Loading

அத்தியாயம் 105

     “என்ன சொல்ல வர நீ?” கேட்டுக்கொண்டே தன் சகோதரர்களை ஒருமுறை பார்த்துக்கொண்டான் தெய்வா.

     “இன்னுமாடா புரியல, உங்க வாழ்க்கையில் நீங்க அனுபவிச்ச சந்தோஷமான நாட்கள் இப்ப கொஞ்ச நாளா நீங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கிற நாட்கள் தான்.

     நல்லா யோசிச்சுப் பாருங்க. இந்தக் கொஞ்ச நாள், சரியா சொல்லப்போனா நீங்க நாலு பேரும் நார்மலா பேசிக்க ஆரம்பிச்ச நாளுக்கு அப்புறமா யாராவது உங்ககிட்ட வந்து என்ன விஷேஷம் நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுதுன்னு கேட்டு இருக்காங்களா? எனக்குத் தெரிஞ்சு கண்டிப்பா கேட்டு இருப்பாங்க.” அரசு கோடு போட்டுக் காண்பிக்க, நால்வருக்கும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தது.

     “என்ன தர்மா சார் வொய்ப்பை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சு இருக்க முடியலையோ. காலேஜ் கே கொண்டு வந்து சேர்த்துட்டீங்க. இப்பெல்லாம் உங்க முகத்தில் பல்பு எரிஞ்சிக்கிட்டே இருக்கு. கல்யாணம் ஆனதுக்கு தான் ட்ரீட் வைக்கல. அடுத்த ப்ரமோஷனுக்காவது ட்ரீட் வைக்கணும்”

     “நம்ம தெய்வா சார் இப்ப கொஞ்ச நாளா ரொம்ப சந்தோஷமா தெரியுறாரு இல்ல?”

     “என்ன செல்வா பொண்டாட்டி கூட இருந்த பிரச்சனை எல்லாம் சால்வ் ஆகிடுச்சு போல. காலையில் சிரிச்ச முகம் இன்னும் சிரிப்போடவே இருக்கு. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.”

     “நாகா பாவி உனக்கு இந்தளவுக்கு சிரிக்க வருமா. எப்ப பார்த்தாலும் சிவனோட நேரடி வாரிசு மாதிரி முறைச்சிக்கிட்டே இருப்ப. இப்ப இப்படி மாறிட்ட. இதை விடக் கொடுமை உனக்குக் கல்யாணம் ஆனது தெரியாம, உன் சிரிப்பில் மயங்கி ஒரு பொண்ணு உன்னை இன்ட்ரோ கொடுக்கச் சொல்லுது.” என்பதாய் அவரவருக்கு நடந்ததை யோசித்துப் பார்த்துவிட்டு,

     “நீ சொல்றது உண்மை தான்.” சில நொடி இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக ஒப்புக்கொண்டனர்.

     “இந்த இடத்தில் நீங்க ஒன்னு யோசிக்கணும். ஏன் நீங்க இதுக்கு முன்னாடி சந்தோஷமா இருந்ததே இல்லையா. அப்ப எல்லாம் விசாரிக்காம இப்போ உங்களை விசாரிக்கிறாங்கன்னா என்ன அர்த்தம்.

     வழக்கத்தை விட உங்ககிட்ட அதிக அளவு சந்தோஷமும், உற்சாகமும் தெரிஞ்சிருக்கு என்பதால் தானே. இதுக்கு என்ன காரணம் னு நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா என்ன.

     இத்தனை வருஷமா அண்ணன், தம்பிகள் எங்களுக்குள்ள ஆகாது ஆகாதுன்னு சொல்லி சொல்லியே நீங்க ஒருத்தரை விட்டு ஒருத்தர் விலகி இருந்துட்டீங்க. உண்மையில் உங்களுக்குள்ள நல்லாவே செட் ஆகுது.

     இந்தக் கொஞ்ச நாளில் உங்களுக்குள்ள வாக்குவாதம் வந்துச்சா. கண்டிப்பா வந்திருக்கும். யாராவது ஒருத்தர் ஏதாவது ஒரு வித்தியாசமான கருத்தை சொல்லி, அது இன்னொருத்தருக்கு பிடிக்காம அதை எதிர்த்து பேசி இருப்பீங்க தான்.

