Loading

சபதம் – 7

“கொடிந்து வாழ்தல்

குற்றம் அன்றென் தோழி!

இடிந்து வீழ்ந்தும்

எழுந்தோங்கும் மனிதர்

படிந்து வருபவர்

பாசறை நோக்கித்

தடிந்து நின்றாரைத்

தாக்குவாரை

நெடிந்த கூந்தல்

நெடுவேல் தாங்கி

அடங்காது நின்ற

அருந் திறல் யானை

அரண்மை சேர்

அரசன் கொடியோர்

இடி என முறுவல் செய்யும்

இடர் தாங்கி நின்றோர்க்கே.”

– கபிலர் (புறநானூறு-192) 

பொருள்:

இந்தப் பாடல் போரில் அஞ்சாமல் நிலைத்து நிற்கும் வீரர்களின் மனநிலையும் அர்ப்பணிப்பையும் புகழ்கிறது.

இராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரசு தலைமைச் செயலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அமைச்சர் ப்ரித்வேந்தர சௌகான் அரசு அதிகாரிகளையும், அடுத்த மாதம் தொடங்க இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு தன்னை பார்க்க வரும் கட்சி தொண்டர்களையும் சந்திப்பது என்று இருந்த விறுவிறுப்பான அன்றைய காலைப் பொழுதில், மந்த்ராலயா கட்டிடத்தின் முன் வழுக்கிக் கொண்டு வந்து நின்றது அந்த கருப்பு நிற வெளிநாட்டு வாகனம்.

அந்த இடத்துக்கு சம்பந்தம் இல்லாது வந்து நின்ற உயர்ரக வாகனத்தை, அங்கு இருந்த அனைவரும் ஒருமுறையாவது திரும்பிப் பார்த்திருப்பார்கள். வாகனம் நின்று பத்து நிமிடம் கழித்தே உள்ளே இருந்து ஒருவர் இறங்கி, அமைச்சர் உதவியாளனை தேடி சென்றார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தவர், கார் கண்ணாடியை தட்ட, அது மெல்ல கீழிறங்கி, உள்ளே இருந்தவன் தென்னிந்திய சாயலில் நெற்றி முடி முன்விழ, அதை விரல்களால் கோதியபடி தன் உதவியாளன் சொன்னதற்கு தலையசைத்துவிட்டு, வாகனத்தில் இருந்து கீழ் இறங்கினான்.

இறங்கியவன் அனைவரையும் குள்ளமாக்கி ஆறடி உயரத்தில் கம்பீரமாய் தன்னை சுற்றி இருந்தவர்களை கடந்து சென்றவன் விழிகள் தான் போகும் பாதைத் தவிர்த்து எங்கும் அலைபாயாமல் நிமிர்ந்த நடையுடன் அமைச்சர் ப்ரித்வேந்தர சௌகான் அறையை நோக்கி முன்னேறினான். அமைச்சரின் அரை கதவை பேருக்கு இருமுறை தட்டிவிட்டு, நொடியும் தாமதிக்காமல் உள்ளே சென்றான்.

தன் அறைக்குள் நிமிடமும் தாமதிக்காமல் நுழைந்த அந்த புதியவனை, கண்கள் சுருங்க பார்த்த பிரித்வி, தன் முகபாவனையை சரி செய்து கொண்டு சிரித்த முகமாகவே “ராயல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்” உரிமையாளன் தீவன் இளம்பரிதியை வரவேற்று உபசரித்தான்.

தீவன் வரும்பொழுதே பிரித்வியை பற்றி விசாரித்திருந்ததால் எப்பொழுதையும் விட சற்று கடுமையாகவே முகத்தை வைத்திருந்தான். அதில் இருந்தே தன்னை எதிரில் உள்ளவன் தெரிந்திருப்பதை உணர்ந்து கொண்ட அமைச்சர், எந்த மேற்பூச்சும் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

“மிஸ்டர். தீவன், நாங்க இங்க ஒரு பேலஸ் டைப் ரிசார்ட் கட்டுறதுக்கு பிளான் பண்ணிட்டு இருக்கோம். டூரிஸ்டுக்கு ஒரு ராயல் பேலஸ் எப்படி இருக்கும், அங்க நடைமுறை என்ன, அதோட பாரம்பரியம் என்ன, இதை அவங்க ஸ்டே பண்ற அப்போ உணர வேண்டும். அந்தமாதிரி ஒரு ரஜபுத் டைப் பேலஸ்க்கு உங்களால ப்ளுபிரிண்ட் ரெடி பண்ண முடியுமா? அது மட்டும் இல்ல இது ஒரு கவர்ன்மெண்ட் காண்ட்ராக்ட், அதனால கொட்டேஷன் ரெடி பண்ணி தந்தா, மேலிடத்துல ஆர்டர் வாங்க கொஞ்சம் சுலபமா இருக்கும்” என்றான் பிரித்வி.

