
அத்தியாயம் 109
அரசு சொன்னதைக் கேட்டு முதல் சில நிமிடங்கள் விழிபிதுங்கி நின்ற நால்வரும் அடுத்தகணம் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
“அரசு இத்தன நாளா ஜோக்குன்னு சொல்லி நீ மொக்கை மொக்கையா போட்டுகிட்டு இருந்த. நாங்களும் வேற வழி இல்லாம அது எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு இருந்தோம். ஆனா இப்ப நீ தேறிட்ட டா.
உனக்குள்ளும் நல்ல காமெடி சென்ஸ் இருக்குன்னு நிரூபிச்சிட்ட டா. இத்தனை வருஷத்தில் நீ சொன்னதிலே தரமான ஜோக் இதுதான்.” என்றுவிட்டு மேலும் சிரித்தான் நாகா.
“எனக்கு வேணும் டா. இதுவும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும். குடும்பம் உடைஞ்சிடுச்சேன்னு மனசு கஷ்டப்பட்டு நீங்க வந்ததும் வராததுமா பாய்ஞ்சு வந்து சொன்னேன் பார்த்தியா. எனக்கு இது தேவை தான்.
நான் சொன்ன விஷயம் காமெடியா தெரியுதா உங்களுக்கு. எவ்வளவு நேரம் இங்கேயே ஒருத்தர் மடியில் இன்னொருத்தர் படுத்து இருப்பீங்க. எப்படியும் உங்க ரூமுக்கு போய் தானே ஆகனும்.
அங்க போய் உங்க பொண்டாட்டிங்க திருவாயாலே நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்மைன்னு தெரிஞ்சுக்கோங்க. இப்ப என்னை ஆளை விடுங்க. சிரிப்பா வருதா உங்களுக்கு. உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் ஹெல்ப் கேட்டு என்கிட்ட வாங்க. அந்த நேரம் உங்களைப் பார்த்து நான் சிரியோ சிரின்னு சிரிச்சு வைக்கிறேன்.” என்ற அரசு வீட்டை விட்டு வெளியே வந்ததும் பெருமூச்சு விட்டான்.
“மை டியர் அரசு நினைச்சதை விட நல்லாவே பெர்பார்ம் பண்ணிட்ட டா. உனக்குள்ள இருக்கான் டா. சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ஜானி டீப் மாதிரி ஒரு நடிகன் உனக்குள்ள எங்கேயோ ஒளிஞ்சு இருக்கான். நீ நிச்சயமா பெரிய ஆளா வருவ.” என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான்.
“என்ன தெய்வா அரசு இப்படி சொல்லிட்டுப் போறான். ஒருவேளை அவன் சொன்னது உண்மையா இருக்குமோ.” செல்வா கேட்க, “அதுக்கு வாய்ப்பே இல்ல.” என்றான் தெய்வா.
“அவன் ரொம்ப கோபப்பட்டு போனானே டா.” என்ற செல்வாவிற்கு மனது கேட்கவில்லை.
“அவனோட நாடகத்தை நாம கண்டுபிடிச்சது மட்டுமில்லாம அவனைக் கிண்டல் வேற பண்ணிட்டோமா அதனால கொஞ்சம் ரோஷம் வந்து இருக்கும் துரைக்கு. எங்க போவான் அங்க சுத்தி இங்க சுத்தி நைட்டு சாப்பாட்டுக்கு இங்க தான் வருவான். விடு பாத்துக்கலாம்.” மிக எளிதாகச் சொன்னான் நாகா.
“ஒருவேளை அவன் சொன்னது உண்மையா இருந்து, நிஜமாவே நம்ம பொண்டாட்டிங்க சண்டை போட்டு இருந்தா என்ன பண்றது.” என்றான் தர்மா.
“நிஜ சண்டையாவே இருக்கட்டுமே. அவங்களைப் பத்தி நமக்குத் தெரியாதா? நாம வாங்கிட்டு வந்த பரிசை கொடுத்தா நம்மகிட்ட அதுக்கான சந்தோஷத்தை வெளிக்காட்டுவதற்கு முன்னாடி, அக்காகிட்ட காட்டிட்டு வரேன்னு ஒரே ஓட்டமா ஓடிடுவாங்க. அவ்வளவு தான் நாலு பேரும். இதைப் போய் பெருசா எடுத்துகிட்டு, வாங்க போலாம்.” சாதாரணமாய் சொன்னபடி அறையை நோக்கி நடந்தான் தெய்வா.
