இமை 17
“தன் மடியில் உறங்கி கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு பப்பு குட்டி இன்னிக்கு வேணி ஆண்ட்டிக்கிட்ட சமத்தா இருந்திங்களோ?..” என்று குழந்தையின் மூக்கோடு தன் மூக்கை உரசியபடி கொஞ்சி கேட்க,
“பாப்பா எப்போ அழுதிருக்கா இப்போ அழறதுக்கு?.. ரொம்ப சமத்தா இருந்தாளே குட்டி பொண்ணு.” என்று பாராட்டிய படி எழிலிற்கு காபி கலந்து கொடுத்தாள் வேணி..
“உங்களுக்கு எதுக்கு சிரமம் வேணி அக்கா?.. என்று கேட்டாலும், அவள் உடல் சோர்வு அந்த காபியை வாங்கி கொள்ள வைத்தது… “இதுல என்னம்மா கஷ்டம்?.. காலையில் இருந்து சும்மா தான இருக்கேன்.. பாப்பா எந்த சேட்டையும் செய்யாமல் சமத்தா இருக்கா..
காலையில சமையலும் நீங்களே செஞ்சு வச்சுட்டு போயிடுறீங்க.. எனக்கு எந்த வேலையும் இல்லை.. இந்த வேலை கஷ்டமா இல்லம்மா பாப்பா..” என்று எழிலை சமாதானம் செய்த வேணியை பார்த்து சிறு புன்னகை செய்தவள்
“சரிக்கா உங்களுக்கு நேரம் ஆயிடுச்சு இல்ல.. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க இனி நான் பாத்துக்குறேன்.. என அவளை அனுப்பி வைக்க, வேணியும் கிளம்பி விட்டாள்..
“ம்ஆஆ!என்று மழலை மொழியில் எழிலை அழைத்து குழந்தை அவள் கழுத்தை கட்டிக் கொள்ள, எழிலும் பதிலுக்கு தானும் குழந்தையை அணைத்தபடி அமர்ந்திருந்தாள்.. தன்னை தன் முகத்தை பார்த்து பயம் கொள்ளாமல், தான் மட்டுமே அவளுக்கு அனைத்துமாய் என உணர வைத்த தேவதை..
“குழந்தையை அவங்க கிட்ட கிட்ட கொடுத்திடாத.. அங்க இருந்தால் என் பொண்ணுக்கு பாசம் கிடைக்காது.. அவளுக்கு அன்பான அம்மா வேணும்.. என்று வலி மிகுதியில் கதறலாக ஒலித்த குரல் இப்போது அவள் செவியில் கேட்பது போல் இருக்க, “என்னோட பொருளை வாங்காம விட மாட்டேன்..” இப்போது அஷ்வின் இன்னொரு கொடூரமான குரலும் சேர்ந்து கேட்க
கண்களை இறுக்க மூடிக் கொண்டு “ம் கூம் தர மாட்டேன்.. நான் யாருக்கும் பப்புவை கொடுக்க மாட்டேன்.. பப்பு என் உயிர்..” யாருக்கோ சொல்வது போல் தனக்குத்தானே கூறிக் கொண்டபடி யாரிடம் இருந்தோ குழந்தையை காப்பாற்றுவது போல், குழந்தையை இறுக அணைக்க, அவள் அழுத்தத்தில் “ம்மா வலிக்குது..” என்றபடி குழந்தை சிணுங்க, அப்போது தான் சுய உணர்வு வந்தவள், உடனே தன் பிடியை தளர்த்தி, தன்னோடு அணைத்துக் கொண்டாள்..
அன்னையின் மார்பு சூட்டில் இதமாக சாய்ந்து கொண்டு “ஏன் மா தினமும் என்னை விட்டு வெளியே போற?.. உன்னை காணாம தேட்றேன் நான்..” என்று உதடு பிதுக்கி அழும் குழந்தையை பார்க்கும் போது அவள் நெஞ்சில் உதிரம் வடிந்தாலும், தன்னை எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தேடும் தேவதை இவள் என்று நெஞ்சம் பெருமையில் விம்மியது..
