Loading

அத்தியாயம் 16

     “லீலா வாங்க வீட்டுக்குப் போகலாம்.” செல்வா அழைக்க, அவன் கோபத்தின் அளவு வார்த்தைகளின் அழுத்தமான உச்சரிப்பில் தெரிந்ததால் அவளும் எதுவும் பேசாமல், உடலைப் பின்தொடரும் நிழல் போல் அவன் பின்னே கிளம்பினாள்.

     காரில் ஏறியவன் கோபம் குறையும் வரை ஒருவார்த்தை கூட பேசவில்லை. அவளும் அவனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. ஒரு செல்போன் கடை அருகில் காரை நிறுத்தியவன், “இறங்குங்க லீலா.” என்றான்.

     இறங்கிய இடத்தைப் பார்த்தவள் அவன் செய்யப் போகும் செயலை உணர்ந்தவளாக, “இல்ல இப்ப இதெல்லாம் வேண்டாமே. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் வாங்கிக்கலாம்.” மென்மையாக மறுத்தாள்.

     “ஏன் இந்தக் கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு உங்களுக்குப் பயம் வந்திடுச்சா?” என்க, பதறித்தான் போனாள் அவள்.

     “ஐயோ, நான் அப்படி எல்லாம் ஒன்னும் நினைக்கலங்க. ஏற்கனவே உங்க அப்பா என்றவள் அவன் இறுகிய முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாளோ அதாவது மாமா நகை, புடவை அது இதுன்னு நிறைய வாங்கிக் கொடுத்திட்டார். அதுவே எனக்கு ஒருமாதிரி இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி உங்ககிட்ட இருந்து வாங்கிக்கிறதுக்கு கொலைக் குற்றம் பண்ண மாதிரி மனசெல்லம் உறுத்துது.” தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

     “ஏன்டா காதலிச்சோம் னு இருக்கு. திடீர்னு வந்து, என்னோட பிறந்த நாள் வருது. அன்னைக்கு எனக்கு கிப்ட்டா ஐபோன் வாங்கிக்கொடுன்னு கேட்கிறா. வாங்கிக் கொடுத்தா பணக்கஷ்டம், வாங்கிக் கொடுக்கலன்னா மனக்கஷ்டம். நான் சம்பாதிக்கிற பணத்தில் பாதியை அதை இதை சொல்லி பிடுங்கிடுறா. என்ன பிழைப்பு டா சாமி.” உடன் பணிபுரியும் ஒருவனின் புலம்பல் நினைவிற்கு வர தன்னையும் அறியாமல் சிரித்துக்கொண்டான் செல்வா.

     பொண்ணுங்க, உண்மையில் பல ரகம் தான். காதலும் தவறில்லை, திருமணமும் தவறில்லை. அது எல்லாம் நாம் தேர்ந்தெடுக்கும் நபரின் கையில் தான் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாகப் புரிந்துகொண்டான் அந்த மருத்துவன்.

     “அப்பா சொன்ன வார்த்தையை என்னால் மீற முடியாது. இப்போதைக்கு நான் வாங்கிக்கொடுக்கிற செல்போனை வாங்கிக்கோங்க. நம்ம நிச்சயத்துக்கு அப்புறம் உரிமையா யூஸ் பண்ணுங்க இப்ப திருப்தி தானே.” பிரச்சனைக்கு அவன் நொடியில் தீர்வு கண்டுபிடிக்க, அதில் ஓரளவு திருப்தியடைந்த மனதுடன் காரில் இருந்து இறங்கி அவனுடன் நடந்தாள் லீலா.

     “கார் வந்திடுச்சு போன உங்க அண்ணன், தம்பிங்க எல்லாம் வராங்க போல.” பரபரப்பாய் சொன்னாள் ருக்கு.

     “அவங்க வந்தா வரட்டும் நாம இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம்.” அலட்டல் இல்லாத பதில் வந்தது தெய்வாவிடம் இருந்து.

