
அத்தியாயம் 21
அதிகாலை ஐந்து மணி, இன்னும் சற்று நேரத்தில் நிகழ இருக்கும் திருமணத்திற்காக பூலோக அரம்பரையர்களாகத் தயாராகி, வடிவேலுவுக்காகக் காத்திருந்தார்கள் அவருடைய மருமகள்கள்.
“என்னம்மா என்னை வரச் சொன்னதா அரசு சொன்னான், ஏதாவது சொல்லணுமாம்மா.” அத்தனை வாஞ்சையாய் கேட்டார் மனிதர்.
“எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை, அதைவிட இப்படி ஒரு கௌரவம் கிடைக்கும் னு நாங்க கனவில் கூட நினைச்சதில்லை. இதுக்கு முழுமுதற் காரணம் நீங்க மட்டும் தான். எங்க நாலு பேருக்கும் எங்க அப்பா ஸ்தானத்தில் இருந்து விபூதி வைச்சுவிடுங்க.” என்றாள் லீலா.
“அதுக்கென்னமா பண்ணிட்டா போச்சு. ஆனா ஒன்னு, நீங்க சொல்ற மாதிரி நான் அந்தளவு உத்தமனோ, நல்லவனோ கிடையாது. உங்களை மருமகள்களா தேர்ந்தெடுத்ததில் பொதுநலத்தை விட சுயநலம் தான் அதிகம். அது உங்களுக்கும் தெரியும்.” வடிவேலு சொல்ல, “சுயநலமாவே இருந்தாலும் அதை ஒத்துக்கிறதுக்கும் பெரிய மனசு வேணுமே மாமா.” சொன்னவள் ருக்மணி.
பேச்சில் மருமகள்களை வெல்லத் தெரியாமல் முழு மனதுடன் சந்தோஷமாகத் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டவர், பூஜை அறையில் இருந்து விபூதி எடுத்து வர வைத்து, தன் மருமகள்கள் நால்வரும் ஆண்டாண்டு காலம் தன் வீட்டை அரசாட்சி செய்து, தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்வாக வாழவைக்க வேண்டும் என்று இறைவனையும் தன் தாய் மற்றும் மனைவியையும் வேண்டிக்கொண்டு மருமகள்களின் நெற்றியில் விபூதி வைத்துவிட்டார்.
நான்கு மணமேடைகள் அமைக்கப்பட்டு அவற்றில் ஆதி சாட்சியாய் அக்னிபகவான் வந்து சேர, திருமண வைபவம் இனிதே துவங்கியது. நான்கு மேடைகளுக்கும் நடுவில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தான் அரசு.
ஊர் முழுவதும் இந்தத் திருமணங்களைப் பற்றிய பேச்சாகத் தான் இருந்தது. வெகு சிலருக்குப் பெண்களைப் பற்றி தெரிந்திருந்தது. அப்போது கூட வடிவேல் நான்கு சகோதரர்களுக்கு நான்கு சகோதரிகளை மணமுடிக்கிறார் என்று சாதாரணமாகத் தான் நினைத்தனர்.
மாப்பிள்ளை அழைப்பு ஒலி கேட்கவும், ஒவ்வொரு அறையாகத் திறந்து கொண்டு செல்வா, தெய்வா, நாகா, தர்மா நால்வரும் கந்தர்வர்களுடன் நேரடிப் போட்டியில் இறங்கும் அளவு அத்தனை தோரணையுடன் ராஜநடை நடந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.
வடிவேலுவின் கண்கள் பூத்துப் போனது. பணத்தோடு சேர்த்து குணத்தையும் கொடுத்து தன் மக்களை நல்லபடியாக வளர்த்திருக்கிறான் வடிவேல் என்று வந்த விருந்தினர்கள் சிலர் பேசுவதைச் செவிமடுத்த போது ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தந்தையாகிப் போனார் மனிதர்.
