Loading

அத்தியாயம் 15

     “இப்ப என்ன சொன்னீங்க.” தான் சரியாகத் தான் கேட்டோமா என உறுதிப்படுத்திக் கொள்வதற்காகக் கேட்டாள் ஊர்மிளா.

     “நீ மட்டும் தான் செவிடா? இல்லை உன் கூடவே பிறந்த மத்த மூணு பேருமே செவிடு தானா?” ஏக மரியாதையில் அவன் பேசப்பேச கோபம் அதிகரித்தது ஊர்மிளாவிற்கு.

     “மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர்.” உறுமினாள்.

     “இங்க பாருடா கோவத்தை. ஹலோ கோவப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறது நாங்க. உங்களுக்கு கோவப்பட எந்த உரிமையும் இல்லை.” காட்டமாகச் சொன்னவன், ‘செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு உத்தமியாட்டாம் வேஷம் போட வேண்டியது.’ எனச் சத்தமாகவே முணுமுணுத்தான்.

     “வண்டியை வீட்டுக்குத் திருப்புங்க.” துணைப்பறவையோடு ஆகாயம் சுற்றினால் அடிதடி நிச்சயம் என்று புரிந்து கூடு சேர நினைத்தாள் அவள்.

     “ஏற்கனவே வீட்டுக்குப் போற திசையில் தான் போயிட்டு இருக்கோம். உன்னை பீச், மால் னு கூட்டிட்டுப் போய் தண்டமா செலவு பண்றதுக்கு எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற உனக்கு, எனக்கும் உனக்குமான வித்தியாசத்தைக் காட்டத்தான் உன்னை வெளியே கூட்டிட்டு வரச் சம்மதிச்சேன்.” கடுமையாகச் சாடினான்.

     ஊர்மியை முதல்முறையாகப் பார்த்த நேரமே இவளை எங்கேயோ பார்த்து இருக்கிறேமோ என யோசித்திருந்தான் நாகா. வடிவேலுவின் மூலமாக, இவள் தான் அவனுக்காக அவர் தேர்ந்தெடுத்த பெண் என்பதை தெரிந்துகொண்ட பிறகு, அவனுக்கு அவள் யார் அவளை எங்கு பார்த்தோம் என அனைத்தும் நினைவு வந்துவிட்டது. கூடவே தந்தையின் திட்டமும் புரிந்தது.

     திருமண ஏற்பாடு வேண்டாம் என்று அவன் நேரடியாகவே சொல்லியும் வடிவேலு கேட்கவில்லை. அப்படி என்ன தன் தந்தைக்கு தன்னை விட இவள் உயர்ந்தவளாகிப் போனாள் என்கிற கடுப்பு அவனை இப்படியெல்லாம் பேச வைத்தது.

     நாகா பேசப் பேச உள்ளுக்குள் சுனாமி அலையாய் பொங்கி வரும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஊர்மிளா. இறங்கி செல்வதற்கு சில நொடிகள் போதும். அதன்பிறகு மாமாவுக்கும் தன் சகோதரிகளுக்கும் என்ன பதில் சொல்வது என்பதால் மிகப் பொறுமையாக இருந்தாள். அவள் தன் வாழ்வில் இந்தளவு கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்ததே இல்லை என்று சொல்லலாம்.

     கார் சிக்னலில் நிற்க, பூ விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுபெண் நாகராஜ் பக்கம் வந்து, “கொஞ்சம் பூ வாங்கிக்கோங்கண்ணா காலையில் இருந்து யாருமே பூ வாங்கல.” என்றாள் பாவமாய். அது அவளின் வழக்கமான வியாபார யுக்தி தான் என்றாலும் அன்று நிஜமாகவே எதுவும் வியாபாரம் ஆகவில்லை.

     “ஏன்மா பூ வைக்கிறதுக்கு நான் என்ன பொண்ணா, எனக்கு வேண்டாம் வேற யார்கிட்டையாவது கொடு.” அவளின் முகத்தைப் பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு வண்ண விளக்குகளில் கவனத்தை வைத்தான் நாகா.

     மாலில் ஐநூறு ரூபாயை சும்மா தூக்கிக் கொடுத்தவனுக்கு இந்தப் பெண்ணிற்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையே எனக் கடுப்பான ஊர்மி தன் கையில் இருந்த பர்ஸைப் பார்த்தாள்.

