Loading

சபதம் -32

 

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். (குறள் – 742) 

 

பொருள்:

 

நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே பாதுகாப்பான நல்ல அரண்!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

முதல் நாளின் விடியல் செந்நிறத்தோடு உதித்தது, வரவிருக்கும் இரத்தப் பெருக்கை உலகத்துக்கே எச்சரிப்பது போல. சுவர்ணக் காடியின் பள்ளத்தாக்கின் அடியில் இருந்து முகலாய பீரங்கிகள் முழங்கின. அரவள்ளிக் குன்றுகள் அதிர்ந்தன.

போர்க்களத்தைப் புகை மூடியது. வானமே இருண்டிருந்தது. ஆனால் அரவள்ளி படைகள் பின்வாங்கவில்லை. அவர்கள் சீற்றமுள்ள சிறுத்தைகளைப் போல எதிரிகளை நோக்கிப் பாய்ந்தனர்.

வேகத்துடன், கணிக்க முடியாத தந்திரத்துடன், மரணத்தைப் போன்ற துல்லியத்துடன்

காட்டின் விளிம்புகளில், அடர்ந்த மரங்களின் நிழலில் மறைந்திருந்த ராணா வில்லாளர்கள் அம்புகளை மலைப்போல பொழிந்தனர்.

ஆவிகளைப் போல ஒவ்வொரு முறையும் தோன்றி மறையும் போது தங்களது இடத்தை மாற்றியிருந்தனர். இதனைக் கொரில்லா தாக்குதல் என்பர்; நிழல்களில் மறைந்திருந்து தாக்குவது. எங்கிருந்து தாக்கப்படுகிறோம் என்பதை எதிரிகளால் கணிக்க முடியாது.

முகல் படை முன்னேறிய ஒவ்வொரு முறையும், நிழலிலிருந்து அம்புகள் மழையாக விழுந்து
கைக்கவசம் உயர்த்துவதற்கும் முன் வீரர்களை வீழ்த்தின.

 

முகலாய காலாட்படை முன்னேற முயன்றது ஆனால் குறுகிய மலைவழி அவர்களுக்கு எதிரியாகியது. அவர்களின் பெரும் எண்ணிக்கை பலமாக இல்லாமல், சுமையாக மாறியது.

மாலைக்குள் பள்ளத்தாக்கின் தரை இரு தரப்பினரின் உடல்களால் நிரம்பியது. வெற்றியை யாராலும் கணிக்க முடியாத நிலை.

இரண்டாம் நாள் முகலாயர்களின் யுத்தம் யானைகளின் இடிமுழக்கத்துடன் தொடங்கியது. எஃகுக் கவசம் அணிந்த, இரும்புக்கத்திகள் பொருத்தப்பட்ட தந்தங்களுடன் அந்த மாபெரும் மிருகங்கள் ராஜ்புத் குதிரைப்படையை நோக்கிப் பாய்ந்தன.

பூமியே அதிர்ந்தது. ஆனால் ராஜ்புத்தர்கள் தயார் நிலையில் இருந்தனர். ராணா மற்றும் அதிவாரின் ஒவ்வொரு யுத்தக் குதிரையும் ஒரு போலித் தும்பிக்கையை அணிந்திருந்தது.
கயிறால் கட்டப்பட்ட நீண்ட மரக்கட்டை, துணியால் மூடப்பட்டிருந்தது.

 

யானைகள் அவற்றை அணுகியபோது, அவை தயங்கின. அந்த குதிரைகள் அவர்களுக்கு யானைக் கன்றுகளைப் போலத் தோன்றின. யானைகள் தங்கள் குட்டிகளைத் தாக்குவதில்லை.

 

குழப்பத்தில், முகல் யானைகள் தயங்க, பின்பு முன்னேற முடியாமல், அதனை முன்னேற்ற உந்திய பாகன் மீது கோபம் கொண்டு தங்கள் வீரர்களின் பக்கம் திரும்பியது. முகலாயர்களுக்கு அது பேரழிவாக முடிந்தது. அவர்களின் மிகப் பெரிய பலமே பயனற்றதாகிவிட்டது.

 

ராஜ்புத் குதிரைப்படை முன்னேறி, யானையின் மீது பாய, அதை குழப்பத்துடன் உணர்ந்த யானைகள் தடுமாறி பின் நகர, முகலாய வீரர்களால் அந்த கரிய குன்றுகள் வீழ்த்தப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

முகலாய தளபதிகளைத் தங்கள் யானைகளைத் திரும்பப் பெறத் தள்ளியது. ஆனால் அந்த வெற்றிக்கும் விலை இருந்தது. முகலாயர்கள் தங்கள் பீரங்கியின் நீண்ட குழாய் கொண்ட எந்திரம் மற்றும் ஜம்புரக் (ஒட்டகங்களில்பொருத்தப்பட்ட சுழல் பீரங்கிகள்) இவற்றை வெளிப்படுத்தினர்.

