Loading

சபதம் -5

“அறிவுடை அருமையர் ஆற்றல் எய்துவார்

மறிவுடை மறவர் மாறுபடு வினையர்

நெடுவேல் இமயவர் நேரிழை படையர்

கொடுவேல் வல்லனர் குறுங்கடல் உகுத்த

உடுவேல் வென்றனர் உறைகுடி யவரே.”

புறநானூறு (87)

பொருள் :

அறிவு, ஆற்றல், ஆயுதத் திறன், படையின் வலிமை—இவை அனைத்தும் சேரும்போதுதான் ஒரு நாட்டின் சிறந்த வீரப்படை உருவாகிறது என ஔவையார் கூறுகிறார்.

 

விபத்து நடந்த அந்த நேரம், இரவு நிசப்தத்தில் சிதைந்து போன போர்ஷ் காரின் உடலில் இருந்து புகை மெதுவாகப் பரவத் தொடங்கியது. பாலத்தின் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கும் நெருப்புத் தணல்கள் போல மின்னி மின்னி துடித்துக் கொண்டே இருந்தன.

அந்தச் சிதைவுக்குள், கலீல் மெல்ல அசைந்து கண்களைத் திறக்கப் போராட, ஒர் ஆழ்ந்த வலி நிறைந்த மூச்சு அவனிடமிருந்து வெளிவந்தது. நெற்றியில் இருந்து இரத்தம் சொட்டுசொட்டாக வழிந்திருந்தது.

அவன் அசைய முயலும் ஒவ்வொரு நொடியும், வலி அவன் மார்பெலும்புகளை வெடிக்கச் செய்வது போல் இருக்க,”“…அல்லாஹ்…” என்றபடி மீண்டும் சாய்ந்து விழுந்தான்.

அந்த நேரம் அவன் தலையின் உள்ளே ஒரு குரல், ஒரு ஆண் குரல் “வீர்!” அதைக்கேட்ட கலீலின் கண்கள் விரிய,அந்தப் பெயர் கூர்மையான கத்தி போல அவனைத் துளைத்தது.

அவன் அறியவில்லை ஏன் என்று. அவன் அறியவில்லை ‘வீர்’ யார் என்று. ஆனால் அந்தப் பெயர் ஒலித்த நொடியில் சிறு மின்னல் அவன் மனதைப் பிளப்பது போல் நெஞ்செல்லாம் வலித்தது.

அவன் கண்ணுக்குள் பெரிய அரண்மனையின் கல் மண்டபம் தோன்ற, அங்குள்ள விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில் நிழல்கள் நடனமாடுவது போல் இருக்க, இரு இளைஞர்கள், ராஜபுத்திர இளவரசர்கள்.

அதில் ஒரு முகம் மட்டுமே அவனை வாஞ்சையுடன் நோக்கிச் சிரித்தது. அதை உணர்ந்த கலீலின் உதடுகள் “வீர்” என்று முணுமுணுக்க, அடுத்த நொடியில் மற்ற இளவரசன் கையில் மின்னும் கத்தியுடன் முன்னேறுகிறான்.

அந்த இளவரசனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி அந்த இடத்தில் கலீல் முகம் தோன்ற, அவன் கையில் கத்தி.

கத்தியைப் பார்த்திருந்த கலீலின் கைகள் முழுதும் ரத்தத்தில் தோய்ந்திருக்க, நிமிர்ந்து வீரைப் பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.

வீரின் உடல் முழுதும் ரத்தம் வழிந்து கல் தரையில் சிதறியது. வீழ்வதற்கு முன் கலீல் அவனைத் தழுவிக் கொண்டான்.

