
சபதம் – 38
குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
பொருள்:
நண்பனைப் போலக் கடினமான காரியங்களையும் எளிதாக்கும் சக்தி வேறு எதற்கும் இல்லை.
உண்மையான நட்பு மனிதனை உயர்த்தும் மிகப் பெரிய வலிமை.
ஸ்தபத் ஸ்தம்பத்தின் முன் கலீல் தனது பூர்வ ஜென்மத்தின் சபதத்தை நினைவுகூர்ந்த அந்த இரவு இயல்புக்கு மீறிய அமைதியில் மூழ்கியிருந்தது. பழமையான அந்த தூண், தன் முன் நிற்கும் ஆன்மாவை அடையாளம் கண்டதுபோல் மெலிதாக ஒளிர்ந்தது.
கலீல் அசையாமல் நின்றான். அவனது இதயம் நெஞ்சை விட்டு வெளியே வந்துவிடுவது போல் துடித்தது. கண்கள் அகன்று, தான் இப்போது பார்த்ததையெல்லாம் ஏற்க முடியாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.
பூர்வ ஜென்மத்தின் நினைவுகள் ஒரு புயலைப் போல் அவனைத் தாக்கின. நெருப்பு.
அலறல்கள். எரியும் காடு. வானத்தை நோக்கி உயர்த்தப்பட்ட ஒரு வாள். தன் கைகளில் உயிர் நீத்த தனது நண்பன். யசோதராவின் வீரம். எரியும் கோட்டை. சுலைக்காவின் காதல். மெஹ்ருன்னிஸாவின் சாபம்… இறுதியாக தன் உடல் சாம்பலாகும் தருணம் உயிர்த்திட்ட சபதம் அனைத்தையும் நினைவுகூர்ந்தவன் உடல் தள்ளாடியது.
இனி அவன் கலீல் ஹாசிம் அல்ல, அவன் ரணசூர். ஜென்மங்கள் கடந்து சபதம் முடிக்க வந்த ராஜபுத்திர இளவரசன் ரணசூரன்.
அவன் முன் சில அடிகள் தூரத்தில், அமைதியாகவும், அதே நேரம் பதைபதைப்புடனும், அனைத்தையும் அறிந்த பார்வையுடனும் கலீலை நோக்கி நிற்கும் மனிதன்… வீர். கரன். இல்லை ரணசூரனின் வீர். அதிவார் இளவரசன். தான் துளைத்திட்ட சகோதரன்.
பூர்வ ஜென்ம நினைவுகளை கலீலுக்கு முன்பே அறிந்தவன். அதன் பாரத்தை தனியே சுமந்தவன். இந்தக் கணத்தை நண்பன் எப்படித் தாங்குவான் என்று தனது பார்வையில் கூட வீரைக் கொண்டுவராமல், கலிலை காத்தவன்.
கலிலின் முழங்கால்கள் நடுங்கின. தொண்டை இறுகியது. இதயம் மார்பை உடைத்தெழும்படி துடித்தது. அவன் மெதுவாகக் கண்களை உயர்த்தினான். பயம், குழப்பம், தாங்க முடியாத உணர்வுகளுடன், கரணை பார்த்தான்.
கரண் அசையவில்லை. கலீல் சுவாசம் சீராக அவனுக்கு நேரம் கொடுத்தான். ஒரே நேரத்தில் கலிலைத் தாக்கிய நினைவுகளின் உணர்வுக் குவியலில் இருந்து வெளியே வர நண்பனுக்கு இடம் கொடுத்தான். அவன் நினைவுகூர அனுமதித்தான்.
கரணை பார்த்திருந்த கலீல் கடினப்பட்டு எச்சில் விழுங்கியவன், பேசத் தொடங்கும் சமயம் அவனது குரல் உடைந்து, “வீர்…” என்றவனால் தடுக்க முடியாமல் அந்தப் பெயர் அவன் உதடுகளில் இருந்து வழிந்தது.
கரனின் கண்கள் மென்மையடைந்தன, ஆச்சரியத்தால் அல்ல, ஆழ்ந்த நிம்மதியால். அந்தப் பெயரை மீண்டும் கேட்க அவன் ஆண்டுகளாகக் காத்திருந்தான். நண்பனின் உதடுகள் அவனது பூர்வ ஜென்ம பெயரை உச்சரித்த அந்த நொடியில் கலிலை நோக்கி ஒரு அடி முன்னே வைத்தான்.
கலீல் நடுங்கும் மூச்சை இழுத்தபடி, “உனக்கு…இது” என்றவனால் வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் தத்தளிக்க, அவன் கேட்க வருவதை புரிந்து கொண்ட கரண் ‘ஆம்’ என்று அமைதியாகவும், உறுதியுடனும் தலையசைத்து ஆமோதித்தான்.
