Loading

அத்தியாயம் 13

     “உங்க மூணு பேர் கூட இருக்கிறதுக்காக நான் என்ன வேண்ணாலும் பண்ணுவேன். இவரைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனா என்ன.” மனதில் என்ன இருந்ததோ அதை அப்படியே சொன்னாள் ஊர்மி. அவள் சாதாரணமாக சம்மதம் சொல்லி இருந்தால் லீலாவுக்கு மனது நிம்மதியாகி இருக்குமோ என்னவோ.

     சுரத்தை இல்லாமல் சொன்ன தங்கையை உற்று நோக்கி, “என்ன பேச்சு ஊர்மி இது. கல்யாணம் ஒன்னும் விளையாட்டு விஷயம் இல்லை. எனக்கு உங்க மூணு பேரைப் பத்தியும் நல்லாத் தெரியும். இவங்க இரண்டு பேரும் நாணல் மாதிரி சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வளைஞ்சு கொடுத்துப் பழகிக்குவாங்க. கல்யாணம் என்கிற பந்தத்துக்கு அது ரொம்பவே முக்கியமானது.

     ஆனா நீ அப்படி இல்லை. உனக்கு என்ன தோணுதோ அதைத் தான் பண்ணுவ, பேசுவ. அதுக்காக உன்னைக் குற்றம் சொல்லவும் முடியாது. ஏன்னா இதுதான் உன்னோட குணம்.

     உனக்கு ஒருத்தரைப் பிடிச்சிருந்தா அவங்களுக்காக மட்டும் தான் நீ வளைஞ்சு கொடுத்துப் போவ. அந்த வகையில் உனக்கு உன்னோட புருஷனா வரப்போறவரை பிடிச்சிருப்பது ரொம்ப முக்கியம்.

     உன் முழு மனசோட அவரை உனக்குப் புருஷனா, உன் வாழ்க்கையோட சரிபாதியா ஏத்துக்க முடிஞ்சா மட்டும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லு, இல்லைன்னா வேண்டாம். உன்னைக் கஷ்டப்படுத்தி எங்களுக்கு சந்தோஷம் கிடைச்சா அதுக்குப் பேரு சந்தோஷமே இல்லை.” லீலாவின் சொற்களில் பதறிப்போனாள் ஊர்மிளா.

     “என்னக்கா இப்படியெல்லாம் பேசுற.” பதறிப்போனாள் ஊர்மி.

     “காரணம் இருக்கு ஊர்மி. கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் னு சொல்லுவாங்க. அதுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

     நாம வாழுற வாழ்க்கையை எடுத்துக்காட்டா நமக்குப் பின்னாடி வர பத்து தலைமுறை நினைக்கணும். அந்தளவுக்கு நாம வாழனும். நம்மளையும், நம்மைச் சுத்தி இருக்கிறவங்களையும் சந்தோஷமாப் பார்த்துக்கணும்.“ என்ற தமக்கையின் வார்த்தைகளில் இலக்கற்று சூரியனை வெறித்தாள் ஊர்மிளா.

     அவள் மனதில் நாகாவைப் பற்றிய எண்ணம் தான் ஓடிக்கொண்டிருந்தது. அவனுடனான தன் வாழ்வு அத்தனை சுமூகமாகப் போகும் என்று அவளுக்கு நம்பிக்கை இல்லை. அதைச் சொல்லி தன் சகோதரிகளின் மகிழ்ச்சியை தட்டி விட மனதும் இல்லை அவளுக்கு.

     “எனக்கு என் தங்கச்சி உன் மேல முழு நம்பிக்கை இருக்கு. நீ உன்னோடு சேர்த்து உன் கூட இருக்கிறவங்களையும் ரொம்ப நல்லாப் பார்த்துப்ப.

     இதுவரைக்கும் நீ இரண்டு பேருக்கு தங்கச்சியா இருந்திருக்க, ஒருத்திக்கு அக்காவா இருந்திருக்க. அந்த உறவில் நீ எந்தக் குறையும் வைச்சது இல்ல.

     இதுக்கு அப்புறம் உனக்கு மனைவிங்கிற ஸ்தானம் கிடைக்கப்போகுது. அதை ஏத்துக்கிட்ட அப்புறம், பொறுப்புகளோட சேர்த்து பொறுமையை தூக்கி சுமக்க வேண்டியதும் அவசியம்.