வீரின் இரத்தம் கலீலின் கைகளில் கனமாக வழிந்தபடி இருக்க, வீரின் குரல் நடுக்கத்துடன்
கோபமின்றி, குற்றஞ்சாட்டாமல்…அதேசமயம் வேண்டுகோளுடன், “ஷபத் ஸ்தம்பம் கோ பசானா…ஆரவல்லி கோ பசானா…மேரே யசோ கோ த்யான் ரக்னா…ஜெய் ராஜ்புட்டான”
( சபத ஸ்தம்பத்தை காப்பாற்று… ஆரவல்லி மலைத்தொடரை காப்பாற்று…என் யசோவை பார்த்துக்கொள்…ஜெய் ராஜ்புட்டான) என்றதும் கலீல் “வீர்!” என்றபடி அலறி விழித்தவன் கைகள் நடுங்கின, வீரின் இரத்தம் இன்னும் அவற்றில் ஒட்டியிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது.

அவன் உள்ளங்கைகளைப் பார்த்தான், அதில் கத்தியின் எடையும், இரத்தத்தின் சூடும், துரோகத்தின் சுமையும் இருப்பது போல் உணர்ந்தான்.

அவனுடைய குரல் உடைந்து,”வீர்… நான் உன்னைக் கொன்றேனா?…என் சகோதரனை நானா கொன்றேன்…” என்றவன் கண்களில் கண்ணீர் வழிய வீரின் இறுதி வார்த்தைகள் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்தது, “”ஷபத் ஸ்தம் கோ பசானா…ஆரவல்லி கோ பசானா…மேரே யசோ கோ த்யான் ரக்னா…ஜெய் ராஜ்புட்டான”.

கலீலின் இதயம் உடலோடு சேர்த்து வலித்தது. அவன் அறியவில்லை ஏன் வீர் அந்த வார்த்தைகளைச் சொன்னான் என்று. அவன் அறியவில்லை எந்த ஸ்தம்பம் என்று. ஆனால் ஒரு விஷயம் மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது அவன் செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று.

கலீல் தன்னைத் தானே அந்த சிதைவிலிருந்து வெளியே கொண்டுவர முயன்றான், அவன் வைக்கும் ஒவ்வொரு அசைவும் வேதனையை அதிகப்படுத்தியது. ஆனால் குற்றவுணர்ச்சி அவனை உயிர் பிழைக்கத் தூண்ட, எரியும் காரில் இருந்து வெளியேறி பாலத்தின் கைப்பிடியை அடைந்தவன் உடல் அதற்கு மேல் தாளாமல் இரத்த இரத்தமாய் இருமி வெளியேற்றினான்.

அவனுடைய கைப்பேசி நொறுங்கிக் கிடந்தது. உதவிக்கு அழைக்க முடியாத நிலையில் அவன் கண்களை அழுந்த மூடிக் கொண்டான். வாழ்க்கையில் முதல் முறை பயம் அவனை ஆட்கொண்டது. தோல்வியடைந்து விடுவானோ என்று பயந்தான்.

அந்த நேரம் அவன் மார்பின் ஆழத்தில் ஒரு விசித்திரமான இழுப்பு. அவனது அல்லாத ஒரு இதயத் துடிப்பு. ஒரு இணைப்பு,”வீர்…இந்த முறை நான் தோற்க மாட்டேன்.” என்றபடி காயங்களுடன், தடுமாறியபடி, காட்டின் இருளுக்குள் நடக்கிறான். இரவு — அவனை முழுவதும் விழுங்கிக் கொண்டது.

எரியும் வாகனத்தை பார்த்த மாலிக்கின் ஆட்கள் அதில் இருந்து வெளிவந்த உருவத்தைப் பார்த்து குழம்பினர். அவர்கள் எண்ணம் கலீல் நிச்சயமாக உயிர் பிழைத்திருக்க மாட்டான் என்பதே. ஆனால் அவர்கள் பார்த்த அந்த உருவம் கலீல் அல்ல, கரிய ஆஜானுபாகுவான உருவம், நடையில் ஒரு கம்பீரம். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்ணில் இருந்து காற்றாய் மறைந்தது. அதில் திடுக்கிட்டவர்கள் எண்ணம் கலீலின் ஆவியோ என்று அரண்டு அங்கிருந்து அடித்துப் பிடித்து ஓடினர்.