புகை வானத்தை நிரப்பியது. கத்தியும் கவசமும் ஏந்திய காலாட்படை வீரர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் சிதறினர். ராஜ்புத்தர்கள் வீரத்துடன் போராடினர், ஆனால் துப்பாக்கி மழை வீரத்தை மதிப்பதில்லையே. இரவு வந்தபோது இரு தரப்பிலும் கடுமையான உயிரழப்புகள் நேர்ந்திருந்தன.

 

மூன்றாம் நாள் போர்க்களத்தில் இரும்பின் வாசனையும் புகையின் நாற்றமும் நிரம்பியிருந்தது. முகலாய பீரங்கிகள் இடைவிடாமல் முழங்கின, ஆனால் அரவள்ளி வீரர்கள் உடையவில்லை. இறுதி மூச்சிறுக்கும் வரை அரவள்ளியை காக்க துடிப்புடன் போராடினர்.

 

ராணாவின் யானைகள் மீண்டும் மீண்டும் பாய்ந்தன. அதிவாரின் குதிரைப்படை முகலாய வரிசைகளை கிழித்தது. காட்டுவில்லாளர்கள் நிழலிலிருந்து தாக்கினர்.

 

முகலாய துப்பாக்கி வீரர்கள் கொலைவெறியுடன் சுட்டுத்தள்ளினர். ஈட்டி வீரர்கள் ராஜ்புத் ஈட்டி வீரர்களுடன் மோதினர். ஒட்டகப் பீரங்கிகள் பள்ளத்தாக்கை அதிர வைத்தன.

 

சூரிய உதயத்திலிருந்து மறைவு வரை போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இருபக்கமும் முன்னேற்றமில்லை. மாலை நேரத்தில் காயமடைந்தோரின் அலறல்கள் மட்டுமே கேட்டது.

 

முகல் ஆளுநர் மிர்சா குத்பு ஒரு மலைச்சரிவின் மேல் நின்று போர்க்களத்தை நோக்கினார்.
அவரின் கவசம் உடைந்திருந்தது. தலையில் இருந்த முகலாய முண்டாசில் தூசியும் ரத்தமும் கலந்து படிந்திருந்தது.

அரவள்ளி படைகள் வீரத்துடன் சோர்ந்திருந்தாலும், உடையாமல் நிற்கும் காட்சியை பார்த்திருந்தார்.

ஆளுநர் மிர்சா ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டபடி, “மூன்று நாட்கள்… இன்னும் அரவள்ளி விழவில்லை.” என்றவன் கண்களில் கணக்கிடும் ஒளி மின்னியது.

 

அதேபோல், அரவள்ளி இளவரசர்கள் இருவரும் சோர்வுடன் இருந்தாலும் உறுதியுடன் நின்றனர். அவர்களின் படைகள் சிதைந்திருந்தாலும், அவர்களின் மனம் உடையவில்லை.

 

ஆனால் அவர்கள் ஒரு உண்மையை உணர்ந்திருந்தனர். போர் தொடர்ந்தால் இரு தரப்பும் அழிந்துவிடும் என்று.

 

மலைகளின் பின்னால் சூரியன் மறையும் வேளையில், முகல் பக்கம் வெள்ளைக் கொடி உயர்ந்தது. சில நொடிகளில் அதேபோல் அரவள்ளி படைகளும் வெள்ளைக் கொடியை உயர்த்தின. பள்ளத்தாக்கில் அமைதி நிலவியது.

 

போர்த் தாளங்கள் நின்றன. அம்புகள் பறப்பது நிறுத்தப்பட்டது. பீரங்கிகள் மௌனமாயின.

இரு தரப்பும் அழிவின் விளிம்பிலிருந்து பின்வாங்கின. முகலாய பாசறையில் இருந்து ஒரு தூதர் குதிரையில் அரவள்ளிப் பாசறையை அடைந்து, “ஆளுநர் சமாதானச் சந்திப்பை விரும்புகிறார். சுவர்ணக் காடியில். விடியற்காலையில்.”

 

இரு இளவரசர்களும் கனமான பார்வையைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்களின் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் படைகள் உடைந்திருந்தன. அவர்களின் நிலம் இரத்தத்தில் நனைந்திருந்தது.

 

ரணசூர், “சமாதான பேச்சுக்கு நாங்களும் தயார், நாளை எங்கள் அரசர் போர்க்களத்துக்கு வருகை தந்ததும், சுவர்ணக் காடியில் வைத்து பேசலாம். அரவள்ளிக்காக” என்று பதிலுரைத்தான்.