எதிரிலிருந்து அமைச்சர் சொன்ன அனைத்தையும் இடையிடாமல் கேட்ட தீவன், “இதை நீங்க போன் கால்லயே சொல்லிருக்கலாமே சார்?” என்றவனின் வார்த்தையில் பரித்வியின் முகம் கடுகடுக்க, அதனை கண்டுகொள்ளாமல் மேலும் தொடர்ந்த தீவன், ” எனிவே, நீங்க கேட்ட எல்லாம் தயார் பண்ணிடலாம், ஆனா இடம் எங்க, எப்புடினு பார்த்தா மட்டும் தான் அதுக்கு ஏற்ற மாதிரி பிளான் போட முடியும், இடம் பார்த்தாச்சா?”.

தீவனின் ஜம்பம் இல்லாத பேச்சில், தானும் தன் வாய் ஜாலத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு விவரத்தை கூற தொடங்கினான், “உதய்பூர் அருகே ஆரவல்லி மலைப்பகுதியில் பழைய காலத்து இடிந்த அரண்மனை இருக்கு , மலைப்பிரதேசம், சுத்தமான காற்று இயற்க்கைக் காட்சி என ரிசார்ட் கட்டுவதற்கு அது அருமையான இடம்”.

“ஏற்கெனவே அங்க ஒரு கட்டிடம் இருக்குதுன்னா, அதையே ரெனோவேட் பண்ணிரலாம். அது நமக்கும் நல்லது. அன்ட் அரண்மனைல இருக்குற தூண்கள், வேலைப்பாடுகள் இப்போ எவ்வளோ மெனக்கெட்டாலும் கிடைக்கிறது கஷ்டம்” என்றவன் “அப்ப இன்னைக்கு இல்ல நாளைக்குள்ள கவர்மென்ட் கிட்ட அனுமதி வாங்கிட்டா, கையோட இடத்தையும் பார்த்துட்டு மேற்கொண்டு செய்யுறத செய்யலாம்” தீவன்.

“அங்க தான் பிரச்சனையே இருக்கு மிஸ்டர். தீவன், அந்த அரண்மனை, அதை சுத்தி உள்ள இடம் கவர்மெண்ட் கண்ட்ரோலில் இல்ல. அது ரஜபுத் அரசர்களுக்கு சொந்தமானது. இன்னும் சொல்ல போன பழைய ராஜ்புத் அரச வம்சாவளிங்க இந்த இடத்துக்கு அடித்துக்கொண்டு இருப்பதாக தகவல்.”என்ற ப்ரித்விக்கு இது பெரிய விஷயமே இல்லை.

ஆனால் தீவனுக்கு தேவை இல்லாத சிக்கலில் மாட்டிக்கொள்வது என்பது எப்போதும் ஒத்துவராத ஒன்று. அதிலும் அவன் ஆரம்பித்த இந்த தொழிலில் எப்பவும் நேர்மையை கடைபிடிக்க நினைப்பவன்.

“நீங்க அந்த பேமிலி கிட்ட லீகல் பெர்மிஷன் வாங்கிட்டு சொல்லுங்க சார். மேற்கொண்டு இந்த ப்ராஜெக்ட் பத்தி பேசலாம்” என்றவன் தான் நாளை இங்கிருந்து டெல்லி செல்ல இருப்பதாகவும், வேறு எந்த விஷயம் என்றாலும் தன் உதவியாளனை தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

தீவன் வெளியேறியதும், அமைச்சரின் உதவியாளன், “என்னங்கய்யா இது?” என்று கேட்க, ப்ரித்வியோ, “ம்ம்ம் இது தான் பணத்திமிர்” என்றபடி அன்றைய அலுவல்களை பார்க்க தொடங்கினான்.

லண்டன் மாநகரம்

பாரத நாட்டில் ஆசாத் தொழுகை செய்து கொண்டிருந்த நேரம் லண்டன் மாநகரில் அதிரா தன்னை மறந்த நிலையில் அமர்ந்தபடி எதிரில் இருக்கும் சுவரை வெறித்து பார்த்தவள் மூளை மறுத்துப் போய் இருந்தது. கரண் காதல் பொய் இல்லை, ஆனால் தன்னால் அவனுடன் இணைய முடியாது, அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.

