
சபதம் – 35
உரனுடை வாளும் உணர்வுடை நாவும்
அரனுடை யானை அடங்குவ செய்தும்,
முரணுடை மூதூர் முனிந்தகண் நோக்கி,
இறந்தோர் மடிந்தார் என்னா தொழிந்து,
அறம்புரி கொள்கை அரசர்க்கு ஏற்றது;
புறம்புரி கொள்கை புரிந்தோர் இழிவே.
-புறநானூறு பாடல் 112, பாடியவர் : கோவூர் கிழார்
பொருள்:
அரசன் போருக்குச் செல்லும்போது, அவன் தனக்கான புகழை விட மக்களின் நலன், நாட்டின் பாதுகாப்பு இவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.அறமின்றி நடத்தப்படும் போர்
வெற்றியடைந்தாலும் அது பெருமை அல்ல.
போர்க்களம் இப்போது அமைதியாகி இருந்தது. கூச்சல்கள் மங்கிவிட்டன. தூசி அடங்கிவிட்டது. உயிரற்ற உடல்கள் மட்டும் மீதமிருந்தன. ரணசூர், வீரின் உடலைத் தன் கரங்களில் ஏந்திக்கொண்டு அந்த அழிவின் நடுவே நடந்தான்.
வீரின் இரத்தம் அவன் கவசத்தில் உலர்ந்து ஒட்டியிருந்தது. அவன் முகத்தில், அவன் கைகளில், அவன் உள்ளத்தில், படிந்திருந்த ரத்தத்தைத் துடைக்கும் நிலையில் ரணசூர் இல்லை.
தனது சகோதரனைப் போன்றவனின் உடலை உறுதியாய் பிடித்திருந்தவனால், வீரின் மரணத்தை ஏற்க முடியவில்லை. உண்மையை ஏற்க மறுத்தபடி அவன் தோழனைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். ரணசூரன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அவன் கால்கள் நடுங்கின. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் அவன் நடந்தான்.
ராணா கோட்டையை நோக்கி. நாடெல்லாம் சுற்றிவிட்டு வீடு திரும்பும் பறவையைப் போல் தன்னிடம் மீதமிருந்த கடைசி நிழலுக்கு நண்பனின் உடலோடு திரும்பிக் கொண்டிருந்தான்.
கோட்டைக் கதவுகளுக்கு அருகில் வந்தபோது, ரணசூரனின் மூச்சே நின்றுவிட்டது. கோட்டை எரிந்துகொண்டிருந்தது. அக்கினி மதில் சுவர்களை எரித்துக் கொண்டிருந்தது. புகை வானத்தை நோக்கி சுருண்டு எழுந்தது.
காற்றில் இரத்தமும் சாம்பலும் கலந்து ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. எங்கும் உடல்கள். அவன் பயிற்சி அளித்த காவலர்கள், அவன் சிறுவயதில் பார்த்த அமைச்சர்கள், பண்டிகைகளில் அவனை ஆசீர்வதித்த பெண்கள், அரண்மனையில் ஓடியாடிய குழந்தைகள்.
ஒவ்வொரு முகமும் அவனுக்குத் தெரிந்த முகம். அவர்கள் இப்போது இல்லை என்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ரணசூர் தடுமாறியபடி முன்னேறினான், வீரை இன்னும் இறுக்கமாகக் கைகளில் பிடித்தபடி நடந்தான்.
ரணசூரனின் உதடுகளோ, “தவறிழைத்துவிட்டேன்… வீர்” என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உச்சரித்தபடி இருந்தது. அவனின் கண்கள் விழுந்த வீரர்களை, உடைந்த கேடயங்களை, நொறுங்கிய அம்புகளை பார்த்தபடி, அதனை தாண்டி நடந்தான்.
ஒருகாலத்தில் மகிழ்ச்சியில் இரவெல்லாம் கொண்டாடும் கோட்டை, இப்போது அழுக கூட ஆள் இல்லாமல் ரத்தவெள்ளத்தில் மூழ்கி இருந்தது.
