
அத்தியாயம் 11
“ஹலோ மிஸ்டர் ஓல்டு மேன், உங்களுக்கு என்ன பத்து வயசு பாப்பான்னு நினைப்பா. இன்னைக்குக் காலையில் இருந்து அங்கேயும், இங்கேயும் அலைஞ்சிக்கிட்டே இருக்கீங்க. உடம்பு என்னத்துக்கு ஆகுறது.” உரிமையுடன் கோபித்தான் அரசு.
“போடாப் போடா அறிவில்லாதவனே. எனக்கு இப்ப இருக்கிற சந்தோஷத்துக்கும், நிம்மதிக்கும் நான் இன்னும் இருபது வருஷத்துக்கு நல்ல ஆரோக்கியமா இருப்பேன்.
வர முதல் முகூர்த்தத்தில் நிச்சயர்தார்த்தம் வைக்கணுமுன்னா சும்மாவா. பிள்ளைங்களுக்குத் துணி மணி, நகைகள் எல்லாம் உங்க தாத்தா எடுப்பாரா இல்ல எங்க தாத்தா எடுப்பாரா? அதுக்குத் தான் வெளியே போகணும் னு சொல்றேன்.” என்றார்.
தன் நான்கு பிள்ளைகளுக்கும் நல்லபடியாக திருமணத்தை முடித்துவிட்டுத் தான் நான் நிம்மதியாக உறங்குவேன் என்பதைச் சொல்லாமல் சொன்னார் அந்தப் பெரிய மனிதர்.
“இதுதான் விஷயமா, ஒரு போன் பண்ணினா போதும் நகைக்கடையும், புடவைக்கடையும் வீட்டுக்கு வந்திடும். நீங்க அமைதியா இருங்க. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.
உங்க வீணாப் போன பழைய ப்ரண்டு ஒருத்தர் இருக்காரே. க்ளப் மீட்டிங்குன்னு சொல்லி இங்க வரும் போதெல்லாம் மொக்கையா போட்டு என்னைச் சாவடிப்பாரே. அவரு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் ஒரு நகைக்கடை ஆரம்பிச்சாராம். அங்க லேட்டஸ்ட் நகை எல்லாம் இருக்கும் மொத்தமா இங்க வர வைச்சிடுறேன்.
எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் பட்டுப்புடவைக்குன்னே தனியா ஒரு ஜவுளிக்கடை நடத்துறார். அவர்கிட்டவும் பேசுறேன்.” அரசு தன் திட்டத்தை பறைசாற்ற, “சொல்லாத செய்.” என்றார் வடிவேலு. அதிலே அவர் உறுதி தெரிய, தனக்குள் சிரித்துக்கொண்டான் அரசு.
“என்னக்கா மாமாவும் அவரும் என்னென்னவோ சொல்றாங்க. நகைக்கடையை வீட்டுக்கே வரவழைக்கிறேன்னு சொல்றாங்க.” பயந்தாள் ருக்கு.
“அக்கா நமக்குத் தான் இது பெரிய விஷயம். மாமா மாதிரி ஆளுங்களுக்கு இதெல்லாம் ரொம்பச் சாதாரணமான ஒன்னு. தேவையில்லாம பயப்படாத, லீலா அக்கா இருக்காங்க இல்ல. அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க.” ராதா இல்லத்தின் பணச் செழுமையைப் பார்த்துப் பயம் கொள்ளாத ஒரே பெண்ணான ஊர்மிளா தைரியமாகப் பேசினாள்.
நீ பணக்காரன், நான் ஏழை என்றால் தான் என்ன. என்னைப் போல் இரண்டு கை, இரண்டு காலோடு தானே நீயும் பிறந்திருக்கிறாய் என்பது தான் அவளுடைய எண்ணம்.
