
அத்தியாயம் 112
விளையாட்டு போல் அரசு எப்போதும் கேட்பது இதைத் தான் என்றாலும், நடக்கப் போகிறது என்று வரும் போது சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால்.
“எனக்கா, எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்.” விட்டேற்றியாய் பதில் சொன்னான் அரசு.
“என்னாச்சு டா, எப்பவும் கல்யாணம், கல்யாணம் னு கேட்டுக்கிட்டே இருப்ப. இப்ப நாங்களா முன்வந்து பேசுறோம் னு பந்தா பண்றியா?” வேண்டுமென்றே கேட்டான் நாகா.
“லூசு பாம்பு, எப்பவாச்சும் உங்ககிட்ட நான் மாட்டிக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வந்தா, தப்பிக்கிறதுக்காக அப்படி சொல்லுவேன். மத்தபடி எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஆசை இல்ல.
என்ன வயசாகிடுச்சு எனக்கு. அதோட நான் ஒன்னும் உங்களை மாதிரி அரேன்ஜ் மேரேஜ் எல்லாம் பண்ணிக்க மாட்டேன். பார்த்து மீட் பண்ணி, ஃபீல் பண்ணி, லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும். அதுதான் என்னோட ஆசை.” எங்கே நடுவில் நிறுத்திவிடுவார்களோ என்று வேகவேமாகப் பேசினான் அவன்.
“ஏன் ணா பொண்ணு எப்படி இருந்தா லவ் பண்ணுவீங்க.” விளையாட்டாய் கேட்டாள் லீலா.
“முடிய விரிச்சு போடாத, கண்ணை உறுத்துற மாதிரி டிரஸ் போடாத, புருஷன் வீட்டு ஆளுங்களை மதிக்க தெரிஞ்ச பொண்ணு யாரா இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.” அரசு சொல்ல, “இதென்னடா கொடுமையா இருக்கு. முடியை விரிச்சுப் போடுறதெல்லாம் ஒரு குத்தமா? இந்த ஒரு கண்டிஷனுக்கே உனக்கு காலத்துக்கும் கல்யாணம் நடக்காது.” என்றான் தெய்வா.
“இப்படி இப்படி இருக்கணும் னு முடிவு பண்றது பொண்ணுங்க உரிமை. அதே மாதிரி இப்படியான பொண்ணு வேணும் னு எதிர்பார்க்கும் உரிமை ஆணுக்கும் இருக்கும் தானே.
அந்தக் காலத்தில் எல்லாம் புருஷன் இல்லாத பொண்ணுங்க தான் தலைவிரி கோலமா இருப்பாங்கன்னு எங்க அம்மா சொன்னது எனக்கு நினைவு இருக்கு. அதனால் தான் என்னோட எதிர்பார்ப்பு இப்படி இருக்குதோ என்னவோ.” என்று தாயை நினைவுபடுத்தினான் அரசு.
“நாட் பேட்.” என்றான் தெய்வா.
“ஆனா அரசு நீ கேட்கிற மாதிரி பொண்ணுங்க கிடைக்கிறது ரொம்ப அபூர்வம் ஆச்சே.” தன் கல்லூரியில் படிக்கும், கற்பிக்கும் பெண்களை நினைத்துப்பார்த்து சொன்னான் தர்மா.
“ஏன்டா நசுங்கிப் போன கத்தரிக்கா, தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட் மாதிரி இருக்கிற உங்க நாலு பேருக்குமே தங்கச் சிலைகள் மாதிரி பொண்ணுங்க கிடைக்கும் போது, எனக்கு கிடைக்காதா என்ன.” சந்தடி சாக்கில் கலாய்த்தான் அரசு.
“வர வர உனக்கு வாய் கொழுப்பு ரொம்ப அதிகம் ஆகிடுச்சு. எங்க மூஞ்சியைப் பார்த்த நசுங்கிப் போன காய்கறி மாதிரியா தெரியுது.”செல்வா கேட்க, “பார்த்த உடனே தெரியாது. ஆனா பார்த்துக்கிட்டே இருந்தா கண்டுபுடிச்சிடலாம்.” என்றான் அரசு.
“அடேய், மறுபடி மறுபடி கலாய்ச்சுக்கிட்டே இருக்க இதெல்லாம் நல்லா இல்ல ஆமா.” பொங்கினான் நாகா.