அரண்மனை கதவுகள் பாதியாக உடைந்து தொங்கிக் கொண்டிருந்தன. ரணசூர் அவற்றைத் தன் கால்களால் தள்ளி உள்ளே நுழைந்தான். அங்கு அழிவு இன்னும் கொடூரமாக இருந்தது. பளிங்குக் கம்பங்கள் பிளந்திருந்தன. இரத்தம் தரையில் கரும்பாயாக ஓடியது. அப்போது ரணசூரனின் கண்கள் அவளைப் பார்த்தன.
யசோதரா அரண்மனையின் மத்தியில் விழுந்த கிடந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவள் உடைகள் கிழிந்திருந்தன, உடல் காயங்களால் நிறைந்திருந்தது, மூச்சு மிக மெலிந்து வந்தது. விழாவில் சொருகி இருந்த வாளை உருவ முயன்று, வலியில் முனங்கிக் கொண்டிருந்தாள்.
அரவம் கேட்டு நிமிர்ந்தவள், ரணசூரின் கரங்களில் வீரின் உடலைக் கண்டவுடன், ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்து, “பய்யா…இதற்காகத் தான் என் உயிர் போகாமல் காத்துக்கொண்டிருந்தது போல…” என்றவளின் அருகில் ரணசூர் முழங்காலில் விழுந்தான்.
இத்தனை நேரம் வரண்டிருந்த கண்ணீர் அவன் கண்களில் வழிய, “யசோ…வீர்..அவனை…என்னால்…காப்பாற்ற முடியவில்லை…அனைத்தும் என்னால்தான்… தவறிழைத்துவிட்டேன்…” என்றவனின் கன்னத்தை தனது நடுங்கும் விரல்களால் தொட்ட யசோதரா, “இங்கிருக்கும் அனைவரை விட வழியும் வேதனையும் உனக்கல்லவா அண்ணா அதிகம்!. அவன் உன்னை விட்டு போய்விட்டான், நம் மக்கள், நமது பெற்றோர், இந்த ராஜ்யம் அனைத்தும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறாய். நானும்… ” என்றவளின் கண்கள் கலங்கியது.
“மன்னித்து விடு அண்ணா… உனக்கு நல்ல தங்கையாக நான் நடந்து கொள்ளவில்லை. ஆனால் உன்னை போன்ற சிறந்த அண்ணன், சிறந்த நண்பன் கிடைப்பது அரிது. முடிந்தால் என்னை மன்னித்து விடு” என்றவள் அவனது கைகளை எடுத்து தனது தலையில் வைத்து கொண்டாள்.
அவள் குரல் மங்கி கொண்டிருந்தது, ஆனால் அவள் கண்களில் அன்பும் வலியும் நிரம்பியிருக்க, “சூரா……சுலைக்கா தன் உயிரை விடும் நிமிடம் வரை….உனக்காக இந்த மண்ணை காக்க போராடினாள்” என்ற வார்த்தைகளில் ரணசூரின் மூச்சு தடுக்கப்பட்டது.
அதை கேட்டவனின் உயிர் துடிக்க, “அவள்….சுலைக்கா எங்கே?” என்றதும் யசோதராவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.
அதில் உண்மையை உணர்ந்து கொண்ட ரணசூரனிடம், “என்னை… காப்பாற்ற… அவள் போராடி, உன் நினைவிலே உயிர் நீத்தாள்…” என்ற சொல்லில் அவனின் உள்ளம் நொறுங்கியது.
மேலும் தொடர்ந்த யசோதரா, அவளின் கடைசி நிமிட வலிமையை கொண்டு அவன் கைகளைப் பற்றியவள், “எனக்கு நேரம் இல்லை அண்ணா..மெஹ்ருன்னிசா…முகலாயர்களிடம்.. சிறைப்பட்டிருக்கிறாள்…போ… அவளை காப்பாற்று…அரவள்ளி மீளும்…ஜெய் ராஜ்புத்தனா..” என்றவளின் குரல் உடைந்து, அவள் கை அவனிடமிருந்து நழுவி விழ, தனது தலையை தமையனின் தோளில் சாய்த்தாள்.