     “இன்னைக்கு கோட்டா அவ்வளவு தான் நான் போறேன்.” என்றுவிட்டு ஓட்டமும் நடையுமாக ஹாலிற்கு வந்தவள் நாகா மட்டும் தனியாக வருவதைக் கண்டு குழம்பினாள்.

     ஊர்மி வருவாள் என்று பத்து நிமிடமாக நின்று பார்த்தும் அவள் வராததால், மனம் எதை எதையோ படமாகப் போட்டுக்காட்டி அவளைப் பயமுறுத்த, தவிப்புடன் வடிவேலுவின் அறையை நோக்கி ஓடினாள்.

     “என்ன மருமகளே எதுக்கு இப்படி அரக்க பறக்க ஓடி வர என்னாச்சு.” சாதாரணமாகக் கேட்டார் வடிவேலு. அவருக்கு அவர் மகனைப் பற்றியும் தெரியும், மருமகளையும் தெரியும். தான் பெற்ற இரண்டாம் மைந்தன் ஏதாவது ஏடாகூடமாகப் பேசி இருப்பான். அதில் பயந்து, வேங்கையை அருகில் கண்ட  மான்குட்டி போல் மிரண்டு நேராக தன்னைத் தேடி வந்திருப்பாள் எனத் தானாகவே யோசித்து புன்னகைத்தார் அவர்.

     “மாமா ஊர்மியை காணும்.” ருக்கு கரகரப்பான குரலில் சொல்ல, இப்போது அவள் பதற்றம் அவரையும் தொற்றிக்கொண்டது.

     “என்னது காணுமா என்னமா சொல்ற?”

     “போகும் போது உங்க பையனும், அவளும் ஒன்னா தானே போனாங்க. இப்ப வரும் போது அவர் மட்டும் தான் வந்திருங்காங்க. எங்க ஊர்மியைக் காணும், எனக்குப் பயமா இருக்கு மாமா. அவரைக் கூப்பிட்டு எங்க ஊர்மி எங்கன்னு கேளுங்க.” தெய்வாவுடன் பேசியதால் உண்டான இனிமை எல்லாம் எங்கோ பறந்து போய் இருக்க, பழைய பயந்தாங்கொள்ளி ருக்கு திரும்பி இருந்தாள்.

     “இரும்மா, நீயும் பயந்து என்னையும் பதற்றப்படுத்தாதே. நான் அவனைக் கூப்பிடுறேன்.” என்று தொலைபேசியில் மகனைப் பிடித்து தன் அறைக்கு வரச் செய்தார் வடிவேலு.

     வந்தவன் உள்ளே கண்ணீரும் கம்பலையுமாய் நின்றிருந்த ருக்குவைப் பார்த்தும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “என்னாச்சு பா எதுக்காக என்னை கூப்பிட்டீங்க.” சாதாரணமாய் கேட்டான்.

     “ஊர்மி எங்க?”

     “வர வழியில் அவங்களுக்கும் எனக்கும் சின்ன சண்டை. அவங்களா தான் காரில் இருந்து இறங்கினாங்க. ஆட்டோ பிடிச்சு வந்துட்டு இருப்பாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்க வந்திடுவாங்க.” பொறுப்பில்லாமல் பதில் சொன்னான்.

     “சண்டையா, என்ன சண்டை எதுக்காக சண்டை. அவ காரை விட்டு இறங்கிப் போகுற அளவுக்கு அப்படி என்ன சொன்னீங்க.” இம்முறை நேரடியாக நாகாவிடமே கேட்டுவிட்டாள் ருக்கு. தங்கைக்கு ஒன்று என்றதும் தாய்கோழியாய் சீறிவிட்டாள்.

     “அதையெல்லாம், உங்க சிஸ்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்க வருவாங்க தானே, அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க.” அலட்சியமாய் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே செல்லப் பார்த்தான்.