கரண் பிரதாப் சிங்கின் கோபம் தான் செய்ய போகும் காரியத்தால் குறைந்து, கலில் உயிரை காப்பாற்ற முடியும் என்றால் , அதிரா தன்னை இழக்கவும் தயார். முடிவுடன் கரண் இல்லம் அடைந்த அதிராவிற்கு எதுவோ நடக்க போவது போல் உள்ளம் தடதடக்க , தன் வாகனத்தை விட்டு இறங்கி அந்த அரண்மனை வாயில் கதவில் கைவைத்ததும் தானாக திறந்து கொண்டது.

அதுவரை பதட்டத்துடன் வந்தவள் முன் மது கோப்பையுடன் அமர்ந்திருந்தான் கரண்.

“கரண்..” என்று எதையோ சொல்லபோனவளின் கண்கள் நிலைகுத்தி நிற்க, விரிந்த கண்களுக்குள் நெருப்பின் நடுவே ஜொலித்து கொண்டிருந்தது ஒரு பெண்ணின் முகம். அந்த முகத்தில் இருந்த கோபம் அவளை தகிக்க செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கோபக்கனல் அவள் உடல் முழுதும் பற்றி எரிய, அந்த நெருப்பின் எரிச்சல் அதிராவின் உடம்பில் இருந்து அவள் இடப்புற நெஞ்சில் புதைந்தது போல் இருக்க, அந்த நமச்சல் தாளாமல் மயங்கி சரிந்தவளை மடி தாங்கி இருந்தான் கரண் பிரதாப் சிங்.

அமானுஷ்யங்கள் நிறைந்த இரவு. மங்கலான விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த நீளமான அறையில் இருந்து வெளியே வரும் வழி தெரியாமல் அந்த அறையை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள் அதிரா. அவள் மனதில் கலிலுக்கு நடந்த விபத்து அதன் பின் கரணின் அரண்மனைக்குள் நுழைந்தது, அதன் பின் ஏதோ ஒரு சக்தி தன்னை செயல் இழக்க செய்து, தன் முன் தோன்றிய பிரகாசத்தை தாள முடியாமல் கண்களை இறுக மூடியது வரை மட்டுமே ஞாபகத்தில் இருந்தது.

அதன் பின் நடந்த எதுவும் நினைவில்லை. கரண் எங்கு சென்றான் என்றோ? தான் இப்போது இருக்கும் இடம் என்னது என்பதை அறியமுடியாமல் அறையில் நடைபயின்றவளின் கண்களுக்கு, அந்த அறையின் கடைக்கோடியில் வெளிச்சம் தெரிவது போல் இருக்க, அங்கு கீற்றாய் தெரிந்த ஒளியை நோக்கி வேகமாக செல்ல முயன்றாள்.

அருகே செல்ல செல்ல அந்த விளக்கின் வெளிச்சம் அதிராவை விட்டு தள்ளி தள்ளி செல்வதுபோல் தோன்ற, தனிமை தந்த பயத்தில், வெளிச்சத்தை எட்டிவிடும் வேகம் பிறக்க, தன் உடல் பலத்தை மீறி ஓட தொடங்கினாள்.

இதோ இதோ பக்கம் வந்துவிட்டாள் எனும் நிலையில் மீண்டும் அந்த வெளிச்சம் விலகி செல்லும். ஓடி , உடல் களைத்து மயங்கிய நிலையில் அந்த வெளிச்சத்தை கைகளால் பிடிக்க எண்ணியவள் ஏதோ ஒன்றின் மேல் மோதி கீழே விழுந்தாள்.

அதிராவின் முன் எதுவோ மினுமினுத்து அவளின் கண்களை கூச செய்தது. அதிக தூரம் ஓடி களைத்து, மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தவளின், உள் மனம் உந்த, தன் உடல் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி எழுந்து நின்றவள் முன் இருந்தது, ஆளுயர கண்ணாடி.

தங்க முலாமிட்ட ஆளுயர கண்ணாடியில் அங்கங்கே அழுக்கு படிந்திருந்தது. அதன் அருகே சென்ற அதிரா, அழகிய வேலை பாடுடன் இருந்த கண்ணாடியின் நடுவில் விரிசல் விட்டிருப்பதை கவனித்து அதை தன் கைகள் கொண்டு தொட முயன்றவள் அந்த கண்ணாடியில் தெரிந்த உருவத்தை பார்த்ததும் அதிர்ந்து, இரண்டடி பின் நகர்ந்தாள்.