“அங்கிள் இவங்க பியூட்டிஷியன்ஸ் உங்க மருமகளுங்களை ரெடி பண்ண வந்திருக்காங்க.” அரசு சொல்ல, “வந்திட்டாங்களா நல்லது. நகை, புடவை வாங்கின உடனே மேக்கப்பை ஸ்டார்ட் பண்ணிடச் சொல்லு.” என்றார் வடிவேலு.
உடல் தூக்கியே போட்டுவிட்டது பெண்களுக்கு. இதென்ன விபரீதம், வீட்டுக்குப் பெரியவர் ஒவ்வொன்றையும் சிறியவர்களிடம் கேட்டுக் கேட்டு செய்ய வேண்டியது இல்லை தான். அதற்காக இப்படித் தங்களைச் சார்ந்த செயல்கள் எல்லாவற்றிற்கும் அவரே முடிவெடுப்பது ஒருமாதிரி அசௌகர்யத்தைக் கொடுத்தது அவர்களுக்கு.
அரசுவுக்குப் பெண்களின் அசௌகர்யமும் புரிந்தது, வடிவேலுவின் ஆர்வமும் புரிந்தது. வடிவேல் வயதால் பெரியவரானாலும் உள்ளத்தில் குழந்தையைப் போன்றவர். மருமகள்கள் விஷயத்தில் மட்டும் இல்லை, தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் விஷயத்திலும் இப்படித்தான் தனக்குப் பிடித்த அனைத்தையும் செய்துகொண்டே இருப்பார்.
எல்லாவற்றிற்கும் வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கும் ராஜ் சகோதரர்கள் வடிவேலு செய்யும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். அதைப் போல் இந்தப் பெண்களும் இருக்க வேண்டும் என்பது வடிவேலின் விருப்பம்.
தனிமை கிடைக்கும் போது இதைப் பற்றி சொல்லி பெண்கள் நால்வரையும் இதைப் போன்ற ஆனந்த அதிர்ச்சிகளுக்கு பழகிக்கொள்ளச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் அரசு.
இந்த வீட்டை அரசாளப் போகும் ராணிகள் அவர்கள் தான் என்றால் அவர் இவர்களுக்குச் செய்வதற்கும், இவர்கள் அவருக்குச் செய்வதற்கும் எல்லா உரிமைகளும் இருக்கத்தானே செய்கிறது என்று தன்னைப் போல் நினைத்துக்கொண்டான்.
“மாமா இவங்க எதுக்காக.” ஆரம்பித்த கேள்வியை முடிக்காமல் விட்டாள் லீலா.
நீங்கள் என் மகள்கள் என்று சொன்ன பிறகு அவர் செய்யும் ஒவ்வொன்றையும் எதற்காக, ஏன் வேண்டாம் என்று கட்டையைப் போட்டுக்கொண்டே இருக்கிறோமோ என ஒரு மனதும், இதெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா என இன்னொரு மனமும் கேள்வி எழுப்ப தவித்து தான் போனாள்.
“நிச்சயப் பத்திரிக்கையில் உங்களோட போட்டோ போடணும் இல்ல. நீங்க நாளைக்கு ஊருக்குப் போயிட்டா போட்டோ எடுப்பது எந்தளவு சரிவரும் னு தெரியாது. அதனால் தான் நீங்க இங்க இருக்கும் போதே தேவையான எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டா நல்லதுன்னு தோணுச்சு அதான்.” அசால்ட்டாகச் சொன்னார் வடிவேலு.
“என்னது பத்திரிக்கையில் போட்டோ போடப் போறீங்களா? அப்படிப் போட்டீங்கன்னா, நாங்க நாலு பேரும் அக்கா தங்கச்சிங்கன்னு உங்க பசங்களுக்குத் தெரிய வந்திடுமே. எங்களைப் பத்தி டீவியில், வாரப் பத்திரிக்கையில் எல்லாம் போட்டு இருக்காங்க. கண்டிப்பா யாருக்காவது தெரிஞ்சிருக்கும்.” சொன்னவள் தேவகி.
