
சபதம் -26
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
பொருள்:
நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும்.
—புலியூர்க் கேசிகன்
இரவு அரண்மனை அசாதாரணமான அமைதியில் நிறைந்திருந்தது. நீண்ட கல் நடைபாதையில் ரணசூர் நடந்துவந்து கொண்டிருந்தான். சுவரில் பொறிக்கப்பட்ட வடிவங்களின் நிழல் ரணசூரனின் முகத்தில் பட்டு மின்னும் தீப்பந்தங்களின் ஒளியில் நடனமாடியது. வீருடன் நடந்த பேச்சுவார்த்தையின் காயம் இன்னும் அவன் மனதில் எரிந்துகொண்டே இருந்தது. அந்தத் துரோகம், அவர் நம்பிய இருவரிடமிருந்து எதிர்பாராத பொய் அவனை ஒவ்வொரு நொடியும் அழுத்தியது.
மூச்சு முட்டுவது போல் இருக்க, காற்றுக்காக தவித்தவன், கண்களில் சால்வையில் மூடப்பட்ட மெலிந்த உருவம் திருட்டுப் பார்வை பார்த்தபடி அரண்மனையின் நீண்ட நடைபாதைகளில் நடந்து சென்றது.
அந்த உருவத்தின் நடையை வைத்தே யாரென்று அறிந்து கொண்ட ரணசூருக்கு, தான் பாசம் வைத்த அனைவரும் தன்னை ஏமாற்றியது போல் ஒரு பிரம்மை. ராணசூரின் நெருங்கிய வட்டத்தில் வீர், யசோதராவுக்குப் பின் அவன் மகவாய் நினைத்து வளர்த்தவள், மெஹருன்னிஷா.
பிறந்ததிலிருந்து இன்றுவரை அவள் அன்னை மற்றும் தமக்கையை விட அவள் அதிகம் ஒட்டிக்கொள்வது ரணசூரனிடம் தான். அவள் தன்னிடம் இருந்து மறைத்துவிட்டது ரணசூரனுக்கு அடுத்த பெரிய அடி என்று நினைத்தான்.
மெஹ்ருன்னிஷா அவ்வப்போது தோளுக்கு மேல் பார்த்துக்கொண்டே விரைவாக நகர்ந்தாள்.
அவளது இளவரசன்,அவளது சிறுபருவ நண்பன், அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதை அறியாமல்.
அவள் பெண்கள் மண்டபத்துக்குச் செல்லும் பக்கவாசலை அடைந்தவள், சற்று நின்று சுற்றும் முற்றும் பார்க்க, அந்த நேரம் “மெஹர்” என்ற ரணசூரனின் குரலில் அவளது இதயம் படபடக்க, மெல்ல திரும்பியவள் விழிகள் அவனைத் தேட, இருளுக்குள் இருந்து அவள் முன் வந்து நின்றான்.
ரணசூரனை அந்த நேரம் எதிர் பார்க்காத மெஹ்ருன்னிசா, திடுக்கிட்டு முழிக்க, அவள் கைகளில் பற்றியிருந்த காகிதம் தவறி கீழே விழுந்தது.
“தாதாஷா…” என்று திக்கியவளை பார்த்தபடி அவள் கைகளில் இருந்து தவறி விழுந்த காகிதத்தை, குனிந்து எடுத்தவன் கண்கள், அந்த கடிதத்தின் முன் “யசோ” என்றிருந்த கையெழுத்தில் இருந்து தெரிந்து கொண்டான், அது யார் கொடுத்தது என்று.
வீரின் கையெழுத்தைக் கண்டவன் மார்பு இறுகியது. ரணசூரின் முகத்தில் இருந்த கோபத்தை உணர்ந்து கொண்ட மெஹ்ருன்னிசாவின் குரல் நடுங்கியது, “தாதாஷா…அது…வந்து” என்று பயத்தில் உளறியவளிடம் கடிதத்தை திருப்பிக் கொடுத்தான்.
அவன் சொல்லாததை அவன் கண்களில் உணர்ந்து கொண்ட குழந்தை கண்களில் நீருடன், “தாதாஷா…” என்றிட, அவளை வலியோடு பார்த்தவன், “போ..” என்றதோடு திரும்பி நடக்க தொடங்கினான்.