அவ்வாறே, அவனுடைய சகோதரி, அவனுடைய தோழி, அவனுடைய சிஷ்யை அவனது கரங்களில் இறந்தாள்.
ரணசூர் கத்தவில்லை. அவன் அழவில்லை, அமைதியாக நின்றான். மனம் மரத்துப்போனது. வீரையும் யசோதராவையும் மெதுவாக தரையில் படுக்க வைத்துவிட்டு, ரணசூர் எழுந்தான். மனதின் வெறுமையோடு, உள் முற்றத்தை நோக்கி நடந்தவன் கண்களில் அவள் விழுந்தாள்.
சுலைக்கா….
மடிந்த முகலாய காவலர்களின் நடுவே, ஒரு உடைந்த கத்தியைப் பிடித்தபடி. அவள் முகம் அமைதியாக இருந்தது. ரணசூர் அவளருகே மண்டியிட்டான். அவள் கன்னத்தை மெல்ல வருடியவன், “அடுத்த பிறவி ஒன்று இருந்தால்….உனது காதலை யாசிக்க விரும்புகிறேன், மேரி ராணிசாஹிபா…முஜே மாப் கர்தோ(என்னை மன்னித்து விடு)” என்றவன் தனது காயங்களில் இருந்து சொட்டிய இரத்தத்தை விரல்களில் எடுத்தவன், நடுங்கும் கைகளால் அவள் நெற்றியில் செந்தூரம் வைத்தான்.
அவள் காதலுக்கான இறுதி மரியாதை. ஒரு இறுதி விடைபெறுதல்.
ரணசூர் எழுந்தான். எரிந்துகொண்டிருந்த கோட்டையைப் பார்த்தான். அவன் இராச்சியம்,
அவன் உலகம் சாம்பலாகி கிடந்தது. அவன் நேசித்தவர்கள் எல்லோரின் உடல்களையும் பார்த்தான்.
பிறகு, அவன் முன்னே இருக்கும் பாதையைப் பார்த்தான். ஒரு முடிவுடன் கோட்டையிலிருந்து வெளியேறியவனின் கைகளில் வாள் ஏந்தியபடி, கண்களில் புதிய தீயுடன் வனரக்ஷா ஆரவள்ளியின் மத்திய காட்டுப்பகுதியை நோக்கி நடந்தான்.
ரணசூரனின் விழிகளில் துயரம் இல்லை. அவன் மனதில் பயம் இல்லை. அவனிடம் இருந்த ஒரே நோக்கம், ‘மெஹ்ருன்னிசா’.
வனரக்ஷா காட்டை பார்த்தவன் உதடுகள், “மெஹர்.. மேரி சோட்டி…. நான் வந்து கொண்டிருக்கிறேன்” என்றபடி இருளுக்குள் நடந்தான்.
வனரக்ஷா காடு அமைதியாக இருந்தது. பழமையான காவலர்களைப் போல மரங்கள் நிமிர்ந்து நின்றன. அவற்றின் சுருண்ட கிளைகள் வானத்தை தொட முயன்று கொண்டிருந்தது. காற்றில் ஈரமான மண்ணின் மணம் கலந்திருந்தது. காட்டிற்குள் அபாயத்தின் வாடை கலந்திருந்தது. அந்த இரவு விலங்குகள் உலா வர, மரணமே காட்டில் நடமாடுவதைப் போல் இருந்தது.
காட்டின் மையத்தில், முகலாய ஆளுநரின் தற்காலிக போர் முகாம் தீப்பந்தங்களால் மங்கலாக ஒளிர்ந்தது. மெஹ்ருன்னிசா ஒரு மரத்தூணில் கட்டப்பட்டிருந்தாள். அவளது மூச்சு மெலிந்தும், உடைகள் கிழிந்தும் இருந்தது.