“டேய் அரசு என்னை விட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு இன்ஞ் கூட போயிடாத என்ன.” என்றபடி அவன் கரத்தைப் பிடித்துக்கொண்டார்.
“என்னாச்சு அங்கிள்” செல்வா உடன் வேலை செய்யும் யாரேனும் வந்திருக்கிறார்களா என்று சுற்றி முற்றி பார்வையை ஓட்டினான் அவன்.
“ஓவர் சந்தோஷம் கூட உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க. இந்த நிமிஷம், இந்த உலகத்தில் என்னை விட சந்தோஷமான ஒருத்தன் இருக்கவே முடியாது. அவ்வளவு சந்தோஷமும் சேர்ந்து ஆனந்தக் கண்ணீரா நிற்காம வடிஞ்சிக்கிட்டே இருக்கு.
ஒருவேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னை உடனடியா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் காப்பாத்த வேண்டியது உன் பொறுப்பு.
நான் சாக விரும்பல டா. என் பசங்க, மருமகளுங்க, பேரப்பிள்ளைங்கன்னு எல்லோரடவும் நான் ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழ்ந்துட்டுத் தான் போகணும்.” மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகப் பேசினார்.
“அதெல்லாம் பார்க்கலாம் பார்க்கலாம். ஆனா அது எல்லாத்தையும் விட மிகப்பெரிய விஷயம் ஒன்னு இருக்கு அதை மறந்துட்டீங்க நீங்க.” என்றபடி புருவம் உயர்த்தினான் அரசு. “இதை விட என்னடா பெரிய விஷயம்.” புரியாமல் கேட்டார் மனிதர்.
“உங்க நாலு பசங்களுக்கு மட்டும் கல்யாணம் நடந்தா போதுமா, நான் காலம் முழுக்க பிரம்மச்சாரியா இருந்து சாகணுமா? எனக்கு யாரு கல்யாணம் பண்ணி வைப்பா. செத்துப்போன உங்க கொள்ளுத்தாத்தா அந்த அமைச்சரா வந்து பண்ணி வைக்கப் போறாரு.” அரசு கேட்ட நொடி சத்தம் போட்டு சிரித்துவிட்டார் வடிவேல்.
“டேய் லூசுப்பயலே இப்ப உனக்குக் கல்யாணத்துக்கு என்னடா அவசரம். அதெல்லாம் காலம் வரும் போது என் மருமகள்களை விட நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன்.” உள்ளார்ந்து சொன்னார்.
அவர் மனதின் எண்ணமும் அதுவாகத் தான் இருந்தது. இந்த உலகில் தான் பெற்ற பிள்ளைகளுக்கு இணையாக, அவர் ஒருவரை நேசிக்கிறார் என்றால் அது அரசுவாக மட்டுமே இருக்கும், இனி அந்த வரிசையில் அவர் மருமகள்கள் சேர்ந்துகொள்வார்கள்.
அரசு ஒப்புக்கொண்டால் தன் சொத்துகளை அவனுக்கும் சேர்த்து ஐந்து பாகமாகக் கூடப் போடுவார் வடிவேல். அத்தனை அன்பு உண்டு அவன் மீது. அவன் தான் கழுவும் மீனில் நழுவும் மீனாக கழன்று கொண்டிருக்கிறான்.
“ஏது உங்க மருமகள்களை விட நல்ல பொண்ணா. சரிதான் இதுக்கு நீ பரதேசம் போயிடுன்னு நேரடியாவே சொல்லி இருக்கலாமே.” அரசு சொல்ல வடிவேலுவும் தன்னை மறந்து சிரித்தார்.
மணப்பெண்கள் இருந்த அறைக்கதவு திறக்கப்பட அரக்கு நிற பட்டுப்புடவையில் அதிகமான நகைகள், மிதமான ஒப்பனை, அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை மலர்செண்டு மாலை என வந்தாள் லீலாவதி.
