
அத்தியாயம் 20
போனில் கேட்ட செய்தியால் அதற்குப் பிறகு பொட்டுத் தூக்கம் வரவில்லை லீலாவிற்கு. அந்த போனையே விடிய விடிய வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
விடியற்காலையில் ஒரு முடிவுடன் செல்வாவின் அறைக்கதவை லீலா தட்ட, எப்பொழுதும் போல் வேலையாட்கள் யாராவது வந்திருப்பார்கள் என நினைத்து, “எஸ் கம்மின்” என்றுவிட்டு தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான் செல்வா.
உள்ளே வந்த லீலா அவன் சட்டை இல்லாத தேகம் கண்டு பதறி திரும்பி நின்று கொண்டாள். “லீலா நீங்களா? என்ன இவ்வளவு காலையில” கேட்டுக்கொண்டே சர்வ சாதாரணமாக சட்டையை மாட்டினான் அவன். மருத்துவன் அவனுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
அவன் தன்னை தவறாக நினைக்கவில்லை என உணர்ந்ததும் திருப்தியானவள் திரும்பி அவன் முகம் பார்த்தாள். அதில் இன்னும் கேள்விக்குறி நிறைந்திருக்க, “நேத்து நைட் எனக்கு ஒரு போன் வந்தது.” என்று ஆரம்பித்தவள் அனைத்தையும் சொல்லி முடிக்க, கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு கோவம் வந்தது.
அந்த நம்பரைக் காட்டுங்க என்று அவள் கையில் இருந்த போனைப் பிடுங்காத குறையாக வாங்கியவன் அது பரிட்சையம் இல்லாத எண்ணாக இருக்கவும், தனக்கு எதிராக குழி பறிப்பது யாராக இருக்கும், தன்னைப் பற்றி இப்படியெல்லாம் சொல்வதற்கு யாருக்கு அவசியம் இருக்கிறது என்கிற யோசனையில் நெற்றியைத் தேய்க்க ஆரம்பித்தான்.
“நான் ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்ட் செலக்ட் பண்ணி இருக்கேன். அந்த வாய்ஸ் கேட்கிறீங்களா?” லீலா கேட்க, “ப்ளே இட் பாஸ்ட்” கத்தாத குறையாகச் சொன்னான்.
ஒலிப்பதிவை லீலா ஓடவிட, அதில் இருந்த குரலை அடையாளம் கண்டு கொண்டவன், “ராஸ்கல் நீயா உன்னை என்ன பண்றேன்னு பாரு.” என்றுவிட்டு லீலாவின் போனில் இருந்தே அந்த நம்பருக்கு அழைப்பு விடுத்தான்.
“என்னம்மா லீலா, நேத்து பயத்தில் கட் பண்ணிட்டு இப்ப நீயே போன் பண்ற. என்ன விஷயம், நான் சொன்னதோட சீரியஸ்னஸை புரிஞ்சிக்கிட்டு கல்யாணத்தை நிப்பாட்டிடலாம் னு நல்ல முடிவு எதுவும் எடுத்திட்டியா?” எள்ளலலாக பதில் வந்தது எதிர்புறத்தில் இருந்து.
“டேய் பாஸ்கர், பைத்தியம். உனக்கு எதில் எதில் விளையாடணும் என்கிற அறிவே கிடையாதா?” கத்தினான் செல்வா.
“செல்வா நீயா, ஸ்சாரி டா. நான் சும்மா சிஸ்டர் கிட்ட விளையாடலாம் னு நினைச்சு, உன் செல்லில் இருந்து நம்பர் எடுத்துப் பேசினேன்.” தயக்கம் என்பது பெயரளவில் கூட இல்லாமல் சாதாரணமாகச் சொன்னான் அவன்.
“உன்னைச் சொல்றதை விட, உன்னை மாதிரி ஆள்கள் கூட பழக்கம் வைச்சிருக்கேன் பாரு என்னைச் சொல்லணும். என் போனை எடுத்து, என் வுட்பி நம்பரைத் திருடி அவங்ககிட்ட இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி இருக்க. லீலா என்கிட்ட வந்து சொன்னதால சரியாப் போச்சு.
