Loading

அத்தியாயம் 104

    “என்ன மிஸ்டர் ஓல்டுமேன் இவங்க நாலு பேரையும் இப்படிப் பார்க்கிறதுக்கு தானே ரொம்ப ஆசைப்பட்டீங்க, கண்குளிரப் பாருங்க.

     ஹே வெயிட் வெயிட் உங்களுக்கு கண்ணு நல்லா தெரியுதா, இல்ல நான் கண்ணாடி ஏதும் வாங்கிட்டு வரணுமா?” அரசு வடிவேலுவைப் பார்த்து கேட்க, அவன் கரத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட வடிவேலுவிற்கு உள்ளுக்குள் அத்தனை உணர்வுப் போராட்டம்.

     அது அவனுக்குமே புரியத்தான் செய்தது. எதுவும் பேசாமல் அவர் கரத்தை மெதுவாகத் தட்டிக்கொடுத்தான். “அரசு சந்தோஷத்தில் எனக்கு எதுவும் ஆகிடாதே. நான் என் பசங்களோட பசங்க எல்லோரையும் பார்ப்பேன் தானே.” கலக்கத்துடன் கேட்டவரை முறைத்தவன்,

     “இப்படிப் பேசுனீங்க அப்புறம் நான் கிருஷ்ணனில் இருந்து சகுனியா மாறிடுவேன். உங்க பசங்களை ஒன்றாச் சேர்ப்பது தான் கஷ்டமே தவிர, பிரிக்கிறது ரொம்ப சுலபம்.” என்க, சிரித்தார் வடிவேலு.

     “சிரிக்கிறீங்களா, ஏன் சிரிக்க மாட்டீங்க. உங்களுக்கு என்ன இத்தனை நாளா சுமந்து வைச்ச பேராசை நிறைவேறின சந்தோஷத்தில் நிம்மதியா தூங்கிடுவீங்க. உங்க பசங்களை எப்படி சமாளிக்கப் போறேனோன்னு நினைச்சா உண்மையிலே பயமா இருக்கு.

     அவங்க கோவத்தில் ஏதாவது பேசி என் மானங்கெட்ட தன்மானம் வெளிய வந்து, நான் வீட்டை விட்டு கோச்சுக்கிட்டு போயிட்டேன்னா என்னை அப்படியே விட்டுடாதீங்க.

     நான் இல்லாம நீங்க இருந்திடலாம். ஆனா நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது.” என்றான் அரசு. இதைச் சொல்லும் போது அவனுடைய கண்கள் லேசாக கலங்கி இருந்தது.

     “நீ என் ஐந்தாவது மகன் டா. உன்னை அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன். அப்படி உன்னை அவனுங்க வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னா நானும் சேர்ந்து உன்கூட வந்திடுறேன் போதுமா?” என்ற வடிவேலுவை சொல்லமுடியாத உணர்வுகளுடன் பார்த்தான் அரசு.

     தகப்பனின் நண்பன், யாரும் இல்லாத நேரம் வளர்ப்பு பிள்ளை என்கிற பெயரில் கொடுத்த ஆதரவு, படிப்பு என எல்லாவற்றிற்கும் சேர்த்து தனக்கு தான் அவரிடம் நன்றிக்கடன் என்றால் இவருக்கு ஏன் தன்மேல் இத்தனை அன்பு என்று நினைத்து எப்போதும் போல் பெருமூச்சுவிட்டுக்கொண்டான் அரசு.

     “அக்கா இந்த நாள் இதுக்கு மேல சந்தோஷமா மாற முடியாது இல்ல.” அனுபவித்துக் கேட்டாள் ருக்கு.

     “உண்மை தான் ருக்கு. இந்த நாள் நம்ம மனசில் என்னைக்கும் நிலைச்சு இருக்கும். இன்னும் எத்தனை பிறந்தநாளை நாம ஒன்னாக் கொண்டாடினாலும், இந்த பிறந்தநாள் மாதிரி இருக்காது.” லீலா சொல்லி முடித்த நேரத்தில் ஏதோ தோன்ற பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

     அவளைப் போலவே அவளுடைய சகோதரிகள் மூவரும் அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்தனர். “ஹேய் என்னப்பா ஆச்சு.” லீலாவின் அயர்ந்த தோற்றம் கண்டு தானும் எழுந்து அமர்ந்தான் செல்வா.