ஆனால் அவன் அறியவில்லை…அந்த சமாதானச் சந்திப்பே துரோகத்தின் தொடக்கம் என்பதை.

 

சுவர்ணக் காடி மூன்று நாட்களுக்கு பிறகு முதன்முறையாக அமைதியாக இருந்தது. பீரங்கிகள் இல்லை. அம்புகள் இல்லை. போர் கோஷங்கள் இல்லை.

 

எரிந்துபோன பள்ளத்தாக்கில் வீசும் காற்றின் அமானுஷ்ய சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. புகை, இரத்தம், சோர்வு ஆகியவற்றின் நாற்றத்தை சுமந்து வீசிக்கொண்டிருந்தது.

 

இரு படைகளும் பின்வாங்கியிருந்தன. ஆனால் விலகவில்லை. அங்கே நிலவியிருந்த அமைதி அரவள்ளியின் கழுத்தில் வைக்கப்பட்ட கூர்மையான கத்தியைப் போல் இறுக்கமாக இருந்தது.

 

தற்காலிக யுத்த முகாமின் உள்ளே, ராணா மற்றும் அதிவார் மன்னர்கள் கவசமின்றி அமர்ந்திருந்தனர். அவர்களின் முகங்களில் சோர்வு ஆழமாகப் பதிந்திருந்தது. மக்கள் இறப்பதைப் பார்த்து கண்கள் வெறுமையாகிவிட்டன.

 

மேசையின் மேல் வரைபடங்கள் சிதறிக் கிடந்தன. அவர்களின் படைகள் விழுந்த இடங்களை மைத் துளிகள் குறித்திருந்தன.

 

ராணா அரசர், “மூன்று நாட்கள்…இன்னும் அரவள்ளி வீரத்துடன் நிற்கிறது” என்றதும் அதிவார் மன்னர், “அடுத்த மூன்று நாட்கள்… அரவள்ளி கைப்பற்றப்படும் அபாயம் உள்ளது” என்றவரின் உள்ளம் உண்மையை அறிந்திருந்தது.

 

அவர்களின் படைகள் வீரமானவை. அவர்களின் போர்வீரர்கள் கோபமானவர்கள். ஆனால் வீரத்தால் குண்டுகளை நிறுத்த முடியாது. கோபத்தால் பீரங்கிகளை அடக்க முடியாது.

அவர்களுக்கு நேரம் தேவை. உணவு தேவை. ஒரு அதிசயம் தேவை. அல்லது ஒரு உடன்படிக்கை தேவை. அதனை அரசனாக நிறைவேற்ற வேண்டியது அவர்களின் கடமை.

 

வீர் கூடாரத்தின் வெளியே நின்று, போருக்குச் செல்லவில்லை என்றாலும் தனது கவசத்தின் பட்டைகளை இறுக்கிக் கொண்டிருந்தான். அவன் கைகள் சிறிது நடுங்கின, ஆனால் அதை அவன் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டான்.

 

ரணசூர் கன்னத்தில் இருந்த இரத்தத்தை துடைத்துக்கொண்டு தனது நண்பனை அணுகினான்.

 

ரணசூர், “சமாதானச் சந்திப்புக்கு கவசம் அணிவது முறையல்ல இளவரசே” என்ற வார்த்தை வீரின் இதயத்தை அறுத்தது, தன்னை மீறிய தருணங்களை தவிர்த்து ரணசூரன் அவனிடம் மூன்றாம் மனிதனை போலவே நடந்து கொண்டான். தனது தலையை உயர்த்தாமல், “சமாதானமே மிக ஆபத்தான போர்க்களம். எச்சரிக்கையுடன் இருக்க முயல்கிறேன்” என்றதும் ரணசூரன் சிரித்தான்.

ஆனால் அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை, வேறு எதுவோ ஒன்று இருக்க, ரணசூரன், “முகலாயர்களின் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை பொய் என்று நினைக்கிறாயா?” என்றதும் ரணசூர் இறுகிய முகத்துடன், “முகல்கள் ஒருபோதும் இரண்டாம் திட்டமின்றி வரமாட்டார்கள்” என்றான்.

 

அவர்கள் இடையே சில நொடிகள் அமைதி நிலவ, தூரத்தில் கேட்கும் சலசலப்பு அந்த அமைதியை நிறைத்தது.

கவசங்களைச் சீர்செய்யும் சத்தம், வாள்களைக் கூர்மைப்படுத்தும் சத்தம், காயமடைந்த குதிரைகளை ஆற்றும் சத்தம். போர் முடிவடையவில்லை. அது ஒரு இடைவேளையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவே இருவருக்கும் தோன்றியது.

