Loading

அத்தியாயம் 28

     “ஏய் என்னடி இது.” மனைவியின் செயலில் பலமாக அதிர்ந்தான் நாகா.

     “பார்த்தா தெரியல, தாலி. நீ கழட்டிக் கொடுக்கச் சொன்னியே அதே தாலிடா வெண்ணை.” என்றாள். உள்ளுக்குள் குறுகுறுத்தாலும் இவனுக்கு இது தேவை தான் என்று மனதைச் சமாளித்துக்கொண்டாள்.

     “ஏய் நீயெல்லாம் என்ன பொண்ணுடி. நான் கேட்டா உடனே கழட்டிக் கொடுத்துடுவியா? இது என்ன சாதாரண செயினா, நீ கழட்டி விளையாடுறதுக்கு.” நடந்ததை நம்பமுடியாமல் இன்னமும் அதிர்ச்சியில் இருந்தபடியே கேட்டான்.

     “ஓ… உனக்கு அது சாதாரண செயின் இல்லைன்னு புரியுதா? அப்புறம் எதுக்குடா அதை கழட்டிக் கேட்ட.” என்க, “அது…” எனப் பதில் சொல்லத் தெரியாமல் திணற ஆரம்பித்தான்.

     “நான் ஒன்னு சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ. ஒரு பொண்ணு நினைச்சா தான் ஒரு ஆண் அவளுக்குப் புருஷன். அவன் கட்டின மஞ்சள்கயிறை அவங்க இரண்டு பேரும் மதிச்சா மட்டும் தான் அதுக்குப் பேர் தாலி. இல்லைன்னா அது வெறும் மஞ்சள் கயிறு தான்.” நாசி விடைக்க பேசினாள்.

     “நான் கேட்டேன்னு இதைக் கழட்டி என் கையில் கொடுத்திட்டியே. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா உனக்கு.”

     “ஏன் தெரியாம ஒரு பொண்ணு கழுத்தில் இருந்து தாலி இறங்குதுன்னா அதுக்கு இரண்டு அர்த்தம் தான் இருக்க முடியும். ஒன்னு அவளுக்கும், அவ புருஷனுக்கும் நடுவில் இனி எந்த உறவும் இல்லை. அவங்க ஆளுக்கு ஒரு திசையைப் பார்த்து போகப் போறாங்கன்னு அர்த்தம். இரண்டாவது அந்தப் பொண்ணோட புருஷன் செத்துப்போயிட்டான்னு அர்த்தம்.” அசால்ட்டாக சொன்னாள் ஊர்மிளா.

     “இவள் இத்தனை தைரியசாலியா.“ என மலைத்துப் போய் நாகா பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அவன் மனைவியோ திருமணத்திற்கு முன்னர் அவளுடைய சகோதரிகளுடன் சேர்ந்து தங்கி இருந்த அறைக்குச் சென்றிருந்தாள்.

     “நான் இங்க இப்படித் தாலியோட நிக்கிறேன். என்னை விட்டுட்டு, என் கூடப்பிறந்த எருமைங்க மூணு பேரும் முதலிரவு கொண்டாடுவாங்களோ.

     அடேய் செல்வா, தெய்வா, தர்மா உங்களை யாருடா எனக்கு முன்னாடியும், பின்னாடியும் பிறக்கச் சொன்னது. நீங்க யாருமே பிறக்காம இருந்து நான் மட்டும் எங்க அப்பாவுக்குப் பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.

     என் சந்தோஷத்தைப் பறிச்சிட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருந்திடுவீங்களா? நான் சபிக்கிறேன் டா, நான் சந்தோஷமா இல்லாம நீங்க யாரும் சந்தோஷமா இருக்கக முடியாது. மனதோடு சகோதரர்களை வஞ்சித்துக்கொண்டான் நாகா.

     “ஹே தேவகி வாங்க உள்ள.” மென்மையாய் வரவேற்றான் தர்மா. உள்ளே வந்து பால் டம்ளரை கீழே வைத்தவள் அவனுடைய காலில் விழ, “இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் எழுந்திரிங்க தேவகி.” என்று சொன்னவன் தானே அவளைத் தூக்கியும் விட்டான்.

     “இப்படி உட்காருங்க.” என்று தனக்கு அருகே இருந்த மெத்தையைக் காண்பித்தான். அவளும் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்துகொள்ள, இருவரில் யார் முதலில் பேசுவது என்று தயக்கத்தில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

     “ஏதாவது பேசுங்க தேவகி.”

    “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா என்னைத் தப்பா எடுத்துக்க மாட்டீங்களா?”

