
அத்தியாயம் 12
அது தெய்வாவின் அறை ருக்குவுடன் கனவுலகில் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தவன், தன் அறைக்கதவு தட்டப்படும் சத்தத்தில் கனவு கலைந்து, அந்த எரிச்சலுடன் கதவைத் திறந்தான்.
“அட போலீஸ் மாமா, சரியான ரூம் கதவைத் தான் தட்டி இருக்கோம்.” ஒரு நொடி மகிழ்ந்தவள், தெய்வாவின் விரைப்பான பார்வையை எதிர்கொண்டதும், ”இது என்ன இந்த மாமா இந்த நேரத்தில் கூட இத்தனை விரைப்பாய் இருக்கார்.” எனத் தன்னோடு நினைத்துக்கொண்டிருந்த வேளையில், “ஹலோ யாரு நீங்க, எங்க வீட்டில் என்ன பண்றீங்க. யார் உங்களை இங்க தங்க வைச்சது. எதுக்காக என் ரூம் கதவைத் தட்டினீங்க.” அடுக்கடுக்காய் கேள்விகளை முன்வைத்தான் தெய்வா.
“ஐயோ மாமா என்னை எதுக்காக திருடி மாதிரி இத்தனை கேள்வி கேட்கிறீங்க. உங்களுக்கு ருக்மணியை மட்டும் தான் தெரியுமா? அவங்களோட சேர்த்து இன்னும் மூணு பொண்ணுங்க இந்த வீட்டில் இருக்காங்கன்னு வடிவேல் மாமா சொல்லலையா?” என்க, அதன்பிறகே விஷயம் புரியவர, இந்தப் பொண்ணு எந்தத் தேவாங்குக்கு ஜோடியா இருக்கும் எனத் தலை முதல் கால் வரை அளவிட்டான். போலீஸ்காரப் புத்தி முதல் பார்வையில் அவளைக் கணிக்க முற்பட்டான்.
அதை உணர்ந்தவள் போல், “நான் இங்க தான் இருப்பேன். என்னை எப்ப வேண்ணாலும் எடை போடலாம். இப்ப நீங்க சுதாரிக்கலன்னா திருடன் சுதாரிச்சிடுவான்.” என்க, “என்னது திருடனா?” பதறினான் தெய்வா.
“ஆமா மாமா, திருடன் தான். புது இடத்தில் தூக்கம் வராம ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். அப்ப ஒருத்தன் உங்க வீட்டுச் சுவர் ஏறி குதிச்சு உள்ள வந்தான். எப்ப வேண்ணாலும் கதவை உடைச்சிக்கிட்டு உள்ள வர வாய்ப்பு இருக்கு.” இதுதான் சாக்கென்று நொடிக்கொரு மாமா போட்டு பேசிக்கொண்டிருந்தாள் ஊர்மி. சொந்தங்கள் இன்றி வளர்ந்தவளுக்கு உறவின் மதிப்பு நன்றாகத் தெரிந்திருந்ததே அதன் காரணம்.
ஊர்மி சொல்வதை நம்புவதா வேண்டாமா எனத் தெய்வா யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் வீட்டு முதன்மைக்கதவு வெளியே இருந்து திறக்கப்படும் சத்தம் கேட்க, பரபரப்பானான் தெய்வா.
தன் கண் முன் நின்றிருக்கும் பெண்ணை பாதுகாப்பாக ஒரு இடத்தில் மறைத்து வைத்தவன் களத்தில் இறங்கினான். “மாமா அந்தத் திருடனை விட்டுடாதீங்க. அவனைப் பிடிச்சி கட்டிவைச்சு, தோலை உரிச்சு தொங்கவிடுங்க. இனிமே இன்னொரு வீட்டுக்குள்ள அவன் இப்படி சுவர் ஏறி குதிக்கக் கூடாது. அது உங்க கையிலும், காலிலும் தான் இருக்கு.” உற்றாகப் படுத்துகிறேன் பேர்வழி என்று கண்டதையும் செய்துகொண்டிருந்தாள் ஊர்மி.