     “ருக்கு நீ கொஞ்சம் வெளில இரு. நான் இவன்கிட்ட தனியா பேசணும்.” என்றார் வடிவேலு.

     “மாமா ஊர்மி” அவள் தடுமாற, “உங்க நாலு பேரில் ஊர்மி ரொம்ப தைரியமானவ. அவ கண்டிப்பா பத்திரமா வந்து சேர்ந்திடுவா. நீ தைரியமா போம்மா.” என்க, எதிர்த்துப் பேசி பழக்கம் இல்லாத ருக்கு மனமெங்கும் வலியோடும், பயத்தோடு வெளியே சென்றாள்.

     “ஊர்மியை நீ வேண்டாம் னு சொல்லும் போது கூட நான் இப்படி ஒரு கோணத்தில் யோசிச்சுப் பார்க்கல. கல்யாணத்தில் ஈடுபாடு இல்லாம இருக்கன்னு தான் நினைச்சேன்.

     ஆனா இந்தப் பொண்ணுங்க நாலு பேரும் அக்கா, தங்கச்சின்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதனால் தான் ஊர்மிகிட்ட திட்டம் போட்டு சண்டை போட்டு இருக்க சரிதானே.” மகன் மனதின் அடிநாதம் பிடித்தார் வடிவேலு.

     பெருமூச்சுவிட்டவன், “அதுதான் என் முகத்தைப் பார்த்தே இவ்வளவு சொல்றீங்களே. இதுக்கு அப்புறம் எதுக்காக பிடிவாதம். நீங்க பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்ற எந்தப் பொண்ணையும் நான் கல்யாணம் பண்ணிக்கத் தயார். ஆனா இந்தப் பொண்ணு வேண்டாம்.” உறதியாய் மறுத்தான் நாகா.

     “ஏன்”

     “அந்தப் பொண்ணு ஒரு ப்ராடு, அவ மட்டும் இல்ல நீங்க உங்க பசங்களுக்குப் பார்த்து வைச்சிருக்க மத்த மூணு பொண்ணுங்களும் ப்ராடுங்க தான். பணத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் மட்டும் தான் ஏதோதோ பண்ணி இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்காங்க.

     அவனுங்களைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவனுங்க இந்தப் பொண்ணுங்களைக் கட்டுறாங்க இல்ல எப்படியும் நாசமாப் போறாங்க. என்னால் இந்தப் பொண்ணைக் கட்டிக்க முடியாது அவ்வளவு தான்.” எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசும் மகனைக் கோபமாய் பார்த்தவர்,

     “அறைஞ்சு பல்லைப் பேத்துருவேன் ராஸ்கல். யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற. அவங்களை மாதிரி பொண்ணுங்க இந்த உலகத்தில் எந்த மூலையில் போய் தேடினாலும் கிடைக்க மாட்டாங்க. ஒவ்வொருத்தரும் குணத்தாலும், நடத்தையாலும் சொக்கத்தங்கம் டா.” மருமகள்களை தன் வீட்டின் கொலுவில் குடியிருக்கும் அம்மன்களாக பார்க்கும் மனிதருக்கு அவர்களைக் குறை சொல்வது தன் சொந்த மகன் என்றாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

     “அந்தப் பொண்ணுங்க சரியில்லப்பா. அவங்க பின்னணியில் சில ஆண்களோட பெயர் அடிபடுது. அதை மறைச்சு எல்லோருக்கும் இரக்கப்படுற உங்களோட குணத்தைப் பயன்படுத்திக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்துட்டாங்க.” தான் நினைப்பதே சரியென்று சாதித்தான் நாகா.

     “உன் அப்பனை அந்தளவு முட்டாளுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்கியா. தப்பான பொண்ணுங்களை என் பசங்களுக்கு பார்ப்பேனா டா நான்.” என்க, பதில் சொல்ல முடியவில்லை அவனால்.