ஒருவேளை நீ சொன்னதை உண்மைன்னு நம்பி அவங்க கல்யாணத்தை நிறுத்தி இருந்தா, என்ன பண்றது. ஒருவேளை அதுதான் உனக்கு வேணுமா என்ன?” செல்வா காட்டுக் கத்து கத்த, லீலா சற்றே பயத்துடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஸ்சாரி டா செல்வா, சும்மா விளையாட்டுக்குத் தான் இப்படிப் பண்ணேன். இது உன்னை இந்தளவு கோவப்படுத்தும் னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா பண்ணி இருக்க மாட்டேன். இப்ப லீலா போனில் இருந்து கால்வராமல் போய் இருந்தாக் கூட கொஞ்ச நேரத்தில் நானே போன் பண்ண எல்லாத்தையும் சொல்லிடத்தான் டா நினைச்சிருந்தேன்.” தோழன் தன்னை நம்ப வேண்டுமே என அவசர அவசரமாகச் சொன்னான் பாஸ்கர்.
செல்வா பதில் வராமல் இருக்கவும், “என்னை மன்னிச்சிடு செல்வா, மன்னிச்சிடுங்க சிஸ்டர். உண்மையில் செல்வா ரொம்ப நல்லவன். அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க.” புகழுரையை அவன் ஆரம்பிக்க, எரிச்சலில் அழைப்பைத் துண்டித்தான் செல்வா.
“பண்றதையும் பண்ணிட்டு இப்ப வந்து சர்டிபிகேட் கொடுக்கிறானாம்.” கடுப்பாகியவன் லீலா இன்னமும் தன் அறையில் நிற்பதை உணர்ந்தவனாக, “ஸ்சாரி லீலா நான் ரொம்ப கோவப்பட்டுட்டேன்.” நிஜமான வருத்தத்துடன் சொல்லியபடி அலைபேசியை அவளிடம் நீட்டினான்.
“கோபம் வர வேண்டிய விஷயத்துக்கு கோபம் வந்து தானே ஆகனும். உங்க ப்ரண்டுகிட்ட இன்னொரு முறை இப்படிப் பண்ண வேண்டாம் னு சொல்லிடுங்க. அவர் அவரோட சொந்த நம்பரில் இருந்து என்னைக் கூப்பிட்டு இருந்தாக்கூட எனக்குத் தெரிந்திருக்காது தான்.
ஆனா அவர் உங்களுக்குகே தெரியாத நம்பரில் இருந்து கூப்பிட்டு இருக்கார். விளையாட்டாவே இருந்தாலும் இது ஆபத்தான விளையாட்டு, எனக்கு இரசிக்கலன்னு சொல்லிடுங்க.” என்றுவிட்டு கிளம்ப முயற்சித்த நேரத்தில்,
“அந்த போன் காலில் சொன்னதை ஒரு நிமிஷமாச்சும் நீங்க நம்பி இருப்பீங்க தானே.” கேட்டே விட்டான் செல்வா.
“இல்லைங்க போன் வந்த அடுத்த நிமிஷமே உங்க ரூமுக்கு வந்தேன். ஆனா உங்களை அந்த நேரத்தில் எழுப்பி விஷயத்தைச் சொல்ல மனசு வரல. அதனால் தான் காலையில் வந்தேன்.” அவன் மனதில் இருக்கும் கேள்வியைப் புரிந்தவள் போல் அவன் அடுத்ததாக கேட்க இருந்த கேள்விக்கும் சேர்த்து பதில் கொடுத்துவிட்டுச் சென்றாள் லீலா. இறுக்கம் தளர்ந்து சின்னதாய் புன்னகைத்துக் கொண்டான் அவன்.
“மாமா” என அழைத்தவண்ணம் அந்தப்புரத்தில் அசைந்தாடும் கஸ்தூரி மான்களைப் போல் ராஜநடை நடந்து வந்தனர் பெண்கள் நால்வரும்.
“வாங்கம்மா என் வீட்டு மகாராணிங்களா, ஆனாலும் நீங்க ரொம்பவும் தான் என் பசங்களைச் சோதிக்கிறீங்க. அவங்க தான் மாப்பிள்ளைங்கன்னு முடிவு பண்ணி, நிச்சயமும் பண்ணியாச்சு. இத்தனைக்குப் பிறகும் அவங்க வேலைக்குக் கிளம்புற வரைக்கும் ரூமுக்குள்ளே அடைஞ்சு கிடந்தாலும் கிடப்போமே தவிர அவங்க கண்ணில் படுற மாதிரி வெளியே நடமாட மாட்டோம் னு விடாப்பிடியா இருக்கீங்களே.