இவள் போடும் சத்தம் மைக்செட் இல்லாமல் அடுத்த தெரு வரை கேட்கும் போல என நினைத்துக் கடுப்பான தெய்வா, தன் இதழ்களில் ஆள்காட்டி விரல் வைத்து வைத்து சைகை செய்ய, அதைக் கப்பென்று பிடித்துக்கொண்ட ஊர்மி அமைதியானாள்.
கதவைத் திறந்து, இருளில் ஏதோ சொந்த வீட்டுக்குள் நுழைவது போல சிரமமின்றி நடந்து வந்த அந்தத் திருடன், ஹாலில் இருந்த பிரிட்ஜ்ஜைத் திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான்.
காலடிச்சத்தம் கேட்காத வகையில் பூனை போல் பதுங்கிச்சென்று அவனைப் பின்னிருந்து மடக்கிப்பிடித்த தெய்வா, “ஏன்டா டேய், என்ன தைரியம் இருந்தா போலீஸ்காரன் வீட்டிலே திருட வருவ. உன்னை என்ன பண்றேன்னு பாரு.” என்றவண்ணம் அவனைத் தூணோடு கட்டிவைக்க நினைத்து இழுக்க எத்தணிக்க, திருடனோ முரண்டு பிடித்தான். தெய்வா திடீரென தன்னைப் பிடித்ததால் ஜெர்க்கானவன் தான் கையில் வைத்திருந்த கவரைக் கீழே போட்டுவிட்டான்.
அதனை உணராத தெய்வா அவன் தன் இழுப்பிற்கு வரவில்லை என்பதால், “என்னடா வலுக்கொடுக்கிறியா? உடும்போட பிடி கூட நழுவினாலும் நழுவும், என்னோட பிடி நழுவாது. உன்னை இன்னைக்குக் கட்டி வைச்சு தோலை உரிக்காம விட மாட்டேன்.” என பஞ்ச் டைலாக் பேசிக் கொண்டிருக்க, திருடனோ அசால்டாக இவன் கால்களுக்குள் தன்னுடைய காலை நுழைத்து மடக்கி தெய்வாவைக் கீழே தள்ளிவிட்டு தான் மேலே ஏறி அமர்ந்தான்.
“என்னையே கீழ தள்ளிட்டியா உன்னை” என்று தெய்வா கையை முறுக்க, தட்டுத்தடுமாறி மின்விளக்கு இணைப்பைக் கண்டுபிடித்து அந்த அறையை ஒளிரவைத்திருந்தாள் ஊர்மிளா.
வெளிச்சத்தில் முகமூடிக்காரனைப் பார்த்த தெய்வாவிற்கு ஏதோ தோன்ற, முகமூடியை அவிழ்க்க கையை உயர்த்தினான். அவனும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருக்க, தான் நினைத்த வேலையை சிறப்பாகச் செய்து முடித்தான் தெய்வா.
அடுத்த கணமே, “அட ச்சே… நீயா, சொந்த வீட்டுக்குள்ள திருடன் மாதிரி எதுக்குடா வந்த.” தன்னுடைய தம்பி நாகா என்று அழைக்கப்படும் நாகராஜைப் பார்த்துக் கேட்டான் தெய்வா.
“அப்பாவுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் பிறந்தநாள் ஆரம்பிக்கப் போகுது. அவருக்கு சர்ப்பரைஸ் கொடுக்கலாம் னு ஆசையா வந்தேன். அதில் மண் அள்ளிப் போட்டுட்டதோட, நான் ஆசையா வாங்கிட்டு வந்த கேக்கையும் கீழே தள்ளி நசுக்கிட்ட. எல்லாத்துக்கும் மேல என்னை நிக்க வைச்சுக் கேள்வி வேற கேட்கிற. உன்னையெல்லாம் என்ன செய்தால் தகும்.” ஆத்திரமாய் கேட்டான் நாகா.