     ஆனா அதையே சாக்கா வைச்சு உங்களுக்குள்ள ஏன் சண்டை வரல. ஒருத்தருக்கு ஒருத்தர் ஏன் அடிச்சுக்கல.” என்க, தெய்வா மற்றும் நாகாவிற்கு இடையே நடந்த சண்டை நினைவு வந்தது அவர்களுக்கு.

     அந்த சண்டை ஆரம்பித்த விதமும் சில மணி நேரங்களில் அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் அது முடிந்த விதமும் அரசு சொல்வதை இன்னும் உற்றுக் கவனிக்க வைத்தது ராஜ் சகோதரர்களை.

     “காரணத்தை நான் சொல்லவா. ஒருத்தன் கோபப்படும் பொழுது இன்னொருத்தனை மத்தவங்க அமைதிப்படுத்தி இருப்பீங்க. இதுக்கு முன்னாடி இரண்டு பேரு சண்டை போடும் போது, மத்த இரண்டு பேரும் எனக்கென்னன்னு அமைதியா இருந்த காரணத்தால தான் சண்டை வளர்ந்து அடிதடியில் முடிஞ்சிருக்கு.” என்ற அரசுவின் வார்த்தைகள் சத்தியம் என்பது புரிந்தது.

     “சண்டை போட்டுக்காத அண்ணன் தம்பிங்க இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. அண்ணன், தம்பிக்குள்ள சண்டை வந்தா அவங்க தனித்தனியா போயிடணும் னா இந்த உலகத்தில் ஒருத்தர் கூட குடும்பமா வாழ முடியாது.” என்றான் அரசு.

     “நீ சொல்றது எல்லாமே சரிதான் அரசு. ஆனா எங்களால கூட்டுக்குடும்பமா வாழ முடியாது. ஒருத்தர் தலைவரா இருந்து மத்த எல்லோரும் அவர் சொல்வதைத் தான் கேட்டு நடக்கணும் என்பதெல்லாம் சுத்த ரப்பிஷ்.

     ஒவ்வொரு விஷயத்தை செய்யுறதுக்கு முன்னாடியும் அனுமதி கேட்டு நடப்பது எல்லாம் எங்களுக்கு சாத்தியமே இல்லாதது.

     அப்படி ஒவ்வொன்னுக்கும் அனுமதி கேட்கிறதுக்கு, அவன் உயர்ந்தவன் நான் தாழ்ந்தவனா என்கிற எண்ணம் தான் எங்களுக்கு முதலில் வரும்.

     நாம இதை பண்ணா அவங்க நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு நினைச்சு நினைச்சு வாழ முடியாது. அதுக்காகத் தான் நாங்க தனியாப் போய் எங்களோட சௌகரியத்துக்காக வாழனும் னு ஆசைப்படுறோம்.

     மத்தவங்களோட சந்தோஷத்துக்காக எங்களோட சொந்த சந்தோஷத்தை நாங்க எதுக்காக ஒதுக்கி வைக்கணும் சொல்லு.” தன் அளவில் நியாயமாகத் தான் கேட்டான் நாகா.

     “இதுதான் உங்க பிரச்சினையா. டேய் அந்த காலம் மாதிரி இந்த காலம் இல்லை. அந்தக் காலத்தில் ஒருத்தர் கையில் தான் குடும்பப் பொறுப்பு இருந்தது.

     நான் ஒத்துக்கிறேன் காரணம் அப்ப அந்த வீட்டில் இருந்த எல்லாரும் ஒரே தொழிலைத் தான் பார்த்துகிட்டு இருந்தாங்க.  இப்ப அப்படி இல்ல. நீங்க நாலு பேரும் வேற வேற தொழில் பார்க்கிறீங்க. கை நிறைய சம்பாதிக்கிறீங்க. அப்படி இருக்கும் போது நீங்க எதுக்காக ஒரு விஷயத்திற்கு இன்னொருத்தரை சார்ந்து இருக்கப் போறீங்க.

     அப்புறம் கூட்டுக் குடும்பத்தில், அண்ணன் தம்பிகள் இருக்கிற வீட்டில் எல்லாம் அண்ணன் சொல்றதை தான் தம்பி கேட்டு நடக்கணும் அப்படின்னு நிறைய படங்கள் சீரியலில் பார்த்து அதே மாதிரி தான் நம்மளையும் நம்ம அப்பா இருக்க ஆசைப்படுறாருன்னு நீங்க நினைச்ச அது சுத்த முட்டாள்தனம்.” என்க, நால்வரும் அவனை முறைத்தனர்.