“அடடே இதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா, சரி சரி அப்ப பத்திரிக்கையில் போட்டோ போட வேண்டாம். அரசு இவங்களை இப்ப போகச் சொல்லு, தேவைப்படும் போது மறுபடி கூப்பிட்டுக்கலாம். என் கடைசி மருமக உண்மையில் புத்திசாலி தான்.” உடன் ஒப்புக்கொண்டார் மனிதர்.
“உங்க மருமகள்கள் புத்திசாலிங்க என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவு உண்மை, நீங்க நினைக்கிற அளவு உங்க பசங்க முட்டாள்கள் இல்லை என்பது.
நீங்க போட்டோ போடாம விட்டுடுவீங்க சரி. நிச்சயத்துக்கு வரும் யாராவது இவங்களைப் பத்தின உண்மையை உடைச்சு சொல்லிட்டா.” சரியாகத் தான் கேட்டான் அரசு.
“பசங்க நிச்சயமேடை ஏறி என் மருமகளுங்க கூட நின்னுட்டாப் போதும். அதுக்கு அப்புறம் அவனுங்க தலைகீழா நின்னு தண்ணீ குடிச்சாலும், ஒன்னும் பண்ண முடியாது. பண்ண விடவும் மாட்டேன்” சொன்ன வடிவேலுவின் குரலில் அத்தனை உறுதி இருந்தது.
“அங்கிள் நான் சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இவங்க நாலு பேரையும் ஒன்னா நிக்க வைச்சா கண்டிப்பா ஒருத்தருக்காவது இவங்களைப் பத்தி ஞாபகம் வரும். அதுக்கு அப்புறம் உங்க பசங்க பரதநாட்டியம், குச்சுப்புடி, கதகளி இன்னும் என்னென்ன டேன்ஸ் இருக்கோ எல்லாத்தையும் ஆடித் தீர்த்துடுவாங்க.
அவனுங்களைச் சமாளிக்கிறது நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண விஷயம் கிடையாது. உங்க உடம்புக்கும், மனதுக்கும் அசௌகர்யம் இல்லாம அதை நடத்திக்காட்டவும் முடியாது. அதனால் நான் சொல்ற மாதிரி செய்யலாமா?” தயங்கினான் அரசு.
“முதல்ல சொல்லு அது சரியா வருமா இல்லையான்னு நான் சொல்றேன்.”
“இல்லை இப்போதைக்கு செல்வராஜ், தெய்வராஜ் இரண்டு பேரோட கல்யாணத்தை மட்டும் நடத்துவோம். அடுத்த ஒரு மாசத்தில் அடுத்த இரண்டு பேருக்கு கல்யாணத்தை நடத்துவோம். ஒரே நேரத்தில் நாலு கல்யாணத்தையும் நடத்தினா கண்ணடி படக்கூட வாய்ப்பிருக்கு. கல்லடி கூட படலாமாம், கண்ணடி படக்கூடாதாம்.” அரசு சொல்ல லீலாவுக்குப் பக்கென்றது.
அவள் ஏதோ சொல்ல வரும் முன்னர், “இல்லை டா அது சரியா வராது. நான் லீலாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன். இவங்க நாலு பேருக்கும் ஒரே நேரத்தில் தான் கல்யாணம்.
உண்மை தெரிஞ்சா அப்படி என்னடா பண்ணிடுவாங்க. நான் பெத்து வளர்த்த பசங்க தானே. அவங்க ஜித்தனுங்கன்னா நான் ஜித்தனுக்கெல்லாம் ஜித்தன். என் உயிரைக் கொடுத்தாவது என் பசங்களுக்கும், இவங்களுக்கும் கல்யாணத்தைப் பண்ணாம விட மாட்டேன்.” என்றார் வடிவேலு.
