
சபதம் – 8
அஞ்சாமை ஈவது வன்கண் பயிரே
பகைவரை வெல்வதற்கு வேந்தன்.”
பொருள்:
பகைவரை வெல்ல விரும்பும் அரசனுக்கு அஞ்சாத துணிச்சல் என்பது போரின் அடிப்படைத் தன்மையாக இருக்கும்.
கரண் தாடை இருக, மீண்டும் தன் கைகளில் மயங்கி விழுந்த அதிராவை மென்மையாக மெத்தையில் படுக்க வைத்து, அவளது தலைமுடியை முகத்திலிருந்து கோதிவிட்டான். மிகுந்த யோசனையுடன் படுக்கையில் இருந்து சற்று விலகி நின்றவன், தனக்கும் தன்னவளுக்குமான இடைவெளி அதிகப்படுத்திய பின், அவளின் கன்னம் தட்டி, “அதிரா… அதி, கண்ணைத் திற. இங்க பாரு.. என்ன பாரு?” என்றவனின் வார்த்தைகள் அவளின் உள்மனதை எட்டி இருந்தது போல.
கரண் பேச்சுக்கு எதிரொலியாய், திடீரென மூச்சை இழுத்து பிடித்தவள்,கனவிலிருந்து விழிப்பதுபோல் கண் இமைகள் நடுங்க, விரல்கள் சோபாவை இறுக்கப் பற்ற, நெஞ்சுக்குழி வேகமாக மேலும் கீழும் ஏறி இறங்க மூச்சு விட திணறி கொண்டிருந்தாள்.
அதிராவை அந்த நிலையில் காண சகிக்காதவன், தன் மனதுக்குள் சற்றுமுன் அவளை நெருங்கக் கூடாது என்று எடுத்த சபதத்தை மீறி, ஆறடி உயரம் கொடுத்த சலுகையில், ஒற்றை காலை மெத்தையில் மண்டியிட்டதுபோல் நின்று கொண்டு தன்னவளை எதிலிருந்தோ காப்பது போல் நெஞ்சுக்குள் இறுக்கி கொண்டான்.
தன் இறுகிய அணைப்பில் இருந்த அதிரா, பதட்டம் நீங்கி மெல்ல சுயநினைவுக்கு வந்ததை உணர்ந்த கரண் அவளை தன்னிடம் இருந்து விலக்கிப் படுக்கையில் சாய்த்து அமர வைத்தபடி, “என்னதான்டி உனக்கு பிரச்சினை, மனுஷனா கொல்லாம கொன்னுக்கிட்டே இருக்க. சொல்லு என்ன ஆச்சு?” என்ற கரணின் வார்த்தைகள் எதிரில் இருந்தவளை அடைந்தது போல் தெரியவில்லை.
அதிராவின் விழிகள் கரணில் நிலைத்திருந்தாலும், அவளது கண்கள் தொலைவில் ஏதோ காட்சியைப் பார்த்திருந்தது ‘ போர்க்களத்தில் தீ சூழ்ந்திருக்க, சிவப்பு கவசம் அணிந்த போர்வீரன் மார்பில் கத்தி பாய்ந்து சரிந்து விழுந்திருந்தான். அதை பார்த்து ஒரு பெண் கதறி துடிக்கிறாள். பின் சிவப்பேறிய விழிகளை கொண்டு அதிராவை பார்த்த அந்த பெண், “மீண்டும் ஒரு வாழ்க்கை…அவனோடு” என்ற அந்த கண்களின் வீரியத்தில் அதிராவின் உடல் தூக்கி போட, அதனை உணர்ந்த கரண் அவள் அருகில் நெருங்கிய அந்த முகம் கரண் மற்றும் கலிலின் சாயலாக மாறி மாறி தோன்ற அதில் அதிர்ந்த அதிரா கரணிடம் இருந்து சட்டென விலகியிருந்தாள்.
அதிராவின் விலகலில் உள்ளுக்குள் உடைந்த கரண், வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் “அதிரா ஹே, இங்க என்னைப் பார். என்ன ஆச்சு?”என்றவன் கேள்விக்கு தலையை மறுப்பாக ஆட்டியவளின் குரல் கிசுகிசுப்பாய் வெளிவந்தது, “நான்… எனக்கு தெரியல. யாரை பார்த்தேன் புரியல. எனக்கு என்ன நடக்குதென்று ஒன்றுமே தெரியல”.
