
அத்தியாயம் 24
“முட்டாள் மாதிரி பேசாத டா. அப்பா நம்ம மேல ரொம்ப நம்பிக்கையோட இருக்காரு.” தெய்வா சொல்ல, “அப்பா மட்டும் இல்ல நாம கல்யாணம் பண்ணிக் கூட்டிக்கிட்டு வந்திருக்கும் பொண்ணுங்களும் அப்படித்தான். விவாகரத்து எல்லாம் பெரிய விஷயம், சும்மா பேச்சுக்கு கூட சொல்லாத.” என்றான் தர்மா.
“அவங்க நம்பிக்கை மட்டும் தான் விஷயமா? நாம அவங்க மேல வைச்சிருந்த நம்பிக்கை பொய்த்துப் போச்சே அதை என்ன செஞ்சு சரிபண்ணப் போறார்.” என்ற நாகாவின் கேள்விக்கு அங்கிருந்த யாராலும் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
“அவர் சொன்னாருங்கிறதுக்காக மட்டும் தான் நான் அவளைக் கட்டிக்கிட்டேன். மத்தபடி அவ மேல எனக்கு எந்தக் கண்ட்ராவி பீலிங்கும் இல்ல. தாலி ஏறிடுச்சுங்கிற ஒரே காரணத்துக்காக அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ட என்னால் முடியாது. ஒத்துவந்தா வாழ்வேன், ஒத்து வரலன்னா போடின்னு போய்க்கிட்டே இருப்பேன்.
அப்பா இருக்கிற வரைக்கும் அவரை நிம்மதியா வைச்சிருக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அவரு போனதுக்கு அப்புறம் எனக்குக் கிடைக்கப் போற சுதந்திரமான வாழ்க்கை.” நாகா சொல்ல சொல்ல, மாடியில் இருந்த இறங்கி வந்து கொண்டிருந்த ஊர்மியின் மனம் கனத்துக்கொண்டே போனது.
“உண்மையைச் சொன்ன பின்னாடி என் பசங்க ரொம்ப கோபப்படுவாங்க தான். ஆனா என்ன ஆனாலும் உங்களைப் பிரிய நினைக்க மாட்டாங்க. என் வளர்ப்பு தப்பா போகாதுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
ஒருவேளை அவங்களில் யாராவது ஒருத்தர் ஏதாவது ஏடாகூடமா பண்ண நினைச்சா கூட, அது என் பிணத்தை தாண்டி தான் நடக்கும். கவலையே படாதீங்க மா.” மாமன் கொடுத்த வாக்கு கண்முன் வந்து போனது ஊர்மிளைக்கு.
“இந்த விஷயத்தில் நீ சொல்றதை நான் ஒத்துக்கிறேன். எப்பவும் ஒரு வீட்டில் புருஷனோட கை தான் ஓங்கி இருக்கணும்.
நாம தனித்தனியா போற நேரம், அவங்க நம்ம கூட வந்து தான் ஆகனும் னு நாம சொன்னா, அதை மறுத்துப் பேச அவங்களால முடியாது. அதனால் இதை இப்போதைக்கு விட்டுடுங்க.” என்றான் தெய்வா.
“எனக்கு என்னவோ இது ஈஸியா முடியுற விஷயமே இல்லன்னு தோணுது.” சொன்னவன் செல்வா.
“இங்க உன்னை யாரும் கருத்து கேட்கல, போய் உன் வேலையை மட்டும் பாரு.” மற்றவர்கள் தன் கட்சிக்கு வரும் போது அதைக் கெடுக்கும் விதமாகப் பேசும் செல்வாவின் மீது இருந்த கோபத்தில் அப்படிச் சொன்னான் நாகா.
செல்வாவை நாகா பேசுவதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஊர்மி வேண்டும் என்றே கண்ணாடி டம்ளரை போட்டு உடைத்தாள். சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க, நாகாவை லேசாக முறைத்துவிட்டு, நல்ல பிள்ளையாய் கீழே கிடந்த கண்ணாடித் துண்டுகளை எடுக்க ஆரம்பித்தாள்.
