
அத்தியாயம் 100
“சொல்லுடா தெய்வா, என்ன சென்னைக்குப் போய் சேர்ந்திட்டியா. என் தங்கச்சி ஒன்னும் வரமாட்டேன் அது இதுன்னு அடம் பிடிக்கலையே.” ஆப்பிளைக் கடித்துக்கொண்டே கேட்டான் அரசு.
“அவ அடம் எல்லாம் பிடிக்கல. ஆனா கேள்வி மேல கேள்வி கேட்டு ஒருவழி ஆக்கிட்டா. இங்க வந்து சேர்ந்த பின்னால் தான் கொஞ்சம் அமைதியா இருக்கா.” சிரிப்போடு சொன்னான் தெய்வா.
“தேவை தான்டா, எல்லோர்கிட்டேயும் நீ கேள்வி மேல கேள்வியா கேட்ப. அதனால தானோ என்னவோ உன்னைக் கேள்வி கேட்க உனக்காகவே ஸ்பெஷலா உன் பொண்டாட்டியை டிசைன் பண்ணி இருக்கான் ஆண்டவன்.”
“அதெல்லாம் போகட்டும் விடுடா. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. நல்லவேளை நேத்து உன்னை மீட் பண்ணி பேசினது நல்லதாப் போச்சு.
பிறந்தநாள் அன்னைக்கு எனக்குப் பிடிச்ச, எனக்குப் பழக்கமான இடங்களுக்கு கூட்டிட்டு போவதை விட, ருக்குவுக்குப் பிடிச்ச இடத்துக்கு கூட்டிட்டுப் போறது தான் சரியா இருக்கும் னு நல்ல ஐடியா கொடுத்த. இல்லன்னா நான் பாட்டுக்கு நம்ம ஊருக்குள்ளேயே எங்கேயாவது கூட்டிட்டுப் போய் இருப்பேன்.
இங்க ருக்கு இதுவரைக்கும் பார்க்காத நிறைய விஷயங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் இன்னைக்கு முழுக்க நான் ருக்குவுக்கு சுத்திக் காட்ட போறேன். அவளை ரொம்ப ரொம்ப சந்தோஷமா வைச்சுக்க போறேன்.” அகமகிழ்ந்து சொன்னான் தெய்வா.
அதில் மகிழ்ந்தாலும், “என்னது நாள் முழுக்கவா. ருக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடனும் னு ரொம்ப கண்டிப்போடு சொன்னதா சொன்ன.” என்ன பதில் வரும் என்று தெரிந்து கொண்டே கேட்டான் அரசு.
“ஆமா அவ சொன்னா தான். அதுக்காக அவ சொன்னது எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்க முடியுமா?” சாதாரணமாகக் கேட்டான் தெய்வா. கண்கள் அவனை விட்டு சற்று தொலைவில் பயபக்தியுடன் விளக்கேற்றிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தது.
“அந்தப் பொண்ணு அவ அக்கா, தங்கச்சிங்க கூட பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு தான் உன்கிட்ட இப்படி ஒரு கண்டிஷன் வைச்சிருக்கா. அது தெரிஞ்சும் நீ அடம் பிடிச்சா எப்படி. பிறந்தநாள் அன்னைக்கு அவளுக்குப் பிடிச்சது செய்யுறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது பிடிக்காததை செய்யாமல் இருக்கிறது.” அழுத்தம் திருத்தமாய் சொன்னான் அரசு.
“இங்க பாரு அரசு, ருக்கு ஒரு குழந்தை மாதிரி. குழந்தை லாலிபாப் வேணும் னு அடம்பிடிச்சு அழும். மிட்டாய் சாப்பிடக் கூடாதுன்னு நாம சொன்னா, நம்ம கிட்ட கோச்சுக்கிட்டு பேசாம இருக்கும்.