     “உங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் அடிபணிந்து வாழ சொல்லல. ஏதாவது ஒரு பிரச்சினை வந்தா நாலு பேரும் ஒன்னா நின்னா போதுங்கிறது தான் அவரோட ஆசை.

     அவர் ஆசைப்பட்ட மாதிரி இருக்கிறதில் உங்களுக்கு அப்படி என்னடா பிரச்சனை வந்திடப் போகுது. நீங்க நாலு பேரும் காலையில் வேலைக்கு போகப் போறீங்க திரும்ப சாயங்காலம் தான் வருவீங்க.

     காலையில் அவரவர் கிளம்புற நேரத்துக்கு ஒன்னா தான் உட்கார்ந்து சாப்பிடணும் னு எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால் நைட்டு எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் பேசி சிரிச்சு ஜாலியாக சாப்பிடலாம். இதனால காலையில் இருந்து மனசுக்குள்ள இருந்த சோர்வு டென்ஷன் எல்லாமே பறந்து போயிடும்.”

     “சனி, ஞாயிறு லீவில் சனிக்கிழமை ஒட்டுமொத்தமா எல்லாரும் ஒரு இடத்துக்கு போனீங்கன்னா ஞாயிற்றுக்கிழமை நீங்களும் உங்க பொண்டாட்டியும் மட்டும் தனியா போயிட்டு வரலாம்.

     உங்ககிட்ட இருக்கிற பணத்துக்கு உங்களுக்கும் உங்க பொண்டாட்டிக்கும் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரும் போது, வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் சேர்த்து வாங்கிட்டு வருவது ஒன்னும் பெரிய விஷயமா இருக்காது. அப்படியே நீங்க வாங்கிட்டு வரலன்னா கூட அதைத் தப்பா நினைக்கிற யாரும் இங்க இல்லை.

     நான் இப்படி ஒரு விஷயத்தை பண்ணலாம் னு இருக்கேன் அதை பத்தி நீ என்ன நினைக்கிறன்னு ஒவ்வொன்னையும் மத்தவங்க கிட்ட கேட்டு கேட்டு உங்களைப் பண்ணச் சொல்லல. இப்படி ஒரு பிரச்சனை அதில் இருந்து எப்படி வெளிவரலாம் னு ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கச் சொல்லித் தான் கேட்கிறோம்.”

     “எல்லாத்துக்கும் மேல உங்க பொண்டாட்டிங்களைப் பத்தி நினைச்சுப் பாருங்க. அவங்களுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு. அவங்க ஒன்னா இருக்க ஆசைப்படும் போது அதை நீங்க ஏன் கெடுக்க நினைக்கிறீங்க.”

     “காலையில் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கும் போது சின்ன ஒரு சிரிப்பு, அப்பப்போ ஏதாவது ஒரு பேச்சு, கிண்டல் கேலி சண்டை, சமாதானம் இதுதான் டா அந்தப் பொண்ணுங்க உங்ககிட்ட இருந்து எதிர்பார்ப்பது. உங்களால இப்படி வாழ முடியும். நீங்க அந்த வகையில் யோசிச்சுக் கூட பார்க்க மாட்டேங்கிறீங்க என்பது தான் வேதனை.”

     “சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.

     கூட்டுக்குடும்பம் பிடிக்காது அண்ணன் தம்பிங்க கூட ஒன்னா ஒரே வீட்டில் இருப்பது பிடிக்காது, பிடிக்காதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறதுக்குப் பதில், ஏன் இந்த வாழ்க்கையை கொஞ்ச நாள் வாழ்ந்து பார்க்கக் கூடாது. ஒரு டெமோ மாதிரி. வாழ்ந்து பார்த்தா தானே டா அதிலுள்ள நஷ்டமோ, லாபமோ தெரியவரும்.”

     “நான் இவ்வளவு தூரம் சொல்லியும், இல்ல நாங்க தனித்தனியாகத் தான் போகப்போறோம் அப்படின்னா தயவு செஞ்சு அந்த பெரிய மனுஷன் சாகுற வரைக்கும் அந்த வீட்டிலேயே இருங்க. உங்களுக்குப் புண்ணியமாப் போகும். அதுக்கப்புறம் நாலு பேரும் நாலு திசைக்குப் போனாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை.” என்றுவிட்டு முன்னே நடக்க ஆரம்பித்தான் அரசு.

     இவர்கள் நால்வரும் என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தனர்.