     சொல்லும் வார்த்தைகளில் கவனம் இருக்கணும். கோபத்தைக் கூட இடம், சூழ்நிலை அறிந்து தான் காட்டணும். அவரை நீ எந்தளவு சந்தோஷமாவும், நிம்மதியாவும் வைச்சிருக்கியோ அதே அளவுக்கு அவரும் உன்னை சந்தோஷமாவும், நிம்மதியாவும் வைச்சிருப்பாரு. நீ அவரை நேசிக்கிற அளவு தான் உனக்காக நேசமும், அன்பும் அவர்கிட்ட இருந்து உனக்குக் கிடைக்கும்.

     இப்ப சொல்லு உன்னால் அவரை நேசிக்க முடியுமா? இந்தக் கல்யாணத்தோட சேர்த்து அவரையும் முழுமனசா ஏத்துக்க முடியுமா?” நிதானமாக விளக்கிப் பின் தங்கையின் சம்மதம் கேட்டாள் லீலா.

     “அக்கா நீ சொன்னது எல்லாமே சரிதான். நான் வாய்க்கு வாய் பேசுறவ தான், ஆனா கல்யாணம் என்கிற வார்த்தைக்கு இருக்கிற மதிப்பும், மரியாதையும் எனக்கும் நல்லாத் தெரியும்.

     உங்களுக்காக நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதுக்கு அர்த்தம் எனக்கு கல்யாணத்தின் மீதோ இல்லை அவர் மீதோ வெறுப்பு இருப்பதால் இல்ல.

     எனக்கு இந்த இரண்டின் மீதும் இன்னும் ஒரு பிடித்தம் வரல அவ்வளவு தான். அதுக்காக அந்தப் பிடித்தம் கடைசி வரைக்கும் வராமலே போயிடாது இல்லையா.

     என்ன ஆனாலும், எனக்கும் அவருக்கும் நடுவே எத்தனை சண்டை வந்தாலும், அவரோட நிம்மதி, சந்தோஷத்துக்கும் என்னோட நிம்மதி, சந்தோஷத்துக்கும் எந்தப் பிரச்சனையும் வராம பார்த்துக்கிறேன்.” உறுதியுடன் ஊர்மி சொன்ன பிறகு தான் லீலாவுக்கு கண்ணை மறைத்துக் கொண்டிருந்த மலை போன்ற பிரச்சனை மடுவாகிப் போனது போல் இருந்தது.

     மற்ற இரு பெண்களின் முகத்திலும் சின்னதாய் புன்னகை. “அக்கா குடும்பத்தோட மூத்த மருமகளா உன்னோட வேலையை ஆரம்பிச்சிட்ட போல.” சூழ்நிலையின் அமைதியை மாற்றுவதற்காய் கேட்டாள் ஊர்மி.

     லீலாவோடு சேர்த்து மற்றவர்களும் புரியாமல் பார்க்க, “இல்ல வார்த்தைக்கு வார்த்தை அவரோட சந்தோஷம் முக்கியம், அவரோட நிம்மதி முக்கியம் அப்படி இப்படின்னு உன்னோட கொழுந்தனாருக்கு சப்போர்ட் பண்றியே அதனால் தான் கேட்டேன்.” சிரிப்புடன் கேட்டாள் தங்கை.

     “பின்ன இருக்காதா, என் கொழுந்தனாருங்க சந்தோஷத்துக்குப் பின்னாடி தான் என் அருமைத் தங்கச்சிங்களோட சந்தோஷம் இருக்கு.” என்றாள் லீலா.

     “ஹாய் ருக்கு, என்ன காலையிலே எழுந்து வாக்கிங் எல்லாம் பண்றீங்க போல.” என்றபடி ஜாகிங் முடித்து அதே நிலையில் அங்கே வந்து நின்றான் தெய்வா.

     இதுவரை அமைதியாய், அழகாய் பேசிக்கொண்டிருந்தவள் இப்பொழுது பதற்றத்தில் ஊமையாகிப் போனாள். சப்போர்ட்டிற்கு அக்காவைப் பிடித்துக்கொள்ள நினைத்து திரும்ப, அங்கே யாருமே இல்லை. அனைவரும் சற்று தொலைவில் அழகுப் பூச்செடிகளுக்கு நடுவில் தப்பி வளர்ந்திருந்த ஒரு சாமந்திப் பூவை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்.