“லீலா, நீயும் தங்கச்சிங்களும் போய் ரெடியாகிட்டு வாங்க. அதுக்குள்ள நகை, துணி எல்லாம் வந்திடும். சும்மா சும்மா எல்லாத்துக்கும் தயங்கிக்கிட்டு இருக்கக்கூடாது. இது உங்க வீடு, நான் உங்க மாமனார். அதை ஆழமா மனதில் ஏத்திக்கோங்க. எதுவும் தப்பாத் தெரியாது.” வடிவேலு சொல்ல அதை ஆமோதித்து மாடியேறினர் அனைவரும்.
சிறுவயதில் பாவடை சட்டை, வயதுக்கு வந்தபின் பாவாடை தாவணி, வளர்ந்த பின் சேலை மட்டுமே அணிந்து பழகியவர்களுக்கு லெகின் டாப்ஸ் அணிந்ததும் என்னவோ போல் இருந்தது. ஒருவித தயக்கத்துடனே கீழே இறங்கி வந்தனர்.
“எந்த ட்ரஸ் போட்டாலும் என் மருமகளுங்க அழகு தான் பா. சரி சரி சீக்கிரம் வாங்கம்மா. சேலை, நகைங்க வந்தாச்சு உங்களுக்குப் பிடிச்சதை எடுத்துக்கோங்க.” வடிவேலு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராயல் என்பீல்டு சத்தம் கேட்டது.
“தெய்வா வரான் போலையே.” தன்னைப் போல் சொன்னார் வடிவேல்.
“மாமா நாங்க உள்ள போயிடட்டுமா?” லீலா கேட்க, “ருக்கு இருக்கட்டும் மா, மத்தவங்க மட்டும் உள்ளே போங்க. நான் ஒருத்தர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டா அவங்க மட்டும் வாங்க. அப்புறம் பழக்க தோஷத்தில் ஒரே ரூமுக்குள்ள போயிடாதீங்க. நீங்களும் மாட்டிக்குவீங்க, நானும் மாட்டிக்குவேன் வேற வேற ரூமுக்குள்ள போங்க. சீக்கிரம், அவன் வந்திடப் போறான்.” துரிதப்படுத்தினார் வடிவேலு.
“யாரோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் பெத்து வளர்த்த பசங்களைப் பார்த்து ஏன் பயப்படணும் னு கேட்டாங்க. எனக்குச் சிரிப்பு சிரிப்பா வருது.” என்றான் அரசு.
“கொஞ்சம் அடக்கி வாசிக்கிறியா?” அரசுவை முறைத்தவர் அப்பொழுதுதான் பயத்தில் விழிகள் பிதுங்க அமர்ந்திருக்கும் ருக்குவைப் பார்த்தார். அக்காவின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே இருந்தாலும் பயத்தில் ஷாலைக் கசக்கிக்கொண்டிருந்தாள்.
“இந்தப் பொண்ணு என்ன இப்படிப் பயப்படுது.” நினைத்தவர் ருக்கு என்று அழைக்க நினைத்த நேரத்தில், அவருடைய அந்த வேலையைச் சிறப்பாக செய்தான் தெய்வா.
“ருக்கு வாட் எ சர்ப்பரைஸ். நீங்க என்னோட வீட்டில், ஐ காண்ட் பிலீவ் திஸ்.” என்றபடி, கையில் இருந்த தொப்பி, முக்கியமான ஆதாரம் ஸ்டேஷனில் இருந்தால் தொலைந்துவிடும் என்று கையோடு கொண்டு வந்திருந்த கேஸ் கட் இரண்டையும் தூக்கி எறிந்தான் சோபாவில்.
அவள் அருகில் வந்தவன், “ஹே காலையில் சேரியில் பார்த்ததை விட இப்ப இந்த ட்ரஸில் இன்னும் அழகா இருக்கீங்க.” அப்பட்டமாய் அசடு வழிந்தான்.
