Loading

சபதம் – 24

 

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். (குறள்- 774) 

பொருள் :

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
—மு. வரதராசன்

 

 

ராணா குண்ட் அரண்மனையின் சபா மண்டபம் இராச்சியத்தின் காவலர்களைப் போல உயர்ந்த மணற்கல் தூண்கள் எழுந்து நின்றன. ஒவ்வொன்றிலும் ராணா மன்னர்களின் வெற்றிகள், உறுதிமொழிகள், வம்ச வரலாறுகள் செதுக்கப்பட்டிருந்தன.

 

மண்டபத்தின் பளிங்குத் தரையில் சூரியன், வாள், தாமரை இதழ்கள் ஆகியவற்றின் வடிவங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன.

 

ஜரோக்கா ஜன்னல்கள் வழியே பொன்னிறக் கதிர்கள் மண்டபத்தில் பரவ, அந்த ஒளிக்கதிர்களில் தூசுத்துகள்கள் விடியலால் விழித்தெழுந்து வைரங்களாய் மின்னின.

 

மண்டபத்தின் மத்தியில் கருங்கல் பாறையில் செதுக்கப்பட்ட உயர்ந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது அரசரின் சிம்மாசனத்தில் கம்பீரமாய் வீற்றிருந்தார் மஹாராஜா வீரேந்திரதேவ் ராணா.

 

அரச உறுப்பினர்கள் கூடியிருக்க, யசோதரா மற்றும் மற்றைய அரச மகளிர், அந்த சபா மண்டபத்தின் உத்தரான மண்டபத்தில் அமர்ந்திருந்து அரசவைக் கூட்டத்தை பார்த்திருந்தனர். அவர்களுடன் ஹூன் வம்ச வாரிசு மெஹ்ருன்னிஸாவும், அவளை சீண்டிக்கொண்டே அருகில் அமர்ந்திருந்தான் ராணா வம்சத்தில் இளைய வாரிசு, ரணசூர் மற்றும் யசோதராவின் இளவல், பத்து வயதான இளவரசர் அரிஞ்சயன் ராணா.

தந்தையின் அருகில் உள்ள இளவரசர்க்கான சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ரணசூர், மெல்ல எழுந்து சபைக்கு வணக்கம் தெரிவித்தவன், சபா காவலரிடம், “தூதரை உள்ளே அழையுங்கள்” என்று கட்டளையிட, சபா மண்டபத்தின் கனத்த வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள் பெரும் சத்தத்துடன் திறக்கப்பட்டன.

 

உள்ளே வந்த முகலாய தூதன், நீளமான பச்சை அங்கி அணிந்திருந்தான், அதில் முகலாய சின்னமான சிங்கமும் சூரியனும் அமைந்த அஃலம் எனும் கொடியின் முத்திரை தங்கத்தால் செதுக்கப்பட்டிருந்தது. அவன் தலையில் முகலாய சின்னம் பதிக்கப்பட்ட பாகை சூடியிருந்தான்.

 

அரச சபை கூடியிருப்பதை உணர்ந்த அவன், மன்னரின் முன் வந்து நின்று அரசருக்கும், இளவரசர் மற்றும் அரச முக்கியஸ்தர்களுக்கு குனிந்து மரியாதை செலுத்திவிட்டு, “மகாராஜா வீரேந்திர தேவுக்கு, முகலாய ஷெஹென்ஸா அக்பரின் வாழ்த்துகள்…மற்றும் நம் இராச்சியங்களை இணைக்கும் ஒரு முன்மொழிவுடன் வந்துள்ளேன்” என்றதும் ரணசூரனின் புருவங்கள் நெறிக்கப்பட்டன.

 

“அரசபைக்கு புரிவது போல் கூறுங்கள் தூதரே. என்ன முன்மொழிவு?” என்ற அமைச்சரின் கேள்வியில் தூதன் சிரித்தான்.