     “அடப்பாவமே எல்லாருமா சேர்ந்து என்னை இப்படி இவரு கிட்ட மாட்டிவிட்டுட்டீங்களே, நான் என்ன பண்ணுவேன். ஆண்டவா என்னை எப்படியாவது இவர்கிட்ட இருந்து காப்பாத்து, இவருக்கு ஏதாவது வேலை வர வை.” பார்வையைத் தன் சகோதரிகள் மீது பதித்து வைத்து, இறைவனிடம் பேசிக்கொண்டிருந்தவள், கவனத்தை தன் பக்கம் வரவழைக்க வேண்டி அவள் கரம் பற்றினான், காலத்திற்கும் அந்த கரத்தை விடாமல் இருக்க வேண்டும் என்கிற ஆசையோடு இருப்பவன்.

     பட்டென்று அவனிடம் இருந்து கையை உருவிக் கொண்டவள், “நான் அவங்க கூட போகட்டுமா?” என்றாள் தூரத்தில் நின்ற தன் சகோதரிகளைக் காட்டியபடி.

     “அதைப் பத்தி பேசத்தான் நான் உங்களை நிறுத்தினேன். இங்க பாருங்க ருக்கு, நீங்க எப்படியோ ஆனா நான் என் அப்பா எப்ப உங்களை எனக்கானவங்களா அறிமுகப் படுத்தினாங்களோ அப்பவே நீங்க தான் என் பொண்டாட்டின்னு மனசில் பிக்ஸ் பண்ணிட்டேன். என் பொண்டாட்டிக்கிட்ட சில விஷயங்களை சொல்ற உரிமையும், கடமையும் எனக்கு இருக்கு.” என்றவனை ஏதோ வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவனைப் போல் பார்த்து  வைத்தாள் அவள்.

     “உங்க பார்வையைப் பார்த்தாலே நான் சொல்ற வருவது  புரியலன்னு புரியுது. புரியும் படியாவே சொல்றேன், நீங்க அந்த மூணு பேர்கிட்ட இருந்தும் கொஞ்சம் விலகியே இருக்கணும்.” என்க, நெஞ்சில் கை வைத்துவிட்டாள் அவள்.

     “ஏன் ஏன் ஏன் விலகி இருக்கணும்.” பதற்றமாக வந்தது ருக்குவின் குரல்.

     “நாங்க அண்ணன், தம்பி நாலு பேர். எங்களுக்குள்ள எந்த விதத்திலும் ஒத்துப் போகாது. தனித்தனியா எங்க வாழ்க்கையை வாழ நினைச்சா அதுக்கு எங்க அப்பா விட மாட்டேங்கிறார்.

     எப்படியாவது எங்க நாலு பேரையும் ஒன்னா சேர்த்து வைக்கணும் னு ரொம்ப நாளா திட்டம் போட்டுட்டு இருக்கார். அதுக்கான முதல் படி தான் அம்மா, அப்பா இல்லாத நாலு பொண்ணுங்களை எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற அவரோட முடிவு.

     அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்கி நின்ன பொண்ணுங்க எங்களை ஒன்னா, ஒத்துமையா வைச்சிருப்பாங்கன்னு அவரோட எண்ணம். ஆனா அது எல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்.” என்றவனை கண்கள் கலங்க நிமிர்ந்து பார்த்தாள் ருக்கு.

     “எங்க அப்பாவுக்காக மட்டும் தான் நாங்க நாலு பேரும் இன்னும் இந்த வீட்டில் இருக்கோம். அப்பா இன்னும் எத்தனை வருஷம் இருப்பாரோ தெரியாது. அவரோட காலத்துக்கு அப்புறம் இந்த வீட்டை வித்துட்டு பணத்தை நாலு பேரும் சரிசமமா எடுத்துக்கிட்டு ஆளுக்கொரு திசையைப் பார்த்துப் போயிடுவோம். அதனால நீங்க அவங்க மேல அதிகமாப் பாசம் வைச்சிடாதீங்க, அப்புறம் இங்க இருந்து போகும் போது கஷ்டமா இருக்கும்.” தெய்வா சொல்லி முடிக்கும் முன்னர் ருக்குவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தே விட்டது.

     “அவங்க மேல பாசம் காட்டுறதுக்குப் பதில் என்மேல் பாசம் காட்டுங்க. அதைவிடப் பல மடங்கு பாசத்தை நான் உங்க மேல காட்டுறதுக்கு தயாரா இருக்கேன். நான் சொல்றது உங்களுக்குப் புரியுது தானே.” என்றவன் அப்போது தான் அவள் அழுது வடிந்த முகத்தைப் பார்த்தான்.

