம் உன் அக்கா சமையல் தான் வேணும் னு கேட்பீங்க. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.” எனப் பகல் கனவு கண்டாள் ருக்கு.
“தேவகி ஸ்சுவீட் பண்ண இல்ல, அதை கொஞ்சம் கொஞ்சம் எல்லாருக்கும் எடுத்துக் கொடு.” தர்மாவை சாப்பிட அழைத்துவிட்டு வந்து கொண்டிருந்த தேவகியிடம், சாப்பிட்டுக் கொண்டிருந்த லீலா சொல்ல, அவளும் சந்தோஷத்துடன் வேகமாய் நடந்தாள்.
ஆரவாரத்தோடு வந்தவள் கிச்சனிற்குள் இருந்து வெளியே வந்த தெய்வாவின் மீது எதேச்சையாக இடித்துவிட, “பார்த்து வரமாட்டீங்க, இது ஒன்னும் உங்க வீடு இல்ல. இங்க உங்களைத் தவிர இன்னும் நிறைய பேர் இருக்காங்க. அதனால கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க.” என்றான் கராராக.
தேவகியின் கண்கள் கலங்கிப்போனது. கடைக்குட்டி பிள்ளைகளுக்கே உண்டான இளகிய மனம் தெய்வாவின் வார்த்தைகளால் சுருங்கிப் போனது.
“தேவகி, மாமா ஏதோ தெரியாம பேசிட்டாரு. அதை மனசில் வைச்சிக்காத டா.” ருக்கு தங்கைக்குப் பரிந்து வந்தாள்.
“ஒன்னும் இல்லக்கா, நீ போய் இந்த பாயாசத்தை மாமாவுக்கு கொடு.” என்று இரண்டு சிறிய கிண்ணத்தில் ஊற்றி கொடுத்தாள் தேவகி.
ருக்கு தோசையையும், பாயசத்தையும் எடுத்துக் கொண்டு போனாள். “என்ன ருக்கு இது காமினேஷன் தோசைக்கு பாயசமா” சிரித்தான் தெய்வா.
“இல்லைங்க பாயாசம் தேவகி பண்ணது. அவ எங்க கடைக்குட்டிங்கிறதால் அவளை பெருசா எந்த வேலையும் சொல்ல மாட்டோம். அதுக்காக வேலை கத்துக்காம இருக்க முடியாதே. எல்லா வகை சமையலும் முன்னாடியே செய்தாலும் இன்னைக்கு தான் முதல்முறை பாயாசம் செய்திருக்கா. கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருங்க. நல்லா இருந்தா சாப்பிடுங்க இல்லைன்னா பரவாயில்லை.” மென்மையாகச் சொன்னாள் ருக்கு. அவன் மலையேற்றம் எப்படி இருக்கும் என்பதை அவள் தான் நேரில் கண்டாளே.
“நான் சாப்பிட்டாலும் ஒன்னு தான், நீங்க சாப்பிட்டாலும் ஒன்னு தான். அதனால நீங்களே சாப்பிடுங்க எனக்கு தோசை மட்டும் போதும்.” பதில் சொல்லிவிட்டு தன்போக்கில் சாப்பிட ஆரம்பித்தான் தெய்வா.
அதைக் கேட்டு மனம் நொந்த போதும் முகம் வாடாமல், சாப்பிட்டுக் கொண்டிருந்த லீலாவிற்கும், செல்வாவிற்கும் கொண்டு வந்து கொடுத்தாள் தேவகி.
“தேங்க்ஸ். எனக்கு சுவீட்ஸ் அவ்வளவா பிடிக்காது. இருந்தாலும் எங்க வீட்டில் பர்ஸ்ட் டைம் பண்ணி இருக்கீங்க. நான் சும்மா டேஸ்ட் மட்டும் பண்ணிக்கிறேன்.” என்று ஒரு வாய் சாப்பிட்டு விட்டு எழுந்தான் செல்வா. அது அவன் தம்பி தர்மாவின் மனைவிக்கு கொடுத்த மரியாதை அல்ல. தன் மனைவி லீலாவின் தங்கைக்குக் கொடுத்த மரியாதை. அப்படித்தான் செல்வா நினைத்தான்.
ஏதோ இந்த அளவிற்காகவது இறங்கி வந்தாரே என்னும் நினைப்போடு தேவகி திருப்திப்பட்டுக்கொள்ள லீலாவோ “தேவகி ரொம்ப அருமையா பண்ணி இருக்க.” என்று சொன்னபடி செல்வாவிற்கென்று அவள் கொண்டு வந்ததையும் சேர்த்து சாப்பிட்டாள்.
தன் பாயாசக் கிண்ணத்தோடு லீலாவின் அருகில் ருக்கு அமரப்போகும் நேரம் சரியாக தர்மா வந்தான் சாப்பிடுவதற்காக.
ருக்கு உடன் எழுந்து கொள்ள, “எதுக்கு எழுந்திரிக்கிறீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க. இவ்வளவு பெரிய டேபிளில் எனக்கு இடம் இல்லையா என்ன?” என்பது போல் இன்னொரு பக்கம் அமர்ந்தான் அவன்.
தேவகி செய்த பாயாசத்தை மனமாற பராட்டியவன் திகட்டும் அளவிற்கு அதைக் குடிக்கவும் செய்தான். திருமணம் முடிந்த அடுத்த நாள் காலை பெரிதாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சென்றிருக்க, சற்றே நிம்மதியான சூழ்நிலை நிலவியது இராதா இல்லத்தில்.
“ஆமா ஊர்மி அக்காவும், நாகா மாமாவும் ஏன் இன்னும் சாப்பிட வரல. நாகா மாமா கேட்டார் என்பதால் தானே இன்னைக்கு எல்லோருக்கும் பூரி செஞ்சது.” தேவகி சாப்பிட்டுக்கொண்டே கேட்க, “தெரியல” என்றாள் லீலா பதிலாக.
அவர்கள் அறையில், “டார்லிங் ட்ரஸ் அயர்ன் பண்ணி வை, டார்லிங் போனை சார்ஜில் போடு நான் மறந்துட்டேன். போன் அடிக்குது பாரு அதை எடுத்துக்கொடு டார்லிங், டார்லிங் சட்டை பட்டன் போட்டு விடு.” என்று நொடிக்கொரு முறை டார்லிங் போட்டு அவளை இம்சித்துக் கொண்டிருந்தான் நாகா.
“பாம்பு சட்டையை உரிச்சாலும் உரிச்சது தாங்க முடியலடா யப்பா” புலம்பலோடு அவன் சொன்ன வேலைகள் எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தாள் ஊர்மி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பரோ சூப்பர் … இச்சாதாரி நாகம் … பாம்பு சட்டையை உரிச்சது … ஒரே நாள்ல பாம்பு மாறாது … ஊர்மி பேசுறதெல்லாம் சரவெடி … நாகா என்ன பண்ண காத்திருக்கானோ … தெய்வா பேட் பாய் பா … இனிமே தேவா தான் லவ்வர் பாய் … லவ்வர் பாய்னா எல்லார் கிட்டயும் இனிமையா நடந்துக்கணும்…
Naga & urmi sema combo… Super epi sis ..