“பதினெட்டு வயதில் எனக்கு நினைவுகள் திரும்ப வந்தன” என்று நண்பனுக்கு பதில் அளித்த கரணின் வார்த்தையில் கலீலின் நெஞ்சம் இறுகியது.
‘அப்படியானால் கரண்… இத்தனை வருடங்களாக உண்மையை தனியே சுமந்திருக்கிறான்.
நினைவுகளை தனியே சுமந்திருக்கிறான். வலியை தனியே சுமந்திருக்கிறான். தனது
சபதத்தையும் தனியே சுமந்திருக்கிறான். அது புரியாமல் தானும்’ என்ற நினைவே கலீலை வெட்கச் செய்தது.
கலீலின் குரல் நொறுங்க, கரணிடம், “ஏன் என்னிடம் சொல்லாமல் விட்டாய்?” என்றவனுக்கு மனதுக்குள் ஒருவித பயம் உறுத்தி கொண்டே இருந்தது.
ஆனால் கலீல் எதிர்பாராத கரணின் பதில் கிசுகிசுப்பாக வெளிவந்தது, “ரணசூரனாய் நீ பட்ட காயங்கள் மிக அதிகம் நண்பா. பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பன், தந்தது ராஜ்யம் என்று அனைத்தையும் இழந்து உடையாமல் நின்றவன் நீ. இப்போதும் ரன்வீர் கலீலாக மாறிய அனைத்தையும் நான் அறிவேன். இத்தனை வேதனை சுமந்த உனது வேதனையை நான் சுமக்க ஆசை கொண்டேன் சூரா… நீ எடுத்த சபதத்தை முடிக்க, நிச்சயம் விதி உன்னை நினைவுகூர வைக்கும், அதுவரை சபதத்தின் சுமையையாவது நான் கொஞ்ச வருடம் சுமந்துவிட்டு போகிறேன்” என்ற வார்த்தைகளை கேட்ட கலீலின் கண்கள் கண்ணீரால் நிரம்பின.
அவன் அழுதது பூர்வ ஜென்ம நினைவுகளுக்காக அல்ல. வலியால் துடிக்கும் இதயத்துக்காக அல்ல. அவனுக்கு முன்னால் நிற்கும் மனிதனுக்காக. தனக்காக காலம் கடந்து காத்திருந்த நண்பனுக்காக. அவன் சகோதரன், அவன் மற்றொரு பாதி, அவன் வீருக்காக.
அந்த நொடி கலீல் கரணை நோக்கி ஒரு அடி முன்னே வைத்தான். பிறகு இன்னொன்று, என்று முன்னேறியவன் கரணின் முன் வந்து நின்றான். அந்தக் கணம்…இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இரவு மூச்சை நிறுத்தியது. ஸ்தபத் ஸ்தம்பம் மேலும் பிரகாசித்தது.
மெல்ல கலீல் குரல் நடுங்க, “நீ என் கைகளில்….ரத்த வெள்ளத்தில்” என்றவனின் வார்த்தையில் கரணின் தாடை இறுக, “வேண்டாம் சூரா, மடிந்த என்னை உயிர்த்தெழ செய்தவன் நீ, கலங்காதே” என்றதும் கலீல் தலையாட்டினான். கண்ணீர் இடையறாது வழிந்தது.
“அரவள்ளியை காக்க முடியவில்லை. உன்னை, யசோ,சு..சுலைக்கா, மெஹர்…அனைவரையும் நானே கொன்றேன். பாவி நான். தவறிழைத்துவிட்டேன், வீர். நானல்லவா கொன்றுவிட்டேன்” என்று கதறியவனின் தோள்களில் கை வைத்த கரணின் குரல் உறுதியுடன், அமைதியுடனும்,
ஆறுதலாக, “நீ எங்களை கொல்லவில்லை சூரா. எங்களுக்காக போராடி உயிர்துறந்திருக்கிறாய். மீண்டும் வாய்ப்பை வேண்டி அக்கினி தேவனுக்கு உன் உயிரை தியாகம் செய்திருக்கிறாய். அநீதி நடக்கும் ஒவ்வொரு நொடியும் ரணசூரன் மீள்வன் என்ற நம்பிக்கையை ராஜபுத்திரர்களிடம் விதைத்திருக்கிறாய்” என்ற வார்த்தைகள் கலீலை எட்டவில்லை.
