
சபதம் – 27
“பகைவர் சூழ்ந்த மதிலகத்து
பசியால் மடியும் குடியிருப்பு,
கைவாள் தாங்கிய வீரர்
கணையுட் காயம் தாங்கினும்,
நீரின்றி நின்ற கிணறுபோல்
நிறைந்த துன்பம் எய்தி,
ஊரொடு உயிர் காத்தல்
அரசன் கடன் ஆகும்.”
-பரணர் (புறநானூறு 93)
பொருள்:
பகைவர்கள் கோட்டையை முற்றுகையிட்டதால், நகர மக்கள் பசியால் வாடுகிறார்கள்.
வீரர்கள் காயங்களையும் பொறுத்து நிற்கிறார்கள். நீர் இல்லாத கிணறு போல ஊர் வறண்டு துன்பத்தில் உள்ளது. இந்நிலையில், நகரையும் மக்களின் உயிரையும் காப்பது அரசனின் கடமை என்று பாடல் வலியுறுத்துகிறது.
ராணா கோட்டையின் வெளிப்புறத்தில் இருந்த கிராமம் நிலவொளியின் மங்கலான வெளிச்சத்தில் உறங்கிக் கொண்டிருந்தது. தூசி படிந்த பாதையின் இருபுறமும் குடிசைகள். கிணறுகளுக்கு அருகே கட்டப்பட்ட மாடுகள், திறந்த ஜன்னல்களில் இருந்து மெதுவாக ஒலித்த தாலாட்டு அனைத்தும் அந்த மலைக்கிராமத்தை ஓர் ஓவியம் போல காட்டிக்கொண்டிருந்தது.
அந்த நடுநிசியில் தொலைவில் ஒரு அதிர்வு. குதிரையின் மூச்சுச் சத்தம். எஃகின் மெல்லிய கீச்சு. கிராமக் காவலர்கள் இருவர் அந்த ஒளியில் எச்சரிக்கை அடைய, அதில் ஒருவன், “யார் அங்கே?” என்று உரக்க சத்தமிட்டான்.
பதில் இல்லை. இலைகள் அசைந்த சத்தம் மட்டும் கேட்டது. மெல்ல அவன் இருந்த இடத்தில் இருந்த உயரமான மூங்கில் கூரையில் ஏறிப்பார்த்தவன் நெஞ்சில் அம்பு ஒன்று காற்றில் சீரியபடி வந்து பாய்ந்திருந்தது.
எதிர்பாராத நேரத்தில் தாக்கப்பட்டாலும், உயிரைக் கைகளில் பற்றியபடி ஊரின் எச்சரிக்கை மணியை ஒலிக்கவிட்டான்.
அடுத்த நொடியில் இரவு வெடித்தது. விளக்குகள் எரிந்தன. நிழல்கள் பாய்ந்தன. அந்நிய கவசம் அணிந்த ஆட்கள் கிராமத்திற்குள் பாய்ந்தனர்.
அதில் ஒரு முகலாய சிப்பாய், “ஒவ்வொரு வீட்டையும் தேடுங்கள். நமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள். இது ராணா ராஜ்யத்தின் அரசனுக்கு முதல் எச்சரிக்கை” என்று கட்டளையிட, அந்த கிராமம் குழப்பத்தில் விழித்தது.
கதவுகள் உடைக்கப்பட்டன. பெண்கள் அலறினர். குழந்தைகள் அழுதனர். ஆண்கள் குடும்பத்தைக் காக்க முயன்றனர், ஆனால் தாக்குபவர்கள் வீரர்கள். இங்கு காவலுக்கு அரசாங்கத்தால் மாற்றப்பட்ட சில வீரர்களைத் தவிர அனைவரும் விவசாயிகள். அவர்களால் முகலாய வீரர்களின் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
அந்த இரவில் முகலாய வீரர்கள் போருக்கு வரவில்லை. அவர்கள் இந்த கிராமத்தை தாக்கி நிலங்களை எரித்து, பசுக்களை துன்புறுத்துவது ராணா ராஜ்யத்துக்கு முகலாய ஷெஹென்ஸாவால் விடப்பட்ட ஒரு எச்சரிக்கை.
சிப்பாய் ஒருவன் ஒரு குடிசையின் தானிய மூட்டையை பறித்து சென்றான். அங்கிருந்த சிறுமி தன் தாயை கட்டிக்கொண்டு பயத்தில் அலறினாள்.
