Loading

 அத்தியாயம் 106

     தன் உடலில் இரத்தத்தைப் பார்த்த தெய்வாவிற்கு சில நொடிகள் ஒன்றுமே புரியவில்லை. அருகில் நின்றவர் அதிர்ச்சியில் கத்திய பின்னர் தான் தெய்வாவும் வலியை உணர்ந்தான், மற்றவர்களும் அவன் நிலையைக் கவனித்தனர்.

     “தெய்வா” என்றபடி இராதா இல்லத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருத்தராக அவனை நோக்கி ஓடி வர, “நாகா சீக்கிரமா வெளிய ஓடி போ. சுத்தி முத்தி பாரு. உன்னைப் பார்த்து யாராவது ஓட ஆரம்பிச்சா, அவனைத் துரத்திப் பிடி.” குறிப்பு கொடுத்து அவனை அனுப்பி வைத்த தெய்வா கத்தியைப் பிடுங்கப் பார்க்க வேகமாக அவன் கையைப் பிடித்தான் செல்வா.

     “இந்த நேரம் இதை எடுப்பது இரத்த இழப்பை இன்னும் அதிகமாக்கும். நீ ஒன்னும் பயப்படாதே நான் பார்த்துக்கிறேன். ஒன்னும் ஆகாது.” சொன்ன செல்வாவிற்கு குரலில் ஆரம்பித்து கைகள் வரை நடுங்கிக்கொண்டிருந்ததை அவனே அறிந்திருக்கவில்லை. உடன்பிறந்தவனின் இரத்தம் அவன் இரத்தத்தை பதறச் செய்திருந்தது.

     காரை எடுக்கச் சென்ற அரசுவைக் கத்தி அழைத்தபடி எழுந்த அண்ணனின் கரத்தைப் பிடித்த தெய்வா, “எனக்கு ரொம்ப வலிக்கிது. வலி குறையுறதுக்கு உடனடியா ஏதாவது பண்ணு.” என்றான்.

     “இங்க பார், கத்தியால் குத்தினா வலிக்கத்தான் செய்யும். இந்த நேரத்தில் உன்னோட தைரியம் மட்டும் தான் உன்னைக் காப்பாத்தும். பதற்றப்படாம அமைதியா இரு, இரத்த இழப்பு அதிகமாச்சுன்னா கஷ்டம்.” என்ற செல்வாவின் தோள்களில் அழுத்தமாகப் படர்ந்தது ஒரு கரம்.

     திரும்பிப் பார்க்க லீலா நின்று கொண்டிருந்தாள். அவள் அருகே, அவளின் கரத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அதிர்ந்த பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள் ருக்கு.

     “ருக்கு அழாத. எனக்கு ஒன்னும் ஆகாது.” அத்தனை வலியிலும் சிரமப்பட்டு புன்னகையோடு பேசினான் தெய்வா.

     “தெய்வா அமைதியா இரு. எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத. எக்காரணத்தைக் கொண்டும் கண்ணை மூடாத.” சொன்ன செல்வாவிற்கு, தெய்வாவின் வயிற்றில் இருக்கும் கத்தியைப் பார்க்க பார்க்க நெஞ்செல்லாம் பதறியது.

     உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். அரசுவை இன்னமும் காணவில்லை என்கிற கடுப்பில் அரசு என இவன் கத்திய கத்து இராதா இல்லம் முழுக்க எதிரொலிக்க, மாமா என்று பயத்தில் அலறியே விட்டாள் ருக்கு.

     “ஏன்டா நீயும் பயந்து, அவளையும் பயமுறுத்துற. போற போக்கைப் பார்த்தா எனக்குப் பக்கத்தில் உன்னையும் சேர்த்து அட்மிட் பண்ணனு போல.” அந்த நிலையிலும் கிண்டலாய் பேசிய தெய்வா, ருக்குவின் பயந்த தோற்றம் கண்டு முகத்தைச் சுருக்கினான்.