ரணசூரனின் முதுகை வெறித்தபடி நின்றிருந்த மெஹ்ருன்னிசா முதல் முறை தான் செய்யும் காரியம் தவறோ என்று எண்ணத் தொடங்கினாள். இதுநாள் வரை தன்னையும் பெரிய மனுஷியாக நினைத்து தங்கள் ரகசியத்தை பகிர்ந்த யசோதரவுக்கு வீருக்கும் செய்யும் உதவியாக நினைத்தாலே தவிர அவளுக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை.
இன்று முதல் முதலாக தனது நண்பன், ஆசான் , காவலன், அண்ணன் என்று பல உருவம் கொண்ட ரணசூரின் முகத்தில் இருந்த வேதனையில் தனது தவறை உணரத் தொடங்கினாள் மெஹ்ருன்னிஷா.
யசோதரா ஜன்னலருகே அமர்ந்து நிலவொளியில் நனைந்த தோட்டத்தை நோக்கிக் கொண்டிருந்தாள். வீரின் மௌனம், ரணசூரின் குளிர்ச்சி, அரண்மனையின் பதட்டம் அனைத்தும் ஏதோ தவறாக இருப்பதாக உணர்ந்தாள்.
அந்த நேரம் தாதி ஒருத்தி வந்து மெஹருன்னிஷாவின் வருகையை அவளிடம் தெரிவிக்க, அவளை உள்ளே அழைத்து வர கட்டளையிட்டவளின் உடலில் ஒருவித பதட்டம் உண்டானது.
இதுநாள் வரை மெஹருன்னிஷா மூலமாகவே அவர்கள் காதல் வளர்ந்தது. நிச்சயம் வீரிடம் இருந்து கடிதம் வராமல் மெஹருன்னிஷா இந்நேரம் அந்தப்புரம் வரமாட்டாள் என்று உணர்ந்தவள் விழிகள் அவள் வருகைக்கு காத்திருந்தது.
உள்ளே வந்த சிறியவளின் முகம் வெளுத்து, நடுங்கியபடி வந்தவளிடம் யசோதாரா, “மெஹ்ருன்னிஷா? என்னவாயிற்று?” என்றதும் கண்களில் வடிந்த கண்ணீருடன், நடுங்கும் விரல்களால் கடிதத்தை ஒப்படைத்தவள், “தாதாஷா…என்னை பார்த்து விட்டார்” என்றால் தேம்பியபடி.
அதில் அதிர்ந்த யசோதரா, “என்ன சொல்கிறாய்? k..கடிதம்…?” என்று கேள்வியாய் இழுத்தவளிடம் ‘ஆம்’ என்று தலையசைத்த மெஹர், “பார்த்துவிட்டார்…” என்றவள் குலுங்கி அழுக, அவளை இறுக்கி அனைத்துக் கொண்ட யசோதரா, தனது பயத்தை ஓரம்கட்டிவிட்டு , “உன்னை ஏதும்..?” என்றதும் இல்லை என்றால் சின்னவள்.
மெல்ல யசோதரவிடம் இருந்து விலகியவள், “என்னை திட்டி இருந்திருக்கலாம்… என்னிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை” என்றவள் யசோவிடம் விடைபெற்று கிளம்பினாள்.
போகும் சின்னவளை வேதனையோடு பார்த்த யசோதராவுக்கும், அவளது தவறு நன்கு புரிந்தது. இதில் சின்னவளின் அறியாமையை பயன்படுத்தி கொண்ட தங்களின் மீதே அவளுக்கு அருவெறுப்பாய் இருந்தது.
ரணசூரனை நினைத்து பார்த்தவள் கைகள் நடுங்க, அந்த நினைப்பை ஒத்தி வைத்துவிட்டு கடிதத்தை பிரித்தவள் கண்கள் குளம் கட்டி கொண்டது.
வீரின் எழுத்துக்கள், அவள் கண்களில் தேங்கிய கண்ணீரில் மங்கின.
“யசோதரா,
முதல் முறை தவறு செய்துவிட்டதாக உணர்கிறேன்.
ரணசூருக்கு நமது காதல் தெரிந்து விட்டது. அவன் கோபப்படுவான் என்பது எனக்கு தெரியும் ஆனால் அவன் நான் வஞ்சித்து விட்டதாக நினைக்கிறான். என் முகத்தை கூட காண விரும்பாதவன் போல் வெளியேறிவிட்டான். அவன் கோபம் உன்மீதும் திரும்ப வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக இரு. காலம் கூடும் போது அவனை சமாதானப்படுத்துவோம். இதற்கு மேல் நம் காதலை பெரியவர்களிடம் மறைப்பது உசிதமில்லை. நான் மஹாராஜாவிடம் பேசி முடிவெடுக்கிறேன். தைரியமாக இரு.
