
அத்தியாயம் 26
“ருக்கு எனக்கு இன்னமும் உங்க மேல கொஞ்சம் கோபம் இருக்கு. அது குறைய நான் சொல்ற மாதிரி நடந்துப்பீங்களா?” ஆர்வமாய் தெய்வா கேட்க, வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டாலும் சமாளித்துக்கொண்டு, “எதுவா இருந்தாலும் பண்றேன்.” என வாக்குக் கொடுத்தாள்.
“நானும், நீங்களும் நாளைக்கே ஹனிமூன் கிளம்புறோம். வர பத்து பதினைந்து நாள் ஆகும் அதுக்கு ரெடியாகிடுங்க.” அறிவிப்பு போல் அவன் சொல்லவும் அரண்டு விட்டாள் ருக்மணி.
“எதுக்கு இவ்வளவு சீக்கிரம், கொஞ்ச நாள் கழிச்சு போகலாமே.” பெயருக்குக் கூட இதில் சம்மதமா என்று கேட்காமல் தன்போக்கில் செயல்படும் இவனிடம் தன் பேச்சு எடுபடுமா என்ற சந்தேகத்துடனும், லேசான பயத்துடனும் கேட்டாள் ருக்கு.
“நாம போறோம் அவ்வளவு தான். ஏன் நான் உங்க புருஷன் தானே, நான் கூப்பிட்டா என்கூட வர மாட்டீங்களா?” முகத்தை சற்று கடுமையாக வைத்துத்கொண்டு தெய்வா கேட்க, தொட்டாச்சிணுங்கியைப் போல் முகம் சுருங்கினாள் பெண்.
மனைவியின் முக பாவனைகளைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தான் தெய்வா. “ஏங்க நான் உங்களைத் தெரியாமத்தான் கேட்கிறேன். உங்களை உங்க அம்மாவோ அக்காவோ திட்டினதே இல்லையா. சும்மா ஒரு வார்த்தை சொன்னதுக்கு இப்படி நடுங்குறீங்க. நான் அதிகாரமாக் கூப்பிட்டா, வர முடியாது போடான்னு தைரியமாச் சொல்ல வேண்டியது தானே.
அப்படி என்ன பண்ணிடுவேன் உங்களை. வெளில போய் பாருங்க, உங்க வயசுப் பொண்ணுங்க எல்லாம் எவ்வளவு தைரியமா இருக்காங்கன்னு. நீங்க இன்னும் பல்லி, கரப்பான் பூச்சிக்கெல்லாம் பயப்படுவீங்க போல.
உங்களைச் சொல்லி என்ன பிரயோஜனம் உங்க அக்காவைச் சொல்லணும். இப்படி முதுகெலும்பு இல்லாத கோழையாய் வளர்த்து இருக்காங்க.” தெய்வா என்னவோ கிண்டல் போலத்தான் சொன்னான். நாம் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகள் எதிராளிக்கும் சாதாரணமாகத் தான் தெரியும் என்றில்லையே.
தன் மனமென்னும் கோபுரத்தில் உச்சத்தில் இருக்கும் இவன் இப்படிப் பேசலாமா என முதலில் சற்றே வருந்தியவளுக்கு, அவன் லீலாவைச் சொன்னது நினைவு வரவும் கோபம் வந்தவளாக, ”நான் ஒன்னும் பல்லி, கரப்பான் பூச்சிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். அப்புறம் என் குணம் எதுவா இருந்தாலும் அது என்னோட தான். அதுக்கும் என் அக்காவுக்கும் சம்பந்தம் கிடையாது.
உங்களுக்கு பயந்த பொண்ணு பிடிக்கலன்னா, தைரியமான பொண்ணுங்களில் யாரையாவது கல்யாணம் பண்ணி இருக்கலாம் இல்ல. என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.” அரிதிலும் அரிதாக எப்போதாவது எட்டிப்பார்க்கும் கோபம் இப்போது வந்துவிட தன்னையும் மீறி பேசி இருந்தாள் ருக்கு.
அவளுடைய கோபத்திலும் குழந்தைத்தனம் இருப்பதை இரசித்தவன் பூனை நடையிட்டு நெருங்கி வந்து மெதுவாக பின்னிருந்து அணைக்க, அவள் உடல் தூக்கிப்போடுவதையும் அவன் பிடித்திருந்த அவளுடைய ஒரு கரம் நடுங்குவதையும் அவனால் உணர முடிந்தது.
