
அத்தியாயம் 101
விமானநிலையத்தில் வைத்து இப்படி தர்மாவிடம் கையும் களவுமாக சிக்கிக்கொள்வோம் என்பதை கற்பனை கூட செய்து பார்த்திடாத அரசு அடுத்து என்ன செய்ய என்கிற யோசனையில் நிற்க, “நீ இங்க என்ன பண்ற அரசு. நேத்து நைட்டு சடெனா போன் பண்ணி அதையும் இதையும் சொல்லி சென்னைக்குப் போற ப்ளானுக்கு என்னை ஒத்துக்க வைச்ச. இப்ப பார்த்தா என்னோட பிளைட் நேரத்துக்கு முன்னாடியே நீ இங்க வந்து நிக்கிற. என்ன விஷயம், ஒருவேளை அப்பா கூட சேர்ந்து ஏதாவது ப்ளான் பண்றியா என்ன?” சரியாகவே யூகித்துக் கேட்டான்.
“அப்ப வாத்தி எதையும் பார்க்கல. அரசு உஷார்.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன், “என்னடா என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்ட. என்னைப் பார்த்தா துரியோதனன் கூட சேர்ந்து கூட்டு சதி பண்ற சகுனி மாதிரித் தெரியுதா?
கடவுளே இந்த அசிங்கம் அவமானம் எனக்கு தேவையா. உங்களை மட்டுமே உறவா நினைச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்க இந்த அரசுவை, வாயில் விரல் வைச்சாக் கூட கடிக்கத் தெரியாத ஒரு பச்சைக் குழந்தையைப் பார்த்து எப்படி டா இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிற.” சிக்கலில் மாட்டிக்கொண்டால் தப்பிப்பதற்காக வைத்திருக்கும் வழக்கமான பாணியை ஆரம்பித்தான் அரசு.
“ஐயோ சாமி ஆளை விடு. இப்ப என்ன, நீ எதுக்காக இங்க வந்தன்னு நான் கேட்கக் கூடாது அவ்வளவு தானே. நான் கேட்கலப்பா, தயவுசெய்து உன்னோட ரம்பத்தை ஆரம்பிச்சிடாதே. நான் இங்க இருந்து கிளம்புறேன்.” என்றபடி மனைவியின் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு முன்னே செல்லும் போது,
“கண்ட கண்ட சீரியலைப் பார்த்து அதுல வர்ற ஹீரோயின் மாதிரியே நடந்துக்கிறான். முழிக்கிற முழியே சரியில்லை. ஏதோ பொண்ணைப் பார்க்க தான் வந்திருப்பான் போல. அதனால் தான் இப்படி சமாளிக்கிறான். அப்பாகிட்ட சொல்லி இவனை என்னன்னு கவனிக்கணும்.” என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டே முன்னே நடந்தான்.
அவன் பின்னே எதுவும் பேசாமல் லேசான புன்னகையுடன் அமைதியாக வந்து கொண்டிருந்தாள் தேவகி. அவர்கள் விமானத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேல் இருக்க போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று முன்னதாகவே வந்திருந்தனர்.
சென்னையில், “என்னங்க, இது எந்த இடம். இவ்வளவு அழகா இருக்கு.” எம்.ஜி.எம் வாசலில் நின்று குழந்தை போல குதூகலத்துடன் கேட்டாள் லீலா.
“உங்களுக்கு இந்த இடம் புடிச்சிருக்கா லீலா?” செல்வா கேட்க, “ஹான் பிடிச்சிருக்குங்க. சின்ன வயசுல இந்த மாதிரி இடங்களுக்கு போகணும் னு ரொம்ப ஆசைப்படுவேன். அம்மாவால கூட்டிட்டுப் போக முடியாது. அப்புறம் வளர வளர இதை மாதிரி பல ஆசைகள் அப்படியே மனசுல புதைஞ்சிடுச்சு.” வருத்தமாக இல்லாமல் இயல்பாகச் சொன்னாள் லீலா.
“விட்டுத்தள்ளுங்க லீலா, இதுவரை போனது போகட்டும். இத்தனை நாளா போக முடியலன்னா என்ன, நாலடி முன்னாடி நடந்தா இப்ப போயிடலாம்.