இந்திய நாட்டின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், சிந்தா பள்ளத்தாக்கு, காடு அடர்ந்த கிராமத்தின் கடைக்கோடியில் இருக்கும் வீட்டின் முற்றத்தில் தொழுகை செய்து கொண்டிருந்தார், கலில் மற்றும் அதிராவினால் வாப்பா என்று அழைக்கப்படும் முதுமையிலும் கம்பீரத் தோற்றம் கொண்ட ஆசாத் கான்.

தன் தொழுகையை முடித்தவரின் காதுகளில் ,” ஆசாத் மேரே சாத் ஆவ், சந்திரா வன்ஷகா பேட்டா ஆவ் மேரே சாத்” (ஆசாத் என்னிடம் வா, சந்திர வம்சத்தின் புதல்வா வா என்னிடம்) என்ற சத்தம் வரும் திசையில் நடக்கத் தொடங்கினார் வாப்பா.

இருள் அடர்ந்த காட்டுக்குள் மெல்லிய நீரோடையின் அருகே அந்த கரிய உருவம் தவம் செய்வது போல் ஒற்றை காலில் நின்று கொண்டு வலது கையில் பெரிய தடியும் , தன் இடது கையை இடுப்பில் ஊன்றி, வளர்ந்து கொத்தாக தொங்கும் சடா முடியை கோபுரம் போல் உயர்த்திக் கட்டி ஆசாத்தின் வருகைக்கு காத்திருந்தது.

அந்த கருத்த உருவத்தை பார்த்ததும், வாப்பா தன் இடது கால் பாதத்தை நிலத்தில் அழுந்த ஊன்றி, வலது காலை முழங்காலிட்டு , இரு கைகளையும் தன் நெஞ்சுக்கு நேரே ஒன்றோடு ஒன்று இணைத்துப் பிடித்து, ”பாபா..” என்று தன் குரலில் பக்தியை கொண்டு, தலையை தரையை நோக்கி குனிந்தபடி திடமாக அழைத்தார்.

அதுவரை தியானத்தில் இருந்த அந்த கரிய உருவம், வாப்பாவை தன் சிவந்த கண்களால் அளவெடுத்தபடி , “கர்னி மாதாவின் குலமே, சந்திர வம்சத்தின் மகனே, நேரம் நெருங்கிவிட்டது, புறப்படு.. பகை முடிக்கும் காலம் வந்துவிட்டது , வீரர் குலத்தின் சாபம் தீரட்டும்.. அரச புத்திரர்கள் மீண்டும் ஆளட்டும்” என்றவரின் குரல் அந்த காடு எங்கும் எதிரொலித்தது.

அவரின் வார்த்தைகளில் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது வாப்பாவின் உடல்.

இடியும், மின்னலும் கொண்டாட்டத்தில் முழங்க, பேரிறைச்சலுடன் மழை கொட்ட, ஆனந்த தாண்டவத்துடன் “ சந்திர குல அரசே.. விரைந்து செல் வணராக்ஷ ஸ்தம்பம் உயிர் பெறட்டும், வீரர் குலம் விழிக்கட்டும், ரணசூர் குலம் சாபம் நீங்கி ராஜபுத்திரர்கள் பழி முடிக்கட்டும் , கர்னி மாதா வழிகாட்டுவாள்.. வாரிசுகள் இணையட்டும் , பகைவன் ஒழியட்டும், ஒன்று சேர்.. வாரிசுகள் விழிக்கட்டும் , அரச புத்திரர்கள் இணையட்டும் “ என்று கத்தியவாறு அந்த கரிய உருவம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.

பல வருட காத்திருப்பின் பயனாய், வணராக்ஷ சபத ஸ்தம்பம் விழிக்கத் தொடங்கியது, வாரிசுகள் வெளிவரும் நேரம் நெருங்கிவிட்டது அப்படியானால் மீண்டும் ஆரவல்லி மலையன்னைக்கு விபரீதம் நேர உள்ளது என்பதனை உணர்ந்து கொண்டார் ஆசாத் கான்.