ஆளுநர் அவள் முன் நடந்து கொண்டிருந்தவன், மெல்ல அவள் உயரத்துக்கு குனிந்து ஒருவித குரூரப் புன்னகையுடன், “ரணசூர் நிச்சயம் உன்னை மீட்க வருவான். அவன் என் வசம் மண்டியிட்டால்…அரவள்ளியும் மண்டியிடும்” என்ற வார்த்தைகளில் மெஹ்ருன்னிசா கண்களை மூடிக் கொண்டாள்.
தொலைவில் கிளைகள் முறியும் சத்தம் கேட்டு கண்திறந்தவள் கண்களில், சாம்பலால், இரத்தத்தால், துயரத்தால் மூழ்கிய ஒரு உருவம் அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை பார்த்தபடி அதிர்ந்து நின்றாள்.
ரணசூர் அழிவிலிருந்து மீட்கப்பட்ட மனிதனைப் போல, கண்களில் வெறுமையும், அவனின் கவசம் பிளந்து, கைகளில் இன்னும் வீரின் இரத்தக்கரை படிந்திருக்க ஆளுநர் முன் வந்து நின்றான்.
அங்கே மெஹ்ருன்னிசாவைக் கண்டவுடன், போன உயிர் மெல்ல துளிர்த்தது போல உணர்ந்தவன், “மெஹ்ருன்…” என்றபடி அவன் அவளருகே மண்டியிட்டு விழுந்தான். மெல்ல
அவள் முகத்தைத் தொடுவதற்கு உயர்ந்த அவன் கைகள் நடுங்கின.
“எல்லாவற்றையும் இழந்துட்டேன்…வீர்… யசோ… சுலைக்கா…உன்னையும் என்னால் இழக்க முடியாது” என்றவன் தன ஆறடிக்கும் நிமிர்ந்து , ஆளுநர் முன் வந்து நின்றான்.
ஆளுநர் திருப்தியுடன் சிரித்தவன், “நல்லது. அப்படியென்றால் ராணாவையும் அதிவாரையும் முகலாயர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு, நீ எங்களிடம் சரணடைந்து விடு” என்றதை கேட்ட ரணசூர் வாதிடவில்லை. அவன் ஆளுநரை பார்க்கவும் இல்லை. அவன் பார்வை முழுதும் மெஹ்ருன்னிசா மட்டுமே நிறைந்திருந்தாள்.
ரணசூரனின் நிலையை கண்ட மெஹ்ருன்னிசாவின் இதயம் நொறுங்கியது. அவனுக்காக. அவளை காப்பாற்ற அவன் எந்த எல்லைக்கும் போக தயார். அதை அவளால் அனுமதிக்க முடியாது. அவளது தாதாஷாவை அந்த நிலையில் பார்க்க அவள் விரும்பவில்லை.
மெஹ்ருன்னிசா மெல்ல எழுந்து நின்றாள். வலியைப் பொருட்படுத்தாமல் ரணசூரனின் அருகே வந்தவள், “எனது தாதாஷா கம்பீரமானவர். எத்தனை பெரிய ஆபத்திலும் முகத்தில் இருக்கும் சிரிப்பை தொலைக்காதவர். உங்களை… இல்லை… எனக்காக இதை செய்யத்துணியாதீர்கள் தாதாஷா” என்று கண்களில் நீர் வடிய சொன்ன அந்த சிறுமியை தொட முயன்றான்.
ரணசூரனின் குரல் உடைந்து, “மெஹர்…உன்னையும் என்னால் இழக்க முடியாது. உனக்காக நான் சரணடையவும் தயங்க மாட்டேன். இனி இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. நீ உயிருடன் இருந்தாலே போதும்” என்றவனின் கன்னத்தைத் தொட்ட மெஹருன்னிஷாவின் விரல்கள் நடுங்கின.