“பாப்பு. நானும் உன்னை ரொம்ப தேட்றேன் டா..” என்று நெற்றியில் முத்தமிட்டு கூற, “அப்போ என் கூடவே இரும்மா..” என்று குழந்தை ஏக்கமாக கூற, ஏக்கம் கலந்த பெருமூச்சுடன் “பப்பு குட்டி இப்ப அம்மாக்கும் உன் கூடவே இருக்கணும் ரொம்ப ஆசைடா.. ஆனால் நானும் இங்க இருந்தால் நமக்கு யார் சாப்பாடு வாங்க பணம் தருவாங்க? அப்பறம் பாப்பாக்கு புது ட்ரெஸ், டாய்ஸ் இதெல்லாம் யார் வாங்கி தருவாங்க..” என்று கேட்க
“எனக்கு ஃபுட் வேணி ஆண்ட்டி தான் தர்றாங்க.. அவங்க உங்களுக்கும் தருவாங்க.. அப்படி தரலேன்னா எனக்கு குடுக்கிறதை நம்ம ஷேர் செஞ்சிக்கலாம் மம்மி.. அப்பறம் நியூ ட்ரெஸ் எதுவும் எனக்கு வாங்க வேண்டாம்.. நீங்க என்கூடவே இருங்கம்மா..” என்று தன் அன்னையின் சில மணி நேரம் பிரிவை தாங்க முடியாமல் தன் சிறு தேவைகளை கூட குறைத்து கூறி உதடு பிதுக்கி அழ தொடங்க,
குழந்தையின் ஏக்கம் மனதை கூறு போட, பெருமூச்சுடன் குழந்தையை தூக்கிக் தோளில் சுமந்துகொண்டு தட்டி கொடுத்தபடி, “பப்பு வேணி ஆண்ட்டிக உனக்கு சாப்பாடு கொடுக்கிறாங்களே அப்போ அந்த வேணி ஆண்ட்டிக்கு யார் சாப்பாடு தருவாங்க?.. என்று கேட்க, குழந்தை பதில் தெரியாமல் விழித்து, “ஆமால்ல வேணி ஆண்ட்டிக்கு யார் சாப்பாடு தருவாங்க?.. அப்பறம் அவங்களுக்கு புது ட்ரெஸ் யார் எடுத்து தருவாங்க?..” என்று யோசிக்க
“நம்ம எல்லாருக்கும் சாப்பாடு வேணும் தான?.. என்று எழில் மீண்டும் குழந்தையிடம் கேட்க, இப்போது குழந்தை ஆம் என்று தலையசைக்க, “ம் குட்!! அதுக்கு எல்லாரும் வீட்டில இருந்தால் நமக்கு யார் சாப்பாடு, புது ட்ரெஸ் தருவாங்க?..இப்ப நானும் இங்க
ஹான் அதுக்கு தான் அம்மா உன்னை வேணி ஆண்ட்டிக்கிட்ட விட்டு வேலைக்கு போறேன்.. வேணி ஆண்ட்டிக்கும் உன்னை விட பெரிய அண்ணா இருக்காங்க.. வேணி ஆண்ட்டி அந்த அண்ணாக்கும் ஃபுட் தரணும்.. புது ட்ரெஸ் எடுத்து கொடுக்கணும்.. இதுக்கு எல்லாம் அம்மா என் பப்பு குட்டியை விட்டு வேலைக்கு போகணும் தானடா?..” என்று குழந்தைக்கு புரியும் படி கூற,
அப்போ வேணி ஆண்ட்டி வெளியே போய் இந்த வேலை செய்யட்டும்.. நீ இங்க என் கூட இரும்மா..” என்று எழில் மறு பேச்சு பேச முடியாதபடி வாயடைக்க.. குழந்தையின் பேச்சை கேட்டு ஒரு நொடி திகைத்த எழில், அவள் புத்திசாலித்தனமான பேச்சை ரசித்தவாறே
“வேணி ஆண்ட்டி நாளைக்கு வருவாங்கள்ல அவஙகக்கிட்ட நீயே சொல்லுடா..” என்று அந்த பேச்சிற்கு அப்போது முற்று புள்ளி வைத்தவள், குழந்தையை வீட்டிற்குள்ளேயே இருப்பது “இன்னிக்கு நம்ம எங்கேயாவது வெளிய போகலாமா?.. என்று கேட்க, குழந்தை முகம் பிரகாசமாக, “நிஜமாகவே வெளியே போறோமா?.” குழந்தை ஆர்வமாக கேட்க,