“டேய் டேய் உங்க அப்பா நான் ஒருத்தன் இங்க இருக்கேன் டா.” சிரித்தார் வடிவேல்.
“இருந்துட்டு போங்க நானா வேண்டாம் னு சொன்னேன். ஆமா என்ன இதெல்லாம், பார்ட் டைமில், பட்டுப்புடவைக்குத் தனியா ப்ரான்ச் ஏதும் ஆரம்பிக்கலாம் னு ஐடியாவா.” ருக்குவின் பயத்தை உணர்ந்து அவளை இலகுவாக்கும் முயற்சியில் தந்தையிடம் பேச ஆரம்பித்தான் தெய்வா.
“எல்லாம் என் மருமகளுங்களுக்காக நான் வரவழைச்சது டா. அவங்க செலக்ட் பண்ணது போக மீதம் தான் கடைக்குப் போகப் போகுது.” பெருமையாகச் சொன்னார்.
“மருமகளுங்கன்னா.” புருவம் சுருக்கிக் கேட்டான் தெய்வா.
“போலீஸ்காரன் பாயிண்டுக்கு வந்திட்டானே.” என்று நினைத்தவராக, “எனக்கு நீ மட்டுந்தான் பையனா என்ன. உன்னை தவிர்த்து நான் இன்னும் மூணு பேரைப் பெத்து வைச்சிருக்கேனே. அவங்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு இல்ல.” சமாளித்தார்.
“அப்ப அவனுங்களுக்கும் பொண்ணு பார்த்துட்டீங்களா? ஆனா அவனுங்களுக்குப் பொண்ணு கொடுக்கிற அளவுக்கு பெரிய மனசு உள்ளவங்க ஊருக்குள்ள இருக்காங்களா என்ன?”
“என்னடா வாய் ரொம்ப நீளுது. நீ போலீஸ்காரன்னா அது இந்த வீட்டுக்கு வெளியே தான். இந்த வீட்டுக்குள்ள வந்திட்டா நீ எனக்குப் பையன், என் மத்த பசங்களுக்குச் சகோதரன், இனி ருக்குவுக்குப் புருஷன். அதனால் இந்த இடக்குப் பேச்சை எல்லாம் என்கிட்ட வைச்சிக்காத.” சற்றே கோபப்பட்டார்.
“சரிப்பா சரிப்பா கோபப்படாதீங்க. உங்களோட மத்த சீமந்தப்புத்திரர்களுக்கு எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் பொண்ணு கிடைச்சதுங்கிற சந்தேகத்தில் தான் கேட்டேன்.”
“உனக்கு ருக்கு கிடைச்சப்போ அவங்களுக்கு கிடைக்கமாட்டாங்களா என்ன. வீணா அவங்களை மட்டம் தட்டுற வேலை வைச்சுக்காத.” வடிவேலு சொல்லிக்கொண்டிருக்கும் போது,
“என்னப்பா வரும் போதே பஞ்சாயத்து.” என்றபடி வந்தான் தர்மா.
“வாடா தர்மா காலேஜ் அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா?”
“ஆமா பா, எனக்கு இன்னைக்கு வேலையே ஓடல. என்னவோ குறுகுறுன்னு வந்தது, மத்தவங்க கவனிச்சுக் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. என்னால் அங்க இருக்கவே முடியல. அதனால் தான் வந்துட்டேன்.” தன் போக்கில் சொல்லிக்கொண்டே வந்தவன் ருக்குவைப் பார்த்ததும், “ஆமா யாரு இந்தப் பொண்ணு.” என்றான்.
“உன் அண்ணி டா. நம்ம தெய்வாவுக்குப் பார்த்து இருக்கிற பொண்ணு.”