அடுத்த நிமிடம் ஹூன் வம்சத்தின் வாரிசாக நிமிர்ந்து நின்றவள், “இன்று நீங்கள் மண்டியிட்டால்…ஹூன் வம்சம் என்னை இகழாத? ஹூன் வம்சத்தின் வாரிசுக்காக அரவள்ளி மண்டியிடுவது முறையாகுமா தாதாஷா?” என்றபடி கை அருகில் விழுந்திருந்த காவலனின் வாளை கைகளில் ஏந்தி நின்றாள்.
அதை கண்ட ஆளுநரின் கண்கள் பெரிதாக, “அவளை தடுத்து நிறுத்துங்கள்!” என்று சத்தமிட, அதுவரை சின்னவளின் கண்களை பார்த்து நின்ற ரணசூரன் தடுக்க முன் பாயும் முன், வேகமாக அவள் வாளை உயர்த்தி இருந்தாள்.
காட்டு மரங்களின் நடுவே காற்றின் அலறல் சத்தம் அரவள்ளியை பயங்கரமாக காட்டியது. அவள் வாளை தன் மார்பை நோக்கி பாய்ச்சியவளின் கண்கள் அக்கினிப் பிழம்பாக ஜொலித்தபடி, “மிர்சா குத்புத்தீன்…மறுபிறவி என்று ஒன்று இருந்தால்… உன் முடிவு எனது இளவரசர்களின் கையில் தான். அரவள்ளியின் பெண்களைத் தொட்டதற்காக…உன் வம்சம் எரியும். அந்த நாள் உன் வீழ்ச்சியைப் பார்க்க நான் அங்கு இருப்பேன். எனது தமக்கைகளின் வீரத்தை கோட்டையில் பார்த்திருப்பாய். எனது வீரத்தை இந்த வனரக்ஷா காடு அறியும்” என்றபடி மார்பில் ரத்தம் வடிய தடுமாறியவளை தனது கைகளில் தாங்கி இருந்தான் ரணசூரன்.
மகளாய் வளர்த்த செல்ல தங்கையின் நிலை கண்டு துடிதுடித்த ரணசூரன், “சோட்டி..” என்றபடி அவளை இறுக்கி அணைத்திருந்தவனிடம், “எனது தாதாஷா யாருக்காகவும் மண்டியிட கூடாது… அது அவரது சோட்டிக்காகவே இருந்தாலும்….. காத்திருப்பேன் தாதா…ஷா” என்ற வார்த்தையோடு அவளது உயிரும் உலகத்தை விட்டு பிரிந்திருந்தது.
மெஹருன்னிஷாவின் உடலை பார்த்தபடி அதிர்ந்திருந்த ரணசூரன் கத்தவில்லை, அழவில்லை. அவளைத் தழுவியபடி அமைதியாக இருந்தான். அவன் முகத்தின் வெறுமையை கண்ட ஆளுநர் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தான்.
மிர்சா குத்புத்தீனின் கண்களில் பயம் நிறைந்திருந்தது. ஏனெனில் ரணசூரின் கண்களில் ஏதோ ஒருவித மாற்றத்தை பார்த்திருந்தான்.
ரணசூரன் மெஹ்ருன்னிசாவை மெதுவாக தரையில் படுக்க வைத்தான். பிறகு எழுந்தவன்,
அக்கினியில் மறுபிறவி எடுத்த மனிதனைப் போல, ஒரு வார்த்தையும் பேசாமல், வனரக்ஷா காட்டின் ஆழத்திற்குள் நடந்தான்.
அந்த நாள் வரலாற்றின் முக்கிய இரவு, அரவள்ளியின் தூண்களான இரு பெரும் ராஜ்ஜியங்கள் முகலாயர்களால் வஞ்சிக்கப்பட்ட நாள். அரவள்ளி என்னும் பல்லாயிரம் வருட பழமையான பொக்கிஷம் தனது குலத்தை இழந்த நாள். அதை எல்லாம் விட முக்கியமானது, யுகங்களை கடந்து ஒலிக்க போகும் சபதத்தின் பிறப்பிடம் அந்த இரவு.
ரணசூரன் வந்துவிட்டான்…..