தங்கள் அறைக்கு வந்த ஆடவர் நால்வரும் ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாகினர் என்றே சொல்லலாம். அறையின் சுவரில் ஆங்காங்கே வண்ண வண்ண ரோஜாப் பூங்கொத்து, தரையை நிறைத்திருந்த சிவப்பு ரோஜா இதழ்கள், சிவப்பு வண்ண இதய பலூன்கள், மனதை மயக்கும் நறுமணம் என தேவலோகம் போல் காட்சியளித்தது அறை.
“கடவுளே இந்த அப்பாவை என்ன தான் சொல்றது. பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு இந்த ஏற்பாடு வேற பண்ணிட்டு போய் இருக்காரா. பொதுவா பர்ஸ்ட் நைட் தான் கேள்விப்பட்டு இருக்கேன் இது என்ன பர்ஸ்ட் பகல் ஏற்பாடு.” புலம்பிய தெய்வாவிற்கு, தந்தைக்கு இதெல்லாம் தோன்றி இருக்காது. எல்லாம் அவர் கூடவே சுற்றிக்கொண்டிருக்கும் அந்த மனிதக்குரங்கின் வேலையாகத் தான் இருக்கும் என்பது புரிந்தது.
அரசு எதை நினைத்து இந்த ஏற்பாட்டைச் செய்தானோ அது சரியாக வேலை செய்தது என்றே சொல்ல வேண்டும். இந்த நேரம் ருக்கு இந்த அறைக்கு வந்து இந்த அலங்காரங்களையும் அதன் காரணத்தையும் கவனித்தால் அவள் முகம் எத்தனை பாவனை காட்டும் எனக் கற்பனை செய்தவனுக்கு, அவள் மேல் இருந்த கோபம் எல்லாம் காற்றில் வைத்த கற்பூரமாக கரையத் துவங்கி இருந்தது.
மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தவன், கீழே ஹாலில் சோபாவில் அமர்ந்தான். அடுத்த சில நிமிடங்களில் செல்வாவும், தர்மாவும் அதே போன்று லேசான வெட்கத்துடன் தங்களுடைய அறைகளில் இருந்து வெளியே வந்துவிட நாகாவை மட்டும் காணவில்லை.
“ஆமா நடந்த கல்யாணத்துக்கு பர்ஸ்ட் நைட் ஒன்னு தான் கேடு. யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணாங்க.” என்று மெத்தை அலங்காரத்தைக் கலைத்தவன் நிம்மதியுடன் அதில் படுத்துக்கொண்டான்.
கல்யாண பரபரப்பில் காலை உணவாக கொஞ்சம் மட்டுமே உண்டு இருந்ததால், நேரம் போக போக வயிறு தன் வேலையைக் காட்டியது அனைவருக்கும். ஹோட்டலில் இருந்து தனக்கும் லீலாவுக்குமாகச் சேர்த்து எதையாவது ஆர்டர் செய்யலாம் என போனை கையில் எடுத்தான் செல்வா. அவனுக்கும் லீலா மீதான கோபம் குறைந்திருந்தது.
வடிவேலுவின் பிள்ளைகள், சராசரி இந்தியக் கணவன்மார்களாக தங்கள் மனைவிமார்களின் தவறைப் பொறுத்தருள நினைத்தார்களோ இல்லை நடந்து முடிந்ததை நினைத்து எதிர்காலத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தார்களோ, இல்லை அவர்கள் அக்கா, தங்கைகளாக இருந்தாலும் தங்கள் முடிவிற்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத என்று நினைத்தார்களோ.
என்ன நினைத்து எடுத்தால் தான் என்ன. சரியான முடிவைத் தான் எடுத்திருந்தார்கள். தீவிரமாக அலைபேசியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த செல்வாவின் நாசியைத் தீண்டியது உணவு தயாராகும் நறுமணம்.
