Loading

அத்தியாயம் 10

     “நீங்க சொல்ற படி எல்லாமே நல்லபடியா நடந்து முடிந்தா எனக்கும் சந்தோஷம் தான். ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணலாம் னு சொல்லுவாங்க.

     அப்படி இருக்க, இவங்க சிஸ்டர்ஸ் என்கிற ஒரு உண்மையை மறைச்சு நாம நாலு கல்யாணம் பண்றதில் பெருசா எந்தத் தப்பும் இல்ல தான். என்ன ஒன்னு உண்மை தெரிய வந்ததுக்கு அப்புறம் உங்க சீமந்தப் புத்திரர்கள் நாலு பேரும் வானத்துக்கும், பூமிக்கும் ஸ்கிப்பிங் குதிப்பாங்க. அதை நினைச்சா தான் லைட்டா பயமா இருக்கு.” நிஜமான பயத்தோடு சொன்னான் அரசு.

     அதிகம் பேசாமல், பழகாமல் போனால் கூட ஒருசிலரால் அனைவரையும் புரிந்துகொள்ள முடியும். அந்தக் கலை அரசுவிடம் உண்டு. அதனாலேயே வடிவேலுவிற்கு முன்னெச்சரிக்கை கொடுத்தான்.

     “நீ உன்னோட ஓட்ட வாயை வைச்சுக்கிட்டு அமைதியா இரு அதுவே போதும். மத்தது எல்லாம் தானா நடக்கும். முதல்ல என் மருமகளுங்களுக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணு.” என்றார்.

     “அவங்க நாலு பேருக்கு ஆர்டர் பண்ணும் போது அப்படியே இந்த அடியேனுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணிக்கட்டுமா?” பாவமாகக் கேட்ட அரசுவைப் பார்த்து சிரித்தவர், “பண்ணித் தொலை, காசைப் பார்க்காத நல்ல ஹோட்டலா பார்த்து, நல்லதா ஆர்டர் பண்ணு. அப்புறம் இந்த பொட்டிக் வைச்சிருக்காளே உன் சித்தி பொண்ணு. அவளை அந்த பொட்டிக்கைத் தூக்கிட்டு இங்க வரச் சொல்லு.” அடுத்தடுத்து ஆர்டர் போட்டார் வடிவேலு.

     “என்னது பொட்டிக்கை இங்க தூக்கிட்டு வரணுமா? சரிதான் இவருக்கு ஓவர் சந்தோஷத்தில் மூளை குழம்பிடுச்சி போல.” தனக்குள் நினைத்துக்கொண்டவன், “அப்படியே பண்ணிடுறேன் அங்கிள்.” என்றபடித் திரும்பி, சங்கோஜத்துடன் நின்றிருந்த சகோதரிகளைப் பார்த்தான்.

     “அப்புறம்” என்று வடிவேலு மேலும் ஏதோ சொல்ல வர, “எக்ஸ்கியூஸ்மி மிஸ்டர் முதலாளி. ஐ மீன் மிஸ்டர் அங்கிள், எனக்கு இரண்டு கை, இரண்டு கால் தான் இருக்கு. ஒரே நேரத்தில் பல வேலையை என்னால் செய்ய முடியாது. சோ மிச்சம் இருக்கிற வேலையை உங்க அல்லக்கை யார்கிட்டையாவது சொல்லுங்க. நான் போய் இந்த வீட்டு மருமகளுங்களுக்கு சாப்பாடு ரெடி பண்றேன்.” என்றுவிட்டு முன்நடந்தான் அரசு.

     “கொழுப்பைப் பார்த்தீங்களாம்மா. இவனே ஒரு அல்லக்கை தான். இவன் இன்னொருத்தனை அல்லக்கைன்னு சொல்லிட்டு போறான்.” சிரித்தார் வடிவேல்.

     “செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.” பாடியவண்ணம் போலியாக அழுதுகொண்டே சென்றான் அரசு.