பாவம் என் பையன் தெய்வா, ருக்கு வெளியே வருவா வருவான்னு அவ இருந்த ரூம் வாசலையே பார்த்துட்டு மூஞ்சைத் தொங்கப் போட்டுக்கிட்டு கிளம்பி போய் இருக்கான். அவன் இருக்கிற காண்டுக்கு இன்னைக்கு எவனாவது அவன் கையில் மாட்டினான் அடிச்சுத் துவைச்சு காயப்போட்டுடுவான்.” சிரித்தார் வடிவேலு.
“எல்லாம் கல்யாணம் வரைக்கும் தானே மாமா. என்ன தான் எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறது தான் நல்லா இருக்கும்.” அர்த்தத்துடன் சொன்னாள் லீலா.
“ஆனாலும் மாமா ரொம்பத் தான் இந்தக் கால ஆளா இருக்கீங்க. அங்கங்க மாமனாரும், மாமியாரும் பையனையும், மருமகளையும் கல்யாணத்துக்கு அப்புறமும் அதிக நேரம் ஒன்னா இருக்க விடமாட்டேங்கிறாங்க. நீங்க இப்பவே எங்களைப் பிடிச்சு அவங்ககிட்ட தள்ளிடுவீங்க போல இருக்கு.” வாயடித்தாள் ஊர்மிளா.
“வீட்டுக்கு வரப்போற மருமகப்பிள்ளையோட சந்தோஷத்தில் தான் தன் பிள்ளைகள் சந்தோஷம் இருக்குன்னு புரிஞ்சுக்க முடியாத மக்கு மண்ணாங்கட்டி இல்லம்மா நான். இந்த விஷயத்தில் நான் பொறாமையே பட மாட்டேன். என் பிள்ளைங்களோட நீங்க வாழும் வாழ்க்கையைப் பார்த்து என் கண்ணு நிறைஞ்சா அதுவே போதும்.
சரி அதெல்லாம் போகட்டும், பத்திரிக்கைக்கு சில மாடல்ஸ் வந்திருக்கு. ஏதாவது ஒன்னை செலக்ட் பண்ணுங்க ஆர்டர் கொடுத்திடுவோம்.” என்றதும் தான், தாங்கள் கையும் களவுமாக வெகு விரைவிலே மாட்டப் போகிறோம் என்று புரிந்தது லீலாவிற்கு.
“பத்திரிக்கை மாடலைத் தானம்மா பார்க்கச் சொன்னேன். நீ என்ன ஏதோ பேயைப் பார்த்த மாதிரி இப்படி முழிக்கிற.” வடிவேலு கேட்க, “பத்திரிக்கையில் செல்வா மாமா பெயர் பக்கத்தில் வரப்போற தன்னோட பெயரை நினைச்சு அக்காவுக்கு வெட்கம் வந்திருக்கும்.” கிண்டல் செய்தாள் ஊர்மி.
“ஊர்மி சும்மா இரு.” எனத் தங்கையை அடக்கியவள், “மாமா பத்திரிக்கையில் எங்களோட அம்மா, அப்பா பெயர் போடணுமே. அப்படிப் போட்டா நாம மாட்டிக்குவோமே.” லீலா கேட்க, ஆள் ஆளாளுக்கு ஒவ்வொரு பத்திரிக்கையை தூக்கி வைத்திருந்த சகோதரிகள் மூவரின் கையில் இருந்தும் அவை தானாக கீழே விழுந்தன.
“என்னம்மா இது கிணறு வெட்டப் பூதம் கிளம்பின கதையா, இந்தக் கல்யாணப் பேச்சை எடுத்ததில் இருந்து ஒவ்வொரு பிரச்சனையா வந்துக்கிட்டே இருக்கு. பேசாம உங்க அப்பா அம்மா பெயர், என்னோட பெயர் என் பொண்டாட்டியோ பெயருன்னு எதுவுமே போடாம மணமகன், மணமகள் பெயர் மட்டும் போட்டு பத்திரிக்கை அடிச்சிடுவோமா.” வேறு தீர்வு இல்லாதவரைப் போல் கேட்டார் வடிவேல்.