     “கேளுங்க”

     “என் மேல உங்களுக்கு கோவம் இல்லையா?”

     “கோவமா எதுக்கு”

     “இல்லை நாங்க நாலு பேரும் அக்கா, தங்கச்சிங்க என்கிற விஷயத்தை உங்ககிட்ட சொல்லாம மறைச்சதுக்கு.”

     “இதில் நான் எப்படிங்க உங்க மேல கோபப்பட முடியும். எல்லாம் எங்க அப்பா பார்த்த வேலை. உங்களைப் பார்த்து பேசி எங்க வீட்டிலேயே தங்க வைச்சு, யாருக்கும் எதுவும் தெரிய வந்திடக் கூடாதுன்னு அவசர அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி, அதை நடத்தியும் காமிச்சிட்டாரு. அவரும், உங்க அக்காவும் சேர்ந்து முடிவு பண்ணதுக்கு பாவம் இதில் பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க.” என்றான்.

     அக்காவும், மாமாவும் ஆயிரம் யோசனை சொன்னாலும் அதை ஏத்துக்கிறதா வேண்டாமாங்கிற முடிவு எங்க கையில் தானே இருந்தது. வாய் வரை வந்த வார்த்தைகளை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, “நிஜமாவே என் மேல கோவம் இல்லையா?” ஆச்சர்யமாகக் கேட்டாள்.

     “சத்தியமா இல்லைங்க. ஒரு உண்மையைச் சொல்லவா? எனக்கு உங்க மேல மட்டும் இல்லை, உங்க அக்கா மேல கூடக் கோவம் இல்லை. நீங்க நினைச்சிருந்தா இந்த உண்மை தானா தெரியும் போது தெரியவரட்டும் னு விட்டு இருக்கலாம்.

     ஆனா கல்யாணம் ஆன அன்னைக்கே சொல்லிட்டீங்க. இதில் இருந்தே உங்களோட நேர்மை எனக்குப் புரிஞ்சது. அதுக்கு முன்னாடி சொல்லாததுக்கு நேர்மையான காரணம் இருக்கும் போது என்னால் அதை ஏத்துக்க முடிந்தது.

     எல்லாத்துக்கும் மேல நீங்க அக்கா, தங்கச்சியா இருப்பதில் பெருசா என்ன பிரச்சனை இருந்திடப் போகுது. எனக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. சரி நாம இதையெல்லாம் தள்ளி வைச்சிட்டு நம்மளைப் பத்தி பேசிக்கலாமா?” என்க, இவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மை நீங்கி படபடப்பு உண்டானது தேவகிக்கு.

     “நம்மளைப் பத்தியா?” தேவகி பதற்றமாகக் கேட்க, “ஆமா இங்க பாருங்க.” என்று தன்னுடைய போனைக் காண்பித்தான் தர்மா.

     அது லீலா அவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. “நடந்த எதிலும் என் தங்கச்சிங்களுக்கு அவ்வளவா உடன்பாடு இல்ல. அதனால தேவகியை எதுவும் சொல்லிடாதீங்க.

     அவ எங்க வீட்டோட கடைக்குட்டி. ரொம்பச் செல்லமானவ, அவ மனசு கஷ்டப்பட்டா அதை எங்க மூணு பேராலும் தாங்கிக்க முடியாது. உங்க கோபத்தை ஒதுக்கி வைச்சிட்டு கொஞ்ச நாள் சாதாரணமா அவளோட பழகிப் பாருங்க. அவ எப்படிப்பட்ட பொண்ணுன்னு உங்களுக்கே புரியும்.

     அவளுக்குப் படிக்க ரொம்ப ஆசை. நான் படிக்க வைக்க தயாரா இருந்தேன். ஆனா என்னைக் கஷ்டப்பட வைக்கக்கூடாதுன்னு அவ மேற்கொண்டு படிக்கவே மாட்டேன்னு பிடிவாதமா இருந்திட்டா. அவ்வளவு நல்ல பொண்ணு. அவளை எதுக்காகவும் கஷ்டப்படுத்திடாதீங்க, உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.” என்று முடிந்திருந்தது. அதைப் படித்ததும் தேவகிக்கு லேசாக கண்கள் கலங்கிப் போனது.

     “அவங்க உங்களைப் படிக்க வைக்கத் தயாரா இருந்தாங்களே, அப்புறமும் ஏன் நீங்க படிக்கல.” தன் சந்தேகத்தைக் கேட்டான்.