     நெருப்பில் நிற்பது போன்ற உணர்வுடன் தான் அந்த வீட்டில் ஒவ்வொரு நிமிடமும் கழிந்தது பெண்களுக்கு. சற்று நேரத்தில் ஆர்டர் செய்த உணவுகள் அனைத்தும் வந்து சேர, அதை உணவு மேடையில் கடை பரப்பினான் அரசு. அத்தனை உணவு வகைகளை ஒரு சேரப் பார்த்ததும் தலையே சுற்றியது சகோதரிகள் நால்வருக்கும்.

     “வாங்க வாங்க எனதருமை சீமாட்டிகளே.” அரசு பெண்களை அழைக்க, “ஏய்” என்று அதட்டினார் வடிவேலு.

     “ஸ்சாரி, உடனே நெற்றிக்கண்ணைத் திறந்திடாதீங்க. வாருங்கள் எனதருமை எஜமானிகளே. உங்களுக்காக இந்த வேலைக்காரன் எந்தெந்த ஹோட்டலில் என்னென்ன ஸ்பெஷலோ அது அத்தனையும் ஆர்டர் பண்ணி இருக்கேன். வாங்க வந்து ஒரு வெட்டு வெட்டுங்க.

     மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா. அது அலுத்துப் போனா சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் சுக்கா, நண்டு வறுவல். அதுவும் அலுத்துப் போனா வஞ்சிரம் மீன் வறுவல், அயிரை மீன் குழம்பு, காடை வறுவல். அதுவும் அலுத்துப் போனா எக் ரைஸ், சிக்கன் ரைஸ், காளான் கூட்டு.

     முட்டை அவிச்சது இருக்கு, ஆம்ளைட் இருக்கு, ஆப்பாயில் இருக்கு, கலக்கி இருக்கு எல்லாமே அலுத்துப் போச்சுன்னு வைச்சிக்கோங்களேன், உங்களை அதிருப்தி ஆக்கக் கூடாதுன்னே ஒரு பெரிய ஸ்பெஷல் அயிட்டம் வைச்சிருக்கேன்.

     இதோ இங்க பாருங்க, சாம்பார் சாதம், தேங்காய் சாதம், புளிசாதம், தயிர்சாதம், எலும்பிச்சை சாதம், மோர் குழம்பு, வத்த குழம்பு, சூடான உளுந்த வடை, வெங்காய போண்டா பொறிச்ச அப்பளம் அதை விட லோக்கலா காரமான மோர் மிளகாவும் கூட இருக்கு.” அரசு சொல்லி முடித்த தோரணையில் யாராக இருந்தாலும் சிரிப்பு வந்திருக்கும். அவன் இலகுவான நடவடிக்கையில் பெண்கள் நால்வரின் மனதில் இருந்த இறுக்கம் மாறி லேசான புன்னகை அரும்பியது உண்மை.

     “பரவாயில்லை டா அரசு, உனக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு. நான் சொல்லாமலே வெஜ் அயிட்டம் கூட ஆர்டர் பண்ணி இருக்க.” பாராட்டினார் மனிதர்.

     “இல்ல அங்கிள் உங்க மருமகளுங்களைப் பார்த்தாலே நல்லாத் தெரியுது. நாலு பேரும் காமாட்சி விளக்கு மாதிரி ஜொலிக்கிறாங்க. நானும் கேள்விப்பட்டு இருக்கேன் டைனோசர் காலத்தில் இருந்த பொண்ணுங்க எல்லாம் ரொம்பவே சாமி பக்தியோட இருப்பாங்களாம். செவ்வாய், வெள்ளி தவறாம தலைக்கு குளிச்சு, நல்லநாள் ஒன்று விடாமல் சாமிக்கு விரதம் இருப்பாங்களாம்.

     அவங்க பரம்பரையில் வந்த கடைசி கசினா இவங்க இருந்து, இன்னைக்கு விரதம் வைச்சிருந்தா. அது தெரியாம நாம நான்வெஜ்ஜை கடை பரப்பி அவங்களுக்கு மனக்கஷ்டம் ஆகிடுச்சின்னா, அதான் எதுக்கும் சேப்டிக்கு இருக்கட்டும் னு சேர்த்து ஆர்டர் பண்ணிட்டேன்.” என்றான் பெருமையாக.