 

“ஷெஹன்ஷா அவர்கள் ராணா ராஜ்யத்துடன் நல்லுறவு பேண விருப்பம் கொண்டுள்ளார். நமது இரு ராஜ்யங்களின் நட்பை இன்னும் இறுக்கமாக பின்ன ஆசை கொண்ட ஷெஹின்ஷா திருமண ஒப்பந்தம் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்” என்றதும் மன்றத்தில் அதிர்ச்சி பரவியது.

 

அதனை உத்தியான மண்டபத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த யசோதராவின் மூச்சுத் தடைப்பட்டது. தங்கையை ஒருமுறை திரும்பிப் பார்த்த ரணசூரனின் குரல், “யாருடைய திருமணம்?” என்றதும் தூதரின் பார்வை அரச பெண்கள் வீற்றிருக்கும் மண்டபம் நோக்கிப் பார்வையிட்டவன், “ஷெஹென்ஸா விருப்பம், பேரரசரின் தம்பி, காபூல் ஆளுநர் மிர்சா முகம்மது ஹகீமுக்கு இளவரசி யசோதராவின் கை வேண்டுமென அரச முன்மொழிவு வந்துள்ளது” என்றதும் அரசவை மன்றம் வெடித்தது.

 

அமைச்சர்கள் அனைவரும் தூதருக்கு எதிராக, “அசாத்தியம்!” என்றும் சிலர் மன்னரை முகலாய அரசர் அவமதிப்பதாகவும் குரல் எழுப்பினர்.

சிலர், “ராஜ்புத் இளவரசியை ஒரு முகலாய ஆளுநருக்கு கொடுக்க முடியாது!” என்று பலகுரல்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, மஹாராஜா அமைதியாக இருக்கும்படி சபைக்கு சைகை செய்தார்.

 

அவரின் கண்கள் தூதரை நோக்கி, “நாங்கள் மறுத்தால்?” என்றதும் தூதரின் சிரிப்பு மாறவில்லை, “அப்பொழுது ஷெஹின்ஷாவின் பார்வையில்…ராணா அரசரின் மறுப்பு என்பது பகைமை அறிவிப்பாகக் கருதப்படும்” என்றதும் சபாமண்டபம் ஒருவித இறுக்கத்தில் ஆழ்ந்தது. தூதரின் வார்த்தையில் இருந்து திமிரை ரணசூரனும் உணர்ந்திருந்தான். மெல்ல திரும்பி தந்தையை பார்த்தவனை பொறுமை காக்க சைகை செய்த அரசர், மெல்ல நிமிர்ந்து தனது ஆசை மகளை ஏறிட்டார்.

 

மகாராஜா வீரேந்திர தேவ் மற்றும் மஹாராணி தேவயானிக்கும் பிறந்த ஒற்றை பெண்பிள்ளை யசோதரா. மகளின் மனம் ரணசூர்க்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நாடாளும் அரசருக்கும் தன் செல்ல மகளின் எண்ணம் புரிபடாமல் இருக்குமா?

 

மகளை பற்றி அறிந்திருந்த மஹாராஜா பார்வை மண்டபத்தில் இருந்தாலும், அவரின் இதழோரம் நிலைத்திருந்த சிரிப்பு சொன்னது அடுத்து நடக்கப்போவதை. அரசருக்கு மட்டும் அல்ல இளவரசன் ரணசூருக்கும் தெரியும், யசோதர அமைதி காக்கப்போவதில்லை என்று.

 

பெண்கள் அமர்ந்திருந்த மண்டபத்தில் இருந்து மெல்ல இறங்கி வந்த யசோதரா அரசரின் தாள் பணிந்துவிட்டு, முகலாய தூதனை நோக்கி திரும்பியவளின் குரல் உறுதியுடன், “மகாராஜா வீரேந்திர தேவின் ஒரே மகள் ராணா ராஜ்யத்தின் பட்டத்து இளவரசி யசோதரா எனும் நான் ஒரு முகலாயரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். அமைதிக்காக அல்ல. கூட்டிணைப்புக்காக அல்ல. எதற்காகவும் அல்ல” என்று வீரர்குல மகளாய் சிலிர்த்து நின்றவளின் வார்த்தைகளில் தூதரின் கண்கள் கடுமையடைந்தன.