“பரவாயில்லையே நான் கலாய்க்கிறேங்கிற வரைக்கும் கண்டு புடிச்சிட்டீங்களே சூப்பர் டா, என் கூட சேர்ந்து சேர்ந்து உங்களுக்கும் மூளை கொஞ்சம் டெவலப் ஆக ஆரம்பிச்சிடுச்சு.”
“இவனை விட்டா பேசிக்கிட்டே இருப்பான். முயலைப் பிடிக்கிற மாதிரி பொத்திப் பிடிச்சு பொண்ணு வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடலாம்.” தெய்வா சொல்ல, “ஐயோ ஆபத்து, என்னைக் காப்பாத்துங்க. இந்த வீட்டு ஆளுங்க எல்லோரும் சேர்ந்து என்னைக் கொல்லப் பார்க்கிறாங்க.” என்று கத்திக்கொண்டே அரசு ஓட, அவனைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள் மற்றவர்கள்.
“டேய் விடுங்கடா அவனை. நீங்க ஆளுக்கு நாலு அடி அடிச்சா கூட அவன் செத்தே போயிடுவான். அவன் நம்ம கூட இல்லைன்னா நல்லாவே இருக்காது டா.” இருந்த இடத்தில் இருந்துகொண்டே சொன்னார் வடிவேலு. ஓடிக்கொண்டிருந்த அரசு யார் மீதோ மோதி விழப்பார்த்து சமாளித்து நின்றான்.
“ஹே, இடியட் உனக்கு கண்ணு தெரியாதா. இப்படி மாடு மாதிரி மேல வந்து விழுற.” வந்தவள் கத்த,
“ஆமா முதல்ல நீ யாரு. யாரைத் தேடி இங்க வந்த. காலிங்பெல் கூட அடிக்காம நீ பாட்டுக்கு உள்ள வந்தா, நீ வரன்னு அவனுக்கு எப்படித் தெரியும். எங்க வீட்டுக்குள்ள யாரோட அனுமதியும் இல்லாம வந்துட்டு எங்க வீட்டு ஆளைத் திட்டுற.” கோபமாய் கேட்டான் நாகா.
“உன்னை எங்கேயோ பார்த்து இருக்கேனே.” என்றான் தெய்வா.
“லேகா” என்று செல்வா சொல்ல, லீலாவைத் தவிர அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகினர்.
“லேகா நீ எதுக்காக இங்க வந்த. அட்லீஸ்ட் வரும் போது போன் பண்ணிட்டு வந்து இருக்கலாம் இல்ல.” சாதாரணம் போல் கேட்டாலும் அழுத்தம் இருந்தது செல்வாவின் வார்த்தைகளில்.
“நான் போன் பண்ணேனா இல்லையான்னு தெரிஞ்சக்க நீ உன்னோட போனைப் பார்க்கணும் செல்வா.” லேசான விசும்பலுடன் சொன்னாள் அவள்.
அதன்பிறகே செல்வா தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்க்க, அதில் கிட்டத்தட்ட பன்னிரண்டு தவறிய அழைப்புகள் இருந்தது.
“ஆனா இது எப்படி சாத்தியம். ஒரு முறை இரண்டு முறை இல்ல, இத்தனை முறை போன் அடிச்சிருக்கு. ஆனா எப்படி எனக்கு கேட்காம போச்சு.” குழப்பத்தோடு வாய்விட்டே கேட்டான் அவன்.
“போன் ரிங் ஆகுற சத்தம் கேட்காமல் எல்லாம் இருந்திருக்காது. போனை எடுத்து பார்த்திருப்ப, என் பெயரைப் பார்த்ததும் இவளுக்கு வேற வேலை இல்லை அப்புறம் பார்த்துக்கலாம் னு விட்டு இருப்ப.” என்னவோ அவன் பெரிய தவறு செய்துவிட்டதைப் போல் சித்தரித்துப் பேசியவள் அவனை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்க வேண்டும் என்று மேலும் மேலும் பேசினாள்.
“ஹாஸ்பிடலில் சாகக் கிடந்தவளை அப்படியே போகட்டும் னு விட்டு இருந்தா நான் நிம்மதியா செத்தாவது போய் இருப்பேன். என்னைக் காப்பாத்தி ஏதோதோ நம்பிக்கை கொடுத்து ஹாஸ்டலில் தங்க வைச்ச.