     இதைக் கேட்டதும், “அக்கா என்னக்கா இந்தாளு பாட்டுக்கு விரதம் அது இதுன்னு கோர்த்து விடுறாரு. வாழ்க்கையில் இந்த மாதிரி சாப்பாட்டை கனவில் கூட பார்த்தது இல்லை. இன்னைக்கு நம்ம மாமா புண்ணியத்தில் சாப்பிட்டுப் பார்க்கலாம் னு நினைச்சேன். என் கனவில் மண் அள்ளிப் போட வேண்டாம் னு சொல்லுக்கா.” லீலாவின் காதுகளில் மிக மெல்லியதாய் சொன்னாள் ஊர்மிளா. லீலா தங்கையை முறைக்க, “நம்ம மாமா தானேக்கா” என்றாள் ஊர்மி.

     மற்ற மூவரையும் போல் அல்லாமல், இது தன் மாமா வீடு, தன் சகோதரிகள் வாழப்போகும் வீடு என்கிற எண்ணம் கொடுத்த தைரியத்தில் உரிமை உணர்வு சற்றே அதிகமாக விளைந்திருந்தது ஊர்மிளாவிடம்.

     “என்ன நம்பர் 1, நம்பர் 3 என்ன சொல்றாங்க.” அரசு கேட்க, “அட எடுபட்ட பயலே ஏன்டா என் மருமகளுங்களை நம்பர் வைச்சு கூப்பிடுற.” வயதை மறந்து உடல்நலனை மறந்து வெடுக்கென்று கத்தி தன் கோபத்தைக் காட்டினார் வடிவேல். அவருக்கு அவர் மருமகள்கள் நால்வரும் தான் இனி குலதெய்வம். அவர்களை மரியாதைக் குறைவாக ஒருசொல் கூட யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் அத்தனை ஆர்வம் காட்டினார்.

     “அட என்ன அங்கிள் நீங்க. இந்த நம்பர் சிஸ்டத்தோட வேல்யூ தெரியாம பேசுறீங்க. ஸ்கூல், காலேஜ், போலீஸ் ஸ்டேசன், ஜெயில் வரைக்கும் எல்லாரையும் அவங்களுக்கு கொடுத்திருக்கிற நம்பர் வைச்சு தான் கூப்பிடுறாங்க. அப்படி இருக்க நான் கூப்பிட்டா என்ன தப்பு. நான் அப்படித்தான் கூப்பிடுவேன். அப்ப தான் நான் யாரைக் கூப்பிடுறேன்னு அவங்களுக்குத் தெரியும்.” வியாக்யானம் பேசினான் அரசு.

     “அட விளக்கெண்ண, அதுக்குத்தான் அவங்களுக்கு அழகான பேரு வைச்சிருக்காங்க இல்ல அதைச் சொல்லி கூப்பிடு.” அரசுவே எதிர்பாராத அதிகாரம் கொடுத்தார்.

     “நல்லா இருக்கே, இவங்க எல்லாம் எனக்கு எஜமானியா ஆகப் போறாங்க. அவங்களை நான் எப்படி பேர் சொல்லிக் கூப்பிட முடியும்.”

     “இப்படி நம்பர் சொல்லிக் கூப்பிடுறதுக்கு பேரு சொல்லிக் கூப்பிடுறது எவ்வளவோ மேல்.” வடிவேல் சொல்ல, அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல்,

     “என்ன அங்கிள் நீங்க வயசாக வயசாக உங்களுக்குப் புத்தி மழுங்கிக்கிட்டே போகுது. டைனிங் டேபிளில் உட்கார்ந்து எவ்வளவு நேரம் ஆகுது. சாப்பிடாம இப்படி என்கிட்ட அரட்டை அடிச்சிக்கிட்டே இருக்கீங்க. பாருங்க உங்க மருமகளுங்களை நீங்க சாப்பிடாம அவங்களும் சாப்பிடாம இருக்காங்க.” அழகாகப் பேச்சை மாற்றினான் அரசு.

     “அடடே, இந்தப் பைத்தியக்காரன்கிட்ட இது ஒரு பிரச்சனை. தானும் டொலடொலன்னு பேசி கூட இருக்கிறவங்களையும் பேச வைச்சிடுவான். நீங்க சாப்பிட ஆரம்பிங்க. இந்த உதவாக்கறையை நான் அப்புறம் பார்த்துக்கிறேன்.” என்ற வடிவேலு சாப்பிட ஆரம்பித்தார்.

     அவர் சிக்கனை கையில் எடுக்க, “அங்கிள் கொலஸ்ட்ரால்”
மட்டனைக் கையில் எடுத்தால், “அங்கிள் செரிக்காது” அது இது என்று குற்றம் சொல்லிவிட்டு, அவர் தட்டில் தயிர் சாதத்தை வைத்தான் அரசு.

     “என் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக் கூடாது சாமி.” என்றவாறு அவர் தயிர்சாதத்தை சாப்பிட ஆரம்பித்தார். அவருக்கு நன்றாகவே தெரியும். அரசு என்ன தான் தன்னுடைய காரியதரிசியாக இருந்தாலும் உணவு விஷயத்தில் ரொம்பவும் கரார். அவனை மீறி ஏதாவது செய்தால் அடுத்த நொடி அலைபேசி அழைப்பு செல்வாவிற்குப் பறக்கும் என்பதால் அமைதியாய் கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட ஆரம்பித்தார்.

     பெண்கள் நால்வரும் சாப்பாட்டை கையில் எடுக்க அநியாயத்திற்குத் தயங்கினர். “மாமா தயிர்சாதம் தானே சாப்பிடுறார். அவரைப் பார்க்க வைச்சிட்டு நாம எப்படி இது எல்லாத்தையும் சாப்பிடுறதுன்னு பார்க்கிறீங்களா?

     நான் உங்க வயசில் இருக்கும் போது சாப்பிடாத சாப்பாடே கிடையாது. வயசு இருக்கும் போது தான் வாய்க்கு ருசியா சாப்பிட முடியும். இன்னைக்கு ஒருநாள் விரதம், மாமனாருக்கு மரியாதை எல்லாத்தையும் மறந்துட்டு உங்க மனசு சொல்றதைக் கேட்டு நல்லா சாப்பிடுங்க.” என்றார் வடிவேலு.

     ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை. சில விஷயங்களை பெண்களாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும். இது உங்களின் வீடு என்பதை வெறும் வார்த்தையால் சொல்லிக்கொண்டிருக்காமல், அவர்களை உணர வைக்கலாம் என்று நினைத்த வடிவேல் அதற்குத் தகுந்தாற் போல் காய்களை நகர்த்தினார்.

     கண்கள் காட்டிய காட்சிகளால் நால்வரின் நாவுக்குள் உமிழ்நீர் சுரந்தது உண்மை. ஆள் ஆளாக்கு அவர்கள் அருகில் இருந்த உணவுப் பதார்த்தங்கள் அனைத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து பெரிய தட்டில் வைத்து சுவை பார்த்தனர்.

     அதன் சுவை நாக்கை அடையும் நேரத்தில் அவர்களுக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அசைவம் மாதத்திற்கு இருமுறை அவர்களின் வீட்டில் உண்டு தான். உடலுக்கு ஆரோக்கியம் என்பதால் நாட்டுக்கோழி கறி மட்டுமே. அதனால் தானோ என்னவோ இங்கு நால்வராலும் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

     கறிக்கடை வைத்திருக்கும் நபர் கூட நாலு பேருமே படிச்சு இருக்கீங்களே. ஆளுக்கொரு வேலை பார்த்து சம்பாதிச்சா இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்துச் செலவழிக்கணுமா? என்று கேட்பது உண்டு. அப்போதெல்லாம் சின்னப்புன்னகையோடு கடந்துவிடுவாள் லீலா.

     உயிர் வாழ்வதற்குத் தான் உணவு தேவையே தவிர, உணவு உண்பதற்காக உயிர் வாழக்கூடாது என்பது அவள் எண்ணம். இன்று அந்தக் கொள்ளை எல்லாம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

     “அக்கா இதைச் சாப்பிட்டுப் பாருங்களேன். ரொம்ப நல்லா இருக்கு.” என்று தன் தட்டில் இருந்ததை தமக்கையின் தட்டில் எடுத்து வைத்தாள் ஊர்மிளா.