குழந்தையின் முகத்தில் இருந்த ஆர்வத்தை பார்தத எழிலிற்கு குற்ற உணர்வில் குறுகுறுத்தது யாருக்கோ பயந்து குழந்தையை வீட்டிற்குள்ளே அடைகாத்து அவள் சுதந்திரத்தை பறித்து விட்டது போல் மனம் குற்ற உணர்வில் தவித்தது.. வெகுவாக தன்னை சமன் செய்து கொண்டு
“பிராமிஸ்ஸா நான், என் பப்பு குட்டி ரெண்டு பேரும் ஊர் சுத்த போறோம்.. வாங்க கிளம்பலாம்..” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு குளியலறை சென்றவள், வெதுவெதுப்பான நீரில் உடல் கழுவி விட்டு குழந்தையை தயார் செய்தவள், தானும் கிளம்பி குழந்தைக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து விட்டு, “பப்பு குட்டி போகலாமா?..” என கேட்டபடி தூக்கிக் கொண்டு வெளியே வந்தவள் வீட்டை பூட்டி விட்டு தன் இருசக்கர வாகனத்தை எடுத்தாள்..
பேபி சீட்டரில் குழந்தையை அமர வைத்து, வண்டியை எடுக்க அத்தனை சந்தோஷம் அக்குழந்தையின் முகத்தில்.. “சாரி பாப்பா யாருக்கோ பயந்து உன்னை வீட்டுக்குள்ளேயே வச்சிட்டேன்.. இனி இப்படி நடக்காது..” என்று மனதில் மன்னிப்பு கேட்டு கொண்டு குழந்தையின் உச்சியில் முத்தமிட்டு தனது இருசக்கர வாகனத்தை எடுத்தாள்..
மாலை காற்று இதமாக முகத்தில் மோத அத்தனை நேரம் இறுக்கமாக இருந்த எழில் மனம் லேசாக, “குட்டிமா எங்க போகலாம்?.. என்று குணிந்து கேட்க “எனக்கு தெரியலயே.. நீ என் கூடவே இருங்கம்மாஆஆ..” தன் ஆசையை கூற, “இருக்கலாமே..” என்று தானும் உற்சாகமாக கூறியவள் தன் வாகனத்தை மால்லை நோக்கி செலுத்தினாள்..
அந்த பெரிய கட்டிடத்தை பார்த்த குழந்தைக்கு மிக உற்சாகமாக இருந்தது.. ம்மஆ இது எந்த இடம்மா.. ரொம்ப நல்லா இருக்கு..” என்று குதூகலத்துடன் கூற இனி நம்ம அடிக்கடி இங்க வரணும்.. என்னை கூட்டிட்டு வரணும் என்று பெரிய மனுசி போல உத்தரவிட, சரிங்க பெரிய மனுசி..” என்று குழந்தையின் தலைமுடியை லேசாக கலைத்து விட்டு கூறியவள், அந்த மாலில் குழந்தைகள் விளையாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றாள்..
அங்கு பந்தங்கள் புயலாக குவிந்து கிடக்க, அந்தக் குவியல்களுக்கு இடையே உற்சாக பந்துகளாக சின்னஞ்சிறு மொட்டுக்கள் குதூகலத்துடன் குதித்து விளையாடிக் கொண்டிருக்க, “அம்மா இங்க எவ்வளவு பேர் விளையாட்றாங்க.. என்று உற்சாகமாக கூற,
அம்மு குட்டியும் இதுல விளையாடுறீங்களா?..”என்று எழில் கொஞ்சி கேட்க, “ம்ம் விளையாட்றேன் நீங்களும் வாங்க..” என்று விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், தானாக சென்று விளையாடுவதற்கு பயமாகவும் இருக்க குழந்தை எழிலை அழைத்தாள்..
