Loading

சபதம்-9

கேடில் விழுச்செல்வம் வீரன் தலை

கூடிப் பிறந்த குடிக்குக் கடனே.

-ஒளவையார் (புறநானூறு-182).

பொருள்:

வீரமரணம் என்பது தனி மனிதனின் இழப்பு அல்ல;அது அவன் குலத்துக்கான அழியாத பெருமை என்பதே பாடலின் மையக் கருத்து.

உதய்ப்பூர் அரண்மனை – ராஜபுத்ர சபா மண்டபம்

அலங்கார விளக்குகள் சபா மண்டபம் முழுவதும் ஏற்றப்பட்டிருந்தன. அந்த மண்டபம் ராஜபுத்ர குலத்தலைவர்கள், குல மூத்தோர், அரச குலத்தினர் ஆகியோரால் நிரம்பி இருந்தது. மகாராஜா சமர் சிங் மேசையின் முன் நின்றிருந்தார். அவரின் முகத்தில் கடுமையின் சாயல் நிறைந்திருந்தது.

அனைவரும் அமரக் காத்திருந்தவர் போல், “சகோதரர்களே… உங்களை இந்த அவசர சந்திப்புக்கு அழைத்தவுடன், நேரம் தாழ்த்தாது வந்தமைக்கு நன்றி! இது நமது ஒற்றுமையை நிலைநாட்டும் சமயம்…. அரசு, கர்ஹ் அதிவர் அரண்மனை மற்றும் அதைச் சுற்றி உள்ள நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறது. அதை அழித்து… விடுதி அமைக்க விரும்புகிறது” என்றதும் மண்டபத்தில் இருந்த அனைத்து ராஜபுத்ர வம்சாவளிகளுக்கும் அதிர்ச்சியும் கோபமும் கலந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ரத்தோர் குலமூத்தோர்,”இது நம் முன்னோர்களுக்கு அவமரியாதை!”

ப்ரதிஹரா குல இளம் தலைவர் முன்வந்து,”நாம் இதை அனுமதிக்கக்கூடாது!”

அதைக் கேட்ட சிசோடியா குலமூத்தோர்,”அந்த இடத்தை தொடும் எவரையும் ரணசூரனின் சாபம் சும்மா விடாது!” இப்படி பலவித குரல்கள் எழுந்து தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அரசர் கையை உயர்த்தி அமைதி காக்கும்படி சபைக்கு சைகை செய்தவர்,”இந்தச் செயலின் பின்னால் இருப்பது ,அமைச்சர் பிருத்வேந்திர சௌஹான்” என்றதை கேட்டு மண்டபம் உறைந்து நின்றது.

சௌஹானின் பேராசையை அனைவரும் உணர்ந்தே இருந்தனர்.

மேலும் தொடர்ந்த உதய்ப்பூர் மகாராஜா,”இது நாம் முடிவெடுக்க வேண்டிய நேரம். அரசுக்கு அடங்குகிறோமா? அல்லது எதிர்த்து நின்று அடக்குகிறோமா?” என்று ஆவேசமாக பேசியவரின் இறுதி வார்த்தை, சபா மண்டபத்தில் திடீரென்று ஏற்பட்ட அந்த அமானுஷ்ய இறுக்கத்தில் தேய்ந்து போக. சுற்றி இருந்த விளக்குகள் விட்டு விட்டு எரிய, ஒருவித குளிர் அந்த மண்டபத்தைச் சூழ்ந்துகொண்டதுபோல் அனைவரின் உடலும் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது.

அந்த நேரம் சபா மண்டபத்தின் கதவுகள் படார் என்று திறந்துகொள்ள, தலைவர்கள் அனைவரும் அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தனர். உயரமான உருவம், கருப்பு சால்வையில் மூடப்பட்ட முகம், நூற்றாண்டுகளின் இரகசியங்களை தன்னகத்தில் அடக்கியது போல் அமைதியாக நடந்து சபையின் மத்தியில் நின்று அனைவரையும் கூர்மையுடன் அளவிடுகிறார் ஆசாத் கான்.

அவரை கண்டதும் மண்டபத்தில் இருந்தோர் அதிர்ச்சியில் வாயடைத்து போக, சில மூத்தோர் திடீரென எழுந்து நின்று ஆசாத் கானை வணங்கினார்கள்.