சூரனை பார்த்து கொள். அவனை தனித்து விட்டு விடாதே
வீர்.”
என்றவரிகளை வாசித்தவளின் இதயம் வலியில் துடித்தது.
ரணசூரின் நிலை நினைத்து கண்கலங்கியவள் உள்ளம் , “பய்யாவிற்கு தெரிந்துவிட்டது. அவர் என்னை… ” என்றவளால் மேற்கொண்டு யோசிக்க முடியாமல் ரணசூரனின் அறை நோக்கி ஓடினாள்.
அரண்மனை வழித்தடங்களில் அவள் காலடிகள் ஒலித்தன. அதிர்ச்சியடைந்த காவலாளிகளின் பார்வைகளைப் பொருட்படுத்தாமல், அவள் ஓடினாள். அவளது நீண்ட கூந்தல் களைந்து விழ, அதனை பொருட்படுத்தாமல் ரணசூரின் அறை கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தாள்.
அங்கே ரணசூர் சாளரத்தின் அருகே முதுகு அவளுக்கு காட்டியபடி நின்றிருந்தான். நிலவொளி அவனது உருவத்தை வரிவடிவமாய் தீட்டியிருந்தது. யசோதராவின் வருகையை உணர்ந்து கொண்டவனின் தோள்கள் உறைந்தன, சாளரக் கம்பிகளை இறுக்கி கொண்ட கைவிரல்கள் அவன் உள்ளத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் புயலுக்கு சாட்சியாக தோன்றியது.
அதனை கண்ட யசோதராவின் குரல் உடைந்து, “அண்ணா… தயவு செய்து… என்னை நோக்கிப் பாருங்கள்” என்றதை கேட்டவன் அசையவில்லை.
அவன் நிலை கண்டு துடித்தவள் மெல்ல அருகே வந்து, “நீங்கள் என் மீது கோபம் கொண்டுள்ளீர்கள் என்று தெரியும். உங்களை நான் காயப்படுத்தியுள்ளேன் என்பதும் எனக்கும் தெரியும். ஆனால் தயவு செய்து… நான் விளக்க—” என்றவளின் வாக்கியத்தை வெட்டிய ரணசூரன், “எதை விளக்க போகிறாய்?” என்றபடி தங்கையை நோக்கி திரும்பினான்.
ரணசூரனின் கண்கள் சிவந்திருந்தன. கோபத்தால் அல்ல, வேதனையால், “என்னை ஏமாற்றியதை விளக்க போகிறாயா? என்னிடம் மறைத்ததை விளக்க போகிறாயா? இல்லை,
என் சொந்த தங்கையும், என் நெருங்கிய நண்பனும் சேர்ந்து என்னை முட்டாளாக்கியதை விளக்க போகிறாயா?” என்ற வார்த்தைகளை கேட்ட யசோதரா நடுங்கினாள்.
“நான் உங்களை ஏமாற்ற நினைக்கவில்லை அண்ணா. எனக்கு பயமாக இருந்தது. உங்களை இழந்து விடுவோமோ என்ற பயம்.உங்களை காயப்படுத்துவோமோ என்ற பயம்” என்ற யசோதராவின் பதிலை கேட்ட ரணசூர் சிரித்தான்.
எப்போதும் அவன் முகத்தில் தேங்கியிருக்கும் மனம் நிறைந்த சிரிப்பல்ல, வெறுமையில் ஒலித்த சிரிப்பு அது.
“இப்போது மட்டும் என்ன செய்திருக்கிறாய் யசோ? இப்போது நீங்கள் செய்ததன் பெயர் துரோகம். தெரிந்தே உன் உடன்பிறப்பை முட்டாள் ஆக்கிவிட்டாய்” என்று கோபத்தில் கத்தியவனை தொட முயன்றாள், அதனை கண்ட ரணசூரன் ஒரு அடி பின்வாங்கினான்.
“அண்ணா… தயவு செய்து…வீரும் நானும்—நாங்கள் இதைத் தெரிந்து செய்யவில்லை.
எங்கள் காதல்…” என்றவள் கைகளால் கண்களை மூடிக் கொண்டு அழுதாள்.
“உங்கள் காதலுக்கு நான் தடையாக நிற்கமாட்டேன்” என்றவனின் குரல் நடுங்கியது, மேலும் தொடர்ந்தவன், “இனி உங்கள் விஷயத்தில் நான் தலையிட போவதில்லை. மகாராஜா திருமணத்திற்கு அழைத்தால் உடன் பிறந்தவனின் கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்றவனின் வார்த்தைகளை கேட்ட யசோதராவின் கண்ணீர் வழிந்தது.