 

 

“இளவரசி…யோசித்து பதில் கூறுங்கள். ஷெஹன்ஷாவுக்கு மறுப்பு என்பது எளிதாக ஏற்கக்கூடியது அல்ல” என்று எச்சரித்த தூதனை நோக்கி திடீரென எழுந்த ரணசூரனின் கண்களில் கோபம் மின்ன, “போதும் நிறுத்துங்கள். ராணாவின் இளவரசியை என் முன்னால் எச்சரிக்கை செய்ய துணிந்தீர்களா? ராஜ்புத் பெண்கள் தங்கள் கருத்துக்களை சபையில் தெரிவிக்க அனைத்து உரிமையும் கொண்டவர்கள். திருமண ஒப்பந்தத்தை பற்றிய எங்கள் நிலையை இளவரசி யசோதராவின் வார்த்தைகளாக கேட்டுக் கொண்டீர் அல்லவா?” என்றவன் அரசரை திரும்பி பார்க்க, அவரின் கண்ணசைவில், “இனி ராணா தனது விதியைத் தீர்மானிக்கும். உங்கள் ஷெஹன்ஸா அல்ல. வீண் மிரட்டல்களால் ராணா ராஜ்யத்தை கைப்பற்ற இயலாது” என்றதும் தூதர் மீண்டும் வணங்கினார்,ஆனால் இப்போது அது கேலி போல இருந்தது.

 

“அப்படியானால் ஷெஹென்ஸாவின் பதிலை எதிர்பார்க்கலாம். விரைவில் ஸ்வர்ணக் காடியில்” என்றபடி அரசவையில் இருந்து வெளியேறினான்.

 

தூதர் சென்ற பிறகு, மன்றம் மீண்டும் வெடித்தது. கோபமும் பதற்றமும் கலந்த குரல்கள்.

ரணசூரன் அவற்றை புறக்கணித்து யசோதராவை நோக்கினான். அவனின் கண்களில் இருந்த கேள்வியில் யசோதரா தடுமாறி நின்றாள்.

 

அரண்மனை அந்தப்புரம் அரசபை கூட்டத்தை பதட்டமாய்க் காணப்பட்டது. மஹாராணி தேவயானி மடியில் கண்மூடி படுத்திருந்த மகளின் தலையை ஆதூரமாக வருடிவிட்டு கொண்டிருந்தார். அந்த நேரம் அரசர் மற்றும் இளவரசரின் வருகை அங்கே அறிவிக்கப்பட, கண்களால் கணவனையும் மகனையும் வரவேற்றவர், யசோதராவை எழுந்து அமரவைத்தார்.

 

மஹாராஜா மகளின் வாடிய முகத்தை வருடிவிட்டு, “ஏன் அம்மா இந்த சோகம். உன் விருப்பத்தை மீறி நான் என்றாவது முடிவெடுத்துள்ளேனா?” என்றவரை கண்களில் கண்ணீர் மின்ன ஏறிட்ட யசோதராவின் பார்வை ரணசூரை தொட்டு மீண்டது.

 

அதனை புரிந்து கொண்ட அரசர், “ஏன் உன் தமையன் உன் பேச்சை எதிர்த்து உனக்கு திருமணம் செய்திடுவான் என்று சொல்கிறாயா?” என்றவரின் குரலில் இருந்து கேலியை புரிந்து கொண்ட ரணசூர், “அம்மா தாயே… அப்படி எதுவும் நான் செய்துவிட மாட்டேன். முகலாயருக்கு என்னை தாரைவார்த்து கொடுத்தாலும் கொடுப்பேன். ராணாவின் பட்டத்து இளவரசி, மக்களின் கண்ணின் மணியானவளும், அரசரின் உயிரானவளையும் கட்டாயப்படுத்திவிட்டு இங்கு நான் உயிர் வாழத்தான் முடியுமா?” என்றதும் மகனை செல்லமாக அடித்த மகாராணியை கண்களில் வேதனையுடன் ஏறிட்டான் ரணசூர்.