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாமா. எங்க பக்கத்தில் இருந்து சொந்தம் னு யாரும் கல்யாணத்துக்கு வரப்போறது இல்ல. நாங்க அதை எதிர்பார்க்கவும் இல்ல. ஆனா எங்க அப்பா, அம்மா பெயர் இல்லாம எப்படி.” வெகுவாகத் தயங்கினாள் லீலா.
“ஆமா மாமா, அப்பா அம்மா பேரு கண்டிப்பா இருக்கணும். எங்களுக்கு நடக்கும் முதல் விஷேஷம். அதில் அவங்களோட மனநிறைவு ரொம்ப முக்கியம்.” திடமாய் சொன்னாள் ஊர்மி.
“ரஞ்சினி அக்கா பெயரையும் சேர்த்துப் போடணும். அவங்க கூட வாழத்தான் கொடுத்து வைக்கல. குறைந்தபட்சம் அவங்க பெயராச்சும் கண்டிப்பா நம்ம கல்யாணப் பத்திரிக்கையில் வரணும்.” என்றாள் ருக்கு.
“என்னம்மா தேவகி நீ ஏதும் சொல்லாம இருக்க?” இளைய மருமகளிடம் கேட்டார் வடிவேல்.
“அக்காங்க சொன்னதில் எனக்கும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை மாமா. ஆனா பிரச்சனையை விட்டுட்டு இதுக்குத் தீர்வு என்னன்னு யோசனை பண்றேன்.” என்றாள்.
“மாமா பத்திரிக்கை எப்படி அடிக்கிறீங்க?” ஊர்மி கேட்க,
“பிரிண்ட்டிங் ப்ரஸ்ஸில் கொடுத்து தான் அடிக்கணும், ஏன் மா.” அப்பாவியாய் கேட்டார் மனிதர்.
“ஐயோ மக்கு மாமா” என்று மனதில் நினைத்தவளாய், “மாமா நான் என்ன கேட்கிறேன்னா, நாலு பேருக்கும் சேர்த்து ஒரே பத்திரிக்கை அடிக்கிறீங்களா. இல்ல நாலு கல்யாணத்துக்கும் சேர்த்து நாலு பத்திரிக்கை அடிக்கிறீங்களா?” தெளிவாகக் கேட்டாள்.
“ஒரே பத்திரிக்கையா தான் அடிக்கலாம் னு இருக்கேன்.” என்றார்.
“பேசாம நாலா அடிச்சிடுங்க மாமா. நான் புரிஞ்சுக்கிட்ட வரை உங்க நாலு பசங்களுக்கும், கூடப்பிறந்த மத்தவங்க கல்யாணப் பத்திரிக்கையை வாங்கிப் பார்க்கும் ஆர்வம் வராது. ஒருத்தங்களோட ப்ரண்ட்ஸ் சர்கிள் இன்னொருத்தங்களுக்குத் தெரியாது. அதனால முடிந்தவரை பயம் இல்லாமல் இருக்கலாம்.” யோசனை சொன்னாள் ஊர்மி.
“தனித்தனியா பத்திரிக்கை அடிப்பதில் அவங்களுக்கு உடன்பாடு இல்லாமல் போனால்.” தேவகி கேட்க, “உனக்கு வரப்போறவரை மட்டும் வைச்சு மத்தவங்களையும் எடைபோடுற. அவங்க நாலு பேரும் நாலு திசை தான். எனக்குப் புரிஞ்சவரை ஒரே நாளில் கல்யாணம் பண்ணிக்கிறதில் கூட அவங்களுக்குப் பெருசா பிடித்தம் இருக்காது.
மாமாகிட்ட சொல்ல முடியாம வேற வழி இல்லாம அமைதியா இருக்காங்க. அதனால் இந்த விஷயத்துக்குப் பெருசா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இதிலாவது தங்களுக்கு மட்டுமான தனி உரிமை கிடைச்சதேன்னு சந்தோஷம் தான் படுவாங்க.” மனிதர்களைச் சரியாகவே எடைபோடக் கற்று வைத்திருந்தாள் ஊர்மி.
“அப்படிப் பார்த்தா நம்ம நாலு பேருக்கும் தனித்தனி பத்திரிக்கை தானே கிடைக்கும்.” செல்லமாய் கோபித்தாள் ருக்கு.
“கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா? நம்ம நாலு பேருக்கும் ஒரே கல்யாணப் பத்திரிக்கை வேணுமா, இல்ல நம்ம கல்யாணப்பத்திரிக்கையில் அப்பா, அம்மா, அக்கா பெயர் இருக்கணுமா?” ஊர்மி திட்டவட்டமாய் கேட்க, “இல்லல்ல அப்பா, அம்மா பெயர் தான் முக்கியம்.” சரணடைந்தாள் ருக்கு.
வடிவேல் இதையெல்லாம் அத்தனை ஆசையாகப் பார்த்தார். மூத்தவள் சொல்வதை இளையவள் கேட்பது, நேரத்துக்கு தகுந்தார் போல் இளையவள் மூத்தவளுக்கு அறிவுரை சொல்வது. அதை மூத்தவளும் கேட்டுக்கொள்வது எனக் காவியமாய் தெரிந்தார்கள் அவருடைய மருமகள்கள்.
“இது நல்ல யோசனையாத் தெரியுது மாமா. தனித்தனியா பத்திரிக்கை அடிக்கும் போது தைரியமா எங்களோட அப்பா, அம்மா, அக்கா பேரை போடலாம்.” லீலாவும் ஏற்றுக்கொண்டாள்.
“இதிலும் ஒரு சிக்கல் இருக்கே மா. சொந்தக்காரங்களுக்கு பத்திரிக்கை கொடுக்கப் போகும் போது, நாலு பத்திரிக்கை வைச்சா நல்லா இருக்காது. கூடவே எந்தப் பையன் மேல் எனக்குப் பாசம் அதிகம் னு தெரிஞ்சுக்க, நாலு பத்திரிக்கையிலும் சின்னச் சின்ன டிசைன் கூட மேட்ச் பண்ணிப் பார்ப்பாங்க. அதில் உங்க அப்பா, அம்மா பெயர் துண்டாத் தெரிஞ்சிடுமே.” என்றார் வடிவேலு.
“அப்ப ஒன்னு பண்ணலாம் மாமா. உங்க பசங்களுக்குத் தனியா அடிச்சிக் கொடுத்துடுங்க, சொந்தக்காரங்களுக்கு கொடுக்கிறதுக்கு எங்க எட்டு பேரோட பேர், கல்யாணத் தேதி, கல்யாண மண்டபத்தோட பெயர், முகூர்த்த நேரம் மட்டும் போட்டுத் தனியா ஒரு பத்திரிக்கை அடிச்சிடுங்க.” தேவகி ஐடியா கொடுத்தாள்.
“ஒரு பெரிய பிரச்சனை ஓவர்.” நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் வடிவேலு.
“இந்த நாலு கல்யாணமும் நடந்து முடியுறதுக்குள்ள இன்னும் என்னென்ன இந்த வீட்டில் நடக்கப் போகுதே தெரியலையே. ஆண்டவா எல்லாத்தையும் தாங்கிக்கிற சக்தியை எனக்கு கொடு.” என்று வேண்டிக்கொண்டான் அரசு.
அவர்கள் யூகித்தது போலவே பத்திரிக்கை விஷயத்தில் ஆடவர் நால்வரும் அடுத்தவர்களுடைய பத்திரிக்கையைப் பற்றி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தங்களுடைய திருமணப் பத்திரிக்கை தான் சிறந்தது என்னும் மமதையில் சுற்றிக் கொண்டிருந்தனர்.
எதற்கும் இருக்கட்டும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னதாகத் தான் பத்திரிக்கைகளை தன் மகன்களிடம் கொடுத்திருந்தார் வடிவேல்.
சொந்த பந்தங்களுக்குக் கொடுக்க இருந்த பத்திரிக்கையில் கூட மணமக்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்ததில் யாருக்கும் எந்தக்குறையும் சொல்லத் தோன்றவில்லை.
இதில் அரசுவிற்குத் தான் வேலை அதிகம். வடிவேலுவை அதிகம் அலைய விடாமல், அவர் சார்பாக கடைசி நேரத்தில் பத்திரிக்கையைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்தவன் அவன் ஒருவனே. வடிவேலுவின் நிழல் போல அனைத்து இடங்களுக்கும் அவன் தான் செல்வான் என்பதால் தொழில் வட்டாரம், சொந்தங்கள் என அனைத்து இடத்திலும், வடிவேலுவுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை அரசுவிற்கு கிடைத்தது.