கரண் தள்ளாடும் அவள் உடலை நிலைநிறுத்த முயன்றான், ஆனால் அவள் அவனது தொடுதலை தீ சுட்டது போலத் தவிர்த்து பின் நகர்ந்தாள்.
மீண்டும் மீண்டும் தன்னவளின் செய்கையால் காயப்பட்ட இதயத்தை தேற்றி “அதிரா, என்கிட்ட பேசு டி. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. யாராவது உன்னை காயப்படுத்துனாங்களா?” என்றவனின் குரலில் கூர்மையுடன் “கலீல்?” என்ற கேள்வியோடு நிறுத்தி இருந்தான்.
அந்த பெயர் அவளை மின்னல் போலத் தாக்குகியது. அதில் பின்னோக்கி நகர்ந்தவள் தடுமாறியபடி வேகமாக துடிக்கும் தன் மார்பை அடக்க வழி தெரியாது கைகளை கொண்டு அழுத்தியபடி,” இல்லை… இல்லை…க..கலீலுக்கு என்ன ஆனது? தயவு செய்து அவனை ஒன்றும் செய்து விடாதே” என்று கண்களை மூடிக் கொண்டு கதறினாள்.
கரணின் முகம் கடினமாக மாற. அந்த முகத்தில் வேதனை, பொறாமை, பயம் என அனைத்தும் கலந்து நின்றவன்,”கலீல்.. கலீல் இப்போது கூட அவன் நினைப்பு தானா? அப்படி அவன் என்ன செய்தான்? சொல்லு.என் காதல் உனக்கு புரியவில்லையா? இல்லை புரிந்தும் நடிக்கிறாயா? அமைதியா இருந்து தான் தினம் தினம் என்னைக் கொன்று கொண்டு இருக்க” என்றவனுக்கு இத்தனை வருட வலியை விவரிக்க முடியாமல் அதிராவிடம் கத்தி கொண்டிருந்தான்.
கலிலா அவனை பெரும் பயத்துடன் பார்த்திருந்தவள் கண்களுக்கு அவன் கரண் பிரதாப் சிங்காக அல்லாமல் அந்த ராஜபுத்ரா இளவரசி ஒருகாலத்தில் காதலித்து இழந்த வீரனின் நிழலைப் போல் தோன்றினான்.
அதில் குரல் உடைந்து, மூச்சுக்கு தவித்தவள், “என்னால முடியல… மூச்சு விட முடியல. நான்.. நான் போகனும்” என்றவள் கரண் தடுக்குமுன், உடல் நடுங்கி, கண்ணீர் வழிந்தபடி அரண்மனையின் நீண்ட நடைபாதையில் பேய் தூரத்துவது போல் திரும்பியும் பாராமல் ஓடினாள்.
அவள் திடீரென்று இப்படி ஓடுவாள் என்று எதிர்பார்க்காத கரண், அதிராவின் பின்னோடு “அதிரா! நில்! திரும்பி வா!” என்று கத்தியபடி அரண்மனை வாயில் வரை அவளை பின் தொடர்ந்து ஓடினான்.
ஆனால் அவள் வரவில்லை. அந்த அதிகாலை விடிந்தும் விடியாத இருளில் அவள் மறைந்து விட்டாள். ஓடும் அவளை தன் கை முஷ்டி இறுக, இதயம் துடிதுடிக்க செய்வதறியாது பார்த்தபடி நின்றிருந்தான் கரண்.
இருளை வெறித்தபடி நின்றிருந்த கரண் தனக்குள்ளே,” என்னிடம் எதை மறைக்கிறாய் அதிரா?” என்றவன் உள்ளம் தன்னிரக்கத்தில் வெதும்பியபடி,” இதே போல் உன்னை முன்பும் இழந்தது போல உணர்கிறேன் அதிரா…” என்றவனின் காதல் காலம் கடந்தும் காத்திருந்தது அவளுக்காக.
உதய்ப்பூர் அரண்மனை.
அதிகாலைசூரிய வெளிச்சம், அரண்மனை ஜரோக்கா ஜன்னல்கள் வழியாக அரசரின் அலுவல் அறைக்குள் மெல்ல படரத் தொடங்கியது. மகாராஜா சமர் சிங் தன் கைகளில் தேநீர் கோப்பையுடன் அமர்ந்து ராஜ்புத் பாரம்பரியத்தைப் பற்றிய பழைய ஆவணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது அவர் கைகளில் தங்கள் மூதாதையரின் palaiya அரண்மனை பற்றிய ஓர் பழைய சுருள் தட்டுப்பட்டது. ராஜபுத்திர வாரிசுகளுக்கு இடையில் இந்த அரண்மை சுற்றி இருக்கும் பல இடங்களின் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாக நிலவி வருகிறது. பல நாட்களாக இதற்கு தீர்வு கிடைக்காமல், அரசர் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.