“ஊர்மி, கண்ணம்மா என்ன பண்ற. ஒரு வாரமா என்னை ரொம்ப மிஸ் பண்ணியா. அத்தான் உனக்காக என்ன எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாரு. ஆமா ஜன்னல் எல்லாத்தையும் அடைச்சிட்டு எதுக்கு இப்படி இருட்டில் இருக்க. லைட்டை போட்டுக்க வேண்டியது தானே.” என்றுவிட்டு நாகா அறைக்குள் மின்விளக்கை ஒளிரச் செய்ய அதன் பலனாய் தோன்றிய வெளிச்சத்தில் ஊர்மி நன்றாக தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
“ச்சே தூங்கிட்டு இருக்கா போலயே.” என்று நாகா நினைத்த அதே நேரத்தில் ஊர்மி கண்களைத் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் மூடிக்கொண்டாள். ஆனால் கண நேரத்திற்குள் அதை கவனித்துவிட்டான் நாகா.
“ஏய் திருட்டு கொட்டு யாரை ஏமாத்தப் பார்க்கிற. மரியாதையைக் கண்ணைத் திற. இல்ல தண்ணியை தூக்கி மூஞ்சில ஊத்திடுவேன்.” என்றான் சிரிப்புடன். கேட்கும் கேட்காமல் அப்படியே படுத்திருந்தாள் ஊர்மி.
அண்ணன், தம்பிகள் போதை இறங்கி நிதர்சனம் புரிந்திருக்க, தன் மூன்று சகோதரர்களோடு தகப்பன், அரசு, ஊர்மி, அவளுடைய சகோதரிகள் என அனைவரும் தனக்கு முக்கியமானவர்களே என உணர்ந்திருந்தான் நாகா.
சமீப காலமாக ஊர்மி தன்னைப் பார்க்கும் ஏக்கப் பார்வையும், சுற்றுலா கிளம்பும் நேரத்தில் அவள் உறங்கிக்கொண்டிருந்ததால் அவளிடம் சொல்லாமலே சென்றதும் நினைவு வந்து, ‘என்னடா நாகா இப்படி பண்ணிட்ட. பாவம் கண்ணம்மா. அங்க வீட்டில் தனியா என்ன பண்ணிக்கிட்டு இருக்காளோ. எல்லாத்திலும் உச்சத்தில் தான் இருப்பியா? நிதானமே கிடையாது உனக்கு.’ தன்னைத் தானே கடிந்து கொண்டு தான் வீட்டிற்கு கிளம்பி வந்திருந்தான்.
கணவன் தன்னை சமாதானம் செய்வான் என்று நினைத்து ஏமாந்த கோபத்தில் எழுந்து அமர்ந்த ஊர்மி, “இப்ப மட்டும் எதுக்காக என்கிட்ட வந்து பேசுறீங்க. உங்க அண்ணன் தம்பிங்க எல்லாரும் அவங்க அவங்க பொண்டாட்டிகிட்ட போய்ட்டாங்களா. அதனால் தான் நீங்களும் என்கிட்ட வந்தீங்களா.
இத்தனை நாளா நான் தூங்கிட்டு இருந்தா என்ன முழிச்சுட்டு இருந்தா என்னன்னு கவலைப்படாம, உங்க அண்ணன் தம்பிங்க கூட தானே கடலை போட்டுட்டு இருந்தீங்க. இப்ப என்ன திடீர்னு பாசம் பொங்குது. அதுவும் கண்ணம்மாவாம். பொல்லாத கண்ணம்மா. அப்படி நீங்க கூப்பிட்டு எத்தன மாமங்கம் ஆச்சு தெரியுமா?” மூக்கு விடைக்க அவள் கேட்க, நெற்றியை விரல்களால் கீறிக்கொண்டான் நாகா.
“ஊருக்கு கிளம்பி போகும் போது கூட ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லவே இல்லல்ல.” விட்டால் அழுதுவிடுபவள் போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் ஊர்மி.