ஓடிய அந்த உருவத்தை பார்த்தபடி எழுந்து நின்ற வாப்பாவின் மனம் தனக்கு கொடுத்த கடமையை நிறைவேற்றும் வழிகளை தேடத் தொடங்கியது. ரணசூர குலத்தின் வாரிசுகள் இருக்கும் இடம் அவருக்கு தெரியும். அதே போல் வர்ண குளத்தின் வித்து இருக்கும் இடமும் ஆசாத் அறிந்தது தான்.

ராஜபுத்திர குலத்தின் வரலாறு நீண்ட நெடிய ஒன்று. இந்த பாரத நாட்டின் உரிமையாளர்கள் அரச புத்திரர்கள். இனம்,மதம் அனைத்தையும் தாண்டி கொள்கைகளால் ஒன்று சேர்ந்த குலம்.

ராஜபுத்திர குலம் முப்பத்தாறு கிளைகளைக் கொண்டது. ஒவ்வொரு கிளையும் சூரிய, சந்திர மற்றும் அக்னி என்று மூன்று ராஜ வம்சத்தை கொண்டது. ஆனால் இடையில் நேர்ந்த பிரச்சனைகளால் சில அரச குலத்தின் வாரிசுகள் தங்கள் முன்னோர்களால் மறைத்து வளர்க்கப்பட்டனர். காரணம் சில சதிகரர்களால் அந்த குலத்தின் வாரிசுகளுக்கு ஆபத்து இருந்தது.

இவர்களை தகுந்த காலத்தில் ஒன்றிணைக்க வேண்டிய கடமை சந்திர வம்ச வாரிசுகளிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆசாத் கான் சந்திர வம்சத்தின் தற்போதைய அரச வாரிசு.

இத்தனை ஆண்டுகளாய் காத்திருந்த காலம் நெருங்கியதை ‘பாபா’ என்று ஆசாத்தினால் அழைக்கப்பட்ட அந்த கரிய உருவத்தின் வாக்கு மூலம் அறியவந்தவர்க்கு, பாலை நிலத்தில் சொட்டு நீருக்கு காத்திருந்தவன் கண்களில் கங்கை நதி தென்பட்டது போல் சொல்ல முடியாத ஆனந்தம் ஏற்பட்டது.

வந்த செய்தி வரம் தான். ஆனால் இதில் உள்ள பிரச்சனைகள் ஏராளம். அவ்வளவு சுலபமாக இருக்கப் போவது இல்லை.

அரச மன்றத்தை கூட்டும் காலமும் நெருங்கிவிட்டது. முதல் கூட்டம் ரணசூர் மற்றும் வர்ண குலத்தின் வாரிசை பாதுகாக்கும் பாதுகாவலர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். அதன் பின்?

ஆசாத்தின் மண்டைக்குள் பிரலயமே வெடிப்பது போல் இருந்தது. தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஆசாத், ‘ஒவ்வொரு படியாக கடக்க வேண்டிய நேரம்’ என்று முணுமுணுத்தவர் காதுகளில், “கலங்காதே மகனே, கர்னி மாதா உனக்கு வழி காட்டுவாள், உன் வம்ச தேவதை உனக்கு உதவ உன் வசம் வந்து சேருவாள்” என்ற வார்த்தைகளில் சற்று சமாதானம் அடைந்தார் ஆசாத் கான் .

ஆனால் பாவம் ஆசாத் கான் ராஜபுத்திர மன்றத்தை கூட்டுவதற்கு முன், உதய்ப்பூர் அரசரால் கூட்டப்படும் என்றோ! அல்லது அதில் வாரிசுகளை பற்றி பேச போவதில்லை என்றோ அவருக்கு தெரியவில்லை.

ஒரு காலத்தில் ராஜபுத்திர குலத்தை தாங்கி நின்ற அரசி ஆரவல்லி மலைத்தொடர். அவர்களின் அரச ஆட்சியை பார்த்தவள். அதேபோல் ராஜபுத்திரர்களின் வீழ்ச்சியையும் பார்த்தவள். இன்று அந்த குலத்தின் சபதத்தை புதுப்பிக்க காத்துக்கொண்டிருக்கிறாள் ஒய்யாரமாய் ஆங்காராமை.

ரணசூரன் வருவான்……

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்