அந்த நேரம் அவரது உதவியாளர் , தொலைபேசியோடு அந்த அறைக்குள் நுழைய, தன் கைகளில் இருந்த சுருள்களில் இருந்து, கவனத்தை திருப்பியவர், கண்கள் தனது உதவியாளரின் முகத்தில் தோன்றிய பதட்டத்தை கண்டதும் கூர்மை பெற்றது.
“மஹராஜ், உங்களுக்கு அரசு செயலகத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கு” என்றதும் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் தொலைபேசியை கைகளில் வாங்கியவர், ” சமர் சிங் பேசுகிறேன்” என்றவரின் கம்பீர குரல் எதிரில் இருப்பவரை எட்டி இருந்தது.
அரசரின் குரல் கேட்ட அரசு அதிகாரி மிகுந்த மரியாதையுடன், “காலை வணக்கம், மஹராஜ். நான் வெர்மா, ராஜஸ்தான் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திலிருந்து தொடர்பு கொள்கிறேன். உங்களைத் தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும்.”
அதை கேட்ட மகாராஜாவின் குரல் அமைதியுடன் , “அரசின் அழைப்புகள் காரணமின்றி வருவதில்லை. சொல்லுங்கள்” என்றதில் அரசு அதிகாரி சிறிது இடைவெளியிட்டு அதிக கவனத்துடன், தான் சொல்ல வேண்டியதை கணக்கிட்டு, பேசத் தொடங்கினார்.
“அய்யா, நமது அரசு உதய்ப்பூரில் ஒரு பெரிய சுற்றுலா திட்டத்தைத் தொடங்க இருக்கிறது. ஒரு ஆடம்பர பாரம்பரிய விடுதி. வேலைவாய்ப்பு, வருமானம், நவீனமயமாக்கல்…” என்று இழுத்து கொண்டு சென்றவரை இடைபுகுந்த அரசர், “முக்கிய விஷயத்தை சொல்லுங்கள்” என்றவாறு இடைவெட்டினார்.
அரசரின் கறாரான வார்த்தையில்,வெர்மா தன் தொண்டையை கனைத்து கொண்டவாறு, “திட்டமிடப்பட்ட இடம் பழைய கர்ஹ் அதிவர் அரண்மனை சுற்றிய நிலத்தை உள்ளடக்கி உள்ளது” என்ற வார்த்தை வெளிவந்ததும் அரசர் உறைந்து நின்றார்.
அவரது உள்ளங்கையில் படித்து கொண்டிருந்த அந்த ஆவண சுருளை இறுக்கமாகப் பிடித்து கொண்டு, “அந்த நிலம் பாதுகாக்கப்பட்டதாகும். அது அரச குடும்ப அறக்கட்டளைக்கு சொந்தமானது. அந்தக் அரண்மனை ராஜபுத்திரர்களுக்கு புனிதமானது.அதை அரசுக்கு கொடுப்பதாக நான் முடிவெடுக்கவில்லையே”.
அதை கேட்ட வெர்மா, தன் குரலில் கட்டாய மரியாதையுடன்,”அய்யா, அந்தக் அரண்மனை…பாழடைந்த ஒன்று. கட்டமைப்பில் பாதுகாப்பற்றது. அரசாங்கம் அதை வளர்ச்சிக்காக பயன்படுத்துவது சிறந்தது என நம்புகிறது. நிலத்தை மாற்றுவதில் உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.”
அதை கேட்ட அரசர் கோபத்துடன் எழுந்து நின்று, “பாழடைந்ததா? பாதுகாப்பற்றதா? அந்தக் அரண்மனை உங்கள் முழு துறையை விடப் பழமையானது, திரு. வெர்மா. அது ராஜ்புத்ர வரலாற்றின் தூண்.”
அரசரின் கோவத்தை உணர்ந்து கொண்ட வர்மா சற்று பணிவுடன்,”அய்யா, முடிவு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது. இடிப்பு முன்மொழிவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் கையொப்பம் மட்டுமே தேவை.”
அரசு தரப்பின் வற்புறுத்தலை உணர்ந்து கொண்ட அரசரின் குரல், கூர்மையுடன்,”சிக்கல்களா?” என்று கேள்வியெழுப்ப, அதற்கு வெர்மா மெதுவாக, “அரசியல் சிக்கல்கள், அரசே. அமைச்சர் இந்தத் திட்டத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார்” என்றார்.