ஆனா அதே குழந்தைக்கு டெடிபியர் வாங்கி கொடுக்கும் போது, சந்தோஷத்தில் சக்லேட்டையும் மறந்திடும், நம்மகிட்ட போட்ட சண்டையையும் மறந்திடும்.
அதே மாதிரி தான் ருக்குவும். இத்தனை வருஷமா அவங்க எல்லாரும் ஒன்னா தானே பிறந்தநாள் கொண்டாடினாங்க. இந்த வருஷம் தனித்தனியாக கொண்டாடினா ஆகாதா. நீ வேணும் னா பார்த்துக்கிட்டே இரு. ருக்கு இன்னைக்கு அவளோட அக்கா தங்கச்சிங்களை கண்டிப்பா மறந்துடுவா.
நாளைக்கு உன்கிட்ட வந்து, இத்தனை வருஷத்துல இந்த மாதிரி ஒரு சந்தோஷமான நாளை அனுபவிச்சதே இல்லன்னு அவ வாயால சொல்லுவா. சொல்ல வைப்பான் இந்த தெய்வா.” கர்வமாகச் சொன்னான்.
“இந்த திமிருக்குத் தான்டா உங்களை எல்லாம் இன்னும் நல்லா அலையவிடணும் னு எனக்கு இரத்தம் மொத்தமும் கொதிக்கிது. சாயங்காலம் வரைக்கும் சந்தோஷமா இரு மகனே. அதுக்கு அப்புறம் நடக்கப் போறது என்னன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.
இந்த நாளை ருக்கு மட்டும் இல்ல நீயும் மறக்கவே மாட்ட. வெயிட் அண்ட் வாட்ச்.” என்று தனக்குள் நினைத்துக்கொண்ட அரசு, தெய்வா ஹலோ என்று இரண்டு முறை கத்தியதும் கவனம் வரப்பெற்றான்.
“சரி சீக்கிரம் தியேட்டருக்குப் போய் சேர். அந்த தியேட்டர் ஓனர் என்னோட ப்ரண்டு தான். உங்களுக்காக இரண்டு விஐபி சீட் அரேஞ்ச் பண்ணி இருக்கேன். ஒழுங்கா போய் படத்தை மட்டும் பாரு. கையைக் காலை வைச்சிக்கிட்டு சும்மா இருக்காம பப்ளிக் ப்ளேஸ்ல என் தங்கச்சி கிட்ட அடிவாங்காத.” அரசு சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில், “என்னங்க போலாமா.” என்றவாறு கோவிலில் இருந்து வந்தாள் ருக்கு.
“மச்சான் நான் முக்கியமான வேலை விஷயமா வெளியூருக்கு வந்து இருக்கேன். அப்புறமா கால் பண்றேன் பாய்.” யாரோ போல காட்டிக்கொண்டு அழைப்பைத் துண்டித்தான் தெய்வா.
“யாருங்க” ருக்கு கேட்கவும், “ஓல்டு ப்ரண்டு மா. எப்பவுமே போன் பண்ண மாட்டான். இப்ப சடனா போன் பண்ணி கழுத்தை அறுத்துட்டு இருக்கான்.”
“இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு போன் பண்றாங்கன்னா ஏதும் முக்கியமான விஷயமா இருக்க போது பேசுங்க.”
“நீ என் பக்கத்தில் இருக்கும் போது உன்னை விட முக்கியமானது எனக்கு வேற எதுவுமே இல்ல ருக்கு.” ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்துச் சொன்னான் தெய்வா.
இதைப் போல் நீயும் என்னை நினைக்க வேண்டும் என்கிற அவன் மனவிருப்பம் அந்த வார்த்தைகள் முழுவதும் நிறைந்திருந்தது. ஆனால் அவன் மனைவி அதனைக் கவனிக்கவும் இல்லை உணரவும் இல்லை.