உங்க அம்மாவால கூட்டிட்டுப் போக முடியலன்னு தான் நீங்க ஆசைப்படும் எல்லாத்தையும் நிறைவேத்தும் தகுதி இருக்கிற என்னை உங்களுக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்காங்க.
உள்ள போரோம், என்ஜாய் பண்றோம். இங்கே இருக்கிற எல்லா ரைடிலும் போய் ஒரு கை பார்த்திடலாம்.” செல்வா உற்றாகமாய் சொல்ல, அந்த உற்றாகம் லீலாவையும் தொற்றிக்கொண்டது.
இருந்தாலும் எதையோ நினைத்தவளாக, “விளையாடாதீங்க இந்த வயசுல போய் யாராவது பார்த்தா சிரிக்கப் போறாங்க.” என்றாள்.
“ஐயோ லீலா நாம இன்னும் விளையாடவே ஆரம்பிக்கல. விளையாடுவதற்கு தான் உங்களை வரச் சொல்றேன்.” என்றவனை முறைக்க முயன்றாள் அவள். முயலத்தான் முடிந்ததே தவிர வெற்றி பெற முடியவில்லை.
“நீங்க பொறுப்பான அக்கா, குடும்பத்தலைவி மோடிலேயே இருக்கீங்க. இங்க நீங்க பார்த்துக்கிறதுக்கு யாரும் இல்லை. நானும் நீங்களும் மட்டும் தான். என்னை நான் சொல்லாமலே நீங்க கவனிச்சுப்பீங்க தான். அந்த வகையில் உங்களையும் கொஞ்சம் கவனிக்கலாம் இல்ல.” என்க, லீலாவுக்கு செல்வாவின் இந்தப் பேச்சு அத்தனை பிடித்தது.
“உள்ள வந்து பாருங்க. நேத்து பிறந்த பாப்பாவில் இருந்து பல்லு போற வயசில இருக்கிற பாட்டிங்க வரைக்கும் செம ஆட்டம் போடுவாங்க. நீங்க மட்டும் என்னவாம். ஒரு ரைடில் ஏறிப் பாருங்க. அப்புறம் நானே கூப்பிட்டாலும் எல்லா ரைடிலும் போகாம வெளிய வரவே மாட்டீங்க. அதுக்கு நான் கியாரன்டி.” என்ற செல்வா லீலாவின் கையை உரிமையுடன் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.
கணவன் சொன்னது போல அனைத்து வயதினரும் அவர்களுக்கு ஏற்ற வகையில் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் லீலாவிற்கும் உள்ளுக்குள் ஆசை வந்தது. அதன் பிறகு எந்த மறுப்பும் சொல்லாமல் செல்வாவுடன் ஒவ்வொரு ரைடாக செல்ல ஆரம்பித்தாள்.
முதலில் செல்வாவின் விரல்களை பிடித்திருந்த லீலாவின் கை, மெதுவாக அவன் மணிக்கட்டிற்கு உயர்ந்தது. அதன் பிறகு அவன் புஜத்துடன் தன் கைகளை இணைத்துக்கொண்டாள். மனைவியின் மனதின் நெருக்கம் செல்வாவிற்குள் குளிர் சாரலை உண்டாக்கியது.
ஜெயிண்ட் வீலில் ஏறி லேசாக தலை சுற்றிய நேரம் எங்கே கீழே விழுந்துவிடுவோமோ என்கிற பயத்தில் அவன் இடையோடு கை கோர்த்துக்கொண்டவள் அவனை தன்னை விட்டு விலகவே விடவில்லை. செல்வாவிற்கு தர்மசங்கடமாக இருந்தாலும் தங்களை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை எனவும் மனம் சமாதானம் ஆனவனாக மனைவிக்கு நன்றாகவே ஒத்துழைப்பு கொடுத்தான்.
லேசாகத் தலை சுற்றல் இன்னமும் இருக்க, “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த ரைடுக்குப் போகலாங்க.” என்றாள். அதை கேட்டு லேசாகப் புன்னகைத்துக் கொண்ட செல்வா தற்போது தான் வந்து நிற்கும் இடத்தை பார்த்தான்.