அவங்க என்கிட்ட இந்த மாசத்துக்கான பீஸ் கேட்டாங்க. நான் உங்ககிட்ட கேட்க கூச்சப்பட்டுக்கிட்டு ஏதாவது ஏற்பாடு பண்ணலாம் னு நினைச்சேன். என்னால முடியல இன்னைக்கு காலையில் சாப்பிடப் போனப்ப மன்த்திலி பே பண்ணிட்டு சாப்பிடுங்கன்னு சொல்லிட்டாங்க. எனக்கு எவ்வளவு அசிங்கமா போச்சு தெரியுமா? கூனிக் குறுகிப் போய் திரும்ப ரூமுக்கு வந்தேன்.
இதுக்கு மேல அங்க இருந்தா அவமானம் னு சொல்லி நான் கிளம்பி வந்துட்டேன். ஆனா வெளியே வந்ததுக்கு அப்புறம் எனக்கு எங்க போறதுன்னே தெரியல. இப்போதைக்கு எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை நீ மட்டும் தான். அதனால தான் உன்னைத் தேடி வந்தேன்.” என்று அழுதாள்.
கண்களில் இருந்து கண்ணீரும் வரத் துவங்கியது. அவளை அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் அழுகையை நிறுத்துவது என்ன கண்ணீரைத் துடைப்பதற்கு கூட அவள் நினைக்கவில்லை.
“பொண்ணுங்களுக்கு மட்டும் நினைச்ச உடனே கண்ணில் இருந்து கண்ணீர் வந்திடுப்பா.” கடுப்புடன் வந்தது நாகாவின் வார்த்தைகள்.
“சும்மா இருங்க நாகா அந்த பொண்ணே பாவம் ரொம்ப கஷ்டத்தில் இருக்கு.” என்றாள் லீலா. அவளுக்கு செல்வா, லேகா கடந்தகாலத்தை நினைத்து சற்றும் சங்கடம் இல்லை. இருவருமே அதைக் கடந்துவந்துவிட்டதால் அது அழிந்து போனதாகவே நினைத்திருந்தாள். ஆனால் அப்படி அல்ல என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
“அட போங்கண்ணி நீங்க வேற.” என்று மனதில் நினைத்தாலும் அவளுடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து நிஜத்தில் அமைதியானான் நாகா.
“அந்த ஹாஸ்டலில் இவ்வளவு ரூடா நடந்துப்பாங்கன்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் உன்ன அங்க சேர்த்து இருக்கவே மாட்டேன்.” என்றவனுக்கு முந்தைய நாள் அவளைப் பார்க்க சென்ற போது பணம் எதுவும் கொடுத்து வராத தன் மடமை நினைவு வந்தது.
“என்னால் என் படிப்புக்குத் தகுதியானதைத் தவிர வேறு எந்த வேலையும் செய்ய முடியாது.” என்று லேகா உறுதியாகச் சொன்ன போது சற்றே கோபம் வந்தாலும், தன் எண்ணங்கள் மற்றவருக்கும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லையே என்று புரிந்து கொண்டவன், அவளுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான். அப்படிச் சொல்வதை விட லேகா அவனைக் கிளப்பி இருந்தாள் என்று சொல்ல வேண்டும்.
எப்படி அந்த விடுதியை விட்டு வெளியே வருவது எப்படி செல்வாவின் இல்லத்திற்குள் நுழைவது என்பது வரை பக்காவாகத் திட்டம் போட்டு வைத்திருந்தவளுக்கு அவன் செலவுக்காக பணத்தை நீட்டிவிடக் கூடாது என்பதில் அத்தனை அவசரம். செல்வாவின் நேரம் அவனும் அதை மறந்திருக்க, விளைவு நினைத்தபடி கண்ணைக் கசக்கிக்கொண்டு இராதா இல்லத்தில் லேகா.
செல்வா சாதாரணமாகத் தான் பேசுகிறான் என்றாலும், லேகா யார் என்ற உண்மை புரிந்த அனைவருக்கும் அவனுடைய பேச்சு எரிச்சலைக் கிளப்பியது.