     “என்னாச்சு ருக்கு, நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?” சம்பிரதாயமாகத் தான் கேட்டான். அவனுக்கு அவன் சொன்னதில் தவறு இல்லை என்றே தோன்றியது.

     வருங்காலக் கணவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “நான் போறேன்” என்றுவிட்டு வேக நடையுடன் தன் சகோதரிகளை நெருங்கினாள் ருக்கு.

     செல்பவளையே வைத்த கண் எடுக்காமல் தெய்வா பார்த்துக் கொண்டிருக்க, சின்னதாய் செருமி அவன் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான் கேக்குடன் வந்திருந்த நாகா.

     “அப்பாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வந்தேன்னா பெரிய மனசு பண்ணி ஒரு பீஸ் கேக் உனக்குக் கொடுப்பேன் வரீயா.” அலப்பறையை ஆரம்பித்தான்.

     “நான் ஒன்னும் உன்னோட கேக்குக்காக வரல. என் அப்பா பிறந்தநாள் அவருக்கு வாழ்த்து சொல்ல நான் வரேன்.” என்று தம்பியைப் பின்தொடர்ந்தான் தெய்வா.

     ஹாலில் சின்னச் சின்ன செலிபரேஷன் டெக்கரேஷன்களை செய்து கொண்டிருந்த செல்வாவும், தர்மாவும் இவர்களுடன் சேர்ந்துகொள்ள, நால்வரும் ஒன்றாக பூனை போல் வடிவேலுவின் அறைக்கதவைத் தட்டினர்.

     நன்றாக விவரம் தெரிந்த பின்னால் ஒருமுறை அப்பாவின் பிறந்தநாள் தினத்தைக் கண்டுபிடித்து நாகா மட்டும் வாழ்த்துச் சொல்லி இருக்க, அந்த நாள் முழுவதும் மற்ற பிள்ளைகள் வாழ்த்துச் சொல்லவில்லை என்பதில் சற்றே வருத்தமாகி அவர்களின் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் வடிவேல்.

     பொறுமையாய் இருந்து பார்த்த நாகா, தந்தையின் முகவாட்டம் தாங்கிக்கொள்ள முடியாதவனாய் தானே சகோதரர்களிடம் விஷயத்தைச் சொன்னான். அடுத்த நிமிடம் மற்ற மூவரும் ஒன்றாகச் சென்று வாழ்த்துச் செல்ல வடிவேலு அடைந்த உவகைக்கு அளவே இல்லை.

     தந்தையை அத்தனை மகிழ்வாகப் பார்த்திடாத சகோதரர்கள் நால்வரும், அன்றில் இருந்து ஒவ்வொரு வருடமும் அவரின் பிறந்தநாள் அன்று மட்டும் சிரமப்பட்டு ஒற்றுமையாக இருப்பார்கள்.

     யாரும் கட்டாயப்படுத்தி நடந்த காரியம் அல்ல, தந்தைக்காக அவர்களே யோசித்து எடுத்த முடிவு. அந்த முடிவு கடைசி வரை அப்படியே நிலைக்க வேண்டும் என்பதைத் தான் வடிவேல் விரும்புகிறார். நடக்குமா என்பதைக் காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

     சிறிது நேரத்திற்கு முன்னரே எழுந்திருந்த வடிவேலு குளித்துவிட்டு வெளியில் வரத் தயாராக இருந்த நேரத்தில் கதவு தட்டப்பட, வெளியே என்ன நடக்கிறது என்பது தெரிந்ததால் சின்னதாய் புன்னகைத்துக் கொண்டார்.

     வருடா வருடம் தன் பிறந்தநாளுக்காகக் காத்திருப்பார் அந்தப் பெரிய மனிதர். அன்று ஒருநாளாவது தன் பிள்ளைகள் நால்வரும் அடித்துக்கொள்ளாமல், தன்னருகே ஒற்றுமையாக இருப்பார்களே என்பதற்காக மட்டுமே அவரின் இந்த ஏக்கம்.

     இந்த வருடம் மருமகள்களுடன் தன் பிறந்தநாள் இன்னும் ஜொலிக்கப்போவதை அறிந்து சந்தோஷமாகக் கதவைத் திறக்க, அடுத்த நொடி அவரின் தலையில் கூம்பு கீரிடத்தை நாகா வைக்க, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.” என்றனர் அனைவரும் புன்னகையுடன்.