“உங்க பேச்சைக் கேட்டு அப்படியே உடம்பு முழுக்கப் புல்லரிக்கிது. ஆடு, மாடு பார்த்தா விடாது. வாங்க போகலாம்.” என்றவாறு முன்நடந்தாள் ருக்கு.
இராதா இல்லத்தில், “என்ன செல்வா நீ. இப்படி பொறுப்பில்லாம இருக்க. இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் உனக்கு சென்னைக்கு ப்ளைட். இப்ப இங்க நின்னுக்கிட்டு இருந்தா, ஏர்போட்டில் செக்இன் யார் பண்றது.” கோபித்தான் அரசு.
நான்கு பேருக்குமாகச் சேர்த்து அவன் போட்ட திட்டத்தில் சின்னதாய் பிழை வந்தாலும் மொத்தமாக சொதப்பிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால் வந்த பதற்றம் அவனிடத்தில்.
“ஏன்டா இப்படி ஆளை வாட்டி வதைக்கிற. நான் தான் சொன்னேன் இல்ல. லீலாவுக்கு இப்படி அதிகமா செலவு பண்ணி அவங்க பிறந்தநாளைக் கொண்டாடுறது பிடிக்காதுன்னு. நான் என்ன நினைச்சேனோ அதையே தான் அவங்களும் சொன்னாங்க. எனக்கு இப்ப போகணுமான்னு இருக்கு.” புலம்பினான் செல்வா.
“ஏன்டா இவ்வளவு கஞ்சனா இருக்க. நீ இப்படி, அவ அப்படி. சரியான ஜோடி தான் டா நீங்க. ஊக்குள்ள ஒவ்வொருத்தன் புதுசாக் கல்யாணம் ஆன பொண்டாட்டியை எங்கெங்க கூட்டிட்டுப் போறான், எப்படி எப்படித் தாங்குறான்னு பாரு. அவ்வளவு ஏன் உன் தம்பிங்களைப் பாரு அவங்க பொண்டாட்டிங்களோட எவ்வளவு அந்நியோன்யமா இருக்காங்க. நீ ஏன்டா இப்படி இருக்க, சாமியார் மாதிரி.” புலம்பினான் அரசு.
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாது.” இலகுவாகச் சொல்லிவிட்டு தோள்களைக் குலுக்கினான்.
“சரிடாப்பா உன்னை எல்லாம் என்னால என்ன யாராலும் மாத்த முடியாது. சீக்கிரமா கிளம்பி ஏர்போர்ட்டுக்கு போ.” காரியத்தில் கண்ணாய் இருந்தான் அரசு.
“எவ்வளவு தூரம் வேண்ணாலும் போகலாம். ஆனா சரியா சாயந்திரம் ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்திடணும் னு லீலா என்கிட்டே கேட்டுக்கிட்டு இருக்காங்க. இப்போ போய் சென்னையை சுத்திப் பார்த்துட்டு, ஐந்து மணிக்குள்ள திரும்ப வருவது எல்லாம் கஷ்டம் டா.” உணர்ந்து சொன்னான் செல்வா.
“ஐயோ அப்ப நான் போட்ட திட்டமெல்லாம் என்ன ஆகிறது.” அரசு பதற, “என்னது திட்டமா, என்ன திட்டம்.” என்றான் செல்வா.
“திட்டம் னா திட்டம். நீ போட்ட திட்டம். நான் போட்ட திட்டம். உன் தம்பிங்க போட்ட திட்டம். எல்லோருடைய திட்டமும் தான்.” என்று இழுத்துக் கொண்டே அடுத்து தான் செய்ய வேண்டியதை அந்த நொடிப் பொழுதிற்குள் யோசித்த அரசு,
“இன்னைக்கு நீ லீவ் எடுத்திருக்க, அப்படி இருக்க இன்னைக்கு நாள் முழுக்க நீ ஊர் சுத்தினா நாளைக்கு வேலைக்குப் போக கஷ்டமா இருக்குமேன்னு லீலா உனக்கா சொல்லியிருப்பா டா.