     “லீலா அவங்களை இங்க இருந்து கூட்டிட்டு போங்க. அவங்களைப் பார்க்க பார்க்க இவன் ரொம்ப எமோஷனல் ஆகுறான். இது நல்லதுக்கு இல்ல.” என்ற செல்வாவின் கத்தல் அங்கிருந்த அனைவருக்குமே புதிது.

     “என்னடா நான் கொஞ்ச நாளா நிறுத்தி இருந்ததை இப்ப நீ ஆரம்பிக்கிறியா?” ருக்கு மேல் பொறாமைப்படாதே என்பதை மறைமுகமாக உணர்த்தினான் தெய்வா.

     “மண்ணாங்கட்டி உன்னை நான் அமைதியா இருக்கச் சொன்னேன்.” என்றபடி வாசலைப் பார்த்து பற்களைக் கடித்தான் செல்வா.

     “இரத்தம் நிறையப் போகுதே மாமா.” தேவகி பதற, “எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா?” என தன்னுடைய பதற்றத்துடன் கூடிய இயலாமையினால் வெளிப்பட்ட கோவத்தை குடும்பத்தினர் மீது காட்டினான் செல்வா.

     “செல்வா நீ ரொம்ப எமோஷனலா இருக்க. இப்ப உன்னால இவரை ஹேண்டில் பண்ண முடியாது. நீ நகரு, நான் பார்த்துக்கிறேன்.” என்று செல்வா உடன் வேலை செய்யும் ஒருவர் வர, அதில் இருந்த உண்மையை உணர்ந்தவனாக செல்வாவும் வழி விட்டான்.

     கத்தி குத்தப்பட்டிருந்த விதத்தை வைத்து நிச்சயம் அது உள்உறுப்புகளை பெரிய அளவில் சேதப்படுத்தி இருக்காது என்பதை அனுமானித்தவர், பூப்போல் அதை வெளியில் எடுக்க, அம்மா என்ற அலறலுடன் அருகே கைக்கு வாட்டமாய் நின்றிருந்த லீலாவின் கரத்தைக் கெட்டியாய் பிடித்துக்கொண்டான் தெய்வா.

     பயத்தில் நடுங்கும் இதழ்களை அடைப்பதற்காக கையைக் கொண்டு சென்ற போது தான், தன் கைகளும் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான் செல்வா.

     “ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல. சரியாப் போயிடும்.” பதறிக்கொண்டு கொழுந்தனுக்கு ஆறுதல் சொன்னாள் லீலா. செல்வாவின் நண்பர் முதலுதவி செய்து முடிக்கவும், ஆம்புலன்ஸ் உடன் அரசு வரவும் சரியாக இருக்க, அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் தெய்வா.

     ருக்கு ஓயாமல் அழுது கொண்டிருக்க அவளுக்கு மற்ற மூவரும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். அரசு மற்றும் தர்மாவிற்கு உள்ளுக்குள் இரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் குடும்பத்தின் முன்னர் அதை காட்ட இயலாது அமைதியாய் இருந்தனர்.

     தெய்வாவிற்கு எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை நடந்து கொண்டிருக்க அந்த அறையின் ஒரு ஓரத்தில் வெறும் பார்வையாளராக நின்று கொண்டிருந்தான் செல்வா.

     பதற்றத்திலும், அதை விட அதீதமான பயத்திலும் இருந்த செல்வா சிகிச்சை கொடுக்கும் அறுவைச் சிகிச்சை மருத்துவர் என்ன கேட்டாலும் தப்பும் தவறுமாக எடுத்துக் கொடுக்க, வேறுவழியே இல்லாமல் ஒரு ஓரத்தில் நிற்க வைக்கப்பட்டான்.