“வேலைக்காரங்க எல்லாரையும் தான் அப்பா அனுப்பி வைச்சிட்டாங்களே, அப்ப சமைக்கிறது யாரு.” என்னும் குழப்பத்துடன் இருந்த இடத்தில் இருந்தே சமையலறையை எட்டிப் பார்த்து அதிசயித்தான்.
சில மணி நேரத்துக்கு முன்னர் காஞ்சிப்பட்டில் மணப்பெண்களாக மேடையில் ஜொலித்துக்கொண்டிருந்த பெண்கள், இப்போது இலகுவான உடையில் கழுத்தில் மின்னும் மஞ்சள் தாலியோடு குடும்பத் தலைவிகளாக குடும்ப உறுப்பினர்களின் பசி உணர்ந்து சமையலறையில் வேலையைத் துவங்கி இருந்தனர்.
இதுநாள் வரை ஒரே நேரத்தில் பலர் வேலை செய்யும் சமையலறை தான் என்றாலும் இன்று ஏனோ வித்தியாசமாகத் தெரிந்தது அவனுக்கு. சத்தம் காட்டாமல் அருகே வந்து பார்த்தான். பெண்கள் நால்வரும் ஆளுக்கு ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.
லீலா சாதத்திற்கான அரிசியை கழுவிக் கொண்டிருக்க, அருகே ஊர்மி சாம்பாருக்காக பருப்பை வேக வைத்துக் கொண்டிருந்தாள். ருக்குவும், தேவகியும் காய்கறி வெட்டிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருக்கும் மனநிலைக்கு விருந்து சாப்பாடு சமைக்க முடியாது தான். ஆனாலும் தங்கள் வாழ்வின் மிகப்பெரிய நல்லநாள். திரும்பி நடத்திக்கொள்ள முடியாத இனியநாள், அதன் இனிமை கெட்டுப்போகாமல் இருக்கும் வண்ணம் நிறைவான பதார்த்தங்களைச் செய்ய முடிவு செய்திருந்தனர்.
வந்த தடம் தெரியாமல் தன்னிடத்தில் போய் அமர்ந்துகொண்டான் செல்வா. தர்மாவும், தெய்வாவும் அவரவர் போனில் முழு அக்கறையாய் இருந்ததில் அவன் சென்றதையோ இல்லை திரும்பி வந்ததையோ உணரவில்லை. அடுத்த அரை மணி நேரத்திற்கு சமையல் அறையில் இருந்து வந்த உணவின் வாசனையை மூவரும் விரும்பி சுவாசித்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் சமையலை முடித்த பெண்கள் அவற்றை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளிற்கு வந்தனர். இவர்கள் பெயரைச் சொல்லி ஊரே விருந்து சாப்பாடு சாப்பிட இவர்களுக்கு இங்கே எளிமையான உணவு தான் தயாராகி இருந்தது. அதில் லீலாவுக்கு சற்றே வருத்தம் தான்.
சாம்பர், ரசம், இரண்டு பொரியல், அப்பளம், இனிப்பிற்கு பால்பாயாசம் என்று வைத்திருந்தார்கள். அவர்களுக்கு இது விருந்துணவாக இருந்தாலும் ஆண்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு இது எளிமையான உணவு தானே என்று வருந்தினர்.
“என்னங்க நீங்க யாரும் காலையில் இருந்து ஒன்னுமே சாப்பிடல, சாப்பிட வாங்க.” பொதுவாக அழைத்தாள் லீலா.
செல்வா உடன் எழுந்து கொள்ள, மற்றவர்கள் செய்து வைத்த பிள்ளையார் சிலை போன்று அதே இடத்தில் அமர்ந்து இருந்தனர்.
“என்ன நிக்கிறீங்க லீலா வாங்க போலாம்.” செல்வா அழைக்க, “அவங்க இரண்டு பேரும்.” என்று தர்மாவையும், தெய்வாவையும் கை காட்டினாள்.
“அவங்களுக்குன்னு பொண்டாட்டி இருக்காங்க இல்ல அவங்க பார்த்துப்பாங்க. நீங்க எனக்குப் பறிமாறுங்க.” என்றான் சாதாரணமாக.