வாழைப்பழம் பிடிக்காத குரங்கும், அவுட்டிங் பிடிக்காத பொண்ணும் இருக்க முடியுமா என்ன. நான் சொன்ன மாதிரி சென்னை கூட்டிட்டு போ.
அங்க பன்வேர்ல்டு நிறைய இருக்கும். அங்க லீலா கண்டிப்பா போய் இருக்கவே மாட்டா. நிறைய ரைய்டு போங்க. ஸ்கேரி ப்ளேஸ்ஸஸ், ஸ்னோ வேர்ல்டுன்னு என்ஜாய் பண்ணுங்க இரண்டு பேரும் சேர்ந்து.” அரசு சொல்லச் சொல்ல செல்வாவின் கண்களில் ஆசை வந்தது.
“கோவிலுக்குப் போக லீலா ஆசைப்பட்டா சோழிங்கநல்லூர் பக்கத்தில் இஸ்கான் டெம்பிள் இருக்கு. ஒரு நல்ல அமைதியான கிருஷ்ணர் கோவில். சாயங்காலம் கொஞ்சம் முன்னப் பின்ன ஆனாலும் திரும்பி வந்திடுங்க.” என்க, செல்வா யோசனையாய் இருந்தான்.
“நீ எதுக்காக யோசிக்கிறேன்னு புரியுது. ஐந்து மணின்னு சொன்னா தான் அண்ணன், தம்பிங்க பத்து மணிக்காச்சும் வீட்டுக்கு வருவீங்கன்னு யோசிச்சு சொல்லி இருப்பாங்க என் தங்கச்சிங்க நாலு பேரும். இந்த விஷயங்களில் எல்லாம் பொண்ணுங்களை மிஞ்சின இராஜதந்திரி யாரும் கிடையாது.” என்க, அப்படியும் இருக்குமோ என்று பார்த்தான் செல்வா.
“பொண்ணுங்களுக்கு எப்பவும் தனக்காக ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து பண்ற ஆண்களை ரொம்பப் பிடிக்கும். இந்தப் பயணம் லீலாவுக்கும் உனக்கும் இருக்கும் இடைவெளியைக் கட்டாயம் குறைக்கும். இதுக்கு மேல கல்யாணம் ஆகாத பையனைப் பேச வைக்காத, நல்லா இருக்காது.” அரசு தூபம் போட, அது நன்றாகவே வேலை செய்தது செல்வாவிடம். விளைவு அதையும் இதையும் சொல்லி லீலாவைச் சமாதானம் செய்து, வீட்டில் இருந்து கிளம்பிவிட்டான்.
“இப்பவும் இவ்வளவு தூரம் போவதில் எனக்கு விருப்பம் இல்லை தான்.” கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் அந்த நாளின் இரண்டாவது விமானத்தில், முதன் முறையாக விமானத்தில் அமர்ந்திருக்கும் பயமும், மாலை வீட்டிற்குத் திரும்பி வந்து விடுவோமா என்கிற சந்தேகமும் சேர்ந்துகொள்ள சொன்னாள் லீலா.
“லீலா உங்களோட சங்கடம் என்னன்னு எனக்குப் புரியுது. சாயங்காலம் சரியா உங்களை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறது என்னோட பொறுப்பு. நீங்க என்னோட கொண்டாடப் போற முதல் பிறந்தநாள். அதைக் கொஞ்சமாவது ஸ்பெஷலா கொண்டாடணும் இல்லையா. அதுக்காகத் தான் இந்த ட்ரிப். ஜஸ்ட் கொஞ்ச நேரம் தான். போயிட்டு சில இடங்கள் மட்டும் சுத்தி பார்த்துட்டு திரும்ப நாம வந்துடலாம்.” செல்வா சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமானம் புறப்பட ஆயத்தம் ஆக, பயத்தில் செல்வாவின் புஜத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டாள் லீலா. அந்த நேரத்தை அழகாக இரசித்தான் செல்வா.