     “அடேய் எவனாவது கூப்பிடுங்க டா. நான் கோபப்பட்டு போறேன்டா. இதுக்கு மேல ரொம்ப மெதுவா போக முடியாதுடா.” என்று தனக்குள் சொல்லியபடியே நடந்து கொண்டிருந்தான் அவன்.

     அது கேட்டதோ என்னவோ தர்மா அரசுவை அழைத்தான். “அரசு ஒரு நிமிஷம். நீ சொன்னது யாருக்கு புரிஞ்சுதோ இல்லையோ எனக்கு ரொம்ப நல்லா புரிஞ்சது. என்னோட பொண்டாட்டியோட சந்தோஷத்துக்காக, என் அப்பாவோட மன நிறைவுக்காக நான் நம்மளோட வீட்டில் முழு மனசோட தங்க சம்மதிக்கிறேன்.

     அதோட இன்னொரு முக்கியமான விஷயம். என் கூடப் பிறந்தவங்க அனுமதி இல்லாம, அவங்களோட தனிப்பட்ட விஷயத்தில் தலையிட மாட்டேன். அவங்களுக்கு பிரச்சனைன்னு வந்தா என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு உதவி பண்ண முயற்சி பண்ணுவேன்.

     எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் என்னுடைய முடிவை அவங்க ஏத்துக்கஅவங்கள நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.” முழு மனதுடன் சொன்னான்.

     “எனக்குத் தெரியும் தர்மா. உங்க நாலு பேரில் நீதான் கொஞ்சம் அறிவாளி. என்ன ஒன்னு உன்கூடப் பிறந்தவங்களோட இரத்தம் உன் உடம்பிலும் ஓடுறதால தான் இத்தனை நாளா இதை நீ புரிஞ்சுக்காம இருந்திருக்க.

     நான் எடுத்துச் சொல்லும் போது நீ தான் முதன் முதலில் புரிஞ்சுப்பன்னு நான் நினைச்சிருந்தேன். அதே மாதிரியே நடந்திடுச்சு. என் நம்பிக்கையை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி தர்மா.” உணர்ந்து சொன்னான் அரசு.

     “தர்மா நீ நிஜமாத்தான் சொல்றியா?” நாகா கேட்க, “ஆமா நாகா, எனக்கு என்னவோ அரசு சொன்ன மாதிரி இத்தனை நாள் நாம தான் இதை ரொம்ப பெருசா நினைச்சுக்கிட்டு இருந்திருக்கோமோன்னு தோணுது.

     அவன் சொல்ற மாதிரி கொஞ்ச நாள் வாழ்ந்து பார்க்கலாமேன்னு தோணுச்சு. அதனால் தான் சொன்னேன். நம்ம எல்லாருக்கும் ஒத்துப் போற வரைக்கும், ஒன்னா இருக்கிறதில் இப்ப எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.” தர்மா சொன்ன அதே நேரத்தில்,

     “எனக்குக் கூட கொஞ்ச நாள் நம்ம இப்படி வாழ்ந்து பார்த்தா என்னன்னு தோணுது நாகா. அரசு சொல்ற மாதிரி நாம வேலைன்னு வெளியே போயிடுறோம் நம்மளோட பாதி வாழ்க்கை வெளியில் தான்.

     ஆனா நம்ம பொண்டாட்டிங்களை எடுத்துக்கோ அவங்களோட முழு வாழ்க்கையும் அந்த வீட்டில் தான் இருக்கு. அப்படி இருக்கும் போது அவங்களுக்காக நாம ஏன் இதை செய்யக்கூடாதுன்னு தோணுது.” என்றான் செல்வா.

     “உங்க இரண்டு பேருக்கும் ஆட்சேபனை இல்லை அப்படிங்கிற பட்சத்தில் எனக்கு கூட ஓகே தான்.” யாரும் எதிர்பாரா வகையில் சொன்னான் நாகா.

     “உங்களுக்கு எல்லாம் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. நீங்க சொல்ற மாதிரி நடந்தா நம்ம பொண்டாட்டிங்க சந்தோஷமா இருப்பாங்க தான் நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா நம்மளோட சந்தோஷம் என்ன ஆகுறது.

     எங்க பார்த்தாலும் கூட்டமா ஆளுங்களா இருக்கிற இடத்தில் ஒரு புருஷன் பொண்டாட்டி எப்படி அந்நியோன்யமா இருக்க முடியும். புருஷன், பொண்டாட்டிக்கு நடுவில் இருக்கிற நெருக்கம் தான் அவங்களோட உறுதியான பந்தத்தின் வெளிப்பாடு.