     “காலையிலே கண்கொள்ளாக் காட்சி, நான் பெத்த நாலு வைரங்களும் இப்படி ஒன்னா வந்து நிக்கிறது. இது எப்பவும் நிலைக்கணும் என்பது தானே என்னோட ஆசையும்.” கண்கலங்கி பேசினார் வடிவேல்.

     “நல்லநாள் அதுவுமா காலையிலே உங்க புகழுரையை ஆரம்பிக்க வேண்டாம். வாங்க வந்து கேக் வெட்டுங்க.” என்றான் நாகா.

     ஹாலிற்கு வந்தவர், “என்னோட மருமகளுங்க எங்கடா?” என்றார்.

     “அவங்களும் கண்டிப்பா இருக்கணுமாப்பா?” செல்வா தயங்கினான். திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாகிவிட்டது ஆனாலும் அவனுக்குள் ஏன் இத்தனை தயக்கம் என்பதை அவன் தான் சொல்ல வேண்டும்.

     “நீங்க தாலி கட்டினா தான் அவங்க இந்த வீட்டு மருமகளுங்கன்னு இல்ல. நீங்க தான் என் மகனுங்களுக்குப் பொண்டாட்டின்னு சொல்லி, என் கையால் ஆரத்தி எடுத்து எப்ப இந்த வீட்டுக்குள்ள அவங்களை வரவைச்சேனோ அன்னைக்கே அவங்க என் மருமகளுங்க தான்.

     அவங்க இல்லாம இனி இந்த வீட்டில் எந்த சந்தோஷமான விஷயமும் நடக்கப் போறது இல்ல. அதனால போய் அவங்களைக் கூட்டிக்கிட்டு வாங்க.” உத்தரவிட்டார் வடிவேலு.

     தர்மா தோட்டத்திற்குச் சென்று பெண்களைத் தேடினான். சற்று தொலைவில் இருந்த வண்ணவண்ண மலர்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர் நால்வரும். யார் யாருக்கு ஜோடி என்பது தெரியாமல் என்ன சொல்லி அழைப்பது என்று புரியாமல் குழம்பியவன், தன் ஜோடி இருக்க பிறகென்ன கவலை என நினைத்து அவர்களை அடைந்தான்.

     “தேவகி இன்னைக்கு அப்பாவுக்குப் பிறந்தநாள். கேக் கட் பண்ணப் போறோம். நீங்களும் வந்தா அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார் வரீங்களா?” என்று கேட்க, நால்வரும் அவனுடன் புறப்பட்டனர்.

     அவர்கள் உள்ளே செல்லும் அதே நேரத்தில், “ஸ்சாரி ஸ்சாரி லேட் ஆகிடுச்சு.” என்றவண்ணம் கை நிறையப் பைகளோடு ஓடிவந்தான் அரசு.

     “டேய் டேய் பார்த்து டா என்கிட்ட பாதியைக் கொடு.” என்றவண்ணம் அவனையும் அழைத்துக்கொண்டு வீட்டினுள் வந்தான் தர்மா.

     கேக் வெட்டி தன் மகன்கள் நால்வருக்கும் ஊட்டிவிட்டவர் தன் மருமகள்களுக்கு கையில் கொடுத்தார். அரசு வாங்கி வந்திருந்த துணிகளில் ஒன்றை எடுத்தவர், “செல்வா லீலா இரண்டு பேரும் வாங்கிக்கோங்க.” என்று அவர்களை நோக்கி நீட்டினார்.

     அவர்கள் இருவரும் புரியாமல் பார்க்க, “இது உங்க நிச்சயத்துணி. நேத்தே எடுத்தாச்சு என்னோட பிறந்தநாள் அன்னைக்கு ஆசிர்வாதம் பண்ணி கொடுக்கலாம் னு அரசு தான் ஐடியா கொடுத்தான் அதனால் தான்.” சிரித்தபடிச் சொன்னார் மனிதர்.

     செல்வாவும், லீலாவும் வந்து தனித்தனியாக விழுகிறோம் என்று நினைத்து ஜோடியாக வடிவேலு காலில் விழ, பட்டென்று பூத்த மத்தாப்பாய் புன்னகைத்தவர், பிள்ளைகள் இருவரையும் மனமாற ஆசிர்வதித்து அவர்களுடைய துணியைக் கொடுத்தார்.

     இளையவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு கணம் பார்த்துக்கொள்ள, “அண்ணலும் நோக்கினார், அண்ணியும் நோக்கினாள்.” மொமண்ட் ஓடுதுடோய் மனதோடு நினைத்துச் சிரித்துக்கொண்டான் அரசு.

     அடுத்தடுத்து மற்ற மூன்று ஜோடிகளும் இதே போல் பெற்றுக்கொள்ள மனம் நிறைந்து போனார் வடிவேலு. நாகா, ஊர்மிளா இருவரும் மட்டும் இன்னதென்று சொல்ல முடியா உணர்வுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நாகாவுக்கு அப்போது தான் ஊர்மிளா தான் அவனுக்காக அவன் அப்பா பார்த்த பெண் என்றே தெரியவந்தது.

     “பசங்களா இன்னைக்கு என்னோட பிறந்தநாள். நான் என்ன சொன்னாலும் கேட்பீங்களா?” வடிவேலு கேட்க, “சொல்லுங்கப்பா” என்றனர் நால்வரும்.

     “நீங்க நாலு பேரும் என்னோட மருமகளுங்களை, அதாவது உங்களோட வருங்காலப் பொண்டாட்டிகளை வெளியே கூட்டிட்டுப் போகனும்.” என்க, “அப்பா, மாமா” என்று அடுத்தடுத்து குரல்கள் ஒலித்தது அவ்விடத்தில்.

     “கல்யாணத்துக்கு முன்னாடி  நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சிக்கணும், புரிஞ்சிக்கணும். அதுக்கு நீங்க ஜோடியா  மனசு விட்டுப் பேசிக்கணும். அதுக்குத் தான் அப்பா சொல்றேன். அப்பா சொன்னா அது சரியாத்தான் இருக்கும், போயிட்டு இரண்டு மணி நேரத்தில் திரும்ப வந்திடுங்க. வரும் போது அவங்களுக்குப் ஒரு போன் வாங்கிக் கொடுங்க என்ன.” மகன்களைப் பார்த்துச் சொன்னவர் மருமகள்களிடம் திரும்பினார்.

     “ஒருநாளாச்சும் நீங்க இங்க தங்கித்தான் போகணும் னு சொன்னது ஏன்னு இப்ப புரிஞ்சிருக்கும். சம்பந்தம் பேச வந்துட்டு, சரிவருமா வராதாங்கிற கவலையோட நீங்க உங்க வீட்டுக்குத் திரும்பப் போகக் கூடாது. இன்னைக்குப் போய் பேசிட்டு வாங்க.

     மன திருப்தியோட நிம்மதியா உங்க வீட்டில் போய் இரண்டு நாள் இருந்துட்டு மொத்தமா இங்கேயே வந்திடுங்க.” சரியாக யோசித்துப் பேசி, தான் பெரிய மனிதர் என்பதைக் காட்டினார் அவர். அவருடைய சொல்லைத் தட்ட முடியாமல் ஒவ்வொரு ஜோடியாக வெளியே கிளம்ப ஆரம்பித்தனர்.

     இவ்வளவு நேரமும் இந்தத் தனிமைக்காகவே காத்திருந்தது போல், ஒரு பெரிய கேக் துண்டை எடுத்து வடிவேலுவுக்கு ஊட்டிவிட்ட அரசு, மீதத்தை அவர் முகம் முழுவதும் பூசிவிட்டான்.

     வடிவேலுவின் பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து உத்யோகம் போன பின்னர், அவர்களுக்குள் இருந்த குழந்தைத் தனத்தை இழந்து முழுதான ஆண்மகனாய் மாறி இருக்க, அரசு மட்டும் வடிவேலுவின் அருகே என்றும் குழந்தையாவே இருப்பான். அதைத் தான் இப்போதும் செய்தான்.

     அள்ள அள்ளக் குறையாத சந்தோஷத்துடன் மகன்கள் மற்றும் மருமகள்களுடன் சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாளில், வடிவேலுவின் ஆயுள் கூடுதலாக ஒரு வருடம் சேர்ந்தது என்றே சொல்லலாம்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. தெய்வா இப்படி சொல்லுவான்னு நினைக்கவே இல்ல … நாலு பேரும் தனித்தனியா இருந்தா நல்லவன்களா இருக்காங்க … ஒண்ணு சேர்ந்தா வில்லன்களா மாறிடுறாங்க போல … தனித்தனியா ஜோடியா போறாங்களா … என்னெல்லாம் நடக்க போகுதோ …