“இதுக்கே இப்படியா, தெய்வா உன் பாடு ரொம்பக் கஷ்டம் டா.” தன்னோடு நினைத்துக்கொண்டவன் மனைவியைச் சமாதானப்படுத்தும் வழியை யோசித்தான்.
“நீங்க சொல்றது உண்மை தான் ருக்மணி. நான் எத்தனையோ தைரியமான பொண்ணுங்களைப் பார்த்து இருக்கேன் தான். ஆனா அந்தப் பொண்ணுங்ககிட்ட எல்லாம் வராத ஒரு பீலிங் உங்களைப் பார்த்த உடன் தானே வந்துச்சு நான் என்ன பண்றது.” என்றான் தன் நாடியை அவள் தோள்களில் பதித்துக்கொண்டு.
சங்கடத்தில் லேசாக நெளிந்தவாறே, ”நீங்க எதுக்காக என்னை நீங்க, வாங்கன்னு சொல்றீங்க.” அதிக நாளாக கேட்க நினைத்திருந்த சந்தேகத்தைக் கேட்டாள்.
“புருஷன் பொண்டாட்டியை மரியாதையா கூப்பிடுறது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு இல்ல. ஆனா எனக்கு பிடிச்சிருக்கு.
நான் எங்கேயோ படிச்சிருக்கேன். நாம கட்டிக்கிட்ட பொண்டாட்டிக்கு நாம மரியாதை கொடுத்தா தான், நாளைக்கு நமக்குப் பிறக்கப் போற பையன் அவனோட அம்மாவுக்கும், எதிர்காலத்தில் அவன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கும் மரியாதை கொடுப்பானாம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் அவங்க அப்பா தானே முதல் ஹீரோ. ஹீரோஸ் தப்பு பண்ணலாமா? நான் என் பையனுக்கு எப்பவும் தப்பான விஷயத்தை சொல்லிக் கொடுக்க மாட்டேன். தப்பான முன் உதாரணமாகவும் இருக்க மாட்டேன்.” வெகு தொலைவில் இருக்கும் கனவுகள் தான் என்றாலும், அவன் அதை இரசித்துச் சொன்ன விதத்தில் பூரித்துப் போனாள் ருக்மணி.
“புருஷன், பொண்டாட்டியை வா போன்னு கூப்பிடுறது மரியாதைக் குறைச்சல் இல்ல. அது அவங்களுக்குள்ள நெருக்கத்தை அதிகரிக்கும் அதனால இதை தப்பா எடுத்துக்கக் கூடாதுன்னு என் அக்கா சொல்லி இருக்காங்க.” மனதில் தோன்றியதை ருக்கு அப்படியே சொல்லிவிட,
“அப்ப பொண்டாட்டிங்க புருஷனை வாங்க போங்கன்னு தானே கூப்பிடுறாங்க. அப்ப அவங்க பக்கம் இருந்து நெருக்கம் இல்லன்னு அர்த்தமா என்ன?” நல்ல மனநிலையில் இருந்ததால் கோபம் கொள்ளாமல் கிண்டல் செய்தான்.
“விதண்டாவாதம் பண்ணாதீங்க.” சிணுங்கலாய் சொன்னாள் ருக்கு.
“சரி உங்க அக்கா சொன்னது சரியாவே இருந்துட்டுப் போகட்டும். ஆனா நான் உங்களை வாங்க போங்கன்னு தான் கூப்பிடுவேன். அப்படி கூப்பிட்டாக் கூட நாம நல்லா நெருக்கமா தானே இருக்கோம். ஒருவேளை இந்த நெருக்கம் பத்தலையோ உங்களுக்கு.” கிண்டலாய் கேட்க, “இ… இல்ல” திணறினாள் அவள்.
“சரி உங்க ஆசைக்கு நான் இனி உங்களை வா போன்னு சொல்ல ட்ரை பண்றேன், ஆனா ஒரு கண்டிஷன். நீங்களும் என்னை வா போன்னு உரிமையா பேர் சொல்லிக் கூப்பிடணும்.” தெய்வா சொன்னதும்,
“சரி இந்த ரூமுக்குள்ள நான் அப்படிக் கூப்பிட முயற்சி பண்றேன்.” நல்லபிள்ளையாய் ஒப்புக்கொண்டாள்.