“இந்த வயித்தை வைச்சுக்கிட்டு அவ்வளவு தூரம் போகணுமா, அதுவும் ப்ளைட்ல.” விமானநிலையத்தில் நின்றுகொண்டு கேட்டாள் ஊர்மி.
அரசுவின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தான் நாகா. “கர்ப்பமா இருக்குற எல்லாப் பொண்ணுங்களுக்கும் கடற்கரையோரமா புருஷன் கூட கையைக் கோர்த்துகிட்டு சந்தோஷமா நடந்து போகணும் னு ஆசை இருக்கும். அப்படிப் போகும் போது அந்த பாதை முடியவே கூடாதான்னு மனசு ஏங்கும்.
பொண்டாட்டியோட பிறந்த நாள் அதுவுமா இந்த நியாயமான ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாதா உன்னால. வேற எந்த பீச்சுக்கோ கூட்டிட்டு போறதுக்குப் பதிலா ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான நம்மளோட மெரினா பீச்சுக்கு கூட்டிட்டு போ.” என்று ஆசை காட்டி இருந்தான்.
“சில சந்தோஷங்களை அனுபவிப்பதற்காக சின்னச்சின்ன கஷ்டங்களை நாம பொருட்படுத்தக் கூடாது ஊர்மி. ஊர் உலகத்தில் கர்ப்பமா இருக்குற பொண்ணுங்க என்னென்ன வேலை பார்க்கிறாங்கன்னு பார்.
நீ என்னடான்னா ப்ளைட்டில் வருவதற்குப் பயப்படுற. அஞ்சு மாதத்துக்கு மேல ஆயிடுச்சு. அதெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை. என் பசங்க என்னை மாதிரியே ஸ்ட்ராங். அவங்களுக்கு எதுவும் ஆகாது. எல்லாத்துக்கும் மேல நான் உன்கூட இருக்கும் போது, என்னை மீறி உனக்கு என்ன ஆகிடும் சொல்லு.” வார்த்தையால் தைரியம் ஊட்டினான் நாகா.
“இந்த ஒரு நம்பிக்கையில் மட்டும் தான் நான் உங்க கூட வரேன்.” என்றவாறு கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் அன்றைய நாளின் மூன்றாவது விமானத்தில் அமர்ந்தபடி கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் ஊர்மி.
“அப்பாடா இந்த இரண்டு ஜோடியும் ஒருவழியாக ப்ளைட்டில் ஏறிடுச்சுங்க. இதுங்களை வீட்டிலிருந்து கிளப்பி கூட்டிட்டு வந்து, ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம தனித்தனி ப்ளைட்ல ஏத்தி விடுறதுக்குள்ள உயிர் போய் உயிர் வருதுடா சாமி. இன்னைக்கு நாள் முழுக்க இராதா இல்லத்துக்கும் ஏர்போட்டுக்கும் சவாரி அடிச்சு கார் டயர் தேஞ்சே போயிடும்.
இன்னும் மிச்சமிருக்கிறது அந்த வாத்தி ஒருத்தன் தான். அவனை எப்படியாவது துரத்தி விடனும்.” என்று நினைத்தவாறு தர்மாவின் நம்பரை டைல் செய்தான் அரசு. தர்மாவின் போன் சத்தம் மிக அருகில் கேட்க, திரும்பி பார்த்தான் அரசு. அங்கே தர்மா முறைப்புடன் நின்றுகொண்டிருந்தான்.
இங்கே ஆர்வத்தோடு படம் பார்த்துக்கொண்டிருந்த ருக்குவிற்கு இடைவேளை விட்டதும் எரிச்சல் வந்தது. “ச்சே இப்படி ஒரு இக்கட்டான இடத்தில் இன்டர்மிஷன் வைச்சிட்டாங்க. படம் ஆரம்பிக்கிறதுக்கு இன்னும் பத்து நிமிஷம் ஆகுமா. எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.” என்று அனத்திக் கொண்டிருந்தாள். அவளை சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் தெய்வா.