மீண்டும் மீண்டும் அவன் கரணிடம், ““நான் தோற்றுவிட்டேன். அரவள்ளியை அடிமைப்படுத்திவிட்டேன்…” என்று புலம்ப, கரன் அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
கரணாக அல்ல. கலிலாக அல்ல. வீரும் ரணசூருமாக.
ஒன்றாக உயிர் துறந்த இரு ஆன்மாக்கள். ஒன்றாக மீண்டும் திரும்பிய இரு ஆன்மாக்கள்.
நெருப்பாலும் விதியாலும் கட்டப்பட்ட இரு சகோதரர்கள். கலீல் கரணை இறுக்கப் பற்றிக் கொண்டான். அவன் உடல் நடுங்க, “மித்ரா…” என்றதும் கரன் கண்களை மூடிக் கொண்டான்.
அந்த இரவில், முதன்முறையாக காடு சத்தமிட்டது. சபதம் விழித்தெழுந்தது. சகோதரர்கள் மீண்டும் ஒன்றானார்கள். விதி மீண்டும் விளையாடத் தொடங்கியது.
சகோதரர்களின் உணர்ச்சிமிகு இணைப்பின் அதிர்வு இன்னும் ஸ்தபத் ஸ்தம்பத்தைச் சுற்றி ஒலித்துக் கொண்டிருந்தது. கரணும் கலிலும் அருகருகே நின்றிருந்தனர். கரண் பல நூற்றாண்டுகளாக மார்பில் சுமந்திருந்த பாரம் இன்று இலகுவானது.
“வீர்…” என்ற கலீல், அந்தப் பெயரை நாவிலே சோதிப்பதுபோல் மீண்டும் கிசுகிசுத்தான். அதனை உணர்ந்து கொண்ட கரண் அவன் தோளில் உறுதியான கையை வைத்தபடி, “நான் இருக்கிறேன், சூரா” என்ற அந்த கணம்…உலகம் முழுமையானதாகத் தோன்றியது.
ஆனால் விதி ஒருபோதும் அமைதியை நீடிக்க விடாது. அந்த நிமிடம் திடீரென ஒரு கூர்மையான உலோக ஒலி அங்கிருந்த அமைதியைச் சிதைத்தது. பெரிய இயந்திரங்களின் கர்ஜனையை கேட்ட இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.
கரணும் கலிலும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்து கொண்டனர். அந்த சத்தம் அதிவார் அரண்மனையின் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. ஒரு வார்த்தையும் பேசாமல் இருவரும் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினார்கள்.
அரண்மனை வளாகத்தை அடைந்ததும், அவர்கள் கண் முன்னே விரிந்த காட்சி அவர்களை உறைய வைத்தது.
வெள்ளை விளக்குகள். மண் தோண்டும் இயந்திரங்கள். துளையிடும் கருவிகள். அரசு லாரிகள். அதன் நடுவில், பிருதிவேந்திர சௌஹான் நின்றிருந்தான். அரசியல் அதிகாரமும், அகங்காரமும், ரத்தத்தையே உறைய வைக்கும் புன்னகையுடன்.
அரசு அதிகாரிகளின் குழுவுடன் நின்று, அரண்மனைக்குப் பின்னால் உள்ள மலைகளை சுட்டிக் காட்டி, “புதிய விதிமுறையின் படி” , என்று அவன் உரக்கப் பேசியவன், “நிலத்திலிருந்து 100 மீட்டருக்கு மேல் உயரமில்லாத மலைகள், மலைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த அரவள்ளியின் சிறு சிறு மலைத்தொடர்கள் இன்றே இடிக்கப்படும்” என்றவனின் வார்த்தையை கேட்ட கரண் கைகளை முறுக்க,கலீலின் தாடை இறுகியது.
அரவள்ளி மலை வெறும் நிலம் அல்ல. அது வரலாறு. அது ரத்தம். அது அவர்களின் முன்னோர்களின் சமாதி. அரண்மனையின் கவசம். அதை அழிப்பது, அவர்களின் வம்சத்தையே தாக்குவது போல் ஆகும்.
கரண் முன்னே செல்ல,கலீல் அவனைத் தொடர்ந்து நடந்தான். சௌஹான் அவர்களைப் பார்த்து சிரித்தபடி, “ஆஹா… உதய்ப்பூர் இளவரசரா? என்ன அதிசயம் என்றவன் கலிலை ஏளனமாக பார்த்தபடி, “அரசு உத்தரவை நீங்கள் தடுக்க முடியும் என நினைக்கிறீர்களா?” என்று கேள்வி கேட்டான்.
சவுஹான் தன் பின் நிற்கும் இயந்திரங்களைச் சுட்டிக் காட்டி, ” இத்தனை பெரிய ஏற்பாடுதான் வந்திருக்கும் என்னை உங்கள் இருவராலும் எதிர்த்து நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா?.”