“அப்பாவுக்கு ஓவர் ஐஸ் வைச்சு அவரை எப்பவும் உன்பக்கமே வைச்சுக்கிறதுக்குத் தானே இந்தப் பிறந்தநாள் நாடகம் எல்லாம். உன் நினைப்பு தப்புன்னு அந்த ஆண்டவனுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. அதனால் தான் ஆப்பு வைச்சிட்டான்.” தந்தைக்காக ஆசையாய் செய்த அனைத்தும் வீணாகிவிட்டதே என்கிற சோகத்தில் நின்றிருந்த தம்பியைக் கடுப்பேற்றும் விதமாகச் சொல்லி சிரித்தான் தெய்வா.
அதில் கோபம் தாறுமாறாக ஏற, “உன்னைப் பார்த்தாலே கடுப்பா இருக்கு. உன்னையெல்லாம் பூமிக்குப் பாரமா யார் இருக்கச் சொன்னது. இப்படித் தினந்தினம் எல்லோரையும் கஷ்டப்படுத்துறதுக்குப் பேசாம நீ செத்துப் போயிடலாம்.” என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் வார்த்தைகளை விட்டிருந்தான் நாகா. இதுதான் அவன் குணம். பாம்புக்குப் பல்லில் விஷம் இருந்தால், அதன் பெயரைக் கொண்ட இவனுக்கு இவன் நாவில் தான் விஷம் அதிகம்.
“எவ்வளவு பெரிய வார்த்தை. என்ன தான் கோபமாக இருந்தாலும் உடன் பிறந்தவனை அதுவும் தன்னை விட மூத்தவனைப் பார்த்துச் சொல்லும் வார்த்தையா இது. இவரெல்லாம் என்னதான் மனிதரோ. உயிருடன் இருப்பவரை செத்துப்போய் இருக்கலாம் என்று ஆசைப்படும் அரக்கன். இவனையா நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம் ச்சே…” முதல் கோணமே முற்றிலும் கோணமாக மாறிப்போனது ஊர்மிளாவுக்கு. ஆனால் இன்னும் அவனால் அவள் படப்போகும் பாடு அதிகம் என்று தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பாளோ அவளுக்கே வெளிச்சம்.
தெய்வாவிற்கு நாகாவின் பேச்சு ஊர்மி அளவுக்குக் கோபத்தைக் கொடுக்கவில்லை. அடிக்கடிக் கேட்கும் வார்த்தை என்பதாலோ இல்லை தவறு தன் மீது என்பதாலோ இல்லை நாகாவின் குணமே இதுதான் என்பதை அறிந்து கடந்து போனானோ, அமைதியாகவே இருந்தான்.
இவ்வளவு நேரத்திற்குள் சத்தம் கேட்டு செல்வா, தர்மா இருவரின் அறையிலும் அடுத்தடுத்து விளக்குகள் எரிய ஆரம்பித்தது.
“அச்சச்சோ மத்த இரண்டு மாமாக்களும் வரப் போறாங்க போலவே. இந்தத் தேவாங்கு வேற ரொம்பக் கோவத்தில் இருக்கு, என்ன பண்ணப் போகுதோ தெரியலையே. செல்வா மாமாவை மட்டும் ஏதாச்சும் சொன்னான், அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்.
எனக்கு லீலா அக்கா எந்தளவு முக்கியமோ அதே அளவு அவங்களைக் கட்டிக்கப் போற செல்வா மாமாவும் முக்கியம். இது அவர்கிட்ட வாலாட்டாம இருக்கிற வரைக்கும் நல்லது.” உள்ளுக்குள் நினைத்துக் கருவிக்கொண்டாள் ஊர்மிளா.