     “அக்கா மட்டன் பிரியாணி சூப்பர், இல்லை சிக்கன் பிரியாணி சூப்பர். இல்ல அக்கா சிக்கன் ரைஸ் தான் நல்லா இருக்கு. நீ அடிக்கடி சொல்லுவியே பாதி வேகவைத்த காய்கறி தான் உடம்புக்கு நல்லதுன்னு. இதிலும் அப்படித்தான் இருக்கு.” என்று ஆள் ஆளுக்கு லீலாவின் தட்டில் எடுத்து வைக்க, தங்கைகளின் வழக்கமான செயல் தான் என்றாலும், தற்போது இருப்பது வழக்கத்திற்கு மாறான இடம் என்பதால் லீலா தான் திண்டாடிப் போனாள்.

     அவள் தங்கைகளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தால், இவளுக்குச் செய்வதில் அவர்கள் மூவரும் கூட்டணி அமைத்துக்கொள்வார்கள். அது தான் இங்கேயும் நடந்தது.

     இதைப் பார்த்து வடிவேலுக்கு மனதோடு சேர்ந்து வயிரும் நிறைந்தது போல் ஆனது. மருமகள்கள் விஷயத்தில் தன் முதலாளி அவசரப்பட்டு விட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்த அரசு கூட இதைப் பார்த்ததும் அசந்து போனான். அந்த நொடியே அவன் மனதில் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருந்தனர் பெண்கள் அணி.

     இதற்கு மேல் சாப்பிடவே முடியாது என்னும் நிலையில் பெண்கள் நால்வரும் எழுந்துவிட, சரியாக அரசுவின் தங்கை தன்னுடைய பொட்டிக் கடையை கிட்டத்தட்ட அள்ளிக் கொண்டு வந்திருந்தாள். உடன் Jack தையல் மிஷினும்.

     “லீலா தங்கச்சிங்களைக் கூட்டிக்கிட்டு வாம்மா. ட்ரஸ் எல்லாம் பாருங்க. என்னென்ன பிடிக்குதோ எல்லாத்தையும் எடுத்துக்கோங்க. பணத்தைப் பத்தி கவலைப் படாதீங்க.” என்றார் வடிவேலு.

     சகோதரிகள் நால்வரும் தர்ம சங்கடத்தில் நெளிந்தனர் “மாமா எல்லாத்தையும் கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கிக்கலாமே. எங்களுக்கு ரொம்பத் தயக்கமா, கில்டியா பீல் ஆகுது.” லீலா சொல்ல, மற்றவர்களும் பூம் பூம் மாடு போல தலையாட்டினர்.

     காதலிக்கும் ஆண்களிடம் ஐபோன் கேட்டு அடம்பிடிக்கும் பெண்கள் மத்தியில் மாமனாராகப் போகிறவர் கொடுப்பதை வேண்டாம் என்று மறுக்கிறார்களே என்று வியப்பாய் பார்த்தான் அரசு. உண்மையிலேயே இவர்கள் டைனோசர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டிய பெண்கள் தான் என்கிற எண்ணமும் வந்தது.

     “நீ இதைத் தான் சொல்லுவன்னு எனக்குத் தெரியும். உன்னோட எண்ணங்களையும், சுயமரியாதையும் நான் மதிக்கிறேன். நானும் உன்னைக் கம்ப்பெல் பண்ணப் போறது இல்ல தான். ஆனா எவ்வளவு நேரத்துக்கு நீங்க இதே துணியோட இருப்பீங்க. மாத்து துணி வேணும் இல்ல, அதுக்குத் தான் இந்தப் பொண்ணை வரச் சொன்னேன்.