“பெரிய கர்ண மகாராஜா. வந்தவங்களுக்கு எல்லாம் வாறி வாறி இறைக்கிறாரு. இதெல்லாம் அவன் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சு செஞ்யுறானா, தெரியாம செய்யுறானா?
அதுசரி தெரிஞ்சா மட்டும் ருக்குவோட அக்கா அவனைத் தடுத்திருக்கவா போறாங்க. இவன் ஒரு பைத்தியம், அவங்க ஒரு பைத்தியம். இந்த வகையில் இரண்டும் சரியாத் தான் ஜோடி சேர்ந்திருக்காங்க.
என் கூடப்பிறந்தவனே இந்தப் பொண்ணு இங்க இருந்து போகட்டும். அதுக்கு அப்புறம் இருக்கு கச்சேரி உனக்கு.” என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் தெய்வா.
“நல்லவேளை செல்வா நீ வந்துட்டு போனதுக்கு அப்புறம் இதெல்லாம் நடந்தது. அசிங்கம் எல்லாம் என்னோட போச்சு. உன்னையும் சேர்த்து பேசி இருந்தா நான் கண்டிப்பா கண்ட்ரோல் மிஸ் பண்ணி இருப்பேன்.” என்கிற அவளுடைய பேச்சு அங்கிருந்த அனைவருக்குமே ஒருவித பிடிக்காத தன்மையை உண்டாக்கியது.
“எல்லாம் என்னோட விதி. ஒரு ரூபாய் காசுக்கு கூட அடுத்தவங்க கிட்ட கையேந்தி நிற்கிற அளவுக்கு ஆண்டவன் என்னைக் கீழே இறக்கிட்டான்.” என்றாள் லேகா.
“விதி, காரணம் இல்லாம யாரையும் கஷ்டப்படுத்துவது இல்லை மேடம்.” என்ற தர்மா அடுத்ததாக ஏதோ சொல்ல வர அவன் அருகே இருந்த வடிவேலு அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பேசவிடாமல் செய்தார்.
இப்போது தான் தன் பிள்ளைகள் ஒன்று சேர்ந்திருக்க, தன் குடும்பத்தைச் சேராத ஒருவரால் அவர்களுக்குள் பிரச்சனை வந்துவிடுவோ என்கிற பயம் அவருக்கு.
“சரி விடு, போனது எல்லாம் போகட்டும். நீ ஹாஸ்பிடலில் ஜாயின் பண்ணிக்கிறதைப் பத்தி சேர்மன் கிட்ட நான் இன்னைக்கே பேசுறேன்.” பிரச்சனையைப் பற்றியே பேசிக்கொண்டிருக்காமல் தீர்வுக்கான முதல் படியில் கால் வைத்தான் செல்வா.
“நீ எல்லாத்தையும் ரொம்ப ஈஸியா சொல்லிட்ட செல்வா. ஆனா வாழ்க்கை அந்த அளவுக்கு ஈஸி கிடையாது. நாளைக்கே நான் வேலையில் சேர்ந்தாலும் தான் பெருசா என்ன மாறிடும். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை, தங்குவதற்கு ஒரு மரியாதையான இடம் இல்லை.” தவிப்பாய் சொன்னாள். நுழைந்துவிட்ட அந்த வீட்டில் இருந்து வெளியேறும் எண்ணம் அவளுக்குச் சுத்தமாக இல்லை. அதனால் அவள்பேச்சு மொத்தமும் அதனை ஒட்டியே இருந்தது.
அவள் திட்டம் தெள்ளத்தெளிவாகப் புரிய தெய்வா, நாகா, தர்மாவிற்கு அத்தனை கோபம் செல்வா மீது. காலில் குத்திய முள்ளை தூக்கிப் போடுவதை விடுத்து இது என்ன முட்டாள்தனம் என அவனைத் தான் வருத்தெடுத்தனர் அனைவரும்.
“இவ்வளவு தெளிவா இருக்கிற நீ, உன் புருஷன் உண்மை இலட்சணம் தெரிந்த நேரத்திலேயே உன் அப்பா அம்மாகிட்ட வந்திருந்தா இத்தனை பிரச்சனை தேவை இருக்காது.” ஆதங்கம் கோபம் கலந்த கலவையாகச் சொன்னான் செல்வா.