     லீலாவின் மனதை புரிந்து கொண்டவர்களாக ஊர்மி, ருக்கு தேவகி மூவரும் அவளுக்கு அருகே, அவளைச் சுற்றி அமர்ந்தனர்.

     “என்னோட ப்ளானில் இல்லாத ஏதோ ஒன்று நடந்துக்கிட்டு இருக்கு. ஓல்டு மேன் நீங்க இங்கேயே இருங்க, நான் போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வந்துடுறேன்.” என்றுவிட்டு அவர்களை நோக்கி நடந்து வந்தான் அரசு.

     “அண்ணி என்னாச்சு உங்களுக்கு?” அனைவருக்கும் முன்பாக பதறிக்கொண்டு வந்தது நாகா தான்.

     லீலாவின் கண்களில் கண்ணீர் கூடவே சின்னதாய் சிணுங்கலும். இத்தனை மாதங்களில் நடந்த எத்தனையோ பிரச்சனைகளில் அவள் துவண்டு போய் நின்ற சந்தர்ப்பங்கள் எத்தனையோ உண்டு. ஆனால் இப்படிக் கண்ணீர் விட்டுக் கண்டதில்லை எனவும் தெய்வா, தர்மாவுக்கும் கூட என்னவோ போல் இருந்தது.

     “செல்வா அண்ணி அழுறாங்க டா. ஏய் ஊர்மி லூசு, அவங்க அழுதுக்கிட்டு இருக்காங்க நீ அமைதியா இருக்க, ஏதாவது பண்ணுடி.” லீலாவின் புன்னகை முகத்தையே பார்த்திருந்துவிட்டு இப்படி அழுத முகமாக அவளைப் பார்க்க முடியாமல் தடுமாறினான் நாகா.

     “ஐயோடா பாசம் ரொம்பத் தான் பொங்குது. அவங்க எங்க அக்கா, அவங்க எப்போ என்ன நினைப்பாங்கன்னு கூட எங்களால் சொல்ல முடியும். எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்.” காட்டமாகச் சொன்னாள் ஊர்மி.

     “அக்கா எதுக்காக இப்ப அழுறீங்க. நாங்க அம்மாவை நினைச்சு அழும்போதெல்லாம், ‘போனவங்க திரும்ப வரப்போறதில்லை. அவங்களை நினைச்சு நாம அழக்கூடாது. அதுக்கு பதிலா அவங்களோட செலவிட்ட சந்தோஷமான நேரங்களை நினைச்சு பார்க்கனும்’ னு சொல்லுவீங்களே. அதெல்லாம் எங்களுக்கு மட்டும் தானா?” லீலா சொல்லியதை அவளுக்கே நினைவுபடுத்தினாள் ருக்கு.

     “நாம நாலு பேரும் காலத்துக்கும் ஒன்னா இருக்க முடியாது. கல்யாணம் ஆகி தனித்தனி வீட்டுக்குப் போக வேண்டியது வரும். நாளாக நாளாக ஒருத்தருக்கு ஒருத்தர் பேசக் கூட நேரம் இருக்காது. வருஷங்கள் உருண்டோடி குழந்தைங்க, பேரப் பசங்கன்னு ஆனதுக்கு அப்புறம் நமக்கு மூணு தங்கச்சிங்க இருக்காங்க என்பதே மறந்து போய்டும் னு அம்மா ஒருதடவை என்கிட்ட சொன்னாங்க.

     ஆனா நம்மளைப் பாரு. நாம நாலு பேரும் அண்ணன் தம்பி நாலு பேரைக் கல்யாணம் பண்ணிகிட்டோம். அவங்களுக்கு விருப்பமில்லைன்னா கூட நமக்காக ஒரே வீட்டில் ஒன்னா இருக்க ஒத்துக்கிட்டாங்க. அந்தளவுக்கு நம்ம மேல பாசமா இருக்காங்க.

     நம்மளோட பிறந்தநாளுக்கு முதலில் வாழ்த்து சொல்ல உரிமையை நாம அவங்களுக்கு விட்டுக் கொடுத்தோம். பதிலுக்கு அவங்க நமக்கு எவ்வளவு பெரிய சந்தோஷத்தை திருப்பிக் கொடுத்து இருக்காங்க.

     நாம மட்டும் இல்ல, நம்மளோட அம்மாவும் அப்பாவும் கூட போன ஜென்மத்திலும் இந்த ஜென்மத்திலும் சேர்த்து பண்ணிய புண்ணியம் தான் நம்மளை இவங்க கிட்ட சேர்த்து இருக்குன்னு நினைக்கிறேன்.