     “லீலா அக்காவோட சம்பாத்தியத்தில் பாதிக்கு மேல ருக்கு அக்காவோட கல்யாணத்துக்காக சேர்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் படிக்கம் னு சொன்னா, அந்தப் பணத்தை அப்படியே என்கிட்ட கொடுத்துடுவாங்க. அதனால தான் நான் படிக்க மாட்டேன்னு சொன்னேன்.” என்றாள்.

     “ஆனா நீங்க படிச்சிருந்தா நல்ல வேலையில் சேர்ந்து நிறைய சம்பாதிச்சு இருக்கலாமே.” தர்மா கேட்க, “எங்க வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்ததுங்க. அதில் இருந்து நாங்க யாரும் வேலைக்குப் போகக் கூடாதுன்னு அக்கா உறுதியா இருந்துட்டாங்க.” இதற்கு மேல் கேட்காதீர்கள் என்பது போல் அவள் நிறுத்த, அதைச் சொல்லாமலேயே புரிந்துகொண்டான் அவள் கணவன்.

     “உங்களுக்குப் படிச்சு என்னவா ஆக ஆசை.” தர்மா கேட்க, “ஒரு காலத்தில் டீச்சராக ஆசைப்பட்டேன். இப்ப டீச்சருக்குப் பொண்டாட்டியா இருக்கேன். நாம ஆசைப்பட்டது மிகச்சரியா நடக்காமப் போனாக் கூட அது ஏதாவது ஒரு வகையில் நமக்குக் கிடைக்கும் னு சொல்வாங்க. அதுக்கு நான் சரியான உதாரணம் இல்லையா?” கண்கள் மின்னக் கேட்டாள்.

     “இனி படிக்கிறீங்களா? நான் உங்களைப் படிக்க வைக்கிறேன். நான் எந்தத் தங்கச்சிக்கும் நகை சேர்த்து வைக்கத் தேவையில்லை. என்னோட சம்பளப்பணம் முழுக்க சும்மா அக்கவுண்ட்டில் தான் ஏறிக்கிட்டு இருக்கு. அது உங்க படிப்புச் செலவுக்கு ஆகுதுன்னா எனக்குச் சந்தோஷம் தானே.” தர்மா இயல்பாக மிக மிக இயல்பாகப் பேசினான்.

     “நான் படிப்பு அது இதுன்னு போக ஆரம்பிச்சிட்டா என்னால உங்களைப் பார்த்துக்க முடியாது வேண்டாம்.” தேவகி சொல்ல, தர்மாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது.

     “ஏன் தேவகி நான் என்ன பால் குடிக்கிற பாப்பாவா, என்னைத் தனியா ஒரு ஆள் வைச்சுப் பார்த்துக்கிறதுக்கு. நான் என்னை நல்லாவே பார்த்துப்பேன். என்னைப் பத்தி கவலைப்படாம நீங்க உங்க படிப்பை கன்டின்யூ பண்ணுங்க. நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்.” தர்மா சற்று குரல் உயர்த்திச் சொல்ல சந்தோஷமாகத் தலையை ஆட்டினாள் தேவகி.

     “சரி டைம் ஆச்சு படுப்போமா.” தர்மா கேட்க, சற்றே பரபரப்பானாள் தேவகி.

     “ஏன்மா இப்படிப் பயப்படுற, பாரு வியர்வை காது வழியா வழியுறதை. நான் படுப்போமான்னு தானே கேட்டேன். ஏய் ஒருவேளை நீ வேற ஏதும் எதிர்பார்த்து, அது நடக்காம போன அதிர்ச்சியில் தான் இப்படி முழிக்கிறியா. நீ ஓகேன்னு சொன்னா நான் அதுக்கும் தயார்.” என்றான் சிரிப்பினூடே.

     அவனுடைய கேலி புரிந்ததும், “அப்படியா உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்.” சிரிப்புடன் திருப்பிக்கொடுத்தாள் தர்மாவின் தர்ம பத்தினி.

     “நான் கிண்டல் பண்ணேன்னு, திரும்ப என்னைக் கிண்டல் பண்றீங்களாக்கும். அதான் ஓகே சொல்லியாச்சுல்லன்னு நினைச்சு நான்.” மெத்தையில் இருந்த அவளுடைய கரத்தின் மீது கை வைத்து தர்மா சற்று இழுக்க, இவள் லேசாகத் தடுமாறினாள்.

     “சும்மா தேவகி, இதெல்லாம் நாம திட்டம் போட்டு நடக்கிறது இல்ல. இது ஒருமேஜிக் மாதிரி. நம்மளை மீறி நடக்கணும். இதுக்குத் தனித்திட்டம் போட்டு நடத்துறதில் எனக்கு அபிப்ராயம் இல்லை. இயல்பா என்னைக்கு நடக்குதோ அன்னைக்கு நடக்கட்டும். அதுவரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுவோம்.