அவர்களின் செல்வா மாமா சமாதானம் ஆனதில் பெண்கள் மூவருக்கும் சொல்ல முடியாத பேரானந்தம்.
அந்த சந்தோஷம் கொடுத்த தைரியத்தோடு, “என்னங்க சாப்பிட வாங்க.” தயக்கத்தைத் தாண்டி தெய்வாவை அழைத்துவிட்டாள் ருக்கு.
“அதான் என் பாசமலர் சாப்பிடப் போயிட்டான் இல்ல. அவன் சாப்பிட்டு வந்திடட்டும் நாம இரண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடலாம்.” என்றான். பதிலுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை ருக்குவிற்கு அதனால் அமைதியாய் இருந்துவிட்டாள்.
சகோதரிகள் நால்வரும் ஒன்றாய் அமர்ந்து உண்பது அவர்கள் வழக்கம். ஆனால் அவன் இருந்தால் நான் வர மாட்டேன் என்ற இவர்களின் பிடிவாதத்தின் முன்பு தாங்கள் இன்னும் என்னவெல்லாம் இழக்க வேண்டி வருமோ என்று மனதிற்குள் புலம்பினாள் ருக்கு.
“லீலா நீங்களும் உட்காருங்க சேர்ந்தே சாப்பிடலாம்.” செல்வா அழைக்க, “முதலில் நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமா தங்கச்சிங்க கூட சாப்பிட்டுக்கிறேன்.” என்றதில் செல்வாவிற்கு சுர்ரென்று கோபம் வந்தது.
சமாளித்துக்கொண்டு, “அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னால. இப்ப தான் புருஷன்னு ஒருத்தன் இருக்கேன் இல்ல, என்கூட உட்கார்ந்து சாப்பிடுங்க.” என்றவனின் அதிகாரத்தை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திணறினாள் லீலா.
கையோடு எடுத்து வந்த தட்டில் சாதம் போடுபவள் போல் டைனிங்டேபிள் அருகே வந்த ஊர்மி, “மாமாவுக்கு இப்ப தான் உன் மேல் கோபம் குறைய ஆரம்பிச்சு இருக்கு. இந்த நேரத்தில் நீ அவர் பேச்சைக் கேட்கலன்னு இன்னும் கோபப்படப் போறாரு. பேசாம மாமா கூட சேர்ந்து சாப்பிடுக்கா.” என்றுவிட்டு நகர்ந்தாள். லீலாவுக்கும் தங்கை சொன்னது சரியென்று தோன்ற அமைதியாய் கணவன் அருகே அமர்ந்துவிட்டாள்.
“என்னங்க சூடா இருக்கும் போதே சாப்பிட்டா தான் நல்லா இருக்கும் சாப்பிட வாங்க.” தேவகி தர்மாவை அழைத்தாள்.
“உங்க வீட்டில் எப்படியோ, ஆனா இங்க நாங்க நாலு பேரும் ஒரே நேரத்தில் சாப்பிட மாட்டோம். தேவையில்லாத மனசங்கடம் தான் வரும்.” என்றான் தர்மா.
“பெருசா என்ன சங்கடம் வந்திடப் போகுது. டைனிங் டேபிள் தான் இவ்வளவு பெருசா இருக்கே. அவங்க அந்தப்பக்கம் சாப்பிடட்டும் நாம இந்தப் பக்கம் சாப்பிடுவோம். பிரச்சனை எல்லாம் ஒன்னும் வராது, ப்ளீஸ் வாங்களேன்.” தேவகி அழைக்க, அவளுடைய அந்த ப்ளீஸ் என்ற வார்த்தையில் உருகிவிட்டான் தர்மா.
“அலமுக்கா எனக்கு முதலில் சாப்பாடு வைங்க, ரொம்ப பசிக்கிது.”
“எதுக்கு உனக்கு பர்ஸ்ட் வைக்கணும். நான் தான் முதலில் வந்தேன், அதனால எனக்கு தான் முதலில் சாப்பாடு வைக்கணும்.”