     இந்த நேரம் நம்ம அம்மா நம்ம கூட இருந்திருந்தா எப்படி இருக்கும் னு நினைச்சு பார்த்தேன். என்னால அழுகையைக் கட்டுப்படுத்த முடியல.” லீலா சொல்ல மற்ற மூவரும் அவளைத் தேற்றினர்.

     ஆண்கள் நால்வரும், “ஆமா நாம எப்போ ஒரே வீட்டில் ஒன்னா இருக்க ஒத்துக்கிட்டோம்.” என்பது போல ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     அவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாதகமாக செய்யத் திட்டமிட்டு இருக்கும் செயலையும் நினைத்துப் பார்த்தவர்களுக்கு சட்டென்று புரிந்துகொள்ள முடியாத அளவு சின்னதாய் வலி.

     லீலா வருத்தப்பட்டு கொண்டிருப்பதை பார்க்க முடியாமல், “அட என்னம்மா நீ. சின்னக் குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு இருக்க. நீ அழுதா உன் தங்கச்சின்னு மூணு பேரும் அழுவாங்க” என்ற அரசு ஊர்மியைப் பார்த்து கண் அடிக்க, அதைப் சரியாகப் பிடித்துக் கொண்டவளும் போலியாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அதை உண்மை என்று நம்பிய லீலா தானும் வேகமாகத் தன் கண்களை அழுந்தத் துடைத்து விட்டு வலிய புன்னகைத்தாள்.

     “ம்ம்…. இப்ப தான் முகம் அழகா இருக்கு. சரி சரி எழுந்திரிங்க இருட்டப் போகுது. தண்ணீருக்குள் இறங்கினா நேரம் போறதே தெரியாது. எல்லாரும் வாங்க நமக்காக வெயிட்டிங்கில் இருக்கிற ஹோட்டலுக்குப் போகலாம்.” என்று தன் திட்டத்தின் கடைசிப் பகுதியை நோக்கிச் சென்றான்.

     “ஹோட்டலா அப்ப நாம வீட்டுக்கு போகப் போறதில்லையா?” தேவகி கேட்க, “அட என்ன தேவகி நீ. அந்த வீட்டில் அப்படி என்ன பெருசா இருக்கு. எந்தப்பக்கம் பார்த்தாலும் பெரிய பெரிய தூணாத் தான் இருக்கு. இன்னைக்கு ஒருநாள் வெளியிடம், வெளிசாப்பாடுன்னு கொஞ்சம் ஜாலியா இருப்போமே.” வெகு குஷியாய் சொன்னான் அரசு.

     “ஆமா மா அவன் சொல்றதும் சரிதான். அவசர அவசரமா வீட்டுக்கு கிளம்பி போய் என்ன பண்ண போறோம். அதுவும் எல்லோரும் உப்புத் தண்ணீரில் நல்லா நனைஞ்சிட்டீங்க வேற. அதனால இன்னிக்கு இராத்திரி இங்கேயே தங்கிக்கலாம்.

     நாளைக்கு மதியம் நம்ம வீட்டில், நம்மளோட ஆபீஸ் ஸ்டாப் மட்டும் வைச்சு சின்னதா உங்க நாலு பேருக்கும் பெர்த்டே பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கேன். அந்த நேரத்துக்கு நாம அங்க போய் சேர்ந்தால் போதும்.” தன் பங்கிற்கு தான் செய்து வைத்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றி சொன்னார் வடிவேலு.

     “நீங்க சொல்றது சரிதான் பா. ஒன்னு பண்ணுங்க, நீங்க உங்க மருமகளுங்க நாலு பேரையும் கூட்டிக்கிட்டு, அரசு சொன்ன ஹோட்டலுக்குப் போங்க. நாங்க அரசு கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரோம்.” என்றான் தெய்வா.

     “தெய்வா என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்க. மணியைப் பாரு இப்பவே ஆறரையைத் தாண்டிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா நல்லா இருட்டிக்கிட்டு வேற வருது. அது மட்டும் இல்ல இன்னைக்கு பௌர்ணமி வேற. நான் கேள்விப் பட்டு இருக்கேன் பௌர்ணமி அன்னைக்கு கடல் அலைகள் ரொம்ப ஆக்ரோஷமா இருக்குமாம். நமக்கு எதுக்கு வம்பு பேசாம நாமளும் கிளம்பிடலாம்.” சமாளிக்க நினைத்து சொன்னான் அரசு.