செயற்கை பனி விழும் இடம் லீலா சுதாரிக்கும் முன்னரே தேவையான அனைத்தையும் முடித்து, அவளை உள்ளே அழைத்து வந்துவிட்டான். சுட்டெரிக்கும் வெயில் திடீரென குளுகுளுவென மாறவும், ஒன்றும் புரியாமல் கணவனின் தோளிலிருந்து லேசாகத் தலையை எடுத்தாள் லீலா. ஆனால் அதற்குள் அவள் மேல் பூமழை போல் பனிமழை பெய்ய லீலாவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“என்ன இடம் ங்க இது.” என்று கேட்டுக்கொண்டே திரும்ப அருகே செல்வா இல்லை. “என்னங்க எங்க இருக்கீங்க.” என்று கேட்டுக்கொண்டே அவள் ஒரு அடி எடுத்து முன்னே எடுத்து வைக்க, சரமாரியாக பனிக்கட்டிகள் அவள் மேல் விழ ஆரம்பித்தது. அளவில் சிறிய பனிக்கட்டிகள் தான் என்றாலும் லேசாக வலி எடுத்தது. ஆனால் அதில் வலியை விட ஆனந்தம் அதிகமாக இருந்தது.
தனக்கு சற்று தொலைவில் நின்று தன்மேல் பனிக்கட்டிகளை அள்ளி எறியும் கணவனைப் பார்த்து முறைப்பதா இல்லை கீழே கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகளை அள்ளி மகிழ்வதா என்று தெரியவில்லை லீலாவிற்கு.
சிறுவயதில் இருந்து ஆலங்கட்டி மழையைக் கூட பார்த்திராத பெண் அவளின் முன்னால் பனி மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நேரம் அவளுடைய ஆனந்தத்தை சொல்லவா வேண்டும். ஆனால் அந்த ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி, பனிக்கட்டிக்கட்டிகளால் தாக்கி செல்வா செல்ல தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.
“என்னங்க போதும் என்னங்க விட்டுடுங்க.” கெஞ்சிக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியவள் ஒரு கட்டத்தில் தானும் பனிக்கட்டிகளை எடுத்து அவன் மேல் எறிய ஆரம்பித்தாள்.
அந்த விளையாட்டு சிறிது நேரம் நீடித்தது. இருவருக்குமே அதில் பேரானந்தம். அடுத்த பனிக்கட்டியை எடுக்க நினைத்து லீலா வழுக்கி கீழே போக சரியாக அவளைப் பிடித்துக் கொண்டான் செல்வா.
சிறிது நேரம் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்த இருவரும் புகைப்படம் ஒளிரும் சத்தம் மற்றும் வெளிச்சத்தில் தன்னிலை உணர்ந்தனர். கையில் கேமரா வைத்திருந்த ஒருவன் இவர்கள் இருவரின் மோகன நிலையை மிகவும் அழகாக படம் பிடித்து இருந்தான்.
“யாருடா நீ நானும் அப்ப இருந்து பார்த்துகிட்டே இருக்கேன். எங்க பின்னாடியே சுத்திகிட்டு இருக்க.” செல்வா சண்டைக்கே சென்றுவிட்டான்.
“சார் நான் ஒரு போட்டோகிராபர். உங்களோட ப்ரதர் அரசு இன்னைக்கு நாள் முழுக்க உங்களைத் தொந்தரவு பண்ணாம உங்களோட அழகான மொமண்ட்ஸ்ஸை போட்டோ எடுக்க சொன்னார்.” என்க, செல்வா தலைமுடியைக் கோதிக்கொண்டான்.
இந்த அரசு பக்கி இன்னும் என்னென்ன செய்து வைச்சிருக்கோ தெரியலையே என்று யோசிக்க, என்னவோ அவன் செய்த இந்த ஏற்பாடு உனக்குப் பிடிக்காத மாதிரியே பண்ற என்று கேலி செய்தது மனசாட்சி.
“நானும் இதுவரைக்கும் எத்தனையோ ஜோடிகளை போட்டோ எடுத்து இருக்கேன் சார். ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்கள மாதிரி ஒரு பெர்பெக்ட் ஜோடியை நான் பார்த்தது இல்ல.” போட்டோகிராபர் சொல்ல, “வாங்குற காசுக்கு மேல கூவுறான் டா.” என்ற திரைப்பட வசனம் தான் நினைவு வந்தது லீலாவுக்கு.