இடைவேளை நேரம் முடியப் போகும் நேரத்தில் ஒவ்வொருவராக வந்து தங்களுடைய இருக்கையில் அமர, மிகுந்த ஆர்வத்துடன் இரண்டாம் பாதியை பார்க்கத் தயாரானாள் ருக்கு.
நிமிடங்கள் இறங்குவரிசையில் இறங்கி முடிய, அந்த வெள்ளை நிறத் திரையில் வண்ணப்படம் வந்தது. ஆனால் அது திரைப்படம் அல்ல ருக்குவின் புகைப்படம். அவளுடைய திருமணத்தின் போது அவளை அப்படி இப்படி என்று நிற்கவைத்து பாடாய் படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மிகவும் அழகான ஒன்று.
“இந்தப் புகைப்படத்தில் இருக்கிறவங்களோட பெயர் ருக்மணி. இவங்களோட கணவர் காவல்துறையில் கண்ணியமான பொறுப்பில் இருப்பவர். மனைவியோட பிறந்தநாளை சிறப்பானதா மாற்ற இந்தச் சிறப்பு ஏற்பாட்டை பண்ணி இருக்காரு.
மிஸஸ் ருக்மணி தெய்வராஜ், இது உங்களுக்கான ஒரு சிறிய வீடியோப்பதிவு அண்ட் உங்களுக்கு எங்க எல்லோரோட சார்பாவும் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என்று யாரோ ஒரு ஆணின் குரல் ஒலித்தது.
இதற்கே ருக்கு அரண்டு விட்டாள் என்றால் அடுத்தாக வந்த வீடியோ பதிவால் அவள் உருகியே போய் விட்டாள். தெய்வாவிடம் விளையாட்டாக ஒருநாள் இந்த சீரியல் ஹீரோ மிகவும் பிடிக்கும் என்று சொல்லி இருக்க, அவர் காணொளிக்காட்சியாக திரைப்பட திரையில் வந்தார். ஆனால் ருக்குவிற்கான பிறந்தநாள் வாழ்த்தோடு.
காவல்துறையில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த நடிகரின் மேனேஜர் எண்ணைப் பிடித்து அவரிடம் பேசி, அதைத் தொடர்ந்து அந்த நடிகரிடம் பேசி இப்படி ஒரு காணொளிக் காட்சியை வாங்கியிருந்தான் தெய்வா.
ருக்குவிற்குத் தலை, கால் புரியவில்லை. அந்த இடத்திலேயே எழுந்து நின்று கத்த வேண்டும் போல் இருந்தது. தனக்காக தன்னவன் இத்தனை செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டவளுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. அவள் சிறுபிள்ளையின் இதயம் கொண்டவள். அவளிற்குத் தேவையானதும் சிறுபிள்ளையின் விருப்பம் போலவே இருப்பதிலும், அவளுக்காக தான் இறங்கி செய்திருக்கும் செயலிலும் வெட்கம் வந்தது தெய்வாவிற்கு.
“மேடம் இந்த நிமிஷம் நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்கன்னு நம்புறேன். என்னோட ப்ரண்ட் அரசு ஏற்பாடு செய்த கேக் உங்களுக்காக இங்க காத்துக்கிட்டு இருக்கு. படம் முடிஞ்சதும் நீங்க கண்டிப்பா இங்க வரனும்.” என்றதோடு அந்த ஒலிப்பதிவு முடிந்து படம் ஆரம்பித்தது.