     “ஊர்மி சொக்கத் தங்கம் டா. அவளோட குணத்துக்கு நீ கொஞ்சம் கம்மின்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் நான். இந்த அழகில் நீ அவளை வேண்டாம் னு சொல்ற. எனக்கு நல்லா வாயில் வருது என்னைப் பேச வைக்காத.

     உனக்கு அவங்களைப் பத்தி என்ன தெரியும், எவ்வளவு தெரியும் னு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு அவங்க நாலு பேரும் பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்தே தெரியும்.

     ஏழைங்களா இருந்தாலே பணத்துக்காக மட்டும் தான் பணக்கார வீட்டுப் பசங்களைக் கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைக்கிற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் குணமுள்ள பொண்ணு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம் தான்.”

     “நீ அவளை வேண்டாம் னு சொல்லிட்ட சந்தோஷம். பிடிக்காத உன்னைக் கட்டாயப்படுத்தி அந்தப் பொண்ணைக் கட்டி வைக்கிற அளவுக்கு நான் கேடுகெட்டவன் கிடையாது.

     அதே சமயத்தில் ஊர்மியை விட ஒரு நல்ல பொண்ணை என்னால உனக்குப் பார்க்கவும் முடியாது. அதனால உனக்கு நீயே பொண்ணு பார்த்துக்கோ. நான் பெத்த என்னோட மத்த மூணு பிள்ளைங்க நான் சொல்வதைக் கேட்டுப்பாங்க.” வடிவேல் தடம் பார்த்து அடிக்க, ப்ச்… என நெற்றியில் கை வைத்தான் நாகா.

     “பார், டிஸ்கோ, பார்டின்னு உன்னோட க்ளையண்ட்ஸ்ஸை மீட் பண்ண போவ இல்ல. அங்க நாலைஞ்சு பசங்களோட சுத்தி அவங்களோட காசை நல்லா கரைச்சிட்டு ப்ரேக்கப் பண்ணிட்டு அடுத்த இளிச்சவாயனை தேடிக்கிட்டு நிறைய பொண்ணுங்க இருப்பாங்க. அதில் யாராவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ.” கோபத்தில் தான் நினையாத வார்த்தைகளையும் பேசினார் வடிவேலு.

     “நீங்க பார்த்த பொண்ணை நல்லவன்னு காட்டுறதுக்காக மத்த எல்லாப் பொண்ணுங்களும் கெட்டவங்கன்னு சொல்றீங்களா. பார், டிஸ்கோன்னு சுத்துற பொண்ணுங்க நல்லவங்க இல்லையா?” வக்கனையாகக் கேட்டான்.

     “எல்லா இடத்திலும் நல்லது கெட்டது சேர்ந்து தான் இருக்கும். நாம எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் தான் நமக்கான சந்தோஷம் இருக்கு.”

     “சரி, அந்தப் பொண்ணு நல்லவளாவே இருக்கட்டும். நான் தான் அவளைத் தப்பா புரிஞ்சிக்கிட்டதாவும் இருக்கட்டும். ஆனா அந்தப் பொண்ணு எனக்கு வேண்டாம் பா. எனக்கும் அவளுக்கும் செட் ஆகும் னு தோணல.

     நாலு கல்யாணத்தில் ஒரு கல்யாணத்தை நிறுத்துவதால் என்ன ஆகிடப் போகுது.” திருமணமும் நிற்க வேண்டும், தந்தையின் செல்லப் பையன் என்பதற்கும் குறை வந்துவிடக்கூடாது என்று அவர் வழிக்கே சென்றான் நாகா. பதிலுக்குப் பதில் பேசும் ஊர்மியை அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

     “நீ புரிஞ்சு தான் பேசுறியா இல்லையான்னு எனக்குத் தெரியல. நீ கல்யாணம் வேண்டாம் னு சொல்றதால நிக்கப் போறது உன்னோட கல்யாணம் மட்டும் இல்ல. உன் கூடப் பிறந்த மூணு பேரோட கல்யாணமும் சேர்த்து தான்.”