அவளைத் தொடர்ந்து இளஞ்சிகப்பு வண்ண காஞ்சிப்பட்டில் லீலாவுடன் போட்டிக்கு நிற்கும் வண்ணம் கொள்ளை அழகுடன் வந்தாள் ருக்மணி. அவளைக் கொள்ளையடிக்கும் எண்ணத்தில் பார்த்தான் தெய்வா.
பச்சை நிற வண்ணம் ஊர்மிளாவை இன்னும் எடுப்பாகக் காட்ட, நாகாவின் ஒட்டுமொத்தக் கோவமும் அவளைக் கண்ட ஒருநொடியில் கரைந்துவிடும் படி அழகாலே செதுக்கி இருந்தனர் ஒப்பனையாளர்கள்.
அதற்கு ஏற்ப, “இத்தனை அழகா இவ” என்று நினைத்த நாகா, அடுத்தகணம் அவளை சைட் அடித்ததற்காகத் தன்னையே நொந்து கொண்டான்.
இறுதியாகக் கத்தரிப் பூ வண்ண பட்டில் தங்கத்தை மங்கிப்போகச் செய்யும் அளவு பொலிவுடன் தேவதையாய் வந்தாள் தேவகி.
“அடடே தேவலோகத்து அரம்பையர்கள் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமாவே இறங்கி வந்த மாதிரி இருக்கு. வடிவேலு தன் புள்ளைங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணுங்களைப் பார்த்திருக்கான்.”
“இவ்வளவு அழகான பொண்ணுங்க எல்லாம் நம்ம பையனுக்கு பொண்ணு பார்க்கும் போது எங்க போய் இருந்தாங்களோ.”
“தாய் தகப்பன் இல்லாத பிள்ளைகளா இருந்தாலும், நல்ல குடும்பத்துப் பொண்ணுங்களை தான் வடிவேலு தேடிக்கண்டு பிடிச்சிருக்கார். இந்த மாதிரியான முகஇலட்சணம் கொண்ட பொண்ணுங்களை இப்பெல்லாம் பார்க்கவே முடியுறது இல்லை. கண்ட மாவையும் அள்ளிப் பூசிக்கிறாங்க. இல்லையா கண்ட இடத்துக்குப் போய் ஆபரேஷன் அது இதுன்னு இயற்கையான உடம்பைக் கெடுத்துக்கிறாங்க.”
“இந்த மாதிரி அழகான அடக்கமான பொண்ணுங்க கிடைப்பாங்கன்னா நாமளும் அரேன்ஜ் மேரேஜே பண்ணிக்கலாம் போலையே.”
“பொண்ணுங்க சேரி கட்டினா இவ்வளவு அழகா இருப்பாங்களா. அதனால் தான் பாட்டி என்னைச் சேலை கட்டிப் பழகுன்னு அடிக்கடி சொல்றாங்க போல. முதல் வேலையா சேலை கட்டிப் பழகி, நிறைய நகைகள் போட்டு நல்லதா நாலு போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் போடுறேன், லைக்ஸ்ஸை அள்ளுறேன்”
“இந்தப் பொண்ணுங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே”
“இந்த பொண்ணுங்களைப் பார்த்தா அக்கா, தங்கச்சிங்க மாதிரி இருக்காங்களே.”
“இந்தப் பொண்ணுங்களுக்கு நல்ல வாழ்வு தான்.” ஆண்கள், பெண்கள், மத்திய வயதினர், வயோதிகர் எனப் பலரின் பலவிதமான பேச்சுக்களுக்கு நடுவே பெண்கள் நால்வரும் தங்களுடைய வருங்காலக் கணவன்மார்களின் அருகே அமர்ந்தனர்.
செல்வா லீலாவைப் பார்த்து சிநேகமாய் புன்னகைக்க, தெய்வாவோ, “ருக்கு சத்தியமா சொல்றேன் நீங்க அவ்வளவு அழகு. உங்க அழகு ஆளையே சாய்க்கிது.” என்றான். ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி என்னைச் சங்கடப்படுத்துறாரே மனுஷன் எனத் தன்னோடு நினைத்துப் புன்னகைத்தாள் ருக்கு.