மேலும் சிலர் நம்பிக்கையின்றி தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

அதிர்ச்சியில் இருந்து மீளாத மூத்தோர் ஒருவர் எழுந்து நின்று,”ஆசாத் கான்…? இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு?”

உடன் இருந்த மற்றொரு இளம் தலைவர் யாருக்கும் கேட்காத வண்ணம்,”அவர் ராஜபுத்ர அரசியலை விட்டு விலகிவிட்டார் என நினைத்தேன்…” இப்படி பலர் பலவிதமாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

இவை அனைத்தையும் பார்த்தும் பார்க்காததுபோல் ஆசாத் கான் மெதுவாக முன்னேறி சென்றார். அவர் எடுத்து வைத்த அடிகள் தீர்க்கதரிசனத்தின் ஒளியாக அந்த மண்டபத்தில் எதிரொலித்தன. மெல்ல முன்னேறியவர் அரசரின் முன் வந்து நின்று உறுதியான குரலில்,”என் திடீர் வருகைக்கு மன்னிக்கவும், மகாராஜா. ஆனால் நீங்கள் பேசும் விஷயம்… அரசியலைவிட மேலானது.”

அதை கேட்ட அரசர் மரியாதையுடன் தலை அசைத்து,”உங்கள் வருகை உதய்பூர் அரண்மனை செய்த பாக்கியம், ஆசாத் கான். உங்களை நான் எதிர்பார்க்கவில்லை, நீங்கள் வருவது அறிந்திருந்தால் ராஜபுத்ர குலத்தின் ராஜகுருவை தக்க மரியாதையுடன் வரவேற்றிருப்பேன்.”

மன்னரின் வார்த்தையில் இருந்த உண்மை ஆசாத் கானுக்கு புரிந்திருந்தது,”கர்னி மாதா எனக்கு இட்ட கட்டளை. அன்னை அழைக்கும்போது… நான் அதற்கு கீழ்ப்படிகிறேன்.”

கர்னி மாதாவின் கட்டளை என்ற வாக்கியத்தால் சுற்றி இருந்த தலைவர்கள் பதட்டமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

முன்பு பேசிய குலமூத்தோர் ஒருவர்,”அதன் அர்த்தம் என்ன… கர்னி மாதா உங்களை அழைத்தாரா?”

அந்த கேள்வி அங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் இருப்பதை உணர்ந்த ஆசாத் கான் மண்டபம் முழுவதும் ஒருமுறை பார்வையைச் செலுத்தினார்.

பின்பு பதில் சொல்ல தொடங்கிய ஆசாத் கான்,”கரஹ் அதிவர் மற்றும் ரண குண்ட் வெறும் நினைவுச்சின்னம் அல்ல. அது ஒரு முத்திரை. ஒரு நினைவு. ஆன்மாக்களின் போர்க்களம்.” என்ற வார்த்தையில் மண்டபம் மேலும் சில்லிட்டு போனது.

அதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்திருந்தாலும் ஆசாத் கானின் பேச்சை தொடர்ந்து கவனித்தனர்.

ஆசாத் கான்,”அந்த நிலம் கைப்பற்றப்பட்டால்… அந்த அரண்மனை வீழ்ந்தால்…காலச் சக்கரம் மீளும். அதை எவராலும் தடுக்க முடியாது.” என்றவரின் வார்த்தையில் அங்கு கனமான அமைதி நிலவியது.

அரசர் எழுந்து ஆசாத் கான் முன்னே சென்று நின்றபடி,”அப்படியானால் சொல்லுங்கள், ஆசாத் கான்,நாம் என்ன செய்ய வேண்டும்?”

ஆசாத் கான் கண்களில் தீவிரத்துடன்,”குலங்களை ஒன்றிணைக்கவும். கோவிலைப் பாதுகாக்கவும். ஆன்மாக்களின் மறுபிறப்பை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.”

அதன் கேட்ட தலைவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அதில் ஒருவர்,”ஆன்மாக்களா…?” என்று கேள்வி எழுப்ப,அதற்கு பதிலளித்த அசாத் கானின் கர்ஜனை அந்த அறையை நடுங்கச் செய்தது.

“வீரன். காவலன். சகாப்தன் மீள

திருமகள் துஷ்டன் பிடியில் சிக்க

இவர்களை இணைக்கும் சக்தி அவள்!!

காலம் மீளும்

கயவன் பழி முடித்து

அன்னை உயிர்த்தெழுவாள்!!