 

மகளின் முகம் தெரியாததை உணர்ந்த அரசர் ஏதோ சொல்லவரும் முன், ரணசூர், “நேற்று இரவு எங்கு சென்றிருந்தாய் யசோ?” என்றவனின் கேள்வியில் யசோதரா உறைந்தாள்.

 

வீரின் முகம் அவளின் நினைவில் மின்னியது.அவனின் தொடுதல், முத்தம், காட்டில் இருந்த அந்நியர்களைப் பற்றிய எச்சரிக்கை என்று அனைத்தும் ஒன்றோடொன்றாக நினைவுகூர்ந்தவள் கண்களை கீழே தாழ்த்தினாள்.

 

“நான்…கர்னி மாதா கோவிலுக்கு சென்றுவந்தேன் பய்யா” என்றவளை ரணசூரன் ஆராய்ச்சியாக பார்த்தான். அவள் பொய் சொல்கிறாள் என்றும் அவனுக்கு தெரிந்திருந்தது.

 

மகள் மற்றும் மகனின் சம்பாஷணைகளைக் கேட்டிருந்த மகாராஜா, “தமையன் கேட்பதும் நியாயமான கேள்வி பேட்டி. இன்றைய நமது பதிலுக்கு பிறகு முகலாயர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியாது” என்றவரின் கண்கள் கூர்மையுடன், “அதனால் இனி உன் இரவு உலாவலை நிறுத்திக்கொள். சைய்யா பிரக்யா கோவிலுக்கு நீ இனி செல்ல வேண்டாம்” என்று கட்டளையாகவே அறிவித்தவர், மனைவியிடம் கண்காட்டிவிட்டு ரணசூரனோடு வெளியேறினார்.

 

யசோதரவின் செயலில் குழம்பி தவித்த மகனின் முகத்தை பார்த்திருந்த அரசர், “மனதை குழப்பிக்கொள்ளாதே பேட்டா. அவள் உன் தங்கை, உன் விருப்பம் இல்லாமல் எதையும் செய்ய போவதில்லை. நீயும் அவளை எதற்காகவும் கட்டாயப்படுத்தமாட்டாய் என்று நம்புகிறேன்” என்றவர் அங்கிருந்து அமைச்சரவை கூட்டத்துக்கு சென்றார்.

ஏதோ தவறாக இருப்பதை ரணசூரன் உணர்ந்து கொண்டான். முகலாயர்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாக நகர்ந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து ரணசூரின் உள்ளத்தில்,
ஒரு பயங்கரமான பயம் வேரூன்றியது.

 

“குதிரைகளை தயார் செய்யுங்கள். நான் அதிவாருக்குச் செல்ல வேண்டும்” என்றவன் அடுத்த வரிகளை தனக்குள் பேசியபடி, “வீருக்கு இது தெரிய வேண்டும்” என்றபடி குதிரையில் ஏறி நண்பனைத்தேடி பறந்தான்.

 

அவன் உள்ளம் எல்லாம், “யசோதராவின் மாறுபட்ட செயல். வீர். முகலாயர்கள்.
காட்டில் இருந்த அந்நியர்கள்” என்று அனைத்தும் ஒன்றாக குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

 

ரணசூரன் வீரை சந்திக்க கிளம்பிய நேரம், அவனை தேடி வந்துநின்ற யசோதராவின் கண்கள் புரவியில் புழுதியை கிளப்பியபடி பறந்து செல்லும் தமையனின் உருவம் மெல்ல தேய்ந்து அரவள்ளி காட்டுக்குள் மறைவதை பார்த்து நின்றாள்.