     கொண்டு வந்த பணம் முக்கால்வாசி லீலாவிடம் தான் இருக்கிறது என்றாலும், தங்கைகளுக்கு திடீரென பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது என்று அவர்களிடம் எப்போதும் இருக்கும் படி ஆளுக்கு கொஞ்சம் கொடுத்து வைத்திருப்பாள். ருக்கு தன்னுடையதையும் இவளிடம் கொடுத்து வைத்திருக்க, அறுநூறு ரூபாயும் கொஞ்சமும் இருந்தது. பூ விற்கும் பெண்ணை அழைத்து, ஐம்பது ரூபாய்க்கு பூ வாங்கி தலையில் வைக்காமல் மடியில் வைத்துக்கொண்டாள்.

     சிக்னல் விழுந்து கார் கிளம்பவும், அவளையும் அவள் மடியில் இருக்கும் பூவையும் நொடி நேரம் பார்த்தவன், “தலையில் வைக்க இஷ்டம் இல்லன்னா வாங்காமலே இருந்திருக்கலாமே. ஒருவேளை என் வீட்டில் உள்ளவங்க காதில் சுத்துறதுக்காக வாங்கினியா?

     ஆனா அதுக்கு கொஞ்சம் போதுமே எதுக்கு இவ்வளவு. ஒருவேளை வெளியே கூட்டிப்போன நான், உன்னை ரொம்பப் பிடிச்சுப் போய் இவ்வளவு பூ வாங்கிக் கொடுத்தேன்னு என் அப்பாகிட்டவும் உன் அக்கா, தங்கச்சிங்ககிட்டவும் ஷோ காட்ட நினைக்கிறியா?” தன் கற்பனைக்கு எல்லாம் உயிர் கொடுத்துக் கொடுத்துக் கண்டபடிக் கேட்டான்.

     “இங்க பாருங்க உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை.” என்றாள்.

     அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. தன்போக்கில் கண்டதையும் பேசிக்கொண்டே வந்தான். அவன் தன்னைக் கோவப்படுத்த மட்டுமே வாயைத் திறக்கிறான் என்பது புரிய, பதில் சொல்லத் துடிக்கும் தன் நாவைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாய் இருந்தாள் ஊர்மி.

     அதை உணர்ந்தது போல் நாகாவே தொடர்ந்தான். “நான் உங்களோட இன்டர்வியூ பார்த்தேன். அப்பா இல்லாம வளர்ந்த பொண்ணுங்களாமே, அதுவும் நாலு பொண்ணுங்க. நினைக்கும் போதே ரொம்பப் பிரம்மிப்பா இருந்துச்சு.

     எங்க வீட்டில எங்க நாலு பேரையும் ஒன்னா வளர்க்கிறதுக்கு அவ்வளவு கஷ்டமா இருந்துச்சுன்னு அப்பா அடிக்கடி சொல்லிக் கேட்டு இருக்கேன். ஆண் துணை இல்லாம உங்க அம்மா ஒத்த மனுஷியா எப்படியெல்லாம் போராடி இருப்பாங்க. சம்பாதிக்கணும், அதே நேரத்துல உங்களையும் கவனிச்சிக்கணும்.

     அவங்க எவ்வளவு தான் சம்பாதிச்சாலும் அது உங்க நாலு பேருக்கும் மூணு வேளை சாப்பாட்டுக்கு தான் சரியா இருந்திருக்கும், சரி தானே.

     இப்ப கூட நாலு பேரில் உங்க மூத்த அக்கா மட்டும் தான் சம்பாதிக்கிறாங்களாம். மத்தவங்களுக்கு வேலைக்குப் போக விருப்பம் இல்லையா? இல்லை வீட்டில் இருந்துக்கிட்டு நோகாம நோம்பு கும்பிட வழி யோசிச்சுக்கிட்டு இருந்தீங்களா?” என்க, ஊர்மி பல்லைக் கடித்து வெளியே வேடிக்கை பார்க்கிறேன் என்கிற பெயரில் கைகளை இறுக்கி கோபத்தைக் கட்டுப்படுத்தினாள்.