“போட்டோஸ் எடுத்த வரைக்கும் போதும். இனிமே எங்களைத் தொந்தரவு பண்ணாத.” என்ற செல்வா லீலாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“எதுக்காக அவரை போட்டோஸ் எடுக்க வேணான்னு சொன்னீங்க.” என்க, “நாம இரண்டு பேரு மட்டும் தனியா இருக்கணும் னு ஆசைப்படுறேன். அதனால் தான்.” என்றான் செல்வா.
“நல்லா சுத்தி பாருங்க இங்க நாம மட்டுமா இருக்கோம்.” புத்திசாலித்தனமாகக் கேட்பதாக நினைத்துக் கேட்டாள் லீலா.
“லீலா அது வேற, இது வேற. உங்களுக்குப் புரியுற மாதிரியே சொல்றேன். இவனைத் தெரியாத வரைக்கும், நீங்க என்னோட கையை எவ்வளவு இருக்கமா பிடிச்சுகிட்டு இருந்தீங்க. இப்போ பாருங்க விட்டுட்டீங்க. நம்ம கூட இன்னொருத்தர் இருக்காங்களேங்கிற தயக்கத்தில் தானே இப்படிப் பண்ணீங்க.” ஆசை பாதியும், சங்கோஜம் மீதியுமாய் கேட்டான் செல்வா.
“இது தான் விஷயமா. நான் தெரியாம உங்க கையை விட்டுட்டேன். அப்படியே நான் விட்டுட்டா தான் என்ன. நீங்க என் கையைப் பிடிச்சா ஆகாதா.” சிரித்துக்கொண்டே லீலா கேட்ட அடுத்த நொடி, அவளின் கரத்தோடு தன் கரத்தை சேர்த்து, தன்னுடன் நெருக்கமாக நிற்க வைத்தான் செல்வா.
“சூப்பர் சார், அப்படியே மேடமைப் பாருங்க. மேடம் அப்படியே சாரைப் பாருங்க.” சற்ற தொலைவில் இருந்து போட்டோகிராபர் சொல்ல, புன்னகையோடு இருந்தவன் அப்படியே திரும்பி அவனை முறைத்துவிட்டு திடீரென லீலாவை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான்.
நேராக ஸ்கேரி ப்ளேஸ் அருகே வந்தவன் ஐந்நூறு ரூபாய் பணத்தை வாயில் காவலனிடம் கொடுத்து போட்டோகிராபரை உள்ளே விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு லீலாவை உள்ளே அழைத்துச் சென்றான்.
“இது என்ன இடம், எதுக்காக இவ்வளவு இருட்டா இருக்கு.” லீலா விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அவர்களின் தலைக்கு மேலிருந்து தூக்கில் தொங்கிய வண்ணம் ஒரு பொம்மை விழ அரண்டு விட்டாள் லீலா.
“லீலா ரிலாக்ஸ். இது எல்லாமே செட்டப். இதுவும் ஒருவகையான விளையாட்டு தான் பயப்படாதீங்க.” என்று அவளுடைய முதுகில் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தான் செல்வா.
லீலா சமாதானம் அடைவதற்கு முன்னர் செல்வாவை நோக்கி கத்தியை ஓங்கிக்கொண்டு இருட்டில் இருந்து ஒரு உருவம் ஓடி வர, இது விளையாட்டு என்பதே மறந்து போனது லீலாவிற்கு.
செல்வாவின் நெஞ்சில் பாய இருந்த அட்டைக் கத்தியை கையில் பிடித்து நிறுத்திய லீலா, கத்தியை கையில் ஏந்தி இருந்தவனை ஒரு தள்ளு தள்ள, இருட்டிற்குள் அவன் மறைந்து போனான்.
செல்வா அட்டகாசமாய் புன்னகைக்க, “விளையாட்டாம் விளையாட்டு. என்ன விளையாட்டு இது. எனக்கு இது பிடிக்கவே இல்ல. வாங்க சீக்கிரம் போகலாம்.” என்றாள் லீலா.