“ஓ… சரி பா. நான் என் ரூமுக்குப் போறேன்.” என்ற தர்மா தன் அறை நோக்கிச் செல்ல முயற்சிக்க, “தர்மா ஒரு நிமிஷம் இருடா. செல்வா வர நேரமாகிடுச்சு, அவனும் வந்திடட்டும். நான் உங்க மூணு பேர் கிட்டையும் கொஞ்சம் பேசணும்.” வடிவேலு சொல்லி முடிக்கும் நேரத்தில் வாசலில் செல்வா கார் சத்தமும் கேட்டது.
“வா செல்வா” மகனை வரவேற்றவர் மருமகளிடம் திரும்பி, “அம்மாடி ருக்கு, நீ போய் உன் அக்கா தங்கச்சிங்க கூட இரு. நான் கூப்பிடுறேன்.” தன்னைப் போல் வடிவேலு சொல்லிவிட, அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள் அவள்.
“அக்காவா ஆனா இவங்களுக்கு சொந்தம் னு யாரும் இல்லைன்னு தானே சொன்னீங்க, இப்ப அக்கா தங்கச்சிங்கன்னு சொல்றீங்க.” முந்திக்கொண்டு வந்தான் தெய்வா.
“இவன், இவங்க டிபார்ட்மெண்ட் மோப்பநாயை விட மோசம் பா” உள்ளுக்குள் நினைத்தவராக, “டேய் இந்த வீட்டுக்கு வரப் போற நாலு மருமகளுங்களும், இப்ப இங்க தான் இருக்காங்க. இப்ப மட்டும் இல்லை இனி எப்பவுமே இங்க தான் இருக்கப் போறாங்க. அவங்க ஓரகத்திகளா பழகாம அக்கா, தங்கச்சிங்களா பழகனும், அது தான் என்னோட ஆசை. அதனால் தான் அப்படிச் சொன்னேன்.
சரி அதை விடுங்க, நான் பேச வந்ததை பேசிடுறேன். எனக்கு உங்க கல்யாணத்தை தள்ளிப் போடுவதில் விருப்பம் இல்லை. வர முதல் முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தம் இரண்டாவது முகூர்த்தம் இல்லைன்னா அதுக்கு அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வைச்சிக்கலாம் னு முடிவு பண்ணி இருக்கேன். இதில் யாருக்காவது ஆட்சேபனை இருக்கா.” சம்பிரதாயக் கேள்வி தான். தன் அருமைப் பிள்ளைகளின் முடிவு எப்படி இருக்கும் என்பது தான் அவருக்குத் தெரியுமே.
“எதுக்கு பா இவ்வளவு அவசரம்.” என்றான் செல்வா.
“அதோட நாகா இங்க இல்லவே இல்லை. அவன்கிட்ட கேட்காமலே அவனுக்கும் சேர்த்து நிச்சயம், கல்யாணம் னு நீங்களே முடிவு பண்றீங்க. அவன் வந்து பிரச்சனை பண்ணி மத்த கல்யாணத்தையும் நிறுத்திடப் போறான்.” சரியாகக் கணித்தான் தர்மா.
“எனக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்ல. நாளைக்கே நீங்க கல்யாணம் னு சொன்னாலும் நான் தயார் தான்.” ருக்குவைப் பார்த்தபடி சிரித்தான் தெய்வா.
“நாகா என்னோட செல்லப் பையன். நான் என்ன சொன்னாலும் அதுக்கு மறுபேச்சு பேச மாட்டான். அதனால் தான் கல்யாண விஷயத்தில் நான் இந்தளவு நம்பிக்கையோட இருக்கிறதே.
மோர் ஓவர் காலையிலே அவன்கிட்ட போன் பண்ணி அவனுக்குப் பொண்ணு பார்த்த விஷயத்தைச் சொன்னேன். அவன் நீங்க பார்த்து கட்டிக்கச் சொல்ற பொண்ணை கண்ணை மூடிக்கிட்டு கட்டிக்குவேன்னு சொல்லிட்டான். இப்ப நீங்க தான் சொல்லணும்.” எங்கே அடித்தால் காய் விழும் என்று தெரிந்து சரியாக அடித்தார் வடிவேலு.
சகோதரர்கள் நால்வருக்குள்ளும் ஒரு பொறாமை உண்டு. உடன்பிறந்த மற்றவர்களை விடத் தானே தங்களுடைய அப்பா மேல் அதிக பாசம் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. அதைக் குறிவைத்து வடிவேலு பேச, செல்வா, தர்மா இருவரும் கப்சிப்பென்று ஆகிவிட்டனர்.
பிறகென்ன மூவரும் வடிவேலு கேட்ட அனைத்திற்கும் தலையாட்டி பொம்மை போல் தலையை தலையை ஆட்டிவிட்டு கிளம்பினர்.
அவர்கள் சென்றுவிட்டனர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தன் மருமகள்களை வரவழைத்து அவர்களுக்குத் தேவையான நகைகள், பட்டுப்புடவைகள் அனைத்தையும் வாங்கிக்கொடுத்தார் வடிவேலு.
அன்றைய இரவு புது இடம் என்பதையும் மறந்து அலுப்பில் அனைவரும் உறங்கிவிட ஊர்மிளா மட்டும் தூங்காமல் விழித்திருந்தாள்.
திறந்திருந்த ஐன்னல் வழியாக வெட்டவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணில் விழுந்தது ஒரு காட்சி.
யாரோ ஒருவன் முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு, உட்கார்ந்த இடத்திலே தூங்கிக்கொண்டிருந்த வாட்ச்மேனின் கவனத்தைக் கவராமல் மதில் சுவரேறி குதித்து பூனை நடையிட்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.
“களவாணிப் பய, இந்த மாமா என்ன இப்படி தூங்குமூஞ்சி நைட் வாட்ச்மேனை வேலைக்கு வைச்சிருக்காரு இப்ப என்ன பண்றது.” என்று யோசித்தவள் சகோதரிகள் தூங்கும் அறையை வெளிப்பக்கம் சாவி வைத்து பூட்டிவிட்டு மெதுவாக வடிவேலு அறைக்கு வந்தாள்.
அவருடைய அறைக்கதவு பெரும்பாலும் சாற்றப்படாமல் தான் இருக்கும். இது செல்வானின் கட்டளை என்பதால் கட்டாயம் கடைபிடிப்பார். திறந்த கதவின் வழியாக உள்ளே சென்ற ஊர்மி அவரை எழுப்பிப் பார்க்க, அவர் எழுந்தால் தானே. சுகர் மாத்திரை, ப்ரஷர் மாத்திரை வேலையைக் காட்ட நித்திராதேவியின் மடியிலே தலைவைத்துத் தூங்குவது போல் அவ்வளவு ஒரு ஆழ்ந்த தூக்கம் அவருக்கு.
“இவரு எழுந்திரிக்க மாட்டாரு போலையே. என்ன பண்றது வேற வழி இல்லை யாராவது ஒரு மாமாவைத் தான் எழுப்பனும். ஆனா எந்த மாமா ரூம் எதுன்னு தெரியலையே.” என ஊர்மி தயங்கி நின்றது சில நொடிகள் தான். அவள் அப்படி யோசித்துக் கொண்டு நிற்கும் வேளையில், திருடன் வீட்டிற்குள் வந்துவிட வாய்ப்பு அதிகம் என்று உணர்ந்து, கண்ணில் பட்ட ஒரு அறையின் கதவைத் தட்டினாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ரொம்ப நாள் ஆச்சு மனசு விட்டு சிரிச்சு … அந்த மோப்ப நாயை விட … வடிவேலு சொன்னதும் சிரிப்பு வந்திடுச்சு … அதை விட தெய்வா பண்றதெல்லாம் … யாரையும் கண்டுக்காம வழிஞ்சுட்டே இருக்கான் … சூப்பரா இருக்கு