“அது வேற, இது வேற செல்வா. ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்றேன். நீ இப்போ உன் பொண்டாட்டிய விட்டுட்டு இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்னு வைச்சுக்கோ. உன் பொண்டாட்டி சரிதான் போடான்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்களா, இல்ல உன்னைத் திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வர நினைப்பாங்களா? கண்டிப்பா உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கத் தான் நினைப்பாங்க. அது என்னவோ ஆண்களுக்கு இரண்டாம் வாய்ப்பு சர்வ சாதாரணமா கிடைச்சிடுது.
பெண்களோட இந்த முடிவுக்குப் பின்னாடி, அவங்க புருஷன் மேல் வைச்சிருக்கும் பாசம், இரண்டு குடும்பத்தோட மரியாதை, பிறந்ததில் இருந்து பார்த்து வளர்ந்த கலாச்சாரம் அப்படின்னு நிறைய விஷயங்கள் இருக்கும். அதுதான் என்னையும் அப்படி இருக்க வைச்சது.” என்றாள் லேகா.
அவள் பேசியதில் உள்ள கருத்தை எடுத்துக்கொண்டு லீலா அமைதியாக இருக்க, வார்த்தைகளைக் கவனித்த மற்ற பெண்கள் மூவருக்கும் கோபம் வந்தது.
“யாரும்மா நீ, வந்ததில் இருந்து அபசகுனமாவே பேசிகிட்டு இருக்க.” மற்ற பிள்ளைகள் தானே அடங்கி இருக்க வேண்டும், தனக்கு அந்தக் கட்டாயம் இல்லை என்பதால் முன்வந்தார் வடிவேலு.
“அங்கிள் நான் லேகா. உங்க பையனோட காலேஜில் ஒன்னா படிச்சவ. ரொம்ப க்ளோஸ் ப்ரண்டு.” தன்மையாக பதில் சொன்னாள்.
“அப்படியா ஆனா செல்வா இதுவரைக்கும் உன்னை பத்தி ஒரு வார்த்தை கூட சொன்னதே இல்லையே.” மூக்கை நுழைத்தான் அரசு.
அதில் அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. “ஆமா நீங்க யாரு? உங்களைப் பத்தி கூட தான் செல்வா இதுவரைக்கும் என்கிட்ட சொன்னது கிடையாது. அதுக்காக நீங்க செல்வாவுக்கு முன்ன பின்ன பழக்கம் இல்லாதவங்கன்னு அர்த்தம் ஆகிடுமா என்ன?” என்றாள்.
“ஹலோ என்ன பேசுறீங்க. எந்த வார்த்தையா இருந்தாலும், பேசுறதுக்கு முன்னாடி எங்க இருக்கோம், யாரைப் பத்தி பேசுறோம் னு யோசிச்சுகிட்டு பேசுங்க. அவன் இந்த வீட்டுப் பையன்.” அதட்டினான் தெய்வா.
“ஸ்சாரி செல்வா நான் இங்க வந்திருக்கவே கூடாது. நான் வந்ததால இங்க ஏகப்பட்ட பிரச்சனை. நான் இப்பவே இங்க இருந்து கிளம்புறேன்.” சொன்னபடி வேகமாகத் திரும்பியவள் எத்தனை முடியுமோ அத்தனை மெதுவாக நடந்தாள்.
“ஆனா எங்க போவ.” அவள் நினைத்த வார்த்தைகளைக் கேட்டே விட்டான் செல்வா. எடுத்துக்கொண்ட பொறுப்பை பாதியில் விட முடியவில்லை அவனால்.
“டேய் நானே இவ இங்க வந்ததால உனக்கும், அண்ணிக்கும் ஏதாவது பிரச்சனை வருமோன்னு நினைச்சு பயந்துக்கிட்டு இருக்கேன். நீ அடங்க மாட்டேங்கிறியே. அந்தப் பொண்ணு மேல அப்படி என்னடா அக்கறை உனக்கு.” வார்த்தைகள் வெளியே வந்து விழ போராடிக் கொண்டிருக்க சிரமப்பட்டு உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்தான் நாகா.
“எங்கேயோ போறேன். எனக்கு எங்க தோணுதோ அங்க போவேன்.” விட்டேற்றியாகச் சொன்னாள் லேகா.