     நீங்க என்ன சொன்னாலும் சரி, என் உயிர் போகிற வரைக்கும் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். நீங்க மூணு பேரும் வேணும் னா ஒன்னா இருந்துக் கோங்க. ஆனா நான் எப்பாடு பட்டாவது என்னோட பொண்டாட்டியை தனியா கூட்டிட்டு போகத்தான் போறேன்.” தெய்வா சொல்ல அரசு கடுப்பானான்.

     “என்னடா லூசுத்தனமா பேசிகிட்டு இருக்க. உனக்குப் புருஷன் பொண்டாட்டியோட அந்நியோன்யம் அப்படின்னா என்னன்னு தெரியுமா முதலில்.

     கண்ட கண்ட இடத்தில் நின்னு கொஞ்சிக்கிறதில் இல்லடா நீ சொன்ன அந்த ஆத்ம நெருக்கம். உன்னை எப்படி எல்லாம் சந்தோஷமா வைச்சுக்கணும் என்பதை அவளும், அவளை எப்படி எல்லாம் சந்தோஷப்படுத்தணும் என்று நீயும் யோசிக்கிறதில் தான் இருக்கு.

     அவளுக்குப் பிடிச்ச உலகத்தில் இருந்து, அவளுக்கு ரொம்ப முக்கியமா அவ நினைக்கிற ஆட்களிடம் இருந்து அவளைப் பிரிச்சிக்கிட்டு போய் யாரும் இல்லாத ஒரு தனி வீட்டில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் பார்க்கிற எல்லா இடத்திலும் அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதிலா உன்னோட பாசம் வெளிப்படும். அதுதான் உன்னைப் பொறுத்தவரை புருஷன் பொண்டாட்டி அந்நியோன்யமா.” அரசு கேட்க, நெற்றிப்பொட்டில் அறைந்தது போல் ஆனான் தெய்வா.

     இத்தனை நாளாக தான் நினைத்து வந்த அடிப்படையே தவறு என்னும் உண்மை அவனைச் சுட்டது.

     “இங்க பாரு தெய்வா புருஷன் பொண்டாட்டி உறவு ரொம்பவே புனிதமானது. அது அவங்களோட ரூமோடவே இருக்கிற வரைக்கும் ரொம்ப நல்லது. அதோட புருஷன் பொண்டாட்டி அந்நியோன்யத்தை கொஞ்சி தான் காட்டணும் னு அவசியம் இல்லை. அவ உன்னை நினைச்சு பெருமைப்படுற மாதிரி நீ நடந்துக்கிறதும் ஒரு வகையில் அந்நியோன்யம் தான். அதை எல்லாம் நீ உன் ரூமில் மட்டும் தான் பண்ணனும் னு அவசியம் இல்லை.

     நாங்க உன்னைக் கட்டாயப்படுத்தப் போறது இல்ல. உன்னோட முழு மனசோட கொஞ்ச நாள் நாங்க சொல்ற மாதிரி அந்த வீட்டில் வாழ்ந்து பாரு. உனக்கே அந்த வாழ்க்கை நிச்சயம் பிடிக்கும்.”

     “அப்படி பிடிக்கலையா நான் சொன்ன மாதிரி உன் அப்பாவோட கடைசி காலத்துக்கு அப்புறம் உன் இஷ்டப்படி நீ போ. நாங்க யாரும் உன்னைத் தடுக்க மாட்டோம்.

     நான் இப்பவே சொல்றேன் செல்வா, நாகா, தர்மா நீங்க மூணு பேரும் தெய்வாவை தடுக்கக் கூடாது. எதுக்காகவும் அவனைக் கட்டாயப்படுத்தவும் கூடாது.” அரசு சொல்ல மற்ற மூவரும் சரியென்று ஒப்புக் கொண்டனர்.

     நால்வரும் அரைமனதுடன் தான் ஒப்புக்கொண்டனர் என்று புரிந்தாலும் நாட்கள் போகப்போக நிச்சயம் அவர்களுக்கு இந்த சொர்க்க வாழ்க்கை புரியும் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அவர்களுடன் ஹோட்டலுக்குச் சென்றான் அரசு.

     செல்வா யோசனையுடன் தங்கள் அறைக்கு வந்த அடுத்த கணம் அவனை அணைத்துக்கொண்டாள் லீலா. “நன்றிங்க, ரொம்ப நன்றி. நமக்குக் கல்யாணம் ஆகி இத்தனை நாளில் எத்தனையோ முறை உங்களை மாதிரி ஒரு புருஷன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் னு நான் நினைச்சிருக்கேன்.