மற்றொரு சிப்பாய் கிணற்றருகே இருந்த சிறுவர்களை உள்ளே போடுவது போல் பயங்கட்டியவன், “நீங்கள் ராணா ராஜ்யத்தின் பிரஜைகள் தானே? பதில் சொல்லுங்கள்!” என்றதும்
சிறுவர்கள் நடுங்கிக் கொண்டு தலை அசைத்தனர்.
சிப்பாய் சிரித்தபடி, “அப்படியானால், உங்கள் இளவரசனிடம் சொல்லுங்கள். அரவள்ளி காடு இப்போது எங்கள் வசம் உள்ளது என்று” என்றவன் சிறுவர்களை தரையில் தள்ளிவிட்டு, தன் கூட்டாளியிடம் இருந்து ஒரு தீப்பந்தத்தை வைக்கோல் மேட்டில் வீசினான்.
அக்கினி வானத்தை நோக்கி பாய்ந்தது. கிராமம் பதற்றத்தில் மூழ்கியது. அதனை கண்ட கிராமத் தலைவன், “ஓடுங்கள்! கோட்டையை நோக்கி ஓடுங்கள். இளவரசனிடம் சொல்லுங்கள்!” என்றவரின் இறுதி வார்த்தை முகலாய சிப்பாயின் கையில் இருந்த கத்தியில் இரத்தமாய் வடிந்திருந்தது.
கிராம மக்கள் அனைவரும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, எதை முடிந்ததோ அதை எடுத்துக் கொண்டு ராணா கோட்டையை நோக்கி ஓடினர். அவர்களின் பின்னால் கிராமத்தின் குடிசைகள் எரிந்து கொண்டிருந்தது.
ராணா அரண்மனையின் கோட்டை கதவுகள் அதிர்ந்தன. கோட்டை வாசலை காவல் காத்திருந்தவர்கள் திடுக்கிட்டு, கோட்டை மேற்சுவரில் ஏறிப்பார்க்க, கூட்டம் கூட்டமாய் மக்கள் அலறலுடன் கோட்டையை நோக்கி ஓடி வந்தவண்ணம் இருந்தனர்.
கோட்டை அகழிக்கு அந்தப்புரம் நின்றிருந்த வீரன் ஒருவன், ராணா ராஜ்யத்தின் முத்திரையை காட்ட, கோட்டை காவலன், “யார் அங்கே?” என்றதும் வீரன் நடந்ததை சொல்லி இளவரசரை காண வேண்டும் என்று வேண்டினான்.
அடுத்த நிமிடம் கதவுகள் திறந்தன. அகழிகள் இணைக்கப்பட்டன. இரத்தம் சொட்டியபடி அழுதுகொண்டும், நடுங்கியபடியும் கிராம மக்கள் கூட்டம் நின்றிருந்தனர். ஒரு பெண் காவலனின் காலடியில் விழுந்து, “தயவு செய்து…இளவரசரிடம்… எங்களை அழைத்துச் செல்லுங்கள்…” என்று கதற, காவலர்கள் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்து, அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.
ராணா அரண்மனையின் குதிரை லாயத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த இளவரசர் ராணசூரனின் செவிகளிலும் பெரும் கூச்சலின் சத்தம் எட்டியது.
சத்தம் வந்த திசை நோக்கி விரைந்து வந்தவர், உறைந்து நின்றார். கோட்டை வாசல் அவரது ராஜ்ய மக்களால் நிரம்பியிருந்தது. கிழிந்த கூங்கட் (முக்காடு) அணிந்த பெண்கள். இரத்தம் சொட்ட காயங்களுடன் ஆண்கள். நடப்பது புரியாமல் அன்னைமார்களை பற்றிக் கொண்டு அழுகும் குழந்தைகள். பயத்தில் நடுங்கிய மூதாட்டிகளை பார்த்தவரது இதயம் இறுகியது.
“என்ன நடந்தது? யார் இதைச் செய்தார்கள்?” என்று ஆவேசமாய் வந்து நின்ற இளவரசனை கண்டதும், தாயை கண்ட பிள்ளையை அனைவரும் ஒரே நேரத்தில் பேசினர்.
அனைவரையும் பொறுமையாக கையாண்ட ரணசூரன் முன் வந்த ஒரு ஆண் நடுங்கிய குரலில், “முகலாயர்கள் இளவரசே! காட்டிலிருந்து வந்தார்கள்…எங்கள் தானியத்தை திருடிக்கொண்டார்கள். எங்கள் குழந்தைகளை பெண்களை மிரட்டினார்கள்” என்றதும் ரணசூரின் இரத்தம் கொதித்தது.