 

பாசறையில் முகாமிட்டுள்ள ராணா வில்லாளர்கள் தங்கள் வில்லின் நாண்களைச் சோதித்து கொண்டிருந்தனர். அதிவார் குதிரைப்படை வீரர்கள் குதிரைகளுக்கு உணவளித்து, அவற்றின் குதிரைமயிரில் வேண்டுதலை மெல்ல முணுமுணுத்தனர்.

 

யானை பராமரிப்பாளர்கள் அவற்றிற்கு நீரும் மூலிகைகளும் கொடுத்து சமாதானப்படுத்தினர். காலாட்படை வீரர்கள் தங்கள் காயங்களுக்கு மருந்திட்டு துணியைச் சுற்றி கொண்டிருந்தனர்.

 

யாரும் சமாதானச் சந்திப்பை கொண்டாடவில்லை. அனைவரும் எதையோ எதிர்பார்த்து காத்திருந்தனர்.

 

பள்ளத்தாக்கின் மறுபுறம், முகலாய பாசறை வேறுவிதமாக தயாராகிக்கொண்டிருந்தது.

கூடாரங்கள் மாற்றப்பட்டன. கொடிகள் பொலிவூட்டப்பட்டன. கவசங்கள் சுத்தம் செய்யப்பட்டன. ஆனால் சமாதானத்திற்காக அல்ல.

 

ஆளுநர் மிர்சா குத்புத்தீன் தனது கூடார வாயிலின் முன் நின்று தன் வாளில் இருந்த மாணிக்கக் கைப்பிடியை சரிசெய்தார். அவரின் தளபதிகள் அனைவரும் அந்த கூடாரத்தில் திரண்டிருந்தனர்.

 

தளபதி, “ஹுஸூர், உடன்படிக்கை ஆவணங்களைத் தயார் செய்யவா?” என்றதும் குத்புத்தீன் மெல்ல சிரித்தார்.

 

“ஆம், தயார் செய்யத்தான் வேண்டும். பீரங்கிகளை தயாரிக்கவும்” என்றதும் தளபதி தயங்கி, “ராஜ்புத்திரர்களிடம் இருந்து தாக்குதலை எதிர்பார்க்கிறீர்களா?” என்றதும்

குத்புத்தீனின் சிரிப்பு கூர்மையடைந்தது.

 

மிர்சா, “இல்லை. அவர்களிடம் இருந்து நான் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறேன். அதை அவர்கள் மறுத்தால்…” என்றவாறு பள்ளத்தாக்கை நோக்கி திரும்பியவரின் கண்கள் அரவள்ளி படைகள் ஓய்வெடுத்து கொண்டிருந்த இடத்தை பார்த்தபடி, “இந்தப் போரை ஒரே அடியில் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறேன்.”

 

சுவர்ணக் காடியின் நடுப்பகுதியில், ஒரு பெரிய திறந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது. தூசியின் மீது நீண்ட பாய் விரிக்கப்பட்டது இரு மன்னர்களுக்கான நாற்காலிகள், ஆளுநருக்கான ஒன்று, உடன்படிக்கைச் சுருட்டுகளுக்கான மேசை,இரு தரப்பினரின் காவலர்கள் சம தூரத்தில் நிறுத்தப்பட்டனர்.

 

காற்றில் மங்கலான துப்பாக்கி நாற்றம் இருந்தது. ராணசூர் அதை உணர்ந்தான்.
வீரும் உணர்ந்தான்.ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. அரவள்ளிக்கு இந்தச் சமாதானச் சந்திப்பு தேவைப்பட்டது.

 

மலைகள் பின்னால் சூரியன் மறையும் வேளையில் மன்னர்கள் குதிரைகளில் ஏறினர்.
வீரும் ராணசூரும் அவர்களை அமைதியாகவும் விழிப்புடனுடன் பின்தொடர்ந்தனர்.

போர்வீரர்கள் அந்த அணிவகுப்பை பார்த்தனர். நம்பிக்கையும் பயமும் கலந்த கண்களுடன்.

 

யசோதரா கோட்டை மதில் சுவரின் விளிம்பில் நின்று கைகளை காட்டியபடி அந்த அணிவகுப்பை பார்த்திருந்தாள். இதயம் பயத்தால் துடித்தபடி மௌனமாக பிரார்த்தித்து நின்றாள்.

 

பள்ளத்தாக்கின் மறுபுறம் முகலாய ஆளுநர் தன் வெள்ளைக் குதிரையில் ஏறினார். ஏற்கனவே முடிவை அறிந்தது போல சிரித்தபடி சமாதானச் சந்திப்புக்கான இடம் நோக்கி புறப்பட்டார்.

 

விதி சுவர்ணக் காடியிலும் ராணா கோட்டையிலும் அவர்களுக்காக காத்திருந்தது.

 

ரணசூரன் வந்துவிட்டான்…….

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்