     “பொண்ணுங்களுக்குன்னு நிறைய செலவு இருக்குமே. அதையெல்லாம் எப்படி சமாளிக்கிறீங்க. ஒருத்தரோட சம்பாத்தியத்தில் நீங்க நாலு பேர் கொஞ்சம் கஷ்டம் தான் இல்ல. ஒவ்வொரு ரூபாவையும் பார்த்து பார்த்து செலவு பண்ணனும்.

     எல்லாத்துக்கும் மேல இப்ப இருக்கிற இந்த சொசைட்டியில் நாலு வயசுப் பொண்ணுங்க எப்படித்தான் தனியா சர்வே பண்றீங்களோ. ஒருவேளை இது எல்லாத்தையும் கணக்கு பண்ணி தான் யாரும் இல்லாத அநாதைங்கன்னு சொல்லி எங்க அப்பாவை ஏமாத்தி எங்க வீட்டில் வந்து செட்டில் ஆகிட்டீங்களோ நாலு பேரும். வசதிக்கு வசதியும் ஆச்சு, பாதுகாப்புக்குப் பாதுகாப்புக்கும் ஆச்சு.” நாகா தன் வார்த்தைகளை முடிக்கும் முன்னர், “காரை நிறுத்துங்க” கத்தி இருந்தாள் ஊர்மிளா.

     “ஒருவழியா கோவம் வந்திடுச்சு போல. இதே கோவத்தோட என் கூடப்பிறந்த விளக்கெண்ணைங்க கிட்ட வந்து நாங்க நாலு பேரும் சிஸ்டர்ஸ் அந்த உண்மையை மறச்சிட்டோம் னு சொல்லி சரண்டர் ஆகிடுங்க.” கட்டளை போல சொன்னான்.

     “இப்ப காரை நிறுத்துறீங்களா? இல்ல இப்படியே காரை விட்டு குதிக்கட்டுமா?” பிடிவாதம் காட்டினாள் ஊர்மிளா.

     “ஆர் யூ மேட், உனக்கு என்ன பைத்தியமா?” பதற்றத்தில் ஒரே கேள்வியை இரண்டு மொழிகளில் கேட்டான்.

     “பைத்தியம் எனக்கு இல்ல உனக்கு தான், பணப் பைத்தியம் கர்வப் பைத்தியம். அடுத்தவங்க மேல பழி சொல்றதுக்கு முன்னாடி ஒன்னு அவங்க நிலைமையில் இருந்து யோசிச்சுப் பார்க்கணும்.

     அந்த அளவுக்கு உனக்கு அறிவு இல்லன்னா சம்பந்தப்பட்ட நபர்கிட்ட என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கணும். பத்து வயசுப் பையன் கூட, ப்ரண்டு கூட சண்டைன்னு வந்தா அவன் பக்கம் இருக்கிற நியாயத்தைப் பேச விடுவான்.

     ஆனா நீ, நீயா ஒரு விஷயத்தை உண்மைன்னு நினைச்சிக்கிட்டு அது உண்மையிலே உண்மை தானா இல்லை பொய்யான்னு தீர விசாரிக்காம தீர்ப்பு சொல்ல கிளம்பிடுவ இல்ல.

     நீயெல்லாம் ஒரு லாயர் உனக்கு இரண்டு பட்டம் வேற அடச்சே காரை நிறுத்து.” ஏக வசனத்தில் ஊசிப்பட்டாசாய் வெடித்தவளின் பேச்சில் அதிர்ந்தவன் காரை நிறுத்த, ஒரு கணம் கூட யோசிக்காமல் கீழே இறங்கிவிட்டாள் ஊர்மி.

     கோவிலில், “நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.” என்று மெதுவாக ஆரம்பித்தாள் லீலா.

     “சொல்லுங்க” என்றான் செல்வா.

     “இல்ல அதுவந்து நான் இந்த விஷயத்தை” அவள் சொல்ல முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில், “ஹே செல்வா, வாட் எ சர்ப்பரைஸ். உன்னை நான் இங்க எதிர்பார்க்கவே இல்ல.” என்றபடி வந்தான் ஒருவன்.

     அவனைப் பார்த்ததும் செல்வாவின் முகம் சுருங்கிப் போனது. “நீ நம்பர் மாத்திட்டியா என்ன. உன்னை காண்டேக்ட் பண்ணவே முடியல. காலேஜ் ப்ரண்ட்ஸ் எல்லார்கிட்டையும் விசாரிச்சு பார்த்துட்டேன். நீ யார்கூடவும் டச்சில் இல்லையாமே.