ஒரு பெண் கட்டுப்பாடின்றி அழுதபடி, “கிராமத்தை எரித்துவிட்டு, இது ராணாவின் அழிவின் துவக்கம் என்று அச்சுறுத்திவிட்டு சென்றனர்” என்றதும் ரணசூரனின் மூச்சு தடைப்பட்டது.
“யாரையும் கைப்பற்றினார்களா?” என்றவனின் குரலில் புயலுக்கு முன் தோன்றும் அமைதி நிலவியிருந்தது.
ஒரு தாய் தன் மகளைப் பற்றிக் கொண்டு முன்வந்தாள், “அவளை இழுத்துச் சென்றார்கள்…
ஆனால் அவள் போராடி தப்பி வந்துவிட்டாள் இளவரசே. அதுமட்டுமல்ல அனைவரையும் கோட்டையை நோக்கி தப்பிக்க விட்டவர்கள், அடுத்த முறை…யாரையும் உயிரோடு விடமாட்டோம்…” என்று எச்சரித்தனர் என்றதை கேட்ட ரணசூரன் காயம் பட்டவர்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி செய்து கொடுத்து, கோட்டைக்குள் அன்றிரவு தங்கும் வசதியையும் மேற்பார்வையிட்டான்.
அதற்குள் விஷயம் அறிந்து அரசரும் வந்துவிட, மக்கள் அவரிடமும் தங்கள் நிலையை கூறி அழுது தீர்த்தனர்.
மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த தாயின் கைகளை பற்றியபடி அழுது கொண்டிருந்த சிறுமியின் முன் மண்டியிட்ட ரணசூர், ” இங்கு நீ பாதுகாப்பாக இருக்கலாம்.
யாரும் உன்னைத் தொட மாட்டார்கள். நான் உனக்கு வாக்களிக்கிறேன்” என்றவனை விரிந்த விழிகளுடன் பார்த்த சிறுமி, ” அவர்கள் மீண்டும் வருவார்களா?” என்ற குழந்தைத்தனமான கேள்வியில் ரணசூர் தொண்டைக்குழியில் எதுவோ சிக்கியது போல் இருந்தது.
“நான் உயிரோடிருக்கும் வரை அப்படி நடக்க விடமாட்டேன்” என்றவனுக்கு தெரியவில்லை அவன் இந்த வாக்கை காப்பாற்றமுடியாமல் போகும் காலம் நெருங்கி கொண்டிருப்பதை.
அவர்களின் பயம் ராணசூரின் மார்பில் பெரும் பாரத்தை ஏற்றியிருந்தது. எரியும் குடிசைகள்,
காயப்பட்ட முகங்கள், நடுங்கும் குழந்தைகள் என்று இவர்கள் அனைவரும் அவனின் மக்கள். அவனது பொறுப்பு என்று எண்ணிக் கொண்டிருந்தவன் முன் வந்த வீரன், “இளவரசே… அவர்கள் சிறு குழுக்களாக இருந்தார்கள். அவர்களுக்கு காட்டு வழிகளை பரிச்சயமாக்கி உள்ளனர். நிச்சயம் அது பெரும் படையின் சிறு குழு என்று தோன்றுகிறது. கோட்டையை பலப்படுத்த வேண்டும். எந்த நேரம் வேண்டுமானாலும் நாம் தாக்கப்படலாம்” என்றதும் ராணசூர் கண்களை மூடிக் கொண்டான்.
அந்த வீரனின் வார்த்தையில் இருந்த உண்மை வாளைப் போல அவனை வெட்டியது. முகலாயர்கள் ஏற்கனவே அரவள்ளிக்குள் நுழைந்துவிட்டனர். ராணாவின் பாதுகாப்பை சோதித்துவிட்டனர். அவனது மக்களை காயப்படுத்திவிட்டனர்.
ரணசூரன் கண்களில் வலி, கோபம் அனைத்தும் கலந்த ஒளியுடன், “அரசரையும், மன்றத்தையும் கூட்ட ஆணையிடுங்கள். மேலும் இரத்தம் சிந்துவதற்கு முன்…நாம் முடிவு செய்ய வேண்டும்” என்றவனின் கட்டளையில் கிராம மக்கள் நம்பிக்கையுடன் அவனை நோக்கினர்.