     “அதுக்கெல்லாம் பயந்தா எப்படிடா அரசு. இன்னைக்கு நீ என்ன காரணம் சொன்னாலும் நாங்க உன்னை விடப் போறதில்லை. நாங்க நாலு பேரும் எப்பயாச்சும் தான் இப்படி ஒரே இடத்தில் சந்தோஷமா இருப்போம்.

     இந்த நேரத்தில் நீயும் எங்க கூட இருக்க வேண்டியது அவசியம் இல்லையா. அதுக்குத்தான் கூப்பிடுறேன்.” பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான் தெய்வா.

     “சிறு வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது டி.” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்ட அரசு, “இவங்க இப்படித் தான் பேசிக்கிட்டு இருப்பாங்க, வேலையில்லாதவனுங்க.

     நாலு பேரும் எவ்வளவு நேரம் வேண்ணாலும் விளையாடிட்டு வரட்டும். நாம போகலாம். எனக்கு வயிறு பயங்கரமா பசிக்குது. போய் குளிச்சிட்டு சீக்கிரம் சாப்பிடனும் வாங்க வாங்க எல்லாரும் போகலாம்.” ராஜ் சகோதரர்களிடம் தனியே சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதில் அத்தனை ஆர்வம் காட்டினான் அரசு.

     “டேய் அவங்க தான் அவ்வளவு தூரம் கூப்பிடுறாங்க இல்ல கொஞ்ச நேரம் அவங்க கூட இருந்துட்டு வாடா.” வடிவேலு தான் பெற்ற மகன்களின் மனம் தெரியாமல் சொன்னார்.

     “யோவ் பெரிய மனுஷா, அவங்க எதுக்கு கூப்பிடுறாங்கன்னு உனக்குத் தெரியாதுய்யா. நான் மட்டும் அவங்க கூட போனேன் துணியைத் துவைக்கிற மாதிரி துவைச்சு காய போட்டுடுவாங்க.

     அப்புறம், நல்ல அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு, குடும்பம் குழந்தைன்னு சந்தோசமா வாழனும் அப்படிங்கிற என்னோட ஆசை எல்லாம் வெறும் கனவாகவே போயிடுமே.” என்று மனதில் நினைத்தவன் அதைச் சொல்ல வாயெடுக்கும் நேரத்தில் அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட தெய்வா.

     “அப்பா அங்க பாருங்க ஊர்மி ரொம்ப நேரமா ஈர சேலையோட இருக்கா. அவளுக்கு சளி பிடிச்சிடப் போகுது. நீங்க அவங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு கிளம்புங்க. நாங்க எண்ணி இருபது நிமிஷத்தில் வந்திடுவோம்.” என்று பெண்கள் நால்வரையும் வடிவேலுவுடன் அனுப்பி வைத்தான்.

     அரசுவுமே இதுவரை இருந்த விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டவனாய், தான் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஹோட்டல் முகவரி, அங்கு யாரைப் பார்க்க வேண்டும் என்பது போன்ற எல்லாத் தகவல்களையும் கொடுத்து அவர்களைப் பத்திரமாக அனுப்பிவைத்துவிட்டு இவர்களிடம் வந்தான்.

     பெரும்புயல் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். ஆனால் ஆலமரம் போல் எதிர்த்து நிற்காமல் தணிந்து போகும் நாணலாய் நின்று புயலை சமாளிக்க முடிவு செய்திருந்தான்.

     “ஏன் அரசு இப்படி ஒரு காரியத்தை பண்ண. நீ சொன்னதை நம்பி, உன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, பெருசா எதையும் யோசிக்காம நீ போக சொன்ன இடத்துக்கு போனோம்.” மூத்தவனே ஆதங்கத்தை ஆரம்பித்து வைத்தான்.

     “அப்ப ஆரம்பத்திலிருந்தே இது தான் உன்னோட திட்டம் இல்லையா?” படமெடுத்தான் நாகா.

     “எனக்கு இப்போ ரொம்ப பெரிய சந்தேகம் ஒன்னு வருது அரசு. நீ எங்க பொண்டாட்டிங்க நாலு பேரையும் பிரிக்கிறதுக்கு கொடுத்த ஐடியா உண்மையில் எங்களுக்காக தான் கொடுத்தியா, இல்ல அதுக்குப் பின்னாடியும் ஏதாவது உள்குத்து இருக்கா.” கோபமாய் கேட்டான் தெய்வா.