     பை த வே எனக்கு மெத்தையைத் தவிர வேற எங்கேயும் படுத்துப் பழக்கம் இல்லை. பேசிக்கலி நான் நல்ல பையன் தான். அதனால என்னை நம்பி என் கூட நீங்களும் மெத்தையில் தாராளமா படுத்துக்கலாம்.” சொல்லிவிட்டு படுத்துக்கொள்ள சிறிது நேர இடைவெளியில் தேவகியும் அவள் கணவன் அருகே படுத்துக்கொண்டாள்.

     இரவு கடந்து விடியல் வர குளித்து முடித்து சில நிமிட இடைவெளியில் பெண்கள் நால்வரும் சமையலறை வந்து சேர்ந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள லேசான தயக்கம் இருந்தது. ஆனால் தனிப்பட்ட கேள்விகள் எதுவும் கேட்டு ஒருவரை ஒருவர் சங்கடப்படுத்தக் கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாகவே இருந்தனர்.

     லீலா பாலை அடுப்பில் காய வைக்க, மற்ற மூவரும் சமயலறைத் திண்டில் சாய்ந்து நின்று கொண்டிருந்தனர். “அக்கா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” ஊர்மி மெதுவாக ஆரம்பித்தாள்.

     “சொல்லு ஊர்மி” வார்த்தைகள் தங்கையிடம் இருந்தாலும் கவனம் வேலையில் தான் இருந்தது லீலாவிற்கு.

     “அக்கா அதுவந்து” என்று ஊர்மி இழுக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் பால் பொங்கி வர, அடுப்பை அணைத்த லீலா தங்கைகளிடம் திரும்பினாள்.

     “இங்க காபி தூளும் இருக்கு, டீ தூளும் இருக்கு. அவங்கவங்க புருஷனுக்கு டீயா, காபியான்னு கேட்டு கொண்டு போய் கொடுத்துட்டு வாங்க. காலை சாப்பாடுக்கு வேலையைப் பார்க்கலாம்.” என்றாள்.

     ருக்கு, தேவகி இருவரும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் அவரவர் அறை நோக்கிச் செல்ல ஊர்மி கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள்.

     “ஊர்மி நீ போகலையா சீக்கிரம் போய் கேட்டுட்டு வா. பால் ஆறிடப் போகுது.” என்றுவிட்டு செல்வாவிற்கென்று கலக்கி வைத்திருந்த காபியை எடுத்துக்கொண்டு நகரப் பார்த்த லீலா, அதைக் கவனித்தாள்.

     அடுத்த கணம் அனைத்தும் பின்னால் போக, கையில் இருந்த காபிகப்பை அருகே வைத்தவள் தங்கையின் கரம் பற்றி, “ஊர்மி உன் தாலி எங்க?” என்றாள் கோபம், அதிர்ச்சி என இரண்டும் கலந்த குரலில்.

     தன் கழுத்தை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்ட ஊர்மி, “அக்கா அது” என்று ஏதோ சொல்ல வர, “உன் அக்கா கேட்குறாங்க இல்ல. பதில் சொல்லு ஊர்மி, நேத்து இராத்திரி நீ தானே தாலியைக் கழட்டின. ஏன்னு அவங்களுக்குப் புரியுற மாதிரி சொல்லு. இல்லைன்னா உனக்கும், எனக்கும் ஏதோ சண்டை. அதனால் தான் நீ தாலியைக் கழட்டி என்கிட்ட கொடுத்திட்டன்னு நினைக்கப் போறாங்க.” என்றபடி ஜாகிங் உடையில் கிச்சனிற்குள் வந்தான் நாகா.

     “இப்ப என்னடா நாடகம் போடப் பார்க்கிற” என்பதாய் கணவனை முறைக்க ஆரம்பித்தாள் ஊர்மி. அவன் அதனைக் கண்டுகொள்ளாமல், “என்னங்க வளர்த்து வைச்சிருக்கீங்க உங்க தங்கச்சியை. நேத்து தாலி டிஸ்டர்ப் பண்ணுது கழட்டுறியான்னு கேட்ட உடனே எதைப் பத்தியும் யோசிக்காம கழட்டிப் போட்டுட்டா இங்க பாருங்க.” என்று தன் கையில் இருந்த தாலியைக் காட்டினான்.