     ஆமா லேகா எப்படி இருக்கா. இப்பவும் நீயும் அவளும் நகமும், சதையும் மாதிரி தான் சுத்திக்கிட்டு இருக்கீங்களா? கல்யாணம் ஆகிடுச்சா, நீங்க இருந்த வேகத்துக்கு கண்டிப்பா  இரட்டைக் குழந்தை தான் பிறந்திருக்கும் சரிதானே எங்க அவ.” பேசிக்கொண்டே போனவன் அதன்பிறகு தான் செல்வாவின் பின்னால் நிற்கும் லீலாவையும், எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலை போல் நின்றுகொண்டிருந்த செல்வாவையும் உற்றுக் கவனித்தான்.

     “இப்பவாச்சும் ஏதாவது பேசுங்க ருக்கு” தெய்வா சொல்ல,

     “என் முழுபேர் ருக்மணி”

     “அழகான பெயர் அப்புறம்”

     “நான் ரொம்ப அமைதியானவ, ரொம்ப பயந்தவளும் கூட”

     “அதுதான் எனக்கு ரொம்ப நல்லாத் தெரியுமே மேல சொல்லுங்க.”

     “எனக்கு நீலக் கலர் பிடிக்கும், வானவில் பிடிக்கும், அந்தக் காலத்து தானியங்களில் இந்தக்காலத்துக்கு ஏத்தமாதிரி சமைக்கிறது ரொம்பப் பிடிக்கும். பனிக்காலத்தில் பனியை இரசிச்சிக்கிட்டு ரொம்ப தூரம் நடக்கிறது பிடிக்கும்.

     அப்புறம் நிறைய சீரியல் பார்ப்பேன். ஹிந்தி சீரியல் ரொம்பப் பிடிக்கும்.” அவள் சொல்வதைக் கேட்டு சிரித்த தெய்வா, “ஏன் இந்தச் சன் டீவி, விஜய் டீவி, ஜீதமிழ் இதெல்லாம் பிடிக்காதா?” கேலியாய் கேட்டான்.

     “சுத்தமாப் பிடிக்காது ஒரே கதையை வேற வேற பேரில் வேற வேற ஆட்களை வைச்சு எடுத்திக்கிட்டு இருப்பாங்க.” பட்டென்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள்.

     அப்புறம் என அவன் ஊக்குவிக்க, “எனக்குப் போலீஸ்னா பிடிக்காது.” என்க, இப்போது தெய்வாவின் கண்கள் கூர்மையானது.

     அதில் பயந்தவள், “ஆனா உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு.” என அவசரமாகச் சொன்னாள். தான் கோபித்துக்கொள்ளக் கூடாது என்கிற அவளுடைய பதற்றம் தெய்வாவுக்கு அதிகம் பிடித்தது.

     “எல்லாத்தையும் சொன்னீங்க சரி, இத்தனை வருடம் பழகிய நபர்களில் உங்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும் னு சொல்லவே இல்லையே.” அவள் தன்னைப் பற்றிச்சொல்ல மாட்டாள் என்று நன்றாகத் தெரிந்திருந்தாலும் எதிர்பார்க்கும் மனதை அடக்க முடியாமல் கேட்டுவிட்டான் தெய்வா.

     “அதுவந்து எனக்கு லீலாக்கா, ஊர்மி” என்று ஆரம்பித்தவள் நாக்கைக் கடித்துக்கொண்டு, “உங்களைப் பத்தி ஏதாவது சொல்லுங்களேன்.” என்று அவன் கவனத்தை திசை திருப்பினாள்.

     “வாவ் நீங்க என்னைப் பத்தி தெரிஞ்சிக்க ஆசைப்படுறீங்களா? இது என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்பச் சந்தோஷமான விஷயமாச்சே. நான் என்னைப் பத்தி உங்களுக்கு என்ன சொல்லுவேன்.