அரசர் கண்கள் சுருக்கி,”ப்ரித்வேந்தர சௌகான்?” என்ற பெயரை அழுத்தி உச்சரித்ததும்,மற்றப் பக்கம் அமைதியாகிவிட்டது.
அந்த அமைதி அனைத்தையும் உறுதிப்படுத்தி இருந்தது.
கோபத்தில் கொந்ததலித்திருந்த மகாராஜா தன் குரலில் உறுதியுடன், கட்டளையிடும் விதத்தில்,”கவனமாகக் கேளுங்கள், திரு. வெர்மா. கர்வ் அதிவர் மற்றும் அதை சுற்றி உள்ள எந்த இடமும் விற்கப்படுவதற்கு இல்லை. இடிக்க விடப்போவதும் இல்லை. உங்கள் அமைச்சரின் ஆடம்பரத் திட்டத்திற்காக அடகு வைப்பதாகவும் இல்லை. அரசு போராட விரும்பினால், ஒவ்வொரு ராஜ்புத்ர குலமும் என்னுடன் நிற்கும்.”
அதை கேட்ட வெர்மா குரல் நடுங்கியபடி, “அய்யா… தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள். அமைச்சர் மகிழ்ச்சியடைய மாட்டார்” என்றதும், அரசர்,”அவர் மகிழ்ச்சி என் பொறுப்பல்ல. அந்த நிலத்தை தேவதைகள் நூற்றாண்டுகளாகக் காத்து வருகின்றனர். அதை என் ஆட்சியில் இழக்க நான் துணைபோகமாட்டேன்” என்றவாறு அழைப்பை துண்டித்து இருந்தார்.
அரசர் தனது அலுவல் அறையில் தனியாக நின்றவாறு, மூச்சை ஆழமாக இழுத்தபடி அந்த பழமையான சுருளை பார்த்து நின்றார்.
ஆரவல்லி மலைத்தொடரின் வரைபடம், விடிந்தும் விடியாத காலை இருளில் மெல்ல ஒளிர, அதனை பார்த்திருந்த அரசர் ” ராஜபுத்திர சபதம் விழிக்க தொடங்கிவிட்டது….அதை யாரோ அழிக்க விரும்புகிறார்கள்” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
ஆசாத் கானின் பூர்வீக ஹவேலி – காஷ்மீர்
மலைகள் பனிமூட்டத்தில் மூடப்பட்டிருக்க, வழித்தடங்கல் எங்கும் எண்ணெய் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தது. மீனாட்சி தன் அன்னையுடன் முற்றத்தில் அமர்ந்திருக்க, ஆசாத் கான் தனக்கு தெரிந்த தமிழில் சுந்தரத்துடன் பேசி கொண்டிருந்தார்.
மீனாட்சி பாய் மேல் கால்களை மடித்து அமர்ந்து, விரலால் தூசியில் வடிவங்களை வரைந்து கொண்டிருந்தவளின் விரல்கள் அசையாமல் நின்றுவிட, முற்றத்தை சுற்றி இருக்கும் விளக்குகள் விட்டு விட்டு எரிய, குளிர்ந்த காற்று முற்றம் முழுவதும் ஒருவித அசவுகரியத்தை கூட்டியது.
மீனாட்சி மெதுவாக, மயக்கக் குரலில்
” வாள்கள் எழுந்துவிட்டது…”
என்றதும் ஆசாத் கான் பதற்றத்துடன் அவள் அருகே சென்றார். மீனாட்சியின் குரலில் இருந்து ஒருவித பழமையான ஒலி எழும்பி, “சபதத்தின் நிழல் வீழாது… அன்னையின் குலம் மீண்டும் விழித்தெழும்.” என்று வாக்கு கூற, அதை கேட்டு நின்ற அசாத் கானின் கண்கள் விரிந்து கொண்டது.
எங்கோ வெறித்திருந்த மீனாட்சியின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் அவளது கன்னத்தில் வழிந்தபடி மேலும் தொடர்ந்தவள்,”இருள் அவனை நாடும்…. அவன் வருகிறான்… சத்தியத்தை முறித்தவன்., வருகிறான்… ரத்தம் கேட்டு தேவி காத்திருக்கிறாள்” என்றதோடு ராதை மடியில் மயங்கி சரிந்தாள்.
ரணசூரன் வருவான்….