“இதெல்லாம் அழுகுனி ஆட்டம். என்னைக்கு பலர் முன்னிலையில் தயக்கம் இல்லாமல் என் பெயர் சொல்லி நீங்க கூப்பிடுறீங்களோ, அன்னைக்கு நான் உங்களை உங்க ஆசைப்படி கூப்பிடுறேன். மோர் ஓவர் எனக்கு இப்படிக் கூப்பிடுறதும், இந்த நெருக்கமும் ரொம்பப் பிடிச்சிருக்கு.” என்று அவளை இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொன்டான்.
அவள் தன் தொடுகையை ஏற்றுக்கொள்ள பிரம்ம பிரயத்தனப்படுவதை உணர்ந்தவனாக, “ஏன் இவ்வளவு டென்சன் ஆகுறீங்க. நான் இன்னும் தயாராகரல, கொஞ்சம் டைம் வேணும் னு சொன்னா நான் புரிஞ்சிக்கப்போறேன்.” சாதாரணமாகவே சொன்னான் தெய்வா.
“அப்படி சொன்னா உங்களுக்கு கோவம் வராதா?” அப்பாவியாய் கேட்டாள் ருக்கு.
“ஏன் வரனும், அப்படி சொல்றதுக்கு உங்களுக்கு எல்லா விதமான உரிமையும் இருக்கு. அப்புறம், என்ன தான் எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருந்தாலும், எனக்கும் இதுக்கெல்லாம் கொஞ்சம் நேரம் தேவைப்படுது தான். அப்ப உங்களுக்கும் அது தேவைப்படும் னு எனக்குப் புரியாதா என்ன?” தெய்வா சொன்னதும் ருக்குவிற்கு மனது லேசானது போல் இருந்தது.
அவளை இன்னமும் இலகுவாக்கும் பொருட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தவன் முதலாவதாக வந்த காணொளிக் காட்சியை ஓடவிட அதுவோ ஆழ்கடலில் வாழும் மீன்களைப் பற்றியதாக இருந்தது. அவளை இலகுவாகத் தன் அருகில், கட்டிலின் தலைப்பகுதியில் சாய்ந்து அமர்ந்து கால்களை நீட்டி அமர வைத்தான். அவளும் இறுக்கம் தளர்ந்து அவன் செயலுக்கு ஒத்துப் போனாள்.
முதலிரவில் பார்க்க வேண்டியவையா இவை என்கிற நினைப்பு வந்து சிரிக்கத் தோன்றினாலும், காலம் நீண்டு கிடக்கும் போது அவசரப்பட வேண்டாம் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
தெய்வா ஆச்சர்யப்படும் அளவில், ருக்கு அவனோடு சேர்ந்து பழக நல்ல ஆர்வம் காட்டினாள். அதுவே இப்போதைக்கு அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
அடுத்த அறை வாசலில் சற்று நேரம் தயக்கத்துடன் நின்றிருந்தாள் ஊர்மிளா. இனி இதுதான் வாழ்க்கை என்றான பிறகு தேவையில்லாத தயக்கமும், வருத்தமும் எதற்கு. நடப்பது அனைத்தும் விதியின் விளையாட்டு. அதை யாராலும் மாற்ற முடியாது. எது எப்படி நடக்கிறதோ அப்படியே நடக்கட்டும் என்று தனக்குள் ஒருமுறை சொல்லிக்கொண்ட ஊர்மி நாகவின் அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.
“ஹலோ ரூமுக்குள்ள வரும் போது கதவைத் தட்டிட்டு வரனும் என்கிற நாகரிகம் தெரியாதா உனக்கு.” வழக்கம் போல் கடுமையாகவே ஆரம்பித்தான் நாகா.
“மன்னிச்சிடுங்க நான் திரும்ப வெளியே போய் கதவைத் தட்டிட்டு உள்ளே வரேன்.” என்று கையில் இருந்த பால் டம்ளரை கீழே வைத்தவள் திரும்ப முயல, “அதான் வந்தாச்சு இல்ல திரும்ப எதுக்காக வெளியே போய்க்கிட்டு. கதவை தாழ்ப்பாள் போடு.” என்றான் அதிகாரமாக.
“முதல் நாளே நம்மகிட்ட வாங்கிக் கட்டிக்காமப் போக மாட்டான் போல.” தன்னோடு நினைத்துக்கொண்டே அவன் சொன்ன வேலையைச் செய்தாள் ஊர்மிளா.