     “அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நடந்தா மூணு கல்யாணம் நடக்கும். இல்லையா நாலு கல்யாணமும் நடக்காதுன்னு சொல்லிப்பாருங்க. பதறி அடிச்சுக்கிட்டு மூணு கல்யாணத்துக்குச் சம்மதிப்பாங்க.” என்றவன் தந்தையின் சுருங்கிய முகத்தைக் காணப் பிடிக்காமல்,

     “வேணும் னா மிச்சம் இருக்கிற பொண்ணுக்கு யாராவது நல்ல பையனா, நம்மளை விட பணக்காரப் பையனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைச்சிடுங்க. நானும் தப்பிப்பேன் உங்களோட குற்றவுணர்ச்சியும் குறையும்.” ஐடியா கொடுத்தவனை என்ன செய்தால் தகும் என்பது போல் பார்த்தார் வடிவேல்.

     “நீ சொல்ற மாதிரி நான் சொன்னா அந்தப் பொண்ணுங்க கல்யாணத்தை நிறுத்திட்டு அடுத்த பஸ் பிடிச்சு அவங்க ஊருக்குப் போய் சேர்ந்திடுவாங்க.” என்றவரை நெற்றி சுருக்கிப் பார்த்தான் நாகா.

     “என் மருமகளுங்க உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வரச் சம்மதிச்சது, நீ நினைக்கிற மாதிரி நம்மகிட்ட இருக்கிற காசு, பணத்துக்கு ஆசைப்பட்டு இல்ல. கடைசி வரைக்கும் அவங்க ஒரே வீட்டில் இருக்கலாமேங்கிற ஆசையில் தான்.

     அந்த ஆசை அவங்ககிட்ட மட்டும் இல்ல எனக்குள்ளும் இருக்கு. ஒத்துமையான பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் பசங்களும் ஒத்துமையா இருப்பாங்கன்னு ஆசைப்பட்டேன், நம்பினேன்.

     ஆனா என்னோட ஆசையில், என்னோட நம்பிக்கையில் நீ மண் அள்ளிப் போட்டுட்ட.” என்றவர் ஆசை மகனின் முகத்தைப் பார்க்க முடியாமல் திரும்பிக்கொண்டார்.

     “நீங்க பெத்த மத்த மூணு பேருக்காக, எனக்குப் பிடிக்காத அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்களா?” கோபத்தில் வார்த்தையை விட்டான் நாகா.

     “ஊர்மியை ஏன் உனக்குப் பிடிக்கல அதுக்குத் தெளிவான ஒரு காரணம் சொல்லு நானே இந்தக் கல்யாணத்தை நிறுத்துறேன்.” விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியில் இறங்கினார் வடிவேல்.

     “எனக்கு அவளைப் பிடிக்கல அவ்வளவு தான். காரணம் எல்லாம் சொல்ல முடியாது.” சரியான காரணம் என்று ஒன்று இருந்தால் அல்லவோ சொல்ல முடியும். அப்படி ஒன்று இல்லாததால் கோபத்தைக் காட்டினான்.

     “எந்தக் காரணமும் சொல்ல முடியல இல்லையா? அப்ப நான் சொல்றதை நீயும் நல்லாக் கேட்டுக்கோ. உனக்கும், ஊர்மிளாவுக்கும் கல்யாணம் நடந்தே ஆகனும். இதுக்கு மேலும் முடியாதுன்னு சொன்ன, நான் சாகுற வரைக்கும் உன்கிட்ட பேசவே மாட்டேன். என்னோட பிடிவாதத்தைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும் அப்புறம் உன் இஷ்டம்.” என்றவண்ணம் மெத்தையில் படுத்துக்கொண்டார்.