“அலமுக்கா அவங்க சண்டை போட்டு முடிச்சிட்டு வரட்டும். நான் இன்னைக்கு ஒரு முக்கியமான பேஷண்ட்டை பார்க்க அவர் வீட்டுக்கே போகணும். எனக்கு வைங்க முதலில், நான் சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புறேன்.”
“இதோடா இவருக்கு மட்டும் தான் வேலை இருக்கு எங்களுக்கு இல்லையா. எனக்கு கூட இன்னைக்கு கமிஷ்னர் ஆபீஸ் மீட்டிங் இருக்கு. தமிழ்நாட்டில் போலி டாக்டர்ஸ் நிறைய பேர் இருக்காக்கலாம். அவங்களை பெண்டு எடுக்கிற வேலையை என்கிட்ட தான் கொடுத்திருக்காங்க.”
“ஏய் இப்ப எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கிற.”
“ஆமா இவன் என் முறைப்பொண்ணு பாரு வம்பு இழுக்கிறதுக்கு.”
“ஏய் ரொம்பப் பேசுற.”
“ஆமா நான் அப்படித்தான் பேசுவேன் என்ன பண்ணுவ.”
“அடிச்சி கையை காலை உடைச்சிடுவேன்.”
“என்னது கையைக் காலை உடைப்பியா. அதுக்கு அப்புறம் ஆயுசுக்கும் நீ உள்ள தான் இருக்கணும். பென்டிங்கில் இருக்கும் அத்தனை கேஸையும் உன் மேல தூக்கிப் போட்டுடுவேன். அதில் மூணு ரேப் கேஸ் வேற இருக்கு. ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க பேமஸ் ஆகிடுவ எப்படி வசதி.”
“இப்படித்தான் தப்பு பண்றவங்க கிட்ட இருந்து பணத்தை வாங்கிட்டு தப்பு பண்ணாதவங்களை உள்ள தூக்கி போடுறியா. நீ சொன்ன கமிஷ்னர் என்னோட பேஷண்ட் தான் நான் நினைச்சேன்னா உனக்கு வேலையே இல்லாம பண்ணிடுவேன்.”
“பண்ணு பார்க்கலாம், நீ உண்மையிலே தைரியமானவனா இருந்தா என்னை வேலையை விட்டு தூக்கிடு பார்க்கலாம். என் தோளில் இருந்து ஸ்டாரை இறக்கலாம் னு நீ நினைச்சாலே, உன் தோளில் இருந்து உன் கையை இறக்கிடுவேன் ராஸ்கல்.”
“ஆமா வெட்டு, வெட்டிட்டு ஜெயில்ல போய் உட்கார்ந்துக்கோ. ஆனா உன்னை பெயிலில் எடுக்கவோ இல்லை உனக்காக வாதடவோ என் உதவியை எதிர் பார்த்திடாத”
“போடா உதவாக்கரை, பல வருஷமா பேமஸ் லாயர் சஞ்சீவ் கிட்ட அசிஸ்டண்ட்டா இருக்க. நடிகை ஸ்ருதி பிடிச்சுக்கொடுத்த அத்தனை பெரிய ட்ரக் கேஸைத் தன்னந்தனியா வாதாடி ஜெயிச்ச மனுஷன். அவர் கிட்ட இருந்தே உன்னால் எதுவும் கத்துக்க முடியலன்னா உன்னை விட வேஸ்ட் பீஸ் வேற யாரும் இல்லை.
இன்னும் ஒரு கேஸ் கூட தனியா வாதாட வக்கு இல்ல. இவனை நான் எனக்கு வாதாட சிகப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிற மாதிரி பேசுறான் போடா போடா பொடிப் பயலே.” தாங்கள் ஒன்றாக அமர்ந்து உண்ட நாட்களில் வந்து போன பல சண்டைகளில் ஒரு சண்டையை நினைத்துப் பார்த்த தர்மாவிற்குச் சிரிப்பு வர, சிரித்தவண்ணம் செல்வாவிற்கு எதிரே அமர்ந்து கொண்டான்.