“நான் அவரை நேசிக்கிறேன், அண்ணா. என் முழுமனதோடு நேசிக்கிறேன். உன் விருப்பம் இன்றி எங்கள் திருமணம் நடக்காது. நீ உன் கையால் என்னை தாரை வார்க்காமல் இந்த அரண்மனையை விட்டு நான், உனது தங்கை யசோதரா எங்கும் போகமாட்டேன்” என்றவளின் வாக்கை கண்கள் மூடி கேட்டு நின்றான் ரணசூரன்.
அந்த கணம் உருகிய மனதை இறுக்கி கண்களைத் திறந்தவன், ” பிரச்சனை காதல் இல்லை.
பிரச்சனை…உங்களின் பொய்கள்” என்றபடி அவளைத் தாண்டி நடந்தவன், கதவினைத் திறந்து பிடித்தபடி, “போ, யசோதரா… உன்னிடம் பேச எனக்கு எதுவுமில்லை. பாசம் கொண்ட இதயத்தினை நீங்கள் இருவரும் உடைத்துவிட்டீர்கள். இனி அது இணைய வாய்ப்பில்லை” என்றவன் அவளின் முதுகுக்கு பின் கதவினை மூடிக் கொண்டான். அவனது மனக் கதவினையும் சேர்த்தே மூடிக்கொண்டான்.
அடுத்தடுத்த நாட்களும், அவனது மௌனம் தொடர்ந்தது. யசோதராவின் முயற்சிகள் அனைத்தும் ரணசூரின் பாராமுகத்தால் முறியடிக்கப்பட்டன.
ஒவ்வொரு காலையிலும், யசோதரா ரணசூரின் அறை முன் காத்திருந்தாள். ஒவ்வொரு முறையும் காவலர்களின் பதில், “இளவரசி மன்னிக்கவும்….இளவரசர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை என்று உத்தரவிட்டுள்ளார்” என்பதாகும்.
அடுத்த முயற்சியாக கடிதங்கள் எழுதி தாதியிடம் தூதனுப்பினாள். அது திறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
பயிற்சி மைதானத்தில் பேச முயன்றாள். அவன் அவளை பார்க்காமல் விலகி சென்றான்.
ஒருகாலத்தில் அவளின் தலைமுடியில் மலர் பின்னிய அண்ணன். அவளை தோளில் தூக்கி வளர்த்த அண்ணன். இந்த உலகத்தின் பயங்கரங்களில் இருந்து காக்க வாக்குறுதி அளித்த அண்ணன். இப்போது அவளை நோக்கிப் பார்ப்பதற்கும் தயங்கினான்.
அதிவார் இளவரசரும் நண்பனை காண பல முயற்சிகள் எடுத்தான். அனைத்தும் விழலுக்கு அளித்த நீர்போல் வீணாகி போனது.
வீர் மூன்று முறை ராணா அரண்மனைக்குச் சென்றான். ஒவ்வொரு முறையும், ரணசூரன் அரண்மனையில் இருந்து வெளியேறி இருந்தான்.
ஒரு மாலை, யசோதரா ரணசூரை முற்றத்தில் நடந்து செல்லக் கண்டாள். அவள் ஓடிவந்து மூச்சுத்திணறியபடி அவன் முன் நின்று, “அண்ணா….தயவு செய்து…ஒரு நிமிடம்…” என்றவளை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவளை கடந்து சென்றவனை அதிர்ந்து பார்த்தவள், அந்த இடத்திலே மண்டியிட்டு கதறினாள். இது அனைத்தையும் மறைந்திருந்து பார்த்திருந்த வீரின் உள்ளம் சிதறியது.
ரணசூரன் தொலைவில் தெரிந்த அரவள்ளி மலைத்தொடரின் உச்சியை பார்த்திருந்தான். அவனது உள்ளம் வலியில் துடித்து கொண்டிருந்தது, அவனும் அனைத்தையும் கடந்து போகவே விரும்பினான். ஆனால் அடிபட்ட நெஞ்சம், உருகும் போதெல்லாம் இதயத்தை இரும்பாக்க, “நம்பிக்கை ஒரு முறை உடைந்தால் மீள்வது கடினம்” என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தது.
ரணசூரன் வந்துவிட்டான்……