     பதறித்தான் போனான் நாகா. “ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்கப்பா. உங்ககிட்ட பேசாம என்னால ஒருநாள் கூட இருக்க முடியாது. அது உங்களுக்கும் நல்லாத் தெரியும். யாரோ ஒரு பொண்ணுக்காக என்கிட்ட பேசமாட்டேன்னு சொல்றீங்க. முதலில் என்கிட்ட பேசாம உங்களால இருக்க முடியுமா?” ஆவேசமாகக் கேட்டான் நாகா.

     “உன்னோட நல்லதுக்காக நான் சாகுற வரைக்கும் உன்கூட பேசாம என்னால் இருக்க முடியும்.” என்றவர், செல்ல மகனின் அழகு முகம் சுருங்குவது கண்டு,

     ”டேய் கண்ணா உன்னோட குணம் கொஞ்சம் கம்மி தான். ஆனா என் நாலு பசங்களில் அப்பா மேல நீ தானே அதிக அன்பு வைச்சிருக்க. எனக்கும் நீன்னா தனிப்பட்ட அன்பு தான். நான் சொன்னா நீ என்ன வேண்ணாலும் செய்வ என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கேன். அந்த நம்பிக்கையைக் காப்பாத்து டா.

     வழக்கம் போல் உன் அப்பா மேல நம்பிக்கை வை. அப்பா உனக்குத் தப்பா எதையும் செய்ய மாட்டேன். ஊர்மி உனக்கு ஒரு நல்ல மனைவியா இருப்பா.” கண்டிப்புடன் சொன்னதையே இப்போது அக்கறையாகச் சொல்ல, அகங்காரம் என்னும் வானில் இருந்து இறங்கி வந்தான் நாகராஜ்.

     “சரிப்பா உங்களுக்காக நான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன். ஆனா அந்தப் பொண்ணுகிட்ட நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். அவங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்கன்னு எனக்குத் தோணல.” என்றான்.

     “உனக்காக நான் அவகிட்ட மன்னிப்புக் கேட்கிறேன். அந்தப் பொண்ணு எடுத்துச்சொன்னாப் புரிஞ்சுக்கக் கூடியவ தான். கூடவே அவளோட அக்கா தங்கச்சிங்களுக்காக என்ன வேண்ணாலும் செய்வா.” பெருமையாகச் சொன்னவர் மகன் பக்கம் திரும்பி,

     “ஆனா ஒன்னு டா நாகா, இதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணு கிட்ட இப்படி நடந்துக்காத. பொண்ணுங்க அட்சயப்பாத்திரம் மாதிரி. நாம அவங்ககிட்ட என்ன கொடுக்கிறோமே அதை அப்படியே பலமடங்கா நமக்குத் திருப்பித் தருவாங்க. நீ ஊர்மிக்கு மரியாதையும் அன்பும் கொடுத்துப் பார் அவ உன்னைக் கோபுரத்தில் வைச்சுத் தாங்குவா.

     இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல. நீ புத்திசாலி புரிஞ்சி நடந்துக்கோ.” என்க,  சொன்னது அனைத்தும் புரிந்தது என்பது போல் தலையைத் தலையை ஆட்டினான் நாகா. வடிவேலு அறையில் இருந்து நாகா வெளியே வரும் அதே நேரத்தில், ஆட்டோவில் வந்து இறங்கினாள் ஊர்மி.

     “ஊர்மி வந்துட்டியா நான் ரொம்ப பயந்துட்டேன். உனக்கும் அவருக்கும் சண்டைன்னு சொன்னாரு. ஏன்டி என்னதான் சண்டையா இருந்தாலும் எதுக்காக அவர் காரை விட்டு இறங்கின.

     புது ஊர், தெரியாத இடம். எங்கேயாவது தொலைஞ்சு போய் இருந்தா என்ன செய்வ. வர வர உனக்குப் பொறுப்பே இல்லாம போச்சு.” அழுகை பாதியும், கோபம் மீதியுமாய் தங்கையைக் கண்டித்தாள் ருக்கு.