“இந்த புடவை நகை எல்லாம் எங்கப்பன் பணம் தானே கொடுத்து வைச்ச மகராசி.” என்றான் நாகா.
“உங்களைக் கல்யாணம் பண்ணி அழியப்போற என் வாழ்க்கைக்கு உங்க அப்பா கொடுத்த சின்ன ஆறுதல் பரிசு தான் இது அத்தனையும்.” வெடுக்கென்று பதில் வந்தது ஊர்மிளையிடம் இருந்து.
“ரொம்ப அழகா இருக்கீங்க தேவகி.” தர்மா சொல்ல, “நீங்களும்” என்றாள் தேவகி.
மாங்கல்யம் அனைவரின் ஆசிர்வாதத்திற்காக அனுப்பி வைக்கப்பட, அது எப்பொழுது கைக்கு வரும் எப்போது அதை ருக்குவின் கழுத்தில் கட்டலாம் என்று பரபரப்புடன் அமர்ந்திருந்தான் தெய்வா.
“அங்க பாருங்க உங்க பசங்களை. அவனுக்குத் தான் கல்யாணம் னு புரியாம ஒருத்தன், எப்படா கல்யாணம் னு ஒருத்தன், எதுக்குடா கல்யாணம் னு ஒருத்தன், என்ன பண்ணனும் னு தெரியாத ஒருத்தன். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.” வடிவேலுவிடம் சொல்லி சிரித்தான் அரசு.
“போடா போடா பைத்தியக்காரா உனக்கு பொறாமை டா என் பசங்களைப் பார்த்து.” சிரித்தார் வடிவேல்.
“அது என்னவோ லைட்டா உண்மை தான். காலையில் இருந்து வயிறு லேசா காந்தல் எடுக்கிது தான்.” உண்மையை ஒப்புக்கொண்டான் அரசு.
மாங்கல்யம் ஆடவர் நால்வரிடமும் எடுத்துக் கொடுக்கப்பட, தங்களை எப்படியாவது நன்றாக வாழ வைத்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வாழ்ந்து மறைந்த தங்களுடைய அம்மா மற்றும் அத்தையை நினைத்தும் இப்படி ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த கடவுள் மற்றும் வடிவேல் இருவருக்கும் நன்றி சொல்லும் விதமாக கைகளைக் கூப்பிக்கொண்டனர் பெண்கள் நால்வரும்.
ஆண்களின் கரம் திருமாங்கல்யத்தை இவர்களை நோக்கிக் கொண்டு வர, இன்னும் சில நொடிகளில் கழுத்தில் ஏற இருக்கும் திருமாங்கல்யத்திற்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவும், அதைக் கட்டியவனுடன் காலம் முழுவதும் ஆனந்தமாய் வாழ வேண்டும் என்ற உறுதியுடனும் அதே வணங்கிய கரங்களுடன், ஆடவர்களின் கண்ணோடு கண் நோக்கி பெண்கள் தாலியை ஏற்றுக்கொள்ள, முப்பத்து முக்கோடி தேவர்கள் ஒன்று சேர்ந்து பூமழை பொழிந்தது போன்ற மலர் மழைக்கு நடுவில் நால்வரின் திருமணம் நல்ல முறையில் நடந்தேறியது.
வடிவேலுவின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. “இதையெல்லாம் பார்க்க உனக்குக் கொடுத்து வைக்கலையே ராதா. நம்ம பசங்களைப் பாரு தேசிங்குராஜா மாதிரி அழகா கம்பீரமா இருக்காங்க. நம்ம மருமகளுங்களைப் பாரு நீ கும்பிடுற அம்மன் சிலைக்கு உயிர் வந்த மாதிரி இருக்காங்க. நீ எங்க இருந்தாலும் நம்ம பசங்களுக்கு உன்னோட ஆசிர்வாதம் கிடைக்கும் னு நம்புறேன்.” தன் மனதில் இன்னும் வாழும் மனைவியோடு மானசீகமாகப் பேசியவர், தானும் மலர் தூவி தன் பிள்ளைகளை ஆசிர்வதித்தார்.