“மிஸஸ் ஊர்மிளா நாகராஜ், ரூமுக்குள்ள வந்த உடனே புருஷன் காலில் விழணும் னு உங்க அக்கா உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலையோ.” நாகா நக்கலாகக் கேட்க, “இதை வேற செய்யணுமா?” மனதோடு நினைத்தவள், “மறந்திட்டேன்” என்றுவிட்டு அவனுடைய காலில் விழ முயற்சித்தாள்.
காலைத் தூக்கி கட்டில் மேல் வைத்துக்கொண்டவன், ”மரியாதை மனசில் இருந்தா போதும். ஆமா இன்னைக்கு என்ன நாள்.” சற்று சத்தமாகக் கேட்டான்.
“வெள்ளிக்கிழமை, சுபமுகூர்த்த நாள், பௌர்ணமி, எல்லாத்துக்கும் மேல நம்மளோட கல்யாண நாள்.” அவன் எப்படிக் கேட்டானோ இவள் சிரத்தையாகத் தான் பதில் சொன்னாள்.
“கல்யாணம் தான் காலையில் ஆறு மணிக்கே முடிஞ்சிடுச்சே, இப்ப இராத்திரி ஒன்பது மணிக்கு மேல ஆகிடுச்சு. இப்ப சொல்லு இன்னைக்கு இப்ப என்ன நாள்.” என்றான்.
வேண்டுமென்றே கேட்கிறான் என்பது புரிய, “நம்ம முதலிரவு.” அடுத்து ஏதோ பெரிதாக வர இருக்கிறது என்பது புரிந்தாலும் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னாள் ஊர்மிளா.
“முதலிரவா அப்படின்னா என்ன? புரியுற மாதிரி சொல்லும்மா.” என்க, இழுத்துப் பிடித்திருந்த பொறுமை பறக்க ஆரம்பித்திருந்தது ஊர்மிக்கு.
“பெருசா ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படிச்சிட்டு வந்த வெள்ளைக்காரத்துரை. இவருக்குத் தமிழ் தெரியாதாம். ஒரு அடி சுள்ளுன்னு வைச்சா ஐயோ அம்மாவில் ஆரம்பிச்சு ஒட்டுமொத்தத் தமிழும் வெளிய வரும்.” மனதில் நினைத்தவள், ”இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்.” என்றாள்.
“பர்ஸ்ட் நைட், கேட்க நல்ல வார்த்தையா தான் தெரியுது. ஆமா அப்படின்னா என்ன, என்ன பண்ணுவாங்க.” என்க, “ஊர்மி இவன் வேணுமுன்னே வம்புக்கு இழுக்கிறான். முடிஞ்ச வரைக்கும் இவன்கிட்ட வம்புக்குப் போகாம இருக்கிறது தான் நல்லது.” என நினைத்துக்கொண்டு,
“கல்யாணம் ஆன புருஷனும், பொண்டாட்டியும் தனியா சந்திக்கிற முதல் நாள் இரவு. அதனால தான் இதுக்கு பேரு பர்ஸ்ட் நைட்.” பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள்.
“ஓ அப்படியா ஜஸ்ட் மீட்டிங் மட்டும் தானா. அதுக்காக ஏன் இவ்வளவு ப்ளவர்ஸ்ஸை இப்படிக் கொட்டி வைக்கணும். மெனக்கெட்டு இவ்வளவு பலூன்ஸ் ஊதி பறக்கவிடணும். காஸ்ட்லியான பர்பியூமை ஏதோ தண்ணி மாதிரி தெளிச்சி விடணும். வொய், ஐ நீட் எ க்ளியர் எக்ஸ்ப்ளனேஷன்.” என்க, பொறுமையை மீறி அவனை வெறுப்பாய் பார்த்தாள்.
“கமான் சொல்லு மா சொல்லு, உனக்கு இதைப் பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும் போல. வெறும் தியரி மட்டும் தானா இல்லை பிராக்டிகலும்” அவன் முடிப்பதற்குள், “யோவ்” என்று கத்தினாள் ஊர்மி.
“என்னது யோவா” அதிர்ச்சியின் உச்ச கட்டத்தில், படுத்திருந்த கட்டிலில் இருந்து எழுந்தான் நாகா.
“நீயெல்லாம் என்னய்யா லாயர். அதைவிட அதிசயம் வடிவேல் மாமாவுக்கு எப்படி நீ பையனா வந்து பிறந்த. உனக்குப் பிடிக்காத பொண்டாட்டியா இருந்தாலும் ஒரு பொண்ணுகிட்ட என்ன கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க, அறிவில்லை உனக்கு. நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்தா ஓவராத்தான் ஆடுற.