“நீ நாளைக்கே வந்து ஹாஸ்பிடலில் ஜாயின் பண்ணிக்கோ. உனக்கு சேலரி அட்வான்ஸ் கூட வாங்கி தரேன். அதை வைச்சு நல்ல ஏரியாவில் வீடு பார்த்துக்கலாம்.” அடுத்த கட்ட யோசனைக்குத் தாவினான் செல்வா.
“ஆனா அது வரைக்கும் நான் தங்குறதுக்கு இடம்.” கடைசியாக நரி தன் வேஷத்தைக் கலைத்தே விட்டது.
“நீங்க அதுவரைக்கும் இங்கேயே தங்கிக்கோங்க.” இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த லீலா வாயைத் திறந்தாள்.
“இந்த அண்ணி தேரை இழுத்து தெருவில் விடுறாங்களே. யாராவது சொந்த செலவில் தனக்கே சூனியம் வைச்சுப்பாங்களா. ஆனாலும் இந்த அண்ணி இப்படி வெள்ளந்தியா இருக்க வேண்டாம்.” மனதில் நினைத்தான் நாகா.
“ரொம்ப தேங்க்ஸ் லீலா. உங்க இடத்தில் வேற யார் இருந்தாலும் என்னை இந்த வீட்டில் தங்க வைக்க விரும்ப மாட்டாங்க. ஆனா நீங்க உண்மையிலே கிரேட்.” என்றாள். அவளுக்கு லீலாவிடம் நட்பு பாராட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் வேண்டி விரும்பி அவளை நெருங்க, அவளைச் சுற்றி அரண் போல் நின்றனர் அவள் தங்கைகள் மூவரும்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. நீங்க என் புருஷனோட ப்ரண்டு. உங்களுக்காக நான் இது கூட பண்ண மாட்டேனா. நாங்க இங்க கல்யாணம் ஆகி வந்த பிறகு விருந்தாளின்னு யாரும் இந்த வீட்டிற்கு வந்தது கிடையாது. நீங்க தான் முதல்.” லீலா சொல்ல, அவள் தேர்ந்தெடுத்துப் பேசிய வார்த்தைகளின் தெளிவில் கமுக்கமாய் சிரித்துக்கொண்டான் தெய்வா. நாகாவும் கூட அட என்று ஆச்சர்யமாகப் பார்த்தான்.
“எங்க அக்காவோட பேச்சு சாதாரணம் போல் தெரிஞ்சாலும், உத்துக் கவனிச்சா அதில் நிறைய உள்ளர்த்தம் இருக்கும்.” என்று ருக்கு என்றோ ஒருநாள் சொன்னது நினைவு வர, தெளிவு தான் என்று தன்னோடு நினைத்துக்கொண்டான்.
“உங்களை ஹாஸ்டலில் தங்க வைச்ச அன்னைக்கே நான் இவர்கிட்ட சொன்னேன். உங்களை இங்க கூட்டிட்டு வந்திடச் சொல்லி. அவர் தான் நாங்க நிறைய பேர் இருக்கிற இந்த வீட்டில் இருக்கிறது உங்களுக்கு சௌகர்யமா இருக்காதுன்னு சொன்னாரு.” என்றாள் லீலா.
“நாம இவ்வளவு நேரம் மூச்சைப் புடிச்சி பேசினது எல்லாம் வேஸ்ட்டா. இந்த செல்வா எனக்காக பண்ற ஒவ்வொன்னையும் பொண்டாட்டி கிட்ட சொல்லி சொல்லி தான் பண்றானா. சரியான பொண்டாட்டி தாசன்.” என்று மனதிற்குள் செல்வாவைத் திட்டினாள் லேகா.
“இந்த லீலாவுக்கு புத்தி கெட்டுப் போச்சா என்ன. நான் தான் அன்னைக்கே இவளோட நோக்கம் சரி இல்லைன்னு சொன்னேன் தானே. அப்புறம் எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா.” தனக்குள் வெந்து கொண்டிருந்தான் செல்வா.
ஒரு உறவில் கட்டுண்டு இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு மொத்தமாக விலகினால் தான் அந்த உறவு அழியும். இருவரில் ஒருவர் இழுத்துப் பிடிக்க நினைத்தாலும் மழை கலைத்துப் போட்ட வண்ணக்கோலம் போல், சிதிலமடைந்த அந்த உறவு முற்றிலும் அழியாது என்பதே உண்மை.