சவுஹானின் பின் நின்ற கூலிப்படையினர் சிரித்தனர். அதிகாரிகள் இகழ்ச்சியாகப் புன்னகைத்தனர். இயந்திரங்கள் இன்னும் உரக்க கர்ஜித்தன.
அதை கண்ட கலிலின் கண்கள் கருமையாகின. கரணின் கோபம் கூடிக் கொண்டிருந்தது.
ஆனால் அவர்கள் பேசுவதற்கு முன்பு, நிலம் அதிர்ந்தது. அதிவார் அரண்மனைக் கோட்டைக்குள் இருந்து ஒரு பயங்கர ஓசை எழுந்தது.
அதிவாரின் பூர்வ ஜென்ம படைகள் உயிர்த்தெழுவது போன்ற பயங்கர சத்தம். அடுத்த கணமே, ஒளி அரண்மனை முழுவதும் பரவியது. நூற்றுக்கணக்கான தீப்பந்தங்கள் எரிந்தன.
ஒன்றொன்றாக. வரிசை வரிசையாக. கோட்டைச் சுவர்களை சுற்றி எரிந்தது. தூங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் ராட்சசன் விழித்தெழுந்ததுபோல் முழு அதிவார் அரண்மனையும் ஒளிர்ந்தது.
அதனை கண்ட சௌஹானின் புன்னகை மறைந்தது. கூலிப்படையினர் பின்னடைந்தனர்.
அதிகாரிகள் உறைந்தனர். ஏனெனில், நிழல்களில் இருந்து வெளிவந்து, முற்றம், சுவர்கள், மேடைகள் அனைத்தையும் நிரப்பியவர்கள்—ராஜபுத்திரர்கள்,நூற்றுக்கணக்கானோர்.
பாரம்பரிய கவசம் அணிந்த ஆண்கள். சுற்றி உள்ள கிராமத்து ஆண்கள் வாள் மற்றும் கோடரியுடன் நிற்க, அவர்களுக்கு உதவும் வீரமிகு ராஜபுத்திர பெண்கள். கண்களில் தீயை ஏந்தி நிற்கும் இளரத்தங்கள், மறக்கப்பட்ட போர்களின் காயங்களைச் சுமந்த முதிய வீரர்கள்.
அனைவரும் அசையாமல், கண் இமைக்காமல், அமைதியாக நின்றனர். அதிவார் கோட்டையின் உயிருள்ள சுவர் போன்று விறைத்து நின்றனர்.
கலீலின் இதயம் வேகமாகத் துடித்தது. கரணின் நெஞ்சம் பெருமையில் விம்மியது. அவர்கள் இருவரையும் கண்ட ராஜபுத்திரர்கள் ஒரே நேரத்தில் தலைவணங்கினர்.
அத்தனை பெரிய கூட்டத்தை அந்த நடு இரவில் எதிர்பார்த்திராத சௌஹான், தடுமாறி பின்னால் சென்றான். அவனது அகங்காரத்தை பயம் முதன்முறையாக உடைத்திருந்தது.
“இ-இவர்கள் யார்?” என்றவனின் முன் வந்த கரணின் குரல் அமைதியாக இருந்தாலும், இதில் சிதறியிருந்த கோபத்துடன், “அரவள்ளி ஒருபோதும் தனித்து நிற்பதில்லை” என்றான்.
கரணை தொடர்ந்த கலீலின் குரல் ஆழமாகவும், கூர்மையுடனும், முந்தைய பிறவியின் பாரத்தைத் தாங்கியபடி, “ராஜபுத்திரர்களின் உயிர் இந்த மண்ணில் நீடிக்கும் வரை,
எங்கள் முன்னோர்கள் பாதுகாத்த இந்த மலையின் ஒரு கல்லையும் உங்களால் எடுக்க முடியாது” என்றபடி கரணுடன் இணைந்து நின்றான்.
தீப்பந்தங்கள் மேலும் பிரகாசித்தன. ராஜபுத்திரர்கள் வாள்களை உயர்த்தினர். பக்கத்து கிராமத்தின் விவசாய மக்கள் கோடரிகளை உயர்த்தினர். அந்தக் கணம், பிருதிவேந்திர சௌஹான் ஒன்றை உணர்ந்து கொண்டான். அவன் ஒரு மலையை அழிக்க வரவில்லை.
நூற்றாண்டுகளாக மீண்டும் எழ காத்திருந்த ஒரு ராஜ்யத்துக்குள் அவன் காலடி வைத்திருக்கிறான் என்று.
ரணசூரன் வந்துவிட்டான்….