செல்வா தன் மனைவியாக மாறிவிட்ட லீலாவைப் பார்த்து புன்னகை செய்ய, தெய்வா ருக்குவின் தலையில் இருக்கும் பூக்களைத் தட்டிவிட்டான். நாகா ஊர்மியைப் பார்த்து வழக்கம் போல் ஒரு முறைப்பு. “மிஸ்டர் தேவகியா மாறினதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் தேவகி.” என்று சொல்லி மனைவியை நெகிழச் செய்தான் தர்மா.
நான்கு ஜோடிகளும் ஒவ்வொருவராக வடிவேலுவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டனர். விருந்தினர்கள் அனைவரும் திருமணம் நல்லபடியாக முடிந்த திருப்தியில், பரிசுப் பொருள்களை மணமக்களுக்குக் கொடுப்பதற்காக மணமேடை வர ஆரம்பித்தனர்.
வடிவேல் உத்தரவின் பேரில் அரசு மேடையை விட்டு எங்கும் செல்லவில்லை. பெண்களைப் பற்றி யாரேனும் பேச வாய் திறந்தால் சமாளித்து அனுப்பும் பெரிய வேலையை அவன் ஏற்றிருந்தான். இன்னும் சற்று நேரத்தில் பூகம்பம் வெடிக்கப்போவது உறுதி. குறைந்தபட்சம் இந்த நொடியில் அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும் என்பது அவன் எண்ணம்.
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைய ஆரம்பிக்க, சுற்றி நின்று கொண்டிருந்த உறவுக்காரப் பெண்களையும், தன் மைந்தர்களின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிந்த இளவட்டங்களையும் அடித்துத் துரத்தாத குறையாக அனுப்பி வைத்த வடிவேலு, தான் மட்டுமாக புதிதாக வாங்கிய நான்கு கார்களில் நான்கு ஜோடிகளையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.
முதலில் வடிவேலுவின் கார் கிளம்ப, அடுத்து நின்றிருந்த கார் அருகே வந்தான் செல்வா. சொல்ல சொல்ல கேளாமல் அவன் தந்தை அவன் திருமணத்திற்காக அவனுடைய விருப்பத்தின் பெயரில் வாங்கியது அந்த வாகனம். அவனுக்கு மட்டும் அல்ல அவன் தம்பிகளுக்கும் சேர்த்து தான் வாங்கி இருந்தார்.
புத்தம் புது வாகனம், வண்ண வண்ண ரோஜா மலர்களால் நிறைந்திருக்க, அதை இதமான மனதோடு இரசித்துவிட்டு ஆளை மயக்கும் மந்தகாசப் புன்னகையோடு அந்தக் காரில் ஏறிக்கொண்டான். கணவன் எவ்வழியோ தானும் அவ்வழி என்பது போல் எதைப் பற்றியும் யோசிக்காமல் லீலாவும் அவன் பின்னால் ஏறிக்கொள்ள, அந்த அலங்காரத் தேர் கிளம்பியது ராதா இல்லம் நோக்கி.
அடுத்ததாக தெய்வா ருக்கு முறை. “ருக்கு நாளையில் இருந்து சின்னச் சின்ன பிரச்சனைகளுக்கு அக்காவை எதிர்பார்க்காம தைரியமா இருக்கணும். உன்னைப் பயமுறுத்துற மாதிரி, தவிக்க வைக்கிற மாதிரி சில சூழ்நிலைகள் வரலாம். அப்ப உன்னோட ஆள் மனசு என்ன சொல்லுதோ அதைக் கேட்டு செயல்படணும்.