கண்ணாடியில் தெரிந்த அந்த பெண்ணின் முகம் அதிராவை ஒத்திருந்தது. அந்த பெண் பெண்ணின் உடை ஒரு ராஜபுத்ர இளவரசியை போல் சிவப்பு நிறம் கொண்ட நீளமான ஜரி அலங்காரம் செய்யப்பட்ட பாவாடையும், அதற்கு இணையான மேலாடையும் அதன் மேல் தன் தோளையும் சிரசையும் மறைப்பதுபோல் தாவணியை போர்த்தி கொண்டு இருந்தாள். அந்த பெண்ணின் கண்களில் அப்படி ஒரு ஆவேசம். பழைமையான அரண்மனையில் நின்றிருந்தவளை சுற்றி மனித உடல்கள் சிதறிக் கிடந்தது. தொலைவில் எதையோ பார்த்தபடி நின்றிருந்தவள் ஒருவித திடுக்கிடலுடன் “சூரா” என்று உடல் அதிர கூச்சலிட்டாள்.

அந்த பெண்ணை உறைந்து போய் பார்திருந்த அதிராவின் காட்சி மாறியது.

அதிரா பார்த்த அதே பெண் இப்போது சாமி சிலையின் முன் மண்டியிட்டு இருந்தாள். கைகள் முழுதும் ரத்தத்தில் உறைந்திருக்க, அவள் உதடுகள், “என்னவனோடு ஒரு வாழ்க்கை.. இனி ஒரு ஜென்மம்.. இன்னும் ஒரே ஒரு ஜென்மம்” என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் உச்சரித்து கொண்டே இருந்தது.

இதனை பார்த்து நின்ற அதிரா உடல் நடுங்க குரல் உடைய , “யார்.. யார் அந்த பெண்? என் சாயலில்?” என்று காற்றுக்கும் கேட்காதவாறு மெல்ல தனக்குள் கேள்வி கேட்டவளுக்கு பதில் தந்தது அந்த ஆண்குரல்,

” என் பாதையை ஒளியூட்டிய தீப்பொறி நீ !

என் காதலில் வீரத்தை விளைத்தவள் நீ!!

நீ என் உயிர் யசோதரா!!

அதிராவின் காதில் கேட்ட வார்த்தைகள் அவள் இதயத்தை உருக்கி தாளாத வலி தந்திட, அவள் கண்களோ கண்ணீரில் மிதக்க, அந்த ஆளுயர கண்ணாடி முன் மண்டியிட்டு, போன ஜென்மத்தில் தான் பட்ட துயரத்தை, தான் இழந்த உயிருக்காக, உறவுக்காக கதறி துடித்தாள்.

திடீர் என்று அவள் முன் இருந்த அந்த கண்ணாடியின் மேற்பரப்பில் நீர்க்குமிழி போல் சுழல் ஒன்று உருவாக , ஒரு சிறு நொடி அந்த ராஜபுத்ரா இளவரசியை கண்ணாடியில் தெரியும் பிம்பமாக இல்லாமல் உயிரும் உணர்வும் கொண்டு அதிராவிற்கு தெரிந்தாள். அவள் கண்களில் சொல்லொணா சோகமும் அதில் மறைந்திருக்கும் கோபம் எனும் தீயும் அதிராவிற்குள் அதிர்வளையை கடத்தி இருந்தது.

அதிராவையே பார்த்து நின்ற அந்த உருவம், “என் இதய துடிப்பு அவன் அதிரா..நம் ராஜ்குன்வர் (இளவரசன்) அவன்..இருக பற்றிக்கொள்.. பகை முடி” என்று சொல்லியபடி இருட்டுக்குள் மறைந்திருந்தது.

லண்டன் மாநகரில், உதய்பூர் அரசுக்கு சொந்தமான அரண்மனையின் விருந்தினர் அறையில் படுத்திருந்த அதிரா, வேர்வை வழிந்தோட , மூச்சு விட முடியாமல் பயத்தில் கண்கள் அலைபாய, மயக்கத்தில் இருந்து விழித்தவள் முன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது அந்த உருவம். ராஜபுத்ரா இளவரசியின் முன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அதே உருவத்தின் முக சாயல் கலிலாகவும் கரணாகவும் மாற்றி மாற்றி அதிராவின் கண்களுக்கு தெரிய “ஆஹ்..” என்ற அலறலுடன் எழுந்தவளை தன் கைகளில் ஏந்தி இருந்தான் கரண் பிரதாப் சிங்.

ரணசூரன் வருவான்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்