     “அக்கா ஏன் இப்ப அழுகிற. நான் தான் நல்லபடியா வந்து சேர்ந்திட்டேன் இல்ல விடுக்கா.” நாகா மீது இருந்த கோபத்தில் ஆரம்பித்தவள் தமக்கையின் கலங்கிய வதனம் பார்த்து நிதானமடைந்து மென்மையாகப் பேச்சை முடித்தாள்.

     “உனக்கும் அவருக்கும் பெரிய சண்டையா கல்யாணம் வேண்டாம் னு முடிவு பண்ணிட்டீங்களா?” பதறியபடியே கேட்டாள் ருக்கு. தெய்வா ஒருபக்கம் வந்து நின்றான் என்றால் சிவனும் பார்வதியுமாக தான் கற்பனை செய்து வைத்திருக்கும் செல்வா, லீலா ஜோடியும் சேராமல் போய்விடுமோ என பயந்தாள்.

     “வாயைக் கழுவுக்கா, சண்டை எல்லாருக்கும் வரத்தான் செய்யும். ஏன் நீயும் நானும் சண்டை போட்டதில்லையா. அதுக்காக நாம அக்கா, தங்கச்சி இல்லைன்னு ஆகிடுமா என்ன. அதே மாதிரி தான் நாங்களும். நம்ம நாலு பேருக்கும் இதுதான் புகுந்த வீடு. நீ கவலைப்படாத, அப்புறம் முக்கியமான விஷயம், லீலா அக்காகிட்ட இதைத் தேவையில்லாம சொல்லிக்கிட்டு இருக்காத என்ன.” சிறியவள் பெரியவளாகி, பெரியவளை அதட்ட அதை அவளும் நல்லபிள்ளையாகக் கேட்டுக்கொண்டாள்.

     ருக்கு உள்ளே செல்ல ஊர்மி, நாகா இருவரும் ஒருவரை ஒருவர் லேசான முறைப்புடன் பார்த்துக் கொண்டனர்.

     “இவளை எல்லாம் கட்டி காலத்துக்கும் இப்படி முறைச்சுக்கிட்டே திரிய முடியாது. நான் மட்டும் வேண்டாம் னு சொன்னதால் தானே அப்பா என்னை எமோஷனால ப்ளாக்மைல் பண்ணாரு. அண்ணன், தம்பி நாங்க நாலு பேரும் ஒன்னா சேர்ந்து கல்யாணம் வேண்டாம் னு சொன்னா அவரால் என்ன செஞ்சிட முடியும்.

     இதில் காமெடி என்னென்னா, இதுக்குப் பெருசா நான் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்க நாலு பேர், என்னோட அப்பான்னு ஐந்து பேருமா மறைச்சு வைச்சிருக்கிற ஒரே ஒரு உண்மை, அதைப் போட்டு உடைச்சிட்டா போதும்.

     என் கூடப் பிறந்த துரைங்க வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு கல்யாணத்தை நிறுத்திடுவாங்க. ஏன்னா எங்களுக்குள்ள இருக்கிற ஒற்றுமை அந்த மாதிரி.” ஊர்மியை பார்த்தவாறு தனக்குள் நினைத்துக் கொண்டான் நாகா.

     “நீ பேசின பேச்சுக்கு உனக்கு நல்லா இருக்கு என்கிட்ட. ஊர்மி என்னை மன்னிச்சிடுன்னு உன்னைக் கேட்க வைக்கல, வைக்கிறேன்.” தனக்குள் நினைத்தவாறே அவனைக் கடந்து சென்றாள் அவள். இருவரில் யார் நினைப்பது நடக்கும் என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆஹா நாகா ஊர்மி தான் டாம் அண்ட் ஜெர்ரி கப்புள் போல … நமக்கு ஜாலி தான் … வடிவேலு பேசியே சமாளிச்சிடுறார் …