நாட்கள் சென்று விடிந்தால் திருமணம் என்னும் நிலை வந்தது. பெண்கள் நால்வருக்கும் கண்களில் துளி உறக்கம் இல்லை. ஆண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவர்களின் அறையில் மனைவியை அனுமதிப்பது மட்டுமே. ஆனால் பெண்களுக்கு அதுநாள் வரையில் இருந்த பழக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அதை நினைத்து வருத்தத்தில் இருந்தனர் பெண்கள் நால்வரும்.
லீலாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தனர் அவள் தங்கைகள். “அக்கா நாம இனிமேல் ஒன்னா படுத்துத் தூங்க முடியாதா?” ருக்கு தான் ஆரம்பித்து வைத்தாள்.
“ஏன் முடியாது நாம இதே வீட்டில் தானே இருக்கப் போறோம். இப்ப மாதிரி அப்பப்ப நாம எல்லாரும் ஒன்னா படுத்துத் தூங்கலாம்.” சமாதானம் சொன்னாள் லீலா.
“அப்பப்ப தானா?” கடைக்குட்டிக்கு ஏக்கம் வந்தது.
“நாம ஒன்னும் குழந்தைங்க இல்ல தேவகி. நாளைக்கு நமக்குக் கல்யாணம். கல்யாணம் ஆன ஒரு பொண்ணுக்கு அவ புருஷன் தான் முதல் பிரையாரிட்டியா இருக்கணும். அவருக்கு அப்புறம் தான் மத்த எல்லோரும்.” சிரமப்பட்டு இந்த வார்த்தையைச் சொன்னாள் லீலா. காலம் காலமாக இப்படிப் பழக்கப்படுத்தியிருந்த சமுதாயத்தை திட்டத்தோன்றியது அவளுக்கு.
“எனக்கு எப்பவுமே நீங்க மூணு பேரு தான் முதலில். மத்தவங்க எல்லாரும் அதுக்கு அப்புறம் தான். அது யாரா இருந்தாலும் சரி.” கலங்கத் துவங்கிவிட்ட கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னாள் ருக்கு. கண்கள் கலங்கினால் அவன் வேறு கோபித்துக்கொள்வானே எனத் தெய்வாவையும் நினைத்துக்கொண்டாள்.
“இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் உனக்கு ஒரு அழகான குழந்தை பிறக்கும். அப்ப உனக்கு அந்தக் குழந்தையை விடவும் நான் தான் முக்கியமானவளா இருப்பேனா? அது அழுதுகிட்டு இருக்கும் போது நான் கூப்பிட்டா குழந்தையை விட அக்கா தான் முக்கியம் னு குழந்தையை அழவிட்டுட்டு என்னைத் தேடி வந்திடுவியா?” என்க,
“என்ன அக்கா இப்படிப் பேசுற. குழந்தையை அழுகவிட்டுட்டு நான் எப்படி உன்னைத் தேடி வர முடியும். ஆனா குழந்தையைச் சமாதானப்படுத்தின உடனே உன்னைத் தேடி வந்திடுவேன். அந்தக் கொஞ்ச நேரம் நான் உன்னை காக்க வைச்சேன் என்பதற்காக நீ இரண்டாம் பட்சம் னு ஆகிடாது இல்லையா?” பதறிப்போய் கேட்டாள் ருக்கு.
“இதைத் தான் நான் உனக்குப் புரிய வைக்க முயற்சி பண்ணேன் ருக்கு. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நாம நமக்குன்னு செலவு பண்ணும் நேரங்கள் குறையலாம். ஆனா நமக்குள்ள இருக்கிற அன்பு குறையவே குறையாது, அதைப் புரிஞ்சிக்கோங்க மூணு பேரும். நாளை முதல் கொஞ்சம் இடைவெளி விட்டு ஆனால் இதே ஒற்றுமையோட தான் இருக்கப் போறோம்.
அக்கா நான் உங்க கூடவே தான் இருப்பேன் மரணத்தை தவிர நம்மைப் பிரிக்கக் கூடிய சக்தி யாருக்கும் இல்லை. அதை நாம யாருக்கும் கொடுக்கவும் கூடாது.” லீலா சொல்ல, தலையை ஆட்டி அதை ஆமோதித்தனர் மற்ற மூவரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பமா … ஒரு ஜோடியை சமாளிக்கிறதே கஷ்டம் … இதுல நாலு ஜோடியா ?? நாலு ஆண்களும் என்ன பண்ண காத்திருக்காங்களோ …