“இங்க உன்ன மாதிரி பேபிஸ் மட்டும் தான் விளையாட முடியும்.. நீங்க அங்க போய் ஜாலியாக விளையாடுவிங்களாம் அம்மா இங்க நின்னு உங்களுக்கு கிளாப் பண்ணுவேனாம் ஓகே வா?..” என்றவள், குழந்தையை விளையாட அனுப்பி வைத்தாள்.. குழந்தை போக மறுக்க அம்மு அங்க பாரு உன்னை விட குட்டி பாப்பா எல்லாம் எப்படி பயமே இல்லாமல் விளையாட்றாங்க.. அங்கு மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை சுட்டி காண்பித்த எழில்,
“அம்மு குட்டி பிரேவ் கேர்ள்.. அவ பயப்பட மாட்டாளே..” குழந்தையை ஓரவிழியால் பார்த்தபடி கூறியவள், “சரி உனக்கு பயமாக இருந்தால் நாம வீட்டுக்க போகலாம்..” என்று கூற “நோ நான் விளையாட்றேன்..” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு அங்கு விளையாட அனுப்பி வைத்தாள்..
இங்கு விஜய்க்கு அவன் கனவில் கேட்ட குரல் அதை இயல்பாக கடந்து செல்ல முடியாமல் அவன் மனதை நெருஞ்சி முள்ளாக உறுத்தி கொண்டு இருந்தது.. ஒரு வேளை அந்த இடைப்பட்ட காலத்தில் தான் இந்த குரலுக்கு சொந்தமான பெண்ணை விரும்பி இருப்பேனா?.. அந்த பெண் இப்போது என்னை தேடி கொண்டு இருப்பாளா?.. என ஒவ்வொன்றாக நினைத்து மனதளவில் ஓய்ந்து போன விஜய்
இதற்கு தீர்வு தான் கன்னியாகுமரி செல்வது என முடிவெடுத்தான்.. தனக்கு மறந்து போன நினைவுகளை மீண்டும் நினைவு கொண்டு வர, கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தான்.. தன் பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருத்தான்..
அவன் சென்னை எல்லையை தாண்டும் முன்பு அவன் செல்போன் சத்தமிட எடுத்து பார்த்தவன் கிளையண்ட் ஒருவர் அழைத்திருந்தார் அவனை பார்க்க அனுமதி கேட்டிருக்க, நான் ரெண்டு நாள் கொஞ்சம் பிஸி மதிவாணன்.. நான் வந்த பிறகு பேசிக்கலாம்..”என்று விஜய் மறுக்க
“சார் ரொம்ப முக்கியமான விஷயம் எனக்கு ஒரு அரை மணி நேரம் மட்டும் கிடைச்சா போதும் என்று அவர் வற்புறுத்தி கேட்க சில நிமிடங்கள் யோசித்த விஜய் சரி நான் இந்த ஏரியாவில் இருக்கேன் இங்க பக்கத்துல ஒரு ஷாப்பிங் மால் இருக்கு அங்க வெய்ட் பண்றேன்.. வாங்க சரியா அரை மணி நேரம் தான் இங்க இருப்பேன்.. அதுக்கு மேல என்னால இருக்க முடியாது.. என்று உறுதியாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தவன் இங்கே எழில் வந்திருந்த அதே ஷாப்பிங் மாலிற்கு வந்திருந்தான்..
அரை மணி நேரம் சும்மா உட்க்காந்திருக்க பிடிக்காமல் அந்த மால்லை சுற்றி பார்த்தபடி வந்து கொண்டிருந்தவன், அங்கு பிளே ஸ்டேஷன் அருகில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருப்பதை பார்த்து அங்கு வந்தவன், “பாப்பா ஏன்டா அழறிங்க?.. என குழந்தை பெற்றோரை சுற்றி முற்றும் பார்த்து தேடியபடி அந்த குழந்தையிடம் விசாரிக்க.. குழந்தை பதில் சொல்ல தெரியாமல் மீண்டும் அழ “உங்க கூட யாரும் வரையா?..” குழந்தை கண்ணீரை துடைத்தபடி விஜய் மீண்டும் விசாரிக்க
“அம்மா.. அம்மா காணோம்.. அம்மா வேணும்..” என்று தேம்பி அழ, “அச்சோ குட்டி அழாதிங்க.. அம்மா கூடவா வந்தீங்க அம்மா எங்க இருக்காங்க?..” என்றவனிடம் அம்மா இங்க கிளாப் செஞ்சிட்டு இருந்தாங்க..