“இது திடீர்னு பண்ண ப்ளான் ஊர்மி. தெய்வா எங்களுக்கு யோசிக்க கூட நேரம் கொடுக்கல. எல்லாரையும் கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டு போனான். வயித்தில் அடிபட்டதில் இருந்து மண்டை குழம்பின மாதிரி சுத்திக்கிட்டு இருக்கான் லூசுப்பய.” என்று தமையனை நினைத்து சிரித்தவன்,
“எப்படியும் செல்வா லீலா அண்ணிகிட்ட சொல்லி இருப்பான். அவங்க மூலமா விஷயம் உனக்குத் தெரிய வந்திருக்கும் னு நினைச்சிட்டேன்.” நாகா இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்பது போல் பேச, அது மேலும் எரிச்சலைக் கிளப்பியது ஊர்மிக்கு.
“வந்து இவ்வளவு நேரம் ஆகுது. இந்த ஒரு வாரமா நீ என்ன பண்ண ஏது பண்ணன்னு ஒரு வார்த்தை கூட என்னைக் கேட்கத் தோணல இல்ல உங்களுக்கு.” பிள்ளைகளை சுமந்து கொண்டிருக்கும் சிறுபிள்ளைக்காரி தொட்டதற்கெல்லாம் கோபம் கொண்டாள்.
“இதுதான் உன் கோவமா. இப்ப சொல்லு, இந்த ஒரு வாரமா என்ன பண்ண. அண்ணி மத்தவங்க எல்லாரும் சேர்ந்து உன்னை எப்படி எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. என்ன எல்லாம் வெரைட்டி வெரைட்டியா சாப்பிட்ட.” அரசு சொன்னதை எல்லாம் முற்றிலுமாக மறந்து, தன் வீட்டில் இதுநாள் வரை என்ன வழக்கமோ அதை வைத்து கேள்வி கேட்டான் நாகா.
“மண்ணாங்கட்டி, எனக்கும் அவங்க மூணு பேருக்கும் சண்டை. மூணு நாளா யாரும் பேசிக்கவே இல்லை. உங்க பிள்ளைங்களை வைச்சுக்கிட்டு நானா போய் கஷ்டப்பட்டு சமைச்சு சாப்பிட்டேன். எனக்கு கால் பிடிச்சு விட கூட யாரும் வரல தெரியுமா?” ஊர்மி கண்ணைக் கசக்கிக்கொண்டே சொல்ல நாகாவின் வயிற்றில் பயப்பந்து உருள ஆரம்பித்தது.
“என்ன சொல்ற நீ. நீ லீலா அண்ணி கூட சண்டை போட்டியா? என்னால நம்பவே முடியலையே.” அதிர்ச்சியாய் கேட்டான் நாகா.
வார்த்தைக்கு வார்த்தை லீலாவை அண்ணி என்று அழைப்பவனுக்கு, ருக்கு மற்றும் தேவகியை அவர்கள் பெயர் சொல்லி குறிப்பிடக் கூட இன்னும் வரவில்லை.
“என்னால கூட நம்ப முடியல. அவங்களுக்குள்ள இப்படி ஒரு சுயநலமான எண்ணம் இருக்கும் னு.” வெகு சாதாரணமாகச் சொன்னாள் ஊர்மி.
“ஏய், அடிச்சேன்னு வைச்சுக்கோ பல்லு கையோடு வந்திடும். யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற. லீலா அண்ணிக்கு சுயநலம் னா என்னென்னே தெரியாது. சும்மா பைத்தியக்காரி மாதிரி பேசாம ஒழுங்கு மரியாதையா அவங்க கிட்ட போய் பேசு.” மனைவிக்குக் கணவனாக இல்லாமல், அண்ணிக்கு கொழுந்தனாக தன் கடமையை சிறப்பாக ஆற்றினான் நாகா.
“அண்ணின்னு நீங்களும், மூத்த மருமகன்னு வடிவேல் மாமாவும், தங்கச்சின்னு அரசு அண்ணனும் அவங்களைத் தலையில் தூக்கி வைச்சு கொண்டாடுறதால் தான் அவங்களுக்கு தலைகணம் கூடிப்போச்சு.” ஊர்மி சொல்ல, “போடி பைத்தியம்.” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறப் பார்த்தான் நாகா.