“போயிடுவியா என்னை மீறி வெளியே போயிடுவியா.” என்றவாறு வந்து நின்றது ஒரு உருவம். முகத்தை மூடிய இரண்டு கரங்கள், துர்கையின் கைகளைப் போன்று பின்னால் ஆறு கைகள், பழுப்பு நிறத்தில் கந்தலான ஆடை, உடல் முழுவதும் சிவப்பு நிற துளிகள், தலையின் மேல் இரண்டு கொம்பு என பார்க்கவே பயங்கரமாக இருந்தது அந்த உருவம்.
லீலா பயப்படுவாள், தன்னை நெருங்கி நிற்பாள் என்று செல்வா எதிர்பார்த்திருந்த நேரத்தில், “ஏய் போ அந்தப் பக்கம். கடுப்பா இருக்கிற நேரத்தில் .காமெடிபண்ணிக்கிட்டு.” என்றவள் அந்த நபரைத் தள்ளவென்று கை வைக்க அதன் பிறகே அது கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பொம்மையென்று உணர்ந்தாள்.
“பொம்மையை வைச்சு தான் ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்காங்களா?” என பேசிக்கொண்டிருக்கும் போதே, வாயெல்லாம் சிகப்பு நிற திரவம் வடிய, காட்டேரி வேஷம் போட்ட பெண் ஒருவள் லீலாவைக் கடிக்க வருவது போல் மிக அருகே வர பயந்து போனாள் லீலா.
அந்த பயம் தெளிவதற்குள் இன்னும் நிறைய நிறைய சத்தங்கள் கேட்க லீலாவிற்கு உயிர் வரை உறைந்து போனது. தன் முன் யார் வந்தாலும் பரவாயில்லை அவர்களைத் தள்ளிவிட்டு சென்றுவிட வேண்டும் என்ற நினைப்புடன் ஒரு கையில் செல்வாவைப் பிடித்துக் கொண்டு வேக வேகமாக வெளியேறும் வழி நோக்கி நடந்தாள் லீலா. அவளை பயமுறுத்த என்று வரிசையாக நின்றிருந்த அனைத்து பேய்களையும் இடித்து தள்ளிவிட்டு ஒருவழியாக வெளியே வந்து சேர்ந்தாள்.
வெளியே வந்ததும் செல்வாவை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள். “லீலா என்னாச்சு உங்களுக்கு. ஏய் லீலா என்னாச்சுடி.” என்க, “உங்களுக்கு என்ன பைத்தியமா. இது என்ன விளையாட்டு. அவன் உங்களைக் கத்தியால் குத்த வந்தப்ப எனக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு.” என்றாள்.
“ஏய் லூசு இதுவும் ஒரு வகை விளையாட்டு தான்.” என்றவன் கையில் லேசாக அடித்துவிட்டு அவனுடைய தோளில் சாய்ந்தாள் லீலா.
புகைப்பட ஒளி முகத்தில் விழ முறைப்புடன் திரும்பிய செல்வா, “டேய் நீ எப்படிடா இங்க வந்த.” என்றான்.
“பாஸ் எனக்கு கமிட்மெண்ட் தான் எல்லாமே. நீங்க என்னை உள்ளே விடக்கூடாதுன்னு ஐநூறு ரூபாய் கொடுத்தீங்க. நான் உள்ள வர ஆயிரம் ரூபாய் கொடுத்தேன் அவ்வளவு தான். போகலாமா சீக்கிரம் டைம் ஆச்சு.” சாதாரணமாகச் சொன்னான் அவன்.
“டேய் புருஷன் பொண்டாட்டி இரண்டு பேர் தனியா வந்து இருக்காங்க. இப்படி அட்டை மாதிரி ஓட்டிக்கிட்டு சுத்துறமேன்னு உனக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா.” வேறுவழி இல்லாமல் கேட்டே விட்டான் செல்வா.
“இது தான் பாஸ் என் பிழைப்பே. உங்களுக்குத் தெரியாம உங்க இரண்டு பேரையும் எவ்ளோ அழகா போட்டோஸ் எடுத்து இருக்கேன் தெரியுமா. இன்னும் ஒரு நாற்பது வருஷம் கழிச்சு இதைப் பார்க்கும் போது எனக்கு கோடான கோடி நன்றிகள் சொல்லுவீங்க நீங்க.” போட்டோகிராபர் தற்பெருமை பேசிக்கொண்டிருந்த நேரத்தில், “சர்ப்பரைஸ்” என்றவண்ணம் பேய் உருவத்தில் இருந்த ஒருவன் கையில் கேக்கோடு வந்தான் லீலாவிடத்தில்.