செல்வாவிற்கு லேகாவுடன் இருந்த உறவு அறைகுறையாக என்றாலும் இருப்பதில் விருப்பம் இல்லை. முற்றும் முழுதும் லீலாவுக்கானவனாக இருக்கவே விரும்பினான்.
வாய் திறந்து சொல்ல வில்லை என்றாலும் லீலாவின் தங்கைகளும் அதே நிலைமையில் தான் இருந்தனர்.
“சரிங்க லீலா நான் தங்குறதுக்கு ரூமை காட்டுறீங்களா? நான் நிம்மதியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. கொஞ்ச நேரம் தூங்குறேன்.” எப்படியோ தான் நினைத்தது நடந்துவிட்டது என்ற மமதையில் முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் கேட்டாள் லேகா.
“எப்படி டா இன்னொருத்தர் வீட்டில் இப்படி ராஜாங்கம் பண்ண முடியுது.“ என்னும் அயர்ச்சியில் பார்த்தனர் ராஜ் சகோதரர்கள்.
“என்கூட வாங்க நான் காட்டுறேன்.” என்றவாறு அவர்கள் வீட்டில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள் லீலா.
அவர்களின் தலை அங்கிருந்து மறையவும், “ஏய் ருக்கு உங்க அக்காவுக்கு அறிவு இருக்கா இல்லையா. யாராவது புருஷனோட முன்னாள் காதலியை வீட்டில் தங்க வைக்க சம்மதிப்பாங்களா?” சீறினான் தெய்வா.
“கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? நீங்க நினைக்கிற மாதிரி அந்த பொண்ணு ஒன்னும் செல்வா மாமாவோட காதலி இல்ல, அவங்க ஜஸ்ட் பிரண்ட். நான் சொல்றது சரிதானே மாமா.” என்றவாறு செல்வாவின் மனதை ஆராய்வதற்காக கேட்டாள் ருக்கு.
“சரியா சொன்ன ருக்கு. தெய்வா தான் கண்டதையும் யோசிச்சு கற்பனை பண்றான்.” தன்னளவில் செல்வா தெளிவாகவே இருந்ததால் உடன் ஒப்புக்கொண்டான்.
அறைக்குள் வந்து மெத்தையில் விழுந்த லேகா அதன் சுகந்தத்தை அனு அனுவாக அனுபவித்தாள். அந்த நேரத்தில் இனி எந்தக் காரணத்திற்காகவும் இந்த வீட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்னும் எண்ணம் அவளுக்குள் வலுவாக உதித்தது.
“நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க லீலா. அதனால் தான் உங்களுக்கு செல்வா மாதிரி ஒருத்தன் புருஷனா கிடைச்சிருக்கான். உங்ககிட்ட செல்வா இதை சொல்லி இருக்கானா இல்லையான்னு எனக்குத் தெரியல. நானும் செல்வாவும் தான் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்துச்சு. ஆனா” என்று நிறுத்திவிட்டு லீலாவின் முகத்தைப் பார்த்தாள் சகுனி லேகா.
“முடிஞ்சதைப் பத்தி எதுக்காக பேசிக்கிட்டு. முடிஞ்சது முடிஞ்சு போச்சு. அது இனிமே திரும்ப நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை. நீங்களும், நீங்க காதலிச்ச நபரும் சேர்ந்து நின்ற பாதை எப்பவோ பிரிஞ்சு போய், தொலைஞ்சும் போச்சு.
தொலைஞ்சு போன ஒரு பாதையைத் தேடுறதோ, அதை நினைச்சு வருத்தப்படுறதோ முட்டாள் தனம். அறிவுள்ளவங்க யாரும் கசப்பான கடந்த காலத்தை மறுபடியும் வாழ நினைக்க மாட்டாங்க.
நீங்க இந்த வீட்டில் இருக்கப் போறது மூணு நாளோ நாலு நாளோ மட்டும் தான். அதுவரைக்கும் எதுக்காக கண்டதையும் யோசிச்சு மனசைப் போட்டு குழப்பிக்கிட்டே இருக்கீங்க. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க. அதுதான் உடம்புக்கும் மனசுக்கும் ரொம்பவே நல்லது.” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் லீலா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1