     அவன் சொன்ன தோரணையில் ஊர்மியின் விழிகள் விரிந்தது என்றால் லீலாவின் சிரம் தானாகக் குனிந்தது. “நீங்களே சொல்லுங்க, நான் தான் விளையாட்டுக்குச் சொன்னேன்னா, நல்ல பொண்டாட்டியா தப்பு பண்ற புருஷனுக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு, இப்படித் தாலியைக் கழட்டலாமா. அதுவும் கழுத்தில் ஏறின அன்னைக்கே. அப்புறம் நம்ம பண்பாடு நாகரிகம் என்ன ஆகுறது. இல்ல எனக்கு எதுவும் ஆனா இவ தான் அதைத் தாங்கிப்பாளா.” என்றான் நல்லவன் போல்.

     “ஏய் என்ன உளறிக்கிட்டு இருக்க.” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மிரட்டினாள் ஊர்மி.

     ஆனால் அவன் சொன்னதை உண்மையென நம்பிய லீலா, எப்படி அமையுமோ என்று தான் பயந்து கொண்டிருந்த ஊர்மியின் வாழ்வு நல்ல படியாக ஆரம்பித்துவிட்டது என்ற சந்தோஷத்தில் மூழ்கினாலும் அதை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு,

     “ஊர்மி என்ன இது, எதுக்காக இப்படிப் பண்ண. இது தப்புன்னு உனக்குத் தெரியாதா? இன்னொரு தடவை இப்படியெல்லாம் பண்ணாத.” முகத்தில் சற்று கடுமையுடன் சொல்ல, ஊர்மிக்கு நாகாவின் மேல் கோவம் கோவமாக வந்தது.

     தங்கையைக் கண்டித்தவள் அவள் கணவனிடம் திரும்பி, “அவ சின்னப் பொண்ணு ஏதோ தெரியாத்தனமா பண்ணி இருப்பா. நான் சொல்லிட்டேன், இனி எப்பவும் இப்படிப் பண்ணமாட்டா. அதோட நீங்களும் சும்மா விளையாட்டுக்கு கூட தாலியைக் கழட்டுன்னு சொல்லாதீங்க. புருஷன் பொண்டாட்டியைப் பார்த்து சொல்லக் கூடாத சில வரிகளில் இது முக்கியமான ஒன்னு.” லீலா சொல்ல நாகா புரிந்தது என்பதாய் தலையை ஆட்டினான்.

     “ஊர்மி தாலியை அவர் கையில் இருந்து வாங்கி பூஜை ரூமில் போய் நல்லா சாமியைக் கும்பிட்டுட்டு கழுத்தில் போட்டுக்க. இன்னொரு தடவை இப்படிப் பைத்தியக்காரத்தனமா எதையாவது பண்ண அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.” லீலா விரட்ட, அந்நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தனர் மற்ற இருவரும்.

     “அவரால தானே நான் இதைக் கழட்டினேன். அவரையே மறுபடியும் என் கழுத்தில் போட்டுவிடச் சொல்லுக்கா.” நாகாவைப் பார்த்து லேசான முறைப்புடன் சொன்னாள் ஊர்மி.

     “இது நல்லா இருக்கே, வா ஊர்மி. நானே என் கையால உன் கழுத்தில் இதைப் போட்டு விடுறேன்.” என்று உரிமையாய் அவள் கரம் பற்றி பூஜை அறைக்கு இழுத்துச் சென்றான் நாகா.

ஊர்மி கரத்தை உருவ நினைக்க, அவன் விடுவதாய் இல்லை. இதழ்களில் பூத்த சிறு புன்னகையுடன், அவளுடன் பூஜை அறை வந்தவன் அறைக்குள் நுழையாமல் வாசலில் நின்றவாறு இறைவனைச் சாட்சியாக்கி ஊர்மியின் கழுத்தில் மீண்டும் தாலியைப் போட்டுவிட்டான்.

     “இனி எப்பவும் எந்தக் காரணத்துக்காகவும் உன் கழுத்தில் இருந்து இது இறங்காது, இறங்கவும் விட மாட்டேன் நான்.” என்று ஊர்மியை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்தான் நாகா.

     “பாம்பு புதுசா ஏதோ திட்டம் போட்டு படமெடுக்கிது போலவே.” எனத் தன்னோடு நினைத்துப் பதறினாள் ஊர்மிளா.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. பாம்பு படமெடுத்து … நல்ல டயலாக் .. அப்படி சொல்லு ஊர்மி … நாகா திருந்துவான்னு எனக்கும் நம்பிக்கை இல்ல … தேவா தான் சிக்சர் அடிச்சிட்டான் … பரவாயில்ல அவன் ஒருத்தன் தான் எல்லாத்தையும் மறந்து முழு மனசா ஏத்துகிட்டான் போல …