அதன்பிறகு ருக்குவிற்குப் படம் பார்க்க எங்கே தோன்றியது. தன்னுடைய காதுகளைத் தீட்டிக் கொண்டு அருகே இருந்தவர்களின் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
“பொண்டாட்டியோட பிறந்தநாளுக்கு எந்த மாதிரி ஒரு சர்ப்ரைஸ் பண்ணியிருக்காரு. உண்மையிலேயே அந்த பொண்ணு ரொம்பக் கொடுத்து வைச்சவ.”
“பார்க்கிறது போலீஸ் வேலை. ஆனா பண்து பப்ளிக் நியூசன்ஸ்.”
“பொண்டாட்டிக்காக இத்தனை பண்ணி இருக்கான். சரியான பொண்டாட்டி தாசனா இருப்பான் போல.”
“பிறந்தநாளோட அர்த்தம், சாகப்போற வருஷம் ஒன்னு குறையுதுங்கிறது தான். இதுக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்.”
“இத்தனை பண்ணதுக்கு ஒரு லட்ச ரூபாய் கையில கொடுத்து இருந்தா அந்த பொண்ணு எவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்கும். பொண்ணுங்களைப் புரிஞ்சுக்குத் தெரியாத பைத்தியக்காரன்.”
“இவங்க பிறந்தநாள் னா அதை எதுக்காக நம்ம எல்லாருக்கும் படம் போட்டுக் காட்டணும். இது எல்லாம் சொசைட்டிக்குத் தப்பான ரோல் மாடல். இதைப் பார்த்து நாளைக்கு மத்த பொண்ணுங்களும் இதையே எதிர்பார்ப்பாங்க. இதைச் செய்யும் அளவு பணமோ பக்கபலமோ அவங்களோட துணைக்கு இருக்குமா?”
“நல்லா பார்த்துக்கோ லவ்வர் னா இப்படி இருக்கணும்.” பல வயதினரின் பல விமர்சனங்கள் அவள் காதில் விழுந்தது. நல்லது கெட்டது இரண்டுமே அதில் இருந்தாலும் அன்னப்பறவையைப் போல் ருக்கு நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டாள்.
அவளுக்கு அத்தனை பெருமையாக இருந்தது. தெய்வாவின் கரத்தோடு தன் கரத்தைக் கோர்த்துக்கொண்டு காதல் வழியும் கண்களோடு அவனைப் பார்த்தாள்.
அவள் பார்வையின் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது. இது மட்டும் அவர்களுடைய அறையாக இருந்திருந்தால், இந்நேரம் பத்து முத்தங்களாவது கிடைத்திருக்கும் என்று புரிய புன்னகைத்துக்கொண்டவன், அவள் காலையில் இருந்து எதிர்பார்த்த பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்ல ஆனந்த மிகுதியில் கண்ணீரே வந்துவிட்டது அவளுக்கு.
அவளை அந்த நிமிடங்களை இரசிக்க விட்ட தெய்வாவின் மனம் அரசுவை நினைத்துப் பார்த்தது. உறவுகளைக் காப்பாற்றுவதிலும், அவர்களை சந்தோஷப்படுத்துவதிலும் அரசுவை மிஞ்சும் ஆள் அகிலத்தில் கிடையாது. அவன் தனக்காக செய்த அனைத்திற்கும் கைமாறாக, அவனை உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக்கொள்ளும் பெண், குணத்தில் ருக்குவையும் மிஞ்சிய பெண்ணைத் தேடி தன் முன்னிலையில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான் தெய்வா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
10
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நாலு எபிசோடும் சூப்பர். அரசு என்ன தில்லாலங்கடி வேலை பார்த்திருக்கோ. ஒரு வேளை நாலு பேருமே பெண்கள் வீட்டுக்கு கொண்டாட்டத்துக்கு வந்து திண்டாட போறாங்களோ.
எல்லாருமே வேற வேற இடத்துக்கு போக போறாங்க. எங்க மீட் பண்ணுவாங்க. ஆண்கள் பிளான் பண்ணது பெண்களுக்கு தெரிஞ்சு பிரச்சனை ஆகுமோ