சபதம் முடித்து

ராஜபுத்திர குலசாபம் நீங்கும்!!”

என்ற ஆசாத் கான் தன் முன்னோர்கள் பாதுகாத்த அசரீரியை சபையில் இருப்போர்க்கு சன்னதம் வந்தது போல் சொல்ல, சுற்றி இருண்டு கொண்டிருந்த விளக்குகள் அதன் ஆமோதிப்பது போல பளபளத்து கொண்டிருந்தது.

இவை அனைத்தையும் பார்த்திருந்த அரசர், தன் கைகளை இடைவாளில் இறுக்கப் பற்றி, ஆசாத் கான் முன் மண்டியிட்டு,”அப்படியானால் இதோ உதய்ப்பூர் அரசன், சமர் சிங் என்னும் நானும் என் சந்ததியினரும், ராஜபுத்திர வம்சத்தின் சபதத்தை காக்க, அன்னை சாயா பிரஜ்ஞா கோவிலை எங்கள் உயிர் உள்ளவரை போராடி காப்போம் என்று உறுதியளிக்கிறேன்.” என்றவாறு தன் இடைவாளை கொண்டு வலது உள்ளங்கையில் கீறி கொண்டு,அந்த ரத்தத்தின் மேல் உறுதி அளித்தார்.

அவரை தொடர்ந்து அங்கிருந்த குலமுன்னோர்கள், அரசர்கள், மற்றும் இளவரசர்கள் என்று பலரும் தங்கள் குலத்தின் மேல் குருதியில் சத்தியம் செய்து உறுதியளித்தனர்.

மண்டபம் முழுவதும் இந்த சத்தியத்தின் ஒலி எதிரொலித்தது. அதனை பார்த்திருந்த அசாத் கான் கண்களை மூடியவர் ,தொலைவில் எதையோ கேட்பது போல நின்றிருந்த நிலையில் மெல்லிய குரலில்,”அன்னை கவனித்து கொண்டிருக்கிறாள். போர் தொடங்கவுள்ளது” என்றபடி தன் குறுவாளை உருவி மற்றவர்களை போல் தானும் குருதியில் ராஜபுத்திர குலத்தை மீட்டெடுக்க சத்தியம் செய்தார்.






இருள் சூழ்ந்த காட்டுக்குள், கைவிடப்பட்ட கோட்டையின் மறைந்த சன்னிதியில், பிரித்வேந்திர சௌஹான் சாம்பலும் எலும்புகளும் சூழ்ந்த வட்டத்தின் முன் மண்டியிட்டு நின்றிருந்தான். காற்றில் தூபத்தின் மணமும் மந்திரத்தின் ஓசையும் நிறைந்திருந்தது.

காற்றில் ஈரப்பதத்துடன் ஒருவகை அமானுஷ்யம் கலந்திருக்க, மந்திரத்தை ஓதி கொண்டிருந்த கபாலிகர்கள், பிரித்வேந்தர சௌகானை வட்டத்துக்குள் அழைக்க , தன் கையில் பித்தளைக் குடுவையும் கருப்பு கத்தியையும் ஏந்தியவாறு, நெருப்பால் உருவாக்கப்பட்ட அந்த வட்டத்தின் மையத்துக்குள் மண்டியிட்டு அமர்ந்தான்.

அவனது கண்கள் பேராசையில் ஒளிர தன் கையில் இருந்த குடுவையை முன் வைத்து, கத்தியால் தன் உள்ளங்கையை கிழித்து, இரத்தத்தை அந்த குடுவையில் சொட்டு சொட்டாக நிரப்பியவன்,

“அந்தகா வா… என் இரத்தம் கொண்டு அழைக்கிறேன் …
நிழல் உலக வேந்தா…அந்தகா எழுந்து வா…”

காற்று சுழற்றி அடிக்க, சௌகானை சுற்றி நெருப்பு வளையம் உருவாகி திகுதிகுவென்று எரிகிறது. சுவர்களில் வீரர்களை கொண்ட சித்திரங்கள் மங்கலான வெளிச்சத்தில் உயிர்ப்பித்து அசைந்தது போல் தோன்ற, அந்த இடமே ஒருவித பயங்கரத்தை மனதில் விதைத்திருந்தது.