“நான் பைத்தியம் தாங்க. அவங்களோட பொய்யான அன்பை இத்தனை வருஷமா உண்மைன்னு நம்பிக்கிட்டு இருந்தேன் இல்ல. நான் பைத்தியம் தான். அவங்களுக்கு சுயநலம் னா என்னன்னு தெரியாதா. நல்ல காமெடி. எனக்கு இப்பதான் அவங்களோட சுயரூபம் மொத்தமா புரியுது.
எங்க மூணு பேரையும் வீட்டில் சும்மா இருக்க வைச்சுட்டு அவங்க மட்டும் வேலைக்குப் போய் சம்பாதிச்சது எங்க மேல உள்ள பாசம் னு இத்தனை நாளா நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா அதுக்கு பின்னாடி இருந்தது அவங்களோட ராஜதந்திரம்.
அவங்க மட்டுமே சம்பாதிச்சா தானே, அதையே சொல்லிக்காட்டி எமோஷனலா லாக் பண்ணி காலத்துக்கும் எங்களை அடக்கி ஆள முடியும். அப்பத்தானே நாங்க எப்பவும் அவங்களுக்கு கட்டுப்பட்டு இருப்போம்.
எங்க மூணு பேரையும் இந்த வீட்டில் கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு காரணமும் இதுவா தான் இருக்கும்.” தன்னைப் போல் பேசிக்கொண்டே போனாள் ஊர்மி. நாகாவின் முகம் வெளிறிப் போனது.
“ஊர்மி என்ன ஆச்சுடி உனக்கு. எதுக்காகடி இப்படி எல்லாம் பேசுற. உனக்கு இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்க யோசிக்கத் தெரியாதே. நான் அந்தப் பக்கம் போன நேரம் பார்த்து எந்த சாத்தான் வந்து என்ன சொல்லி உன் மூளையைக் குலைச்சது.” என்றவனை முறைத்தாள் ஊர்மி.
“எனக்கு கொஞ்ச நாளா தான் லீலா அண்ணியைத் தெரியும். மனசார சொல்றேன் லீலா அண்ணி ரொம்பவே தங்கமானவங்கடி. அவங்களைப் பத்தி சும்மா பேச்சுக்கு கூட இப்படி எல்லாம் பேசாத. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” நாகாவின் இருதயம் நடுங்க ஆரம்பித்திருந்தது. அரசு சொன்னது போல் வீட்டின் சூழ்நிலை மாறி இருந்தால் நினைக்கவே இருதயத்தின் மீது இமயம் ஏறிய உணர்வு.
“கட்டின பொண்டாட்டி நான் இவ்வளவு தூரம் சொல்றேன். என் வார்த்தையில் நம்பிக்கை வரல. ஆனா என் அக்கா மேல உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?”
“அறிவு கெட்ட தனமா பேசாத ஊர்மி. எனக்கு கோவம் வருது.” நெடுநாளைக்குப் பிறகு ஊர்மி மேல் உண்மைக் கோபம் கொண்டான் நாகா.
“என் பேச்சு உங்களை அந்த அளவு வெறுப்பேத்துதா? சரிதான் நான் பேசல போதுமா. இத்தனை வருஷமா கூட இருந்தவங்களே என்னை வெறுத்து, ஏமாத்தும் போது நீங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்தவர் தானே. உங்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்னும் இல்ல.” என்றாள் ஊர்மி.
“வார்த்தையில் கத்தி வைச்சிருக்கியாடி. இப்படி வலிக்க வலிக்க பேசுற. என்கிட்டையே இந்தளவு பேசுறியே அண்ணிகிட்ட என்னன்ன பேசி இருப்ப. நீ என் பொண்டாட்டி ஊர்மி தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.” என்றுவிட்டு கோபமாக அந்த அறையை விட்டு வெளியேறினான் நாகா.
“ருக்கு” சந்தோஷமாக அழைத்தபடி அவர்கள் அறைக்குள் நுழைந்தான் தெய்வா.
“வாங்க ஒரு வழியா வீட்டுக்குத் திரும்ப வர உங்களுக்கு நேரம் கிடைச்சிடுச்சு போல. நல்ல விஷயம் தான் ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்க,
“சாப்பிடலாமே, எனக்கு கூட ரொம்ப நாளா ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு என்னமோ மாதிரி இருக்கு. ஒன்னு பண்றியா சூடா இட்லி அவிச்சு வேர்க்கடலை சட்னி பண்ணுவியே அதை பண்றியா?” ஆசையாகக் கேட்டான்.