தெய்வா ஒன்னும் பேயோ பிசாசோ இல்லை. உன்னோட புருஷன், நீயும் அவரும் ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சி தான் கல்யாணம் பண்ணிக்கிறீங்க. அவர் கோவமா ஏதாவது பேசினா அந்த நேரம் கொஞ்சம் பொறுத்து போ, ஆனா அவர் பக்கம் தப்பு இருந்தா அதை அப்புறமா எடுத்துச் சொல்லவும் மறக்காத. அவரை உனக்குப் பிடிக்கும் னு உன்னோட மனசில் நல்லா ஏத்திக்கோ. அவரைப் பார்த்து பயம் வராது. அவர் தொட்டா தப்பாத் தெரியது.” லீலா ஒரே விஷயத்தை ஒருமுறைக்குப் பலமுறை சொல்லும் போதெல்லாம் தலையாட்டி பொம்மை தோற்கும் அளவிற்கு தலையைத் தலையை ஆட்டினாலும், இப்போழுது உள்ளுக்குள் உதறல் எடுத்தது உண்மை.
“முன்னாடி மாதிரி, சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் உங்க பர்மிஷன் எதிர்பார்த்துக்கிட்டு இருக்க மாட்டேன், காரில் ஏறுங்க ருக்கு.” என உரிமையாய் அவளைக் காரில் ஏற்றி தன் அருகே அமர வைத்தான் தெய்வா.
ஏசி காரிலும் திட்டுத்திட்டாய் துளிர்க்கும் வியர்வையுடன் இருந்தவளை பனித் துளிகளுடன் இருக்கும் அதிகாலை ரோஜாவுடன் ஒப்பிடச் சொல்லி தெய்வாவை துன்புறுத்தியது அவன் மனம்.
உருளும் விழிகள், அடிக்கடி உள் இறங்கி வெளியேறும் தொண்டைக்குழி, அவள் பிடியில் கொஞ்சம் கொஞ்சமாய் உயிரிழந்து கொண்டிருக்கும் புடவைத் தலைப்பு என ஒவ்வொன்றையும் இரசித்தான் தெய்வா. பதற்றம் இருந்தாலும் அசௌகர்யம் இல்லாத அவள் நிலை அவனுக்குப் பிடித்திருந்தது.
அவளைக் கொஞ்சம் சீண்ட எண்ணி, நன்றாக ஒட்டி அமர்ந்தவன் அவளுடைய காதில், “நைட் தான் பர்ஸ்ட் நைட் இப்ப இல்ல.” என்க, இழுத்த மூச்சை வெளியிட வேண்டும் என்று கூடத் தோன்றாமல் அதிர்ச்சியில் சிலையாகிப் போனாள் அவள். அவள் முதுகில் தட்டி ப்ரீத் என்று மாயப்புன்னகை செய்தான் தெய்வா.
“இந்த மகராசிக்கு புதுகார் ஒன்னு தான் கேடு, வந்து தொலை.” என்றான் நாகா ஊர்மியைப் பார்த்து. மறுக்காமல் காரில் ஏறிய ஊர்மி அவனிடம் எதுவும் பேசாமல் ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
“ஹலோ எனக்கு ஒரு சின்ன சந்தேகம். எனக்கு உன்னைப் பார்த்தலே பிடிக்கல. உன்னை எவ்வளவு வெறுக்கிறேன்னு உனக்கே நல்லாத் தெரியும். அப்படி இருக்கும் போது எதுக்கு என்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தக்காலில் நின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க மிஸஸ் நாகராஜ்.” வேண்டுமென்றே அழுத்திச் சொன்னான்.
“நான் ஒன்னும் உங்களை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கல. எனக்கு என் அக்கா தங்கச்சிங்களோட இருக்கனும் அவ்வளவு தான். அதுக்காக நீங்கன்னு இல்ல உங்க இடத்தில் யார் இருந்தாலும் கல்யாணம் பண்ணி இருப்பேன். அது ஒரு கொலைகாரனாவே இருந்தாலும்.” உண்மையைத் தான் சொன்னாள்.