     கல்யாணம் வரைக்கும் போட்டுக்கிறதுக்கு ஆளுக்கு நாலோ ஐந்தோ வாங்கிக்கோங்க. வேண்டாம் னு சொல்லக்கூடாது. இதுவே என் பொண்டாட்டி உயிரோட இருந்திருந்தா தாம்பூலத்தோட வைச்சுக் கொடுத்திருப்பா, அப்ப மறுத்து இருப்பீங்களா என்ன. எனக்கு அந்தச் சம்பிரதாயம் எல்லாம் தெரியாததால் ட்ரஸ் மட்டும் எடுத்துக் கொடுக்கிறேன். கல்யாணத்துக்கு அப்புறம் உங்ககிட்ட என்ன கேட்கிறது, என் மருமகளுங்களுக்காக ஒரு ஐவுளிக் கடையே நான் ஓபன் பண்ணிடுவேன்.” புன்னகையோடு சொன்னார் வடிவேலு.

     “அங்கிள் நான் இப்ப வந்திடுறேன்.” அரசு போனோடு கிளம்ப,

     “டேய் நல்லவனே எங்கடா போற”

     “இல்ல ஐவுளிக்கடை ஆரம்பிக்கப் போறீங்க வீட்டுக்குப் பக்கத்தில் நல்ல இடம், அதுவும் பெரிய இடமா வேணும். வேலை பார்க்கிறதுக்கு ஆட்கள் நிறைய வேணும் தென்”

     “ஏய் ஏய் நான் எப்படா உன்கிட்ட இதையெல்லாம் சொன்னேன்”

     “நீங்க சொன்னதைக் கேட்டு அதுக்கு அப்புறம் செய்யுறதுக்கு நாலு வேலைக்காரங்க போதுமே. நீங்க நினைக்கிறது அத்தனையையும் நினைத்த நேரத்தில் செஞ்சு முடிக்கத் தானே இந்த அரசு இருக்கேன்.” சிரிக்காமல் சொன்னான்.

     “உன்னை வைச்சிக்கிட்டு முடியல என்னால. அது என் மருமகளுங்களுக்காக நான் சும்மா சொன்னதுடா. என் ஜீவனை வாங்காம ஒரு ஓரத்தில் போய் நில்லு போ.” என்க, இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் நால்வரும் சிரித்துக் கொண்டனர்.

     “அக்கா தேவகிக்கு இந்த மை நீலம் நல்லா இருக்கும் இல்ல. ஊர்மி உனக்கு இந்தப் பச்சைக் கலர் பொருத்தமா இருக்கும். அக்கா உங்களுக்குப் பிடிச்ச மெரூன் கலர், டிசைன் கூட ரொம்ப அழகா இருக்கு. இதை நீங்க எடுத்துக்கோங்க. ருக்கு அது வேண்டாம் லோநெக்கா இருக்கு பாரு.” என்று ஒவ்வொருவரும் தங்களை விடுத்து மற்றவர்களுக்காகத் தேர்ந்தெடுக்க,

     அரசுவிற்கு நிஜமாகவே இவர்கள் அனைவரும் இந்தக் காலத்துப் பெண்கள் தானா? இல்லை காலப்பயணம் ஏதும் செய்து கடந்த காலத்தில் இருந்து இந்தப் பெண்களை அங்கிள் அழைத்து வந்திருப்பாரா எனக் கடுமையாக யோசித்தான். பாசம், நேசம் கொண்ட சகோதர சகோதரிகளை அவனும் நிறையப் பார்த்திருக்கிறான் தான். ஆனால் இது புதுவிதமாகத் தெரிந்தது அவனுக்கு.

     தேவையான துணிகளை பெண்கள் தேர்ந்தெடுத்து முடிக்க, அதை அவர்களுக்கு ஏற்றது போல் ஆல்டர் செய்து கொடுத்தாள் வந்தவள்.

     “சரிம்மா மேல் மாடியில் மூணாவது ரூம் உங்களுக்கு. போய் குளிச்சிட்டு இப்ப எடுத்த துணியில் ஏதாவது ஒன்னை போட்டுட்டு வாங்க. நாம வெளியில் போகப் போறோம்.” அடுத்த அதிர்ச்சி கொடுத்தார் வடிவேல்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. வடிவேலுவுக்கு ஏத்த மாதிரி நல்ல பி. ஏ தான் அரசு … ரெண்டு பேரும் நல்ல பொருத்தம் … அடுத்து எங்க போக போறாங்க …