“நான் வேர்கடலை சட்னி வைச்சா அது டேஸ்ட்டா இருக்காது.” என்றாள் எங்கோ பார்த்தபடி.
“அப்ப, இத்தனை நாளா அது யார் ரெடி பண்ணது.” என்ற தெய்வாவிற்கு, “லீலா” என்று மொட்டையாக பதில் கொடுத்தாள் ருக்கு.
அழுக்குத் துணிகளை அதற்குண்டான கூடையில் போடுவதற்காக எடுத்துக்கொண்டிருந்த தெய்வாவின் கரம் ஒருநிமிடம் வேலை நிறுத்தம் செய்தது.
“ருக்கு என்ன ஆச்சு உனக்கு. உன்னோட அக்காவை நீ ஏன் பெயர் சொல்ற?” ஆச்சர்யமாகக் கேட்டான்.
“ஏன் நான் பெயர் சொன்னா அந்த மகாராணி தலையில் இருக்கிற கிரீடம் இறங்கிடுமா?” என்ற ருக்குவின் பதிலில் பிரச்சனை பெரிது என்பதைப் புரிந்துகொண்ட தெய்வா, “கூப்பிடக் கூடாதுன்னு ஒன்னும் இல்ல. ஆனா இதுவரைக்கும் நீ கூப்பிட்டது இல்லையே அதனால தான் கேட்டேன்.” சமாதானமாகப் போகப் பார்த்தான்.
“இனிமே எல்லாம் அப்படித்தான். அறிவியல் பிரகாரம் இரட்டைக் குழந்தைகளில் கடைசியா பிறக்கிற குழந்தைகள் தான் முதலில் உருவான குழந்தையாம். அப்படிப் பார்த்தா எங்க நாலு பேருக்கும் மூத்தவ தேவகி தான். அதனால அவங்களை அக்கான்னு கூப்பிட வேண்டிய கட்டாயம் இல்ல.” என்றாள் ருக்கு.
தெய்வாவிற்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. அரசு விஷயத்தைச் சொன்ன போது சிரித்து வைத்தது நினைவு வர, தலையை உலுக்கிக்கொண்டு, “என்ன ஆச்சு ருக்கு. எதுக்காக நாலு பேரும் சண்டை போட்டுக்கிட்டீங்க.” என்றான் பிரச்சனையைத் தீர்க்க முடியுமா என்னும் நோக்கத்தில்.
“நான் சொல்றேங்க. நான் பண்ணதில் ஏதாவது தப்பு இருக்கான்னு நீங்களே சொல்லுங்க. ஏதோ ஒரு கோபத்தில் லீலாவைப் பார்த்து உங்க புருஷன் தான் எல்லாத்துக்கும் காரணம், அவர் தான் மத்த மூணு பேரையும் கட்டாயப்படுத்தி கூட்டிட்டுப் போயிட்டாருன்னு சொல்லிட்டேன். அதுக்கு அவங்களுக்கு அப்படி ஒரு கோபம் வந்துடுச்சு. என்னைப் பார்த்து என்னன்ன பேசினாங்க தெரியுமா?
ஏன் அக்கா நேத்து வந்த ஒருத்தருக்காக என்னை இவ்வளவு தூரம் பேசுறீங்களே இது நியாயமான்னு கேட்டேன். நீ இத்தனை வருஷமா என்கூட இருந்தாலும், என் தங்கச்சி மட்டும் தான்.
ஆனா அவரு நேத்து வந்தவரா இருந்தாலும் எனக்கு எல்லாமே அவர் தான். அவரைப் பத்தி நீ பேசுறதை என்னால ஏத்துக்க முடியாதுன்னு என் முகத்தை பார்த்து சொல்றாங்க.” என்க, அதில் பெரிய தவறு இருப்பது போல் தோன்றவில்லை தெய்வாவிற்கு.
“இதுக்கு என்னங்க அர்த்தம். அப்ப இத்தனை நாளா எங்களைத் தவிர வேறு யாருமே முக்கியம் இல்லன்னு அவங்க சொன்னது எல்லாமே பொய் தானே. பொய் சொல்லி, பொய் சொல்லி எங்க எல்லாரையும் அவங்களோட கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைச்சு இருந்திருக்காங்க. அவங்களைச் சொல்லி என்ன, நாங்களும் இல்ல கிளிப்பிள்ளை மாதிரி இது எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருந்திருக்கோம்.”