     இன்னைக்கு நீங்க பண்ண காரியம் உண்மையிலே ரொம்பப் பெருசுங்க. புருஷனோட உண்மையான பாசத்தையும் அக்கறையையும் விட ஒரு பொண்டாட்டிக்கு பெரிய பரிசு எதுவுமே இல்லை.

     அப்படிப் பார்க்கும் போது எனக்காக யோசிச்சு நீங்க பண்ண இந்த விஷயம் உலகத்தில் எந்த ஒரு புருஷனாலும் அவன் பொண்டாட்டிக்கு கொடுக்க முடியாத மிகப்பெரிய பரிசா நான் நினைக்கிறேன்.

     என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. நன்றி சொல்வதைத் தவிர வேற என்ன சொல்றதுன்னு எனக்கு சத்தியமா ஒன்னும் புரியல.” என்ற லீலா செல்வாவின் கரத்தோடு தன்னுடைய கரத்தை சேர்த்துக்கொண்டு வாகாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

     இதே விஷயம் தான் என்றாலும் லேசான மாடுலேஷன் உடன் அதையே தங்களுடைய கணவன்மார்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள் லீலாவின் அருமைச் சகோதரிகள்.

     “மிஸ்டர் ஓல்டுமேன் என்னோட வேலை கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சு. உங்களோட அருமைப் புதல்வர்கள் நாலு பேரும் உங்களுடைய வீட்டில் ஒன்னா இருக்கிறதுக்கு ஒத்துக்கிட்டாங்க. இனிமேல் என்ன உங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான்.” அரசு சிரிக்க வடிவேலுவும் சேர்ந்து சிரித்தார்.

     முந்தைய நாளைப் போல் அல்லாமல் சகோதரர்கள் நால்வரும் சற்றே தெளிவுடன் இருக்க, வந்த காரியம் நல்லபடியாக முடிந்த திருப்தியுடன் அனைவரும் தங்களுடைய இல்லம் நோக்கி புறப்பட்டனர்.

     வடிவேலு சொன்னது போல் சிறிய பர்த்டே பார்ட்டி அவர்களுடைய வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தன்னுடைய நெடுங்கால ஆசை நிறைவேறி இருப்பதற்கு உறுதுணையாக இருந்த தன்னுடைய ஆசை மருமகள்களை தேவதை போல பார்க்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ நான்கு பெண்களுக்கும் நான்கு வண்ணங்களில் நீண்ட கவுன் வாங்கி பரிசளித்திருந்தார் வடிவேலு.

     நால்வருக்கும் சற்று தயக்கம் தான் இருந்தாலும் வடிவேலுவின் ஆசையை அவர்களால் நிராகரிக்க முடியவில்லை. வைலட், சிகப்பு, மஞ்சள், பச்சை சகிதம் தலையில் சின்ன கிரீடத்துடன் வந்தனர் லீலா ஊர்மி ருக்கு தேவகி நால்வரும்.

     “இறக்கை மட்டும் இருந்தால் என் பொண்டாட்டி தேவதை டா.” என்று ஆண்கள் நால்வரும் சொல்வதற்கு ஏற்ப இருந்தது அவர்களுடைய மனைவிமார்களின் தோற்றம்.

     பார்டி ஆரம்பமாகி நால்வரும் ஒரே கேக்கை வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு தன்னுடைய கணவன்மார்களுக்கும் அரசுவிற்கும் ஊட்டிவிட்டு வடிவேலுவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள நல்லபடியாக முடிவுக்கு வந்தது விழா.

     விருந்தினர் அனைவரும் சொல்லிக்கொண்டு சென்று கொண்டிருக்க அவர்களை வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தான் தெய்வா.

     விருந்தாளிகளுள் ஒருவன் அவனை இடித்துவிட்டு நகர, “சார் பார்த்து.” என்ற தெய்வா தன் வயிற்றில் வலியை உணர்ந்து குனிந்து பார்க்க, அவன் வயிற்றில் ஆழமாக குத்தப்பட்டு இருந்தது ஒரு கத்தி.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அடுத்த ஆபரேஷன் ரெடி. சொன்னா புரியாதவங்களுக்கு கடவுள் அடிச்சு புரிய வைக்கிறார். புது வில்லனா யார்டா அது