     சின்ன வயசில் நான் பண்ணாத சேட்டையே கிடையாது. எங்களோட பக்கத்து வீட்டில் ஒரு மாமரம் உண்டு. யாருக்கும் தெரியாம நான் அதில் நிறைய மாங்காய் பறிச்சு திண்ணு இருக்கேன். காய் எப்படி திருடு போகுதுன்னு தெரியாம அந்த வீட்டுக்காரங்க குழம்புவாங்க, அதைப் பார்த்து நான் நல்லா ரசிப்பேன். என்னவோ அதில் ஒரு குஷி.

     என் அண்ணன் அந்தச் செல்வா மண்டையில் வேண்டும் என்றே கல்லை எறிஞ்சிட்டு ஒன்னும் தெரியாத அப்பாவிப் புள்ளை மாதிரி அப்பாகிட்ட பொய் சத்தியம் பண்ணி இருக்கேன்.

     என் தம்பிங்க என்கிற பேரில் பிறந்த குட்டிச்சாத்தான் இரண்டையும் சும்மா சும்மா அடிச்சி அழவைப்பேன். கிச்சனில் இருந்து பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் திருடி தின்பேன். எக்ஸாமில் புல்லா பெயில் ஆகி, எக்ஸ்ட்ராவா மார்க் நானே போட்டுக்கிட்டு வந்து அப்பாகிட்ட சொந்தமா படிச்சு வாங்கின மார்க் மாதிரி சீன் போடுவேன். அந்த உண்மை தெரிஞ்சி அவர் வீட்டை சுத்தி ஓட விட்டு என்னை அடிக்கும் போது பயங்கரமா அழுவேன்.

     ஒன்னு சொன்னா சிரிக்க மாட்டீங்களே. சின்ன வயசில் நான் இரண்டு நாளைக்கு ஒருதடவை தான் குளிப்பேன். இப்படி நிறைய இருக்கு.” அவன் சொல்ல இவள் தன்னையும் மீறி, தன் தயக்கங்கள், பயங்கள் மீறி கலகலத்து சிரித்துவிட்டாள் ருக்கு.

     “நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க.” என்க, இதுவரை இப்படி எந்த ஆடவனாவது சொன்னால் பயம் கொள்ளும் ருக்கு முதன்முறையாக வெட்கப்பட்டாள். அது அவள் தெய்வாவை தன்னவனாக நினைக்கத் துவங்கிவிட்டாள் என்பதன் அடையாளம்.

     “வெட்கப்பட்டா இன்னும் இன்னும் அழகா இருக்கீங்க. இத்தனை வெட்கமும் எனக்கே எனக்குன்னு நினைக்கும் போது அத்தனை பெருமையா இருக்கு.” இரசனையாய் சொன்னான் தெய்வா.

      “உங்களுக்கு சமையலில் என்னென்ன பிடிக்கும் னு சொல்லுங்க.” அவனுடைய எல்லை தாண்டா மூன்றாம் பாலை திசைதிருப்பினாள்.

     “எனக்குச் சாப்பாடுன்னு சொன்னாலே பிடிக்கும். சரியான சாப்பாட்டு ராமன் நான். என்ன தான் வெளியே பீட்சா, பிரியாணி அது இதுன்னு சாப்பிட்டாலும், வீட்டில் வைக்கிற வத்த குழம்போட சுவை அதில் வராது.” சொல்லும் போதே சாப்பிட்டவன் போல் சப்புக்கொட்டினான்.

     இன்னும் இன்னும் ஏதோதோ அவர்கள் பேசிக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. ருக்கு அவனுடன் மிகவும் இயல்பாக உரையாட ஆரம்பித்திருந்தாள்.

     “அப்புறம் தேவகி சொல்லுங்க உங்களுக்கு என்னை, என்கூட நடக்கப் போற இந்தக் கல்யாணத்தைப் பிடிச்சிருக்கா?” முதல் பந்தே சிக்ஸர் தான் அடித்தான் தர்மா.

     “என்ன கேள்வி இது, பிடிக்காமலா கல்யாணத்துக்கு முன்னாடி உங்க வீட்டில் வந்து தங்கி இருக்கேன். இல்ல உங்களைப் பிடிக்காமத் தான் நீங்க கூப்பிட்டதும் உங்களோட வெளியே தான் வந்திருக்கேனா?” கோபம் போல் கேட்டாள். தர்மாவின் இயல்பு, அவனோடு பழகுபவர்களையும் அவர்களின் இயல்போடு தன்னிடம் பழக வைப்பது தான். தேவகி விஷயத்திலும் அதைச் சிறப்பாகச் செய்திருந்தான்.