     இங்கே தன்னைப் பார்த்து பயந்து தன் வீட்டில் இருந்து தப்பிக்கும் நோக்கில் ஓடியவனை விரட்டிச் சென்றான் நாகா. அவன் இதில் கைதேர்ந்தவன் போல குறுக்கு சந்துகளில் இருந்த சின்னச் சின்ன தடைகளை எல்லாம் தாண்டிச் சென்று கொண்டே இருக்க, நாகாவிற்கு பழக்கம் இல்லாத காரணத்தால் கல், மண், வண்டி போன்றவைகளால் தடுக்கப்பட்டு கீழே விழுந்து சிராய்ப்புகளைப் பரிசாகப் பெற்றான்.

     இருந்தாலும் அவனை விட்டுவிட மனம் வரவில்லை. எப்பாடுபட்டாவது அவனைப் பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் அவனைத் துரத்தி ஓடிக் கொண்டிருந்தவனுக்கு கடவுள் துணை புரிய முன்னே ஓடிக்கொண்டிருந்தவன் நாகா வருகிறானா என பின்னே திரும்பி பார்த்துக் கொண்டே ஓடியதில் பைக் ஒன்றில் மோதி கீழே விழுந்தான்.

     அவனை அலேக்காகத் தூக்கிக் கொண்டு தெய்வா வேலை செய்யும் காவல் நிலையத்திற்கு வந்தான் நாகா. அங்கே அவர்கள் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்கவும் அனைத்து உண்மைகளும் வெளியே வந்தது. இங்கே சிகிச்சை முடிந்து வெளியே வந்த செல்வாவை சூழ்ந்து கொண்டது அவனுடைய மொத்தக் குடும்பமும்.

     யாரும் எதுவும் கேட்கும் முன்னர் கைநீட்டி தடுத்த செல்வா, “தெய்வாவுக்கு ஒன்னும் இல்ல. வயிற்றில் பட்ட கத்திக்குத்து அவனோட உள் உறுப்புகளை எந்தவிதத்திலும் பாதிக்கல. காயம் ஆறுவதற்கு கொஞ்ச நாள் ஆகும் அவ்வளவு தான். மத்தபடி அவன் ரொம்ப நல்லா இருக்கான்.” என்று விட்டு அடுத்த வார்த்தை பேசாமல் அருகே இருந்த ஒரு அறைக்குள் சென்று விட்டான்.

     தெய்வாவிற்கு ஒன்றுமில்லை என்ற அவனுடைய பேச்சிலேயே அனைவரும் மனம் மகிழ்ந்து திருப்தியாகிவிட, லீலா மட்டும் அவனைக் கவனித்து அவன் பின்னே சென்றாள்.

     வாசலுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தவன், சற்றே குனிந்த நிலையில், முன்னே இருந்த டேபிளில் இரண்டு உள்ளங்கைகளையும் அழுத்தமாய் வைத்து அவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டுக் கொண்டிருந்தான்.

     “என்னாச்சுங்க, உங்க தம்பிக்கு ஒன்னும் இல்லன்னு நீங்களே சொன்னிங்களே அப்புறம் என்ன.” லீலா கேட்க பதில் எதுவும் சொல்லாமல் அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான் செல்வா.

     “என்னங்க” லீலா அழைக்க, “நான் ரொம்ப பயந்துட்டேன் லீலா. இவ்வளவு பயம் என் வாழ்நாளில் நான் அனுபவிப்பது இது முதல் முறை. அவ்வளவு இரத்தத்தோட அவனைப் பார்த்ததும் எனக்கு உடல் முழுக்க உதறிடுச்சு. என்னால ஒரு வேலையும் செய்ய முடியல. இங்க பாரு என்னோட கை இப்பவும் நடுங்குது. மனசு ரொம்ப படபடப்பா இருக்கு. பயம் மனசை விட்டுப் போகவே மாட்டேங்கிது.” என்றவன் இன்னும் இன்னும் அவளுள் தொலைந்தான்.

     “நமக்கு ரொம்பப் பிடிச்ச ஒருத்தருக்கு உயிர் ஆபத்துன்னா இப்படித்தாங்க நடக்கும். இதில் பயப்பட ஒன்னுமே இல்ல. உங்க தம்பி கண்ணு முழிச்சு பேசிட்டா எல்லாம் சரியாகிடும்.” என்ற லீலா அவன் முதுகைத் தடவி ஆதரவூட்டினாள். அதுவே அவனுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தது.