“உங்க அக்கா, தங்கச்சி பாசத்துக்கு என்னைப் பலிகடா ஆக்கினியா?” என்றவனைக் குறுகுறுவெனப் பார்த்துவிட்டு கசப்பாகச் சிரித்தவள் தலையை இடவலமாக ஆட்டிவிட்டு “நான் தான் பலியாகிட்டேன்.” என்றதோடு அமைதியானாள்.
“இவ சொன்னதுக்கு என்ன அர்த்தம். அப்ப என்னை அவளுக்குப் பிடிக்கலையா. ஆனா ஏன் என்னைப் பிடிக்கல.” ஒரு கணம் யோசித்தவன் அடுத்த கணம் சுதாரித்து, “ஆஹா என்னை இப்படி பைத்தியம் மாதிரி உளற வைச்சிட்டாளே.” என பற்களைக் கடித்துக் கொண்டு ஊர்மிக்கு எதிர்ப்பக்கம் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
“அப்பாடா ஒரு வழியா நம்ம கல்யாணம் நல்ல படியா நடந்து முடிஞ்சது. என்னோட ப்ரண்ட்ஸ், ஸ்டூடண்ட் னு நிறைய பேர் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க. அவங்க எல்லாரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைச்சிருந்தேன்.
ஆனா அப்பா எதுக்காக இப்படி அவசர அவசரமா எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போராருன்னு தெரியல. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” தர்மா கேட்க தேவகியின் நினைவுகள் கொஞ்சம் பின்நோக்கிச் சென்றது.
“ருக்கு, ஊர்மி, தேவகி மூணு பேரும் நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கோங்க. நான் மாமாகிட்ட பேசிட்டேன், நான் அன்னைக்கே சொன்ன மாதிரி நாம மறைச்சு வைச்சிருக்கிற உண்மை நம்ம வாயால தான் வெளில வரணும். அதுவும் கல்யாணம் ஆன அன்னைக்கே.
பொய்யால் ஆன முதல் படியில் ஏறி, கல்யாண வாழ்க்கைக்குள்ள அடியெடுத்து வைப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. உண்மையை மறைச்சு நாம ஏற்கனவே ரொம்பப் பெரிய தப்பு பண்ணி இருக்கோம். அதை ஒத்துக்கிறதுக்கு காலம் தாழ்த்தி இன்னும் இன்னும் தப்பு பண்ண வேண்டாம்.
அவங்களுக்குக் கண்டிப்பா கோபம் வரும் தான். அவங்க ஏமாற்றப்பட்டவங்க, நாம ஏமாத்தினவங்க. நாம தான் கொஞ்சம் பொறுத்துப் போகணும். என்னை ஏதாவது பேசினாக் கூட நீங்க யாரும் திருப்பிப் பேசக்கூடாது.” லீலா சொன்னது நினைவு வர இன்னும் சற்று நேரத்தில் என்ன நடக்குமோ என்னும் பயத்தில் கழுத்தில் இருந்த மாலையை பிய்க்க ஆரம்பித்தாள் தேவகி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இப்பவே உண்மைய சொல்ல போறாங்களா?? அப்போ முதலிரவு அதோ கதி தான் போல … தெய்வா தான் பாவம் …
அரசு நான் மனசுல நினைச்சதை நீ சொல்லிட்ட பா … நிஜமாக சிரிச்சு சிரிச்சு கண்ணீர் வந்திடுச்சு … அவனுக்கு தான் கல்யாணம்னு தெரியாம ஒருத்தன் … எப்போ கல்யாணம்னு ஒருத்தன் … எதுக்கு கல்யாணம்னு ஒருத்தன் … என்ன பண்ணனும்னு தெரியாத ஒருத்தன் … செமையா இருக்கு …
இன்னும் என்னெல்லாம் நடக்க போகுதோ
அரசு கதாபாத்திரம் மிகவும் அற்புதம் sis…