திடீரென நிலம் நடுங்க, நெருப்பு வளையம் அடங்கி போய் அதன் அடியில் இருந்து கரகரப்பான குரல், அந்த உடைந்த மாளிகை எங்கும் எதிரொலிக்க,
“யார் என்னை அழைத்தது?” என்றபடி உதித்த அந்த கரிய உருவம் தொடர்ந்து,”ரத்தமும் சதையும் கொண்ட நரனா?” என்ற அந்த ஆவியின் குரலில் ஆச்சரியம் மிகுந்து இருந்தது.

அந்தகன், பார்வதி சிவனின் கண்களை மறைத்தபோது, சிவபெருமானின் வேர்வை துளி பூமியில் பட, அதில் உதித்தவன். பார்வையற்றவன், இருளுக்கு அரசன். பிள்ளை இல்லாத அரக்கியால் வளர்க்கப்பட்டவன். பார்வதி தேவி தன் அன்னை என்று அறியும் முன் அவள் மீது ஆசைப்பட்டவன்.

அவன் வெறும் ஆவி அல்ல, மறக்கப்பட்ட போரின் ஓர் எச்சம், ராஜபுத்ர சத்தியத்தால் ஒருகாலத்தில் முத்திரையிடப்பட்ட சக்தி. இப்போது அது பிரித்வேந்திராவுடன் பிணைந்து, அவனுக்கு தரிசனங்களையும், சக்தியையும், கோவிலையும் அதன் காவலர்களையும் அழிக்கும் பாதையையும் அளிக்கிறான்.

“ராஜ்புத்ர மகன்….இல்லை இல்லை ராஜ்புத்ர குலத்தின் கோடரி!”என்ற உருவம் இடி இடி என்று நகைக்க,”என்ன வேண்டும் உனக்கு?”என்றதும் பிரித்வியின் குரல் உற்சாகத்தில் நடுங்கியபடி,
“இரத்தம்…சிந்த வேண்டும்.கோவில்…எரிய வேண்டும்.” என்ற சௌகான் பித்து பிடித்தது போல்
“ஆம்… ஆம்! அதை இடிக்க உதவி செய்.அவர்களின் தேவியை அழிக்க உதவி செய்.
என் பேரரசை கட்ட உதவி செய்.” என்றவனின் வேண்டுதலில் குடுவை நடுங்குகிறது.

கருப்பு புகை சுருண்டு மனித-நிழல் வடிவம் கொண்டு எரியும் கண்களுடன்,”மரணமில்லாத நிழலை அழைக்கத் துணிகிறாயா, மனிதனே? ஒருமுறை முறிந்த உறுதி… மீண்டும் முறியும்.
ஆனால் விலை… இரத்தம்.”

அதைக்கேட்ட செளஹான் தலை வணங்கியபடி,”வேண்டியது எடுத்து கொள். ராஜ்புத்தர்களையும்… அவர்களின் கோவிலையும் அழிக்க எனக்கு சக்தி கொடு.”

அதைக் கேட்ட அந்த உருவம் சிரித்தபடி,”காலம் திரும்புகிறது.தேவி தன் வீரர்களை எழுப்புகிறாள்…நான் அவளின் எதிரியை எழுப்புகிறேன்.”

சிதிலங்கள் நடுங்க, சாம்பல் காற்றில் சுழன்றடிக்க ப்ரித்வியின் கத்தி இருட்டில் ஒளிர, அந்தகன், அவனைச் சுற்றி சுருண்டு, அவன் தோள்பட்டையில் சின்னம் பதித்தான் — துரோகத்தின் அரைச் சந்திரக் கத்தி.

ப்ரித்வின் கண்கள் அந்த சின்னத்தை கண்டதும் பிரகாசிக்க,”இதை கொண்டு நான் அவர்களை நசுக்குவேன்.கோவில் இடியும்.தேவி உன்னிடம் தலை வணங்குவாள்.”

அது கேட்ட அந்தகனின் சிரிப்பு காடெங்கும் எதிரொலித்து,கானக பறவைகளின் குரலோடு கலந்து காற்றோடு கரைந்து போனான்.

மறையும் முன் அந்தகன் புன்னகையுடன்,”போர் தொடங்க உள்ளது — நிலத்திற்காக மட்டுமல்ல, மறக்கப்பட்ட சத்தியத்தின் ஆன்மாவிற்காகவும்.அன்று அந்தகன் கை ஓங்கியது, சத்தியம் என்னுள் மறைந்தது. இன்று அந்தகன் மீண்டான், சத்தியம் மீளுமா?”.

ரணசூரன் வருவான்….

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்