“என்னடா சத்தம், நீ எப்ப வந்த. எதுக்காக இப்படி அர்த்த இராத்திரியில் எல்லாரையும் தொந்தரவு பண்ணிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்.” என்றான் செல்வா.
“ஸ்சாரி சார், என்னால உங்க தூக்கம் கெட்டுப் போனதுக்கு ரொம்ப ஸ்சாரி. நான் என்னோட அப்பா பிறந்தநாளுக்குன்னு ஸ்பெஷலா சுகர் ப்ரீ கேக் ஆர்டர் பண்ணி வாங்கிட்டு வந்தேன். அதை இவன் நாசமாக்கிட்டான். யாராச்சும் தப்பு பண்ணா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணலாம், ஆனா போலீஸே தப்பு பண்ணா யாருகிட்ட போய் கம்ப்ளைண்ட் கொடுக்கிறதாம்.” சத்தமாக அனைவரும் கேட்கும் வண்ணம் சொன்னான் நாகா.
“நாகா நான் உனக்குப் பலதடவை சொல்லிட்டேன், அவரு உன்னோட அப்பா இல்லை நம்மளோட அப்பா.” திருத்தினான் செல்வா.
“ச்சே ச்சே என்ன இது சின்னக்குழந்தைங்க மாதிரி என் அப்பா உன் அப்பான்னு அடிச்சிக்கிறாங்க.” தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.
“எல்லாம் அந்தப் பொண்ணால வந்தது. நல்லாத் தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி, கண்டவன் கிட்ட பேச்சு வாங்க வைச்சிருச்சு. ஏம்மா இங்க வாங்க, நீங்க சொன்ன அந்தத் திருடன் இந்தா உங்க முன்னாடி முழுசா நிக்கிறான்.
நீங்க ஆசைப்பட்ட படி கட்டி வைச்சு அடிங்க, தோலை உரிங்க, என்ன வேண்ணா பண்ணிக்கோங்க. ஆனா இனி எதுக்காகவும் என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க.” என்றுவிட்டு தன் அறைக்குள் ஓட்டமும், நடையுமாக ஓடிவிட்டான் தெய்வா.
“ஆஹா மாமா இப்படி இந்தத் தேவாங்குகிட்ட என்னைக் கோர்த்துவிட்டுட்டு போயிட்டாரே. நமக்கு வேற வாய் சும்மா இருக்காது. அவன் ஒன்னு சொன்னா, பதிலுக்கு நாலு சொன்னாத் தான் நிம்மதியா இருக்குமே.
இல்லல்ல, ஊர்மி கண்ட்ரோல், உன்னோட அமைதியில் தான் உன்னோட மத்த மூணு சிஸ்டர்ஸ்ஸோட வாழ்க்கை இருக்கு.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அமைதியாய் நின்றிருந்தாள் ஊர்மிளா.
செல்வா, தர்மா இருவருக்கும் அவரவர் ஜோடியைத் தவிர ருக்குவை மட்டும் தான் தெரியும், நாகாவிற்கு யாரையும் தெரியாது என்னும் பட்சத்தில் மூவரின் முன்பும் கோழித்திருடன் போல திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள் ஊர்மிளா.
“ஹே யாரு நீ எங்க வீட்டில் என்ன பண்ற.” எடுத்ததுமே நாகா ஒருமையில் கேட்க, காற்றில் பறக்க இருந்த பொறுமையை இழுத்துப் பிடித்து நிறுத்திய ஊர்மி, “இங்க இப்ப நடந்ததுக்குக் காரணம் என்னோட தவறான புரிதல். மோர் ஓவர் இராத்திரி பன்னிரண்டு மணிக்கு, முகத்தை மறைச்சிக்கிட்டு சுவர் ஏறி குதிக்கிற யாரையும், யாரும் திருடன்னு தான் நினைப்பாங்க.