அரவள்ளி மலைகளின் இதயத்தை செதுக்கி உருவாக்கப்பட்ட அந்த மாபெரும் மண்டபம்,
விளக்குகளின் ஒளியில் பொன்னிறமாக ஜொலித்தது. இரண்டு சிங்காசனங்கள் பக்கத்துக்கு பக்கம் வீற்றிருக்க, ஒன்று அதிவாரின் செம்மஞ்சள் நிறத்திலும், மற்றொன்று ராணாவின் பொன்னிற நிறத்திலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவற்றின் நடுவில், ஹூன் வம்ச மூத்தோரின் சிம்மாசனம் இரண்டு தூண்களைப் தாங்கி நின்றது. அவர்களின் இருப்பே அரவள்ளியின் இரு பெரும் ராஜ்யத்தை உடைந்து போகாமல் காத்திருந்தது.
அந்த மண்டபம் கனமான சூழ்நிலையை உணர்த்தி கொண்டிருந்தது.ராணாவின் அரசர் மகாராஜா தேவராஜ் ராணா கவலையோடு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார்.
அதிவார் அரசன் மகாராஜா வீரேந்திர வர்மா உடலை முன் கொண்டுவந்து, விரல்களை இணைத்து, கூர்மையான பார்வையுடன் அமர்ந்திருந்தார்.
ரணசூர் தன் தந்தையின் அருகிலிருக்கும் அரியணையில் அமர்ந்திருந்தவன் காதுகளில்
கிராம மக்களின் அழுகுரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.
வீரன் எதிரே இருக்கும் அரியணையில் அமர்ந்து, கைகளை மடக்கி, உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த கோபத்தை மறைக்க முயன்று கொண்டிருந்தான்.
ஹூன் வம்சத் தலைவர் தன் தொண்டையை செருமிக்கொண்டு, “மன்றம் தொடங்கட்டும்” என்றதும் சபை ஆரம்பமாகியது.
அதற்காகவே காத்திருந்த இளவரசன் ரணசூர் கோபத்தில் நடுங்கும் குரலோடு, “ராணாவின் எல்லைகள் தாக்கப்பட்டன. எங்கள் மக்கள் தங்கள் வாழ்விடத்தில் இருந்து விரட்டப்பட்டனர். சிறு குழந்தைகள் மிரட்டப்பட்டுள்ளனர்” என்றான்.
அதைக்கேட்ட வீர், “அப்படியானால் நாமும் பதில் தாக்குதல் மூலம் பதில் சொல்லுவோம்.
முகலாயர்கள் அரவள்ளிக்குள் நுழைந்துவிட்டனர். இப்போது தாக்கவில்லை என்றால்,அடுத்து கோட்டையை தாக்க முனைவர்” என்றதும் ராணசூரின் கண்கள் மின்னின.
இப்போது நண்பர்கள் இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டனர். ரணசூர், “ஆனால் கண்மூடித் தனமாக நடத்தும் தாக்குதலால் நம்முடைய மக்களையே நாம் அழித்துவிடுவோம். அதுவும் அல்லாமல் அவர்கள் ராணா எல்லைகளை தான் தாக்கினர்,அதிவாரை அல்ல” என்றான்.
அதற்கு வீரன், “அவர்கள் ராணா எல்லையோடு நின்றுவிடுவார்கள் என்று நினைக்கிறாயா?
அரவள்ளி ஒரே உயிர். அதனது ஒரு உறுப்பை வெட்டினால், முழு உடலும் இரத்தம் சிந்தும்” என்றவனின் வார்த்தையில் ராணசூர் பற்களை கடித்தான்.
ரணசூர், “உன் மக்கள் பாதுகாப்பாக தூங்குகிறார்கள். அதனால் நீ எளிதாக பேசிவிட்டாய்” என்றதும் வீரின் கண்கள் இருண்டன.
வீரன், “என் அமைதியை அலட்சியமாக நினைக்காதே. ராணாவைத் தொட்டவர்கள் அதிவாரையும் தொடுவார்கள்” என்று முதல் முறை வாதிடும் இரு இளவரசர்களையும் கண்டு மண்டபம் முழுவதும் கிசுகிசுக்கள் எழுந்தன.
இதனை உணர்ந்து கொண்ட அரசர்கள், மௌனத்தை கலைத்தனர். அதிவார் அரசன் கையை உயர்த்தியபடி, “வீரா, போதும். கோபத்தில் எடுக்கப்படும் முடிவு போர் அல்ல” என்றதற்கு ஆமோதிப்பாக மகாராஜ் தேவராஜ் ராணா தலை அசைத்தார்.
அதோடு தொடர்ந்த ராணா அரசர், “அதேபோல் பயத்தில் எடுக்கப்படும் முடிவும் போர் அல்ல” என்ற இருவரையும் விரக்தியுடன் பார்த்தான் வீர்.