அப்பறம் காணோம்.. எனக்கு பயமாக இருக்கு அம்மா வேணும்..” என்று அழுத குழந்தையை சமாதானம் செய்து கொண்டு இருந்தான் ஏற்கனவே மலரின் குழந்தையை பார்த்திருந்த விஜய்க்கு இந்த குழந்தை சமாதானம் செய்வது சற்று எளிதாக இருந்தாலும், குழந்தை அழுவதை பார்க்க மனதிற்கு கஷ்டமாக இருக்க
“இப்படியா சின்ன குழந்தையை பொறுப்பில்லாமல் விட்டு போவாங்க?.. அப்படி என்ன அலட்சியம்?.. என்று மனதில் குழந்தையின் அன்னையை திட்டியவன்,
அங்கிருந்தவர்களிடம் குழந்தையின் அன்னையை பற்றி விசாரிக்க, அவர்கள் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை.. இவ்வளவு நேரம் ஒரு குழந்தை அழுதே என்ன ஏதுன்னு யாராவது கேட்கிறாங்களா?.. என்று முணுமுணுத்தவன்,குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த ஷாப்பிங் மாலில் குழந்தை அன்னையை தேடி கொண்டு இருந்தான்..
“அம்மு வாங்க நாம அம்மாவை தேடுவோமா?..” என்று கேட்க குழந்தை வேகமாக தலையசைத்தது..
“உங்க பேர் என்ன?.. விஜய் கேட்க
“நேத்ரா..!!” என்றது குழந்தை
“வாவ் ரொம்ப அழகா இருக்கே பாப்பா பேர்.. யார் இந்த பேர் வச்சாங்க?.. அவன் விசாரிக்க
“அம்மா.!” குழந்தை பதில் சொல்லவும், “ஓ அப்போ பாப்பா வீட்ல மீனாட்சி ஆட்சியா?.” என்று விளையாட்டாக விஜய் கேட்க குழந்தை அவன் பேசுவது புரியாமல் விழிக்க,
பாப்பா கூட யார் இருக்காங்க..?” என்று வேறு பேச்சை மாற்ற
“நான், அம்மா, வேணி ஆண்ட்டி..” என்று கேட்ட கேள்விக்கு பதில் தந்த குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு”சமத்து சக்கர கட்டி!!” என்று கொஞ்சியவன்
“அம்மா பேர் என்ன நேத்ரா குட்டி.?” அவன் கேட்க “அம்மா பேர் எழில்!!” என்று அழகாக உச்சரித்து திருத்தமாக கூற, குழந்தையின் திருத்தமான பேச்சில் வியந்து பார்த்த விஜய்,
“அப்பா பேர் என்ன?.. அவங்க வரலயா உங்க கூட..?”என்று விசாரிக்க “அப்பாவா?.. அப்படினா என்ன?.. என்று குழந்தை புரியாமல் கேட்க, விஜய் குழந்தையை திகைத்துப் பார்த்து கொண்டு இருக்கும் போதே.. அவன் கை அடியில் ஒரு வளைகரம் தன் கை கோர்த்துக் கொண்டே..
பிளீஸ் எங்க ரெண்டு பேரையும் அதோ அவன் கண்ணில் படாமல் எப்படியாவது வெளியே கூட்டிட்டு போய்ருங்க..” என்று தவிப்பு கெஞ்சலுமாக கேட்ட குரல்.. தன் கனவில் கேட்ட குரல் போல தோன்ற.. சட்டென்று திரும்பி பார்த்த விஜய் தன் அருகில் நின்றிருந்த பெண்ணை பார்த்து “ராங்கி..!! என்று அதிர்ந்து பார்த்த படி நின்றிருந்தான்..
இமை சிமிட்டும்..