நான் யாரு என்னன்னு நாளைக்கு வடிவேல் மாமாகிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க. அதுக்கு அப்புறமாவது கொஞ்சம் மரியாதையா பேசுங்க.” என்றுவிட்டு ஊர்மி சென்றுவிட அவள் சென்ற திசையை குழப்பத்தோடு பார்த்த நாகா, திரும்பி தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தம்பி தர்மாவைக் கண்டான்.
“என் மூஞ்சில என்ன ரொமெண்டிக் படமா ஓடுது. வைச்ச கண் எடுக்காம பார்த்துட்டு இருக்க, போய் தூங்கு போ.” கோபமாகச் சொன்னான் தன் இரட்டையிடம். அவனும் அடித்துப் பிடித்துச் சென்றுவிட நாகாவின் கண்கள் முழுக்க பாழாய் போன கேக்கில் தான் நிலைத்திருந்தது.
அடுத்த நாள் காலையில் எப்பொழுதும் போல சீக்கிரம் விழிப்பு வந்துவிட, குளித்துத் தயாராகிய சகோதரிகள் நால்வரும் என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்துப் பக்கம் வந்து அதை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
டியூப் மூலம் வந்து கொண்டிருந்த தண்ணீர், பூச்செடிகளின் வேர்ப்பகுதியில் அதிவேகத்துடன் விழுந்து கொண்டிருக்க அது செடிகளுக்கு ஆபத்து என்பதால் அதை எடுத்துப் பதமாக ஒவ்வொரு செடிக்கும் ஊற்ற ஆரம்பித்தாள் ஊர்மி. நால்வரில் அவள் கொஞ்சம் அதிக சுறுசுறுப்பு. ஒரு இடத்தில் இருக்க முடியாது அவளால். நேற்றில் இருந்து அமைதியாய் இருப்பது என்னவோ போல் இருக்க, வேலையைக் கையில் எடுத்துக்கொண்டாள்.
மற்ற மூவரும் இவளை விட்டு சற்றுத் தொலைவு சென்றுவிட, திடீரெனக் கேட்ட ஹலோ என்ற அழுத்தமான குரலால் ஜெர்க்கான ஊர்மி அப்படியே திரும்பிவிட, போனில் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்த நாகா, ஊர்மியின் கையால் இரண்டாவது முறையாக குளித்து முடித்திருந்தான்.
“ஹே முட்டாள் அறிவில்லை உனக்கு. இப்படித்தான் ஆள் வருவது கூடத் தெரியாம வேலை செய்வியா? சரியான மெண்டலா இருக்கும் போல. எல்லாம் அப்பாவைச் சொல்லணும். யார் யாரை வீட்டில் தங்க வைக்கணும் என்கிற அறிவே கிடையாது அந்த மனுஷனுக்கு.” கத்தினான்.
“ஹலோ பெரியவருக்குக் கொஞ்சம் மரியாதை கொடுத்தா நீங்க என்ன குறைஞ்சா போயிடுவீங்க.” ஊர்மி கேட்க, “என் அப்பா என் இஷ்டம் அதைக் கேட்க நீ யாரு.” வாய்க்குள் திராவகத்தை மறைத்து வைத்திருப்பவன் போல் வார்த்தைகள் முழுக்க வெம்மை தான்.
“உன்னைக் கேட்க எனக்கு எந்த உரிமையும் இல்லை தான்.” என்றுவிட்டுத் திரும்பி நின்றுகொண்டாள் அவள்.
“ஹே என்ன மரியாதை இல்லாம பேசுற, நான் நினைச்சா உன்னை இந்த நிமிஷமே இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியும்.”
“நீங்க என்னை நீ வா போன்னு கூப்பிடலாம். ஆனா அதையே நான் கூப்பிட்டா தப்பா. என்ன ஆணாதிக்கமா? அது மத்தவங்ககிட்ட வேணும் னா செல்லுபடியாகலாம். என்கிட்ட அது நடக்காது. என்கிட்ட நீங்க என்ன கொடுக்கிறீங்களோ அது தான் திரும்ப உங்களுக்குக் கிடைக்கும். பெட்டர் பார்த்துப் பேசுங்க.” முகத்துக்கு நேரே எச்சரித்தாள்.