 

யசோதரா தவறவிட்ட இந்த அரைநொடி, தனக்கும் தனது தமையனுக்குமான விரிசலை ஏற்படுத்த போவது அறியாமல் அரவள்ளி மலைத்தொடரையும் அதன் மற்றொரு உச்சியில் தெரிந்த அதிவாரின் கோட்டையையும் பார்த்தபடி நின்றிருந்தாள்.

 

அராவள்ளியின் கூர்மையான சிகரங்களுக்கு மேல் சூரியன் தகித்து கொண்டிருந்தான். அந்த வெப்பக்காற்றில் ராணாவின் இளவரசர் ரணசூர் அதிவாரின் எல்லைக்குள் குதிரையில் பாய்ந்து வந்து நின்றான்.

அவரின் குதிரையின் காலடி கற்சதுக்கத்தில் மோதியபோது தூசி மேகமாக எழுந்தது.
காவலர்கள் அவரை உடனே அறிந்து வணங்கினர். ஆனால் வீரன் அவர்களைப் பார்த்ததாகவே தெரியவில்லை. இங்கு அவன் விருந்தாளியாக வரவில்லை. இளவரசராகவும் வரவில்லை. நண்பனாக வந்திருந்தான்.

 

சபா மண்டபத்தின் கதவுகளை அவன் அடையும் முன்பே அது திறந்து கொண்டன. உள்ளே வீர் அவனுக்காக காத்திருந்தான்.

 

அந்த இரு இளவரசர்களும் குழந்தைப் பருவம், நம்பிக்கை, இரு இராச்சியங்களின் பாரம்…
அனைத்தாலும் இணைக்கப்பட்ட இரண்டு உள்ளங்கள்.

 

ஆனால் இன்று ஏதோ மாறியிருந்தது. ஒரு கனத்த தன்மை இருவருக்குள்ளும் தூரத்தை அதிகப்படுத்தி இருப்பது போல் உணர்ந்தனர்.

 

வீர் காவலர்களை வெளியே அனுப்பினான். கதவுகள் மூடப்பட்டவுடன், நண்பர்களுக்குள் நீண்டிருந்த அமைதியை கலைத்த வீர், “இந்த நேரத்தில் உன்னை நான் இங்கே எதிர்பார்க்கவில்லை மித்ரா” என்றான்.

 

“வர வேண்டிய தேவை இருந்தது” என்ற ரணசூரனின் தாடை இறுகியது.

 

நண்பனின் முகத்தை பார்த்திருந்த வீர், “முகலாய தூதர்களைப் பற்றியதா?” என்ற வீரின் கேள்வியில் ரணசூரனின் கண்கள் கூர்மையடைந்தன.

 

“அவர்கள் நேற்று இரவு அதிவாருக்கும் வந்தனர். அமைதி பற்றி பேசினர். கூட்டிணைப்பு பற்றி பேசிச் சென்றனர்” என்ற வார்த்தையில் ரணசூரன் மெல்ல மூச்சை வெளியேற்றினான்.

 

“அவர்களுக்கு நீ என்ன சொன்னாய்?” என்ற வீரின் கேள்விக்கு ரணசூரன் ஒரு நொடி பார்வையைத் திசைதிருப்பினான். ஆனால் அதுவே போதுமானதாக இருந்தது வீருக்கு. வீரன் அந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டான். ரணசூரின் தயக்கத்தை கேள்வியுடன் நோக்கியவன், “ரணசூரா…நீ மறுத்துவிட்டாய் தானே?” என்றவனின் குரல் நடுங்கியது.

 

அதைக்கேட்ட ரணசூரனின் விரல்கள் மேசையின் விளிம்பை இறுகப் பற்றின, “யசோதராவின் திருமண ஒப்பந்தத்தை கைவிடக்கோரி செய்தி அனுப்பிவிட்டோம். ஆனால்…” என்றவனின்

வார்த்தைகள் வீரனின் மார்பில் எதையோ இழந்தது போல் சுருக்கென்று குத்தியது.

 

ரணசூரன் வந்துவிட்டான்…..

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்