“நீங்க சொன்னது சரிதாங்க. ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் நாம எப்பவுமே இன்னொருத்தரை எதுக்காகவும் சார்ந்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தா இப்படித் தான் ஏதாவது ஒரு காலகட்டத்தில் குத்திக்காட்டி நம்மளை அசிங்கப்படுத்துவாங்க.
எனக்கு இப்பெல்லாம் அவங்க முகத்தைப் பார்க்க பார்க்க கோவம் கோவமா வருது. இது நீடிக்க கூடாது.” ருக்கு நிறுத்த, “அதுக்கு என்ன பண்ணலாம் னு நினைக்கிற ருக்கு.” என்று சந்தேகமாகப் பார்த்தான் தெய்வா.
“இத்தனை நாளா நீங்க கேட்டுக்கிட்டு இருந்தீங்க. நான் ஏதோ ஒரு கனவு உலகத்தில் இருந்துக்கிட்டு வரமாட்டேன்னு அடம் பிடிச்சிட்டேன். ஆனா இப்ப நான் கேட்கிறேன், பேசாம நாம இரண்டு பேரும் தனிக்குடித்தனம் போயிடுவோமா. மாமாவையும் அரசு அண்ணாவையும் நம்ம கூட கூப்பிட்டுக்கலாம்.” மனப்பாடம் செய்ததை ஒப்புவிக்கும் குழந்தை போல் வேகமாகச் சொன்னாள் ருக்கு.
“பைத்தியம் மாறி பேசாத ருக்கு. இனிமே இந்த வீட்டில் தனிக்குடித்தனம் அப்படிங்கிற பேச்சுக்கு இடமே கிடையாது. இன்னொரு தடவை நீ இதைப் பத்தி பேசின அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று விட்டு கோபித்துக் கொண்டு மாடிக்குச் சென்றான் தெய்வா. அங்கு ஏற்கனவே ஊர்மியிடம் சண்டையிட்டு வந்த கோபத்தில் நின்றுகொண்டிருந்தான் நாகா.
“லீலா என்ன இது சின்ன குழந்தை மாதிரி சண்டை போட்டுட்டு வந்திருக்கீங்க. அவங்க நம்மளை விடச் சின்னவங்க. அவங்களுக்கு நல்லது கெட்டது நாமதான் எடுத்துச் சொல்லணும்.
அவங்க ஏதாவது தப்பு பண்ணா அதை சரியான வழியில் புரிய வைக்கணும். அதை விட்டுட்டு நீயா நானான்னு நேருக்கு நேர் சண்டைக்கு நிக்கிறது நல்லாவா இருக்கு.” அதிருப்தியாய் விசாரித்தான் செல்வா.
“எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்குங்க. அவங்க யாரு உங்களைப் பத்தி பேசுறதுக்கு. என்னைப் பத்தி பேசுறதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா உங்களை ஒரு வார்த்தை கூட சொல்லக்கூடாது.
அவங்க ஒன்னும் வாயில் விரல் வைச்சா கடிக்கத் தெரியாத சின்னப் பசங்க கிடையாது. எனக்கும் அவங்களுக்கும் ஒரே வயசு தான். நான் பொறுமையா இருக்கேன். அப்புறம் ஏன் அவங்களால பொறுமையாக இருக்க முடியல.” என்றவளின் பேச்சிற்கு என்ன பதில் சொல்லிவிட முடியும் அவனால்.
“நாம என்ன வேண்ணாலும் பண்ணலாம். அக்கா நம்மளை ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு இந்த ஒரு வாரத்தில் நிறையவே பண்ணிட்டாங்க. நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்.
ஆனா உங்களை ஒரு வார்த்தை சொன்னதும் எனக்கு எங்கிருந்து கோபம் வந்ததோ தெரியல, திட்டிட்டேன். சரி நான் தான் கோபத்தில் திட்டிட்டேன். அவங்க கொஞ்சம் பொறுத்துக்க கூடாதா. என்கிட்ட சண்டைக்கு வந்துட்டாங்க.