லீலா செல்வாவைப் பார்த்து முறைக்க, “ஐயோ லீலா எனக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் உன் கூடவே தானே இருந்தேன். அப்புறம் எப்படி உனக்கு தெரியாம இப்படி ஒரு ஏற்பாட்டை பண்ணியிருக்க முடியும்.” செல்வா கேட்க அவன் கேள்வியில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள் பேய் உருவத்தில் இருந்த நபரிடம் விசாரிப்பதற்காக நெருங்கினாள்.
“தங்கச்சிம்மா அடிச்சு கிடிச்சு போட்றாத. இந்த அண்ணன் பாவம்.” பேய் வேஷத்தில் இருந்தவனிடத்தில் அரசு குரல் வந்தது.
“அரசு அண்ணா நீங்களா சத்தியமா எனக்கு அடையாளமே தெரியல.” அதீத சந்தோஷத்துடன் சொன்னாள் லீலா.
“ஐயோ சத்தம் போட்டு காட்டிக்கொடுத்திடாதம்மா. பேய் வேஷம் போட்டு வரவங்களை பயமுறுத்திக்கிட்டு இருந்தவன் கிட்ட பத்து நிமிஷத்துக்கு மட்டும் இந்த கெட்டப்பை கடன் வாங்கிட்டு வந்திருக்கேன். ஓனர் பார்த்தா எல்லோருக்கும் பிரச்சனை.” என்றான் அரசு.
“அடப்பாவி இதுக்கு தான் என்ன பண்றதுன்னு குழப்பத்தில் இருந்த என்னை சென்னைக்குப் போ போன்னு உயிரை வாங்குனியா. அப்ப உள்ள என்னைக் கத்தியால் குத்துவதற்கு ஒரு பேய் ஓடி வந்ததே, அதுவும் நீதானா?” என்க, “பரவாயில்லை டா நீயும் கூட அறிவாளின்னு அப்பப்ப நிரூபிச்சுக்கிட்டே இருக்க.” சீண்டினான் அரசு.
சில செல்ல சண்டைகளுக்குப் பிறகு, பிறந்தநாள் வாழ்த்துப் பாடலுடன் லீலா கேக்கை வெட்டி அரசு மற்றும் செல்வா இருவருக்கும் ஊட்டி விட, போட்டோகிராபர் அதைப் புகைப்படம் எடுக்க என சந்தோஷமாக நகர்ந்து அந்த தருணம்.
“சரிடா செல்வா எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. அதுக்கு முன்னாடி உங்களை ஒருவழி பண்ணலாம் னு நினைச்சு தான் இங்க வந்தேன். வந்த வேலை ரொம்ப சிறப்பா முடிஞ்சிடுச்சு. எனக்கு மெரினா பக்கத்துல தான் வேலை. இவ்வளவு தூரம் வந்துட்டு நீங்க அங்க வரலன்னா எப்படி.
எங்கெங்க போகணுமோ அங்க எல்லாம் போயிட்டு, எவ்வளவு கொஞ்சணுமோ அவ்வளவு கொஞ்சிட்டு, அஞ்சு மணிக்குள்ள மெரீனா வந்து சேர்ந்திடுங்க. நாம எல்லாரும் சேர்ந்து ஊருக்குக் கிளம்பிட்டலாம் என்ன.” என்றுவிட்டு பதில் வரும் வரை கூட காத்திருக்காமல் நகர்ந்தான் அரசு.
செல்வா வந்திடுவான் மத்த மூணு பேரையும் அங்க வர வைக்கணும். அதுக்கு அப்புறம் இருக்குடி உங்களுக்கு. மனதிற்குள் சந்தோஷமாக நினைத்தபடி தர்மா மற்றும் தேவகியைப் பார்க்கக் கிளம்பினான் அரசு.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அரசு பெரிய பிளானா இருக்கும் போல.. சூப்பரா இருக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள்