Loading

சபதம் – 10

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்;

மற்றைய எல்லாம் பிற.”

-குறள் 761

விளக்கம்:

போரில் வெற்றி பெறுவது ஆயுதங்களால் அல்ல; மன உறுதியே உண்மையான வலிமை. மற்ற எல்லா வலிமைகளும் அதற்குப் பின் வரும்.

அரசவைக் கூட்டம் கலைந்து அமைச்சர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டே வெளியேறினர். அரண்மனை சபா மண்டபத்தின் கனமான கதவுகள் பின்னால் மூடப்பட்டன.

ஆசாத் கான் மட்டும் அரசருக்காகக் காத்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தார். தன் அரண்மனை அமைச்சருடன் பேசியபடி வந்த அரசர், ஆசாத் கானைக் கண்டதும் விரைவாக அருகே வர, மன்னரைக் கண்டதும் மரியாதை நிமித்தமாகத் தலையசைத்த ஆசாத் கான்,“மகாராஜா… உங்களுடன் தனியாகப் பேச வேண்டும். மிக முக்கியமான விஷயம்” என்று யாருக்கும் கேட்காத வண்ணம் மெல்லப் பேசினார்.

அதைக் கேட்ட சமர் சிங் அவரை உற்று நோக்க, ஆசாத் கானின் கண்களில் தெரிந்த அவசரத்தையும், குரலில் இருந்த படபடப்பையும் பார்த்து யோசனையுடன் சம்மதம் தெரிவித்தார்.

இருவரும் அரண்மனையின் மங்கலான நடைபாதைகளில் நடந்தனர்;
பழமையான கற்சுவர்களில் மினுங்கும் தீப்பந்தங்களின் ஒளி நடனமாடியது போல் ஒரு பிரம்மை தோன்றியது.

மகாராஜா ஆசாத் கானை ஒரு தனியறைக்குள் அழைத்துச் சென்றார். அரசவைக்குக் கூட சொல்ல முடியாத ரகசியங்கள் பேசப்படும் அறை. கதவு மூடப்பட்டது. அறை எங்கும் அமைதி நிலவியது.

அந்த அமைதியைக் குலைக்கும் விதமாக தன் தொண்டையைச் சரிசெய்து கொண்டு ஆசாத் கான் தொடங்கினார். அவரது குரல் தாழ்ந்து, பல தசாப்தங்களின் சுமையைச் சுமப்பது போல் சோர்வு தெரிந்தாலும், உறுதியுடன்,“மகாராஜா… நான் சரியாக ராஜபுத்ரா சபை கூடும் நேரம் இங்கு எப்படி வந்தேன் என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும் என்பது உறுதி. அதற்குக் காரணம், இரண்டு நாட்களுக்கு முன் பாண்டியர் ஆட்சி புரிந்த மதுரை ஆம்பதியில் இருந்து, ஹூன் ஹவேலிக்கு வந்த ஒரு குழந்தை ‘மீனாட்சி’. அந்தக் குழந்தை சாதாரணப் பெண் அல்ல.இந்த இராச்சியத்தை விடப் பழமையான ஒரு ஆன்மா அவளுள் உறங்குகிறது.”

அதைக் கேட்ட மகாராஜா சமர் சிங்கின் புருவம் சுருங்கியது.“தெளிவாகச் சொல்லுங்கள், ஆசாத்.”

ஆசாத் கான் தன் இருக்கையில் இருந்து சற்று முன்னே வந்து,“அவள் ‘மேஹ்ருனிஸ்ஸா’வின் மறுபிறப்பு. பண்டைய சத்தியத்தின் காவலாளி.”

மகாராஜா உறைந்து நின்றார்.‘மேஹ்ருனிஸ்ஸா’ என்ற பெயர் அரண்மனையில் பல தலைமுறைகளாக உச்சரிக்கப்படாத பெயர்.

ஆசாத் கான் தொடர்ந்து,“அவள் பிறந்த கதை.அவளுக்கு தற்போது வரும் வாள்கள்,சபதக் கல்,துரோகம் பற்றிய கனவுகள். இப்போது கொஞ்ச நாளாக ஹூன் வம்சத்தின் வரம், நடப்பதை ஞானத் திருஷ்டியில் உணர்ந்து கொள்ளும் (வரம்/சாபமும்) திறனும் அவளுள் விழித்துக் கொண்டுள்ளது. ”

அடுத்து சொல்லப் போகும் உண்மையின் பாரத்தை தாங்க முடியாமல் எழுந்து நின்ற ஆசாத் கான்,“அவள் ஒரு தீர்க்கதரிசனத்தை சுமந்து கொண்டிருக்கிறாள். ராஜபுத்திர அரசின் ஓலைகளில் இருந்து மறைக்கப்பட்டிருந்த ஒரு தீர்க்கதரிசனம்.”

அதைக்கேட்ட மகாராஜா சமர் சிங்கின் விழிகள் அகல, குரல் தாழ்ந்தபடி,“மறைக்கப்பட்ட தீர்க்கதரிசனமா?”

ஆசாத் கான் தலையசைத்து, “மறைக்கப்பட்ட தீர்க்கதரிசனம்!” என்றவர் தொடர்ந்து மெதுவாக, ஒவ்வொரு சொல்லும் அறையில் எதிரொலிக்கும் வகையில்,

“மூன்று ஆன்மாக்கள்
சத்தியத்தின் நிலத்திற்குத் திரும்பும்,
துரோகியின் நிழல் மீண்டும் எழும்,
சாபம் விழித்தெழும்.
கடந்த காலத்தை உணர்பவர் மட்டுமே

இரத்தவழிகளை மீட்சிக்குத் திசைதிருப்புவார்.”

மகாராஜாவின் மூச்சு ஒருகணம் நின்றுபோனது போல் தவித்தவர்,“அப்படியா…? அந்தக் குழந்தைக்கு கடந்த ஜென்மம் நினைவு வந்துவிட்டதா?”

“முழுமையாக இல்லை,” என்று ஆசாத் பதிலளித்தார்.

“ஆனால் சில துணுக்குகள் — காட்சிகள், குரல்கள், அவளுடையவை அல்லாத நினைவுகள்.
இப்போது, ப்ரித்வேந்திர சௌஹான் கர்ஹ் அதிவர் அரண்மனைக்கு எதிராய் போட்ட திட்டம்… ராஜபுத்திர கூட்டம் என்று தீர்க்கதரிசனம் செயல்படத் தொடங்கியுள்ளது.”

மகாராஜா கனமாக அமர்ந்தார்.வரலாற்றின் சுமை அவர்மேல் விழுந்தது போல் உணர்ந்தவர்,“இதை இப்போது எனக்குச் சொல்வதன் காரணம்?”

ஆசாத் கான் நேராக அவரது கண்களை நோக்கி,

“ஏனெனில் நேரம் வந்துவிட்டது, மகாராஜா.
அந்த மூவர் மீண்டும் ஒன்றாக வேண்டும்.
கோவில் மீண்டும் எழ வேண்டும்.
மீனாட்சி எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.”

நீண்ட அமைதி.

வெளியில், பாலைவன இருள் வானில் இடியொலி முழங்க, உள்ளே, இரண்டு மனிதர்கள்
ஒருவர் உண்மையின் சுமையுடன், மற்றவர் ஒரு இராச்சியத்தின் சுமையுடன் ஒருவரை ஒருவர் பார்த்திருந்தனர்.

இறுதியில் மகாராஜா, அமைதியை கலைத்து,“அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள். விதி அவளைத் தேர்ந்தெடுத்திருந்தால்… நாம் தயாராக இருக்க வேண்டும்.”

அதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்த ஆசாத் கானிடம் மஹாராஜா சமர் சிங் குரலைத் தாழ்த்தி, “ஆசாத் கான்… அந்த அரண்மனையின் வரலாற்றை உங்களை விட ஆழமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சொல்லுங்கள் சௌஹான் அதை அழிக்க இவ்வளவு துடிப்பதற்குக் காரணம் என்ன?”

ஆசாத் கான் மெதுவாக மூச்சை இழுத்துவிட்டபடி, சொற்களை கவனமாகக் கோர்த்து, “ஏனெனில் அந்த நிலம்… அவன் பயப்படும் ஒரு உண்மையைக் காக்கிறது. அந்த உண்மை விழித்தெழுந்தால்… அவன் அதிகாரத்தின் அடித்தளமே குலுங்கும்”.

மன்னனின் கண்கள் சுருங்கி, “நீங்கள் சொல்வது… ஏதோ உயிருள்ள ஒன்று விழிப்பதை போல இருக்கிறது”.

ஆசாத் கான்,”அப்படித்தான், மஹாராஜா.தேவியும் சபதமும் என்றென்றும் உறங்காது”.

மன்னன் பதிலளிக்கும் முன்பு

டக். டக்.

அரண்மனை அறையின் கதவுகள் திடீரென திறக்கின்றன. மன்னனின் செயலாளர் ராஜேந்திரன், மூச்சுத்திணறியபடி, உள்ளே நுழைகிறார்.

ராஜேந்திரன்,”மன்னிக்கவும், மஹாராஜா…முக்கிய செய்தி வந்துள்ளது.”

மன்னன் புருவத்தைச் சுருக்கியபடி,”ராஜேந்திரா, நாங்கள் ரகசியமான விவாதத்தின் நடுவில் இருக்கிறோம்”.

ராஜேந்திரன்,”மன்னிக்கவும், மஹாராஜா…ஆனால் இந்தச் செய்தி ஆசாத் கான் சாஹிபுக்காக.
மேலும் இது… மிக அவசரம்.

ஆசாத் கான் உறைந்து நின்றவர் உடல் ஒருமுறை நடுங்கி அடங்கியது.

ஆசாத் கான் மெதுவாக,”யாரிடமிருந்து?” என்றதும் ராஜேந்திரன் லண்டன் தபால் முத்திரையுடன் கூடிய மடித்த கடிதத்தை அவரிடம் கொடுக்கிறார்.

ராஜேந்திரன்,”இந்த கடிதம் உங்கள் ஹவேலியில் இருந்து அவசர செய்தியாக காவலன் கொண்டு வந்து கொடுத்தான். அவன் வெளியே உங்களுக்காக காத்திருக்கிறான்”என்று கூறியபடி இடைவரை குனிந்து எழுந்தார்.

அதைக் கேட்ட ஆசாத் கான் தன் வயதை மீறி அந்த அறையை விட்டு அவசரமாக வெளிவந்தவர் முன் நின்றிருந்தான் அம்ஜத், ஆசாத் கானின் வலது கை, மீனாட்சியின் காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டவன்.

“அம்ஜத்… இங்க என்ன பண்ற? நான் உனக்கு இட்ட கட்டளை என்னவாயிற்று?” என்ற ஆசாத் கானின் குரலில் கோபமும், பயமும் சரி பங்கு கலந்திருந்தது.

“ஹுசூர், மன்னிக்கவும் இது அவசரம் என்றபடியால் நானே வரவேண்டிய கட்டாயம். அதுவும் இல்லாமல், நான் போகவில்லை என்றால், சாஹிபா தனியாக இங்கு புறப்படுவதாக கூறியதால், அவர்களுக்கு காவலை பலப்படுத்திவிட்டு புறப்பட்டேன்”.

“விளக்கமாக சொல்” ஆசாத் கான் ஆணையை ஏற்று நடந்ததை கூற தொடங்கினான்.

அம்ஜத், ஆசாத் கானின் விசுவாசமான வலது கை. காஷ்மீர் ஹவேலியின் வெளியே காவலில் நின்றிருந்தான்.

அப்போது ஹவேலியின் முற்றத்தில் இருந்து தொலைப்பேசி ஒலி எழுப்பியது. அந்த அழைப்பை ஏற்ற அம்ஜத்,”யார் பேசுவது?” என்றது அந்த பக்கம் அதிராவின் குரல் நடுக்கத்துடன்,” நான்..நான் அதிரா பேசுகிறேன். வாப்பா..?” என்று மூச்சுத் திணறியவளின் பேச்சில் புருவம் சுருக்கிய அம்ஜத்,”ஷாஹிபா நான் அம்ஜத் பேசுகிறேன்” என்றது தான் தாமதம், அதிரா,”அம்ஜத் நான்—நான் வாப்பாவிடம் பேச வேண்டும். இது மிக அவசரம்” என்று அவளின் குணத்தை மீறி படபடத்தாள்.

அவளின் படபடப்பை உணர்ந்த அம்ஜத்,”மேம் சாஹிபா, நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?” என்றதற்கு அதிரா பதில் அளிக்காமல் தன் போக்கில்,”நான் வாப்பாவிற்கு அழைத்தேன். அவர் எடுக்கவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியவில்லை.”

அதிராவின் கோர்வை இல்லாத பேச்சில் குழம்பிய அம்ஜத் முன் மீனாட்சி வந்து நின்றாள். அம்ஜத்தையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவள், பார்வை நடப்பதை முன்கூட்டியே அறிந்திருப்பது போல் இருந்தது.

மீனாட்சியிடம் பார்வையை வைத்துக் கொண்டு,”ஹுஸூர் உதைப்பூரில் இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களால் அவரது கைப்பேசி அணைக்கப்பட்டிருக்கலாம்”என்றான்.

அதிரா கண்களை மூடி, நடுங்கியபடி மூச்சை வெளிவிட்டவள், “வாப்பாவிற்கு நான் சொல்ல வேண்டிய ஒன்று இருக்கிறது. நான்… எல்லாவற்றையும் எழுதி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அது இந்நேரம் அங்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். தயவு செய்து அது அவரிடம் சேர்த்து விடுங்கள். நான் நாளை சுவிட்சர்லாந்திற்கு கிளம்பவுள்ளேன். கலீல்..” என்றவள் தொண்டை அடைத்தது, அதை சரி செய்து தொடர்ந்தவள், “மற்ற விவரம் கடிதத்தில் கூறியுள்ளேன்” என்றவள் அதற்கு மேல் தாளமாட்டாமல் அழுகையுடன், “எனக்கு பயமாக இருக்கிறது அம்ஜத்” என்று முடித்தாள்.

அதைக்கேட்ட அம்ஜத்தின் கண்கள் விரிய, மீண்டும் மீனாட்சியை நோக்கிப் பார்த்தான்.இப்போது அவள் அவன் அருகில் நின்று, அனைத்தையும் அறிந்தது போல் அவனிடம் மெல்லிய குரலில்,”தீ விழித்தெழுகிறது. அவளிடம் சொல்லுங்கள்… அவள் தனியாக இல்லை என்று”

மீனாட்சியின் வார்த்தையை கேட்ட அம்ஜத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எச்சில் விழுங்கியபடி,” மேம் சாஹிபா, நீங்கள் தனியாக இல்லை. தைரியமாக இருங்கள், உங்கள் கடிதம் கிடைத்ததும் ஹுசூரிடம் சேர்த்து விடுகிறேன்.”

அதைக்கேட்ட அதிராவின் விழியோரம் ஒரு கண்ணீர் துளி அவளது கன்னத்தில் வழிந்தது.

அதிரா,”நன்றி… நன்றி, அம்ஜத்” என்ற வார்த்தையோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மீனாட்சியை நோக்கித் திரும்பிய அம்ஜத்,”நான் மேம் சாஹிபா கிட்ட தான் பேசுகிறேன் என்று நீங்கள் எப்படி தெரிந்துகொண்டீர்கள்” என்றவனின் கேள்விக்கு மெதுவாகச் சிரிக்கிறாள் மீனாட்சி.

அதற்கு பதில் அளித்த மீனாட்சியின் குரல் பழமையுடன் வெளிவந்தது.

மீனாட்சி,”ஏனெனில்… அவளது ஆன்மா என்னை அழைத்தது.”

தொலைபேசி துண்டிக்கப்பட்ட பிறகும் அம்ஜத்தின் முகத்தில் குழப்பம் மிஞ்சி இருந்ததை கவனித்த மீனாட்சி கதவருகில் நின்று, அசாதாரணமான அமைதியுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதிராவின் நடுங்கிய குரல் இன்னும் அவன் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அம்ஜத் கலக்கத்துடன்,” மேம் சாஹிபா பயந்துபோன மாதிரி… யாரோ அவளைத் துரத்துவது போல பேசினார்.”

அதைக்கேட்ட மீனாட்சி அம்ஜத் அருகே வந்தவளின் கண்கள் தொலைதூரம் பார்த்திருக்க,”அது ஏதோ ஒன்றல்ல. யாரோ ஒருவர்.”இதை கேட்டதும் அம்ஜத் பதற்றமடைந்தான்.

அம்ஜத்,”சாஹிபா …என்ன சொல்கிறீர்கள்?”என்றான்.

அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. அதேநேரம் அதிராவின் கடிதம் காஷ்மீர் ஹவேலியை அடைந்திருந்தது.

காவலாளி ஒருவன் கடிதத்தை உள்ளே கொண்டுவர, மீனாட்சி அதை தனது சிறிய கைகளை நீட்டி வாங்கி இருந்தாள்.

அந்த கடிதத்தை பார்த்த மீனாட்சி, அம்ஜத்திடம் ஆழமான குரலில்,”இந்த கடிதம் காத்திருக்க முடியாது. ஆசாத் இதை இப்போதே படிக்க வேண்டும்”.

அதைக்கேட்ட அம்ஜத் பதட்டமாக எச்சில் விழுங்கியபடி,”ஆனால் ஹுசூர் உதய்ப்பூரில் இருக்கிறார்”, என்றவனின் வார்த்தை மீனாட்சி பார்த்த பார்வையில் தடையிட்டது. அவளது கண்கள் விசித்திரமான ஒளியால் மிளிர்ந்தன.

மீனாட்சியின் குரல், கடுமையுடன்,”ஆசாத்திடம் கொண்டு செல்.” அந்த குரலில் இருந்த கடுமையில் அம்ஜத் பின்வாங்கினான்; இது அவன் அறிந்த மென்மையான குழந்தை அல்ல.

அம்ஜத்,”சாஹிபா உங்கள் பாதுகாப்புக்காக என்னை இங்கு விட்டுச் சென்றுள்ளார் ஹுசூர். அதை நான் எப்படி மீறுவேன்? ஆசாத் சாஹிப் திரும்பும் வரை நான்…” என்றவனின் கையை எதிர்பாராத வலிமையுடன் பிடித்த மீனாட்சி,”ஆசாத் இந்தக் கடிதத்தை இன்று இரவே படிக்கவில்லையென்றால்…நிழல் முதலில் அதிராவை அடைந்து விடும்” என்றதும் அம்ஜத்தின் மூச்சு தடைபட்டது.

அம்ஜத் அச்சத்துடன்,”நிழல்…?” என்ற கேள்வியுடன் மீனாட்சியை பார்க்க, அவன் கையை விடுவித்து பின்வாங்கியவள் குரல் மென்மையுடன்,”அதிரா தனியாக இருக்கிறாள். அவளது ஆன்மா உதவி கேட்டு அழைக்கிறது. ஆசாத் அவளிடம் செல்லவில்லை என்றால்… அவளை இழக்க நேரிடும்”

அதைக்கேட்ட அம்ஜத் கடிதத்தையும், மீனாட்சியையும் மாறி மாறி பார்த்தான்.அவளது கண்களில் இருந்த உண்மையை கண்டவன் தலையைத் தாழ்த்தியபடி,” சரி.. நான் செல்கிறேன். ஆனால் உங்கள் பாதுகாப்பு?” என்று யோசித்தவன் அவளின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு, மீனாட்சியையும் அவளது பெற்றோரையும் எச்சரித்துவிட்டே அங்கிருந்து அகன்றான்.

அம்ஜத் சொன்ன வார்த்தை அனைத்துக்கும் மீனாட்சி தலையசைத்தவள்,மீண்டும் குழந்தை போல அமைதியாக,”அன்னை உன் பாதையை வழிநடத்துவாள்”என்று அவனுக்கு விடைக் கொடுத்தாள்.

அம்ஜத் சென்ற பாதையை பார்த்தபடி முற்றத்தில் நின்ற மீனாட்சியின் உடல், குளிர் காற்றில் நடுங்க, அந்த காற்றுக்கு மெதுவாகச் சொன்னாள்,”தீ வீரனிடம் சேர வேண்டும்…இருள் சேருவதற்கு முன் சேரவேண்டும்.”

ரணசூரன் வருவான்….

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்