     “இந்த மறைமுக பதில் எல்லாம் வேண்டாம். நான் ஒரு வாத்தி, மறைமுகமா பக்கம் பக்கமா பதில் சொல்வதை விட, நேரடியா இரண்டு வரியில் சொல்லும் பதிலுக்குத் தான் நான் அதிக மதிப்பெண் கொடுப்பேன்.

     அது மட்டும் இல்லை, உங்களை எனக்குப் பிடிச்சிருக்குன்னு ஒரு பொண்ணு வாயால் கேட்கிறது இருக்கே. உண்மையில் அது ஒருமாதிரி தனி ப்லீங் தெரியுமா?” சிலாகித்துச் சொன்னான்.

     “ரொம்ப அனுபவமோ” குறும்பாய் கேட்டாள் கடைக்குட்டி.

     “ஹலோ எங்க அப்பா என்னை ரொம்பவே ஒழுக்கமா வளர்த்து இருக்காருங்க, என் வாழ்க்கையில் வந்த ஒரே பொண்ணு”

     “நானா?”

     “நீங்க வரப்போறவங்க”

     “அப்ப ஏற்கனவே வந்தவங்க யாரு? ஒருவேளை உங்க அம்மாவா?”

     “நிறைய தமிழ் படம் பார்ப்பீங்களா? எங்கம்மா நான் பிறந்த உடனே இறந்து போயிட்டாங்க. சோ என் வாழ்க்கையில் முக்கியமான பொண்ணு யாருன்னா” ஆர்வத்தைக் கிளப்பினான் தர்மா.

     “யாரு” நிஜமாகவே ஆர்வம் வந்து தொலைத்தது தேவகிக்கு.

     “எங்க பாட்டி” சொல்லிவிட்டு தர்மா சிரிக்க, இவளும் சற்று சத்தமாகவே சிரிக்க ஆரம்பித்தாள்.

     ஒரு கட்டத்தில் தான் சிரிப்பை நிறுத்தியவன், இன்னும் சிரித்துக் கொண்டிருந்த அவளை இரசனையாய் பார்த்துக்கொண்டே அவள் கையைப் பற்றியவன், “நான் முதலில் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே” ஏக்கமாகக் கேட்டான்.

     “எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு, உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு முழு சம்மதம். ஆனா” என்று இழுத்தாள்.

     “ஆனா, என்னங்க சொல்லுங்க எதுவா இருந்தாலும் இப்பவே பேசிடலாம்.” பரபரப்பாகக் கேட்டான் தர்மா.

     “உங்களுக்கு நான் தகுதியானவ தானா. உங்க அளவுக்கு படிப்போ, பணமோ என்கிட்ட இல்ல. அதனால் தான் இந்தக் கல்யாணத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு.” மனதில் இருந்ததை வெளிப்படையாகவே சொன்னாள் தேவகி.

     “இது மட்டும் நம்ம வீடா இருந்துச்சு. உங்களைக் கட்டிப்பிடிச்சு இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் கொடுத்து எனக்கு உங்களை எவ்வளவு பிடிச்சிருக்குன்னு சொல்றது என்ன செஞ்சே காட்டி இருப்பேன்.” என்றவனின் வார்த்தையில் அதிர்ந்து போய் கன்னங்களில் கையை வைத்து மறைத்துக்கொண்டாள் தேவகி. அவள் அதிர்ந்த தோற்றம் பார்த்து கொல்லென்று சிரித்து வைத்தான் தர்மா.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கதை இப்போதான் சூடு பிடிக்குது … இருந்தாலும் இந்த நாகா பொல்லாதவன் … எங்க இந்த வடிவேலு சாரு … என் பையனுங்க தங்கம் வைரம்னு சொல்லிட்டு … நாகா தகரம் கூட இல்ல … சரியான லொட லொட … லீலாவுக்கு பிரச்சனை ஸ்டார்ட்டிங் … ரெண்டு ஜோடி தட்டு தடுமாறி ரொமான்ஸ் ஆரம்பிச்சிருக்கு … ஒண்ணு ஸ்டார்ட் பண்ணல … ஒண்ணு பிச்சுகிட்டு போயிடும் போல …