என் தங்கச்சிங்க, இப்படி மாறியதை என்னால ஏத்துக்க முடியலங்க. இங்கேயே இருந்தா எங்கே அவங்களை முழுமையா வெறுத்திடுவோனேன்னு பயமா இருக்கு. நாம வேண்ணா கொஞ்ச நாள் தனியாக போய் இருக்கலாமா.” லீலா நேரடியாகக் கேட்டு விட அவளை எதிர்த்துப் பேசவும் முடியாமல் அவள் கேட்பதற்கு தலையாட்டவும் முடியாமல் தவித்தான் செல்வா.
“இப்ப முடிவா என்ன தான் சொல்றீங்க என் கூட தனிக்குடித்தனம் வர முடியுமா முடியாதா.” தேவகி தர்மாவைப் பார்த்து அதட்டலாகக் கேட்டாள்.
“கடைசி வரைக்கும் என்னால இங்க இருந்து எங்கேயும் வர முடியாது. நமக்குக் கல்யாணம் ஆன புதுசில் நீ என்கிட்ட ஒன்னு சொன்ன ஞாபகம் இருக்கா.
உங்களுக்கு உங்க அண்ணன் தம்பி கூட ஆகாதுன்னா நீங்க பேச வேண்டாம். அதுக்காக என்னைத் தனிகுடித்தனம் கூப்பிடாதீங்கன்னு சொன்ன. இப்ப நான் அதையே உனக்கு திருப்பி சொல்றேன்.
உன்னோட அக்கா, தங்கச்சிங்க கூடபேசாமல் இருப்பது உன்னோட தனிப்பட்ட விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். ஆனா என் அண்ணன், தம்பிகிட்ட இருந்து என்னைப் பிரிக்க நினைக்காத. நீ நினைச்சாலும் அது முடியாது.” என்று கோபித்துக் கொண்டு சென்றான் தர்மா.
மொட்டை மாடியில் நிலவு வெளிச்சத்தில் நாகா, தெய்வா தர்மா மூவரும் நின்று கொண்டிருக்க சோகத்துடன் மெதுவாக மாடி ஏறி வந்தான் செல்வா.
“என்ன தான் ஆச்சு நம்ம வீட்டுக்கு. நாம இல்லாத இந்த ஒரு வாரத்தில் ஏதேதோ நடந்து நிலைமை தலைகீழா மாறிப் போய் இருக்கு. அது தெரியாம அந்த அரசு பயல வேற கண்டபடி பேசிட்டேன்.” ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடிச் சொன்னான் நாகா.
“எனக்குப் பைத்தியம் பிடிக்குது. எப்ப பாத்தாலும் என் அக்கா என் அக்கான்னு சொல்ற என் பொண்டாட்டி இன்னைக்கு அவங்க யாரோ நான் யாரோ, தனிக்குடித்தனம் போயே ஆகனும் னு சொல்றா. கஷ்டமா இருக்கு.” என்றான் தர்மா.
“ருக்குவுக்கு எப்பவும் அவ அக்கா தங்கச்சிங்க தான் முதலில் னு இத்தனை நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
அந்த நினைப்பைத் தவிர்த்து, அவங்களை விட எனக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை அவங்க அளவு என்னை நினைச்சா போதும் னு நான் திருந்தி இருக்க, இந்நேரத்தில் ருக்கு இப்படி மலையேறி இருக்காளே.” வருத்தமாய் சொன்னான் தெய்வா.
“ஒருத்தர் புருஷனை இன்னொருத்தர் குற்றம் சொன்னதுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை. நம்ம மேல நம்ம பொண்டாட்டிங்க இந்தளவு மரியாதை வைச்சுருக்காங்கன்னு நினைச்சு சந்தோஷப்படுறதா இல்லை நம்மளால அவங்களுக்குள்ள சண்டைன்னு நினைச்சு வருத்தப்படுறதா.” என்றான் செல்வா.
இவர்கள் இங்கு இப்படி புலம்பிக் கொண்டிருப்பதை, ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டபடி ஏதோ படம் பார்ப்பதைப் போல ஆர்வமாக ஆளுக்கொரு கேரட்டை கடித்துத் தின்று கொண்டு மாடிப்படியின் படிக்கட்டில் மறைந்து நின்று கேட்டுக்கொண்டு, சத்தம் போடாமல் சிரித்துக் கொண்டிருந்தனர் பெண்கள் நால்வரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Happpadii..hhppy now
Very super… Super epi sis…