     “செல்வா” என்கிற அதட்டலுடன் கதவைத் திறந்த நாகா, அண்ணனும் அண்ணியும் நின்றிருந்த கோலம் கண்டு தயங்கிப் பின்னால் திரும்பி நின்று கொண்டான்.

     அவனைப் பார்த்ததும் லீலாவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட செல்வா, “நாகா அவனைப் பிடிச்சிட்டியா?” என்றான் ஆவேசமாய். செல்வாவின் கோபம் அதன் கரையைக் கடந்திருந்தது.

     இந்த நிமிடம் அந்தப் பாதகன் கையில் கிடைத்தால், தான் உயிர்காக்கும் உத்தமத் தொழில் செய்பவன் என்பதை மறந்து அவனைக் கொன்று போடும் அளவு வெறியோடு இருந்தான்.

     “பிடிச்சது மட்டும் இல்ல, அடிச்சு அவன் ஒரு காலையும் உடைச்சிட்டேன். ராஸ்கல், எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம தெய்வா மேல கைய வைச்சு இருப்பான். அவனைக் கொன்னு போடுற அளவுக்கு உள்ளுக்குள்ள ஆத்திரம் இருக்கு, இருந்தாலும் அவன் வெறும் அம்புங்கிற காரணத்திற்காக தான் அவனை விட்டுட்டேன்.” சொன்ன நாகாவிற்குள்ளும் கோபத்தின் கங்கு அப்படியே மீதம் இருந்தது.

     “அவன் அம்புன்னா அவனை ஏவியது யாரு?” செல்வா கேட்க, “பாஸ்கர்” என்றான் நாகா.

     “பாஸ்கரா, என் ப்ரண்டு பாஸ்கரா?” அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அவன் கேட்டது கூட நாகாவிற்கு கோபத்தை தான் கிளப்பியது.

     “இன்னும் என்னடா ப்ரண்டு. இன்னொரு தடவை அவனை ப்ரண்டுன்னு சொன்ன உனக்கு மரியாதை இல்லை ஆமா. நம்ம கூடப் பொறந்தவனை, நம்மளில் ஒருத்தவனை கொல்ல நினைச்சவன் அவன். அவனை சும்மா விடலாமா?” என்க, “விடக்கூடாது” என்ற வண்ணம் அறைக்குள் வந்தான் தர்மா.

     “ஆமா நாகா, நீ சொல்றது சரிதான். என்னைச் சரிக்க என் பொண்டாட்டியைக் கொல்லப் பார்த்தான். அதைத் தட்டிக்கேட்டதுக்கு இப்போ என் தம்பியைக் கொல்லப் பார்த்து இருக்கான்.

     இதுக்கு மேலும் அவனை விட்டா அவன் நம்ம குடும்பத்தையே கொல்ல நினைச்சாலும் நினைப்பான். அவனை சும்மா விடக்கூடாது, வாங்க அவனை ஒரு கை பார்க்கலாம்.” செல்வா முன் நடக்க, அவனுக்குக் குறையா கோபத்துடன் நாகா தர்மா இருவரும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

     “என்னங்க நான் சொல்றதைக் கேளுங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. எல்லாத்தையும் சட்டப்படி பார்த்துக்கலாம். நீங்க எதுவும் ஆபத்தில் மாட்டிக்காதீங்க.” என்று லீலா கத்தியது தான் மிச்சம். அதைக் கேட்பதற்கு அவர்கள் அங்கே இல்லை.

     “விடும்மா லீலா, இவங்க மூணு பேரும் போய் அவனைக் கொன்னு போட்டாலும் சரி. என் மொத்த சொத்தையும் அழிச்சாவது என் பசங்களை நான் வெளியில் கூட்டிட்டு வருவேன்.” கண்ணீருடன் சொன்னார் தெய்வா இருந்த அவசரச்சிகிச்சைப் பிரிவின் முன்னால் அமர்ந்திருந்த வடிவேலு.