“ச்சே எனக்கு நேரமே சரி இல்ல. நேத்து அப்பாவுக்காக வாங்கிட்டு வந்த கேக்கை அந்தத் தடியன் வீணாக்கினான். தெரிஞ்ச ஒருத்தனை விடிய விடிய தொந்தரவு பண்ணி உடனடியா சுகர் ப்ரீ கேக் ரெடி பண்ண வைச்சு, அப்பா எழுந்திரிக்கும் போது கேக்கோட இருக்கலாம் னு காலையிலே வேகமா கிளம்பினா இப்படி துணியெல்லாம் ஈரமாக்கிட்டியே. உன்னை என்ன செய்தா தகும்.” கண்கள் சிவக்க விடாது கத்திக்கொண்டிருந்தான் நாகா.
“ஹலோ இப்ப என்ன தண்ணீத் தொட்டிக்குள்ளையா விழுந்தீங்க. கொஞ்சோண்டு தண்ணீ மேலே பட்டுடுச்சு. அவ்வளவு தானே. இதுக்கு எதுக்கு இவ்வளவு அலப்பறை. பணக்காரங்க காரில் தான் ஏசி, ஹீட்டர், கழுதை, குதிரை எல்லாம் வைச்சி இருப்பீங்களே. அதைப் போட்டுக்கிட்டு போனா நீங்க போகுற நேரத்துக்குள்ள சட்டை காஞ்சிடப்போகுது. இதுக்கு ஏன் இவ்வளவு பில்டப்.” அசாதாரணமாய் சொன்னாள்.
பதிலுக்கு அவன் ஏதோ பேச வாயைத் திறந்தான். அதற்குள் அலைபேசி சத்தமிட, “ஆங், இதோ வரேன் டா.” என்றவண்ணம் காரை நோக்கி ஓட ஆரம்பித்தான் நாகா.
அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் வந்த லீலா, “ஊர்மி யார் அவர், ரொம்ப நேரம் உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாரு.” பொதுவாகக் கேட்டாள்.
“ம்ம்ம்… உன் இரண்டாவது கொழுந்தனாராம் அக்கா. ஆளும் அவரும் கொஞ்சம் கூட மரியாதையே தெரியல. நேத்து தெய்வா மாமாவை பேசினார். இப்ப என்னடான்னா பெத்த அப்பான்னு கூடப் பார்க்காம நம்ம வடிவேல் மாமாவை மரியாதை இல்லாம பேசுறாரு. என்னன்னு கேட்டா, என் அப்பா என் உரிமை கேட்க நீ யாருன்னு கேட்கிறாரு.” கடுப்புடன் சொன்னாள்.
“ஹே ஊர்மி, அப்ப அவர் தான் உன்னைக் கட்டிக்கப் போறவறா. ச்சே நான் சரியாவே பார்க்கலையே.” ஆர்வமாய் நாகா சென்ற திசையைப் பார்த்தாள் ருக்கு.
“ஊர்மி உனக்கு அவரைப் பிடிச்சிருக்கா? அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதில் உனக்கு முழு சம்மதமா?” ஊர்மி எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டு திணறடித்தாள் லீலா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஸ்கூல் படிக்கிற பசங்க மாதிரி இப்படி சண்டை போட்டுக்கிறாங்க … நல்லா தான் இருக்கு … நாகாக்கு ஏத்த சரியான ஜோடி தான் ஊர்மி … இப்பவே இப்படி இருக்கு … கல்யாணம் அதுக்கு அப்புறம் உண்மைலாம் தெரிஞ்சா வீட்ல பூகம்பம் வரும் போல …