     தர்மா அமைதியாய் இருக்க, “ஏன் வாத்தி நீ மட்டும் அமைதியா இருக்க. உன் பங்குக்கு நீயும் கேள்வியைக் கேட்க வேண்டியது தானே.” என்றான் அரசு.

     “நீ இதை ஏன் பண்ணன்னு எனக்குத் தெரியாது. ஆனா நீ பண்ண இந்த விஷயத்தால பிறந்தநாள் அதுவுமா என் பொண்டாட்டி ரொம்ப சந்தோஷப்பட்டா.

     நான் நினைச்ச மாதிரி அவளை வேற எங்கேயாவது கூட்டிட்டுப் போய் சரியா அஞ்சு மணிக்கு அவளோட அக்கா தங்கச்சிங்க கிட்ட ஒப்படைச்சு இருந்தாலும், இந்த அளவுக்கு சந்தோஷப்பட்டு இருப்பாளான்னு எனக்குத் தெரியாது. அதுக்காக ரொம்ப பெரிய நன்றி.” மனதில் இருந்து சொன்னான் தர்மா.

     “நீ என்னடா தர்மா இப்படிப் பேசிக்கிட்டு இருக்க. இவன் சரி இல்லடா, நம்ம கிட்ட ஒரு மாதிரி, நம்ம பொண்டாட்டிங்ககிட்ட ஒரு மாதிரி நடந்துக்கிறான்.

     எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இவனோட முழு நோக்கமும் நம்மளை நம்ம வீட்ல இருக்க வைக்கிறது தான். நமக்கு உதவி பண்றேன் என்கிற போர்வையில் அப்பாவுக்கு சாதகமாகத் தான் அவன் காய் நகர்த்திக்கிட்டு இருக்கான்.” என்றான் தெய்வா.

     “அரசு உண்மையைச் சொல்லு. நான் உன்மேல ரொம்ப பெரிய மரியாதை வைச்சிருக்கேன். உன்னோட இத்தனை நடவடிக்கைகளுக்கும் பின்னாடி இருக்கிற உண்மையான காரணம் என்ன?” என்றான் செல்வா.

     “உனக்கு இந்த உலகத்தில் எல்லோரையும் விட முக்கியமான ஆள் எங்களோட அப்பா. அவரோட சந்தோஷத்துக்காக நீ என்ன வேணாலும் பண்ணுவ. இப்ப நீ பண்ணிக்கிட்டு இருக்கிறதும் அதில் ஒன்னு தானே.” என்றான் தர்மா.

     “வெல் சுத்தி வளைச்சுட்டீங்க. முக்கால்வாசி உண்மையை வேற தெரிஞ்சுக்கிட்டீங்க. இதுக்கு அப்புறமும் இதை மறைச்சு எந்தவிதமான பிரயோஜனமும் இல்லைன்னு தோணுது.

     ஆமா உங்களோட சந்தேகம் எல்லாமே உண்மை தான். நான் உங்களுக்குக் கொடுத்த ஐடியா எல்லாமே உங்களை ஒருத்தரை விட்டு ஒருத்தர் தள்ளி வைக்கிறதுக்கு இல்ல. உங்க நாலு பேரையும் ஒன்னா இருக்க வைக்கிறதுக்கு தான்.

     ஆனா இதில் சத்தியமான ஒரு உண்மை என்னென்னா, இதை நான் வடிவேலு அங்கிளுக்காக மட்டும் செய்யல. என்னோட கூடப் பிறந்த சகோதரர்களா நான் நினைச்சுக்கிட்டு இருக்கிற உங்களுக்காகவும் தான்.” உறுதியாய் சொன்னான் அரசு.

     “அது எப்படிடா எங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு விஷயத்தைக் கட்டாயப்படுத்தி கொடுத்துட்டு, அது எங்களோட சந்தோஷத்துக்காகத் தான்னு வாய் கூசாம பொய் சொல்ற.” கோபமாய் கேட்டான் தெய்வா.

     “ஏன்னா உங்களுக்கு எது நல்லதுன்னு உங்களுக்கே தெரியல டா. சின்னக் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு பிடிக்காது தான்.