     “அது இல்ல மாமா, இவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா?” லீலாவிற்கு பதற்றம் குறையவில்லை.

     “அவங்களுக்கு ஒன்னும் ஆகாது மா. அவங்க மூணு பேரும் ஒன்னா இருக்கிற வரைக்கும், அவர்களை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது.” என்றார் வடிவேலு.

     “மூணு பேர் இல்ல மாமா நாலு பேர்.” என்று விட்டு தேவகி திரும்பிப் பார்க்க, அரசு நின்றிருந்த இடம் காலியாக இருந்தது.

     அன்றைய தினம் மாலை தெய்வா மிகவும் சிரமப்பட்டு கண்களைத் திறந்தான். தான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறோமா என்பதே ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு. கத்திக்குத்து அத்தனை தூரம் வலியைக் கொடுத்திருந்தது.

     நர்ஸ் ஒருவர் வெளியே வந்து தெய்வா கண்விழித்து விட்டதை சொல்ல, மொத்த குடும்பமும் அங்கே ஆஜர் ஆகியது.

     “தெய்வா இப்போ எப்படி இருக்கு.” செல்வா கேட்க, “ம்ம்… நல்லா ஜில்லுன்னு இருக்கு. கேட்கிறான் பாரு கேள்வியை. வயித்தை இரண்டு துண்டா கிழிச்சு தைச்சு வைச்சிருக்கீங்கடா நீங்க. வலிக்காமல் என்ன பண்ணும். வலி உயிர் போகுதுடா நாயே.” தான் நன்றாகத் தான் இருக்கிறேன் என்று அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக விளையாட்டு போலவே சொன்னான் தெய்வா.

     அதையே பிடித்துக்கொண்டு, “கத்தியை சொருகி கிண்டிக் கிழங்கெடுத்திருக்கான். அதை தைய்க்காம என்ன செய்வாங்க. உனக்கு அத்தனை கஷ்டமா இருந்தா சொல்லு, தையலை பிரிச்சு உள்ள இருக்கிறது எல்லாத்தையும் வெளியே தூக்கிப் போட்டுடுறேன். அதுக்கு அப்புறம் சுத்தமா வலி தெரியாது.” செல்வாவும் சொல்ல,

     “அடப்பாவி அண்ணா, என் மேல இருக்கிற காண்டுல நீ செஞ்சாலும் செய்வ டா. தயவுசெஞ்சு என்னை விட்டு பத்து அடி தள்ளியே நில்லு.” தெய்வா சொல்லிவிட்டு சிரிக்க முடியாமல் சிரிக்க மற்றவர்களுக்கும் லேசாக சிரிப்பு வந்தது.

     மற்றவர்களுக்காக நான் ஏன் என் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அதே தெய்வா தான் இப்போது தன் குடும்பத்திற்காக தன் வலியை மறைத்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறான். இதுவும் ஒருமாதிரி நன்றாகத் தான் இருந்தது அவனுக்கு.

     உறவுகளுக்காக விட்டுக்கொடுத்தல், சில விஷயங்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுதல் என்பதெல்லாம் செய்யலாம் போலவே என தனக்குள் யோசிக்கத் துவங்கி இருந்தான் அவன்.

     தர்மா நாகா இருவரும் அமைதியாக இருக்க, “என்ன நாகா அந்த பாஸ்கர் உடம்பில் உயிர் கொஞ்சமாவது மிச்சம் இருக்கா இல்லையா?” சிரிப்பினூடே கேட்டான் தெய்வா.

     “இது எப்படி உனக்குத் தெரிய வந்தது.” தர்மா கேட்க, “எனக்கு நினைவு வந்து ரொம்ப நேரம் ஆகுது. ஆனா கண்ணைத் தான் திறக்க முடியாம இருந்தது. அப்ப நர்ஸ் பேசிக்கிட்டது காதில் விழுந்துச்சு.