இரண்டு முழத்தில் ஒரு மஞ்சைக்கயித்தை கழுத்தில் கட்டிட்டா என்ன வேண்ணாலும் கேட்பியா. உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு உனக்கு நீ கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாதா.
அதை என் வாயால சொல்லி கேட்கணும் னு ஆசை இல்ல. ஏன் உனக்கு இந்த அல்ப்ப புத்தி. அதுக்கும் மேல கடைசியா கேட்டியே ஒரு கேள்வி. ஏன்டா இன்னும் எத்தனை காலத்துக்கு தான் ஒரு பொண்ணைக் கஷ்டப்படுத்த இந்தக் கேள்விகளையே பயன்படுத்துவீங்க.”
“உன்னோட வார்த்தைகள் என்னைக் காயப்படுத்தும் னு நினைச்சா உன்னை விட முட்டாள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. நான் மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது.
என்னோட வருத்தம் எல்லாம், என்னைக் கோபப்படுத்துறேன், அழவைக்கிறேன்னு நீ என்னோட பார்வையில் இன்னும் இன்னும் தாழ்ந்து போய்கிட்டு இருக்கியேங்கிறது தான்.
நானும் புருஷன் என்கிற உறவுக்கு மரியாதை கொடுக்கலாம் னு நினைச்சா ரொம்பத்தான் பண்ற. உங்க அப்பாவுக்கு உனக்குள்ள இப்படிப்பட்ட வக்கிர புத்தி இருக்குன்னு தெரிஞ்சிருந்தா என்ன ஆனாலும் என்னை உனக்குக் கட்டி வைச்சிருக்க மாட்டார்.” கொதித்தாள் ஊர்மி.
“ஏய் என்ன ரொம்ப ஓவரா பேசுற. ஆமா உன்னைக் கடுப்பேத்த தான் இப்படியெல்லாம் பண்ணேன், என்ன இப்ப. என்னவோ வேற வழியே இல்லாம என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி சலிச்சுக்கிற.
நான் அல்ப்ப புத்திக்காரனா மட்டும் இல்ல பொம்பளைப் பொறுக்கியாவே இருந்திருந்தாக் கூட, எதைப் பத்தியும் யோசிக்காம என்னை நீ கல்யாணம் பண்ணி இருந்திருப்ப தானே. காரணம் காசு, பணம், துட்டு.
அது இந்த வீட்டில் நிறைய இருப்பதால் தானே, நீயும் உன் அக்கா, தங்கச்சிங்களும் பிச்சைக்கார வேஷம் போட்டு எங்க அப்பாவை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
என் கூடப் பிறந்த புண்ணியவானுங்களால் உன் அக்கா, தங்கச்சியோட பேராசை வேண்ணா நிறைவேறலாம். ஆனா உன்னோட சின்னச் சின்ன ஆசைகளை கூட நான் நிறைவேத்த மாட்டேன். மத்தவங்க மூலமா நிறைவேறவும் விட மாட்டேன்.
நான் கொடுக்கிற டார்ச்சரில் அப்பா இருக்கிறவரைக்கும் இந்த வீட்டுக்குள்ளேயும், இந்த ரூமுக்குள்ளேயும் அடங்கி ஒடுங்கி இருந்துட்டு, அவரோட காலத்துக்கு அப்புறம் நீயே வந்து என்கிட்ட விவாகரத்து கேட்ப, கேட்க வைப்பேன்.” வில்லன் போல் கண்டதையும் பேசிக்கொண்டே போன நாகா திரியேற்றப்பட்ட சரவெடியாய் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் ஏறிக் கொண்டிருப்பவளை பார்க்கத் தவறினான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஊர்மி பொறுமையா பேசுது … நான் லாம் டேய் அப்புறம் கெட்ட வார்த்தையில திட்டியிருப்பேன் … எவ்ளோ பேச்சு பேசுறான் … இன்னும் 4 வார்த்தை திட்டு மா ஊர்மி …
லவ்வர் பாய் இப்போதான் ஃபார்ம்க்கு வந்திருக்கார் … என்ன தள்ளி போட்டுட்டாங்க … லவ் பண்றாங்களாம் … நல்லது …
நாம போய் அடுத்த ஜோடியை பார்க்கலாம்