     அதுக்காக ஐயோ இது என் பையனுக்கு பிடிக்காதே அவனுக்கு எப்படி கொடுக்கிறதுன்னு அம்மாவா இருக்கிறவங்க யோசிப்பாங்களா.

     அதையும், இதையும் சொல்லி ரோட்டில் போறவன், அவன் உலக அழகனாகவே இருந்தாலும் பூச்சாண்டின்னு பயம்காட்டி அந்த சத்தான சாப்பாட்டை அந்தக் குழந்தையை சாப்பிட வைக்கிறது இல்லையா. அதே மாதிரி தான் நான் பண்ணதும்.” என்று நிறுத்தினான்.

     “பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப கூட நான் உங்களுக்காகத் தான் எல்லாம் பண்ணேன்னு சொல்லுறான் பார்த்தியா?” தெய்வா நாகாவைப் பார்த்துக் கேட்க,

     “டேய் வடிவேலு அங்கிள், உங்களோட பொண்டாட்டிங்க, நான் அப்படின்னு இதுவரைக்கும் எத்தனையோ முறை உங்களுக்கு எது நல்லது எது சந்தோஷமான வாழ்க்கைன்னு சொல்லி புரிய வைக்க நினைச்சோம்.

     ஆனா அது எதுவுமே உங்களுக்குப் புரியல. சரி சொல்லுறதை விட செஞ்சு காமிச்சா புரியும் னு நினைச்சு தான் உங்களை இந்த இடத்தில் சந்திக்க வச்சேன்.

     இந்த ஒரு நாள் என்னுடைய எத்தனை நாள் திட்டம் அப்படின்னு உங்களுக்குத் தெரியாது டா. உங்க நாலு பேருக்கும் இவங்க நாலு பேரைத் தான் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு உங்க அப்பா என் கிட்ட சொன்ன அன்னைக்கு நான் முடிவெடுத்தது டா இந்த நாள்.” என்க, அண்ணன் தம்பி நால்வரின் புருவங்களும் உயர்ந்தது.

     “உங்களைப் பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய சந்தோஷமா நீங்க நினைக்கிறது, உங்க பொண்டாட்டிங்களுக்கு கொடுக்க நினைக்கிற சந்தோஷம், எல்லாம் அவங்க நாலு பேருக்கும் நடுவில் இருக்கிற பாசத்துக்கு முன்னாடி ஒன்னுமே இல்லன்னு நிரூபிக்கிறதுக்காக நான் பாயிண்ட் பண்ண நாள் தான் டா இது.

     தெய்வா காலையில் உன்னோட பொண்டாட்டிக்கு அந்த சினிமா நடிகர் வாழ்த்து சொன்னானே அப்ப ருக்கு கண்டிப்பா சந்தோஷப்பட்டு தான் இருப்பா. ஆனா நீ நல்லா யோசிச்சுப் பார் அப்ப ருக்குவோட முகத்தில் இருந்த சந்தோஷத்திற்கும், இப்ப இந்த இடத்தில் சில நிமிடங்களுக்கு முன்னாடி அதே ருக்கு முகத்தில் நீ பார்த்த சந்தோஷத்திற்கும் நடுவிலான வித்தியாசத்தை. இது தெய்வாவுக்கு மட்டும் இல்ல மத்த மூணு பேருக்கும் சேர்த்து தான்.” என்று மற்றவர்களை பார்த்து சொன்னவன் தொடர்ந்தான்.

     “உண்மையான சந்தோஷம் எதில் எதில் இருக்குன்னு நீங்க எல்லாரும் உங்க பொண்டாட்டிங்க கிட்ட பாடம் கத்துக்கனும் டா.” வேகமாய் வார்த்தைகளை விட்டான் அரசு.

     “அப்ப நாங்க நாலு பேரும் ஒன்னா இருக்கிறது தான் எங்களுக்கு சந்தோஷம். அதை நாங்க ஒன்னா ஒத்துமையா இருக்கும் போது உணர்வோம் அப்படின்னு நீ சொல்ல வரியா?” சரியாகக் கேட்டான் நாகா.

     “உணர்வோம் என்ன உணர்வோம் ஏற்கனவே உணர்ந்துட்டீங்க டா பாவிங்களா.” பெரிய விஷயத்தைச் சொன்னான் அரசு.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. எல்லாம் சரிதான் அரசு. ஆனா ராஜ் பிரதர்ஸ் இதை ஏத்துப்பாங்களா