     ஏன் செல்வா, அதே பாஸ்கர் உன்னோட பொண்டாட்டியைக் கொல்ல நினைச்சப்ப கூட நீ இந்த அளவுக்கு கோபப்படலையாம். இன்னைக்கு இந்த ஹாஸ்பிடலையே இரண்டாக்கிட்டியாம் என்ன விஷயம்.” தெய்வா உள்ளுக்குள் ஊற்றெடுத்த சந்தோஷத்துடன் கேட்டான்.

     “ம்ம்… அவன் பொண்டாட்டி லீலா இல்ல நீதான்னு அர்த்தம். போதுமா இதை கேட்கத்தானே ஆசைப்பட்ட.” என்றவாறு முன் வந்தான் அரசு.

     “அண்ணா” என்று ருக்கு சிணுங்க, “பின்ன என்னம்மா கத்தி குத்து வாங்கி ஹாஸ்பிட்டலில் கிடக்கிறவன் பேசுற பேச்சைப் பாரு.

     நீ எல்லாம் என்னடா போலீஸ்காரன். ஒருத்தன் உன்னைக் கத்தியால் குத்த வந்தா நல்லா குத்துன்னு வயித்தை காமிச்சுக்கிட்டு நிப்பியா? மடக்கி பிடிச்சு அந்தக் கத்தியை வைச்சே அவன் கழுத்தை அறுத்து இருக்க வேண்டாமா?” கேட்ட அரசுவிற்கு கோபமான கோபம்.

     “அதான் நான் பண்ண வேண்டிய வேலையை என் அருமை சகோதரர்களே சீரும் சிறப்புமாக பண்ணிட்டாங்களே. ஆனா ஒன்னுடா அரசு, நீ உண்மையிலேயே பலே கில்லாடி தான்.

     என்னென்னமோ திட்டம் போட்டு, பிராடு வேலை எல்லாம் பார்த்து நாலு திசையில் இருந்த எங்களை இப்படி ஒன்னாக்கிட்டியே.” அனுபவித்துச் சொன்னான் தெய்வா.

     “செல்வா இவனுக்கு வயித்தில் தானே அடிபட்டது. மண்டையில் இல்லையே. எதுக்கும் மண்டையில் ஸ்கேன் எடுத்துப் பாரு. என்னென்னமோ பேசுறான்.” என்றான் அரசு.

     “இல்ல அரசு நான் உண்மையைத் தான் சொல்றேன். இத்தனை நாளா நீயும், அப்பாவும் சொன்ன விஷயங்களோட உண்மையான அர்த்தத்தை இப்பதான் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.

     அவன் என்னைக் குத்திட்டு ஓடின அந்த நிமிஷம், எனக்கு வந்த ஒரே கேள்வி எனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா அதுக்கு அப்புறம் என் பொண்டாட்டியை யாரு பார்த்துப்பாங்கிறது தான்.

     அந்தக் கேள்விக்குப் பதிலா அத்தனை பேரும் என்னை நோக்கி ஓடி வந்தீங்க. அப்ப தான் நான் புரிஞ்சுகிட்டேன் இத்தனை நாளா நான் எதைத் தொல்லைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனோ அது தான் உண்மையான சந்தோஷம், வாழ்க்கையோட உண்மையான தேவைன்னு. இனி என்ன ஆனாலும் என்னோட கால் இராதா இல்லத்தை விட்டு வெளியே போகாது.” என்று உறுதியாகச் சொல்ல, ருக்குவின் கண்களில் கண்ணீர்.

     இந்த வார்த்தைகள் அவன் வாயில் இருந்து வந்துவிடாதா என அவள் ஏங்கிய நாள்கள் ஏராளம். ஆனால் இப்போது வந்ததை கேட்க முடியவில்லை அவளால்.