ஆச்சர்யமாய் பார்த்தபோதும் எதுவும் பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான் செல்வா. அவசரத்துக்குச் செய்த எளிமையான சமையலாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கைப்பக்குவம் என்பது சரியாகத் தான் இருக்கிறது என மனதோடு மனைவியைப் பாராட்டிக்கொண்டு ரசித்துச் சாப்பிட்டான் லீலாவின் கணவன்.
தங்கள் அருகே இருந்த உணவுப் பாத்திரங்கள் தங்கை மற்றும் அவள் கணவன் இருக்கும் பக்கம் போகும் படி உணவு மேஜையில் இருந்த சுழல் அமைப்பை சுற்றிவிட்டாள் லீலா.
“ஏன் அவங்களுக்கு கை இல்லையா, அவங்க திருப்பிக்க மாட்டாங்களா?” இன்னமும் கொஞ்சம் கோபமும் வருத்தமும் மிச்சம் இருக்கிறது என்பதை செல்வா இப்படிக் காட்ட, “இதை சுத்தி விட்டதுல இப்ப நான் என்னங்க குறைஞ்சி போயிட்டேன்.” என்றாள் லீலா. அதற்குப் பதில் சொல்லத் தெரியாததால் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் செல்வா.
நாகா இருந்த அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள் ஊர்மி. அவளையே ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “இந்தாங்க” என்று மூடியிருந்த தட்டையும் இன்னொரு கையில் ஒரு வாட்டர் பாட்டிலையும் நீட்டினாள்.
என்ன நினைத்தானோ, “கூப்பிட்டு இருந்த கீழே வந்திருப்பேனே.” என்றான்.
“கூப்பிடலாம் னு தான் நினைச்சேன். ஆனா, நீ கூப்பிட்ட உடனே தலையைத் தலையை ஆட்டிக்கிட்டு உன் பின்னாடி வருவேன்னு நினைச்சியான்னு, நீங்க என் மேல கோவப்படுவீங்க.
கோபாப்பட்டா பிபி வரும், பிபி வந்தா ஹார்ட் ப்ராப்ளம் வரும், ஹார்ட் ப்ராப்ளம் வந்தா நீங்க பொசுக்குன்னு போயிடுவீங்க. அதுக்கு அப்புறம் நான் பொட்டையும், பூவையும் இழந்துட்டு அநாதையா நிக்கணும். எதுக்கு இந்த வீண் பிரச்சனை அதனால் தான் நானே சாப்பாடை கொண்டு வந்திட்டேன்.” என்றாள்.
அதுவரை இருந்த இலகுத்தன்மை நீங்க, “என்ன கிண்டலா” என்றான்.
“நக்கல், இல்ல விக்கல். சாப்பிடும் போது விக்கல் வந்து தண்ணி இல்லாம நெஞ்சு அடைச்சு உங்களுக்கு எதுவும் ஆச்சுன்னா என் நிலைமை. ஐயையோ என்னால கனவுல கூட அப்படியெல்லாம் நினைக்க முடியல. அதனால் தான் தண்ணியும் சேர்த்துக் கொண்டு வந்து இருக்கேன். உங்களை மாதிரியே சாப்பாடும் சூடா இருக்கு, ஆறும் முன்னாடி சாப்பிட்டுடுங்க.” என்றாள். கீழே வைத்து அவன் சகோதரர்களுடன் அவன் பேசிய பேச்சு அவளை இப்படியெல்லாம் பேச வைத்தது.
“சாவு சாவுன்னு என்னோட சாவைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கியே நான் சாகனும் னு ரொம்ப ஆசையோ.” வார்த்தையால் குத்தினாலும் சாப்பாட்டை வாங்கிக்கொண்டான். பசியோ இல்லை சாப்பாடை வீணடிக்கக் கூடாது என்கிற தந்தையின் வற்புறுத்தலோ எதுவோ ஒன்று அவனைக் கொஞ்சம் மட்டுப் படுத்தி வைத்திருந்தது.