“பயமா? அரசே, இது பயம் அல்ல. இது தந்திரம். நாம் காத்திருந்தால், அவர்கள் நம்மைச் சூழ்வார்கள். நாம் தயங்கினால், அவர்கள் இன்னும் ஆழமாக தாக்குவார்கள்” என்றவனுக்கு இப்போது ராணசூர் பதிலளித்தான், “ஆனால் அவசரப்பட்டால், உயிர்பலி தான் மிஞ்சும்.
ராணாவின் மக்கள் ஏற்கனவே பயத்தில் இருக்கிறார்கள். இன்னொரு தாக்குதல் அவர்களை முற்றிலும் உடைத்துவிடும்” என்றான்.
அதை கேட்ட வீர் சற்று தயங்கினான். ஆனால் கோபம் இன்னும் எரிந்துகொண்டிருந்தது.
“அப்படியானால் பொதுமக்களை பாதுகாப்போம். வீரர்களை ஒன்றுதிரட்டுவோம். போருக்கு ஆயத்தம் செய்வோம்” என்றான் வீர்.
அனைத்தையும் கேட்டிருந்த ஹூன் வம்சத் தலைவர், “போதும். நீங்கள் இருவரும் இதயத்திலிருந்து பேசுகிறீர்கள். ஆனால் ஒரு இராச்சியத்தை கோபத்தால் மட்டும் நடத்த முடியாது” என்றவரின் பார்வை இரு அரசர்களையும் தொட்டு மீண்டது.
மீண்டும் தொடர்ந்த ஹூன் வம்சத் தலைவர், “முகலாயர்கள் நம்மைச் சோதிக்கிறார்கள். படை கொண்டு அல்ல நிழல்களால். பயத்தால்” என்றவர் மன்றத்தை நோக்கி திரும்பி, “முதலில் மக்களை பாதுகாக்க வேண்டும். பிறகு போருக்குத் தயாராக வேண்டும்” என்றார்.
அதனை கேட்ட ராணா அரசர், “இனி நிலவு சாயும் நேரங்களில் ராணா கிராம மக்கள் அனைவரும் கோட்டைக்குள் கொண்டு வரப்படுவார்கள். கோட்டைக்கு வெளியே பொதுமக்கள் இரவு தங்க அனுமதி கிடையாது” என்ற கட்டளையை அறிவித்தார்.
அவரை தொடர்ந்து அதிவார் அரசனும், “அதிவாரும் அதையே பின்பற்றும். அதிவாரின் எல்லை கிராமங்களில் இருக்கும் பொதுமக்கள் மாலைக்குள் கோட்டைக்குள் வந்துவிட வேண்டும்” என்று கட்டளையிட்டார்.
அனைத்தையும் கேட்டிருந்த ரணசூர் கவலையுடன், “அப்படியானால் நிலங்கள்? பயிர்கள்?
வீடுகள்?” என்றதற்கு அதிவார் அரசர் உறுதியுடன், “நமது படைகள் அவற்றை பாதுகாக்கும்.
முகலாயர்கள் மீண்டும் வந்தால், அவர்கள் விவசாயிகளை அல்ல போர்வீரர்களை எதிர்கொள்வர்” என்றவரின் பார்வை வீரனை நோக்க, அவன் சம்மதமாக தலை அசைத்தான்.
வீரன், “நன்று. அவர்கள் வரட்டும்” என்றவனின் கோபமும் வீரமும் நாடறிந்த ஒன்று.
ரணசூர், “அரவள்ளி பயப்படாது என்பதை அவர்களுக்கு காட்டுவோம்” என்றவனின் வார்த்தையில் மொத்த சபையும், “ஜெய் கர்னி மாதா!ஜெய் ராஜபுத்ர! என்ற கோஷம் வானை எட்டியது.
ஹூன் வம்சத் தலைவர், “முடிவு எடுக்கப்பட்டது. இன்று இரவு, மக்கள் கோட்டைகளுக்குத் திரும்புவார்கள். இன்று இரவு, போர்வீரர்கள் அவர்களின் இடத்தை ஏற்குவார்கள். இன்று இரவு, அரவள்ளி ஒன்றுபட்டு நிற்கும்” என்று அறிவித்தார்.
மன்றம் கலைந்து, அனைவரும் வெளியேறும் போது வீரும் ராணசூரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்த பார்வையில் சொல்லப்படாத வலி, தீராத துரோகம், அதோடு வெடிக்க காத்திருக்கும் புயல் ஒன்று காத்திருந்தது.
ரணசூரன் வந்துவிட்டான்……..