     “அங்கிள் இங்க பாருங்க, உங்க சீமந்தப்புத்திரன் பேசுற அழகை. ஆமா தெய்வா, எனக்கு ஒரு சந்தேகம். நீ ஒத்துக்கிட்ட சரி. ஆனா உன்னோட உடன்புறப்புகள் ஒத்துக்கணுமே.” வேண்டுமென்றே கேட்டான்.

     “அவனுங்களுக்குப் பெருசா ஆட்சேபனை இருக்காது. அப்படியே இருந்தால் தான் என்ன, அதுக்கு தானே நீ இருக்க. என்ன ஒன்னு இந்த முறை உன் கூட நானும் இருக்கேன். நாம இரண்டு பேரும் சேர்ந்து எப்படியாவது அவங்களுக்குப் புரிய வைப்போம். முடியாத பட்சத்தில் அவங்களை எப்படி என் வழிக்கு கொண்டு வரணுங்கிறது எனக்குத் தெரியும்.” என்று விஷமமாக சிரித்தான் தெய்வா.

     “டேய் நீங்க பேசுற அந்த மூணு பேரும் உங்க பக்கத்தில் தானேடா நிற்கிறோம். கொஞ்சமாவது எங்களை மதிங்க டா.” என்றான் நாகா.

     “அட அதையெல்லாம் இனி எதுக்குடா சும்மா எதிர்பார்த்துக்கிட்டு இருக்க. கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அதுக்கு ஏத்த மாதிரி மனசை மாத்திக்கிறவன் தான் புத்திசாலி.” என்ற தெய்வா அடுத்த நொடி கண்கள் கலங்க,

     “ஐம் ரியலி ஸ்சாரி டா. இதுவரைக்கும் நாம எத்தனையோ முறை சண்டை போட்டு இருக்கலாம். அதற்கு நானே காரணமாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அதை எல்லாத்தையும் இப்பவே இந்த நிமிஷமே மறந்துடுவோமே.

     கிட்டத்தட்ட எனக்கு இது இரண்டாவது பிறவி மாதிரிதான். நான் எடுத்து வந்த இந்த பிறவியிலாவது உண்மையான வாழ்க்கையை வாழ ஆசைப்படறேன். என் அண்ணன் தம்பிங்களோட வாழ ஆசைப்படுறேன்.

     என்னை மாதிரி நீங்க மூணு பேரும் சாவோட விளிம்பு வரைக்கும் போய் இதைத் தெரிஞ்சுக்க நான் அனுமதிக்க மாட்டேன்.” உணர்வுப்பூர்வமாகப் பேசினான் தெய்வா.

     சாவு பயம் எல்லாவற்றையும் புரியவைக்கும் என்பார்கள். தெய்வாவிற்கு அது வலிக்க வலிக்க பல பாடங்களை கற்றுத் தந்துவிட்டு அவனை விட்டு வெகுதொலைவு சென்றிருந்தது.

     “இந்த உண்மையை உணர, நீ இவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கத் தேவையில்லை தெய்வா. நீ கண்ணு முழிக்கிற வரைக்கும் என் உயிர் என்கிட்டையே இல்ல.” என்றான் செல்வா உணர்ச்சிப் பூர்வமாய்.

     “டேய், என்னடா நடக்குது இங்க.” நாகா கேட்க, “ம்ம்… இரட்டைப் பிறவிகளுக்கே உரித்தான தனிப் பாசம். அது உனக்கு புரியலைன்னா தர்மா கிட்ட போ.” என்றான் தெய்வா.

     “ஐயோ அம்மா என்னை ஆளை விடுங்கடா சாமி.”என்று அந்த அறையை விட்டு ஓடினான் தர்மா. சிரிப்பலை தாண்டவமாடியது அந்த மருத்துவமனை அறையில்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆபரேஷன் சக்சஸ். இது உண்மைதான். மரணம் வரை போயிட்டு வந்தா அவங்களுக்கு எல்லாத்தையும் சரியா பார்க்குற பக்குவம் வந்திடும். ஒருவழியா எல்லாரும் ஒண்ணா சேர்ந்துட்டாங்க. அடுத்து என்ன நடக்கும் ??