கணவனின் வார்த்தைக் குத்தலில் ஊர்மியின் முகம் சுருங்கியது. “சாவுன்னு சொன்னா சாவு விழுந்திடாது. பொதுவா ஒருத்தங்க செத்துப் போகுற மாதிரி கனவு கண்டா அவங்களுக்கு ஆயுசு கெட்டின்னு சொல்லுவாங்க. அதே மாதிரி தான் இதுவும்.” இவ்வளவு நேரம் இருந்ததற்கு மாறாகப் பொறுமையாகப் பேசினாள்.
தங்களைப் பற்றிய உண்மை தெரியவந்த நேரம் மற்றவர்கள் அவர்கள் மனஆதங்கத்தைக் கொட்டிக்கொண்டிருக்க, இவன் மட்டும் அவர்களைத் தூண்டி விடுவது போல் பேசிக்கொண்டிருந்த கோபத்தினாலோ, இல்லை இராதா இல்லத்தில் மற்ற ஆண்களைப் போல் குறிப்பாக இவன் உடன் பிறந்த தர்மாவைப் போல் இவன் ஏன் கொஞ்சமும் இல்லை என்கிற மனத்தாங்கலாலோ நினையாத அனைத்தையும் பேசிவிட்டிருந்தாள் ஊர்மிளா.
“நான் செத்தா நீ ஏன் தனியா இருக்கப் போற. உன் அக்கா தங்கச்சி இல்ல, நீங்க தான் ஒத்துமையான ஆட்கள் ஆச்சே. ஒருவேளை நான் போயிட்டா அவங்க உன்னைப் பார்த்துக்க மாட்டாங்களா?” நக்கல் போலக் கேட்டான். அவர்களை விட நான் தான் உனக்கு முக்கியமானவன் என்பதை அவளுக்கு உணர்த்த நினைத்தானா இல்லை அவனே உணர்ந்தானா அவன் மட்டுமே அறிவான்.
“அவங்க என்னைப் பார்த்துப்பாங்க தான். ஆனா என் புருஷன் நீங்க இருந்து என்னைப் பார்த்துக்கிற மாதிரி வருமா? ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒரு பொண்ணுக்குப் புருஷங்கிற உறவு தான் பெருசு. எனக்கும் அப்படித்தான் இப்பவும், எப்பவும்.” என்றவளுக்கு அவன் பேசிய விவாகரத்து என்னும் வார்த்தை காதில் ஒலிக்க,
“சீக்கிரம் சாப்பிடுங்க, ஆனா சீக்கிரம் கையைக் கழுவிடாதீங்க.” என்றுவிட்டு அவள் அறையை விட்டுச் செல்லும் போது, அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருந்த இதய வடிவ பலூன்களில் ஒன்று அவளை நோக்கி வந்தது. அதை எடுத்துப் பார்த்தவள் தன்னவனை ஒருமுறை பார்த்துவிட்டு அருகில் இருந்த ட்ரஸிங் டேபிளில் வைத்துவிட்டு வெளியே சென்றாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Nagaku urmi pechu than correct…
Story supera pokuthu sis…
ஊர்மி க்கு அக்காக்களுக்காக நாகா வை ஏத்துகிட்டோம் … ஆனாலும் அவனை முழுசா ஏத்துக்க நினைக்கிறா … அவன் பேசி பேசி அவளை காயப்படுத்துறான் … கடைசில செம்ம டயலாக் … சீக்கிரம் கையை கழுவிடாதீங்க …
சாப்பிடும் போது இவ்வளவு சண்டையா போட்டிருக்காங்க … அண்ணன் மேலேயே ரேப் கேஸ் போடுவானா … நல்ல சண்டை … ஒரு பக்கம் சிரிப்பு சரவெடி … இன்னொரு பக்கம் ஊர்மி யோட மன கஷ்டம் … அதையும் அழகா கடந்து போறா … சமாளிக்கிறா … தெய்வா ரொமான்ஸ் பண்ணிட்டே தனியா சாப்பிடுவான் போல 😜